எது உன்னுதோ அது என்னுது! – ஒரு பக்க கதை





“அன்புள்ள சுதா, நலம். நீ நலமா? நேற்று உன் கணவரை சூப்பர் மார்க்கெட்டில் பார்த்தேன். யாரோ ஒரு பெண்ணுடன் உரசிக் கொண்டு போனார். விசாரித்து வை’. உன் தோழி ரமா.
–
அன்புள்ள ரமா, நீ குறிப்பிட்ட பெண் யாரோ அல்ல. என் தங்கைதான். எனக்கு உடல்நலம் சரியில்லாததால் அனுப்பி வைத்தேன். நீ என் திருமணத்திற்கு வராததால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உன் தோழி சுதா.
அன்புள்ள சுதா, நலம், நேற்று உன் கணவரை உங்கள் வீட்டு வேலைக்காரியுடன் தியேட்டரில் பார்த்தேன். உஷார். உன் தோழி ரமா.
அன்புள்ள ரமா, அந்த வேலைக்காரி என் கணவரை குழந்தையிலிருந்து எடுத்து வளர்த்தவள். வயது வித்தியாசம் கூட உனக்கு தெரியவில்லையா? உன் தோழி சுதா.
அன்புள்ள சுதா, உன் கணவரை ஒரு பெண்ணுடன் புடவைக் கடையில் பார்த்தேன். என்ன உரசல், என்ன இளிப்பு! அப்பாவியாக இருக்காதே!
உன் தோழி ரமா.
அன்புள்ள ரமா, உன் கடிதங்களை கணவரிடம் காண்பித்தேன். அவர் உனக்காக பச்சாதாபப்பட்டார். என்னைப் பெண் பார்க்க வருமுன் உன்னைத்தான் பெண் பார்த்தாராம்.
அவர் உன்னை நிராகரித்ததன் காரணம் இப்போது புரிந்ததா? வேண்டாம் விபரீத விளையாட்டு! உன் தோழி சுதா.
– எல்.மகாதேவன் (ஜனவரி 2013)