சாவுக்கும் சாஸ்திரத்துக்கும் அதிக தூரமில்லை!





அந்த ஹோட்டலுக்குள் பசி மயக்கத்தோடு நுழைந்தான். வாசலிலேயே வல்லப கணபதி வரவேற்றார். மனதார வணங்கிவிட்டு மத்தியில் ஓடும் ஃபேனுக்கு அடியே இருந்த சேரில் அமர்ந்தான். மெல்லக் கண்களை ஓடவிட்டான். கற்பனைக் குதிரை பாய்ந்து கொண்டிருந்தது.
‘என்ன சார் சாப்பிடறீங்க?’ சர்வர் கேட்டு, சங்கடப்படுத்தினார்.

‘ஒரு ஆனியன் ஊத்தாப்பம்…!’ ஆர்டரை முடித்தான். ஆனால் கற்பனை தொடர்ந்தது. கணபதி காலடியில் மீன் தொட்டியில் வாஸ்து மீன்கள் வளைய வலம் வந்து கொண்டிருந்தன. அந்தப் பகுதியில் நல்ல வியாபாரமாகும் ஹோட்டல் அது!. ஆனாலும், ஏன் வாஸ்த்து மீனை நம்புகிறார்கள்?! வாஸ்த்து மீனாலா, வல்லப கணபதியாலா சக்கைப் போடு போடுது ஹோட்டல்?!?! கற்பனை ஓடிக்கொண்டிருந்தது!.
சட்டென வாஸ்த்துமீன் தொட்டிக்குக் கீழே அடி படிக்கட்டு மாதிரி இடத்தில் இரண்டு ‘புளு டியூப் லைட்டுகள்’ ஒரு செவ்வக தகர கண்ணாடிப்பெட்டிக்குள் எரிய படக் படக்கென சப்தத்தோடு ஈக்கள் அதில் இரையாகிக் கொண்டிருந்தன.
சாஸ்திரமும், சாவும் அருகருகேதான். இரண்டும் பகவான் பாதத்தில்தான்.
சாப்பிடும் நம்மை சாஸ்திரம் காப்பாற்றுமா? சாவு மீட்டெடுக்குமா? சந்தேகம் வர, வந்த போது வணங்கிய வல்லப கணபதி இதயத்தில் இல்லாது போனதுதான் இம்சையாக இருந்தது.
சாஸ்திரத்துக்கு அடிமையாய்விட்டால் சாமியாவது., பூதமாவது?! என்ன பகுத்தறிவு படித்து என்ன பயன்? ஆனியன் ஊத்தாப்பம் அடிவயிற்றைப் பிறட்ட அபீட்டானான்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |