37G, மீனாட்சிக் கல்லூரியில் இருந்து லக்ஷ்மண் ஸ்ருதி சிக்னல் வரை




கடன் அட்டைக்கான காசோலையை மீனாட்சிக்கல்லூரிக்கு எதிர்புறம் உள்ள, பெட்ரோல் பங்கில் இருந்த பெட்டியில் போட்டுவிட்டு, தனது மோட்டார் வண்டியில் திரும்பிக்கொண்டிருந்த கார்த்திக்கு. ஜோடி ஜோடியாக காதலர்கள் இரு சக்கர வண்டியில் கடந்துப் போனதைப்பார்க்கையில் ஏக்கமாக இருந்தது. தேதி நினைவுக்கு வந்தது.. இன்று காதலர் தினம் அல்லவா!!!
அனுமாரு, குரங்கு மூஞ்சி, நியாண்டர்தால் இப்பொழுது கடைசியா சைமண்ட்ஸ் .. இப்படித்தான் கார்த்தியை அவன் நண்பர்கள் கூப்பிடுவார்கள்.
கார்த்தி தினமும் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கையில் கடவுளிடம்
“கடவுளே, அசிங்கமாத்தான் படைச்சே… அட்லீஸ்ட் மாநிறமாவது படைச்சிருக்கலாமே !!!”
அழகு… அழகில்லை என்பது ஒரு ஒப்பீட்டளவில்தான் என்றாலும், கார்த்தியை முதன்முறைப் பார்க்கும்பொழுது 100 க்கு 90 பேருக்கு அவன் அவலட்சனமாக இருக்கிறான் என்பதை அவர்களின் கண்களில் இருந்து அறிந்து கொள்ளும்போது அவனுக்கு வருத்தமாக இருக்கும்.
கைநிறைய சம்பாதித்தாலும், ஓரளவுக்குப் புத்திசாலியாக இருந்தாலும், தன்னால் பெண் நட்பு வட்டாரங்களை உருவாக்கிக்கொள்ள முடியவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மை நாளுக்கு நாள் அவனுக்கு அதிகரித்துக்கொண்டிருந்தது.. ஆடவன் எனத் தன்னை உணர்ந்து 14 வருடங்கள் ஆன பின்னும் சேர்ந்தார் போல 2 நிமிடம் கூட அவன் எந்த பெண்ணிடமும் பேசியதில்லை. சொந்தக்காரப் பெண்களிடம் பேசினால் கூட மோட்டு வளையப்பார்த்துக்கொண்டுதான் பேசுவான்.
சந்திரா பவன் சிக்னலில் சிவப்பு விழ, தடாலென வண்டியை நிறுத்திய கார்த்தியை உரசியபடி 37G வள்ளலார் நகர் – அய்யப்பந்தாங்கல் பேருந்து வந்து நின்றது.
58….57… என வினாடிகள் குறைந்து கொண்டிருக்க, கண்களை சுழலவிட்ட கார்த்தியின் பார்வை, 37 G பேருந்தில் இடது புறம், நடுவாக இறங்கும் வழிக்குப்பின்னால் சன்னல் ஓரமாக அமர்ந்திருந்த பெண்ணின் மேல் நின்றது. பார்க்க கடலோரக்கவிதைகள் ரேகா மாதிரி இருந்தாள். மறுமுறை அவளை நோக்கிப்பார்க்கையில், அவள் , கார்த்தி தன்னைப் பார்க்கிறான் என்பதைக் கவனிக்கவும் பச்சை விழவும் சரியாக இருந்தது.
பஸ் அவனைக்கடந்து வேகம் எடுத்தது. மீண்டும் அவள் முகத்தைப் பார்க்க கார்த்திக்கு ஆவல் மேலிட, பேருந்தை துரத்தி இடது புறம் வந்தான், அவளும் கவனித்துவிட்டாள், கார்த்தி பேருந்தை தொடர்ந்து வருகிறான் என்று . சின்னப்புன்னகை அவள் முகத்தில் தெரிய… கார்த்திக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..
“அட, நம்மளையும் ஒரு பொண்ணு லுக் விடுறாளே !!” தன்னைத்தான் பார்க்கிறாளா, இல்லை வேறு யாரையுமா? என ஒரு முறைத் திரும்பிப்பார்த்தான். இல்லை வேறுயாருமில்லை.
வாகன நெரிசலில், அனைத்து வண்டிகளும் மெதுவாக நகர்ந்தது கார்த்திக்கு ஒரு வகையில் நல்லதாகப்போயிற்று. முதலில் தயக்கமாகவும், பின் தைரியமாகவும் அவளைப்பார்க்க ஆரம்பித்தான்.
எப்படியும் லக்ஷ்மன் ஸ்ருதி சிக்னலில் திரும்பிவிடப்போறோம் என்ற தைரியத்தில் தன் முகத்தை மறந்து அந்தப் பெண்ணை ரசிக்க ஆரம்பித்தான். அவளும் இவனைக் கண்ணுக்கு கண் பார்க்க ஆரம்பித்தாள். லக்ஷ்மன் ஸ்ருதி சிக்னலும் வந்தது.
கண்ணாடியில் தன் முகத்தைப்பார்த்தான்… “அழகாகத்தான் இருக்கேடா கார்த்தி நீ” என தனக்குள் ரசித்து சொல்லிக்கொண்டே, 37 G பேருந்து வலதுபுறம் திரும்ப கார்த்தி இடதுபுறம் திரும்பிப்போனான்.
அடுத்த 30 நிமிடத்தில் வீடு வந்து சேர்ந்த கார்த்தியின் கலகலப்பைக் கண்ட அறை நண்பர்கள் ஆச்சரியம் அடைந்து கொண்டிருந்த அதே நேரத்தில் அயப்பன்தாங்கலின் கடைசி நிறுத்ததில், நடக்க உதவும் கைக்கட்டைகளுடன், மெதுவாக பேருந்தில் இருந்து இறங்கிய ஜெனிபரைப் பார்த்து, அவளின் தந்தை “என்னம்மா முகம் ரொம்ப பிரகாசமா இருக்கு, ஆபிஸ்ல எதேனும் விசேசமா?”
“ஏதும் இல்லைப்பா, சும்மாத்தா..பஸ் சீக்கிரம் வந்துடுச்சுல்ல அதுதான்”
– பெப்ரவரி 21, 2008