டென்னிஸ்




(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மழைக் காலம் ஆரம்பித்து விட்டது. மக்களின் மனம் கொஞ்சம் குளிர ஆரம்பித்திருக்கிறது. வறட்சையால் தவித்த செடி, கொடி, பயிரினங்கள் கொஞ்சம் உயிர் பெற்றிருக்கின்றன. வருமோ என்று ஏங்கிய ஜனங்களும் கொஞ்சம் உயிர் பெற்றிருக்கின்றனர். பச்சைப் பசேலென்று வயல்கள் சிரித்துச் சிரித்து ஆடுகின்றன. குடியானவர்கள் மழைத் தெய்வத்தைக் கும்பிடுகிறார்கள். நமக்கும் வெகு ரம்மியமாகத்தானிருக்கிறது.

ஆனால் – இந்த எழவு ஆனாலைச் சொல்லு! எந்த நல்ல விஷயத்திலும் ஒரு நொடிக்குள் விஷத்தை திணித்து விடுகிறதே… உம்! அதற்கு நாமென்ன செய்யலாம்.
மழையினால் நன்மையென்றேனல்லவா? அதனாலேயே பலருக்குத் துன்பம் விளைகிறது தெரியவில்லையா? எவ்வளவு தான் வெயில் கொளுத்தி, கால்களில் ‘பொடி’ ஒட்டிக் கொண்ட போதிலும் “நல்லா வெயில் கொளுத்துது” என்று மட்டும் சொல்வார்கள். ஒருக்கால் சற்று இளைப்பாறுவார்கள். ஆனால் சேர்ந்தாற் போல் இரண்டு மூன்று நாள் மழை மட்டும் பொழிந்து விட்டால் உலகம் தவிப்பாய் தவிக்கிறது. கூரை வீடுகளுக்கும் மண் சுவர்களுக்கும் காலம் பெருங்கி விடுகிறது. ஏழைகள் வீடெல்லாம் ஒரே ஒழுக்கு. வீட்டிலிருக்கும் குடியானவனோ, வண்டிக்காரனோ, கொசுவோடும், மாடுகளோடும், சாணியோடும், மழை ஜலத்தோடும், குழந்தைகளோடும் திரும்ப இடமில்லாமல் வீட்டில் தத்தளிப்பது பார்க்க சகிக்காத காட்சி. இதற்குக் கதி மோட்சமேது?
ஏழைகளுக்கு இப்படிப்பட்ட கஷ்டம். பணக்காரர்களுக்கும் இது பெரிய கஷ்டந்தானாம். “என்ன சார்! டென்னிஸ்தான் இல்லை. ஹாலுக்குப் போய் ஒரு ஆட்டம் ‘பிரிட்ஜ்’ போடுவோமென்றால், போக முடியாது போலிருக்கிறதே. தரித்திர மழை!” என்கிறார் ஒரு பணக்காரர்.
– மனநிழல் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.
![]() |
வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க... |