சாரு





(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘நாம் உ லகை எந்நோக்குடன் பார்க்கிறோமோ. அப்படியே அது நமக்குத் தோன்றும்….’

அவர் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியின் தாஸர். அந்த இராமதாஸர் இராமாயணத்தை எழுதிக் கொண்டிருந்தார். எழுதுவதை அவ்வப்போது தமது சீடர்களுக்கு விளக்குவது அவர் வழக்கம். ஒருவருக்கும் தெரியாது, ஸ்ரீராமரின் தாஸானுதாஸரான அருமாகும் அவ்விளக்கங்களைக் கேட்டின்புறுவது வழக்கம்.
விளக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்று இராமதாஸர் அநுமார் அசோகவனத்தை அடைந்த காட்சியை விளக்கிக் கொண்டிருந்தார்.
“அநுமர் அசோக வனத்தை அடைந்தார். அங்கே வெள்ளை மலர்களைக் கண்டார்….!”
கேட்டுக் கொண்டிருந்த அநுமாரினால் இராமதாஸரின் விளக்கத்தைப் பொறுக்க முடியவில்லை.
‘நான் அசோகவனத்தில் வெள்ளை மலர்களைப் பார்க்கவே மில்லை. நான் அங்குப் பார்த்த மலர்கள் சிவப்பு நிறத்தன. நீர் எழுதியிருப்பது பிழை. அதைத் திருத்தும்’ என்றார் அநுமார்,
இராமதாஸர் அநுமாரை வணங்கி, ‘நீங்கள் அசோகவனத்தில் வெள்ளை மலர்களைத்தான் பார்த்தீர்கள். நான் எழுதியிருப்பது சரி….!’ என்றார் அடக்கமாக. அவருடைய குரலில் உறுதி தொனித்தது.
‘அசோகவனத்திற்குப் போனவன் நான். அப்படியானால், நான் சொல்வது பொய்யா?‘ என அநுமார் தீர்மானமாகக் கேட்டார்.
இராமதாஸருக்கும் அநுமாருக்கும் தத்தமது கட்சியே சரியானதாகக் தோன்றியது. எனவே, இவ்வழக்கு சாட்சாத் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் மத்தியஸ்தத்திற்குச் சென்றது.
‘நாம் உலகை எந்நோக்குடன் பார்க்கிறோமோ அப்படியே அது நமக்குத் தோன்றும்…. அசோகவனத்தி லிருந்த பூக்கள் வெள்ளை நிறத்தனவே. ஆனால், பக்தன் அநுமான் அங்கு கோபவசத்தினனாகச் சென்றான்.
சினத்தால் அவனுடைய விழிகள் சிவந்திருந்தன. எனவே, மலர்கள் அவன் விழிக்குச் சிவப்பு நிறத்தனவாகத் தோன்றியதில் வியப்பில்லை….’ என்றார் ஸ்ரீராமர் அமைதியாக.
– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.
![]() |
எஸ்பொ என அறியப்படும் ச.பொன்னுத்துரை (24 மே 1932 - 26 நவம்பர் 2014) ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தார். சென்னையில் மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார். பொன்னுத்துரையின்…மேலும் படிக்க... |