ஆளுமை நட்பு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 16, 2024
பார்வையிட்டோர்: 2,196 
 
 

இப்போதெல்லாம் முன்பு போல் எளிதானவராக ரகு இல்லை. எதிலும் பிடிப்பும், ஆளுமையும் தொடர்ந்து அவரைத்துரத்திக்கொண்டே வந்தது. மனம் சொல்வதை அப்படியே தப்பாமல் கேட்க ஆரம்பித்ததின் விளைவும் ஒரு காரணம்.

முன்பெல்லாம் எதுவும் தேவை முடிந்த பின் தேவையில்லையெனும் எதார்த்தப்போக்கு மகிழ்ச்சியைக்கொடுத்தது. தற்போது தேவையில்லாததையும் தனதாக்கும் பேராசை உறக்கத்தைக்கெடுப்பதோடு, உரிமை கொண்டாட நினைப்பது மிகப்பெரிய தவறு என்பதை புரிந்து கொள்ளவும்  அவரால் முடிகிறது. ஆனால் மனம் அறிவின் கட்டுக்குள் வர மறுக்கிறது.

காலமாற்றமும், ஏறிய வயதும் மனமாற்றத்தை உண்டு பண்ணும் காரணிகளாகி விடுகிறது. வயதாகும் காலத்தில் மனம் குழந்தைகளைப்போல, நினைப்பதையெல்லாம் செய்யச்சொல்வதை அவராலும் புரிந்து கொள்ள முடிந்தாலும், சிலரிடம் பேசிப்பழகும் போது ஏற்படும் மன நிறைவால் அவர்களை இழக்க மனம் விரும்பாமல் தனக்கே தனக்காக உரிமை கொண்டாட நினைக்கிறது. அதிக வயது வாழ்வோம் எனும் நிலையில் வராத ஆசைகள், சிறிது காலமே இருக்கப்போகிறோம் எனத்தெரிந்த பின்பும் பேராசைகளாக உருமாற்றமடைந்து விடுகிறது.

“ரகு மாமா…. அறுபதிலும் ஆசை வரும்னு பழமொழி இருக்கு. பேராசை வரும்னு யாருமே சொல்லாதது உங்க கிட்ட இருக்கு. சின்ன வயசுல  லவ் பண்ணின பொண்ணு யாரு கூட பேசினாலும் கண்டுகொள்ளவில்லை என சொன்ன நீங்க, இப்ப நட்பா பழகிற நானே உங்களைத்தவிர யாரு கூடவும் நட்பா பேசறத விரும்பாம கண்டிசன் போடறீங்க? என்ற மேல ரொம்ப, ரொம்ப அக்கரை எடுத்துக்கறீங்க. அதனால எனக்கும் உங்களைத்தவிர இப்பெல்லாம் யாரையுமே பிடிக்க மாட்டேங்குது. பெத்த தாயக்கூட.  எனக்கும் உங்க மேல  அப்படியிருக்குதுங்கிறது அனுபவம் போதாதனால இருக்கலாம். வயசு காரணமா இருக்கலாம். ஆனா அறுபதத்தாண்டப்போற நீங்க….?” சொல்லி ரகுவை ஆச்சர்யமாகப்பார்த்தாள் மாதவி.

“மத்தவங்க பண்ணறத நீங்க தலைகீழா பண்ணறீங்க. சின்ன வயசுல தான் நீங்க இப்ப நடந்துக்கிற மாதிரியும், வயசானதுக்கப்புறம் நீங்க சின்ன வயசுல நடந்துகிட்ட மாதிரியும் நடந்துக்கிறவங்களை பார்த்திருக்கேன்” இன்னமும் நிறைய பேசிக்கொண்டே இருந்தாள்.

சில சமயம் நாம் அறிவால் திட்டமிடுவது நடப்பதில்லை. திட்டமிடாமல் பிடித்ததும், பிடிக்காததும் இயல்பாக நடக்கும் போது பிடிக்காததை மனம் ஏற்க மறுப்பதோடு அதற்கு எதிர் செயலை ஏவி விட்டு எதிரிலிருப்பவர்களை நிரந்தர எதிரிகளாக்கிக்கொள்கிறது.

மாதவி ரகுவின் மனம் கவர்ந்தவள். அழகு, அறிவு, அன்பு என அனைத்துமான கலவை. அவருடைய சம வயது இல்லாத பாதி வயது கொண்டவள் என்றாலும் முப்பதில் அறுபதின் தெளிவு மிளிர்வதை ஆச்சர்யமாக கவனித்திருக்கிறார். மனைவி பைரவியே அடிக்கடி கலாய்ப்பாள். ‘பத்து வயசாவது மூத்தத உங்களுக்கு பொண்டாட்டியா சேர்த்திருக்கனம். வயசத்தாண்டி பேசுனா யாருக்குத்தான் கூட வாழ ஆசை வரும்? என்னை பொண்ணு பார்க்க வந்த போது என்னோட அம்மாவ முதல்ல உங்களோட பேச விட்டிருக்கப்படாது. அந்த கெழடு பண்ணினது தான். நான் காலம்பூராத்துக்கும் கஷ்டப்பட வேண்டியதா போச்சு’ என புலம்பித்தீர்ப்பாள்.

பெண்களுக்கு எப்பொழுமே பத்து வயதில் இருக்கிற புத்திசாலித்தனம் ஆண்களுக்கு கூட பத்து வேண்டும். அதனால் தான் முன்பு இருபதும், முப்பதும் சேர்த்தார்கள். சில சமயம் இருபதும் நாற்பதும் கூட சேர்த்தார்கள். ரகுவின் தாத்தாவுக்கு ஐம்பத்தைந்து வயதில் இரண்டாவது தாரமாக முதல் மனைவிக்கு குழந்தை பிறக்காததின் காரணத்தை வைத்து முதல் மனைவியின் தம்பி மகளை முப்பத்தைந்து வருடங்கள் வித்தியாசத்தில் திருமணம் செய்ததில் ரகுவின் அப்பா ராமசாமி பிறந்திருக்கிறார். அப்பாவின் அம்மா, பாட்டி ரொம்ப சாது. வெள்ளந்தியா சொல்வதையெல்லாம் மறுக்காமல் செய்பவர். ‘அப்படி நமக்கு கெடைக்கனுமே….’ எனும் ஏக்கம் சில சமயம் வந்து போகும் ரகுவுக்கு . ‘தாத்தாவுக்கு மாதிரி எனக்கும் கொஞ்சம் சின்னதா ஒரு சுழி இருக்கு. அதனால தான் முப்பது வயசு கம்மியான ஒரு பொண்ணு நட்பு கெடைச்சிருக்கு’ என்பார்.

இப்போதெல்லாம் நிறைய பேருக்கு திருமணத்தில் இஷ்டம் வருவதில்லை. அப்படித்தான் மாதவிக்கும். தினமும் ரகு வீட்டில் தான் சாப்பிடுவாள். நன்றாக ஞாயம் அடிப்பாள். அவருடைய மனைவி இது தனக்கு நல்ல காலம் என நினைத்துக்கொண்டு ஓடிப்போய் பெட்டில் படுத்துக்கொள்வாள். நல்ல வேளை எதிர்க்கவில்லை. அவர்களுடைய நட்பை சந்தேகிக்கவில்லை. சில சமயம் இரவில் கூட போரடிக்கிறது என வந்து விடுவாள். பாயை எடுத்து ஆசாரத்தில் போட்டு படுத்துக்கொள்வாள். பக்கத்து வீடாக போனதில் ரொம்ப சௌகரியம். அவளின் அக்கா குழந்தைகள் வந்தால் அவ‌ளது வீட்டில் இடம் போதவில்லை என ரகுவின் வீட்டிற்கு அழைத்து வந்து விடுவாள்.

ரகுவிற்கு ஒரே பெண். திருமணம் முடித்ததும் அமெரிக்காவிற்கு போய் செட்டிலாகிவிட்டாள். நான்கு வீட்டின் வாடகை அறுபதாயிரம் வருகிறது. பணம் ரகுவிற்கு ஒரு பிரச்சினையில்லை. மனம் தான் பிரச்சினை. ‘மாதவிக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை இருக்கு…’ என அவரது மனைவி ரங்கநாயகி சொன்ன போது அவருக்கு மனைவி மீது பயங்கரமாக கோபம் வந்து விட்டது. அவளது எதிர்காலம் பற்றிய விசயத்தை அவரது சுயநல ஆளுமை தடை போடப்பார்த்தது. அவளுக்கு வரும் வாய்ப்புகளை தடை செய்தது. அவரது செயல் மாதவிக்கும் பிடித்திருந்தது என்பதை அவளது பேச்சு வெளிப்படுத்தியது.

“சொந்தக்காரங்க யாருமே வீட்டுக்கு வர வேண்டாம்னு தோணுது…..”

“ஏன்…? என்னாச்சு….?”

“உன்ற சின்னப்பொண்ணு மாதவி எப்பத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறா…? ன்னு என்னோட அம்மாவ நச்சி எடுக்கிறாங்க. நான் தப்பிச்சு உங்க கிட்ட வந்திட்டேன். நீங்க மட்டும் தான் என்னை நல்லா புரிஞ்சு வெச்சிருக்கீங்க. ஒடம்பு சொகத்து மேல எனக்கு ஆசையில்லை. மனசுக்கு பிடிச்சவங்களோட பேசிட்டே இருக்கனம். வயசு முக்கியமில்லை. நேரமே பார்க்காம பேசனம். பசியே வந்தாலும் பேசனம். மனசு கணம் போகும் படி பேசனம். அதுக்குத்தான் கடவுள் உங்களை எனக்கு கொடுத்திருக்கார்” என்றாள் மகிழ்ச்சி பொங்க.

மாதவி பேசியதை கேட்ட ரகுவின் மனைவிக்கு பக்கென்றானது. அவருக்கு வயதாகி விட்டதை அவளுக்கு ஞாபகப்படுத்த நினைத்து “மாமாவுக்கு அறுபதுல கண்டம் இருக்குன்னு ஜோசியர் சொல்லியிருக்கார்” என சொன்னதும்,

“வாயை மூடுங்க அத்தை. இப்படியா கட்டின கணவனப்பத்தி அபசகுனமா பேசுவாங்க….? ஆயுசு ஹோமம் பண்ணிட்டா நூறு வயசு வாழ்ந்திடுவாரு….. சிவன் கோயில்ல நான் ஏற்பாடு பண்ணறேன்” என்றவளை ஆச்சர்யத்துடனும், அச்சத்துடனும் பார்த்தார் ரகு. அச்சம் வந்ததுக்கு காரணம் கட்டிய மனைவிக்கு இல்லாத விசனம் மாதவிக்கு வந்தது தான். இது நட்பின் வெளிப்பாடா? அதற்கும் மேற்பட்டதா…? அன்று ராத்திரி தூக்கம் அவரை விட்டு தூரமாகப்போய் விட்டது.

எதிர் பாலின நட்பு எப்பொழுதுமே தேவைப்படுகிறது. தாத்தாவாக, அப்பாவாக, சகோதரனாக, கணவனாக, மகனாக பல ரூபத்தில். மாதவிக்கு வீட்டில் ஆண்கள் வாசத்துக்கு கூட யாருமில்லை. தந்தை அவளது பத்து வயதிலேயே காலமாகி விட பக்கத்தில் இருந்த ரகுவை அப்பாவைப்போல நினைத்து நட்பாக்கிக்கொண்டாள். படிப்பும் பள்ளியுடன் நிறுத்திக்கொண்டாள். வேலையெதுவும் இல்லை. தேடவும் இல்லை. தந்தையின் பென்சன் குடும்பம் நடத்த போதுமானதாக இருந்ததால் கவலையின்றி இருந்தாள். தோழிகளும் அமையவில்லை. சகோதரி வீட்டிற்கு எப்போதாவது சென்று வருவாள். சகோதரியின் கணவனை பிடிக்கவில்லை என்பாள். ரகுவே நட்பு. அவரது வீடே உலகமாகிவிட அவரை இழக்க விரும்பாத அவளது மனம் அவரது கண்டத்தைப்பற்றி சொன்னதும் பதற்றமடைந்திருக்கிறது.

அன்பு, பாசம், காதல், காமம் என மனதில் தோன்றியதையெல்லாம் பேசுவாள். ஆனால் அவளிடம் நாலாவதான விசயம் எப்பொழுதும் வெளிப்பட்டதில்லை. அதில் தான் மனிதர்களுக்கு துன்பம் என்பாள். அவள் கல்லூரிக்குள் காலடி வைக்கவில்லை என்றாலும் நூலகத்திலிருந்து நிறைய புத்தகங்களை எடுத்து வந்து படிப்பாள். வள்ளுவரின் குறளைப்படித்ததோடு நாலடியாரைப்படித்து விட்டதன் விளைவு நிலையாமையைப்பற்றி அடிக்கடி பேசுவாள்.

ஓஷோவைப்பற்றியும் பேசுவாள், ரமணரைப்பற்றியும் பேசுவாள். அவளது ஆத்மாவுக்கு வயது அதிகமாக இருக்க வேண்டும். மனிதனின் ஏழு ஜென்மத்தில் அவளுக்கு இது ஏழாவதாகக்கூட இருக்கலாம். ரகுவுக்கு ஒன்றாவது குறைந்திருக்கும். இப்போதெல்லாம் அவர் பேசுவதை குறைத்துக்கொண்டு அவளை பேச விட்டு விடுகிறார்.

திடீரென ஓடி வந்த மாதவி பதறியபடி ரகுவைப்பார்த்து’அத்தை எங்கே?’ என கேட்டாள். ‘குளித்துக்கொண்டிருக்கிறாள்’ என்றார். ‘நாம மட்டும் எங்காவது தனியா போயிடலாமா?’ எனக்கேட்டதும் அவருக்கு தூக்கி வாறிப்போட்டது. 

காதல் முத்திப்போவது போல் நட்பின் முதிர்வும் இதைத்தான் செய்யும் என இப்போதுதான் அவருக்கு முழுமையாகப்புரிந்தது. காளையை அவிழ்த்து விட்டது போல் மனதை விட்டிருந்தவருக்கு அதைப்பிடித்துக்கட்ட வேண்டும் எனத்தோன்றியது. விளைவுகளின் விபரீதத்தை சிந்திக்கத்தொடங்கினார். 

‘சூடா டீ இருக்கு குடிக்கிறியா?’ கேட்டார். ‘போய் எடுத்துக்கொண்டு வந்து என்னோட தலைல ஊத்துங்க. நான் என்ன கேட்கிறேன்? நீங்க என்ன சொல்லறீங்க? உங்கள பிரிஞ்சு என்னால இருக்க முடியாது. என்னோட பேய்…. அவ தான் தாய் இனிமே உங்க வீட்டுப்பக்கம் தலை காட்டக்கூடாதுன்னு தடை போடறா. அவளோட அண்ணம்பையனுக்கு என்னை ரெண்டாந்தாரமா கட்டி வைக்கப்போறாளாம். அவன் ஒரு மொடாக்குடிகாரன். சின்ன வயசிலருந்து குடிச்சு, குடிச்சு ஒடம்பக்கெடுத்ததால குழந்தை பொறக்கலை. குறை அவன்கிட்டத்தான் இருக்கு. என்னக்கட்டினாலும் கெடைக்காது. முடியாதுன்னு சொல்லிட்டேன்’ என்றாள். 

ரகுவை முதலாக ஓடி வந்து இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள். அப்பாவாக அவள் தன்னை நினைத்தாலும் தான் அப்பா இல்லையே..‌ உலகம் இதை தப்பாகத்தானே பார்க்கும். புனிதமான அன்பின் வெளிப்பாடும் புறக்கண்களுக்கு மாறாக, வேறாகப்படும் என்பதை புரிந்திருந்தார்.

இப்போதுதான் நிலைமையின் வீரியத்தை அவர் முழுமையாகப்புரிந்து கொண்டார். வயதான காலத்தில் இனிப்பு உடலைக்கெடுத்து விடும். சாப்பிட்டால் ஆயுளைக்குறைத்து விடும். ‘அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு’ எனும் பழமொழி ஞாபகத்துக்கு வந்தது.பொருந்தாத வயதின் நட்பும், வேறு பாலின நட்பும் அப்படித்தான் என புரிந்தது. பின் விளைவுகளை அவள் ஒரு நொடி கூட சிந்திக்கவில்லை. படித்ததை கூடை, கூடையாக வைத்திருக்கும் அவளது அறிவைக்கேட்கவில்லை. கேட்டால் தடுக்கும் என்கிற பயம்.

அடுத்த நாளே ரகு மாதவியைப்பற்றிய விசயத்தில், சமீப காலமாக அவளது செயலின் போக்கை வைத்து, பின் விளைவுகளைச்சிந்தித்ததால் வீட்டில் வாடகைக்கு இருப்போரிடம் மட்டும் சொல்லி விட்டு, யாரிடமும் சொல்ல வேண்டாம் எனக்கூறிவிட்டு, முக்கியமாக மாதவியிடம் ‘பெண்ணிடம் அமெரிக்கா சென்று விட்டார்கள்’ என கூறிவிடுமாறு சொல்லி விட்டு  மனைவியை அழைத்துக்கொண்டு வேறு ஊரிலிருக்கும் உறவினர் ஒருவர் வீட்டிற்கு குடியேறி விட்டார்.

பல மாதங்கள் ஓடி விட்ட நிலையில் மாதவியிடமிருந்து அலைபேசியில் கூட அழைப்பு வரவில்லை. சொல்லாமல் சென்று விட்டார்கள் எனும் கோபம். அவள் பிடிவாதக்காரியும் கூட. வேண்டுமென்றால் ரொம்பவும் வேண்டும். வேண்டாமென்றால் முற்றிலும் ஒதுக்கிவிடும் தன்மை கொண்டவள் என்பது ரகுவுக்கும் தெரியும். 

அவளது மாமன் மகனுடன் இரண்டாவது தாரமாக திருமணம் நடந்து விட்டதாக செய்தி கேட்டு ரகுவும், அவரது மனைவியும் மிகவும் உடைந்து போனார்கள்.  மாதவிக்கு இது நடந்திருக்கக்கூடாது. அதே சமயம் ரகு தொடர்ந்து அந்த ஊரிலிருந்திருந்தால் அவளது செயல்களால் அவருக்கு கெட்ட பெயர் வந்திருக்கலாம். ‘பனை மரத்தடியில் உட்கார்ந்து பால் குடிச்சாலும் கள்ளு குடிச்சான் என்று தான் கூறுவார்கள்’ என அவரது பாட்டி அடிக்கடி சொல்லக்கேட்டுள்ளார். 

ஒரு பழமொழி ஒன்பது விசயங்களுடன் ஒத்துப்போகிறது. இலைமறை காயாக சொல்வது பிறர் மனதை புண்படுத்தாமல், அதே சமயம் புத்தியை புகட்டுவது. நம் மனதை கட்டுப்படுத்துவது. மனம் பின் விளைவுகள், சட்ட திட்டங்களை அறியாதது. மனித வாழ்வின் ஒழுக்க முறைகளை வகுத்து மனதைக்கட்டுப்படுத்தும் வழி முறைகளை பழமொழிகளாகக்கூறி வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள். இதையெல்லாம் உள்வாங்கியதால் தான் ரகு  பழிசொல்லுக்கு ஆளாகாமல் தப்பித்துக்கொண்டார். பலர் இது போல் மாட்டிக்கொண்டு அல்லல் படுவதை பார்த்துள்ளார்.

சிறு வயதினருக்கு அனுபவமின்மை புரிதலைக்கொடுக்காத போது அனுபவமுள்ளவர்கள் சாணக்யமாக நடந்து கொள்ள வேண்டும். நமக்குப்பிடித்தவருக்கு நம்மையும் பிடித்திருந்தால் மட்டும் போதும் என்பது வெளிநாட்டினர் சட்டம். நம்மிருவருக்குப்பிடித்திருந்தாலும் ஊரும், உறவும் ஏற்க வேண்டும் என்பது நம் நாட்டின் சட்டம்‌. 

இப்போது மீண்டும் தைரியமாக சொந்த ஊரில் உள்ள வீட்டிற்கு மனைவியுடன் குடி வந்து விட்டார். மாதவியின் வீடு பூட்டியிருந்தது. விசாரித்த போது கட்டிக்கொடுத்த வீட்டிற்கே தாயையும் மாதவி அழைத்துச்சென்றதாக கூறினார்கள். ஒரே கலகலப்பாக இருந்த தன் வீடு தற்போது மயான அமைதியாக இருந்தது வருத்தமாக இருந்தது. மனம் மட்டும் பழைய நிலையை எதிர்பார்த்து கட்டுத்தறி காளையைப்போல் அங்கும், இங்கும் ஓடி அமைதி இழந்தது. அறிவு, சுதந்திரமாக சுற்றித்திரிந்த மனம் எனும் காளையை அடக்கி நல்வழிப்படுத்தி தன் வசப்படுத்தியதில் வெற்றி கண்டு சாந்தமாக இருந்தது. 

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *