பற்றி எரியும் காட்டில் திரியும் ஒற்றைமான்
1.
புல்லாங்குழல் விற்றுக்கொண்டிருந்தவனின் தோள்களில் சாய்ந்திருக்கும் நீண்ட குச்சியில் ஏராளமான குழல்கள் சொருகி வைக்கப்பட்டிருந்தன.வானம் நோக்கி கைகள் விரித்து மழையே வா என்று அவை அழைப்பது போலிருந்தது அவளுக்கு.
ரயில் நிலையத்தில் ஆதவனுக்காக காத்திருக்கும் அவளை சுற்றிய இந்த நிமிடங்கள் யாவும் ஒருவித கவித்துவ நிகழ்வுகளாக தோன்றியது. எறும்பு ஊர்கின்ற தண்டவாளம், யாருமற்ற தண்ணீர்க்குழாயில் நீர் அருந்தும் காகம்,கடந்து செல்லும் மின்சார இரயிலின் சப்தம்,இந்த மஞ்சள் மாலைவெயில் கூடவே அவனது வருகையை எதிர்நோக்கும் மனம். அவனுக்கு பிடித்த கறுப்பு நிற புடவையில் வந்திருந்தாள். எப்படி இவனுக்குள் தொலைந்தேன்? என்கிற கேள்வி மனதுள் எழுந்தபோது ஆதவன் அவள் முன் வந்து நின்றான். சாம்பல் நிற சிமெண்ட் பெஞ்சில் அவளுக்கு அருகில் அமர்ந்தவன் ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தான்.
அரைமணி நேரம் கழித்து இருவரும் பிரியும் தருவாயில் அவள் காதோரம் ஏதோ
சொன்னான். வெட்கத்தில் சிலிர்த்துப்போனாள் அவள். வேகமாய் கடந்து போனது ஓர் இரயில்.
2.
குழந்தைக்கு சின்னதாய் ஒரு கரடிபொம்மை வாங்கி வந்திருந்தான். அம்மு அதை
வாங்கிக்கொண்டு புரியாத ஒலியை எழுப்பியபடி பக்கத்து அறைக்குள் ஓடிப்போனது. எனக்கென்ன வாங்கி வந்திருக்கிறாய் என்பதுபோல் அவனை பார்த்தாள் அவள்.
அருகில் வா தருகிறேன் என்றவனிடம் இவள் நெருங்கியபோது சட்டென்று
இழுத்தணைத்து இதழோடு இதழ் சேர்த்து ஒரு நீண்ட முத்தமிட்டான். முதலில் மறுத்தவள் அவனது கரங்களின் இறும்புப்பிடியில் மழையில் நனைந்த கிளிக்குஞ்சுபோல்
மருகி நின்றாள். கண்களை இறுக மூடிக்கொண்டவளின் உடல் வெப்பமேற துவங்கி
இருந்தது. இதழ் பிரித்தவன் ஒன்றுமே நடவாத பாவனையில் அருகிலிருந்த சோபாவில் அமர்ந்துகொண்டு சிரித்தான். சிறிது நேரம் அசைவற்று நின்றவளின் கண்கள் சிவந்திருந்தது.
அவன் அருகில் வந்து அமர்ந்தவள் நொடிப்பொழுதில் அவன் மடிக்கு தாவி அவனது
முகத்தை இழுத்து தீராப்பசியுடன் இதழ்களை சுவைக்க ஆரம்பித்தாள். இருபத்தி நான்கு மாத அவளது தவம் கலைந்து சிதறிய தருணம் அவன் போய்விட்டிருந்தான்.
3.
வழிந்தோடிய கண்ணீரின் தடம் சன்னலோர வெயிலில் மினுமினுத்தது. சன்னல்
கம்பிகளை இறுக பற்றியபடி தூரத்தில் விரைகின்ற வாகனங்களை பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். எரிந்து தணிந்திருந்த வனமாக தன்னை நினைத்துக்கொண்டாள்.
ஓவென்று அழத்தோன்றியது.உதடுகளை கடித்து அழுகையை தடுத்துக்கொண்டாள். தன்
இருவயது பெண்குழந்தையின் முகம் மனதின் அடியாழத்திலிருந்து மெல்ல மேலெழுந்து மிதந்து வருவது போலிருந்தது.
ஓடிச்சென்று அடுத்த அறையினுள் எட்டிப்பார்த்தாள். படுக்கையில் உறங்கும் அம்முகுட்டி தூக்கத்தில் லேசாக சிரித்தது. தன்னை பார்த்து அம்மு சிரிப்பது
போலொரு எண்ணம் மனதை அறுத்தது. பூஜை அறைக்குள் சென்று கண்கள் மூடி ஒரு
நிமிடம் தியானித்து திருநீறு பூசிக்கொண்டாள். மனதெங்கும் நிறைந்திருந்த பதற்றம் சற்றே குறைந்திருப்பதாய் பட்டது. இனியொரு முறை இது நிகழ்ந்துவிடக்கூடாதென்றும், நிகழ்கின்ற சூழ்நிலைக்குள் தான் தள்ளப்பட்டுவிடக்கூடாதென்றும் நினைத்துக்கொண்டாள்.
பால்கனி கதவை திறந்து மனதின் வலியை பார்வை வழியே தூரத்து பச்சை
மரங்களிடம் கடத்திக்கொண்டிருந்தபோது வாசல் திறந்து வீட்டிற்குள் நுழைந்துகொண்டிருந்தான் அவன். அவனைக் கண்டவுடன் தன்னிலை மறந்து வேகமாய்
படிக்கட்டில் இறங்கி வாசல் நோக்கி சென்றாள்.இப்போது அவனை இறுக
கட்டிக்கொண்டு முத்தமிடவேண்டும் போலிருந்தது.
– Monday, August 31, 2009
![]() |
நிலாரசிகன் ஒரு தமிழ்க் கவிஞர் மற்றும் எழுத்தாளர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை எழுதி வருகிறார். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் ஆனந்த விகடன், வார்த்தை, உயிர்மை, கல்கி, புன்னகை, அகநாழிகை, நவீன விருட்சம், உயிர் எழுத்து, கல்குதிரை, கொம்பு போன்ற அச்சிதழ்களிலும், கீற்று, கூடல்திணை, அதிகாலை, உயிரோசை, திண்ணை, தமிழோவியம் போன்ற இணைய இதழ்களிலும் வெளியாகி இருக்கின்றன.…மேலும் படிக்க... |