புண்ணியம்!





எங்கு அனுமார் கோயிலைப் பார்த்தாலும் பக்தியோடு வணங்கிவிட்டு உண்டியலில் காசு போட்டுவிட்டுச் செல்வது பஞ்சவேலுக்கு பழக்கம். சக ஊழியர்கள் அவரை சாமி என்றுதான் அழைப்பர். மிகச்சிறந்த பக்தனாக காட்சி தந்தார். கோயிலுக்காக தாராளமாக செலவிடுவார். பலரும் இவரை தானப்பிரபு என்றும் அழைத்தனர்.

அன்று மாலை தனது அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அந்தத் தெருவில் கழைக் கூத்தாடி ஒருவன் அனுமார் வேசமிட்டு கூத்துக்காட்டிக் கொண்டு இருந்தான். வேடிக்கைப் பார்த்த பலரும் தன்னால் இயன்ற உதவியைச் செய்தனர்.
“இதெல்லாம் ஏமாற்று வேலை; கோயிலுக்குச் செய்தாலும் புண்ணியம் உண்டு. முனுமுனுத்தவாறு வீட்டுக்குள் நுழைந்தார் பஞ்சவேல். கூத்து முடிந்ததும் அருகில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த கிழவியின் தட்டில் ரெண்டு ரூபாயை போட்டுவிட்டு அடுத்தத் தெருவுக்குப் போனான் கூத்தாடி.
– ஆகஸ்ட் 2006 தாழம்பூ மாத இதழில் வெளியானது.
– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.
![]() |
என் இயற்பெயர் தீ.திருப்பதி. சோலச்சி என்பது யார்......? இதற்கான விளக்கத்தை எனது "முதல் பரிசு " சிறுகதை நூலில் என்னுரையில் பதிவு செய்துள்ளேன். நான் புதுக்கோட்டை மாவட்டம் இராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி , நச்சாந்துபட்டியில் பத்தாம் வகுப்பு (1997-1998) படிக்கும்போது எனக்கு அறிவியல் ஆசிரியராக இருந்தவர் தான் திருமதி. எஸ்.சோலச்சி அவர்கள். என் குடும்பம் சோற்றுக்கும் துணிக்கும் தங்குவதற்கும் வழியில்லாமல் ஊர் நடுவிலே இருந்த புளியமரத்தடியில் வாடி வதங்கிய…மேலும் படிக்க... |