ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: புனைவு
கதைப்பதிவு: October 12, 2025
பார்வையிட்டோர்: 141 
 
 

2013ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 15-16 | அத்தியாயம் 17-18

17. ஸ்லிதரினின் வாரிசு

மெலிதாக வெளிச்சம் வந்து கொண்டிருந்த மிக நீளமான ஓர் அறையின் முனையில் ஹாரி நின்று கொண்டிருந்தான். நெடிதுயர்ந்திருந்த கற்தூண்கள் வெகு உயரத்தில் இருட்டில் மறைந்திருந்த மேற்கூரையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தன. பின்னிப் பிணைந்திருந்த இன்னும் ஏராளமான பாம்பு உருவங்கள் அத்தூண்களில் செதுக்கப்பட்டிருந்தன.

ஹாரி, வேகமாகத் துடித்துக் கொண்டிருந்த இதயத்துடன், உடலையும் மனத்தையும் உறைய வைத்த மௌனத்தின் சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான். ஏதாவது ஒரு தூணுக்குப் பின்னால் ஓர் இருண்ட மூலையில் அந்த ராஜ ஸர்ப்பம் பதுங்கி இருக்குமோ? ஜின்னி எங்கே இருந்தாள்?

அவன் தன்னுடைய மந்திரக்கோலை உருவிக் கொண்டு அந்தப் பாம்புத் தூண்களுக்கு இடையே நடக்கத் துவங்கினான். எச்சரிக்கையுடன் அவன் எடுத்து வைத்த ஒவ்வோர் அடியும் அந்த அறையின் இருண்ட சுவர்களில் பட்டு எதிரொலித்தது. திடீரென்று ஏதாவது அசைவு ஏற்பட்டால் உடனடியாக மூடக்கூடிய விதத்தில் அவன் தன் கண்களை இடுக்கிக் கொண்டான். சில பாம்புச் சிலைகளில் வெறுமையாக இருந்த கண்குழிகள் தன்னைப் பின்தொடர்ந்ததுபோல அவனுக்குத் தோன்றியது. ஏதோ அசைந்தது போன்ற ஓர் உணர்வு ஒரு முறைக்கு மேல் அவனுக்கு ஏற்பட்டது. அப்போதெல்லாம் பயத்தால் அவனது வயிறு சுண்டி இழுத்தது.

பிறகு, அவன் கடைசி ஜோடித் தூணுக்கு நேராக வந்தபோது, அந்தப் பாதாள அறையின் பின்பக்கச் சுவரில், அந்த அறையின் உயரத்திற்கு ஒரு மந்திரவாதியின் சிலை வியாபித்து நின்று கொண்டிருந்ததைப் பார்த்தான். அதன் பிரம்மாண்டமான முகத்தைப் பார்க்க ஹாரி மிகவும் அண்ணாந்து பார்க்க வேண்டியிருந்தது. அதன் முகம் பழமையானதாகவும் குரங்கின் முகத்தைப்போலவும் இருந்தது. அதன் நீண்ட மெல்லிய தாடி அந்த மந்திரவாதியின் அங்கி வரை நீண்டிருந்தது. அதன் வழுவழுப்பான பிரம்மாண்டமான இரண்டு கால்கள் அந்த அறையின் தரையில் பதிந்திருந்தன. அதன் இரண்டு பாதங்களுக்கு இடையே, கருப்பு அங்கி அணிந்திருந்த ஒரு சிறிய உருவம் முகம் குப்புற விழுந்து கிடந்தது. அதன் தலைமுடி செக்கச் செவேல் என்றிருந்தது.

“ஜின்னி!” என்று முணுமுணுத்தபடி ஹாரி அவளை நோக்கி வெகு வேகமாக ஓடி, அவளருகே மண்டியிட்டான். “ஜின்னி, செத்துப் போய்விடாதே! தயவு செய்து செத்துப் போய்விடாதே!” என்று அவன் பதறினான. பிறகு அவன் தன் மந்திரக்கோலை ஒருபுறமாக வைத்துவிட்டு, ஜின்னியின் தோளைப் பற்றி அவளைத் திருப்பினான். அவளது முகம் பளிங்குச் சிலைபோல வெளுத்தும் குளிராகவும் இருந்தது. ஆனால் அவளது கண்கள் மூடியிருந்தன. அப்படியானால் அவள் கற்சிலையாக ஆக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் அவள்..

ஹாரி அவளை உலுக்கிக் கொண்டே, “ஜின்னி, தயவு செய்து எழுந்திரு!” என்று பரிதாபமாக முணுமுணுத்தான். ஜின்னியின் தலை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்குச் சரிந்தது.

“அவள் எழுந்திருக்க மாட்டாள்,” என்று ஒரு மிருதுவான குரல் கூறியது.

ஹாரி துள்ளிக் குதித்து, மண்டியிட்டபடியே ஒரு வட்டமடித்தான்.

ஓர் உயரமான, கருத்தத் தலைமுடியுடன்கூடிய ஓர் இளைஞன், அருகே இருந்த ஒரு தூணில் சாய்ந்து கொண்டு ஹாரியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது தோற்றம் சற்றுத் தெளிவற்று இருந்ததுபோல ஹாரிக்குத் தோன்றியது. மூடுபனி படிந்திருந்த ஒரு கண்ணாடியின் வழியாகத் தான் அவனைப் பார்த்தது போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. ஆனால் அவன் யாரென்பதில் ஹாரிக்கு எந்தவிதமான சந்தேகமும் இருக்கவில்லை.

“நார்ட்டன்?”

நார்ட்டன் அதை ஆமோதித்துத் தன் தலையை அசைத்தான். அவன் தன் கண்களை ஹாரியின் முகத்திலிருந்து அகற்றவேயில்லை.

“அவள் எழுந்திருக்க மாட்டாள் என்று நீ சொன்னதற்கு என்ன அர்த்தம்?” என்று ஹாரி பரிதாபமாகக் கேட்டான். “அவள் – அவள்? -”

“அவள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறாள்,” என்று நார்ட்டன் கூறினான். “ஆனால் அவளது உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.”

ஹாரி அவனை வெறித்துப் பார்த்தான். நார்ட்டன் ஐம்பது வருடங்களுக்கு முன்பு ஹாக்வார்ட்ஸில் இருந்திருந்தான். ஆனால் இங்கு இப்போது, வினோதமாக, பனி போன்ற ஓர் ஒளி தன்மீது படர்ந்திருக்க, பதினாறு வயதிற்குரிய தோற்றத்துடன் அவன் நின்று கொண்டிருந்தான்.

“நீ ஓர் ஆவியா?” என்று ஹாரி உறுதியில்லாமல் கேட்டான்.

“ஒரு நினைவு,” என்று நார்ட்டன் அமைதியாகக் கூறினான். “ஐம்பது வருடங்களாக ஒரு நாட்குறிப்புப் புத்தகத்தில் பாதுகாக்கப்பட்டிருந்த ஒரு நினைவு.”

அவன் அந்த பிரம்மாண்டமான சிலையின் கால் விரல்களைச் சுட்டிக்காட்டினான். முனகல் மர்ட்டிலின் குளியலறையில் ஹாரி கண்டுபிடித்தக் கருப்பு நிற நாட்குறிப்புப் புத்தகம் அங்கே கிடந்தது. அது இங்கே எப்படி வந்தது என்று ஒரு கணம் ஹாரி வியந்தான். ஆனால் கையாள்வதற்கு அதைவிட முக்கியமான விஷயங்கள் இருந்தன.

ஹாரி ஜின்னியின் தலையை மீண்டும் ஒரு முறை தூக்கியவாறு, “நார்ட்டன், நீ எனக்கு உதவி செய்ய வேண்டும்,” என்று கூறினான். “நாம் இவளை இங்கிருந்து வெளியே கொண்டு செல்ல வேண்டும். இங்கு ஒரு ராஜ ஸர்ப்பம் இருக்கிறது . . . அது இப்போது எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால் அது எக்கணமும் இங்கே வரக்கூடும். நார்ட்டன், தயவு செய்து நீ எனக்கு உதவி செய்…”

நார்ட்டன் தான் நின்று கொண்டிருந்த இடத்தைவிட்டு அசையவே இல்லை. ஹாரி வியர்வையில் நனைந்தவாறு, ஜின்னியைத் தரையிலிருந்து தூக்கித் தன் தோளின்மீது போட்டுக் கொண்டு, தன் மந்திரக்கோலை எடுப்பதற்காக மீண்டும் குனிந்தான்.

ஆனால் அவனது மந்திரக்கோல் அங்கிருந்து மறைந்துவிட்டிருந்தது.

“நார்ட்டன், என்னுடைய மந்திரக்கோலை நீ பார்த்தாயா -” ஹாரி நிமிர்ந்து பார்த்தான். நார்ட்டன் இன்னும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது நீண்ட விரல்களில் ஹாரியின் மந்திரக்கோல் தவழ்ந்து கொண்டிருந்தது.

“நன்றி!” என்று கூறிவிட்டு, அதை வாங்குவதற்காக ஹாரி தனது கையை நீட்டினான்.

நார்ட்டனின் உதட்டின் ஒரு முனையில் ஒரு புன்னகை அரும்பியிருந்தது. அவன் ஹாரியின் மந்திரக்கோலைத் தன் விரல்களுக்கிடையே சுழற்றியவாறு ஹாரியைத் தொடர்ந்து வெறித்துக் கொண்டிருந்தான்.

“நார்ட்டன்,” என்று ஹாரி அவசரமாகக் கூறினான். ஜின்னியின் எடையால் அவனது முழங்கால் வளைந்து கொண்டிருந்தது. “நாம் ங்கிருந்து கிளம்பியே ஆக வேண்டும். ராஜ ஸர்ப்பம் வந்துவிட்டால்…”

“கூப்பிட்டாலொழிய அது வராது!” என்று நார்ட்டன் அமைதியாகக் கூறினான்.

ஜின்னியை அதற்கு மேலும் தூக்கிக் கொண்டிருக்க முடியாததால், ஹாரி அவளை மீண்டும் தரையில் கிடத்தினான்.

“நீ என்ன சொல்கிறாய்?” என்று அவன் கேட்டான். “என் மந்திரக்கோலை என்னிடம் கொடுத்துவிடு. அது எனக்குத் தேவைப்படக்கூடும்.”

நார்ட்டனின் புன்னகை விரிந்தது.

“அது உனக்குத் தேவைப்படாது,” என்று அவன் கூறினான்.

ஹாரி அவனை உற்றுப் பார்த்தான்.

“நீ என்ன சொல்ல வருகிறாய்? அது ஏன் எனக்குத் தேவைப்படாது ?”

“ஹாரி பாட்டர், நான் இதற்காக வெகு காலம் காத்திருந்தேன்,” என்று நார்ட்டன் கூறினான். “உன்னைப் பார்ப்பதற்காக. உன்னுடன் பேசுவதற்காக.”

ஹாரி பொறுமையிழந்தவனாக, “இங்கே பார்!” என்று கூறினான். “உனக்கு நிலைமை புரியவில்லை என்று நினைக்கிறேன். நாம் ரகசியங்கள் அடங்கிய பாதாள அறையில் இருக்கிறோம். நாம் பின்னர் பேசிக் கொள்ளலாம்.”

இன்னும் புன்னகைத்துக் கொண்டிருந்த நார்ட்டன், “இல்லை, நாம் இப்போது பேசப் போகிறோம்,” என்று கூறினான். அவன் ஹாரியின் மந்திரக்கோலைத் தன் பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டான்.

ஹாரி அவனை மீண்டும் உற்றுப் பார்த்தான். இங்கு வினோதமாக ஏதோ நடந்து கொண்டிருந்ததாக ஹாரி நினைத்தான்.

“ஜின்னி ஏன் இப்படி ஆனாள்?” என்று ஹாரி கேட்டான்.

“அது ஒரு சுவாரசியமான கேள்வி,” என்று நார்ட்டன் இனிமையாகக் கூறினான். “அது ஒரு நீண்ட கதை. ஜின்னி இங்கு இருப்பதற்கான உண்மையான காரணம், உருவமற்ற அன்னியன் ஒருவனிடம் அவள் தன் மனத்தைத் திறந்து அதிலிருந்த ரகசியங்கள் அனைத்தையும் கொட்டியதுதான்.”

“நீ என்ன உளறிக் கொண்டிருக்கிறாய்?” என்று ஹாரி கேட்டான்.

“நாட்குறிப்புப் புத்தகம்,” என்று நார்ட்டன் கூறினான். “என்னுடைய நாட்குறிப்புப் புத்தகம். ஜின்னி பல மாதங்களாக என்னுடைய நாட்குறிப்புப் புத்தகத்தில் எழுதி வந்திருந்தாள். தன்னுடைய மனத்தில் இருந்த கவலைகளையும் துக்கங்களையும் அவள் என்னிடம் கூறி வந்தாள். அவளை அவளுடைய சகோதரர்கள் எவ்வாறு கேலி செய்தனர் என்பது பற்றியும், பழைய புத்தகங்கள் மற்றும் பழைய அங்கிகளோடு தான் பள்ளிக்கு வர நேர்ந்தது பற்றியும், பிரபலமான, அப்புறம் -” நார்ட்டனின் கண்கள் மின்னின. நல்லவனான, புகழ்மிக்க ஹாரி பாட்டர் தன்னை ஒருபோதும் ஏன் விரும்ப மாட்டான் என்பது பற்றி..”

அவன் பேசிக் கொண்டிருந்த நேரம் முழுவதும் அவனுடைய கண்கள் ஹாரியின் முகத்தைவிட்டு அகலவில்லை. அவற்றில் ஒருவித ஏக்கம் ஒளிந்து கொண்டிருந்தது.

“ஒரு பதினோரு வயதுப் பெண்ணின் சிறுபிள்ளைத்தனமான பிதற்றல்களைக் கேட்டுக் கொண்டிருப்பது சுவாரசியமற்றதாக இருந்தது,” என்று அவன் தொடர்ந்து பேசிக் கொண்டே போனான். “ஆனால் நான் பொறுமையாகக் காத்திருந்தேன். நான் அவள்மீது அனுதாபம் கொண்டிருந்ததாகவும் நான் அன்பானவன் என்றும் அவளுக்கு பதில் எழுதினேன். ஜின்னிக்கு என்னை மிகவும் பிடித்துப் போய்விட்டது. நார்ட்டன், உன்னைப்போல வேறு எவரும் என்னை ஒருபோதும் புரிந்து கொண்டதில்லை என் மனத்தில் இருப்பதைக் கொட்டித் தீர்ப்பதற்கு இந்த நாட்குறிப்புப் புத்தகம் எனக்குக் கிடைத்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். என் பாக்கெட்டிலேயே ஒரு நண்பனைச் சுமந்து திரிவதைப்போல ருக்கிறது இது…”

நார்ட்டன் சிரித்தான். உச்சஸ்தாயியில் உயிரற்றிருந்த பெருஞ்சிரிப்பாக அது இருந்தது. அது அவனுக்குப் பொருந்தவில்லை, ஹாரியின் பின்னங்கழுத்து முடிகள் குத்திட்டு நின்றன.

“ஹாரி, என்னைப் பற்றி நானே பெருமையாகச் சொல்லிக் கொள்ளக்கூடாது. ஆனால் எனக்குத் தேவைப்படும் மக்களை என் வசம் கவர்ந்திழுக்க நான் ஒருபோதும் தவறியதே இல்லை. அதனால் ஜின்னி தன் ஆத்மாவை என்னிடம் கொட்டித் தீர்த்ததில் வியப்பில்லை. எனக்குத் துல்லியமாக ஜின்னியுடையது போன்ற ஓர் ஆத்மாதான் தேவைப்பட்டது. அவளுடைய ஆழமான பயங்கள் மற்றும் இருண்ட ரகசியங்களின் போஷாக்கால் நான் மேலும் மேலும் வலுவாக வளர்ந்து கொண்டிருந்தேன். நான் ஜின்னியைவிட அதிக வலிமையானவனாக வளர்ந்து கொண்டிருந்தேன். என்னுடைய ரகசியங்களில் சிலவற்றை அவளுக்குள் புகுத்தும் அளவுக்கு, என்னுடைய ஆத்மாவிலிருந்து கொஞ்சத்தை அவளுடைய ஆத்மாவிற்குள் கொட்டும் அளவுக்கு . . .”

“நீ என்ன சொல்கிறாய்?” என்று ஹாரி கேட்டான். அவனது வாய் உலர்ந்து போயிருந்தது.

“ஹாரி பாட்டர், உன்னால் இன்னும் ஊகிக்க முடியவில்லையா என்ன?” என்று நார்ட்டன் மென்மையாகக் கேட்டான். “ஜின்னிதான் ரகசியங்கள் அடங்கிய பாதாள அறையைத் திறந்துவிட்டாள். அவள்தான் பள்ளியின் சேவல்களின் கழுத்துக்களைத் திருகி அவற்றைக் கொன்றாள். அச்சுறுத்தும் வாசகங்களைச் சுவரில் எழுதியது அவள்தான். அவள்தான் ஸ்லிதரினின் ராஜ ஸர்ப்பத்தை நான்கு ஈன ரத்தப் பிறவிகளின்மீதும் ஸ்குவிப்பான ஃபில்ச்சின் பூனையின்மீதும் ஏவினாள்.”

“இல்லை,” என்று ஹாரி முணுமுணுத்தான்.

“ஆமாம்,” என்று நார்ட்டன் அமைதியாகக் கூறினான். “ஆனால் அவளுக்குத் தான் என்ன செய்து கொண்டிருந்தோம் என்பது முதலில் தெரிந்திருக்கவில்லை. அதுவும் சுவாரசியமாகத்தான் இருந்தது. அவளுடைய சமீபத்திய நாட்குறிப்புப் பதிவுகளை நீ பார்த்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அவை மிக சுவாரசியமானவையாக ஆகியிருந்தன.” பீதியடைந்திருந்த ஹாரியின் முகத்தைப் பார்த்தபடியே நார்ட்டன் அந்தப் பதிவுகளை ஒப்பித்தான்: ‘அன்புள்ள நார்ட்டன், நான் என்னுடைய நினைவை இழந்து கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். சேவற்கோழியின் சிறகுகள் என்னுடைய அங்கி முழுவதும் பரவிக் கிடக்கின்றன. என் அங்கியில் அந்த இறகுகள் எப்படி வந்தன என்று எனக்குத் தெரியவில்லை. அன்புள்ள நார்ட்டன், ஹாலோவீன் தினத்தன்று இரவில் நான் என்ன செய்தேன் என்று எனக்கு நினைவில்லை. ஆனால் அன்றிரவு ஒரு பூனை தாக்கப்பட்டது, என் உடையின் முன்பக்கம் முழுவதிலும் ஏகப்பட்டப் பெயின்ட் கொட்டியிருந்தது. அன்புள்ள நார்ட்டன், என் முகம் வெளுத்துக் கொண்டே வருவதாகவும், நான் நானாக இல்லை என்றும் பெர்சி தொடர்ந்து கூறி வருகிறான். பெர்சி என்னைச் சந்தேகிக்கிறான் என்று நான் நினைக்கிறேன். இன்று மற்றொரு தாக்குதல், ஆனால் நான் எங்கு இருந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. நார்ட்டன், நான் என்ன செய்யப் போகிறேன்? எனக்குப் பைத்தியம் பிடித்துக் கொண்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன் நார்ட்டன், நான்தான் எல்லோரையும் தாக்கிக் கொண்டிருக்கிறேன் என்று எனக்குத் தோன்றுகிறது.”

ஹாரி தன் கை முஷ்டிகளை மடக்கியிருந்தான். அவனது நகங்கள் அவனது உள்ளங்கைகளை ஆழமாகக் கீறிக் கொண்டிருந்தன.

“தன்னுடைய நாட்குறிப்புப் புத்தகத்தை நம்புவதை நிறுத்துவதற்கு முட்டாள் ஜின்னிக்கு வெகு காலம் பிடித்தது,” என்று நார்ட்டன் கூறினான். “இறுதியில் அவளுக்குச் சந்தேகம் வந்ததால் அவள் அதைத் தலைமுழுக முயன்றாள். ஹாரி, கதையில் நீ அங்குதான் நுழைகிறாய். நீ அப்புத்தகத்தைக் கண்டுபிடித்தாய். அது உனக்குக் கிடைத்தது குறித்து எனக்கு மிகவும் சந்தோஷம். எல்லோரையும் விட்டுவிட்டு அது உனக்குக் கிடைத்திருந்தது! நான் சந்திக்க மிகமிக ஆவலாக ருந்த ஒரு நபரிடம் அது சென்றடைந்திருந்தது . . .”

“என்னை ஏன் நீ சந்திக்க விரும்பினாய்?” என்று ஹாரி கேட்டான். கோபம் அவனுக்குத் தலைக்கு ஏறிக் கொண்டிருந்தது. தன் குரலை ஒரே சீராக வைத்துக் கொள்வதற்கு அவன் மிகவும் சிரமப்பட்டான்.

“உன்னைப் பற்றிய எல்லா விபரங்களையும் ஜின்னி என்னிடம் கூறிவிட்டாள்,” என்று நார்ட்டன் கூறினான். “பிரமிக்க வைக்கும் உன் முழுக் கதையையும் அவள் என்னிடம் பகிர்ந்து கொண்டாள்.” நார்ட்டனின் பார்வை ஹாரியின் நெற்றியிலிருந்த மின்னல் கீற்று வடிவத் தழும்பின்மீது அலைபாய்ந்து கொண்டிருந்தது. “உன்னைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும், உன்னிடம் பேசவும், முடிந்தால் உன்னைப் பார்க்கவும் நான் விரும்பினேன். அதனால் உன்னுடைய நம்பிக்கையைப் பெறுவதற்காக, என்னுடைய மிகப் பெரிய வெற்றிக் கதையான, அந்த சைத்தான் ஹாக்ரிட் பிடிபட்டக் கதையை உனக்குக் காட்டுவதென்று நான் தீர்மானித்தேன்.”

“ஹாக்ரிட் என்னுடைய நண்பர்,” என்று ஹாரி கூறினான். அவனது குரல் இப்போது நடுங்கிக் கொண்டிருந்தது. “நீதான் அவரை மாட்டிவிட்டிருக்கிறாய், இல்லையா? நீ தவறாக அவரைப் பிடித்துக் கொடுத்திருந்ததாக நான் நினைத்திருந்தேன். ஆனால் –”

நார்ட்டன் மீண்டும் உச்சஸ்தாயியில் சிரித்தான்.

“என் வார்த்தையைக் கணக்கில் எடுத்துக் கொள்வதா அல்லது ஹாக்ரிட்டின் வார்த்தையைக் கணக்கில் எடுத்துக் கொள்வதா என்பதில் போய் அது நின்றது. ஹாரி, அது அந்த வயதான தலைமையாசிரியர் அர்மான்டோ டிப்பட்டுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை நீ கற்பனை செய்து பார். ஒரு பக்கம் நார்ட்டன். ஏழை என்றாலும் அபாரமான புத்திசாலி, அனாதை என்றாலும் தைரியசாலி, பள்ளியின் மாணவ அணித் தலைவன், எல்லோரும் பின்பற்ற வேண்டிய முன்மாதிரி மாணவன். மறுபுறம் மடத்தனமான ஹாக்ரிட். ஒவ்வொரு வாரமும் பிரச்சனையில் மாட்டிக் கொண்ட பேர்வழி, தன்னுடைய படுக்கைக்குக் கீழே ஓநாய்க் குட்டிகளை வளர்க்க முனைந்தவன், அரக்கர்களுடன் மற்போர் புரிவதற்காகத் தடை செய்யப்பட்டக் காட்டிற்குள் சென்றவன். ஆனால் நான் போட்டத் திட்டம் எவ்வளவு அழகாக வேலை செய்தது என்பதைக் கண்டு நானே அசந்து போனேன் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஹாக்ரிட் கண்டிப்பாக ஸ்லிதரினின் வாரிசாக இருக்க முடியாது என்பதை யாராவது புரிந்து கொள்வார்கள் என்று நான் நினைத்தேன். ரகசியங்கள் அடங்கிய பாதாள அறை குறித்த அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளவும், அதன் ரகசிய நுழைவு வழியைக் கண்டுபிடிக்கவும் எனக்கே முழுதாக ஐந்து வருடங்கள் தேவைப்பட்டன … ஹாக்ரிட்டுக்கு அந்த அளவு மூளையும் ஆற்றலும் இருந்ததாக அவர்கள் எண்ணியதை நினைத்தால்!

“உருவமாற்று ஆசிரியர் டம்பிள்டோர் மட்டுமே ஹாக்ரிட் நிரபராதி என்று எண்ணினார். அதனால் ஹாக்ரிட்டைத் தக்க வைத்துக் கொண்டு, அவரைக் கோட்டைப் பாதுகாவலராகத் தயார்படுத்த, டம்பிள்டோர், டிப்பரை ஒப்புக் கொள்ள வைத்துவிட்டார். நடந்த உண்மையை டம்பிள்டோர் சரியாக ஊகித்திருக்கக்கூடும் என்று நான் நினைக்கிறேன். மற்ற ஆசிரியர்கள் என்னை விரும்பிய அளவுக்கு, டம்பிள்டோர் ஒருபோதும் என்னை விரும்பியதில்லை . . .”

“டம்பிள்டோர் உன்னை நன்றாக ஊடுருவிப் பார்த்திருந்திருப்பார் என்று நான் நினைக்கிறேன்,” என்று ஹாரி தன் பற்களைக் கடித்தபடி கூறினான்.

“ஹாக்ரிட் ஹாக்வார்ட்ஸிலிருந்து வெளியேற்றப்பட்டப் பிறகு, டம்பிள்டோர் என்மீது ஒரு கண் வைத்திருந்தார்,” என்று நார்ட்டன் விட்டேத்தியாகக் கூறினான். “நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்வரை ரகசியங்கள் அடங்கிய பாதாள அறையை மீண்டும் திறப்பது பாதுகாப்பானது அல்ல என்பதை நான் அறிந்தேன். ஆனால் அந்த அறையைக் கண்டுபிடிப்பதற்கு நான் செலவழித்த நீண்ட வருடங்களின் உழைப்பு வீணாவதை நான் விரும்பவில்லை. அதனால் நான் எனக்குப் பின்னால் ஒரு நாட்குறிப்புப் புத்தகத்தை விட்டுச் செல்லவும், அதன் பக்கங்களில் பதினாறு வயது ‘நார்ட்டனை, அதாவது ‘என்னை’ப் பாதுகாத்து வைக்கவும் நான் தீர்மானித்தேன். அதிர்ஷ்டம் என் பக்கம் இருந்தால், என்றாவது ஒரு நாள், என்னுடைய காலடிச் சுவடைப் பின்பற்றி சலசார் ஸ்லிதரினின் உன்னதமான நோக்கங்களை நிறைவேற்ற இன்னொருவரை வழிநடத்துவதற்கு அந்த நாட்குறிப்புப் புத்தகம் எனக்கு உதவக்கூடும் என்று நான் நினைத்தேன்.”

“இம்முறையும் அதை உன்னால் நிறைவேற்ற முடியாது,” என்று ஹாரி வெற்றி முழக்கத்தோடு கூறினான். இறக்கவில்லை, ஃபில்ச்சின் பூனை உட்பட. இன்னும் சில “இம்முறை யாரும் மணிநேரத்தில் மன்ட்ரேக் மாயத் திரவம் தயாராகிவிடும். கல்லாக்கப்பட்ட அனைவரும் மீட்டெடுக்கப்படுவார்கள்.”

“நான் இதைப் பற்றி ஏற்கனவே உன்னிடம் கூறியிருக்கிறேன்,” என்று நார்ட்டன் அமைதியாகக் கூறினான். “ஈன ரத்தப் பிறவிகளைக் கொல்வது எனக்கு இப்போது முக்கியமாகப் படவில்லை. பல மாதங்களாக என்னுடைய புதிய இலக்காக இருந்து வந்துள்ளது நீதான்!”

ஹாரி அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“அடுத்த முறை என்னுடைய நாட்குறிப்புப் புத்தகம் திறக்கப்பட்டபோது நான் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டேன். அதில் எழுதிக் கொண்டிருந்தது நீ அல்ல. அது ஜின்னி. அந்த நாட்குறிப்புப் புத்தகம் உன்னிடம் இருந்ததை ஜின்னி பார்த்திருந்ததால் அவள் பீதியடைந்தாள். அதை எப்படி வேலை செய்ய வைப்பது என்பதை நீ கண்டுபிடித்து, அவளுடைய ரகசியங்கள் அனைத்தையும் நான் உன்னிடம் சொல்லிவிட்டால் என்ன செய்வது? அதைவிட மோசமாக, சேவற்கோழிகளின் கழுத்துக்களை நெறித்துக் கொன்றது யார் என்பதை நான் உன்னிடம் கூறிவிட்டால்? அதனால் அந்த முட்டாள் பெண் உன்னுடைய பொதுப் படுக்கையறை காலியாவதற்காகக் காத்திருந்து அப்புத்தகத்தை உன்னிடமிருந்து திருடினாள். ஆனால் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் வாரிசு யார் என்பதைக் அறிந்திருந்தேன். ஸ்லிதரினின் கண்டுபிடிப்பதில் நீ மும்முரமாக இருந்தாய் என்பதை நான் தெளிவாக அறிந்திருந்தேன். ஜின்னி என்னிடம் கூறியிருந்ததை வைத்துப் பார்த்தபோது, அந்தப் புதிரை அவிழ்க்க நீ எதற்கும் துணிவாய் என்பது எனக்குப் புரிந்தது – குறிப்பாக, உன்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர் தாக்கப்பட்டால்! உன்னால் ஸர்ப்ப பாஷையில் உரையாட முடியும் என்பது குறித்து மொத்தப் பள்ளியும் பேசிக் கொண்டிருந்ததாக ஜின்னி என்னிடம் கூறியிருந்தாள் .

“அதனால், சுவரில் தனது சொந்தப் பிரியாவிடையைத் தன் கையாலேயே ஜின்னியை எழுத வைத்துவிட்டு, நான் இங்கு வந்து உனக்காகக் காத்திருந்தேன். அவள் போராடினாள், அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள், எனக்குச் சலிப்பூட்டினாள். ஆனால் அவளுடைய உயிர் ஏற்கனவே ஊசலாடிக் கொண்டிருந்தது. அவள் அளவுக்கதிகமாகத் தன் ஜீவனை அந்த நாட்குறிப்புப் புத்தகத்தில் வடித்துவிட்டிருந்தாள், எனக்குள் கொட்டியிருந்தாள். நான் அதன் பக்கங்களிலிருந்து வெளியேறுவதற்கு அது போதுமானதாக இருந்தது! நாங்கள் இங்கு வந்ததிலிருந்தே நான் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். நீ கண்டிப்பாக வருவாய் என்று எனக்குத் தெரியும். ஹாரி பாட்டர், உன்னிடம் கேட்பதற்கு என்னிடம் நிறையக் கேள்விகள் இருக்கின்றன.”

“எந்த மாதிரியான கேள்விகள்?” என்று ஹாரி வெறுப்பாகக் கேட்டான். அவனது கைமுஷ்டிகள் இன்னும் இறுக்கமாக மூடியபடியே இருந்தன.

“நல்லது,” என்று நார்ட்டன் இனிமையாகத் துவக்கினான். “உலகில் இதுவரை தோன்றியுள்ள மந்திரவாதிகளிலேயே மிகச் சிறந்து விளங்கிய ஒரு மந்திரவாதியை எந்தவித மந்திர சக்திகளும் இல்லாதிருந்த ஒரு குழந்தையால் எப்படி முறியடிக்க முடிந்தது? வோல்டமார்ட்டின் மொத்த சக்தியும் அழிக்கப்பட்ட அதே சமயத்தில், வெறும் ஒரு தழும்போடு மட்டும் உன்னால் எப்படித் தப்பிக்க முடிந்தது?”

நார்ட்டனின் வெறி பிடித்தக் கண்களில் வினோதமான சிவப்பு ஒன்று இப்போது பளபளத்தது.

“நான் எப்படித் தப்பினேன் என்று நீ எதற்காகக் கவலைப்படுகிறாய்?” என்று ஹாரி மெதுவாகக் கேட்டான். “வோல்டமார்ட் உன் காலத்திற்குப் பிறகு வந்தவன்.”

“வோல்டமார்ட்,” என்று நார்ட்டன் மென்மையாகக் கூறினான். “ஹாரி பாட்டர், வோல்டமார்ட் என்னுடயை கடந்தகாலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம்

நார்ட்டன் தன்னுடைய பாக்கெட்டிலிருந்து ஹாரியின் மந்திரக்கோலை எடுத்து, அதைக் கொண்டு, மினுக் மினுக் என்று ஒளிர்ந்து கொண்டிருந்த இரண்டு வார்த்தைகளைக் காற்றில் எழுதினான்:

நார்ட்டன் மால்வோ

பிறகு அவன் அந்த மந்திரக்கோலை ஒருமுறை அசைத்தான். அவனுடைய பெயரில் இருந்த எழுத்துக்கள் தம்மைத் தாமே இடம் மாற்றிக் கொண்டு இவ்வாறு காட்சியளித்தன:

நான் வோல்டமார்ட்

“பார்த்தாயா?” என்று அவன் கிசுகிசுத்தான். “ஹாக்வார்ட்ஸில் என்னுடைய மிக நெருங்கிய நண்பர்களிடம் மட்டும் நான் ஏற்கனவே உபயோகித்து வந்திருந்த ஒரு பெயர்தான் அது. என்னுடைய கழிசடை மகுள் அப்பாவின் பெயரையை நான் எப்போதும் உபயோகித்துக் கொண்டிருப்பேன் என்று நீ நினைத்தாயா? என் அம்மாவின் வம்சாவழியினர் மூலமாக என்னுடைய உடலில் சலசார் ஸ்லிதரினின் சொந்த ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது. தன்னுடைய மனைவி ஒரு மந்திரவாதினி என்பதைக் கண்டுபிடித்துவிட்டதால், நான் பிறப்பதற்கு முன்பே என்னை உதறித் தள்ளிவிட்டுச் சென்ற ஒரு சாதாரணமான, கேடுகெட்ட மகுளின் பெயரை நான் வைத்துக் கொண்டிருப்பேனா? கண்டிப்பாக இல்லை. அதனால் நான் எனக்காக ஒரு புதுப் பெயரை உருவாக்கிக் கொண்டேன். என்றேனும் ஒருநாள் இவ்வுலகிலேயே மிகச் சிறந்த மந்திரவாதியாக நான் உருவாகியிருக்கும்போது, மற்ற எல்லா மந்திரவாதிகளும் உச்சரிக்க மிகவும் பயப்படுகின்ற ஒரு பெயராக அது இருக்கும் என்பதை நான் அறிந்திருந்தேன்.”

ஹாரியின் மூளை ஸ்தம்பித்துவிட்டதுபோலத் தோன்றியது. ஓர் அனாதைச் சிறுவனாக இருந்து, தன்னுடைய பெற்றோர்களையும் இன்னும் ஏராளமானவர்களையும் ஈவிரக்கமின்றிக் கொன்று குவித்த ஒரு மனிதனாக வளர்ந்திருந்த நார்ட்டனை ஹாரி உணர்ச்சியற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் கடைசியில் அவன் தன்னைத் தேற்றிக் கொண்டு பேசினான்.

“நீ இல்லை,” என்று ஹாரி கூறினான். அவனுடைய அமைதியான குரல் வெறுப்பால் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.

“நான் என்ன இல்லை?” என்று நார்ட்டன் பட்டென்று கேட்டான்.

“இவ்வுலகிலேயே சிறந்த மந்திரவாதி நீ இல்லை,” என்று ஹாரி கூறினான். அவனுக்கு மூச்சு வேகமாக வந்து கொண்டிருந்தது. “உன்னை ஏமாற்றத்திற்கு உள்ளாக்குவதற்கு மன்னிக்கவும். உலகிலேயே மிகச் சிறந்த மந்திரவாதி டம்பிள்டோர்தான். எல்லோருமே அப்படித்தான் கூறுகின்றனர். நீ வலுவாக இருந்த காலத்தில்கூட, ஹாக்வார்ட்ஸை உன் கையில் எடுத்துக் கொள்ள நீ துணியவில்லை. நீ பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே உன் உண்மை சொரூபத்தை அவர் உணர்ந்து கொண்டுவிட்டார். இன்றும்கூட, நீ எங்கு மறைந்து கொண்டிருந்தாலும், அவருக்கு நீ பயப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறாய்.”

நார்ட்டனின் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது. அதன் இடத்தை ஓர் அவலட்சணமான பார்வை எடுத்துக் கொண்டது. “என்னுடைய வெறும் நினைவினாலேயே டம்பிள்டோர் இந்த இடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு இருக்கிறார்!” என்று அவன் சீறினான்.

“உன் நினைப்புத் தவறு! அவர் எங்கும் போய்விடவில்லை,” என்று ஹாரியும் பதிலுக்குச் சீறினான். அவன் நார்ட்டனை பயமுறுத்தும் நோக்கத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பேசினான். தான் கூறிக் கொண்டிருந்த விஷயங்களில் அவனுக்கே நம்பிக்கை இருக்கவில்லை. அவை உண்மையாக இருக்கக்கூடாதா என்று அவன் ஏங்கினான்.

நார்ட்டன் பேசுவதற்காகத் தன் வாயைத் திறந்தான், ஆனால் அப்படியே உறைந்து போய் நின்றான்.

எங்கிருந்தோ ஓர் இசை மிதந்து வந்து கொண்டிருந்தது. நார்ட்டன் வேகமாக வட்டமடித்து, காலியாக இருந்த அந்தப் பாதாள அறையை உற்று நோக்கினான். அந்த இசையின் ஒலி அதிகரித்துக் கொண்டிருந்தது. அது முதுகெலும்பை உறைய வைப்பதாக இருந்தது, அமானுஷமாக இருந்தது. இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட ஒன்றுபோல அது ஒலித்தது. அது ஹாரியின் தலைமுடியைக் குத்திட்டு நிற்க வைத்தது. தனது இதயம் இரண்டு மடங்கானதுபோல ஹாரிக்குத் தோன்றியது. அந்த இசை தனது விலா எலும்புகளுக்குள் அதிர்ந்து கொண்டிருந்ததுபோல அவனுக்குத் தோன்றும் அளவுக்கு அதன் ஒலி உச்சஸ்தாயியை அடைந்தபோது, அவனுக்கு அருகே இருந்த தூணின் உச்சியில் ஒரு நெருப்பு வெடித்துக் கிளம்பியது.

ஓர் அன்னப் பறவையின் அளவில் இருந்த, ரத்தச் சிவப்பு நிறப் பறவை ஒன்று அங்கு தோன்றியது. அது ஒரு வினோதமான இசையை வெளிப்படுத்தியது. அப்பறவைக்கு மயிலின் வால் நீளத்திற்கு, தகதகத்துக் கொண்டிருந்த ஒரு தங்க வால் இருந்தது. பளபளத்துக் கொண்டிருந்த அதன் கூரிய நகங்களின் பிடியில் ஒரு கந்தலான பொட்டலம் இருந்தது.

அடுத்தக் கணம், அப்பறவை ஹாரியை நோக்கி நேராகப் பறந்து வந்தது. தான் சுமந்து கொண்டிருந்த பொட்டலத்தை அது ஹாரியின் காலடியில் போட்டது. பிறகு அழுத்தமாக அவனுடைய தோளின்மீது வந்து அமர்ந்தது. ஹாரி நிமிர்ந்து பார்த்தான். அதற்கு ஒரு நீண்ட, கூரான, தங்க நிற அலகு இருந்ததையும், மின்னிக் கொண்டிருந்த கருகமணிக் கண்கள் இருந்ததையும் அவன் கவனித்தான்.

அப்பறவை தான் பாடுவதை நிறுத்தியது. அது ஆடாமல் அசையாமல் ஹாரியின் கன்னத்தைச் சூடாக உரசிக் கொண்டு உட்கார்ந்திருந்தது. வைத்தக் கண் வாங்காமல் அது நார்ட்டனையே பார்த்துக் கொண்டிருந்தது.

பதிலுக்கு அப்பறவையை விவேகத்துடன் உற்றுப் பார்த்தபடியே, நார்ட்டன், “அது ஒரு பீனிக்ஸ் பறவை . . .” என்று கூறினான்.

“ஃபாக்ஸ்?” என்று ஹாரி நிம்மதிப் பெருமூச்சுடன் கூறினான். அந்தப் பறவையின் தங்க நிற நகங்கள் நகங்கள் தன்னுடைய தோள்பட்டையை மென்மையாக அழுத்தியதை ஹாரி உணர்ந்தான்.

ஃபாக்ஸ் கீழே போட்டிருந்த கந்தலான பொட்டலத்தைச் சுட்டிக்காட்டி, நார்ட்டன், “பள்ளியின் பழைய வகை பிரிக்கும் தொப்பி அது!” என்று கூறினான்.

அது வகை பிரிக்கும் தொப்பிதான். அது ஒட்டுப் போடப்பட்டு, மிகவும் அழுக்காகவும் நைந்து போயும் இருந்தது. அத்தொப்பி அசையாமல் ஹாரியின் காலடியில் விழுந்து கிடந்தது.

நார்ட்டன் மீண்டும் சிரிக்கத் துவங்கினான். அவன் பலமாகச் சிரித்தச் சிரிப்பில் அந்த மொத்த அறையும் அதிர்ந்ததில், பத்து நார்ட்டன்கள் ஒன்றாகச் சேர்ந்து சிரித்ததுபோல இருந்தது.

“தனக்கு வக்காலத்து வாங்கும் ஒருவனுக்கு, போயும் போயும் இதையா டம்பிள்டோர் அனுப்புவார்? ஒரு பாடும் பறவையும் ஒரு பழைய தொப்பியும்! ஹாரி பாட்டர், இப்போது நீ தைரியமாக உணர்கிறாயா? இப்போது பாதுகாப்பாக உணர்கிறாயா?”

ஹாரி பதிலேதும் பேசவில்லை. இக்கணத்தில் ஃபாக்ஸாலோ அல்லது வகை பிரிக்கும் தொப்பியாலோ என்ன பிரயோஜனம் என்பதை அவனால் பார்க்க முடியாவிட்டாலும், தான் இனியும் தனியாக இருக்கவில்லை என்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. நுரைத்துப் பொங்கிக் கொண்டிருந்த தைரியத்துடன், நார்ட்டன் தன் சிரிப்பை நிறுத்துவதற்காக ஹாரி காத்திருந்தான்.

இன்னும் பெரிதாகப் புன்னகைத்துக் கொண்டிருந்த நார்ட்டன், “நாம் நமது கதைக்கு வரலாம்,” என்று கூறினான். “நாம் இரு முறை சந்தித்திருக்கிறோம் – முதலில், உன் கடந்தகாலத்தில் இரண்டாவதாக, என்னுடைய எதிர்காலத்தில்! இரண்டு முறையும் என்னால் உன்னைக் கொல்ல முடியவில்லை. நீ எப்படி உயிர் தப்பினாய்? என்னிடம் எல்லாவற்றையும் கூறிவிடு.” பின் நார்ட்டன் மெதுவாகத் தொடர்ந்தான். “ஹாரி பாட்டர், நீ எவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருக்கிறாயோ அவ்வளவு நேரம் உன்னால் உயிர் பிழைத்திருக்க முடியும்.”

ஹாரி வேகமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தான். அவன் தனக்கு முன்னால் இருந்த வழிகளைச் சீர்தூக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான். ஹாரியின் மந்திரக்கோல் நார்ட்டனிடம் இருந்தது. ஹாரியிடம் ஃபாக்ஸும் வகை பிரிக்கும் தொப்பியும் இருந்தன. ஆனால் ஒற்றைக்கு ஒற்றைச் சண்டையில் அவற்றால் பெரிய பிரயோஜனம் கிடையாது. நிலைமை மோசமாக இருந்தது என்பது உண்மைதான். ஆனால் நார்ட்டன் நேரம் கடத்தக் கடத்த, ஜின்னியின் உயிர்ச்சக்தி அவளிடமிருந்து மேலும் மேலும் கரைந்து கொண்டிருந்தது இதற்கிடையை நார்ட்டனின் உருவம் தெளிவாகவும் உறுதியாகவும் ஆகிக் கொண்டு வந்ததை ஹாரி திடீரென்று கவனித்தான். கடைசியில் அவனுக்கும் நார்ட்டனுக்கும் இடையே ஒற்றைக்கு ஒற்றைச் சண்டைதான் ஒரே வழி என்று ஆகிவிட்டால், அதைத் தள்ளிப் போடுவதைவிட உடனடியாக முடிப்பதே நல்லது என்று அவனுக்குத் தோன்றியது.

“நீ என்னைத் தாக்கியபோது, உன் சக்தியனைத்தும் மாயமாய் மறைந்து போனதற்கு என்ன காரணம் என்பது யாருக்கும் தெரியாது,” என்று ஹாரி திடுமெனத் துவக்கினான். “அது எனக்கும் தெரியாது. ஆனால் உன்னால் என்னை ஏன் கொல்ல முடியவில்லை என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் என் அம்மா என்னைக் காப்பாற்றும் முயற்சியில் இறந்து போனார். மிகச் சாதாரணமான மகுளுக்குப் பிறந்த எனது அம்மாதான் உன்னால் என்னைக் கொல்ல முடியாமல் போனதற்குக் காரணம்!” ஹாரி தன்னுள் அடக்கி வைத்திருந்த பெருங்கோபத்தினால் ஏற்பட்டப் படபடப்புடன் மேலும் தொடர்ந்தான். “நீ என்னைக் கொல்வதை அவர் தடுத்து நிறுத்தினார். உன்னுடைய உண்மையான சொரூபத்தை நான் பார்த்திருக்கிறேன். நான் உன்னைக் கடந்த வருடம் சந்தித்தேன். நீ முற்றிலும் சிதிலமடைந்துள்ள ஒருவன். நீ ஒரு நடைப்பிணம். உன் சக்தியெல்லாம் உன்னை அங்குதான் கொண்டு போய் நிறுத்தியுள்ளது. நீ ஓடி ஒளிந்து கொண்டுள்ளாய். நீ அருவருப்பானவன். நீ ஓர் ஏமாற்றுக்காரன்!”

நார்ட்டனின் முகம் அஷ்டகோணலானது. பின் அவன் வலுக்கட்டாயமாக ஒரு பரிதாபமான புன்னகையைத் தன் உதட்டில் படரவிட்டான்.

“உன் அம்மா உன்னைக் காப்பாற்றுவதற்காக உயிர் நீத்தார் என்பது உண்மைதான். அது சாபத்திற்கு எதிரான ஒரு பலமான கவசம் என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு விஷயம் இப்போது எனக்குப் புரிகிறது – உன்னிடம் தனித்துவமான சிறப்பு எதுவும் கிடையாது. நான் இதுநாள்வரை அது குறித்துத் தீவிரமாக யோசித்து வந்திருந்தேன். ஹாரி பாட்டர், வினோதமாக, நம் இருவருக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. நீயும் அதைக் கவனித்திருக்கக்கூடும். நாம் இருவரும் அரை ரத்தப் பிறவிகள், அனாதைகள், மகுள்களால் வளர்க்கப்பட்டவர்கள். மாபெரும் சலசார் ஸ்லிதரினுக்குப் பிறகு, ஹாக்வார்ட்ஸில் ஸர்ப்ப பாஷையில் பேசத் தெரிந்தவர்கள் நாம் இருவராக மட்டும்தான் இருக்க வேண்டும். நம் இருவரின் சாயலும்கூட ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது ஆனால் என்னிடமிருந்து நீ தப்பியது வெறும் அதிர்ஷ்டத்தால்தான். நான் அதைத்தான் தெரிந்து கொள்ள விரும்பினேன்.”

நார்ட்டன் தன் மந்திரக்கோலை எந்நேரத்திலும் உயர்த்தக்கூடும் என்று எதிர்பார்த்து ஹாரி பதற்றத்துடன் காத்துக் கொண்டிருந்தான். ஆனால் நார்ட்டனின் புன்னகை மீண்டும் பெரிதாகியது.

“ஹாரி, நான் உனக்கு இப்போது ஒரு சிறு பாடத்தைக் கற்றுக் கொடுக்கப் போகிறேன். சலசார் ஸ்லிதரினின் வாரிசான வோல்டமார்ட்டின் சக்தி பெரிதா, டம்பிள்டோரால் கொடுக்க முடிந்த மிகச் சிறந்த ஆயுதங்களின் துணையுடன் இருக்கும் பிரபலமான ஹாரி பாட்டரின் சக்தி பெரிதா என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.”

நார்ட்டன் தன் குறுகுறுப்பான பார்வையை ஃபாக்ஸ்மீதும் வகை பிரிக்கும் தொப்பியின்மீதும் வீசிவிட்டு அங்கிருந்து நடந்து சென்றான். ஹாரி, மரத்துப் போன தன் கால்களை அகலப் பரப்பி வைத்துக் கொண்டு நார்ட்டன் என்ன செய்தான் என்று பார்த்துக் கொண்டிருந்தான். நார்ட்டன், நெடிதுயர்ந்திருந்த இரண்டு தூண்களுக்கு நடுவே நின்று கொண்டு, அந்த அரையிருட்டில், ஸ்லிதரின் கற்சிலையின் முகத்தை அண்ணாந்து பார்த்தான். பின் அவன் தன் வாயை அகலமாகத் திறந்து ‘ஸ்ஸ்ஸ்’ என்று சீறினான். ஆனால் அவன் என்ன பேசினான் என்பது ஹாரிக்குப் புரிந்தது.

“நான்கு ஹாக்வார்ட்ஸ் மந்திரவாதிகளிலும் மிகச் சிறந்த ஸ்விதரினே, என்னிடம் பேசுங்கள்,”

ஹாரி ஒரு வட்டமடித்துத் திரும்பி, அச்சிலையை ஏறிட்டுப் பார்த்தான். ஃபாக்ஸ் அவனுடைய தோளில் லேசாக ஆடியது.

ஸ்லிதரினின் பிரம்மாண்டமான முகம் அசைந்தது. அதனுடைய வாய் திறந்து கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து கொண்டே வந்தது. அதனுள்ளே மிகப் பெரிய இருண்ட துவாரம் ஒன்று தோன்றியது.

அச்சிலையின் வாயில் ஏதோ நெளியத் துவங்கியது. அச்சிலையின் அடியாழத்தில் இருந்து ஏதோ ஒன்று வழுக்கிக் கொண்டு வெளியே வந்தது.

ஹாரி பின்னால் நகர்ந்து கொண்டே இருந்தான். இறுதியில், அந்த இருண்ட அறையின் சுவரில் சென்று முட்டி நின்றான். அவன் தன் கண்களை இறுகப் பொத்திக் கொண்டபோது, ஃபாக்ஸ் தனது கன்னத்தில் படும்படியாகத் தன் இறக்கையை விரித்துத் தனது தோளைவிட்டுப் பறந்து போனதை அவன் உணர்ந்தான். “என்னைவிட்டுப் போகாதே!” என்று அவன் கத்த விரும்பினான். ஆனால் ராஜ ஸர்ப்பத்தை எதிர்த்துச் சண்டையிட்டு வெற்றி பெற பீனிக்ஸ் பறவைக்கு எவ்வளவு வாய்ப்பிருந்தது?

அந்த அறையின் கற்தரையில் மிகப் பெரியதாக ஏதோ ஒன்று வந்து விழுந்தது. அது தன்னை பலமாக உலுப்பிக் கொண்டதை ஹாரி உணர்ந்தான். அங்கு என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை அவன் அறிந்தான். அவனால் அதை உணர முடிந்தது. அந்த மாபெரும் பாம்பு ஸ்லிதரின் சிலையின் வாயிலிருந்து வெளியேறியதை ஹாரியால் துல்லியமாகக் கற்பனை செய்ய முடிந்தது. பின்னர், நார்ட்டனின் சீறும் வார்த்தைகள் அவனது காதுகளில் விழுந்தன: “அவனைக் கொல்!”

அந்த ராஜ ஸர்ப்பம் ஹாரியை நோக்கி வந்து கொண்டிருந்தது. தூசி படிந்திருந்த அந்தத் தரையில் அப்பாம்பு திடமாக ஊர்ந்து வந்து கொண்டிருந்த சத்தம் ஹாரிக்குக் கேட்டது. ஹாரி தன் கண்களை இறுக்கமாக மூடிய நிலையில் தன் கைகளைத் தனக்கு முன்னால் விரித்துத் தடவியபடி, பக்கவாட்டில் நகரத் துவங்கினான். நார்ட்டன் அதைக் கண்டு நகைத்தான் . . .

ஹாரி தடுமாறிக் கீழே விழுந்தான். கற்தரையில் அவன் பலமாக விழுந்ததில் அவனது வாயிலிருந்து ரத்தம் கசிந்தது. அந்த ராஜ ஸர்ப்பம் அவனுக்கு ஒருசில அடிகள் தள்ளி இருந்தது. அது தன்னை நெருங்கிக் கொண்டிருந்ததை ஹாரியால் உணர முடிந்தது.

அப்போது தனக்கு நேர் மேலே ஏதோ வெடித்தது போன்ற ஒரு பெரும் சத்தம் ஹாரிக்குக் கேட்டது. பலமான ஏதோ ஒன்று அவனது தலையின்மீது விழுந்ததில் அவன் அங்கிருந்த சுவர்மீது மோதினான், ராஜ ஸர்ப்பத்தின் விஷப் பற்கள் தன் உடலுக்குள் இறங்கவிருந்ததை எதிர்பார்த்து அவன் காத்திருந்தபோது, மூர்க்கத்தனமான ‘ஸ்ஸ்ஸ்’ ஒலி மேலும் அதிகமாகக் கேட்டது. தூண்களின்மீது ஏதோ வேகமாகத் தூக்கியடிக்கப்பட்டது போன்ற ஓர் ஓசையும் ஹாரியின் காதுகளில் விழுந்தது.

அவனால் அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என்ன நிகழ்ந்து கொண்டிருந்தது என்பதைப் பார்க்கப் போதுமான அளவுக்கு அவன் தன் கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தான். ஒரு பெரிய கருவாலி மரக் கிளையின் அளவுக்குத் தடிமனாக இருந்த அந்த பிரம்மாண்டமான, பிரகாசமான, பச்சை நிறப் பாம்பு அங்கு படமெடுத்து நின்று கொண்டிருந்தது. அதனுடைய தலை அத்தூண்களுக்கு இடையே அங்குமிங்கும் ஆடிக் கொண்டிருந்தது. அது தன் பக்கம் திரும்பினால் தன் கண்களை மூடிக் கொள்ளத் தயாராக இருந்த ஹாரி, அப்பாம்பின் கவனத்தை எது கவர்ந்திருந்தது என்பதைக் கண்டான்.

ஃபாக்ஸ் அதன் தலையைச் சுற்றிப் பறந்து கொண்டிருந்தது. அந்த ராஜ ஸர்ப்பம், பட்டாக்கத்திகளைப் போன்று நீளமாகவும் மெலிதாகவும் இருந்த தனது விஷப் பற்களை அப்பறவையை நோக்கி நீட்டி அதைத் தாக்க முயன்றது.

ஃபாக்ஸ் சடாரென்று கீழே பாய்ந்தது. அதனுடைய நீண்ட தங்க நிற அலகு ஒரு கணம் பார்வையில் இருந்து மறைந்தது. திடீரென்று கருநிற ரத்தம் தரையில் அருவியெனக் கொட்டியது. அப்பாம்பு தன் வாலைத் தூக்கித் தரையில் ஓங்கி அடித்தது. ஹாரி மயிரிழையில் தப்பினான். ஹாரி தன் கண்களை மூடுவதற்குள் அது அவனை நோக்கித் திரும்பியது. ஹாரி நேருக்கு நேராக அதன் முகத்தைப் பார்த்தான். அதன் குழிவான மஞ்சள் நிறக் கண்கள் இரண்டும் அந்த பீனிக்ஸ் பறவையால் கொத்திக் குதறப்பட்டிருந்தன. அதன் கண்களிலிருந்து ரத்தம் தரையில் கொட்டிக் கொண்டிருந்தது. அப்பாம்பு வலியால் துடித்துக் கொண்டிருந்தது.

“ஐயோ!” என்று நார்ட்டன் அலறியது ஹாரிக்குக் கேட்டது. “அந்தப் பறவையை விட்டுவிடு! அந்தப் பறவையை விட்டுவிடு! அந்தப் பையன் உனக்குப் பின்னால்தான் இருக்கிறான். உன்னால் அவனை நுகர முடியும். அவனைக் கொல்!”

குருடாகிப் போயிருந்த அந்த ராஜ ஸர்ப்பம் குழப்பத்தில் அங்குமிங்கும் ஆடியது. நாசமாக்கப்பட்டிருந்த அதன் கண்களிலிருந்து ரத்தம் அருவியெனக் கொட்டிக் கொண்டிருக்க, ஃபாக்ஸ் தன்னுடைய அமானுஷமான பாடலைப் பாடியபடி அப்பாம்பின் தலையைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டு, அந்த ராஜ ஸர்ப்பத்தின் செதில்கள் நிறைந்த மூக்கை அங்குமிங்கும் கொத்திக் கொண்டிருந்தது.

“யாராவது உதவுங்கள், யாராவது உதவுங்கள்!” என்று ஹாரி காட்டுத்தனமாகக் கத்தினான். “யாராவது உதவுங்கள் !”

அந்த ராஜ ஸர்ப்பம் மீண்டும் தன் வாலை அத்தரையின் குறுக்காக ஒரு சுழற்றுச் சுழற்றியது. அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக ஹாரி குனிந்தபோது, மென்மையான ஏதோ ஒன்று தனது முகத்தின்மீது வந்து விழுந்ததை அவன் உணர்ந்தான்.

அந்த ராஜ ஸர்ப்பம் தன் வாலைச் சுழற்றிய சுழற்றலில், வகை பிரிக்கும் தொப்பி ஹாரியின் கையில் வந்து விழுந்திருந்தது. ஹாரி அதைப் பிடித்துக் கொண்டான். அது மட்டும்தான் இப்போது அவனிடம் மிச்சமிருந்தது. அவனுக்குக் கிடைத்திருந்த கடைசி வாய்ப்பு அதுதான். அவன் அதைத் தன் தலையில் திணித்துக் கொண்டு தரையில் நெடுஞ்சாண்கிடையாகத் தாவி விழுந்தான். அந்த ராஜ ஸர்ப்பத்தின் வால் மீண்டும் ஒரு முறை அவனுக்கு மேலாகச் சுழன்று சென்றது.

“எனக்கு உதவு! எனக்கு உதவு!” என்று ஹாரி தன் மனத்திற்குள் நினைத்தான். அந்தத் தொப்பியின் உள்ளே அவன் தனது கண்களை இறுக்கமாக மூடியிருந்தான். “தயவு செய்து, எனக்கு உதவு!”

அதற்கு அந்தத் தொப்பியிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. அதற்குப் பதிலாக, கண்ணுக்குப் புலப்படாத ஏதோ ஒரு கை அத்தொப்பியை மிகவும் அழுத்திப் பிடித்து நெருக்கியதுபோல அது அவனை நெறித்தது. கனமான, கடினமான ஏதோ ஒன்று அவனுடைய தலையில் வந்து விழுந்து அவனைக் கிட்டத்தட்டக் கீழே தள்ளியது. எதிர்பாராத அந்தத் தாக்குதலால் தனது கண்களுக்கு முன்னால் நட்சத்திரங்கள் மினுமினுக்க, அவன் தன் கையால் அத்தொப்பியின் உச்சத்தைப் பிடித்து அதைத் தன் தலையிலிருந்து கழற்ற முனைந்தபோது, அதனடியில் நீளமான, உறுதியான ஏதோ ஒன்று இருந்ததை அவன் உணர்ந்தான்.

பளபளத்துக் கொண்டிருந்த ஒரு வெள்ளி வாள் அத்தொப்பிக்குள் தோன்றியது. அதன் கைப்பிடியில் முட்டைகளின் அளவில் இருந்த சிவப்புக் கற்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன.

“அந்தப் பையனைக் கொல்! அந்தப் பறவையை விட்டுவிடு! அந்தப் பையன் உனக்குப் பின்னால்தான் இருக்கிறான். முகர்ந்து பார்! அவனை முகர்ந்து பார்!” என்று நார்ட்டன் கத்தினான்.

ஹாரி ஏற்கனவே தயாராக நின்று கொண்டிருந்தான். அந்த ராஜ ஸர்ப்பம் தன் தலையைக் கீழிறக்கிக் கொண்டிருந்தது. அதன் உடல் சுருண்டு கொண்டிருந்தது. அது அவனை நோக்கித் திரும்பியபோது, அங்கிருந்த தூண்களைத் தாக்கியது. முன்பு அதன் கண்கள் இருந்த இடத்தில் இப்போது ரத்தக் களரியாக இருந்த குழிகளை ஹாரியால் பார்க்க முடிந்தது. அந்த ராஜ ஸர்ப்பம் தன் வாயைப் பெரிதாகப் பிளந்து கொண்டிருந்தது. அதன் வாய் அவனை ஒரேயடியாக விழுங்கிவிடக்கூடிய அளவுக்குப் பெரியதாக இருந்தது. அதன் வாயிலிருந்த விஷப் பற்களை ஹாரி பார்த்தான். அவை அவனுடைய வாள் அளவுக்கு நீளமாகவும் ஒல்லியாகவும் பளபளப்பாகவும் விஷத்தன்மையோடும் இருந்தன .

அந்த ராஜ ஸர்ப்பம் குருட்டாம்போக்காகப் பாய்ந்தது. ஹாரி அதைச் சமாளித்துக் குனிந்து கொண்டான். அது அந்த அறையின் சுவரைத் தாக்கியது. பிறகு அது மீண்டும் தாக்கியது. பிளவுபட்டிருந்த தன் நாக்கைக் கொண்டு அது ஹாரியின் பக்கத்தில் பலமாக அடித்தது. ஹாரி அந்த வாளைத் தன் இரு கைகளாலும் உயரே தூக்கினான்.

அந்த ராஜ ஸர்ப்பம் மீண்டும் தாக்கியது. இம்முறை அதன் குறி துல்லியமாக இருந்தது. ஹாரி தன் பலம் முழுவதையும் பிரயோகித்து அந்த வாளின் கைப்பிடிவரை உள்ளே செல்லுமாறு, அதை அந்த ராஜ ஸர்ப்பத்தின் வாயினுள் செருகினான்.

ஹாரியின் கைகள் ரத்தத்தில் குளித்துக் சூடான கொண்டிருந்தபோது, அவன் தனது முழங்கைக்குச் சற்று மேலே ஒரு கடுமையான வலியை உணர்ந்தான். ஒரு நீண்ட விஷப் பல் அவனுடைய கையில் மேலும் மேலும் ஆழமாகப் புதைந்து கொண்டிருந்தது. பின் அந்த ராஜ ஸர்ப்பம் பக்கவாட்டில் சரிந்து, தரையில் விழுந்து துடித்தபோது அதன் விஷப் பல் உடைந்து சிதறியது.

ஹாரி சுவரில் சரிந்தபடியே சாய்ந்தான். தன் உடல் முழுவதும் விஷத்தைப் பரப்பிக் கொண்டிருந்த அந்த விஷப் பல்லை அவன் தன் கையிலிருந்து பிடுங்கினான். ஆனால் காலம் கடந்துவிட்டிருந்ததை அவன் அறிந்தான். அந்தக் காயத்திலிருந்து பயங்கரமான வலி மெதுவாகவும் சீராகவும் பரவிக் கொண்டிருந்தது. அவன் அந்த விஷப் பல்லைக் கீழே போட்டுவிட்டு, தனது ரத்தம் தன்னுடைய அங்கியை நனைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே அவனுடைய பார்வை மங்கிக் கொண்டு வந்தது. அந்தப் பாதாள அறை வேகமாகக் கரைந்து கொண்டிருந்ததுபோல அவனுக்குத் தோன்றியது.

அப்போது ரத்தச் சிவப்பு நிறத்தில் ஏதோ ஒன்று அவனுக்கு அருகே கடந்து சென்றது. தனக்குப் பக்கத்தில் கூரிய நகங்களின் மெதுவான பிராண்டல் ஒலியும் அவனுக்குக் கேட்டது.

“ஃபாக்ஸ்,” என்று ஹாரி கூப்பிட்டான். அவனது வாய் குழறிக் கொண்டிருந்தது. “ஃபாக்ஸ், நீ அபாரமாகச் செயல்பட்டாய் அப்பாம்பின் விஷப்பல் தனது கையில் பதிந்திருந்த இடத்தில் அந்தப் பறவை தனது அழகான தலையை வைத்ததை அவன் உணர்ந்தான்.

எதிரொலி எழுப்பிக் கொண்டிருந்த காலடிச் சத்தங்கள் ஹாரிக்குக் கேட்டன. பின் ஓர் இருண்ட நிழல் அவனுக்கு முன்னால் வந்து நின்றது.

“ஹாரி பாட்டர், உன் கதை முடிந்துவிட்டது,” என்று அவனுக்கு மேலேயிருந்து நார்ட்டனின் குரல் வந்தது. “நீ இறந்துவிட்டாய். அதை டம்பிள்டோரின் பறவையும் அறிந்திருக்கிறது. ஹாரி பாட்டர், அது என்ன செய்து கொண்டிருக்கிறது தெரியுமா? உனக்காக அழுது கொண்டிருக்கிறது!”

ஹாரி தன் கண்களைத் திறந்து மூடினான். ஃபாக்ஸின் தலை அவனுக்குத் தெளிவாகத் தெரிவதும் மறைவதுமாக இருந்தது. அதனுடைய பளபளப்பான சிறகுகளில், அடர்த்தியான வெண் முத்துக்கள் போன்ற கண்ணீர்த் துளிகள் சொட்டிக் கொண்டிருந்தன.

“ஹாரி பாட்டர், நான் இங்கே உட்கார்ந்து நீ இறந்து கொண்டிருப்பதை வேடிக்கைப் பார்க்கப் போகிறேன். உனக்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீ தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். எனக்கு அவசரமில்லை.”

ஹாரிக்கு மயக்கமாக வந்தது. அவனைச் சுற்றி இருந்த எல்லாமே சுற்றுவதுபோல இருந்தது.

“ஹாரி பாட்டரின் கதை இப்படியா முடிய வேண்டும்?” என்ற நார்ட்டனின் குரல் வெகு தொலைவிலிருந்து கேட்பதுபோலக் கேட்டது. “ரகசியங்கள் அடங்கிய பாதாள அறையில், நண்பர்களால் கைவிடப்பட்ட நிலையில், தன்னந்தனியாக, தீய மந்திர சக்தியின் சக்கரவர்த்தியை முட்டாள்தனமாகச் சவாலுக்கு அழைத்து அவரால் முறியடிக்கப்பட்டுவிட்டான் ஹாரி பாட்டர்! வெகு விரைவில், ஈன ரத்தப் பிறவியான உன் அம்மாவுடன் போய் நீ சேர்ந்து கொள்வாய் ஹாரி, உன்னுடைய அம்மா உனக்குப் பன்னிரண்டு வருட வாழ்க்கையைக் கடன் வாங்கிக் கொடுத்தாள், அவ்வளவுதான். ஆனால் வோல்டமார்ட் கடைசியில் உன்னைத் தீர்த்துக் கட்டிவிட்டார். இறுதியில் இது இப்படித்தான் முடியும் என்பது உனக்கே தெரிந்த விஷயம்தான்.”

“இறப்பது என்பது இதுதான் என்றால்,” என்று ஹாரி யோசித்தான், “இது ஒன்றும் அவ்வளவு மோசமில்லை.” வலிகூட அவனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டிருந்தது

ஆனால் இதுதான் இறத்தலா? பாதாள அறை இருளடைவதற்கு பதிலாகத் தெளிவாகிக் கொண்டிருந்தது. ஹாரி தன் தலையை லேசாக அசைத்தான். ஃபாக்ஸ் பறவை ஹாரியின் கையில் தன் தலையைச் சாய்த்து வைத்துக் கொண்டு இன்னும் அங்கு உட்கார்ந்திருந்தது. அவனுடைய காயத்தைச் சுற்றி எல்லா இடங்களிலும் அதன் வெண்முத்துக் கண்ணீர் பளபளத்துக் கொண்டிருந்தது – ஆனால் அவனது காயம் மட்டும் காணாமல் போயிருந்தது.

“ஏய், பறவையே! அவனிடமிருந்து போய்விடு,” என்று நார்ட்டன் திடீரென்று கூறியது ஹாரிக்குக் கேட்டது. “அவனிடமிருந்து ஓடிப் போய்விடு! நான் கூறுகிறேன், ஓடிப் போய்விடு!”

ஹாரி தன் தலையைத் தூக்கினான். நார்ட்டன் ஹாரியின் மந்திரக்கோலை ஃபாக்ஸை நோக்கி நீட்டிக் கொண்டிருந்தான். துப்பாக்கி வெடித்ததுபோல ஒரு சத்தம் கேட்டது. ஃபாக்ஸ் மீண்டும் பறந்தது.

நார்ட்டன் ஹாரியின் கையை வெறித்துப் பார்த்தபடி, “பீனிக்ஸ் பறவையின் கண்ணீர்,” என்று வெறுப்புடன் கூறினான். “குணமாக்கும் சக்தி அதற்கு உண்டு . . . நான் மறந்துவிட்டேன்…”

அவன் ஹாரியின் முகத்தை ஊடுருவிப் பார்த்தான். “ஆனால் அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. உண்மையில், இந்த வழி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது – நீயும் நானும் மட்டும் ஹாரி பாட்டர், நீயும் நானும் ஒற்றைக்கு ஒற்றை …’

நார்ட்டன் ஹாரியின் மந்திரக்கோலை மீண்டும் உயர்த்தினான். அப்போது சிறகடிப்புச் சத்தத்தின் ஊடாக, ஃபாக்ஸ் மீண்டும் ஹாரியின் தலைக்கு மேலாகப் பறந்து வந்தது. அப்போது ஏதோ ஒன்று ஹாரியின் மடியில் வந்து விழுந்தது – நார்ட்டனின் நாட்குறிப்புப் புத்தகம்!

ஹாரியின் மந்திரக்கோல் உயர்த்தப்பட்ட நிலையில் நார்ட்டனின் கையில் இருக்க, ஹாரியும் நார்ட்டனும் அந்த நாட்குறிப்புப் புத்தகத்தை ஒரு கணம் உற்றுப் பார்த்தனர். உடனே ஹாரி எந்தவித யோசனையும் இன்றி, எதைப் பற்றியும் கவலைப்படாமல், அது தான் கட்டாயமாகச் செய்ய வேண்டிய ஒரு வேலை என்பதுபோல, தனக்கு அருகில் தரையில் கிடந்த விஷப் பல்லை எடுத்து, அப்புத்தகத்தின் இதயப் பகுதியில் செருகினான்.

ஒரு நீண்ட, ரத்தத்தை உறைய வைக்கும் கத்தல் அங்கு கேட்டது. அந்த நாட்குறிப்புப் புத்தகத்திலிருந்து நீரூற்றுப் போல மை பீய்ச்சியடித்து ஹாரியின் கையை நனைத்துத் தரையில் வெள்ளமெனக் கொட்டியது. நார்ட்டன் துடித்துக் கொண்டும், வளைந்து நெளிந்து கொண்டும், பெருங்கூச்சலிட்டுக் கொண்டும் இருந்தான். அதற்குப் பிறகு…

அவன் மறைந்துவிட்டான். ஹாரியின் மந்திரக்கோல் சிறு சத்தத்துடன் தரையில் வந்து விழுந்தது. அதன் பின் அமைதி நிலவியது. தொடர்ந்து அந்த நாட்குறிப்புப் புத்தகத்திலிருந்து கசிந்து கீழே சொட்டிக் கொண்டிருந்த மையின் சத்தத்தைத் தவிர வேறு எந்தச் சத்தமும் அங்கு கேட்கவில்லை. ராஜ ஸர்ப்பத்தின் விஷம் அந்த நாட்குறிப்புப் புத்தகத்தின் முன்னட்டையில் இருந்து பின்னட்டைவரை ஒரு பெரிய ஓட்டையைப் போட்டிருந்தது.

ஹாரி தனது உடல் முழுவதும் நடுங்கியவாறு எழுந்து நின்றான். அவன் ஃபுளு பவுடரை உபயோகித்துப் பல மைல் தூரம் பறந்து வந்திருந்ததைப்போல அவனது தலை பயங்கரமாகச் சுற்றிக் கொண்டிருந்தது. அவன் மெதுவாகத் தன்னுடைய மந்திரக்கோலையும் வகை பிரிக்கும் தொப்பியையும் எடுத்துக் கொண்டான். ஒரு பெரிய இழுப்பு இழுத்து அந்த வாளை அப்பாம்பின் வாயிலிருந்து பிடுங்கினான்.

அப்போது அந்தப் பாதாள அறையின் ஒரு முனையிலிருந்து ஒரு மெல்லிய முனகல் ஒலி வந்தது. ஹாரி ஜின்னியை நோக்கி விரைந்தான். அவள் எழுந்து உட்கார்ந்திருந்தாள். அவளுடைய பிரமிப்பான பார்வை தரையில் இறந்து கிடந்த அந்த பிரம்மாண்டமான ராஜ ஸர்ப்பத்தின் உடலிலிருந்து, ரத்தத்தில்

குளித்திருந்த அங்கியுடன் நின்று கொண்டிருந்த ஹாரியை நோக்கியும், பின் அவனது கையிலிருந்த நாட்குறிப்புப் புத்தகத்தை நோக்கியும் பயணித்தது. அவள் நடுக்கமான பெருமூச்சு ஒன்றை விட்டாள். அவளுடைய கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் கொட்டத் துவங்கியது.

“ஹாரி – ஓ – ஹாரி -நாம் காலை நாம் காலை உணவு அருந்திக் கொண்டிருந்தபோது நான் உன்னிடம் சொல்ல முயன்றேன் ஆனால் பெர்சியின் முன்னிலையில் அதை என்னால் கூற முடியவில்லை. அது நான்தான்! ஹாரி – ஆனால் நான் – நான் சத்தியம் செய்கிறேன் நான் வேண்டுமென்றே அவற்றைச் செய்யவில்லை – நார்ட்டன் என்னைச் செய்ய வைத்தான் — அவன் என்னை ஆட்கொண்டுவிட்டான் – இதோ விழுந்து கிடக்கிறதே, இதை நீ எப்படிக் கொன்றாய் – நார்ட்டன் எங்கே? அவன் அந்த நாட்குறிப்புப் புத்தகத்தின் உள்ளேயிருந்து வந்ததுதான் கடைசியாக எனக்கு ஞாபகம் இருக்கிறது -“

ஹாரி, அந்த நாட்குறிப்புப் புத்தகத்தைத் தூக்கிப் பிடித்து, அதில் அந்த ராஜ ஸர்ப்பத்தின் விஷப்பல் ஏற்படுத்தியிருந்த துளையைக் காட்டி, “இப்போது ஒன்றும் பிரச்சனை இல்லை,” என்று கூறினான். “நார்ட்டனின் கதை முடிந்துவிட்டது. இந்த ராஜ ஸர்ப்பமும் காலி! வா! இப்போது நாம் இங்கிருந்து கிளம்பலாம் –”

ஜின்னி எழுந்திருக்க அவன் அவளுக்கு உதவிக் கொண்டிருந்தபோது, “என்னைப் பள்ளியிலிருந்து தூக்கியெறியப் போகிறார்கள்,” என்று அவள் அழத் துவங்கினாள். “ஹாக்வார்ட்ஸுக்கு என் அண்ணன் பில் – வந்த நாளில் இருந்தே – நான் – நானும் இங்கு வர வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தேன். இப்போது – இப்போது – நான் இங்கிருந்து துரத்தப்படப் போகிறேன் – அம்மாவும் அப்பாவும் என்ன சொல்லப் போகிறார்களோ?”

ஃபாக்ஸ் அந்தப் பாதாள அறையின் வாசலில் வட்டமிட்டுக் கொண்டு அவர்களுக்காகக் காத்திருந்தது. ஹாரி ஜின்னியை முன்னால் வருமாறு ஊக்கப்படுத்தினான். இறந்து கிடந்த அந்த ராஜ ஸர்ப்பத்தின் உடலின்மீது ஏறி, அந்த இடத்தில் எதிரொலித்துக் ஊடாக நடந்து அவர்கள் கொண்டிருந்த துக்கத்தின் அச்சுரங்கத்திற்குள் நுழைந்தனர். தங்களுக்குப் பின்னால் அந்தக் கற்கதவு மிருதுவான ‘ஸ்ஸ்ஸ்’ என்ற ஒலியுடன் மூடிக் கொண்டது ஹாரிக்குக் கேட்டது.

அந்த இருண்ட சுரங்கத்தின் வழியாக அவர்கள் ஒருசில நிமிடங்கள் நடந்ததும், எங்கோ தொலைதூரத்தில் பாறைகள் நகர்த்தப்பட்டச் சத்தம் ஹாரிக்குக் கேட்டது.

ஹாரி வேகமாக நடந்து கொண்டே, “ரான்!” என்று கத்தினான். “ஜின்னி நலமாக இருக்கிறாள். அவள் என்னுடன் வந்து கொண்டிருக்கிறாள்!”

நிம்மதியும் மகிழ்ச்சியும் ஒருசேர வெளிப்பட்ட ரானின் குரலை ஹாரி கேட்டான். ஹாரியும் ஜின்னியும் அடுத்த முனையை கடந்ததும், அங்கு விழுந்து கிடந்த பாறைக் குவியல்களின் ஊடாக ரான் கஷ்டப்பட்டுத் தோண்டியிருந்த ஒரு பெரிய துவாரத்தின் வழியாக அவனது ஆவலான முகம் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்ததை அவர்கள் கண்டனர்.

“ஜின்னி!” என்று சந்தோஷக் கூச்சலிட்ட ரான், அந்தத் துவாரத்தின் வழியாகத் தன் கையை நீட்டி அவளை முதலில் தன் பக்கமாக இழுத்துக் கொண்டான். “நீ உயிரோடு இருக்கிறாய்! என்னால் நம்பவே முடியவில்லை! என்ன நடந்தது?”

அவன் அவளை அணைத்துக் கொள்ள முனைந்தான். ஆனால் அவள் அவனைத் தள்ளிவிட்டுவிட்டு அழத் துவங்கினாள்.

மலர்ச்சியான முகத்துடன் ரான் அவளைப் பார்த்து, “அழாதே. நீ இப்போது நலமாகத்தானே இருக்கிறாய்!” என்று கூறினான். “இப்போது எல்லாம் முடிந்துவிட்டது – ஆமாம், இந்தப் பறவை எங்கிருந்து வந்தது?”

ஜின்னியைத் தொடர்ந்து ஃபாக்ஸ் அந்தத் துவாரத்தின் வழியாகப் பாய்ந்து வந்திருந்தது.

ஹாரியும் அந்தத் துவாரத்தின் வழியாக நுழைந்து வந்து, “அது டம்பிள்டோருடையது,” என்று கூறினான்.

ஹாரியின் கையில் பளபளத்துக் கொண்டிருந்த வாளைப் பார்த்து வாயைப் பிளந்த ரான், “உனக்கு எப்படி ஒரு வாள் கிடைத்தது?”

ஹாரி ஜின்னியைப் பக்கவாட்டில் பார்த்தபடி, “நாம் இங்கிருந்து வெளியேறியவுடன் எல்லாவற்றையும் விளக்குகிறேன்,” என்று கூறினான்.

“ஆனால் -”

ஹாரி அவசரமாக, “அப்புறம்,” என்று கூறினான். ரகசியங்கள் அடங்கிய பாதாள அறையைத் திறந்தது யார் என்பதை ரானிடம் தெரிவிக்க அவன் இன்னும் தயாராக இருக்கவில்லை – குறிப்பாக, ஜின்னியின் முன்பாக! “லாக்ஹார்ட் எங்கே?”

குழாய் இருந்த இடத்தை நோக்கித் தன் தலையைத் திருப்பி, தன் பல்லைக் காட்டியவாறே, “அங்கே பின்னால் இருக்கிறார்,” என்று ரான் கூறினான். “அவர் மோசமான நிலைமையில் இருக்கிறார். வா, வந்து பார்.”

ஃபாக்ஸ் அவர்களை வழிநடத்திச் சென்றது. அதனுடைய பெரிய ரத்தச் சிவப்பு நிற இறக்கைகள் அந்த இருட்டில் மெல்லிய தங்க நிற வெளிச்சத்தை ஒளிர்ந்து கொண்டிருந்தன. அவர்கள் அந்தக் குழாயின் வாய் இருந்த இடம்வரை நடந்து சென்றனர். அங்கு லாக்ஹார்ட் தனக்குத் தானே ஏதோ பாட்டை முணுமுணுத்துக் கொண்டு சாந்த சொரூபனாக உட்கார்ந்திருந்தார்.

“அவருடைய நினைவுகள் மறைந்துவிட்டன,” என்று ரான் கூறினான். “ஞாபகமறதி மந்திரம் பின்னோக்கி வேலை செய்துவிட்டது. நம்மைத் தாக்குவதற்குப் பதிலாக அது அவரையே தாக்கிவிட்டது. தான் யார் என்றோ, தான் எங்கிருக்கிறோம் என்றோ, அல்லது நாம் யார் என்றொ அவருக்குத் இப்போது சுத்தமாகத் தெரியாது. இங்கே வந்து காத்திருக்குமாறு நான் கூறினேன். இப்போது தனக்குத் தானே ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு நிலையில் அவர் இருக்கிறார்.”

லாக்ஹார்ட் அவர்கள் எல்லோரையும் அன்பொழுகப் பார்த்தார்.

“ஹலோ!” என்று அவர் கூறினார். “வினோதமான இடம். நீங்கள் இங்கு வசிக்கிறீர்களா?”

ரான் ஹாரியை நோக்கித் தன் புருவங்களை உயர்த்தியவாறே, “இல்லை,” என்று கூறினான்.

ஹாரி குனிந்து அந்த இருண்ட, நீண்ட குழாயைப் பார்த்தான். அவன் ரானிடம், “நாம் இதன் வழியாக மேலே எப்படிப் போகப் போகிறோம் என்று நீ யோசித்து வைத்திருக்கிறாயா?” என்று கேட்டான்.

ரான் இல்லையென்று தலையசைத்தான். ஆனால் ஃபாக்ஸ் ஹாரியைக் கடந்து பறந்து வந்து அவன் முன்னால் சிறகடித்துக் கொண்டு நின்றது. பளபளத்துக் கொண்டிருந்த அதன் சிறிய கண்கள் அந்த இருட்டில் பிரகாசமாக இருந்தன. அது தங்க நிறத்தில் இருந்த தன்னுடைய நீண்ட வால் இறகுகளை ஆட்டியது. ஹாரி அதைக் குழப்பத்துடன் பார்த்தான்.

குழம்பிப் போயிருந்த ரானும், “நீ அதன் வாலைப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று அது கூறுவதுபோலத் தெரிகிறது . . என்று கூறினான். “ஆனால் உன் எடையை எப்படி ஒரு பறவையால் சுமக்க முடியும்?”

“ஃபாக்ஸ் ஒரு சாதாரணப் பறவை கிடையாது,” என்று ஹாரி கூறினான். அவன் மற்றவர்களை நோக்கித் திரும்பினான். “நாம் ஒருவரையொருவர் பிடித்துக் கொள்ள வேண்டும். ஜின்னி, நீ ரானின் கையைப் பிடித்துக் கொள். பேராசிரியர் லாக்ஹார்ட் –”

ரான் லாக்ஹார்ட்டிடம், “அவன் உங்களைத்தான் கூப்பிடுகிறான்,” என்று அதிகாரமாகக் கூறினான்.

“நீங்கள் ஜின்னியின் மற்றொரு கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்.”

ஹாரி அந்த வாளையும் வகை பிரிக்கும் தொப்பியையும் தன்னுடைய பெல்ட்டில் செருகிக் கொண்டான். ரான் ஹாரியின் அங்கியின் பின்புறத்தைப் பிடித்துக் கொண்டான். வினோதமாகச் சூடாக இருந்த ஃபாக்ஸின் வால் இறகுகளை ஹாரி இறுகப் பற்றிக் கொண்டான்.

மிகமிக அபூர்வமான எடையின்மை தனது மொத்த உடலிலும் பாய்ந்ததுபோல ஹாரி உணர்ந்தான். அடுத்தக் கணம், ‘விஷ்’ என்று அவர்கள் அந்தக் குழாயின் ஊடாக மேல்நோக்கிப் பறந்து கொண்டிருந்தனர். தனக்குக் கீழே தொங்கிக் கொண்டிருந்த லாக்ஹார்ட், “அற்புதம்! அதிஅற்புதம்! இது மாயாஜாலம்தான்!” என்று கூறியதை ஹாரி கேட்டான். குளிர்ந்த காற்று ஹாரியின் தலைமுடியை விளாசிக் கொண்டு சென்றது. அவன் அந்தப் பயணத்தை ரசிக்கத் துவங்குவதற்குள் அது முடிந்துவிட்டிருந்தது. அவர்கள் நால்வரும் முனகல் மர்ட்டிலின் குளியலறையின் ஈரத் தரையை அடைந்திருந்தனர். லாக்ஹார்ட் தன்னுடைய தொப்பியைச் சரி செய்து கொண்டிருந்தபோது, அந்தத் தண்ணீர்த் தொட்டி மீண்டும் நகர்ந்து அந்தக் குழாயை மறைத்துக் கொண்டது.

மர்ட்டில் தனது விழிகளை உருட்டி அவர்களைப் பார்த்தது.

“நீ உயிருடன் இருக்கிறாயா?” என்று அது ஹாரியைப் பார்த்து வெறுமையாகக் கூறியது.

ஹாரி தன்னுடைய மூக்குக்கண்ணாடியின்மீது தெறித்திருந்த ரத்தத்தைத் துடைத்துக் கொண்டே, “மர்ட்டில், நான் உயிருடன் மீண்டு வந்ததற்கு நீ இவ்வளவு தூரம் ஏமாற்றமடைய வேண்டிய தேவையில்லை,” என்று கூறினான்.

“இல்லையில்லை … நான் யோசித்துக் கொண்டிருந்தேன். நீ இறந்து போயிருந்தால், என்னுடைய குளியலறையைப் பகிர்ந்து கொள்ள நான் உன்னை அனுமதித்திருப்பேன்,” என்று மர்ட்டில் வெள்ளி நிறத்தில் வெட்கப்பட்டுக் கொண்டே கூறியது.

அவர்கள் அந்தக் குளியலறையைவிட்டு வெளியே வந்து, இருட்டாகவும் வெறிச்சோடியும் கிடந்த தாழ்வாரத்திற்குள் நுழைந்தபோது, “அஹ்ஹ்!” என்று ரான் முனகினான். “ஹாரி, மாட்டிலுக்கு உன்னைப் பிடித்துப் போய்விட்டது என்று நான் நினைக்கிறேன். ஜின்னி, உனக்குப் போட்டி முளைத்திருக்கிறது!”

ஆனால் இன்னும் ஜின்னியின் முகத்தில் மௌனமாகக் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

“இப்போது நாம் எங்கே போகப் போகிறோம்?” என்று ரான் கேட்டான். ஜின்னியின் முகத்தில் எதிர்பார்ப்புப் படர்ந்திருந்தது. ஹாரி ஃபாக்ஸைச் சுட்டிக்காட்டினான்.

அந்தத் தாழ்வாரத்தில் தங்க நிறத்தில் மினுமினுத்துக் கொண்டிருந்த ஃபாக்ஸ் அவர்களை வழிநடத்திக் கொண்டிருந்தது. அவர்கள் அதைப் பின்தொடர்ந்து சென்றனர். ஒருசில கணங்களுக்குப் பிறகு அவர்கள் பேராசிரியர் மெக்கானகல்லின் அலுவலகத்திற்கு முன்னால் நின்று கொண்டிருந்தனர்.

ஹாரி அதன் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்.

18. பியின் விமோசனம்

ஹாரி, ரான், ஜின்னி, லாக்ஹார்ட் ஆகிய நால்வரும் தங்கள்மீது கொழகொழப்பான பொருட்கள் (ஹாரியைப் பொறுத்தவரை, அதோடு ரத்தமும் சேர்ந்திருந்தது) வழிந்தோட அந்த அறையின் வாசல் வழியாக நுழைந்தபோது, ஒருகணம் அங்கு மௌனம் நிலவியது. அடுத்து ஓர் அலறல் வெளிப்பட்டது.

“ஜின்னி!”

அது மோலி. அவர் அந்த அறையில் இருந்த கணப்படுப்பின் அருகே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார். ஜின்னியைக் கண்டதும் அவர் துள்ளி எழுந்தார். அவருக்கு வெகு அருகாமையில் ஆர்தர் வீஸ்லீயும் நின்று கொண்டிருந்தார். இருவரும் பாய்ந்தோடி வந்து ஜின்னியைக் கட்டிப் பிடித்துக் கொண்டனர்.

ஆனால் ஹாரி அவர்களைத் தாண்டி என்ன இருந்தது என்று பார்த்தான். கணப்படுப்பின் மேடை அருகே நிறைவான புன்னகையுடன் பேராசிரியர் டம்பிள்டோர் நின்று கொண்டிருந்தார். அவருக்கு அருகே பேராசிரியர் மெக்கானகல் தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு, தன் சுவாசத்தைச் சீராக்கிக் கொண்டு பெருமிதமாக நின்று கொண்டிருந்தார். ஃபாக்ஸ், ஹாரியின் காதோரம் உரசிக் கொண்டு சென்று டம்பிள்டோரின் தோளில் அமர்ந்து கொண்டபோது, தானும் ரானும் மோலியின் அரவணைப்பிற்குள் சிக்குண்டு கிடந்ததை ஹாரி கண்டான்.

“நீ அவளைக் காப்பாற்றிவிட்டாய்! நீ அவளைக் காப்பாற்றிவிட்டாய்! ஹாரி, நீ எப்படி அதைச் செய்தாய்?”

“நாங்கள் எல்லோரும் அதைத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம்,” என்று பேராசிரியர் மெக்கானகல் பலவீனமாகக் கூறினார்.

மோலி ஹாரியை விடுவித்தார். ஹாரி ஒரு கணம் தயங்கினான். பின் அவன் நேராக அங்கிருந்த மேசைக்குச் சென்று தன்னிடம் இருந்த சிவப்புக் கற்கள் பதிக்கப்பட்டிருந்த வாள், வகை பிரிக்கும் தொப்பி, நார்ட்டனின் நாட்குறிப்புப் புத்தகத்தின் மிச்சசொச்சங்கள் ஆகியவற்றை எடுத்து அதன்மீது வைத்தான்.

பின் அவன் எல்லாவற்றையும் கூறத் துவங்கினான். சுமார் கால் மணி நேரம் அங்கு நிலவிக் கொண்டிருந்த அமைதியின் ஊடாக அவன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான். அவ்வப்போது தனக்குக் கேட்டுக் கொண்டிருந்த உருவமற்றக் குரலைப் பற்றியும், தான் கேட்டுக் கொண்டிருந்தது ஒரு ராஜ ஸர்ப்பத்தின் குரல் என்பதைக் கடைசியில் ஹெர்மயனி எவ்வாறு கண்டுபிடித்திருந்தாள் என்பதைப் பற்றியும், தானும் ரானும் சிலந்திப் பூச்சிகளைப் பின்தொடர்ந்து தடை செய்யப்பட்டக் காட்டிற்குள் சென்றதைப் பற்றியும், கடந்த முறை ராஜ ஸர்ப்பம் எந்த இடத்தில் ஒரு மாணவியைப் பலி வாங்கியது என்பதை அரகாக் கூறியதைப் பற்றியும், அப்படிப் பலியானது முனகல் மர்ட்டில்தான் என்பதையும், ரகசியங்கள் அடங்கிய பாதாள அறையின் நுழைவு வழி முனகல் மர்ட்டிலின் குளியலறைக்குள் இருக்கக்கூடும் என்பதைத் தான் ஊகித்ததைப் பற்றியும் ஹாரி கூறினான்…

அவன் மூச்சுவிட நிறுத்தியபோது, பேராசிரியர் மெக்கானகல் அவனிடம், “நல்லது,” என்று கூறினார். “ரகசியங்கள் அடங்கிய பாதாள அறையின் நுழைவு வழியை நீ கண்டுபிடித்துவிட்டாய் – அதோடு கூடவே, குறைந்தபட்சம், பள்ளியின் நூறு விதிமுறைகளையாவது நீ மீறியிருக்கிறாய் என்பதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும் – ஹாரி, எல்லாம் சரிதான், ஆனால் அங்கிருந்து நீங்கள் எல்லோரும் எப்படி உயிரோடு திரும்பி வந்தீர்கள்?”

இவ்வளவு நேரம் பேசியிருந்ததால் தொண்டை வறண்டு போயிருந்த ஹாரி, ஃபாக்ஸ் சரியான சமயத்தில் அங்கு வந்தது பற்றியும், வகை பிரிக்கும் தொப்பி தனக்கு அந்த வாளைக் கொடுத்தது பற்றியும் அவர்களிடம் கூறினான். அதற்குப் பிறகு அவன் திக்கித் திணறினான். அவன் இதுவரை நார்ட்டனின் நாட்குறிப்புப் புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிடுவதைத் தவிர்த்து வந்திருந்தான் ஜின்னியைப் பற்றியும்தான்! அவள் தன் அம்மாவின் தோள்களில் சாய்ந்து நின்று கொண்டிருந்தாள். அவளது கண்களிலிருந்து இன்னும் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அவர்கள் அவளைப் பள்ளியிலிருந்து துரத்திவிட்டால் என்ன செய்வது? ஹாரிக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது. நார்ட்டனின் நாட்குறிப்புப் புத்தகம் இனியும் வேலை செய்யாது. அப்படியிருக்கும்போது, அவ்வளவையும் அவளைச் செய்யத் தூண்டியது நார்ட்டன்தான் என்பதை எவ்வாறு நிரூபிப்பது?

உள்ளுணர்வு உந்த அவன் டம்பிள்டோரை நிமிர்ந்து பார்த்தான். அவர் லேசாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தார். கணப்படுப்பின் நெருப்பு வெளிச்சம் அவரது பிறை நிலவு மூக்குக்கண்ணாடியில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

“நான் தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பது, வோல்டமார்ட் ஜின்னியை எப்படி வசியப்படுத்தினான் என்பதைத்தான்,” என்று டம்பிள்டோர் மென்மையாகத் துவக்கினார். “இப்போது அவன் அல்பேனியக் காடுகளில் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்று எனக்குத் தெரிந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.”

நிம்மதி – அற்புதமான, இளஞ்சூடான, எல்லாவற்றையும் அரவணைத்துக் கொள்கின்ற ஒரு நிம்மதி ஹாரியை ஆட்கொண்டது.

“என்ன – என்ன சொன்னீர்கள்?” என்று மோலி அதிர்ச்சியடைந்த குரலில் கேட்டார். “பெயர் சொல்லப்படக்கூடாதவன் – என்னுடைய ஜின்னியை – வசியப்படுத்தினானா? ஜின்னி எப்படி இதை அவள்…”

“இந்த நாட்குறிப்புப் புத்தகம்தான் அதற்குக் காரணம்,” என்று ஹாரி அவசர அவசரமாகக் கூறிவிட்டு, அதை எடுத்து டம்பிள்டோரிடம் காட்டினான். “நார்ட்டன் தனக்குப் பதினாறு வயதாக இருந்தபோது இதை எழுதினான்.”

டம்பிள்டோர் அந்த நாட்குறிப்புப் புத்தகத்தை ஹாரியிடமிருந்து வாங்கி, கருகியும் நனைந்தும் போயிருந்த அதன் பக்கங்களைத் தனது கோணலான நீண்ட மூக்கின் வழியாக உற்றுப் பார்த்தார்.

“அபாரம்!” என்று அவர் மென்மையாகக் கூறினார். “ஹாக்வார்ட்ஸின் சரித்திரத்திலேயே மிகவும் புத்திசாலியான மாணவன் அவன்தான் என்பதில் சந்தேகமே கிடையாது.” எதையும் நம்ப முடியாமல் திகைத்துப் போய் உட்கார்ந்திருந்த வீஸ்லீ தம்பதியினரை நோக்கி அவர் திரும்பினார்.

“வோல்டமார்ட் முன்பு நார்ட்டன் மால்வோ என்று அழைக்கப்பட்டான் என்பதை மிக மிகச் சிலரே அறிவர். இங்கு ஹாக்வார்ட்ஸில் ஐம்பது வருடங்களுக்கு முன்பு நானே அவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தேன். பள்ளிப் படிப்பை முடித்ததும் பல இடங்களுக்கும் தூர அவன் மறைந்துவிட்டான் தேசங்களுக்கும் அவன் பயணித்தான் … தீய மந்திர சக்திக் கலையில் அவன் ஆழமாக இறங்கினான். மோசமானவர்களுடன் அவன் கூட்டு வைத்துக் கொண்டான். பலப் பல மாயாஜாலமான, ஆபத்தான உருமாற்றங்களை அவன் எடுத்தான். பின் வோல்டமார்ட்டாக மீண்டும் உதயமானபோது யாராலும் அடையாளம் காண முடியாதபடி அவன் முற்றிலும் மாறிப் போயிருந்தான். முன்பு மாணவனாக இருந்த, இப்பள்ளியில் பள்ளித் தலைமை வசீகரமான ஒருவனை புத்திசாலித்தனமான, எவரும் வோல்டமார்ட்டோடு தொடர்புபடுத்திப் பார்க்கவில்லை.”

“ஆனால், ஜின்னி,” என்று மோலி கேட்டார். “ஜின்னிக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு?”

“அவனுடைய நாட்குறிப்புப் புத்தகம்,” என்று ஜின்னி அழுதாள். “இந்த வருடம் முழுவதும் நான் அதில் எழுதிக் கொண்டிருந்தேன். அவனும் பதிலுக்கு எழுதிக் கொண்டிருந்தான்-“

திகைப்பின் உச்சிக்கே சென்ற ஆர்தர், “ஜின்னி!” என்று இரைந்தார். “நான் உனக்கு எதையுமே கற்றுக் கொடுத்திருக்கவில்லையா? நான் உன்னிடம் எப்போதும் என்ன கூறி வந்திருக்கிறேன்? தனக்குத் தானே சிந்தித்துக் கொள்ளும் எதுவொன்றையும் நம்பக்கூடாது என்று நான் உன்னிடம் கூறியது உனக்கு நினைவிருக்கவில்லையா? ஒன்றின் மூளை எங்கே இருக்கிறது என்பதை உன்னால் பார்க்க முடியாவிட்டால், அதை ஒருபோதும் நம்பாதே என்று நான் உனக்குப் படித்துப் படித்துச் சொல்லியிருக்கிறேனே? அந்த நாட்குறிப்புப் புத்தகத்தை நீ ஏன் என்னிடமோ அல்லது உன் அம்மாவிடமோ காட்டவில்லை? அதைப் போன்ற சந்தேகத்திற்கிடமான ஒரு பொருள், கண்டிப்பாகத் தீய மந்திர சக்தி தொடர்பான ஒன்றாகத்தானே இருக்க முடியும்?”

“எனக்குத் தெரியாது,” என்று ஜின்னி தேம்பினாள். “நீங்கள் எனக்கு வாங்கிக் கொடுத்த ஒரு புத்தகத்தின் உள்ளே அதை நான் கண்டெடுத்தேன். யாரோ அதை அதில் தவறுதலாகப் போட்டுவிட்டுப் பிறகு மறந்துவிட்டனர் என்று நான் நினைத்தேன்…”

டம்பிள்டோர் இடையில் குறுக்கிட்டு, “ஜின்னி இப்போது நேராக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்,” என்று கண்டிப்பான குரலில் கூறினார். “இது அவளுக்கு ஒரு பயங்கரமான அனுபவமாக இருந்திருக்கும். நான் அவளுக்குத் தண்டனைகள் எதுவும் வழங்கப் போவதில்லை. தன்னைவிட அதிக அறிவார்ந்த, வயது முதிர்ந்த மந்திரவாதியான வோல்டமார்ட்டால் அவள் வஞ்சிக்கப்பட்டிருக்கிறாள்.” அவர் எழுந்து சென்று வாசற்கதவைத் திறந்தார். பிறகு ஜின்னியைக் கனிவாகப் பார்த்தபடி, “உனக்குக் கொஞ்சம் ஓய்வு தேவை. ஆவி பறக்கும் ஒரு பெரிய கோப்பை சாக்லேட் பானத்தைக் கேட்டு வாங்கிக் குடி. அதை நான் எப்போது குடித்தாலும் அது எனக்குத் தெம்பூட்டத் தவறுவதில்லை,” என்று கூறிவிட்டு அவர் மேலும் தொடர்ந்தார். “மேடம் பாம்ஃபிரே இன்னும் விழித்துக் கொண்டுதான் இருக்கிறார். கல்லாக்கப்பட்டுள்ளவர்களுக்கு அவர் இப்போது மன்ட்ரேக் மாயத்திரவத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ராஜ ஸர்ப்பத்தின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் எந்த நேரத்திலும் விழித்தெழக்கூடும் என்று நான் நினைக்கிறேன்.”

“அப்படியானால், ஹெர்மயனி நன்றாக இருக்கிறாளா?” என்று ரான் மலர்ச்சியாகக் கேட்டான்.

“நீடித்திருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்பட்டுவிடவில்லை,” என்று டம்பிள்டோர் கூறினார்.

மோலி ஜின்னியை வழிநடத்திச் சென்றார். ஆர்தரும் உடன் சென்றார். ஆனால் அவர் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீண்டிருக்கவில்லை.

டம்பிள்டோர் யோசனையுடன் பேராசிரியர் மெக்கானகல்லிடம், “இதை நாம் ஒரு சிறப்பான விருந்தின் மூலம் கொண்டாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் போய் சமையலறையை உஷார்ப்படுத்துகிறீர்களா?” என்று கேட்டார்.

“சரி,” என்று தயங்காமல் கூறிய பேராசிரியர் மெக்கானகல், எழுந்து வாசலுக்குச் சென்றார். “அப்படியானால் ஹாரியையும் ரானையும் கையாளும் பொறுப்பை நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்களா?”

“கண்டிப்பாக,” என்று டம்பிள்டோர் கூறினார்.

பிறகு பேராசிரியர் மெக்கானகல் அந்த அறையைவிட்டு வெளியேறினார். ஹாரியும் ரானும் உறுதியில்லாமல் டம்பிள்டோரையே பார்த்துக் கொண்டிருந்தனர். ‘தங்களைக் கையாள்வது’ என்று பேராசிரியர் மெக்கானகல் எந்த அர்த்தத்தில் கூறினார்? தங்களுக்கு நிச்சயமாகத் தண்டனை எதுவும் கிடைக்காது, இல்லையா?

“நீங்கள் இனியொருமுறை பள்ளி விதிமுறைகளை மீறினால் உங்களைப் பள்ளியைவிட்டு வெளியேற்றுவதைத் தவிர எனக்கு வேறு வழியிருக்காது என்று உங்களை நான் முன்பு எச்சரித்திருந்தது எனக்கு இப்போது நினைவிற்கு வருகிறது,” என்று டம்பிள்டோர் கூறினார்.

ரான் பயத்தில் வாயைப் பிளந்தான்.

“பெரியவர்கள்கூடத் தாங்கள் கூறியதைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டிய தருணங்கள் தோன்றுவதுண்டு என்பதைத்தான் இது காட்டுகிறது,” என்று டம்பிள்டோர் புன்னகையுடன் கூறினார். “பள்ளிக்குச் சிறப்பான சேவை புரிந்ததற்கான சிறப்பு விருது உங்கள் இருவருக்கும் வழங்கப்படும். அப்புறம் உங்களுக்கு வேறு என்ன கொடுக்கலாம்? சரி – கிரிஃபின்டார் அணிக்குத் தலைக்கு இருநூறு புள்ளிகள்!”

ரான், லாக்ஹார்ட்டின் காதலர் தினப் பூக்களின் நிறத்திற்குச் சிவந்தான். பிறகு அவன் தன் வாயை மீண்டும் மூடிக் கொண்டான்.

“ஆனால் இங்கிருக்கும் ஒருவர் இந்த ஆபத்தான சாகசத்தில் தன்னுடைய பங்கு குறித்து மிகவும் அடக்கமாக இருக்கிறார்,” என்று டம்பிள்டோர் கூறினார். “லாக்ஹார்ட், நீங்கள் ஏன் இவ்வளவு அடக்கமாக இருக்கிறீர்கள்?”

ஹாரிக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவன் லாக்ஹார்ட்டைப் பற்றிச் சுத்தமாக மறந்து போயிருந்தான். அவன் திரும்பிப் பார்த்தபோது, லாக்ஹார்ட் அந்த அறையின் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தார். அவரது முகத்தில் தெளிவில்லாத புன்னகை ஒன்று தொக்கி நின்றது. டம்பிள்டோர் லாக்ஹார்ட்டிடம் பேசியபோது, அவர் யாரோடு பேசிக் கொண்டிருந்தார் என்று லாக்ஹார்ட் தனக்குப் பின்னால் திரும்பிப் பார்த்தார்.

“பேராசிரியர் டம்பிள்டோர் அவர்களே,” என்று ரான் அவசரமாக அழைத்தான். “கீழே ரகசியங்கள் அடங்கிய பாதாள அறையில் நாங்கள் இருந்தபோது ஒரு விபத்து ஏற்பட்டது. பேராசிரியர் லாக்ஹார்ட்-“

“என்ன நான் ஒரு பேராசிரியரா?” என்று லேசான ஆச்சரியத்துடன் லாக்ஹார்ட் கேட்டார். “நான் ஓர் உதவாக்கரை என்றுதான் என்னைப் பற்றி நினைத்திருந்தேன். நான் ஒரு பேராசிரியரா?”

“அவர் எங்கள்மீது ஒரு ஞாபகமறதி மந்திரத்தைப் பிரயோகிக்க முனைந்தார். ஆனால் என்னுடைய மந்திரக்கோல் அதை அவர்மீதே பிரயோகித்துவிட்டது,” என்று ரான் அமைதியாக டம்பிள்டோரிடம் எடுத்துரைத்தான்.

“அடப் பாவமே!” என்று டம்பிள்டோர் தன் தலையை ஆட்டியவாறு கூறினார். அவரது நீண்ட வெண்தாடி லேசாகக் குலுங்கியது. “லாக்ஹார்ட், உங்கள் வாளே உங்களுக்கு எமனாகிவிட்டதா?”

“வாளா?” என்று லாக்ஹார்ட் அப்பாவித்தனமாகக் கேட்டார். “என்னிடம் வாள் எதுவும் இல்லை.” அவர் ஹாரியைச் சுட்டிக்காட்டி, “அதோ, அந்தப் பையனிடம் பெரிய வாள் ஒன்று இருக்கிறது. அவன் வேண்டுமானால் அதை உங்களுக்குக் கடனாகக் கொடுப்பான்,” என்று கூறினார்.

டம்பிள்டோர் ரானிடம், “ரான், நீ பேராசிரியர் லாக்ஹார்ட்டையும் மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்கிறாயா?” என்று கேட்டார், “நான் ஹாரியுடன் ஒருசில வார்த்தைகள் பேச வேண்டியுள்ளது.”

லாக்ஹார்ட் கவலையில்லாமல் வெளியே நடந்தார். ரான் கதவைச் சாத்துவதற்கு முன்பாக ஹாரியையும் டம்பிள்டோரையும் நோக்கி வியப்பான ஒரு பார்வையை வீசிவிட்டுச் சென்றான்.

டம்பிள்டோர் நெருப்புக்குப் பக்கத்தில் இருந்த ஒரு நாற்காலிக்கு இடம் மாறினார்.

“உட்கார், ஹாரி,” என்று அவர் கூறினார். ஹாரி உட்கார்ந்தான். ஓர் இனம் புரியாத பதற்றம் அவனுக்கு ஏற்பட்டது.

“முதல் காரியமாக, நான் உனக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று டம்பிள்டோர் கூறினார். அவரது கண்கள் மீண்டும் பிரகாசித்தன. “நீ கீழே பாதாள அறையில் இருந்தபோது என்மீது அபாரமான நன்றியுணர்வை வெளிப்படுத்தியிருந்திருக்க வேண்டும். வேறு எதுவும் ஃபாக்ஸை உன்னிடம் அழைத்து வந்திருக்காது.

அவர் அந்த பீனிக்ஸ் பறவையைத் தடவிக் கொடுத்தார். அது அவரது கால்மூட்டிற்குத் தாவியது. டம்பிள்டோர் அவனை உற்றுப் பார்த்ததால் ஹாரி அசௌகரியமாகப் புன்னகைத்தான்.

“அப்படியானால் நீ நார்ட்டனை நேரில் சந்தித்துவிட்டாய், இல்லையா?” என்று டம்பிள்டோர் யோசனையுடன் கேட்டார். “அவன் உன்மீதுதான் அதிக நாட்டம் கொண்டிருந்திருப்பான் என்று நான் நம்புகிறேன்.”

அவனை அரித்துக் கொண்டிருந்த ஒன்று, திடீரென்று, அவனைக் கேட்காமலேயே அவனது வாயிலிருந்து வெளியே துள்ளிக் குதித்தது.

“பேராசிரியரே… நான் தன்னைப்போலவே இருப்பதாக நார்ட்டன் என்னிடம் கூறினான். .. அது ஏதோ ஒரு வினோதமான ஒற்றுமை என்று அவன் கூறினான் . . .”

“அப்படியா சொன்னான்?” என்று டம்பிள்டோர் கேட்டார். அவர் ஹாரியை யோசனையுடன் பார்த்துக் கொண்டே, “ஹாரி, நீ என்ன நினைக்கிறாய்?” என்று வினவினார்.

“நான் அவனைப்போல இல்லை என்றுதான் நினைக்கிறேன்,” என்று ஹாரி கூறினான். அவனது குரல் அவன் நினைத்திருந்ததைவிட அதிகச் சத்தமாக ஒலித்தது. “நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் நான் கிரிஃபின்டார் அணியில் இருக்கிறேன் . . நான்…”

ஆனால் அவன் மௌனத்தில் ஆழ்ந்தான். அவனது மனத்தில் புதைந்திருந்த சந்தேகம் மீண்டும் தலைகாட்டியது.

ஒரு கண நேரம் கழித்து அவன், “பேராசிரியரே,” என்று அழைத்தான். “வகை பிரிக்கும் தொப்பி, நான் ஸ்லிதரின் அணியில் இருந்தால் என்னால் மிகச் சிறந்தவனாக ஆக முடியும் என்று கூறியது. என்னால் ஸர்ப்ப பாஷையில் பேச முடியும் என்பதால். . . நான்தான் ஸ்லிதரினின் வாரிசு என்று கொஞ்ச காலத்திற்கு எல்லோரும் நினைத்தனர்..”

“ஹாரி, உன்னால் ஸர்ப்ப பாஷையில் பேச முடிவதற்கு என்ன காரணம் தெரியுமா?” என்று டம்பிள்டோர் அமைதியாகக் கேட்டார். “சலசார் ஸ்லிதரினின் மிச்சமிருக்கும் ஒரே வாரிசான வோல்டமார்ட்டாலும் ஸர்ப்ப பாஷை பேச முடியும் என்பதுதான் அதற்குக் காரணம். என் கணக்குச் சரியாக இருந்தால், எந்த இரவில் அந்த நெற்றித் தழும்பு உனக்குக் கிடைத்ததோ, அதே இரவில் அவன் தன்னுடைய சக்திகளில் சிலவற்றை உனக்குக் கொடுத்துவிட்டான். அதை அவன் வேண்டுமென்றே செய்யவில்லை என்று நான் நினைக்கிறேன்…”

ஹாரி இடி விழுந்தவன்போல, “என்ன சொன்னீர்கள்? வோல்டமார்ட் தன்னுடைய சில சக்திகளை எனக்குக் கொடுத்துவிட்டானா?” என்று கேட்டான்.

“அப்படித்தான் தெரிகிறது.”

ஹாரி பரிதாபமாக டம்பிள்டோரின் முகத்தையே பார்த்தபடி, “அப்படியானால் நான் ஸ்லிதரின் அணியில்தான் இருக்க வேண்டும்,” என்று கூறினான். “வகை பிரிக்கும் தொப்பி, என்னுள் இருக்கும் ஸ்லிதரினின் சக்தியை யை உணர்ந்திருக்க வேண்டும். அதனால்தான் அது-“

“ஆனாலும் அது உன்னை கிரிஃபின்டார் அணியில்தான் போட்டுள்ளது, இல்லையா?” என்று டம்பிள்டோர் கேட்டார். “ஹாரி, நான் சொல்வதை மிகவும் கவனமாகக் கேள். சலசார் ஸ்லிதரின் தானாகவே தேர்ந்தெடுத்த வெகுசில மாணவர்களிடம் இருந்த அரிய சக்திகள் பல உன்னிடமும் குடி கொண்டுள்ளன. அவருக்கே சொந்தமான ஸர்ப்ப பாஷை அறிவு .. இக்கட்டான எடுத்த சூழல்களைத் திறமையாகக் கையாளும் குணநலன் முடிவில் அசைக்க முடியாத நம்பிக்கை . . . அப்புறம், சமயங்களில் விதிகளை மதிக்காதிருத்தல்… இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.” அவரது மீசை மீண்டும் துடித்தது. “ஆனாலும் வகை பிரிக்கும் தொப்பி உன்னை கிரிஃபின்டார் அணியில் போட்டிருக்கிறது. அது ஏன் என்று உன்னால் ஊகிக்க முடிகிறதா? யோசித்துப் பார்.”

தான் வீழ்த்தப்பட்டிருந்தது போன்ற ஒரு குரலில், ஹாரி, “அது என்னை கிரிஃபின்டார் அணியில் போட்டதற்குக் காரணம். என்று இழுத்தான். “என்னை ஸ்லிதரின் அணியில் போட வேண்டாம் என்று நான் அதை வற்புறுத்தினேன் …”

“ஹாரி, மிகச் சரியாகச் சொன்னாய்,” என்று கூறிய டம்பிள்டோர் மீண்டும் பிரகாசமாகப் புன்னகைத்தார். “அதுதான் உன்னை நார்ட்டனிடமிருந்து முற்றிலுமாக வேறுபடுத்துகிறது. ஹாரி, நம்முடைய திறமைகளைவிட, நாம் தேர்ந்தெடுக்கும் விஷயங்கள்தான் நாம் உண்மையிலேயே யார் என்பதைப் படம் போட்டுக் காட்டுகின்றன.” ஹாரி பிரமிப்படைந்தவனாய் ஆடாமல் அசையாமல் தன் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். “ஹாரி, நீ கிரிஃபின்டார் அணிக்குத்தான் சொந்தமானவன் என்பதற்கு உனக்கு நிரூபணம் வேண்டுமென்றால், நீ இதைப் பார்க்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.”

டம்பிள்டோர், ரத்தம் தோய்ந்திருந்த அந்த வெள்ளி வாளை, பேராசிரியர் மெக்கானகல்லின் மேசையிலிருந்து எட்டி எடுத்து ஹாரியின் கையில் கொடுத்தார். ஹாரி சுவாரசியமின்றி அதைத் திருப்பினான். அதிலிருந்த சிவப்புக் கற்கள் கணப்படுப்பின் நெருப்பு ஒளியில் தீயெனத் தகித்தன. பின் அதன் கைப்பிடிக்குச் சற்றுக் கீழே பொறிக்கப்பட்டிருந்த பெயரை அவன் பார்த்தான்.

கோட்ரிக் கிரிஃபின்டார்.

“ஹாரி, ஓர் உண்மையான கிரிஃபின்டாரால்தான் அந்தத் தொப்பியிலிருந்து இதை வரவழைத்திருக்க முடியும்,” என்று டம்பிள்டோர் மிகச் சாதாரணமாகக் கூறினார்.

ஒரு நிமிடத்திற்கு அவர்கள் இருவருமே பேசவில்லை. பிறகு, டம்பிள்டோர், பேராசிரியர் மெக்கானகல்லின் மேசை இழுப்பறையைத் திறந்து ஒரு மை பாட்டிலையும் ஓர் இறகுப் பேனாவையும் வெளியே எடுத்தார்.

“ஹாரி. இப்போது உனக்கு உடனடியாகத் தேவைப்படுபவை சாப்பாடும் தூக்கமும்தான். நீ நேராக விருந்திற்குச் செல். நான் அஸ்கபான் சிறைக்குக் கடிதம் எழுதப் போகிறேன் – நம்முடைய கோட்டைப் பாதுகாவலரை அங்கிருந்து விடுவிக்க வேண்டும். அதோடு, டெய்லி புராஃபெட் பத்திரிகைக்கு ஒரு விளம்பர வாசகத்தையும் நான் தயாரிக்க வேண்டியிருக்கிறது,” என்று அவர் சிந்தனையோடு கூறினார். “தீய மந்திர சக்திகளுக்கு எதிரான பாதுகாப்பு’ ஆசிரியர் ஒருவர் நமக்கு மீண்டும் தேவைப்படுகிறார். இந்தப் பாடத்தை எடுக்கும் ஆசிரியர்கள் நம்மோடு அதிக நாட்கள் தங்குவதில்லை என்பதுபோலத் தெரிகிறது.”

ஹாரி எழுந்து வாசற்கதவை நோக்கிச் சென்றான். அவன் அதைத் திறப்பதற்காக அதன் கைப்பிடியில் தன் கையை வைத்தபோது, அது வெளியே இருந்து பலமாகத் திறக்கப்பட்டது. திறந்த வேகத்தில் அக்கதவு உள்ளே இருந்த சுவரில் வந்து மோதியது.

லூசியஸ் மால்ஃபாய் அங்கு நின்று கொண்டிருந்தார். அவரது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது. அவரது கையைப் பிடித்துக் கொண்டு, ஏகப்பட்டக் கட்டுக்கள் போடப்பட்டிருந்த நிலையில் டாபி கூனிக் குறுகித் தொங்கிக் கொண்டிருந்தது.

“லூசியஸ், மாலை வணக்கம்,” என்று டம்பிள்டோர் இனிமையாகக் கூறினார்.

லூசியஸ் உள்ளே வேகமாக நுழைந்ததில் ஹாரியைக் கிட்டத்தட்டக் கீழே தள்ளிவிட்டிருந்தார். அவருக்குப் பின்னால் அவருடைய அங்கியின் முனையைப் பிடித்துக் கொண்டு, டாபி, கூன் போட்ட நிலையில் ஓடி வந்தது. அதன் முகத்தில் பயமும் பீதியும் படர்ந்திருந்தன.

லூசியஸ் தனது ஜீவனற்றக் கண்களை டம்பிள்டோரின் மீது பதித்தவாறு, “நீங்கள் மீண்டும் இங்கே வந்துவிட்டதாகத் தெரிகிறது,” என்று கூறினார். “பள்ளியின் நிர்வாகக் குழு உங்களைத் தற்காலிகமாக வேலையில் இருந்து நீக்கியிருந்ததாக எனக்கு ஞாபகம். நீங்கள் எப்படி இங்கே?”

டம்பிள்டோர் சாந்தமாகப் புன்னகைத்துக் கொண்டே, “லூசியஸ், இங்கே பாருங்கள்,” என்று துவக்கினார். “இன்று மற்றப் பதினோரு நிர்வாகக் குழு உறுப்பினர்களும் என்னைத் தொடர்பு கொண்டனர். உண்மையில் ஆந்தை மழையே பொழிந்தது என்றுதான் கூற கூற வேண்டும். ஆர்தர் விஸ்லீயின் பெண் கொல்லப்பட்டதாகத் தாங்கள் கேள்விப்பட்டதால் நான் உடனே இங்கே செல்ல வேண்டும் என்று அவர்கள் என்னைக் கேட்டுக் கொண்டனர். இந்த வேலைக்கு நான்தான் சிறந்த நபர் என்று அவர்கள் கருதுவதுபோலத் தெரிகிறது. வினோதமான கதைகள் சிலவற்றையும் அவர்கள் என்னிடம் கூறினர். என்னைத் தற்காலிகமாக வேலை நீக்கம் செய்யத் தாங்கள் சம்மதிக்காவிட்டால், தங்களுடைய குடும்பங்களின்மீது சாபங்களையும் மாய மந்திரங்களையும் ஏவிவிடப் போவதாக நீங்கள் மிரட்டியதாக அவர்கள் நினைப்பதுபோலத் தெரிகிறது.”

லூசியஸின் முகம் வழக்கத்தைவிட அதிகமாக வெளுத்தது. ஆனால் அவரது கண்களில் கோபம் இன்னும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.

“அப்படியானால், நீங்கள் தாக்குதல்களை நிறுத்திவிட்டீர்கள்? குற்றவாளியைப் பிடித்துவிட்டீர்கள்? அப்படித்தானே?” என்று அவர் ஏளனமாகக் கேட்டார்.

“ஆமாம்,” என்று டம்பிள்டோர் புன்னகையுடன் கூறினார்.

“என்ன?” என்று லூசியஸ் அதிர்ந்து போய்க் கேட்டார். “யார் அது?”

“லூசியஸ், கடந்த முறை எவன் குற்றம் புரிந்தானோ, அவனேதான் இம்முறையும் குற்றம் புரிந்திருக்கிறான். ஆனால் இம்முறை வோல்டமார்ட் வேறொரு நபர் மூலம் தன்னுடைய நாட்குறிப்புப் புத்தகத்தின் ஊடாக அதை நிகழ்த்தியுள்ளான்!”

டம்பிள்டோர், மத்தியில் பெரிய ஓட்டை இருந்த அந்த நாட்குறிப்புப் புத்தகத்தை எடுத்து லூசியஸிடம் காட்டினார். அவர் லூசியஸை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார். ஆனால் ஹாரியோ டாபியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த எல்ஃப் வினோதமான ஒன்றைச் செய்து கொண்டிருந்தது. அதனுடைய பெரிய கண்கள் அர்த்தபுஷ்டியுடன் ஹாரியின்மீது நிலைத்திருந்தன. அது முதலில் அந்த நாட்குறிப்புப் புத்தகத்தைச் சுட்டிக்காட்டியது. பிறகு லூசியஸைச் சுட்டிக்காட்டியது. பிறகு தன் தலையில் தன் முஷ்டியால் பலமாக அடித்துக் கொண்டது. அது இவற்றைத் திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருந்தது.

“அப்படியா?” என்று லூசியஸ் மெதுவாக டம்பிள்டோரிடம் கேட்டார்.

டம்பிள்டோர், லூசியஸின் கண்களை நேருக்கு நேராக உற்றுப் பார்த்தபடி, “ஒரு புத்திசாலித்தனமான திட்டம்,” என்று ஏற்ற இறக்கமற்ற ஒரு குரலில் கூறினார். “இங்கிருக்கும் ஹாரியும் லூசியஸ் ஹாரியை நோக்கித் திரும்பி உன்னிப்பாக அவனைப் பார்த்தார், அவனது நண்பன் ரான் வீஸ்லீயும் இப்புத்தகத்தைக் கண்டுபிடித்திருக்காவிட்டால், ஜின்னியின்மீது எல்லாப் பழியும் விழுந்திருக்கும். அவள் தானாகவே இச்செயல்களில் ஈடுபட்டிருக்கவில்லை என்பதை நிரூபிப்பது இயலாத காரியமாக ஆகியிருக்கும் …”

லூசியஸ் எதுவும் பேசவில்லை. திடீரென்று அவரது முகம் கல்லாக இறுகிப் போனது.

“லூசியஸ், இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்,” என்று டம்பிள்டோர் கூறினார். “அப்படி மட்டும் நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? தூய ரத்தப் பரம்பரையைச் சேர்ந்த, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குடும்பங்களில் வீஸ்லீ குடும்பத்தினரும் அடங்குவர். ஆர்தர் வீஸ்லீயின் சொந்தப் பெண்ணே மகுள்களுக்குப் பிறந்தவர்களைத் தாக்கி, அவர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தாள் என்று தெரிய வரும்போது, இது ஆர்தர் iஸ்லீமீதும் அவருடைய மகுள்கள் பாதுகாப்புச் சட்டத்தின்மீதும் எப்படிப்பட்டப் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும்? அதிர்ஷ்டவசமாக, இந்த நாட்குறிப்புப் புத்தகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நார்ட்டனின் நினைவுகளும் இதிலிருந்து துடைத்தெறியப்பட்டுள்ளன. இல்லையென்றால், என்ன நடந்திருக்கும் என்பதை யாரால் ஊகிக்க முடியும்.”

லூசியஸுக்கு வாயைத் திறந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

“ஆமாம், அதிர்ஷ்டவசமானதுதான்,” என்று அவர் இறுக்கமாகக் கூறினார்.

அவருக்குத் தெரியாமல், டாபி, மீண்டும் முதலில் அந்த நாட்குறிப்பைச் சுட்டிக்காட்டியது. பின்னர் லூசியஸைச் சுட்டிக்காட்டியது. பிறகு தன் தலையில் பலமாக அடித்துக் கொண்டது.

ஹாரிக்குத் திடீரென்று எல்லாம் தெளிவானது. அவன் டாபியை நோக்கித் தன் தலையை அசைத்தான். டாபி ஒரு மூலைக்குச் சென்று, தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொள்வதற்காகத் தன் காதுகளைத் திருகிக் கொண்டிருந்தது.

“திருவாளர் லூசியஸ் மால்ஃபாய் அவர்களே, அந்த நாட்குறிப்புப் புத்தகம் ஜின்னியை எப்படி வந்தடைந்தது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?” என்று ஹாரி கேட்டான்.

லூசியஸ் அவனை நோக்கித் திரும்பினார்.

“அந்த முட்டாள் பெண்ணுக்கு அது எப்படிக் கிடைத்தது என்று எனக்கு எப்படித் தெரியும்?” என்று அவர் கேட்டார்.

“ஏனென்றால், நீங்கள்தான் அதை அவளிடம் சேர்ப்பித்தீர்கள்,” என்று ஹாரி கூறினான். ‘ஃப்ளரிஷ் & பிளாட்ஸ்’ புத்தகக் கடையில் வைத்து நீங்கள் அதைச் செய்தீர்கள். நீங்கள் அவளுடைய பழைய உருவமாற்றப் புத்தகத்தை எடுத்து அதனுள் அந்த நாட்குறிப்புப் புத்தகத்தைத் திருட்டுத்தனமாக நுழைத்துவிட்டீர்கள், அப்படித்தானே?”

அவர் வெளுத்துப் போயிருந்த தன் கை முஷ்டியை மடக்குவதும் விரிப்பதுமாக இருந்தார்.

“அதை நிரூபித்துக் காட்டு,” என்று அவர் சீறினார்.

டம்பிள்டோர் ஹாரியைப் பார்த்துப் புன்னகைத்தபடி, அதை யாராலும் நிரூபிக்க முடியாது,” என்று கூறினார். “அதுவும் இப்போது நார்ட்டன் இந்த நாட்குறிப்புப் புத்தகத்திலிருந்து மாயமாய் மறைந்துவிட்டப் பிறகு அது சாத்தியமே இல்லை. ஆனால் லூசியஸ், வோல்டமார்ட்டின் பழைய பள்ளிப் பொருட்கள் எதையும் இனிமேலும் யாருக்கும் வினியோகித்துக் கொண்டு திரிய வேண்டாம் என்று நான் உங்களுக்கு அறிவுரை கூறுகிறேன். அவற்றில் ஏதாவது ஒன்று எந்தப் பாவமும் அறியாத இளம்பிஞ்சுகளின் கைகளை இனி வந்தடைந்ததோ, அது உங்களிடம் இருந்துதான் வந்தது என்பதை நிரூபிப்பதற்கு ஆர்தர் வீஸ்லீ முன்னணியில் இருப்பார் என்று நான் நினைக்கிறேன் ..”

லூசியஸ் எழுந்து நின்றார். அவரது வலது கை துடித்துக் கொண்டிருந்ததை ஹாரி கண்டான். அவர் தன்னுடைய மந்திரக்கோலை வெளியே எடுக்க முனைந்ததுபோல அவனுக்குப் பட்டது. மாறாக, அவர் தன்னுடைய எல்ஃபின் பக்கம் திரும்பினார்.

“டாபி, நாம் போகலாம்,” என்று கூறினார்.

அவர் அந்த அறைக் கதவை இழுத்துத் திறந்தார். டாபி அதை நோக்கி வேகமாக வந்தபோது அவர் டாபியை ஓங்கி ஓர் உதை விட்டார். அது வெளியே போய் விழுந்தது. வலியால் அது தாழ்வாரம் நெடுகிலும் ஊளையிட்டுக் கொண்டே சென்றது ஹாரிக்கும் டம்பிள்டோருக்கும் கேட்டது. ஹாரி தீவிரமாக யோசித்துக் கொண்டு ஒரு நிமிடம் நின்றான். பின் அவனுக்கு ஒரு யோசனை பளிச்சிட்டது.

அவன் டம்பிள்டோரிடம் அவசரமாக, “பேராசிரியரே, நான் அந்த நாட்குறிப்புப் புத்தகத்தை லூசியஸ் அவர்களிடம் திருப்பிக் கொடுக்கலாமா?” என்று கேட்டான்.

“கண்டிப்பாக, ஹாரி,” என்று டம்பிள்டோர் கூறினார். “சீக்கிரமாக வந்துவிடு. விருந்து காத்துக் கொண்டிருக்கிறது என்பது நினைவிருக்கட்டும்!”

ஹாரி அந்த நாட்குறிப்புப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு அந்த அலுவலகத்தைவிட்டு மின்னலெனப் பாய்ந்து வெளியே ஓடினான். டாபியின் வலி மிகுந்த ஊளைச் சத்தம் அடுத்த முனையில் கேட்டது. இந்தத் திட்டம் வேலை செய்யுமா என்று வியந்து கொண்டே அவன் தன்னுடைய ஒரு காலணியைக் கழற்றி, அக்காலில் இருந்த அழுக்கான, நாற்றமடித்துக் கொண்டிருந்த காலுறையை உருவி அதனுள் அந்த நாட்குறிப்புப் புத்தகத்தைத் திணித்தான். பின் அந்த இருண்ட தாழ்வாரத்தின் வழியாக அவன் ஓடினான்.

மாடிப்படிகளின் மேலே அவன் அவர்களைப் பிடித்துவிட்டான்.

சறுக்கிக் கொண்டே அங்கு வந்து சேர்ந்த ஹாரி, “லூசியஸ் அவர்களே,” என்று மூச்சு வாங்க அவரை அழைத்தான். “இதை நான் உங்களிடம் கொடுக்க விரும்புகிறேன்.”

பின் அவன் அந்த நாற்றமெடுத்தக் காலுறையை அவரது கையில் திணித்தான்.

“என்ன இழவு இது ?”

லூசியஸ் அந்த காலுறையைக் கிழித்து அதனுள் இருந்த நாட்குறிப்புப் புத்தகத்தை வெளியே எடுத்துவிட்டு, அந்தக் காலுறையைத் தூக்கி எறிந்தார். பிறகு, பாழாக்கப்பட்டிருந்த அந்த நாட்குறிப்புப் புத்தகத்தின் மீதிருந்து தனது கோபப் பார்வையை விலக்கி அதை ஹாரியின்மீது நிலைக்கச் செய்தார்.

“ஹாரி பாட்டர், வெகு விரைவில், உன்னுடைய பெற்றோர்களுக்கு நேர்ந்த அதே கதிதான் உனக்கும் நேரப் போகிறது,” என்று அவர் கூறினார். “அவர்களும் உன்னைப் போலவே தேவையில்லாத விஷயங்களில் தங்களுடைய மூக்கை நுழைத்தவர்கள்தான்.”

அவர் அங்கிருந்து போவதற்காகத் திரும்பினார்.

“டாபி, வா! நான் ‘வா’ என்று சொன்னேன்!”

ஆனால் டாபி தான் இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை. குடலைப் பிரட்டும் நாற்றமடித்த, பிசுபிசுப்பான, அழுக்கான, ஹாரியின் அந்தக் காலுறையை அது தன் கையில் வைத்துக் கொண்டிருந்தது. அக்காலுறை ஏதோ விலை மதிக்க முடியாத ஒரு பொக்கிஷம் என்பதுபோல டாபி அதையே பார்த்துக் கொண்டிருந்தது.

“டாபிக்கு அதன் எஜமான் ஒரு காலுறையைக் கொடுத்திருக்கிறார்,” என்று அந்த எல்ஃப் வியப்புடன் கூறியது. “என் எஜமான் எனக்குக் கொடுத்திருக்கிறார்!”

“என்ன?” என்று லூசியஸ் வெடித்தார். “நீ என்ன சொன்னாய்?” டாபி, நம்ப முடியாமல், “டாபிக்கு ஒரு காலுறை கிடைத்துள்ளது,” என்று கூறியது. “எஜமான் அதை எறிந்தார், டாபி அதைப் பிடித்துக் கொண்டது. இப்போது டாபி சுதந்திரம் பெற்றுவிட்டது!”

லூசியஸ் அந்த எல்ஃபையே பார்த்துக் கொண்டு உறைந்து போய் நின்றார். பின் அவர் ஹாரியின்மீது பாய்ந்தார்.

“உருப்படாத பயலே, உன்னால் நான் என்னுடைய வேலைக்காரனை இழந்துவிட்டேன்!”

அப்போது டாபி கத்தியது. “நீங்கள் ஹாரி பாட்டரின்மீது கை வைக்காதீர்கள்!”

ஒரு பெரிய வெடிச் சத்தம் கேட்டது. லூசியஸ் பின்னால் தூக்கியெறியப்பட்டார். அவர் மூன்று மூன்று படிகளாக உருண்டு ஒரு குவியலாகக் கீழே போய் விழுந்தார். பின் எழுந்து நின்றார். அவரது முகம் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. அவர் தன் மந்திரக்கோலை உருவினார். ஆனால் டாபி அச்சுறுத்தும் விதமாகத் தன் நீண்ட விரலை அவரை நோக்கி நீட்டியது.

டாபி லூசியஸை நோக்கி, “நீங்கள் இப்போது போகலாம்,” என்று உக்கிரமாகக் கூறியது. “நீங்கள் ஹாரி பாட்டரைத் தொடக்கூடாது. இப்போது இங்கிருந்து போய்விடுங்கள்.”

லூசியஸுக்கு வேறு வழி இருக்கவில்லை. கடைசி முறையாக அவர் அவர்கள் இருவரையும் எரித்துவிடுவதுபோலப் பார்த்துவிட்டு, தன்னுடைய அங்கியைத் தன்னைச் சுற்றிப் போட்டுக் கொண்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.

டாபி ஹாரியை உற்றுப் பார்த்தவாறு, “ஹாரி பாட்டர் டாபியை விடுவித்துவிட்டார்!” என்று கீச்சிட்டது. அதனுடைய கோள வடிவக் கண்கள் பக்கத்து சன்னலில் இருந்து வந்த நிலவொளியைப் பிரதிபலித்தன. “ஹாரி பாட்டர் டாபியை விடுதலை செய்துவிட்டார்!”

ஹாரி வாயெல்லாம் பல்லாக, “என்னால் செய்ய முடிந்த சிறு உதவி,” என்று கூறினான். “பதிலுக்கு என்னுடைய உயிரைக் காக்க மீண்டும் முயற்சிக்க மாட்டேன் என்று நீ எனக்கு வாக்குக் கொடுத்தால் போதும்.”

அந்த எல்ஃபின் அவலட்சணமான பழுப்பு நிற முகத்தில், முழுப்பற்களையும் வெளிப்படுத்திய அகலமான புன்னகை ஒன்று வெடித்தது.

நடுங்கிக் கொண்டிருந்த தன்னுடைய கைகளால், டாபி, ஹாரியின் காலுறையை நீவிவிட்டுக் கொண்டிருந்தபோது, ஹாரி அதனிடம், “டாபி, நான் உன்னிடம் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும் கேட்டாக வேண்டும்,” என்று கூறினான். “இதற்கும் பெயர் சொல்லப்படக்கூடாதவனுக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது என்று நீ என்னிடம் கூறியிருந்தது உனக்கு நினைவிருக்கிறதா? ஆனால்

“சார், நான் உங்களுக்கு ஒரு துப்புக் கொடுத்தேன்,” என்று டாபி கூறியது. அது ஏதோ சாதாரணமாகக் கண்டுபிடிக்கப்படக்கூடிய ஒன்றுதான் என்பதுபோல அதன் கண்கள் விரிந்தன. “அந்தக் கொடூரமான மந்திரவாதி, தன் பெயரை மாற்றிக் கொள்வதற்கு முன்பு, பெயர் எளிதாகப் சொல்லப்படக் கூடியவனாகத்தானே இருந்தான்? இப்போது உங்களுக்குப் புரிகிறதா?”

“சரிதான்,” என்று ஹாரி பலவீனமாகக் கூறினான். “நான் இங்கிருந்து கிளம்புவது நல்லது. எனக்காக ஒரு விருந்து காத்துக் கொண்டிருக்கிறது. இந்நேரத்திற்கு என் தோழி ஹெர்மயனியும் கண்விழித்திருப்பாள் …

டாபி தன் கைகளால் ஹாரியின் இடுப்பைச் சுற்றி அவனைக் கட்டிப் பிடித்தது. “ஹாரி பாட்டர் டாபி நினைத்திருந்ததைவிடவும் மகத்துவமானவர்!” என்று கூறி அது தேம்பியது. “ஹாரி பாட்டர், நான் விடைபெறுகிறேன்!”

ஒரு பலத்தச் சத்தத்துடன் டாபி அங்கிருந்து மறைந்தது.

ஹாரி ஹாக்வார்ட்ஸில் இதுவரை பல விருந்துகளில் கலந்து கொண்டிருந்திருக்கிறான். ஆனால் எதுவும் இதைப்போல இருந்ததில்லை. எல்லோரும் தங்களுடைய பைஜாமாக்களில் இருந்தனர். கொண்டாட்டம் இரவு முழுவதும் நீடித்தது. அங்கு நிகழ்ந்தவற்றிலேயே எது மிகவும் சிறப்பாக இருந்தது என்பதை ஹாரியால் தீர்மானிக்க முடியவில்லை. “நீ பிரச்சனையைத் தீர்த்துவிட்டாய்! நீ பிரச்சனையைத் தீர்த்துவிட்டாய்!” என்று கத்திக் கொண்டே ஹெர்மயனி ஓடி வந்ததா? அல்லது ஜஸ்டின் தன்னுடைய ஹஃபில்பஃப் பெஞ்சிலிருந்து வேகவேகமாக ஓடி வந்து தனது கையைப் பிடித்துக் குலுக்கோ குலுக்கென்று குலுக்கி தன்னைச் சந்தேகித்ததற்காக மீண்டும் மீண்டும் தன்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதா? அல்லது மூன்று மணிக்கு அங்கு வந்து சேர்ந்த ஹாக்ரிட் தன்னுடைய பிரம்மாண்டமான கைகளால் தனது தோளையும் ரானின் தோளையும் அழுத்தியதில், தாங்கள் தங்கள் முன்னால் இருந்த கேக்கின்மீது போய் விழுந்ததா? அல்லது தானும் ரானும் சேர்ந்து கிரிஃபின்டார் அணிக்கு நானூறு புள்ளிகளை ஈட்டிக் கொடுத்ததன் மூலம் தொடர்ந்து இரண்டாம் முறையாகத் தங்களது அணி ஹாக்வார்ட்ஸ் பள்ளிக் கோப்பையைக் கைப்பற்றுவதைச் சாத்தியம் ஆக்கியதா? அல்லது பேராசிரியர் மெக்கானகல், பள்ளியின் பரிசாக, அந்த வருடத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவித்ததா? (ஐயோ!” என்று ஹெர்மயனி கூச்சலிட்டாள்) அல்லது பேராசிரியர் லாக்ஹார்ட், தான் இழந்திருந்த தன்னுடைய ஞாபக சக்தியைத் திரும்பப் பெறுவதற்காகச் சென்றிருந்ததால், துரதிர்ஷ்டவசமாக, அடுத்த வருடம் அவரால் பள்ளிக்கு வர முடியாது என்று டம்பிள்டோர் அறிவித்ததா? இச்செய்திக்குக் கிடைத்த பலத்தக் கரகோஷத்தில் ஒருசில ஆசிரியர்களும் சேர்ந்து கொண்டனர்.

ரான் ஒரு ‘ஜாம் டோனட்’ இனிப்பைக் கையில் எடுத்துக் கொண்டு, “வெளியே சொல்லவே வெட்கமாக இருக்கிறது, ” என்று கூறினான். “எனக்கு அதற்குள்ளாகவே அவரைத் தேடுகிறது.”


மிச்சமிருந்த பள்ளிப் பருவம் வெகு வேகமாக ஓடி மறைந்தது. ஹாக்வார்ட்ஸ் ஒருசில வித்தியாசங்களைத் தவிரப் பழைய நிலைக்குத் திரும்பியிருந்தது. தீய மந்திர சக்திகளுக்கு எதிரான பாதுகாப்பு வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன (ஆனால் அதில்தான் பயிற்சி அனுபவம் நமக்கு ஏற்கனவே ஏகப்பட்டப் கிடைத்துவிட்டதே’ என்று ரான், அதிருப்தியுடன் இருந்த ஹெர்மயனியிடம் கூறினான்). லூசியஸ் மால்ஃபாய், பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். பள்ளியையே தான் விலைக்கு வாங்கியிருந்ததுபோல மால்ஃபாய் இனியும் நடந்து கொள்ளவில்லை. மாறாக, அவன் எப்போதும் ஆத்திரத்துடனும் சிடுசிடுவென்றும் காணப்பட்டான். அதே சமயம், ஜின்னி மறுபடியும் மகிழ்ச்சியாக வளைய வந்தாள்.

ஹாக்வார்ட்ஸ் எக்ஸ்பிரஸில் மாணவர்கள் அனைவரும் மீண்டும் தங்கள் வீட்டிற்குத் திரும்புவதற்கான வேளை சீக்கிரமாகவே வந்துவிட்டிருந்தது. ஹாரி, ரான், ஹெர்மயனி, ஃபிரெட், ஜார்ஜ், ஜின்னி ஆகியோருக்குத் தனியாக ஒரு ரயில்பெட்டி. கிடைத்தது. பள்ளி விடுமுறையில் மாயாஜாலங்களில் ஈடுபட அவர்களுக்கு அனுமதி கிடையாது என்பதால், தங்களுக்குக் கிடைத்திருந்த கடைசி மணித்துளிகளை அவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டனர். ‘வெடித்துச் சிதறும் ஸ்னாப்’ சீட்டு விளையாட்டை அவர்கள் விளையாடினர். ஃபிரெட்டும் ஜார்ஜும் தங்களிடம் மீதமிருந்த ஃபிலிபஸ்டர் வாணவெடிகளைப் போட்டுக் காலி செய்தனர். மந்திரஜாலத்தின் மூலம் ஒருவரையொருவர் நிராயுதபாணியாக ஆக்கினர். ஹாரி அதில் கைதேர்ந்தவனாக ஆனான்.

அவர்கள் கிட்டத்தட்டக் கிங்ஸ் கிராஸ் ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது ஹாரிக்கு ஒரு விஷயம் நினைவிற்கு வந்தது.

“ஜின்னி, தான் செய்த ஏதோ ஒன்றை நீ யாரிடமும் கூறக்கூடாது என்று பெர்சி உன்னிடம் கேட்டுக் கொண்டது உனக்கு நினைவிருக்கிறதா? அவன் அப்படி என்னதான் செய்தான்?”

“ஓ, அதுவா?” என்று கேட்டுவிட்டு, ஜின்னி கிளுகிளுவென்று சிரித்தாள். “பெர்சிக்கு ஒரு காதலி கிடைத்திருக்கிறாள்.”

ஃபிரெட்டின் கைகளில் இருந்த ஒரு கட்டுப் புத்தகங்கள் அவனது கைகளிலிருந்து நழுவின. அவை நேராக ஜார்ஜின் தலையின்மீது வந்து விழுந்தன.

“என்ன?”

“அது ரேவன்கிளா மாணவ அணித் தலைவியான பெனலோப் கிளியர்வாட்டர்,” என்று ஜின்னி கூறினாள். “கடந்த கோடை விடுமுறை முழுவதும் அவன் அவளுக்குத்தான் கடிதம் எழுதிக் கொண்டிருந்திருக்கிறான். அவன் அவளைப் பள்ளியின் பல இடங்களில் ரகசியமாகச் சந்தித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள், காலியாக இருந்த ஒரு வகுப்பறையில் அவர்கள் இருவரும் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்துவிட்டேன். அதனால்தான் அவள் தாக்கப்பட்டதும் அவன் மிகவும் மனமொடிந்து போனான்.” பின் அவள் அவர்களைப் பார்த்து, “அவனை நீங்கள் கிண்டல் செய்ய மாட்டீர்களே?” என்று கேட்டாள்.

தனது பிறந்தநாள் முன்னதாகவே வந்துவிட்டது போன்ற ஒரு குதூகலமான பார்வையை வீசிய ஃபிரெட், “கனவில்கூட அப்படிச் செய்ய மாட்டேன்,” என்று நமுட்டுச் சிரிப்புடன் கூறினான்.

“நானும் கண்டிப்பாக அவனைக் கேலி செய்ய மாட்டேன்,” என்று ஜார்ஜ் சிரித்தபடியே கூறினான்.

ஹாக்வார்ட்ஸ் எக்ஸ்பிரஸின் வேகம் படிப்படியாகக் குறைந்தது. பின் அது நின்றது.

ஹாரி தன்னுடைய இறகுப் பேனாவையும் தோல் காகிதத்தையும் கையில் எடுத்துக் கொண்டு, ரானையும் ஹெர்மயனியையும் நோக்கித் திரும்பினான்.

அவன் அந்தத் தோல் காகிதத்தில் இரு முறை எதையோ கிறுக்கி, அதை இரண்டாகக் கிழித்து அவர்கள் இருவரிடமும் கொடுத்துவிட்டு, ரானிடம், “இதைத் தொலைபேசி எண் என்று கூறுவார்கள்,” என்று கூறினான். ” ஒரு தொலைபேசியை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றிக் கடந்த விடுமுறையின்போது நான் உன் அப்பாவிடம் கூறியிருந்தேன். அதனால் அவருக்கு அதைப் பற்றித் தெரியும். இது என் பெரியப்பா டர்ஸ்லீ வீட்டின் தொலைபேசி எண். நீ இதில் என்னைக் கூப்பிடு. புரிகிறதா? அடுத்த இரண்டு மாதங்களையும் வெறுமனே டட்லீயிடம் மட்டும் பேசிக் கொண்டு என்னால் ஓட்ட முடியாது ..

அவர்கள் அனைவரும் ரயிலிலிருந்து இறங்கி, அங்கிருந்த மந்திரஜாலத் தடுப்புச் சுவரை நோக்கிக் கூட்டத்தோடு கூட்டமாகச் சென்று கொண்டிருந்தபோது, ஹெர்மயனி, ஹாரியிடம், “உன் பெரியம்மாவும் பெரியப்பாவும் உன்னைக் குறித்து கண்டிப்பாகப் பெருமைப்படப் போகிறார்கள்,” என்று கூறினாள்.

“பெருமைப்படப் போகிறார்களா?” என்று ஹாரி கேட்டான். “உனக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறது. நான் இறந்து போயிருக்கக்கூடிய சமயங்களில் எல்லாம் நான் தப்பித்து வந்துவிட்டது குறித்து உண்மையில் அவர்கள் கடும் கோபத்தில் இருப்பார்கள்

அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அந்தத் தடுப்புச் சுவர் வழியாக மகுள்களின் உலகிற்குள் மீண்டும் காலெடுத்து வைத்தனர்.

(முற்றும்)

மொழிபெயர்ப்பாளர்

கவிஞர். மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர். சுற்றுச்சூழல் ஆர்வலர். மலையேற்றப் பயிற்சியாளர். புகைப்படம் எடுப்பதில் அலாதி ஆர்வம் உடையவர். ஊர் சுற்றுவதில் ஏக விருப்பமுடையவர்.

தனக்குத் தெரிய வரும் நல்ல விஷயங்களை, அவற்றைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்வதை லட்சியமாகக் கொண்டவர். மொழி பெயர்ப்பின் மீது நாட்டம் வந்ததற்கு இப்பின்னணிதான் காரணம்.

இவரது இருபத்தைந்து ஆண்டுகால மொழிபெயர்ப்பு அனுபவத்தில் எண்பதுக்கும் மேற்பட்ட நூல்கள், எண்ணற்றக் கட்டுரைகள் மற்றும் கவிதைகள் வெளிவந்துள்ளன. இலக்கியம், சுயமுன்னேற்றம், சுற்றுச்சூழல், பொருளாதாரம், அறிவியல் போன்ற துறைகள் அதில் அடங்கும்.

உலகின் பிற மொழிகளில் வெளிவரும் தலைசிறந்த நூல்கள் மற்றும் தகவல்கள், தமிழில் உடனுக்குடன், தமிழ் அறிந்த அனைவருக்கும் எளிதாய், மலிவாய்க் கிடைத்திடும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று உறுதியாக நம்புகிறவர். அக்கனவு மெய்ப்பட இன்று பலர் களத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தனக்கும் அதில் ஒரு சிறு பங்கு இருப்பதில் இவருக்குத் திருப்தி,

தற்போது இவர் தனது மனைவியுடனும் இரு குழந்தைகளுடனும் மும்பையில் வசித்து வருகிறார்.

– ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும், மூலம்: ஜே.கே.ரோலிங், தமிழில்: பி.எஸ்.வி.குமாரசாமி, மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், மும்பை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *