24 மணி நேரத்திற்கு இருண்ட பூமி






நான் ஒரு கோப்பையில் காபி ஊற்றிக்கொண்டு தொலைக்காட்சி முன் அமர்கிறேன். எதிர்பார்த்தபடியே, அனைத்துத் தொலைக்காட்சி நிலையங்களும் இன்றைய நாளின் – 2042 ஆகஸ்ட் 12 – முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றன. வரலாற்று புத்தகங்களில் ‘இருண்ட நாள்’ என்று பதிவாகப் போகும் நாள் இன்றைய நாள். இன்னும் இரண்டு மணி நேரத்தில், அதாவது இரவு 8 மணிக்கு, பூமி முழுவதும் கும்மிருட்டில் மூழ்கப் போகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு உலகிலுள்ள எல்லா நாடுகளும் மின்சாரம் பயன்படுத்துவதை நிறுத்தி வைக்கப் போகிறது.
இந்த கடுமையான நடவடிக்கைக்கான மூல காரணமாக 2022ஆம் ஆண்டு ரஷ்யா யுக்ரைன் மீது நடத்திய படையெடுப்பை சொல்லலாம். தொடர்ந்த ஆண்டுகளில், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வருவது நின்று போயிற்று. எரிபொருள் விலை வானுயரப் பறக்க அதன் தாக்கம் ஒவ்வொரு நாட்டின் மக்கள் மீதும் பட்டது. வளர்ந்து கொண்டிருந்த மக்கட்தொகை அதிக மின்சாரத்திற்கான பசியுடன் தவித்தது. மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் அத்தனை முயற்சிகளும் தோல்வியுற்றன. பரவலான மின்தடை, தொழிற்சாலை உற்பத்தி சரிவு, நிதிச் சந்தைகளின் வீழ்ச்சி, பணி நீக்கங்கள், வேலை நிறுத்தங்கள் போன்ற தொடர் சங்கிலி நிகழ்வுகள் உலகை பேரழிவை நோக்கி தள்ளின. 2031ம் ஆண்டிற்கு பின் வந்த பத்து வருடங்கள் மனித வரலாற்றின் இருண்ட சகாப்தமாக இருந்தன.
இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண எல்லா நாட்டு தலைவர்களும் ஒருங்கிணைந்து ஒரு உலகளாவிய திட்டத்தை வகுத்தார்கள். அது ஒரு எளிமையான திட்டம். அதன் படி உலகம் முழுவதும் 24 மணி நேர மின்வெட்டு ஒன்றை அமுல் படுத்தினால் அதன் மூலம் ஒரு பில்லியன் கிலோவாட் மின்சாரத்தைச் சேமிக்க முடியும் அவசரநிலை நடவடிக்கைகள் தவிர மற்ற அனைத்தும் 24 மணி நேரத்திற்கு நிறுத்தி வைக்கைப்படும். அது மட்டுமே நடக்கவிருந்த பேரழிவை தடுக்க முடியும். நிலைமையின் தீவிரம் புரிந்ததும் எல்லா நாட்டு மக்களும் இத்திட்டத்தை முழு மனதுடன் ஆதரித்தனர்.
7:59 மணிக்கு ஒவ்வொரு தொலைக்காட்சி நிலையத்திலும் கவுண்ட்டவுன் தொடங்கியது. உலகெங்கிலும் மக்கள் ஒருங்கிணைந்து கடைசி நொடிகளை எண்ண ஆரம்பித்தார்கள் — 5, 4, 3, 2, 1, 0…
சரியாக 8 மணிக்கு என் அறையிலிருந்த மின் விளக்கும் தொலைக்காட்சி பெட்டியும் அணைந்து போக, அறையை மௌனமும் இருட்டும் சூழ்ந்தன.
நள்ளிரவுக்கு சற்று முன்பு, கோம்னெத் பூமிக்கு மேல் 500 மைல் தொலைவில் விண்கலத்தை நிறுத்திவிட்டு லீலோவை நோக்கித் திரும்புகிறான். “பூமியில் புத்திசாலித்தனமான உயிரினங்கள் இருக்கக் கூடும் என்று நான் நம்பியிருந்தேன். ஆனால் இங்கு நான் பார்ப்பது ஏமாற்றமளிக்கிறது.”
லீலோ பெருமூச்சு விடுகிறாள். “ஆம், எந்தவொரு புத்திசாலித்தனமான உயிரினமும் செயற்கை விளக்குகளை உருவாக்கியிருக்கும். ஆனால் நாம் இப்பொழுது பார்ப்பது ஒரு இருண்ட உயிரற்ற பூமியை – வேறு ஏதாவது கிரகத்தில் தான் நாம் புத்திசாலித்தனமான உயிரினங்களை தேட வேண்டும்.”