ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: புனைவு
கதைப்பதிவு: October 9, 2025
பார்வையிட்டோர்: 234 
 
 

(2013ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 13-14 | அத்தியாயம் 15-16 | அத்தியாயம் 17-18

15. அரகாக்

கோட்டையைச் சுற்றி இருந்த மைதானங்களில் கோடையின் ஆட்சி துவங்கியிருந்தது. வானமும் ஏரியும் நீலப் போர்வையைப் போர்த்தியிருந்தன. பசுமைக்குடிலில் முட்டைக்கோஸ் அளவிலான மலர்கள் பூத்துக் குலுங்கின. ஃபேங் தன் கால்களைச் சுற்றித் துள்ளிக் குதித்து வர, ஹாக்ரிட் அந்த மைதானங்களை வலம் வந்து கொண்டிருந்த காட்சி இப்போது கோட்டையின் சன்னல்களின் வழியாகத் தென்படாமல் போனது ஹாரிக்கு என்னவோபோல இருந்தது. கோட்டைக்கு உள்ளேயும் நிலைமை மிக மோசமாக ஆகியிருந்தது.

ஹாரியும் ரானும் மருத்துவமனைக்குச் சென்று ஹெர்மயனியைப் பார்த்து வர முயன்றனர். ஆனால் இப்போது மருத்துவமனையில் பார்வையாளர்கள் தடை செய்யப்பட்டிருந்தனர்.

மருத்துவமனையின் கதவில் இருந்த ஒரு விரிசல் வழியாக, மேடம் பாம்ஃபிரே, “நாங்கள் எல்லா முன்னெச்சரிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.” என்று கூறினார். “மன்னிக்க வேண்டும். ஆனால் உங்களை உள்ளே விடமுடியாது. தாக்குத நடத்தும் நபர் மீண்டும் வந்து இவர்களைக் காலி செய்துவிடுவதற்கு வாய்ப்பிருக்கிறது…”

டம்பிள்டோர் போனவுடன், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பயம் எல்லோரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. கோட்டைக்கு வெளியே தகதகத்துக் கொண்டிருந்த சூரியன் கூட அளிக்கம்பிகள் போடப்பட்டிருந்த சன்னல்களை மீறி உள்ளே வர கவலையும் மன இறுக்கமும் பயந்ததுபோல இருந்தது. கவலையும் தாண்டவமாடாத ஒரு முகம்கூட அங்கு காணப்படவில்லை. தப்பித்தவறிக் கேட்டச் சிரிப்பொலிகள்கூட, கிறீச்சென்று நாரசாரமாகவும் மிகவும் செயற்கையாகவும் ஒலித்ததால், சிரித்தவர்கள் தாங்களாகவே தங்கள் சிரிப்பை அடக்கிக் கொண்டனர்.

ஹாரி டம்பிள்டோரின் கடைசி வார்த்தைகளைத் தனக்குள் தொடர்ந்து முணுமுணுத்து வந்தான். “இங்கு இருப்பவர்கள் என்மீது வைத்துள்ள விசுவாசத்தை நான் இழக்கும்போதுதான் நான் இப்பள்ளியிலிருத்து உண்மையிலேயே விலகியிருப்பேன் அதோடு, இங்கு ஹாக்வார்ட்ஸில், உதவி கேட்பவர்களுக்குக் கண்டிப்பாக உதவி கிடைக்கும் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் வெற்று வார்த்தைகளால் என்ன பிரயோஜனம்? அவர்கள் யாரிடம் போய் உதவி கேட்பது? அதுவும், அவர்களைச் சுற்றி இருந்த எல்லோருமே அவர்களைப் போலவே குழம்பிப் போயும் பயந்து போயும் இருந்தபோது, யாரிடம் போய் உதவி கேட்பது?

சிலந்திப் பூச்சிகளைப் பற்றிய ஹாக்ரிட்டின் துப்பாவது புரிந்து கொள்வதற்கு எளிதாக இருந்தது. ஆனால் பிரச்சனை திடீரென்று மாயமாய் மறைந்துவிட்டதுபோலத் தோன்றியது. ஹாரி என்னவென்றால், கோட்டையில் இருந்த அனைத்துச் சிலந்திகளும் தான் சென்ற இடங்களிலெல்லாம் சிலந்திப் பூச்சிகளைத் தேடினான். அவனுக்கு ரான் தயக்கத்தோடு உதவி செய்தான். அவர்கள் எங்கும் தனியாகச் செல்ல அவர்களுக்கு அனுமதி இல்லாமல் போனதும் அவர்களுக்கு எவ்விதத்திலும் உதவவில்லை. அவர்கள் எங்கு செல்ல வேண்டியிருந்தாலும், கிரிஃபின்டார் அணியைச் சேர்ந்த பிற மாணவர்களோடு ஒரு குழுவாகவே செல்ல வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டு இருந்தது. தாங்கள் ஒரு வகுப்பிலிருந்து மற்றொரு வகுப்பிற்கு ஆசிரியர்களால் வழிநடத்திச் செல்லப்பட்டதைப் பெரும்பாலான மாணவர்கள் வரவேற்றதுபோலத் தெரிந்தது. ஆனால் ஹாரிக்கு அந்த எண்ணம் வேப்பங்காயாகக் கசந்தது.

பயமும் சந்தேகமும் தலைவிரித்துக் கோரத் தாண்டவமாடிக் கொண்டிருந்த அந்தச் சூழ்நிலையை முழுக்க முழுக்க ரசித்த ஒரு ஜீவனும் அங்கு இருந்தது. அது மால்ஃபாய். புதிதாக நியமிக்கப்பட்டப் பள்ளித் தலைமை மாணவன்போல அவன் திமிராக வளைய வந்து கொண்டிருந்தான். மால்ஃபாய் எது குறித்து அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தான் என்பது அடுத்த மாயத் திரவ வகுப்பு வரும்வரை ஹாரிக்குப் புரியவில்லை. டம்பிள்டோரும் ஹாக்ரிட்டும் அப்புறப்படுத்தப்பட்டுப் பதினைந்து தினங்கள் கழித்து நடைபெற்ற மாயத் திரவ வகுப்பில், ஹாரி, மால்ஃபாய்க்குப் பின்னால் உட்கார்ந்திருந்தான். அப்போது மால்ஃபாய், கிராபிடமும் காயலிடமும் பீற்றிக் கொண்டிருந்தான்.

“டம்பிள்டோரைத் தூக்கியெறிந்தது என்னுடைய அப்பாவாகத்தான் இருக்கும் என்று நான் எப்போதுமே நினைத்தேன்,” என்று அவன் கூறினான். தன் குரல் சற்று உயர்ந்திருந்ததை அவன் பொருட்படுத்தவில்லை. “இப்பள்ளியில் இதுவரை பணிபுரிந்துள்ள தலைமையாசிரியர்களில் டம்பிள்டோர்தான் மிகமிக மோசமான தலைமையாசிரியர் என்று என் அப்பா நினைப்பதாக நான் உங்களிடம் ஏற்கனவே கூறினேன், இல்லையா? ஒருவேளை இப்போது நமக்கு ஒரு பாங்கான தலைமையாசிரியர் கிடைக்கலாம். ரகசியங்கள் அடங்கிய பாதாள அறையை மூட விரும்பாத ஒருவராக அவர் இருந்தால் நல்லது! மெக்கானகல் தாற்காலிகமாகத்தான் தலைமையாசிரியர் பதவியை வகித்து வருகிறார். அவர் அதிக நாட்கள் அப்பதவியில் நீடிக்க மாட்டார்…”

ஸ்னேப் ஹாரியைக் கடந்து வேகமாகச் சென்றார். பக்கத்தில் காலியாக இருந்த ஹெர்மயனியின் இடத்தையும் கொப்பரையையும் பார்த்தும்கூட ஸ்னேப் எதுவும் கூறவில்லை.

“சார்,” என்று மால்ஃபாய் அழைத்தான். “சார், நீங்கள் ஏன் தலைமையாசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்கக்கூடாது?”

“மால்ஃபாய், உட்கார்,” என்று ஸ்னேப் கூறினார். ஆனால் தனது உதடுகளில் பரவிய மெல்லிய புன்னகையை அவரால் மறைக்க முடியவில்லை. “பேராசிரியர் டம்பிள்டோர், பள்ளி நிர்வாகக் குழுவினரால் தற்காலிகமாகத்தான் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். என்னைக் கேட்டால் அவர் எந்த நேரமும் திரும்பி வந்துவிடுவார் என்றுதான் சொல்வேன்.”

மால்ஃபாய் இகழ்ச்சிப் புன்முறுவல் பூத்தவாறு, “சார், ஆனால் நீங்கள் இதற்கு விண்ணப்பிக்க விரும்பினால், என்னுடைய அப்பாவின் ஆதரவு நிச்சயமாக உங்களுக்குத்தான் இருக்கும் என்று நான் நம்புகிறேன். இங்கு இருப்பதிலேயே மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்தான் என்று நான் என் அப்பாவிடம் கூறுவேன்,” என்று கூறினான்.

ஸ்னேப்பும் கர்வமாக நகைத்தவாறு அந்த வகுப்பைச் சுற்றி வந்தார். நல்லவேளையாக, சீமஸ் தன்னுடைய கொப்பரைக்குள் வாந்தி எடுத்துக் கொண்டிருந்ததைப்போல பாவனை செய்ததை அவர் பார்க்கவில்லை.

“இன்னும் ஏன் ஈன ரத்தப் பிறவிகள் தங்கள் பெட்டிப் படுக்கைகளைக் கட்டிக் கொண்டு இந்த இடத்தைக் காலி செய்யவில்லை என்று எனக்குப் புரியவில்லை,” என்று மால்ஃபாய் தொடர்ந்து பேசிக் கொண்டே போனான். “அடுத்து ஈன ரத்தப் பிறவிகளில் ஒருவர் கொல்லப்படப் போவது உறுதி. அது ஹெர்மயனியாக இல்லாமல் போனது துரதிர்ஷ்டமானது…”

நல்லவேளையாக, சரியாக அக்கணத்தில் மணி அடித்தது. மால்ஃபாயின் கடைசி வார்த்தையைக் கேட்டதும் ரான் தன்னுடைய முக்காலியில் இருந்து ஆவேசமாக எழுந்திருந்தான். மாணவர்கள் தங்களுடைய பைகளையும் புத்தகங்களையும் எடுத்துக் கொண்டு வெளியேற முயன்ற களேபரத்தில் அவன் மால்ஃபாயை அணுக முயன்றதை யாரும் கவனிக்கவில்லை.

“நான் அவனை ஒரு வழி பண்ணப் போகிறேன்,” என்று ரான் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்துக் கொண்டிருந்தான். ஹாரியும் டீன் தாமஸும் அவனை இரு பக்கங்களிலும் பிடித்திருந்தனர். “எனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. எனக்கு என்னுடைய மந்திரக்கோல்கூட வேண்டாம். நான் அவனை என் வெறும் கைகளாலேயே கழுத்தை நெறித்துக் கொல்லப் போகிறேன்…”

“வேகமாகக் கிளம்புங்கள், நான் உங்கள் எல்லோரையும் மூலிகையியல் வகுப்பிற்கு அழைத்துச் செல்ல வேண்டும்” என்று ஸ்னேப் குரைத்தார். அவர்கள் இரண்டிரண்டு பேராக வரிசையாக வெளியேறினர். அந்த வரிசையின் கடைசியில் ஹாரி, ரான், டீன் தாமஸ் ஆகிய மூவரும் சென்றனர். ரான் இன்னும் திமிறிக் கொண்டிருந்தான். ஸ்னேப் அந்த மொத்த வகுப்பையும் கோட்டைக்கு வெளியே அழைத்துச் சென்று விட்டுவிட்டு அகன்றதும்தான் ஹாரியும் டீன் தாமஸும் ரானைப் பிடித்திருந்த பிடியை விட்டனர். அவர்கள் காய்கறித் தோட்டங்களின் வழியாகப் பசுமைக்குடிலை நோக்கிச் சென்றனர்.

மூலிகையியல் வகுப்பு முற்றிலும் களையிழந்து போயிருந்தது. தங்கள் வகுப்பைச் சேர்ந்த ஹெர்மயனியையும் ஜஸ்டினையும் அவர்கள் இழந்திருந்தனர்.

பேராசிரியர் ஸ்புரவுட், அபீசீனிய உலர் அத்திகளைக் கத்தரித்து ஒழுங்குபடுத்தும் வேலையை அந்த வகுப்பினரிடம் ஒப்படைத்திருந்தார். வாடி வதங்கிப் போயிருந்த அச்செடியின் சில தண்டுகளை, ஹாரி, குப்பைக் குவியலில் போடச் சென்றபோது, அவன் நேருக்கு நேராக எர்னியைச் சந்திக்க நேர்ந்தது. எர்னி ஒரு முறை ஆழமாக சுவாசித்துவிட்டு, மிகவும் விட்டேத்தியாக, “ஹாரி, உன்னைச் சந்தேகித்ததற்காக என்னை மன்னித்து விடு. நீ கண்டிப்பாக ஹெர்மயனியைத் தாக்கியிருக்க மாட்டாய். நான் உன்னிடம் கூறியவற்றிற்காக உன்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது நம் எல்லோருடைய நிலையும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது,” என்று உணர்ச்சி ஏதுமற்றக் குரலில் கூறினான்.

அவன் தனது குட்டையான கையை நீட்டினான். ஹாரி அதைப் பிடித்துக் குலுக்கினான். ஹாரியும் ரானும் வேலை செய்து கொண்டிருந்த அதே உலர் அத்திச் செடிகள் பகுதியில், அவர்களோடு சேர்ந்து வேலை செய்ய எர்னியும் ஹானாவும் அவர்களோடு இணைந்து கொண்டனர்.

எர்னி, காய்ந்து போயிருந்த சிறு கிளைகளைப் பிய்த்தெறிந்து கொண்டே, “மால்ஃபாய் இவை எல்லாவற்றையும் குறித்து சந்தோஷமாக இருப்பதுபோலத் தெரிகிறது. நீ என்ன சொல்கிறாய்? அவன்தான் ஸ்லிதரினின் உண்மையான வாரிசாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று கூறினான்.

“எர்னி, நீ மகா புத்திசாலிதான்!” என்று ரான் கூறினான். ஹாரியைப்போல் எர்னியை அவ்வளவு சுலபத்தில் ரான் மன்னித்திருக்கவில்லை என்று தோன்றியது.

“ஹாரி, இது மால்ஃபாயாக இருக்கும் என்று நீ நினைக்கிறாயா?” என்று எர்னி கேட்டான்.

“இல்லை,” என்று ஹாரி கூறினான். அவன் குரலில் இருந்த உறுதியைக் கண்டு எர்னியும் ஹானாவும் வெறித்துப் பார்த்தனர்.

ஒருகணம் கழித்து ஹாரி பார்த்த ஒரு விஷயம் அவனைத் தன் பெரிய தோட்டக் கத்திரிக்கோலைக் கொண்டு ரானின் கையை இடிக்க வைத்தது.

“ஆ! நீ என்ன செய்கிறாய்?”

நிலத்தில் ஒருசில அடிகள் தள்ளி இருந்த ஒரு பகுதியை ஹாரி ரானுக்குச் சுட்டிக்காட்டினான். பல பெரிய சிலந்திகள் அங்கு ஊர்ந்து கொண்டிருந்தன.

“அடக் கடவுளே,” என்று ரான் கூறினான். கூறினான். அவன் தன் சந்தோஷத்தை மறைக்க முடியாமல் தவித்தான், “ஆனால் இவற்றை நாம் இப்போது பின்பற்றிச் செல்ல முடியாது…”

அவர்கள் பேசியதை எர்னியும் ஹானாவும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அந்தச் சிலந்திகள் வேகமாக ஓடிக் கொண்டிருந்ததை ஹாரி பார்த்தான்.

“தடை செய்யப்பட்டக் காட்டை நோக்கி அவை செல்வதுபோலத் தோன்றுகிறது…”

ரான் அது குறித்து அதிருப்தி அடைந்தவன்போலக் காணப்பட்டான்.

வகுப்பு முடிந்ததும், பேராசிரியர் ஸ்புரவுட், தீய மந்திர சக்திகளுக்கு எதிரான பாதுகாப்பு வகுப்பிற்கு அவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றார். ஹாரியும் ரானும் மற்றவர்களின் காதுகளில் விழாதபடித் தங்களுக்குள் பேசிக் கொள்வதற்காகக் கொஞ்சம் பின்னால் தள்ளி நடந்து வந்தனர்.

“மறைய வைக்கும் அங்கியை நாம் மீண்டும் உபயோகப்படுத்த வேண்டியிருக்கும்,” என்று ஹாரி ரானிடம் கூறினான். “நாம் ஃபேங்கை நம்முடன் அழைத்துச் செல்லலாம். அது ஹாக்ரிட்டுடன் தடை செய்யப்பட்டக் காட்டிற்குள் சென்று பழக்கப்பட்டுள்ளதால், அது நமக்கு உதவியாக இருக்கக்கூடும்.”

தன்னுடைய மந்திரக்கோலைத் தன் கையில் சுழற்றிக் கொண்டிருந்த ரான், “சரி,” என்று கூறினான். அவர்கள் லாக்ஹார்ட்டின் வகுப்பில் தங்களுடைய வழக்கமான இடமான வகுப்பின் பின் பகுதியில் அமர்ந்ததும், ரான், “ம்ம் – அங்கு – அந்தக் காட்டினுள் – ஓநாய்மனிதர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறதே!” என்று கேட்டான்.

அவனுடைய கேள்விக்கு பதிலளிப்பதைத் தவிர்த்த ஹாரி, “அங்கு நல்ல விஷயங்களும் இருக்கின்றன. அங்கு இருக்கும் குதிரை மனிதர்கள் நல்லவர்கள். அதேபோலத்தான் ஒற்றைக் கொம்புக் குதிரைகளும்,” என்று கூறினான்.

தடை செய்யப்பட்டக் காட்டிற்குள் ரான் அதற்கு முன்பு ஒருபோதும் சென்றிருந்ததில்லை. ஹாரி ஒரே ஒரு முறை சென்றிருந்தான். ஆனால் தான் மீண்டும் அங்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என்று அவன் நம்பியிருந்தான்.

லாக்ஹார்ட் துள்ளல் நடையுடன் வகுப்பிற்குள் நுழைந்தார். மொத்த வகுப்பும் அவரை வெறித்துப் பார்த்தது. கோட்டையில் இருந்த மற்ற எல்லா ஆசிரியர்களும் அழுது வடிந்து கொண்டு இருந்தனர். ஆனால் லாக்ஹார்ட் மட்டும் உற்சாகம் கொப்பளிக்க வலம் வந்து கொண்டிருந்தார்.

“உங்கள் அனைவருக்கும் என்னவாயிற்று?” என்று அவர் கத்தினார். “ஏன் துக்க வீட்டில் இருப்பதுபோல இடிந்து போய் உட்கார்ந்திருக்கிறீர்கள்?”

அங்கிருந்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர், ஆனால் யாரும் வாயைத் திறக்கவில்லை.

அவர்கள் அனைவரும் மந்தபுத்திக்காரர்கள் என்பதுபோல அவர் மிகமிக மெதுவாக, “குற்றவாளி பிடிபட்டுவிட்டான். இனி ஆபத்து எதுவுமில்லை. உங்களுக்கு ஏன் இது இன்னும் புரியவில்லை?” என்று கேட்டார்.

“இனி ஆபத்து இல்லை என்று யார் சொன்னார்கள்?” என்று டீன் தாமஸ் சத்தமாகக் கேட்டான்.

“என் இளம் சிங்கமே, ஹாக்ரிட்தான் குற்றவாளி என்று நூறு சதவீதம் உறுதியாகத் தெரிந்திருக்காவிட்டால் மந்திரஜால அமைச்சர் அவரைச் சிறைக்கு அனுப்பியிருக்க மாட்டார்,” என்று லாக்ஹார்ட் கூறினார். அவரது குரல், ‘ஒன்றும் ஒன்றும் இரண்டு’ என்று விளக்கும் ஒருவரது குரலை ஒத்திருந்தது.

“இல்லை. நூறு சதவீதம் உறுதியாகத் தெரிந்திருக்காவிட்டாலும் அவர் அதைச் செய்திருப்பார்,” என்று ரான் டீனைவிடச் சத்தமான குரலில் கூறினான்.

“ஹாக்ரிட்டின் கைது பற்றி உங்களைவிட எனக்கு அதிகமான தகவல்கள் தெரியும் என்பதை நான் பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்,” என்று லாக்ஹார்ட், சுயதிருப்திப் பொங்கி வழிந்த ஒரு குரலில் கூறினார்.

தான் அப்படி நினைக்கவில்லை என்று கூற ரான் வாயெடுத்தான். ஆனால் ஹாரி அவனைப் பெஞ்சுக்கு அடியில் பலமாக உதைத்ததால், அப்படியே நிறுத்திக் கொண்டான்.

“நாம் அங்கு இருக்கவில்லை என்பது உனக்கு நினைவிருக்கிறதா?” என்று ஹாரி கேட்டான்.

ஆனால் லாக்ஹார்ட்டின் வெறுப்பூட்டும் உற்சாகமிகுதியும், ஹாக்ரிட் எதற்கும் லாயக்கற்றவர் என்று தான் எப்போதுமே கருதி வந்திருந்தது குறித்து அவர் கூறிய ஜாடைமாடையான வார்த்தைகளும், இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்பதுபோல அவர் அடாவடியாக நடந்து கொண்ட விதமும், ‘கோரைப் பல் ராட்சஸப் பேய்க்குச் சாவு மணி அடித்தல்’ புத்தகத்தை நேராக லாக்ஹார்ட்டின் முகத்தின்மீது தூக்கியெறிய வேண்டும் என்ற அடக்க முடியாத கோபத்தை ஹாரிக்குள் தோற்றுவித்தன. அதற்கு பதிலாக, ரானுக்கு ஒரு குறிப்பு எழுதியதோடு அவன் திருப்திப்பட்டுக் கொண்டான்: “இன்று இரவு நாம் அதைச் செய்யலாம்!”

ரான் அதைப் படித்துவிட்டு மென்று விழுங்கினான். தங்களுக்கு அருகே ஹெர்மயனி வழக்கமாக உட்கார்ந்த இடத்தை அவன் ஒரக் கண்ணால் பார்த்தான். அது தனக்குத் துணிச்சலைக் கொடுத்ததுபோல அவன் உணர்ந்தான். பிறகு அவன் ஹாரியை நோக்கித் தலையை அசைத்தான்.


இப்போதெல்லாம் கிரிஃபின்டார் பொது அறை மிகவும் கூட்டமாக இருந்தது. ஆறு மணிக்குப் பிறகு அவர்கள் வேறு எங்கும் போக முடியாது என்பதுதான் அதற்குக் காரணம். அதோடு, வாயில் போட்டு மெல்லுவதற்கு அவர்களுக்கு ஏகப்பட்ட அவலும் இருந்தது. அதனால் நள்ளிரவு வரை அந்த அறை காலியாகாமலேயே இருந்தது.

ஹாரி இரவு உணவிற்குப் பிறகு நேராகத் தனது பொதுப் படுக்கையறைக்குச் சென்று, மறைய வைக்கும் அங்கியைத் தனது டிரங்குப் பெட்டியிலிருந்து எடுத்து வந்து, கிரிஃபின்டார் பொது அறை காலியாவதற்காக அவ்வளவு நேரமும் அந்த அங்கியின்மீது உட்கார்ந்தபடியே அந்த மாலைப் பொழுது முழுவதையும் கழித்தான். ஃபிரெட்டும் ஜார்ஜூம், ‘வெடித்துச் சிதறும் ஸ்னாப்’ சீட்டு விளையாட்டு விளையாட ஹாரியையும் ரானையும் அழைத்தனர். ஜின்னி, ஹெர்மயனி வழக்கமாக உட்கார்ந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு, எவ்வித ஆரவாரமும் இன்றி, அவர்கள் விளையாடியதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். விளையாட்டைச் சீக்கிரமாக முடிப்பதற்காக ஹாரியும் ரானும் வேண்டுமென்றே தோற்றுக் கொண்டிருந்தனர். ஆனாலும் கடைசியில் ஒரு வழியாக, ஃபிரெட்டும் ஜார்ஜும் ஜின்னியும் படுக்கப் போனபோது நள்ளிரவு கடந்திருந்தது.

இரண்டு பொதுப் படுக்கையறைக் கதவுகள் சாத்தப்படுவதுவரை காத்திருந்த ஹாரியும் ரானும், மறைய வைக்கும் அங்கியைத் தங்கள் மேல் போட்டுக் கொண்டு, ஓவியத் துளை வழியாக வெளியேறினர்.

ஆசிரியர்களை ஏய்த்துவிட்டுக் கோட்டையைவிட்டு வெளியேறுவது இம்முறையும் கடினமாக இருந்தது. அவர்கள் ஒருவழியாக வரவேற்பறையை அடைந்து, அந்தக் கருவாலி மரக் கதவின் தாழ்ப்பாளை விலக்கி, கதவைச் சிறியதாகத் திறந்து, சத்தம் ஏதும் வராமல் அதன் வழியாக நுழைந்து, நிலவொளி படர்ந்திருந்த மைதானத்திற்குள் அடியெடுத்து வைத்தனர்.

அவர்கள் புற்களின் ஊடாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, ரான் திடீரென்று, “நாம் தடை செய்யப்பட்டக் காட்டினுள் நுழைந்த பிறகு பின்தொடர்ந்து செல்வதற்கு நமக்கு எதுவும் இல்லாமல் போகலாம். ஒருவேளை அந்தச் சிலந்திப் பூச்சிகள் அங்கு செல்லாமலேயேகூட இருந்திருக்கலாம். அவை அந்தத் திசையை நோக்கித்தான் ஊர்ந்து கொண்டிருந்தன என்பதை நான் அறிவேன். இருந்தாலும், . . ” என்று இழுத்தான்.

அவர்கள் ஹாக்ரிட்டின் குடிலை அடைந்தனர். அது சோகமாகவும் பரிதாபமாகவும் காட்சியளித்தது. ஹாரி அதன் தலைகால் புரியவில்லை. கோட்டையில் இருந்த எல்லோரையும் அது கதவைத் திறந்ததும், அவர்களைக் கண்ட மகிழ்ச்சியில் ஃபேங்கிற்குத் விழிக்க வைத்துவிடும் என்று பயந்த அவர்கள், கணப்படுப்பிற்கு மேலே இருந்த தடுப்பில் வைக்கப்பட்டிருந்த ஒரு கேக்கை அதற்குக் கொடுத்தனர். அந்த நாயின் பற்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டன.

மறைய வைக்கும் அங்கியை ஹாரி ஹாக்ரிட்டின் மேசைமீது வைத்தான். கும்மிருட்டாக இருந்த காட்டில் அது கண்டிப்பாக அவர்களுக்குத் தேவைப்படாது.

“ஃபேங், வா! நாம் காலாற ஒரு நடை நடந்துவிட்டு வரலாம்” என்று கூறி, ஹாரி அந்த நாயின் கால்களைத் தட்டிக் கொடுத்தான். அது சந்தோஷமாக அவர்களுக்குப் பின்னால் வீட்டைவிட்டு ஓடி வந்தது. அது வேகமாகக் காட்டின் எல்லைக்கு ஓடி, அங்கிருந்த ஒரு பெரிய அத்தி மரத்தின் அருகே சென்று தனது ஒரு காலைத் தூக்கியது.

ஹாரி தன் மந்திரக்கோலை வெளியே எடுத்து, “லூமோஸ் என்று கூறினான். ஒரு சிறிய வெளிச்சம் அதன் முனையில் தோன்றியது. சிலந்திப் பூச்சிகள் ஏதேனும் அங்கு சென்று கொண்டிருந்ததற்கான அடையாளம் அந்தப் பாதையில் தென்பட்டதா என்பதைப் பார்ப்பதற்குப் போதுமான வெளிச்சத்தை அது கொடுத்தது.

“நல்ல யோசனைதான்,” என்று ரான் கூறினான். “நானும் என்னுடையதை ஏற்றலாம். ஆனால் என் மந்திரக்கோல் எதையாவது பற்ற வைத்துவிட்டால்? . . .”

ஹாரி ரானின் தோளைத் தட்டிக் கீழே இருந்த புல்லைச் சுட்டிக்காட்டினான். தனியாக இருந்த இரண்டு சிலந்திகள் மந்திரக்கோலின் விளக்கு வெளிச்சத்திலிருந்து விலகி ஒரு மரத்தின் நிழலை நோக்கி ஓடின.

ரான், எது நடந்தாலும் நடக்கட்டும் என்று தன் மனத்தைத் தேற்றிக் கொண்டவன்போல, “சரி,” என்று கூறினான். “நான் தயார். வா, போகலாம்.”

ஃபேங், மரத்தின் வேர்ப் பகுதிகளையும் இலைதழைகளையும் மோப்பம் பிடித்தவாறு பின்னே உற்சாகமாக வர, அவர்கள் இருவரும் காட்டுக்குள் நுழைந்தனர். அவர்கள் எதுவும் பேசாமல் சுமார் இருபது நிமிடங்கள் நடந்திருப்பர். தங்கள் கால்களில் மிதிபட்டச் சுள்ளிகள் மற்றும் சருகுகளின் ஓசையைத் தவிர வேறு ஏதாவது சத்தம் கேட்டதா என்று தங்களது காதுகளைத் தீட்டிக் கொண்டே அவர்கள் சென்றனர். மரங்களின் அடர்த்தி அதிகரித்ததும் மேலே இருந்த நட்சத்திரங்கள் அவர்களது பார்வையில் இருந்து மறைந்தன. ஹாரியின் மந்திரக்கோல் அள்ளித் தெளித்த வெளிச்சம் மட்டுமே அந்த இருட்டுக் கடலில் தென்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது தங்களது சிலந்திப் பூச்சி வழிகாட்டிகள் ஒழுங்கான பாதையைவிட்டு விலகிச் சென்றதை அவர்கள் கண்டனர்.

சிலந்திப் பூச்சிகள் இப்போது எங்கே போய்க் கொண்டிருந்தன என்பதைப் பார்ப்பதற்காக ஹாரி நின்றான். ஆனால் அவனது மந்திரக்கோலின் சிறு ஒளி வட்டத்திற்கு வெளியே இருந்த அனைத்தும் கும்மிருட்டில் மூழ்கிக் கிடந்தன. அவன் இதற்கு முன்பு அக்காட்டினுள்ளே இவ்வளவு தூரம் வந்திருக்கவில்லை. கடந்த முறை அவன் இங்கு வந்தபோது, பாதையைவிட்டு ஒருபோதும் விலகக்கூடாது என்று ஹாக்ரிட் தன்னிடம் கூறியிருந்தது அவனது ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் இப்போது ஹாக்ரிட் பல மைல்கள் தொலைவில் இருந்தார். அவர் ஒருவேளை அஸ்கபானில் இருக்கலாம். ஆனால் சிலந்திப் பூச்சிகளைப் பின்தொடர்ந்து செல்லும்படி அவர்தான் கூறியிருந்தார்.

ஈரமான ஏதோ ஒன்று ஹாரியின் கையைத் தொட்டது. ஹாரி பயத்தில் பின்னால் துள்ளிக் குதித்து ரானின் காலைப் பதம் பார்த்தான். ஆனால் ஃபேங்கின் மூக்குதான் அது.

“நீ என்ன நினைக்கிறாய்?” என்று ஹாரி ரானிடம் கேட்டான். தனது மந்திரக்கோலின் வெளிச்சத்தின் பிரதிபலிப்பில் அவனால் ரானின் கண்களை லேசாகப் பார்க்க முடிந்தது.

“நாம் ஏற்கனவே இவ்வளவு தூரம் உள்ளே வந்துவிட்டோம்;” என்று ரான் கூறினான்.

எனவே, மரங்களை நோக்கி ஊர்ந்து கொண்டிருந்த சிலந்திப் பூச்சிகளை அவர்கள் பின்தொடர்ந்தனர். இப்போது அவர்களால் வேகமாகப் போக முடியவில்லை. அவர்களுடைய வழியில் மரங்களின் வேர் முடிச்சுகளும் மரத் தண்டுகளும் இருந்தன. ஆனால் இருட்டில் அவற்றை அவர்களால் சரியாகப் பார்க்க முடியவில்லை. ஃபேங்கின் சூடான மூச்சுக் காற்று ஹாரியின் கையில் பட்டுக் கொண்டிருந்தது. சிலந்திப் பூச்சிகள் எங்கே போய்க் கொண்டிருந்தன என்பதை மந்திரக்கோலின் சிறிய வெளிச்சத்தில் பார்ப்பதற்காக அவன் குனிய வேண்டியிருந்ததால், ஒரு முறைக்கு மேல் அவர்கள் இருவரும் நிற்க வேண்டியதாயிற்று.

அவர்கள் மேலும் ஓர் அரை மணிநேரம் நடந்திருப்பர். அவர்களது அங்கிகள் வெகு கீழே தொங்கிக் கொண்டிருந்த மரக் கிளைகளிலும் புதர்ச் செடிகளிலும் மாட்டிக் கொள்ளத் துவங்கின. அதற்குப் பிறகு நிலம் கீழ்நோக்கிச் சரிந்து கொண்டு சென்றதை மரங்கள் முன்பு அவர்கள் கவனித்தனர். ஆனாலும் இருந்ததைப்போலவே அடர்த்தியாக இருந்தன.

திடீரென்று ஃபேங் பெரிதாக ஊளையிட்டது. பயத்தில் ஹாரியும் ரானும் துள்ளிக் குதித்தனர்.

ரான் ஹாரியின் முழங்கையை இறுகப் பற்றியபடி, தங்களைச் சுற்றியிருந்த கும்மிருட்டைப் பார்த்தபடி, “என்னது?” என்று கேட்டான்.

“அதோ, அங்கே ஏதோ நகர்ந்து கொண்டிருக்கிறது,” என்று ஹாரி சுட்டிக்காட்டினான். “நன்றாகக் கவனி. அது மிகப் பெரிதாக இருப்பதுபோலத் தெரிகிறது.”

அவர்களுக்கு வலப்பக்கம் பெரிதாகத் தோன்றிய ஏதோ ஒன்று, மரக் அவர்கள் தங்கள் காதுகளைத் தீட்டிக் கொண்டனர். கிளைகளை ஒடித்துத் தள்ளிக் கொண்டு, மரங்களின் ஊடாக வேகமாக வந்து கொண்டிருந்தது.

“ஐயோ!” என்று ரான் அலறினான். “ஐயோ! ஆ! ஊ!”

“வாயை மூடு!” என்று ஹாரி பதற்றத்துடன் கூறினான். “அதற்கு உன் குரல் கேட்டுவிடும்.”

ரான், வழக்கத்திற்கு மாறான உச்சஸ்தாயிக் குரலில், “என்ன சொன்னாய்? என் குரல் கேட்டுவிடுமா? அதற்கு ஏற்கனவே ஃபேங்கின் குரல் கேட்டுவிட்டது!”

அவர்கள் குலை நடுங்கிக் கொண்டு, பயத்தில் உறைந்து போய்க் காத்துக் கொண்டிருந்தனர். இருட்டு அவர்களுடயை கருவிழிகளை அழுத்திக் கொண்டிருந்ததுபோலத் தோன்றியது. ஏதோ உருண்டோடியது போன்ற ஒரு வினோதமான சத்தம் கேட்டது. பிறகு அமைதி நிலவியது.

“அது என்ன செய்து கொண்டிருக்கிறது என்று நீ நினைக்கிறாய்?” என்று ஹாரி கேட்டான்.

“பாய்ந்து தாக்குவதற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கலாம்,” என்று ரான் கூறினான்.

அவர்கள் அசைய பயந்து போய், நடுநடுங்கிக் கொண்டு காத்திருந்தனர்.

“அது போய்விட்டிருக்கும் என்று நீ நினைக்கிறாயா?” என்று ஹாரி கிசுகிசுத்தான்.

“தெரியவில்லை -“

பிறகு அவர்களுடைய வலப்பக்கத்தில் திடீரென்று பயங்கரப் பிரகாசமான ஒரு வெளிச்சம் தோன்றியது. அந்தக் கும்மிருட்டில் திடீரென்று தோன்றிய அந்த வெளிச்சத்தின் தாக்குதலைத் தவிர்க்க அவர்கள் இருவரும் தங்களுடைய கைகளைக் கொண்டு தங்களது கண்களை மறைத்துக் கொண்டனர். ஃபேங் குறைத்துவிட்டு அங்கிருந்து ஓட முயன்றது. ஆனால் அங்கிருந்த முட்புதர் ஒன்றில் மாட்டிக் கொண்டு அது மேலும் குரைத்தது.

“ஹாரி!” என்று ரான் கத்தினான். அவனுடைய குரலில் நிம்மதி வெளிப்பட்டது. “ஹாரி, அது நம்முடைய கார்!”

“என்ன?”

“வா!”

ஹாரி கீழே விழுந்து எழுந்திருந்து, தட்டுத் தடுமாறி, ரானைப் பின்தொடர்ந்து அந்த வெளிச்சத்தை நோக்கிச் சென்றான். ஒரு கணத்திற்குப் பிறகு, மரங்கள் இல்லாமல் இருந்த ஒரு திட்டை அவர்கள் அடைந்திருந்தனர். அடர்த்தியான மரங்கள் வட்டமாகச் சூழந்திருக்க, ஆர்தர் வீஸ்லீயின் கார் அங்கு காலியாக நின்று கொண்டிருந்தது. அதற்கு மேலே கிளைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அதன் முகப்பு விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தன. ரான் திறந்த வாய் மூடாமல் அதை நோக்கி நடந்தபோது. ஒருவரது செல்ல வளர்ப்பு நாய் தனது எஜமானரைக் நண்டவுடன் எப்படி அவரை வரவேற்குமோ, அதைப்போல அந்தக் காரும் அவனை நோக்கி மெல்ல நகர்ந்து வந்தது.

ரான் அந்தக் காரைச் சுற்றி நடந்தவாறே, “இது இவ்வளவு காலமும் இங்குதான் இருந்திருக்கிறது,” என்று குதூகலமாகக் கூறினான். “இதைப் பார், இந்தக் காடு இதை எவ்வளவு தூரம் சேதப்படுத்தியிருக்கிறது “

அதன் உடலில் ஏராளமான சிராய்ப்புகள் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. அது சகதியில் தாராளமாகக் குளித்திருந்தது. அது தானாகவே அந்தக் காட்டிற்குள் அங்குமிங்கும் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்திருந்தது. ஃபேங் அதன் அருகே வரவேயில்லை. அது ஹாரிக்கு அருகிலேயே நின்று கொண்டது. அது பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்ததை ஹாரியால் உணர முடிந்தது. அதன் மூச்சு மெதுவாகச் சீரானது. ஹாரி தன் மந்திரக்கோலைத் தன் அங்கிக்குள் போட்டுக் கொண்டான்.

ரான் அந்தக் காரின்மீது சாய்ந்து கொண்டு, அதைத் தட்டிக் கொடுத்தவாறு, “நாம் என்னடாவென்றால், இது நம்மைத் தாக்க வருவதாக நினைத்து பயந்துவிட்டோம்;” என்று கூறினான். “இது எங்கே போயிருந்தது என்று நான் யோசித்தேன்.”

காரின் முன்விளக்குகளின் வெளிச்சத்தில் குளித்திருந்த தரையில் மேலும் சிலந்திப் பூச்சிகள் இருந்தனவா என்று ஹாரி தனது கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தான். ஆனால் அவை வெளிச்சத்தைப் பார்த்துவிட்டு நாலாப் புறங்களிலும் சிதறி ஓடியிருந்தன.

“நாம் சிலந்திப் பூச்சிகளின் பாதையைத் தவறவிட்டுவிட்டோம்,” என்று ஹாரி கூறினான். “வா, நாம் போய் அவற்றை மீண்டும் கண்டுபிடிக்கலாம்.”

ஆனால் ரான் அதற்கு பதிலளிக்கவில்லை. அவன் அசையவும் இல்லை. அவனது கண்கள், ஹாரிக்குப் பின்னால், காட்டின் தரையிலிருந்து பத்தடி உயரத்தில் நிலை கொண்டிருந்தன. அவனது முகம் பீதியில் உறைந்திருந்தது.

ஹாரிக்குத் திரும்பக்கூட அவகாசம் கிடைக்கவில்லை. ‘கிளக்’ என்று பெரிய சத்தம் ஒன்று கேட்டது. நீளமாகவும் உடல் முழுவதும் முடியாகவும் இருந்த ஏதோ ஒன்று அவனைப் பிடித்துத் தூக்கியது. அவன் தலைகுப்புறத் தொங்கிக் கொண்டிருந்தான். குலை நடுங்கிக் கொண்டும் போராடிக் கொண்டும் இருந்த ஹாரி, மேலும் சில ‘கிளக்’ சத்தங்களைக் கேட்டான். பின் ரானின் கால்களும் நிலத்தைவிட்டு மேலே எழும்பியதைக் கண்டான். ஃபேங் குரைத்துக் கொண்டும் ஊளையிட்டுக் கொண்டும் இருந்தது. அடுத்தக் கணம், இருண்ட மரங்களின் ஊடாக அவன் தூக்கிச்செல்லப்பட்டுக் கொண்டிருந்தான்.

தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த ஹாரி, எது தன்னைத் தூக்கிக் கொண்டு சென்றது என்று பார்த்தான், முடியால் மூடப்பட்டிருந்த ஆறு நீண்ட கால்களால் அது நடந்து கொண்டிருந்தது. முன்னால் இருந்த இரண்டு கால்கள் அவனை இறுகப் பிடித்திருத்தன. அவற்றுக்கு நேர் மேலே பளபளவென்று ஒரு ஜோடிக் கொடுக்குகள் அதற்கு இருந்தன. அந்த ஜந்துவிற்குப் பின்னால் இன்னொன்று நடந்து வந்து கொண்டிருந்தது. அது ரானைத் தூக்கிக் கொண்டு வந்து கொண்டிருக்க வேண்டும் என்று ஹாரி நினைத்தான். ஃபேங் மூன்றாவதாக வந்த ஒன்றின் பிடி.யிலிருந்து விடுபடப் போராடிக் கொண்டிருந்தது; கூடவே அது சத்தமாகக் குரைத்துக் கொண்டும் இருந்தது. ஹாரி விரும்பியிருந்தால்கூட அவனால் கத்தியிருக்க முடியாது. அவன் தன்னுடைய குரலை அந்தக் காரிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டதுபோல இருந்தது.

தான் அந்த விலங்கின் பிடியில் எவ்வளவு நேரம் இருந்தோம் என்பது ஹாரிக்குத் தெரியவில்லை. ஆனால் கீழே இலைகளால் மூடப்பட்டிருந்த தரையில் மொய்த்துக் கொண்டிருந்த சிலந்திப் பூச்சிகளை எளிதாகக் காணும் அளவுக்கு, இருட்டு, திடீரென்று விலகியிருந்ததை ஹாரி கண்டான். அவன் தன் தலையை ஒரு பக்கமாக வளைத்துப் பார்த்தபோது, மரங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டிருந்த ஒரு பெரிய குழியின் விளிம்பைத் தாங்கள் அடைந்திருந்ததைப் பார்த்தான். மரங்கள் இல்லாததால் அங்கு நட்சத்திரங்கள் பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டிருந்தன. அங்கு அவன் தன் வாழ்நாளிலேயே கண்டிராத மிக மோசமான ஒரு காட்சியைக் கண்டான்.

சிலந்திப் பூச்சிகள்! மரங்களின் இலைகளில் லைகளில் ஊர்ந்து கொண்டிருந்த சிறிய சிலந்திப் பூச்சிகள் அல்ல அவை, மாறாக, வண்டிக் குதிரைகள் அளவு பெரியவை. எட்டுக் கண்களையும் எட்டுக் கால்களையும் கொண்டிருந்த, உடலெல்லாம் முடியால் நிறைந்திருந்த, கருப்பு நிற ராட்சஸச் சிலந்திகள். ஹாரியைத் தூக்கிக் கொண்டு சென்ற அந்த ராட்சஸச் சிலந்தி, அந்தச் சரிவான பகுதி வழியாக, அந்தக் குழியின் மையத்தில் குவிந்த நிலையிலிருந்த ஒரு வெள்ளை நிறச் சிலந்தி வலைக்கு அவனைத் தூக்கிச் சென்றது. அதைச் சுற்றி இருந்த சிலந்திகள், அவனைத் தூக்கி வந்து கொண்டிருந்த சிலந்தியின் பிடியிலிருந்த சுமையைப் பார்த்து உற்சாகமாகத் தமது கொடுக்குகளைக் கடகடவென ஆட்டியபடி அச்சிலந்தியை நெருங்கின.

ஹாரியைத் தூக்கிச் சென்ற சிலந்தி அவனை விடுவித்ததும், தனது கை கால்களை அகலப் பரப்பிக் கொண்டு அவன் நிலத்தில் வந்து விழுந்ததான். ஃபேங் குரைப்பதை நிறுத்தியிருந்தது. ஆனால் அது பம்மிக் கொண்டு, தரையோடு தரையாகப் படுத்திருந்தது. ரானும் ஹாரி உணர்ந்ததுபோலவே உணர்ந்தான். அவனது லாய் மௌனமான அலறலில் உறைந்து போயிருந்ததுபோலக் கோணலாக இருந்தது. அவனது கண்கள் வெளியே வந்து விழுந்துவிடுவதுபோலத் துருத்திக் கொண்டு நின்றன.

தன்னைத் தூக்கிச் சென்ற சிலந்தி ஏதோ கூறியதை ஹாரி திடீரென்று உணர்ந்தான். ஆனால் அது பேசிக் கொண்டிருந்தபோது ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையே தன்னுடைய கொடுக்குகளை அடித்துக் கொண்டே பேசியதால், அது கூறியதைப் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது.

“அரகாக்!” என்று அது அழைத்தது. “அரகாக்!”

மையத்தில் குவிந்த நிலையில் இருந்த வெள்ளை நிறச் சிலந்தி வலையின் மையத்திலிருந்து, ஒரு குட்டி யானையின் அளவிலிருந்த ஒரு சிலந்தி மெதுவாக வெளிப்பட்டது. அதன் கருப்பு நிற உடலிலும் காலிலும் சாம்பல் நிறம் கலந்திருந்தது. மிகவும் அவலட்சணமாக இருந்த அதன் தலையில் இருந்த எட்டுக் கண்களும் பால் வெண்மையில் இருந்தன. அது பார்வையற்றதாக இருந்தது.

அது தன்னுடைய கொடுக்குகளைக் கடகடவென்று அடித்தவாறு, “என்ன?” என்று கேட்டது.

ஹாரியைத் தூக்கி வந்த சிலந்தி, “மனிதர்கள்,” என்று கூறியது. “அது ஹாக்ரிட்டா?” என்று அரகாக் கேட்டது. அது இன்னும் அருகே வந்தது. அதன் எட்டுக் கண்களும் வெறுமையாக அலைந்து கொண்டிருந்தன.

ரானைத் தூக்கிக் கொண்டு வந்த சிலந்தி, “அன்னியர்கள்,” என்று கூறியது.

“கொன்றுவிடுங்கள்,” என்று அரகாக் எரிச்சலுடன் கூறியது, “நான் தூங்கிக் கொண்டிருந்தேன் .

அந்தக் குழியில் இருந்த எல்லாச் சிலந்திகளும் தம்முடைய கொடுக்குகளைக் கடகடவென அடித்தன.

அரகாக் நின்றது.

“ஹாக்ரிட் இதற்கு முன்பு நம்முடைய குழிக்கு மனிதர்களை ஒருபோதும் அனுப்பியதே இல்லை,” என்று அது மெதுவாகக் கூறியது.

ஹாரி, வேகமாக மூச்சிழுத்தபடி, “ஹாக்ரிட் பிரச்சனையில் மாட்டிக் கொண்டுள்ளார்,” என்று கூறினான், “அதனால்தான் நாங்கள் இங்கே வந்தோம்.”

“பிரச்சனையிலா?” என்று அந்த வயதான சிலந்தி கேட்டது. அதன் கொடுக்குகளின் ஆட்டல் சத்தத்திற்கு இடையே அதனிடமிருந்து கொஞ்சம் அக்கறை வெளிப்பட்டதுபோல ஹாரிக்குத் தோன்றியது.

முதலில் எழுந்து நிற்கலாமா என்று ஹாரி நினைத்தான். பின் தன் நினைப்பை மாற்றிக் கொண்டான். தனது கால்கள் தன்னைத் தாங்குமா என்று அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. அதனால் அவன் தரையில் கிடந்தபடி, தன்னால் முடிந்த அளவு அமைதியாகப் பேசினான்.

“மாணவர்கள் மீது ஹாக்ரிட் எதையோ ஏவிவிட்டுள்ளதாகப் பள்ளி நிர்வாகிகள் கருதுகின்றனர். அதனால் அவர்கள் அவரை அஸ்கபானுக்குக் கொண்டு சென்றுள்ளனர்.”

அரகாக் தன்னுடைய கொடுக்குகளைக் கோபமாகக் கடகடவென்று ஆட்டியது. அங்கிருந்த மற்றச் சிலந்திகளும் அதேபோல எழுப்பிய சத்தம் அந்தக் குழியெங்கும் எதிரொலித்தது. அது ஒரு கரகோஷம்போல ஒலித்தது. ஆனால் இந்தக் கரகோஷம் அவனை பயத்தில் குளிப்பாட்டியது.

“அது பல வருடங்களுக்கு முன்பு நடந்தது,” என்று அரகாக் வேதனையுடன் கூறியது. “பலப் பல ஆண்டுகளுக்கு முந்தைய விஷயம் அது. ஆனாலும் எனக்கு அது நன்றாக நினைவிருக்கிறது. அதனால்தான் அவர்கள் அவரை அப்பள்ளியில் இருந்து துரத்தினார்கள். ரகசியங்கள் அடங்கிய பாதாள அறை என்று அவர்கள் கருதும் இடத்தில் வசித்து வந்தது நான்தான் என்று அவர்கள் நம்பினார்கள். ஹாக்ரிட் அந்தப் பாதாள அறையைத் திறந்து என்னை விடுவித்துவிட்டதாக அவர்கள் எண்ணினார்கள்.”

“அப்படியானால் … நீ ரகசியங்கள் அடங்கிய பாதாள அறையில் இருந்து வரவில்லையா?” என்று ஹாரி கேட்டான். தனது நெற்றியில் வியர்வை அரும்பிக் கொண்டிருந்ததை அவன் உணர்ந்தான்.

“நானா!” என்று அரகாக் தன் கொடுக்குகளைக் கோபமாகத் தட்டியவாறு கூறியது. “நான் இக்கோட்டையில் பிறக்கவில்லை. நான் தூர தேசம் ஒன்றிலிருந்து வந்தேன். நான் ஒரு முட்டையாக இருந்தபோது, ஒரு வழிப்போக்கர் என்னை ஹாக்ரிட்டிடம் கொடுத்தார். ஹாக்ரிட் அப்போது ஒரு சிறுவனாக இருந்தார். ஆனாலும் அவர் என்மீது அக்கறை காட்டினார். கோட்டையில் இருந்த ஓர் அலமாரியில் அவர் என்னை ஒளித்து வைத்தார். மேசையின் துண்டுகளை அவர் எனக்குச் சாப்பிடக் கொடுத்தார். ஹாக்ரிட் ஒரு நல்ல நண்பர், ஒரு நல்ல மனிதர். நான் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, இறந்து போன மாணவியைக் கொன்றது நான்தான் என்று குற்றம் சாட்டப்பட்டபோது என்னை அவர் பாதுகாத்தார். அதிலிருந்து நான் இந்தக் காட்டில்தான் வசித்து வருகிறேன். ஹாக்ரிட் தொடர்ந்து என்னைப் பார்க்க வந்து கொண்டிருந்தார். அவர்தான் என் மனைவியான மோஸாக்கையும் எனக்குக் கண்டுபிடித்துக் கொடுத்தார். ஹாக்ரிட்டின் கருணையால் இன்று என் குடும்பம் எவ்வளவு பல்கிப் பெருகிப் போய் இருக்கிறது என்று பார்த்தாயா! . . .”

ஹாரி தன்னிடம் மீதமிருந்த எல்லாத் துணிச்சலையும் ஒன்றுதிரட்டினான்.

“அப்படியானால் நீ எவரையும் ஒருபோதும் தாக்கியதில்லையா?”

“இல்லை. ஒருபோதும் இல்லை,” என்று அந்த முதிய சிலந்தி தான் வைத்துள்ள மரியாதை காரணமாக நான் மனிதர்களுக்கு கூறியது. “அது என் உள்ளுணர்வில் இருக்கலாம். ஆனால் ஹாக்ரிட்மீது ஒருபோதும் தீங்கு விளைவித்தது இல்லை. கொல்லப்பட்ட அந்த மாணவியின் உடல் ஒரு குளியலறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. நான் வளர்ந்து வந்த அலமாரி தவிர, கோட்டையின் வேறு எந்தப் பகுதியையும் எனக்குத் தெரியாது. எங்களைப் போன்ற பூச்சிகளுக்கு இருட்டும் அமைதியும்தான் பிடிக்கும் …”

“உனக்கு . . . அந்த மாணவியை உண்மையில் கொன்றது எது என்று தெரியுமா?” என்று ஹாரி கேட்டான். “அது எதுவென்று எனக்குத் தெரியாது. ஆனால் அது இப்போது மீண்டும் வந்து மக்களைத் தாக்கிக் கொண்டிருக்கிறது

அவனைச் சுற்றி எழுந்த கொடுக்குகள் அடிக்கப்பட்ட ஓசையிலும், அவை தமது கால்களைக் கோபமாகத் தரையில் இடம் மாற்றியதால் ஏற்பட்டச் சலசலப்புச் சத்தத்திலும், ஹாரியின் வார்த்தைகள் மூழ்கடிக்கப்பட்டன. அவனைச் சுற்றிப் பெரிய பெரிய கருப்பு உருவங்கள் நகரத் துவங்கின.

“கோட்டையில் வசிக்கும் அந்த ராட்சஸ விலங்கு,” என்று அரகாக் துவங்கியது. “ஒரு புராதன விலங்கு. சிலந்திகளாகிய நாங்கள், எல்லாவற்றையும்விட அதற்குத்தான் அதிகமாக பயப்படுகிறோம். அந்த விலங்கு ஹாக்வார்ட்ஸில் அலைந்து கொண்டிருந்ததை உணர்ந்த நான், என்னைப் போக விட்டுவிடும்படி ஹாக்ரிட்டிடம் கெஞ்சியது எனக்கு நன்றாகவே நினைவிருக்கிறது.”

“அது என்ன?” என்று ஹாரி அவசரமாகக் கேட்டான்.

மேலும் கொடுக்குகளின் சத்தம்; மேலும் கால்கள் நகர்த்தப்படும் சலசலப்பு; அந்தச் சிலந்திகள் அவனை இன்னும் நெருங்கி வந்ததுபோலத் தோன்றியது.

“நாங்கள் அதைப் பற்றிப் பேசுவதில்லை,” என்று அரகாக் கோபமாகக் கூறியது. “நாங்கள் அதன் பெயரைச் சொல்வதில்லை. ஹாக்ரிட் பல முறை என்னிடம் கேட்டபோதும்கூட, நான் அந்த பயங்கரமான விலங்கின் பெயரை ஒருபோதும் அவரிடம் சொன்னதில்லை.”

ஹாரி அது குறித்து அதற்கு மேல் வற்புறுத்த விரும்பவில்லை. அதிலும், நாலாப் பக்கங்களில் இருந்தும் சிலந்திகள் அவனைச் சூழ்ந்து கொண்டிருந்தபோது! அரகாக் அதற்கு மேல் பேச விரும்பவில்லை என்பதுபோலத் தோன்றியது. அது மெதுவாகத் தன்னுடைய வலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. ஆனால் மற்றச் சிலந்திகள் ஹாரியையும் ரானையும் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன.

தனக்கு வெகு அருகே இலைகள் மிதிபட்டச் சத்தம் கேட்டதும், ஹாரி, “அப்படியானால், நாங்கள் கிளம்புகிறோம்,” என்று கூறினான்.

“எங்கே கிளம்பப் போகிறீர்கள்?” என்று அரகாக் கேட்டது.”நான் அப்படி நினைக்கவில்லை”.

“ஆனால் … ஆனால் . . .”

“என்னுடைய குழந்தைகள் என் உத்தரவின் பேரில் ஹாக்ரிட்டிற்குத் தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால் புதிய இறைச்சி அவர்களிடம் தானாகவே வலிய வந்து மாட்டிக் கொள்ளும்போது, என்னால் அவர்களுக்கு அதை மறுக்க முடியாது. ஹாக்ரிட்டின் நண்பனே, இறுதி வணக்கம்!”

அவன் தன் மந்திரக்கோலை எடுக்க முனைந்தான். ஆனால் அதனால் எந்தப் பிரயோஜனமும் இருக்கப் போவதில்லை என்பதை அவன் அறிந்தான். சிலந்திகளின் கூட்டம் மிகமிக அதிகமாக இருந்தது. அவன் எழுந்து நின்று, வீரமாகப் போராடிச் சாவது என்று முடிவு செய்தபோது, நீண்டு ஒலித்த ஒரு பலமான சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து ஒரு வெளிச்சம் அந்தக் குழியை ஒளி வெள்ளத்தில் மூழ்கடித்தது.

ஹாரன் ஒலி இடியென முழங்க, முன் விளக்குகள் ஜகஜோதியாக எரிய, வழியில் இருந்த சிலந்திகளை இடித்துத் தள்ளிக் கொண்டு, ரானின் கார் அந்தச் சரிவில் படுவேகமாக வந்து கொண்டிருந்தது. இடிபட்டச் சிலந்திகள் மல்லாந்து விழுந்தன. எண்ணற்றக் கால்கள் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தன. அந்தக் கார் ஹாரிக்கும் ரானுக்கும் அருகே வந்து கிறீச்சென்ற சத்தத்துடன் நின்றது. அதன் கதவுகள் சடாரென்று திறந்தன.

ஹாரி முன்னிருக்கையில் பாய்ந்தவாறு, “ஃபேங்கைத் தூக்கிக் கொள்!” என்று கத்தினான். ரான் அந்த நாயின் வயிற்றைப் பிடித்துப் பின்னிருக்கையில் தூக்கி எறிந்துவிட்டுத் தானும் காருக்குள் பாய்ந்தான். உடனே காரின் கதவுகள் ஓங்கிச் சாத்திக் கொண்டன. ரான் ஆக்ஸிலரேட்டரைத் தொடக்கூட இல்லை. ஆனால் அக்காருக்கு அவன் தேவைப்படவில்லை. அதன் எஞ்சின் உறுமியது. அவர்கள் வேகமெடுத்தனர். மேலும் பல சிலந்திகள் அடிபட்டு விழுந்தன. அவர்கள் அந்தக் குழியிலிருந்து படுவேகமாக வெளியேறி, காட்டிற்குள் புகுந்தனர். அந்தக் கார், இருப்பதிலேயே அகலமாக இருந்த வழிகள் வழியாக வளைந்து நெளிந்து சென்றபோது மரக் கிளைகள் அதன் சன்னல்களைப் படுவேகத்தில் உரசிச் சென்றன. கார் ஒரு குறிப்பிட்டப் பாதை வழியாகச் சென்றது. அது தான் போக வேண்டிய வழியை அறிந்திருந்தது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

ஹாரி ஓரக்கண்ணால் ரானைப் பார்த்தான். அவனது வாய் மௌனமான அலறலில் உறைந்து போயிருந்ததுபோலக் கோணலாக இருந்தது. ஆனால் அவனது கண்கள் வெளியே வந்து விழுந்து விடுவதுபோலத் துருத்திக் கொண்டிருக்கவில்லை.

“நீ எப்படி இருக்கிறாய்?”

ரான் தனக்கு முன்னால் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனால் பேச முடியவில்லை.

அவர்கள் காட்டின் ஊடாகப் படுவேகமாகப் பயணித்துக் கொண்டிருந்தனர். பின்னிருக்கையில் ஃபேங் சத்தமாகக் குரைத்துக் கொண்டே இருந்தது. ஒரு பெரிய கருவாலி மரத்தை உரசிக் கொண்டு அவர்கள் சென்றபோது, பின்னால் வருவதைப் பார்க்க வைக்கப்பட்டிருந்த கண்ணாடி உடைந்து தொங்கியதை ஹாரி பார்த்தான். சத்தமாகவும் பயங்கரக் குலுக்கலாகவும் இருந்த அடுத்தப் பத்து நிமிடங்களுக்குப் பிறகு, மரங்களின் அடர்த்திக் குறைந்தது. ஹாரியால் மீண்டும் வானத்தைப் பார்க்க முடிந்தது.

கார் திடீரென்று நின்றதில் அவர்கள் இருவரும் முன்னால் தூக்கி எறியப்பட்டனர். அவர்கள் அந்தக் காட்டின் முனையை அடைந்திருந்தனர். ஃபேங் வெளியே போக வேண்டும் என்ற பதற்றத்தில் காரின் சன்னல்மீது மோதியது. ஹாரி காரின் கதவைத் திறந்துவிட்டதும், அது தன் வாலைத் தன் பின்னங்கால்களுக்கு இடையை செருகிக் கொண்டு, மரங்களின் வழியாகப் பாய்ந்தோடி, ஹாக்ரிட்டின் குடிலை அடைந்தது. ஹாரியும் வெளியே வந்தான். ரான் ஒருசில நிமிடங்களுக்குப் பிறகு தன் கை கால்களின் உணர்வு வரப் பெற்றவனாகக் காரிலிருந்து இறங்கினான். இப்போதும் அவன் வெறித்துக் கொண்டுதான் இருந்தான். அவனுக்குக் கழுத்துப் பிடிப்பு ஏற்பட்டிருந்ததுபோல இருந்தது. ஹாரி அந்தக் காரை நன்றியுடன் செல்லமாகத் தட்டிக் கொடுத்தான். அது பின்னோக்கிக் காட்டிற்குள் வேகமாகச் சென்று மறைந்தது.

மறைய வைக்கும் அங்கியை எடுப்பதற்காக, ஹாரி, ஹாக்ரிட்டின் குடிலுக்குள் சென்றான். ஃபேங், தன்னுடைய கூடைக்குள்ளிருந்த ஒரு போர்வைக்குள் போய்ப் பதுங்கிக் கொண்டது. ஹாரி மீண்டும் வெளியே வந்தபோது, ரான், பூசணித் தோட்டத்தில் மிக மோசமாக வாந்தியெடுத்துக் கொண்டிருந்தான்.

ரான் தன்னுடைய வாயைத் தன் சட்டையின் கையோரமாகத் துடைத்துக் கொண்டு, “சிலந்திகளைப் பின்தொடர்ந்து செல்லுங்கள்!” என்று பலவீனமாகச் சொன்னான். “நான் ஹாக்ரிட்டை ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை. நாம் உயிர் தப்பியது அதிசயம்தான்.”

“அரகாக் தன்னுடைய நண்பர்கள்மீது கை வைக்காது என்று ஹாக்ரிட் நம்பியிருப்பார்,” என்று ஹாரி கூறினான்.

ரான் தன் கையை அக்குடிலின் சுவரில் ஓங்கிக் குத்தியவாறு, “அதுதான் .ஹாக்ரிட்டின் பிரச்சனை,” என்று கூறினான். “ராட்சஸ விலங்குகள், அவற்றைப் பற்றி எழுப்பப்பட்டுள்ள கதைகள் அளவுக்கு பயங்கரமானவை அல்ல என்றே ஹாக்ரிட் எப்போதும் சிந்தித்து வந்துள்ளார். அது இப்போது அவரை எங்கு கொண்டுப் போய்ச் சேர்த்துள்ளது என்று பார்த்தாயா? அஸ்கபான் சிறைச்சாலையில்!” ரான் இப்போது கட்டுப்படுத்த முடியாதபடி நடுங்கிக் கொண்டிருந்தான். “ஹாக்ரிட் நம்மை அங்கு எதற்காக அனுப்ப வேண்டும்? அப்படி நாம் என்னதான் கண்டுபிடித்துவிட்டோம்? அதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.”

“ரகசியங்கள் அடங்கிய பாதாள அறையை ஹாக்ரிட் ஒருபோதும் திறக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டுள்ளோம்,” என்று ஹாரி கூறினான். பிறகு, மறைய வைக்கும் அங்கியை அவன் தங்கள் இருவர்மீதும் போர்த்திவிட்டு, முன்னால் நடக்கும்படி ரானின் கையில் இடித்தான். “ஹாக்ரிட் நிரபராதி!”

ரான் சத்தமாகப் பெருமூச்சுவிட்டான். ஓர் அலமாரிக்குள் அரகாக்கை வளர்த்து வந்த செயல் அவனைப் பொறுத்தவரை ஒரு நிரபராதியின் செயல் அல்ல.

அவர்கள் இருவரும் கோட்டையை நெருங்கியதும், தங்களது கால்களை நன்றாக மறைக்கும் வண்ணம், மறைய வைக்கும் அங்கியை ஹாரி நன்றாக இழுத்துவிட்டுக் கொண்டான். அவர்கள் லேசாகத் திறந்திருந்த வாசற்கதவு வழியாக உள்ளே நுழைந்து, வரவேற்பறை வழியாக மிகவும் கவனமாக நடந்து, பளிங்குப் படிக்கட்டு வழியாக மேலே ஏறினர். தாழ்வாரங்களில் எச்சரிக்கையுடன் காவல் வேலையில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு அருகே அவர்கள் சென்றபோது, தங்கள் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டனர். கடைசியில் அவர்கள் ஒருவழியாக கிரிஃபின்டார் பொது அறையை அடைந்தபோது பாதுகாப்பாக உணர்ந்தனர். கணப்படுப்பு அங்கு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. மறைய வைக்கும் அங்கியைக் கழற்றிவிட்டு, சுழல் படிக்கட்டு வழியாகத் தங்களுடைய பொதுப் படுக்கையறையை அவர்கள் அடைந்தனர்.

ரான் தன் உடையைக்கூட மாற்றாமல் அப்படியே படுக்கையில் விழுந்தான். ஆனால் ஹாரிக்குத் தூக்கம் வரவில்லை. அவன் தன்னுடைய கட்டிலில் உட்கார்ந்து கொண்டு, அரகாக் கூறிய ஒவ்வொன்றைக் குறித்தும் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

அந்த ராட்சஸ விலங்கு அக்கோட்டைக்குள் எங்கோ பதுங்கி இருந்தது. அது வோல்டமார்ட்போலத் தோன்றியது. மற்றபிற ராட்சஸ விலங்குகள்கூட அதன் பெயரைச் சொல்லப் பயப்படுகின்றன. அது என்ன என்பது குறித்தும், அது எப்படித் தான் தாக்கியவர்களைக் கல்லாக்கியது என்பது குறித்தும் அவனுக்கும் ரானுக்கும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. ரகசியங்கள் அடங்கிய அறைக்குள் என்ன இருந்தது என்பதை ஹாக்ரிட்டும் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை.

ஹாரி தன்னுடைய கால்களைக் கட்டிலின்மேலே தூக்கி வைத்துக் கொண்டு தலையணையின்மீது சாய்ந்து, சன்னல் வழியாக உள்ளே வந்து கொண்டிருந்த நிலா வெளிச்சம் தன்மீது பட்டதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தங்களால் மேற்கொண்டு என்ன செய்ய முடியும் என்று அவனுக்குத் தெரியவில்லை. அவர்கள் பின்தொடர்ந்து சென்ற பாதை எதுவும் அவர்களுக்கு எதையும் தெளிவுபடுத்தியிருக்கவில்லை. நார்ட்டன் தவறான நபரைப் பிடித்திருந்தான். ஸ்லிதரினின் வாரிசு எப்படியோ தப்பி ஓடியிருந்தான். ரகசியங்கள் அடங்கிய அறையை இம்முறை திறந்தது அதே நபரா அல்லது வேறு நபரா என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை. கேட்பதற்கும் வேறு யாரும் இருக்கவில்லை. அரகாக் கூறியவற்றைப் பற்றி யோசித்துக் கொண்டே ஹாரி படுத்திருந்தான்.

அவனுடைய தூக்கக் கலக்கம் முற்றியபோது, அவர்களது கடைசி நம்பிக்கையாகத் தென்பட்ட ஒன்று அவனுக்குத் தோன்றியது. அவன் சடாரென்று நிமிர்ந்து உட்கார்ந்தான்.

“ரான்!” என்று அவன் இருட்டில் கிசுகிசுத்தான். “ரான்!”

ரான் ஃபேங்போல லேசாகக் குரைத்துக் கொண்டே கண்விழித்து, சுற்றுமுற்றும் திரும்பி, ஹாரியைப் பார்த்தான்.

அறையின் ஒரு மூலையிலிருந்து வந்த நெவிலின் குறட்டைச் சத்தத்தை அலட்சியம் செய்தவாறு, ஹாரி, “ரான் – இறந்து போன அவளது உடல் ஒரு குளியலறையில் அந்தப் பெண்! கண்டுபிடிக்கப்பட்டதாக அரகாக் கூறியதல்லவா?” என்று கேட்டான். “அவள் அந்தக் குளியலறையைவிட்டு ஒருபோதும் வெளியே போகாமலேயே இருந்திருந்தால்? அவள் அந்தக் குளியலறையிலேயே இன்னும் இருந்து கொண்டிருந்தால்?”

ரான் தன் கண்களைத் துடைத்தான். நிலா வெளிச்சத்தில் அவன் தன் நெற்றியைச் சுருக்கினான். பின் அவனுக்குப் புரிந்தது. “அது மர்ட்டிலாக இருக்கும் என்று நீ நினைக்கிறாயா?”

16. பாதாள அறை ரகசியங்கள்

“நாம் எவ்வளவு காலம் அந்தக் குளியலறையிலேயே தவம் கிடந்தோம்! மாட்டில் அங்கு வெறும் மூன்று தடுப்பறைகள் தள்ளி இருந்திருக்கிறது,” என்று ரான் அடுத்த நாள் காலை உணவின்போது ஏக்கத்துடன் கூறினான். “அப்போதே நாம் அதை ஒரு வார்த்தைக் கேட்டிருக்கலாம். இப்போது”

சிலந்திப் பூச்சிகளைக் கண்டுபிடிக்க அலைந்ததே பெரிய பிரச்சனையாக இருந்தது. ஆசிரியர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு மாணவியரின் குளியலறைக்குள் புகுவது என்பது, அதுவும், முதல் தாக்குதல் நடந்த இடத்திற்கு அடுத்து இருந்த மாணவியரின் குளியலறைக்குள் செல்வது என்பது கிட்டத்தட்ட இயலாத காரியம்.

ஆனால் அவர்களுடைய முதல் வகுப்பான உருவமாற்ற வகுப்பில் நிகழ்ந்த ஒன்று, பல வாரங்களில் முதன்முறையாக அவர்களுடைய கவனத்தை, ரகசியங்கள் அடங்கிய பாதாள அறையிலிருந்து வேறு பக்கமாகத் திருப்பியது. வகுப்புத் துவங்கிப் பத்து நிமிடங்கள் ஆகியிருந்தபோது, பேராசிரியர் மெக்கானகல், அவர்களுடைய தேர்வுகள் ஜூன் முதல் தேதியன்று, அதாவது, அன்றிலிருந்து ஒரு வாரத்தில் துவங்கவிருந்ததாக அறிவித்தார்.

“தேர்வுகளா?” என்று சீமஸ் ஊளையிட்டான். “இந்த நிலைமையிலும்கூட நமக்குத் தேர்வுகள் உண்டா என்ன?”

நெவிலின் மந்திரக்கோல் கீழே நழுவி விழுந்தபோது, ஹாரிக்குப் பின்னால் ஒரு பெரிய சத்தம் கிளம்பியது. அவனது மேசையின் ஒரு கால் காணாமல் போனது. பேராசிரியர் மெக்கானகல் தன்னுடைய மந்திரக்கோலை லேசாக ஆட்டியதும் அது மீண்டும் வந்துவிட்டது. அவர் முகம் சுளித்தவாறே சீமஸை நோக்கித் திரும்பினார்.

“இந்த நேரத்தில் பள்ளியைத் திறந்து வைத்திருப்பது ஒரே ஒரு காரணத்திற்காகத்தான். அது உங்களுடைய படிப்பு,” என்று அவர் கண்டிப்பாகக் கூறினார். “அதனால் தேர்வுகள் வழக்கம்போல நடைபெறும். இந்நேரத்திற்குள் நீங்கள் உங்களை நன்றாகத் தயார்படுத்திக் கொண்டிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.”

நன்றாகத் தயார்படுத்திக் கொள்வதா? கோட்டை இருந்த நிலைமையில் தேர்வுகள் நடைபெறக்கூடும் என்று ஹாரிக்கு ஒருபோதும் தோன்றியிருக்கவில்லை. கீழ்ப்படிய மறுக்கும் விதத்தில் ஏகப்பட்ட முணுமுணுப்புகள் அந்த அறையை நிறைத்தன. அதனால் பேராசிரியர் மெக்கானகல் மேலும் நெருப்பை உமிழ்ந்தார்.

“பள்ளியை முடிந்த அளவு இயல்பாக நடத்த வேண்டும் என்பது பேராசிரியர் டம்பிள்டோரின் உத்தரவு,” என்று அவர் கூறினார். “நீங்கள் இந்த வருடம் எவ்வளவு தூரம் கற்றுக் கொண்டுள்ளீர்கள் என்பதைக் கண்டுபிடிப்பதும் அதில் அடங்கும் என்பதை நான் தனியாகக் குறிப்பிட வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.”

ஒரு ஜோடிக் காலணிகளாக மாற்றப்படுவதற்காகத் தனது மேசையின்மீது நின்று கொண்டிருந்த இரண்டு முயல்களை ஹாரி பார்த்தான். இந்த வருடம் அவன் இதுவரை என்ன கற்றுக் கொண்டிருந்தான்? தேர்வுக்கு உபயோகமான எதையும் தான் கற்றுக் கொண்டிருந்ததாக அவனுக்குத் தோன்றவில்லை.

ரானின் முகம், இப்போதே இங்கிருந்து புறப்பட்டுச் சென்று, தடை செய்யப்பட்டுள்ள காட்டில் அவன் வசிக்க வேண்டும் என்று யாரோ அவனிடம் கூறியிருந்ததுபோல வாடிப் போயிருந்தது.

ரான் ஹாரியிடம் தன்னுடைய மந்திரக்கோலைத் தூக்கிக் காண்பித்துக் கொண்டே, “இதை வைத்துக் கொண்டு நான் தேர்வு எழுத வேண்டும் என்பதை உன்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?” என்று கேட்டான். அப்போது அவனது மந்திரக்கோல் சத்தமாக விசிலடித்தது.


தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக, அவர்கள் காலை உணவருந்திக் கொண்டிருந்தபோது பேராசிரியர் மெக்கானகல் மற்றுமோர் அறிவிப்பை வெளியிட்டார்.

“உங்களுக்கு ஒரு நல்ல செய்தி!” என்று அவர் துவக்கியதும், அப்பேரரங்கு மௌனமாவதற்குப் பதிலாக, சலசலப்பால் நிரம்பி வழிந்தது.

“டம்பிள்டோர் இங்கு திரும்புகிறார்!” ஏராளமான பேர் சந்தோஷக் கூக்குரல் எழுப்பினர்.

“ஸ்லிதரினின் வாரிசைப் பிடித்துவிட்டீர்களா?” என்று ஒரு மாணவி ரேவன்கிளா உணவு மேசையில் இருந்து கீச்சிட்டாள். ‘குவிடிச் போட்டிகள் மீண்டும் துவங்கும்!” என்று உட் பரவசமாகக் கத்தினான்.

சலசலப்பு அடங்கியதும், பேராசிரியர் மெக்கானகல் தொடர்ந்தார். “மன்ட்ரேக்குகள் வெட்டப்படுவதற்குத் தயாராக இருப்பதாகப் பேராசிரியர் ஸ்புரவுட் என்னிடம் கூறினார். கல்லாக்கப்பட்டுள்ளவர்களை இன்றிரவு நம்மால் மீட்டுவிட முடியும். அவர்களில் ஒருவர், தங்களைத் தாக்கியது எது அல்லது யார் என்பதை நமக்குத் தெரிவிக்கக்கூடும் என்பதை நான் உங்களுக்கு நினைவுபடுத்தத் தேவையில்லை. நம்முடைய இந்தப் படுபயங்கரமான வருடம் குற்றவாளியைப் பிடிப்பதுடன் நிறைவு பெறும் என்று நம்புகிறேன்”

அங்கு கரகோஷம் விண்ணைப் பிளந்தது ஹாரி ஸ்ஸ்தரின் அணியினரின் பெஞ்சைப் பார்த்தான். அங்கு மால்ஃபாய் அந்த அறையின் சந்தோஷக் கூச்சலில் பங்கேற்றிருக்கவில்லை என்பது ஹாரியை ஆச்சரியப்படுத்தவில்லை. ஆனால் ரான் பல நாட்களுக்குப் பின் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான்.

“நாம் மர்ட்டிலிடம் கேட்காமல் விட்டது இப்போது ஒரு பெரிய பிரச்சனை அல்ல,” என்று அவன் ஹாரியிடம் கூறினான் ‘இன்றிரவு அவர்கள் ஹெர்மயனியை எழுப்பும்போது அவளிடம் எல்லா விடைகளும் இருக்கலாம். இன்னும் மூன்று நாட்களில் தேர்வு என்று கேள்விப்பட்டவுடன் அவள் வானத்திற்கும் பூமிக்குமாகக் குதிக்கப் போகிறாள். ஏற்கனவே நடத்தப்பட்டிருக்கும் பாடங்களைக்கூட அவன் மீண்டும் படித்திருக்கவில்லை. தேர்வு முடியும்வரை அவளை இப்போது இருக்கும் நிலையில் அப்படியே விட்டு வைத்திருப்பது அவளுக்குச் செய்யும் உபகாரமாக இருக்கும்!”

அப்போது ஜின்னி அங்கு வந்து ரானின் பக்கத்தில் உட்கார்ந்தாள். அவள் இறுக்கமாகவும் பதற்றமாகவும் இருந்தாள். அவள் தனது மடியில் வைத்திருந்த தனது கைகளைப் பிசைந்து கொண்டிருந்ததை ஹாரி கவனித்தான்.

ரான் தனக்கு மேலும் கொஞ்சம் கஞ்சியை ஊற்றிக் கொண்டவாறு, “என்ன ஆயிற்று” என்று கேட்டான்

ஜின்னி பதிலேதும் சொல்லவில்லை. ஆனால் கிரிஃபின்டார் அணியினர் உட்கார்ந்திருந்த உணவு மேசையை அவள் மேலும் கீழும் பார்த்தாள். அவளது முகத்தில் உறைந்திருந்த பயம் ஹாரிக்கு யாரையோ ஞாபகப்படுத்தியது. ஆனால் அது யாரென்று அவனுக்குச் சட்டென்று நினைவுக்கு வரவில்லை.

ரான் அவளையே கவனித்துக் கொண்டு, “உன் மனத்தில் உள்ளதைச் சொல்லிவிடு!” என்று கூறினான்.

ஜின்னி யாரைத் தனக்கு நினைவுபடுத்தினாள் என்பதை ஹாரி திடீரென்று உணர்ந்தான். அவள் தான் உட்கார்ந்திருந்த நாற்காலியில் முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருந்தாள். தடை செய்யப்பட்டத் தகவல்களை வெளிப்படுத்துவதற்கு முன்பாக டாபி எவ்வாறு தள்ளாடிக் கொண்டிருந்ததோ, நாற்காலியில் ஜின்னி முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருந்ததும் அச்சசலாக அதேபோல இருந்தது. “நான் உன்னிடம் ஒரு விஷயத்தைக் கூறியாக வேண்டும்” என்று ஜின்னி முணுமுணுத்தாள். அவள் ஹாரியைப் பார்ப்பதைக் கவனமாகத் தவிர்த்தாள்.

“என்ன விஷயம்?” என்று ஹாரி கேட்டான்.

தனக்குச் சரியான வார்த்தைகள் கிடைக்காததுபோல அவள் தவித்தாள்.

“என்ன?” என்று ரான் கேட்டான்.

ஜின்னி தன் வாயைத் திறந்தாள், ஆனால் அவளது வாயிலிருந்து எந்த வார்த்தையும் வரவில்லை. ஹாரி முன்னால் குனிந்து, ரானுக்கும் ஜின்னிக்கும் மட்டும் கேட்கும் விதத்தில் மிகவும் மெதுவாகப் பேசினான்.

“இது ரகசியங்கள் அடங்கிய பாதாள அறையைப் பற்றியதா? நீ எதையாவது பார்த்தாயா? யாராவது வினோதமாக நடந்து கொள்கிறார்களா?”

ஜின்னி ஆழமாக சுவாசித்தாள். சரியாக அக்கணத்தில் பெர்சி அங்கு வந்து சேர்ந்தான். அவன் சோர்வாகவும் கவலையாகவும் தோற்றமளித்தான்.

“ஜின்னி, நீ சாப்பிட்டு முடித்துவிட்டிருந்தால், கொஞ்சம் எழுந்திரு. எனக்கு அகோரப் பசி. இரவு நேர ரோந்துப் பணியிலிருந்து நான் நேராக இங்குதான் வருகிறேன்,” என்று பெர்சி கூறினான்.

ஜின்னி தான் உட்கார்ந்திருந்த நாற்காலியில் திடீரென்று மின்சாரம் பாய்ச்சப்பட்டதைப்போலப் பதறி எழுந்தாள். அவள் ஒரு கணம் பெர்சியை பயத்துடன் பார்த்துவிட்டு அங்கிருந்து ஓட்டமெடுத்தாள்.

“பெர்சி!” என்று ரான் கோபமாக இரைந்தான். “அவள் எங்களிடம் ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிக் கூற இருந்தாள்.”

தேநீரைக் குடித்துக் கொண்டிருந்த பெர்சிக்குப் பொறை ஏறியது.

“எதைப் பற்றி?” என்று அவன் இருமியபடியே கேட்டான்.

“அவள் வித்தியாசமாக எதையாவது பார்த்தாளா என்று நான் அவளிடம் கேட்டேன். அதற்கு அவள் பதிலளிக்க முன்வந்தபோது -“

“ஓ – அது – அது ஒன்றும் ரகசியங்கள் அடங்கிய பாதாள அறையைப் பற்றியது அல்ல,” என்று பெர்சி உடனடியாகக் கூறினான்.

ரான் தன் புருவங்களை உயர்த்தியவாறு, “உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான்.

“நீங்கள் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள விரும்பினால், அதைச் சொல்வதில் எனக்கு ஆட்சேபனை இல்லை – அன்றொரு நாள் ஜின்னி என்னிடம் வந்து – சரி, அதை விட்டுத்தள்ளு – இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், நான் ஏதோ ஒன்றைச் செய்து கொண்டிருந்ததை அவள் பார்த்துவிட்டாள் – ம்ம் – நான் – அவள் பார்த்த விஷயத்தை வேறு யாரிடமும் கூற வேண்டாம் என்று நான் அவளிடம் கேட்டுக் கொண்டேன். அவள் தன் வாக்கைக் காப்பாற்றுவாள் என்று நான் நினைத்திருந்தேன். அது ஒன்றும் முக்கியமானதல்ல – அது வந்து –”

பெர்சி இவ்வளவு அசௌகரியமாக உணர்ந்து ஹாரி பார்த்திருக்கவில்லை.

ரான் பெரிதாகப் புன்னகைத்துக் கொண்டே, “பெர்சி, நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?” என்று கேட்டான். “நாங்கள் சிரிக்க மாட்டோம்.”

ஆனால் பெர்சி பதிலுக்குப் புன்னகைக்கவில்லை.

“ஹாரி, அந்த ரொட்டியை இங்கே தள்ளு. எனக்கு பயங்கரப் பசி”


மொத்த மர்மமும் அவர்களுடைய உதவியில்லாமல் அடுத்த நாள் வெளிப்பட்டுவிடும் என்பதை ஹாரி அறிந்திருந்தாலும், மர்ட்டிலுடன் பேச ஒரு வாய்ப்புக் கிடைத்தால் அதைத் தவறவிடக்கூடாது என்று நினைத்துக் கொண்டான். அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு, நண்பகலுக்குச் சற்று முன்பு, மந்திரஜாலத்தின் வரலாறு வகுப்பிற்காக லாக்ஹார்ட் அவர்களை அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது அவனுக்குக் கிடைத்தது.

லாக்ஹார்ட் கூறியிருந்தவை அனைத்தும் தவறு என்பதை நிரூபிப்பதுபோல நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்த போதிலும், எல்லா ஆபத்துக்களும் கரைந்து போய்விட்டதாக அவர் அவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தார். மாணவர்களைத் தாழ்வாரங்களில் மேய்த்துக் கொண்டு திரிவது ஒரு வெட்டி வேலை என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அன்று அவரது தலைமுடி வழக்கத்திற்கு மாறாகச் சீரற்றும் நேர்த்தியற்றும் இருந்தது. அவர் முழு ரோந்து இரவும் மாடியில் சுற்றிக் நான்காவது கொண்டிருந்தவர்போலக் காணப்பட்டார்.

அவர்களை ஒரு திருப்பம் வரை அழைந்து வந்த அவர், “நான் சொல்வதைக் கவனமாகக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்,” என்று துவக்கினார். “கல்லாக்கப்பட்டவர்கள் விழித்து எழுந்ததும், அவர்களின் வாய்களிலிருந்து வரவிருக்கும் முதல் வாக்கியம், ‘இதைச் செய்தது ஹாக்ரிட்’ என்பதாகத்தான் இருக்கும். இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் தேவை என்று பேராசிரியர் மெக்கானகல் நினைக்கிறார் என்பது என்னை மிகவும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்குகிறது.”

“சார், நீங்கள் சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன்,” என்று ஹாரி கூறினான். ஆச்சரியத்தில் ரான் தன்னுடைய புத்தகங்களைக் கீழே தவறவிட்டான்.

ஒரு நீண்ட வரிசையில் சென்று கொண்டிருந்த ஹஃபில்பஃப் அணியினர் கடந்து செல்வதற்காக அவர்கள் காத்துக் கொண்டிருந்தபோது, “நன்றி, ஹாரி,” என்று லாக்ஹார்ட் கனிவுடன் கூறினார். “ஆசிரியர்களாகிய எங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. இரவில் ரோந்து சுற்றுவதும் மாணவர்களை மேய்த்துக் கொண்டிருப்பதும் -”

“நீங்கள் சொல்வது சரிதான் சார்!” என்று ரானும் ஒத்து ஊதினான். “நீங்கள் ஏன் எங்களை இங்கேயை விட்டுவிடக்கூடாது? இன்னும் ஒரே ஒரு தாழ்வாரம்தான் இருக்கிறது.”

“ரான், நீ கூறுவது சரிதான்,” என்று லாக்ஹார்ட் கூறினார். “என்னுடைய அடுத்த வகுப்பிற்கு நான் தயார் செய்ய வேண்டும். நான் போகிறேன்.”

உடனே அவர் அங்கிருந்து வேகமாக மறைந்தார்.

“அடுத்த வகுப்பிற்குத் தயார் செய்ய வேண்டுமாம்!” என்று ரான் அவரை எள்ளி நகையாடினான். “அவர் தன் தலைமுடியைச் சுருட்டிவிடத்தான் போயிருப்பார்.”

மற்ற மாணவர்கள் தங்களை முந்திச் செல்ல அவர்கள் அனுமதித்தனர். பிறகு, பக்கத்திலிருந்த ஒரு பாதை வழியாக முனகல் மாட்டிலின் குளியலறையை நோக்கி அவர்கள் ஓடினர். அவர்கள் தங்களுடைய சாமர்த்தியமான திட்டம் குறித்து ஒருவரையொருவர் பாராட்டிக் கொண்டிருந்தபோது

“ஹாரி! ரான்! நீங்கள் இருவரும் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?”

அது பேராசிரியர் மெக்கானகல். அவரது உதடுகள் இறுகிப் போயிருந்தன.

“நாங்கள் – நாங்கள்,” என்று ரான் தடுமாறினான். “நாங்கள் போய் நாங்கள் போய்…”

“ஹெர்மயனி!” என்று ஹாரி கூறினான். ரானும் பேராசிரியர் மெக்கானகல்லும் ஒருசேர அவனை ஏறிட்டுப் பார்த்தனர்.

ஹாரி ரானின் காலில் மிதித்தவாறு, “பேராசிரியரே, நாங்கள் அவளைப் பார்த்து மாமாங்கம் ஆகியிருக்கும்,” என்று அவசரமாகக் கூறினான். “அதனால் நாங்கள் ரகசியமாக நழுவி, மருத்துவமனைக்குச் சென்று, மன்ட்ரேக்குகள் கிட்டத்தட்டத் தயாராகிவிட்டதால் அவள் இனி கவலைப்பட வேண்டாம் என்று அவளிடம் கூறி வரலாம் என்று நினைத்திருந்தோம்.”

பேராசிரியர் மெக்கானகல் அப்போதும் அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் தங்கள் மேல் பாயப் போவதாக ஹாரி ஒரு கணம் நினைத்தான். ஆனால் அவர் பேசியபோது, அவரது குரல் வினோதமாகக் கரகரப்பாக இருந்தது.

“எனக்குப் புரிகிறது,” என்று அவர் கூறினார். அவரது சிறிய உருண்டையான கண்களில் ஒரு துளிக் கண்ணீர் துளிர்த்திருந்ததைக் கண்டு ஹாரி அசந்து போனான். “எனக்குப் புரிகிறது. இது நெருங்கிய நண்பர்களை எவ்வளவு தூரம் பாதித்திருக்கும் என்பது எனக்கு நன்றாகவே புரிகிறது. சரி, நீங்கள் இருவரும் போய் ஹெர்மயனியைப் பார்த்து வாருங்கள். நீங்கள் எங்கே போயிருக்கிறீர்கள் என்று பேராசிரியர் பின்ஸிடம் நான் சொல்லிவிடுகிறேன். ஹெர்மயனியைச் சந்திக்க உங்களுக்கு நான் அனுமதி கொடுத்துள்ளதாக மேடம் பாம்ஃபிரேயிடம் கூறுங்கள்.”

தங்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதிலிருந்து தாங்கள் எப்படித் தப்பித்தோம் என்று வியந்து கொண்டே ஹாரியும் ரானும் அங்கிருந்து அகன்றனர். அவர்கள் ஒரு மூலையில் திரும்பியதும், பேராசிரியர் மெக்கானகல் தன்னுடைய மூக்கைச் சிந்தும் சத்தம் தெள்ளத் தெளிவாக அவர்களுக்குக் கேட்டது.

“ஹாரி,” என்று ரான் அழைத்தான். “நீ இதுவரை எடுத்துவிட்டக் கதைகளிலேயே இதை மிஞ்ச ஒரு கதை கிடையாது.”

இப்போது அவர்களுக்கு மருத்துவமனைக்குப் போவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. அங்கு போய், ஹெர்மயனியைப் பார்ப்பதற்குப் பேராசிரியர் மெக்கானகல் தங்களுக்கு அனுமதி அளித்திருந்ததாக மேடம் பாம்ஃபிரேயிடம் அவர்கள் கூறியாக வேண்டியிருந்தது.

மேடம் பாம்ஃபிரே அவர்களை உள்ளே அனுமதித்தாலும் அதைத் தயக்கத்துடனேயே செய்தார்.

“கல்லாக்கப்பட்டுள்ளவர்களிடம் பேசுவது வெட்டி வேலை,” என்று அவர் கூறினார். ஹெர்மயனியின் பக்கத்தில் இருந்த இருக்கைகளில் அவர்கள் இருவரும் அமர்ந்தபோது, மேடம் பாம்ஃபிரே கூறியது சரிதான் என்பதை அவர்களும் ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது. தன்னைப் பார்க்கப் பார்வையாளர்கள் வந்திருந்தனர் என்ற உணர்வு ஹெர்மயனிக்குத் துளிகூட இருக்கவில்லை. கவலைப்பட வேண்டாம் என்று ஹெர்மயனியிடம் கூறுவதும் அவளுக்குப் பக்கத்தில் இருந்த அலமாரியிடம் கூறுவதும் ஒன்றுதான் என்பதுபோல நிலைமை இருந்தது.

ரான், பாறைபோல இறுகிப் போயிருந்த ஹெர்மயனியின் முகத்தைப் பார்த்தவாறு, “அவள் தன்னைத் தாக்கியது யார் என்பதைப் பார்த்திருப்பாளா என்று நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்,” என்று கூறினான். “தாக்கியவன் இவர்கள் அனைவரையும் பதுங்கியிருந்து ரகசியமாகத் தாக்கியிருந்தால், யாருக்கும் எதுவும் தெரிந்திருக்காது . .

ஆனால் ஹாரி, ஹெர்மயனியின் முகத்தைப் பார்க்கவில்லை. உறைந்து போயிருந்த அவளது வலது கையையே அவன் பார்த்துக் கொண்டிருந்தான். முஷ்டி மடங்கிய நிலையில் அந்தக் கை அவளது போர்வையின்மீது கிடந்தது. அவன் அதனருகே குனிந்து பார்த்தபோது, அவளது மூடிய கைக்குள் கசங்கிய நிலையில் ஒரு துண்டுக் காகிதம் இருந்ததைக் கண்டான்.

பக்கத்தில் மேடம் பாம்ஃபிரே இல்லையென்பதை உறுதி செய்து கொண்ட ஹாரி, அந்தத் துண்டுக் காகிதத்தை ரானுக்குச் சுட்டிக்காட்டினான்.

“அதை வெளியே எடுக்க முயன்று பார்,” என்று ரான் கிசுகிசுத்தான். மேடம் பாம்ஃபிரேயின் பார்வையை மறைக்கும் விதமாக, அவன் தன்னுடைய நாற்காலியைச் சிறிது நகர்த்திக் கொண்டான்.

அக்காகிதத்தை ஹெர்மயனி தன் கையில் இறுக்கமாகப் பிடித்திருந்ததால், அதை அவளது கையிலிருந்து விடுவிப்பது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்கவில்லை. அதை விடுவிக்கும் முயற்சியில் தான் அதைக் கிழித்துவிடுவோமோ என்று ஹாரி பயந்தான். ரான் கண்காணிப்பு வேலையைச் செய்து கொண்டிருந்தபோது, ஹாரி அக்காகிதத்தை வளைத்துத் திருகினான், இழுத்துப் பார்த்தான். இறுதியில், சில பதற்றமான நிமிடங்களுக்குப் பிறகு அக்காகிதம் அவளது கையிலிருந்து விடுபட்டது.

அது ஒரு பழைய நூலகப் புத்தகத்திலிருந்து கிழிக்கப்பட்டிருந்த ஒரு காகிதம், ஹாரி அதன் சுருக்கங்களை ஆர்வத்துடன் நீவிவிட்டான். ரானும் அவனருகே சாய்ந்து அதைப் படிக்கத் துவங்கினான்.

நம்முடைய நாட்டில் அலைந்து திரியும் பயங்கரமான ராட்சஸ விலங்குகளிலேயே, பேசிலிஸ்க்கைவிட அதிக ஆவலைத் தூண்டுகின்ற, நிச்சயம் மரணத்தை விளைவிக்கின்ற ஒன்றைக் காண முடியாது. அது ராஜ ஸர்ப்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் பாம்பு அசுரத்தனமான வளர்ச்சியை அடைய வல்லது. அதோடு பல நூறு ஆண்டுகள் உயிர்வாழக்கூடியது. இது தவளையால் அடைகாக்கப்படுகின்ற கோழி முட்டையிலிருந்து பிறப்பெடுக்கும். இதன் சாகடிக்கும் முறைகள் அற்புதமானவை. பயங்கர நஞ்சுள்ள விஷப்பற்களைத் தவிர அதனிடம் வேறோர் ஆயுதமும் உள்ளது. சுட்டெரிக்கும் பார்வையும் இந்த ராஜ ஸர்ப்பத்திற்கு உண்டு. அதன் பார்வையின் ஒளிக் கற்றையின் பாதையில் இருக்கும் எவரொருவருக்கும் உடனடி மரணம்தான். சிலந்திகள் இதைக் கண்டால் ஓட்டமெடுக்கும். ஏனெனில் இவை சிலந்திகளின் பரம எதிரி. இந்த ராஜ ஸர்ப்பம் சேவற்கோழியின் கூவலைக் கேட்டால் மட்டுமே ஓடி ஒளிந்து கொள்ளும். ஏனெனில் அச்சத்தம் இந்த ராஜ ஸர்ப்பத்தைக் கொன்றுவிடும்.

அதற்குக் கீழே ஒரே ஒரு வார்த்தை எழுதப்பட்டிருந்தது. அது ஹெர்மயனியின் கையெழுத்து என்பதை ஹாரி கண்டுகொண்டான். குழாய்கள்.

யாரோ தனது மூளைக்குள் விளக்கு ஒன்றை எரிய வைத்ததுபோல ஹாரி உணர்ந்தான்.

“ரான்,” என்று அவன் அழைத்தான். “இதுதான். இதுதான் விடை. பாதாள அறையில் இருக்கும் ராட்சஸ விலங்கு ராஜ ஸர்ப்பம்தான். அது ஒரு பாம்பு. அதனால்தான் நான் அதன் குரலை எல்லா இடங்களிலும் கேட்கிறேன். அதனால்தான் அக்குரலை வேறு யாராலும் கேட்க முடியவில்லை. இதற்குக் காரணம், எனக்கு ஸர்ப்ப பாஷை தெரியும் . . .”

ஹாரி தன்னைச் சுற்றி இருந்த படுக்கைகளைப் பார்த்தான்.

“ராஜ ஸர்ப்பம் தன் பார்வையால் மக்களைக் கொல்கிறது. இங்குள்ள எவரும் இறந்து போகாததற்குக் காரணம் இவர்கள் யாருமே அதை நேரடியாகப் பார்க்கவில்லை என்பதுதான். காலின் அதைத் தன் கேமரா வழியாகப் பார்த்திருக்கிறான். ராஜ ஸர்ப்பம் அந்தக் கேமராவின் உள்ளே இருந்த ஃபிலிமைப் பொசுக்கிவிட்டது, ஆனால் காலின் கல்லாக்கப்பட்டுவிட்டான். ஜஸ்டின்… ஜஸ்டின் அதை நிக்கின் ஊடாகப் பார்த்திருக்க வேண்டும். நிக் அப்பாம்பின் பார்வையின் முழு வீச்சையும் எதிர்கொண்டிருக்கிறது. ஆனால் ஹெர்மயனியும் அந்த நிக்கால் மீண்டும் இறக்க இயலாது… ரேவன்கிளா மாணவ அணித் தலைவியும் ஒரு கண்ணாடியின் அருகே கண்டுபிடிக்கப்பட்டனர். அந்த ராட்சஸ விலங்கு ஒரு ராஜ ஸர்ப்பம் என்பதை ஹெர்மயனி அப்போதுதான் உணர்ந்திருந்தாள். அதனால் அவள் தான் சந்தித்த முதல் நபரிடம், அதாவது, அந்த ரேவன்கிளா மாணவ அணித் தலைவியிடம், எந்தவொரு மூலையிலும் திரும்பும் முன்பாக அந்த மூலையை முதலில் ஒரு கண்ணாடியின் ஊடாகப் பார்த்தப் பிறகே திரும்ப வேண்டும் என்று எச்சரித்தாள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே, அந்த ரேவன்கிளா மாணவி தன்னுடைய கண்ணாடியை வெளியே எடுத்திருக்க வேண்டும் அப்புறம் -“

ரானின் தாடை கீழிறங்கியது.

“நாரிஸ் பூனை?” என்று அவன் ஆர்வமாகக் கிசுகிசுத்தான்.

ஹாரி தீவிரமாக யோசித்தான். அந்த ஹாலோவீன் தினத்தை அவன் தன் கண் முன்னால் கொண்டுவர முயன்றான்.

“தண்ணீர் என்று மெதுவாகக் கூறினான். “முனகல் மர்ட்டிலின் குளியலறையிலிருந்து வெள்ளமாய் வந்த தண்ணீர். நாரிஸ் பூனை அப்பாம்பின் பிரதிபலிப்பை மட்டுமே பார்த்திருக்கும் என்று நான் உன்னிடம் பந்தயம் கட்டத் தயார் . . .”

அவன் தன் கையிலிருந்த காகிதத்தை மீண்டும் நோட்டம் விட்டான். அவன் அதை அதிகமாகப் பார்க்கப் பார்க்க, அது அவனுக்கு அதிக அர்த்தம் வாய்ந்ததாக ஆனது.

“இந்த ராஜ ஸர்ப்பம் சேவற்கோழியின் கூவலைக் கேட்டால் ஓடி ஒளிந்து கொள்ளும். ஏனெனில் அச்சத்தம் இந்த ராஜ ஸர்ப்பத்தைக் கொன்றுவிடும்!” அவன் அதைச் சத்தமாகப் படித்தான். ஹாக்ரிட்டின் சேவல்கள் கொல்லப்பட்டன! பாதாள அறை திறக்கப்பட்டவுடன், ஸ்லிதரினின் வாரிசு, இச்சேவல்களில் ஒன்று கோட்டைக்கு அருகே எங்கேனும் இருப்பதை விரும்பவில்லை! சிலந்திகள் இதைக் கண்டால் ஓட்டமெடுக்கும்! இவை எல்லாமே கச்சிதமாகப் பொருந்துகின்றன!”

“ஆனால் ராஜ ஸர்ப்பம் எப்படி இந்த இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது?” என்று ரான் கேட்டான். “ஒரு பயங்கர ராட்சஸப் பாம்பு யாராவது கண்டிப்பாகப் பார்த்திருப்பார்கள் …”

ஆனால் ஹாரி, அந்தப் பக்கத்தின் அடியில் ஹெர்மயனி எழுதியிருந்த வார்த்தையைச் சுட்டிக்காட்டினான்.

“குழாய்கள்,” என்று கூறினான். “குழாய்கள், ரான். அது இங்குள்ள குழாய்களை உபயோகித்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் நான் சுவர்களுக்கு உள்ளே இருந்தும் அதன் குரலைக் கேட்கிறேன்..”

ரான் திடீரென்று ஹாரியின் கைகளைப் பற்றினான்.

“ரகசியங்கள் அடங்கிய பாதாள அறைக்கான நுழைவு வழி,” என்று ரான் கரகரப்பான் குரலில் கேட்டான். “அது ஒரு குளியலறையாக இருந்தால்? அது -“

“முனகல் மர்ட்டிலின் குளியலறை!” என்று ஹாரி கூறினான்.

அங்கு உட்கார்ந்திருந்த அவர்களிடம் உற்சாகமும் பரவசமும் பரவிக் கொண்டிருந்தன. அவர்களால் இதை நம்பவே முடியவில்லை.

“அப்படியானால்,” என்று ஹாரி துவக்கினான். “பள்ளியில் ஸர்ப்ப பாஷை தெரிந்தவன் நான் ஒருவன் மட்டும் அல்ல. ஸ்லிதரினின் வாரிசும் ஸர்ப்ப பாஷை தெரிந்த ஒருவனாகத்தான் இருக்க வேண்டும். அப்படித்தான் அவர்கள் அந்த ராஜ ஸர்ப்பத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.”

ரான் தன் கண்கள் பிரகாசிக்க, “இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்?” என்று கேட்டான். “நாம் நேரடியாகப் பேராசிரியர் மெக்கானகல்லிடம் போகலாமா?”

ஹாரி துள்ளி எழுந்தவாறு, “நாம் ஆசிரியர்களின் அறைக்குச் செல்லலாம்,” என்று கூறினான். “அவர் இன்னும் ஒரு பத்து நிமிடங்களில் அங்கு இருப்பார். அடுத்தது இடைவேளை நேரம்.”

அவர்கள் கீழே ஓடினர். ஏதாவது ஒரு தாழ்வாரத்தில் தாங்கள் அலைந்து கொண்டிருப்பதை யாராவது பார்த்து, அதனால் தாங்கள் வம்பில் மாட்டிக் கொள்வதைத் தவிர்ப்பதற்காக, அவர்கள் நேரடியாக, ஆளரவமற்று இருந்த ஆசிரியர்களின் அறைக்குச் சென்றனர். அது ஒரு பெரிய அறை. அங்கு ஏராளமான மர நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஹாரிக்கும் ரானுக்கும் இருந்த உற்சாகத்தில் அவர்களால் அங்கு உட்கார முடியவில்லை. அவர்கள் அந்த அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தனர்.

ஆனால் இடைவேளையை அறிவிக்கும் மணி ஒலிக்கவேயில்லை.

அதற்கு பதிலாக, பேராசிரியர் மெக்கானகல்லின் குரல் மந்திரஜாலத்தால் பெரிதுபடுத்தப்பட்டு அந்தத் தாழ்வாரத்தில் எதிரொலித்தது.

“எல்லா மாணவர்களும் உடனடியாகத் தங்களுடைய பொது அறைகளுக்குச் செல்லுமாறு உத்தரவிடப்படுகிறார்கள். எல்லா ஆசிரியர்களும் உடனடியாக ஆசிரியர்களின் பொது அறைக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”

ஹாரி ரானை நோக்கித் திரும்பினான்.

“இன்னொரு தாக்குதலா? அதுவும் இப்போது பார்த்தா?”

திகைத்துப் போன ரான், “நாம் இப்போது என்ன செய்வது?” என்று கேட்டான். “நம்முடைய பொது அறைக்குப் யோய்விடலாமா?”

ஹாரி சுற்றுமுற்றும் பார்த்தவாறு, “வேண்டாம்,” என்று கூறினான். சற்று அழுக்காக இருந்த ஓர் அலமாரி அவனுடைய இடது பக்கத்தில் இருந்தது. அதில் ஆசிரியர்களின் அங்கிகள் வைக்கப்பட்டிருந்தன.

“நாம் இதற்குள் ஒளிந்து கொள்ளலாம். ஆசிரியர்களின் இந்தச் சந்திப்புக்கூட்டம் எதைப் பற்றியது என்பதை முதலில் நாம் கேட்கலாம். பிறகு நாம் கண்டுபிடித்துள்ளவற்றைப் பற்றி அவர்களிடம் கூறலாம்.”

மேற்தளத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் நடந்து சென்ற சத்தம் ஹாரியும் ரானும் அந்த அலமாரிக்குள் புகுந்து கொண்டனர். அவர்களின் காதுகளைத் துளைத்துக் கொண்டிருந்தது. ஆசிரியர்களின் அறைக் கதவு விரியத் திறந்தது. அவ்வறைக்குள் ஆசிரியர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்ததை அவர்கள் அந்த அலமாரியினுள் இருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் சிலரின் முகத்தில் வியப்புக் குறி குடி கொண்டிருந்தது. மற்றவர்கள் மிகவும் பயந்து போய் இருந்தனர். பின் பேராசிரியர் மெக்கானகல் வந்து சேர்ந்தார்.

பேராசிரியர் மெக்கானகல், அமைதியாக இருந்த அந்த ஆசிரியர்களிடம், “அது நடந்துவிட்டது,” என்று கூறினார். “அந்த ராட்சஸ விலங்கு ஒரு மாணவியைப் பாதாள அறைக்கே எடுத்துச் சென்றுவிட்டது.”

பேராசிரியர் ஃபிளிட்விக் கீச்சென்று சத்தமாகக் கத்தினார். பேராசிரியர் ஸ்புரவுட். தன் கைகளைக் கொண்டு தன் வாயைப் பொத்திக் கொண்டார். ஸ்னேப் ஒரு நாற்காலியின் பின்புறத்தை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, “நீங்கள் எப்படி இவ்வளவு உறுதியாகக் கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்.

“ஸ்லிதரினின் வாரிசு இன்னொரு தகவலை வெளியிட்டிருக்கிறான்,” என்று பேராசிரியர் மெக்கானகல் கூறினார். அவரது முகம் வெளுத்துப் போயிருந்தது. “முதல் தகவலுக்குக் கீழேயே அது எழுதப்பட்டுள்ளது. அவளுடைய எலும்புக்கூடு என்றென்றும் பாதாள அறையிலேயே இருக்கும்.”

பேராசிரியர் ஃபிளிட்விக்கின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வடிந்தது.

தனது கால்கள் குழலாட ஒரு நாற்காலியில் புதைந்து கொண்ட மேடம் ஹூச், “அது யார்?” என்று கேட்டார். “எந்த மாணவி?” “ஜின்னி!” என்று பேராசிரியர் மெக்கானகல் கூறினார்.

ரான் மௌனமாக அந்த அலமாரியின் அடிப்பாகத்தில் சரிந்ததை ஹாரி உணர்ந்தான்.

“நாம் நாளை எல்லா மாணவர்களையும் வீட்டிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும்,” என்று பேராசிரியர் மெக்கானகல் கூறினார். “இதோடு ஹாக்வார்ட்ஸ் இழுத்து மூடப்பட்டுவிடும். டம்பிள்டோர் எப்போதுமே கூறி வந்துள்ளார் …”

ஆசிரியர்களின் அறை மறுபடியும் டமாலென்று திறந்தது. அது டம்பிள்டோராகத்தான் இருக்க வேண்டும் என்று ஹாரி ஒரு கணம் நினைத்தான். ஆனால் நுழைந்தது லாக்ஹார்ட். அவர் பெரிதாகப் புன்னகை புரிந்து கொண்டிருந்தார்.

“மன்னிக்கவும் – நான் தூங்கிவிட்டேன் – நீங்கள் இதுவரை என்ன கூறியிருந்தீர்கள்?”

மற்ற ஆசிரியர்கள் அவரை வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்ததை அவர் கவனித்த மாதிரித் தெரியவில்லை. ஸ்னேப் முன்னால் வந்தார்.

“லாக்ஹார்ட், இந்த நேரத்தில் எங்களுக்குத் தேவையான ஆள் நீங்கள்தான்! மிகச் சரியான ஆள்! அந்த ராட்சஸ விலங்கு ஒரு மாணவியைப் பாதாள அறைக்கே எடுத்துச் சென்றுவிட்டது. இறுதியில் உங்களுக்கான வேளை வந்துவிட்டது.”

லாக்ஹார்ட்டின் முகத்தில் இருந்த ரத்தமெல்லாம் வற்றிப் போனது.

“லாக்ஹார்ட், ஸ்னேப் கூறுவது சரிதான்,” என்று பேராசிரியர் ஸ்புரவுட் உள்ளே புகுந்தார். “நேற்று இரவுகூட, ரகசியங்கள் அடங்கிய பாதாள அறையின் வாசல் எங்கிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும் என்று நீங்கள் கூறிக் கொண்டிருந்தீர்கள், இல்லையா?”

“நான் – வந்து – நான் -” என்று லாக்ஹார்ட் தடுமாறினார்.

“ஆமாம், பாதாள அறைக்கு உள்ளே என்ன இருந்தது என்று உங்களுக்கு உறுதியாகத் தெரியும் என்று நீங்கள் என்னிடம் கூறவில்லை?” என்று பேராசிரியர் ஃபிளிட்விக்கும் கச்சேரியில் சேர்ந்து கொண்டார்.

“நானா சொன்னேன்? எப்போது? எனக்கு நினைவே இல்லையே? . . .”

‘ஹாக்ரிட் கைது செய்யப்படுவதற்கு முன்பே அந்த ராட்சஸ விலங்கை நான் அடக்கியிருக்க வேண்டும்’ என்று நீங்கள் கூறியது எனக்கு நன்றாகவே நினைவிருக்கிறது,” என்று ஸ்னேப் கூறினார். “இந்த விவகாரம் ஒழுங்காகக் ஒட்டுமொத்தமாக கையாளப்பட்டிருக்கவில்லை என்றும், முதலிலிருந்தே உங்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் நீங்கள் என்னிடம் கூறினீர்கள், இல்லையா?”

இறுகிப் போன முகத்தோடு இருந்த தன்னுடைய ஆசிரியர்களை லாக்ஹார்ட் உற்றுப் பார்த்தார்.

“நான் . . . நான் ஒருபோதும் . . . அப்படிச் சொல்லவில்லை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள் . . .”

“லாக்ஹார்ட், அப்படியானால், அதை எப்படிச் செய்வது என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்,” என்று பேராசிரியர் மெக்கானகல் கூறினார். “அதைச் செய்வதற்கு இன்று இரவு ஏற்ற நேரம். எவரும் உங்கள் வழியில் குறுக்கிடாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அந்த ராட்சஸ விலங்கை நீங்கள் தனியாகவே சமாளித்துக் கொள்ளலாம். நீங்கள் விரும்பிய முழுச் சுதந்திரம் கடைசியில் உங்களுக்குக் கிடைத்துள்ளது.”

லாக்ஹார்ட் பரிதவிப்புடன் சுற்றுமுற்றும் பார்த்தார். ஆனால் எவரும் அவரைக் காப்பாற்ற முன்வரவில்லை. அவருடைய அழகான தோற்றம் திடீரென்று காணாமல் போய்விட்டிருந்தது. அவரது உதடுகளில் நடுக்கம் குடியேறியிருந்தது. பற்கள் வெளியே தெரியும்படி சிரிக்கும் அவரது வழக்கமான புன்னகை இல்லாமல் அவர் கோழையாகவும் பலவீனமானவராகவும் தெரிந்தார்.

“அப்படியானால் சரி,” என்று கூறினார். “என்னைத் தயார்படுத்திக் கொள்வதற்காக நான் என் அலுவலகத்திற்குச் செல்கிறேன்!”

“சரி,” என்று பேராசிரியர் மெக்கானகல் கூறினார். அவரது அத்துடன் அவர் அந்த அறையைவிட்டு வெளியேறினார். மூக்குச் சிவந்திருந்தது. “இப்போது நாம் அவரை நம்மிடமிருந்து கழற்றி விட்டுவிட்டோம். அணிகளுக்குத் தலைமை வகிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களிடம் சென்று நடந்த விஷயத்தைக் கூறுங்கள். நாளை காலையில் முதல் வேலையாக ஹாக்வார்ட்ஸ் எக்ஸ்பிரஸ் அவர்கள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் என்று கூறுங்கள். மற்ற ஆசிரியர்கள் எந்தவொரு மாணவனும் பொது அறைக்கு வெளியே இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.”

பிறகு ஆசிரியர்கள் அனைவரும் எழுந்து ஒருவர் பின் ஒருவராக வெளியேறினர்.


அதுதான் ஹாரியின் வாழ்க்கையிலேயே மிக மோசமான நாளாக இருந்திருக்க வேண்டும். அவனும், ரான், ஃபிரெட், ஜார்ஜ் ஆகியோரும் ஒருவரிடம் மற்றொருவர் என்ன சொல்லிக் கொள்வது என்று தெரியாமல் அந்தப் பொது அறையின் மூலையில் ஒன்றாக அமர்ந்திருந்தனர். பெர்சி அங்கு இருக்கவில்லை. அவன் ஆர்தர் வீஸ்லீக்கு ஓர் ஆந்தையை அனுப்புவதற்காகச் சென்றிருந்தான். பின் அவன் தனது பொதுப் படுக்கையறையினுள் சென்று அடைந்து கொண்டான்.

அன்றைய மதிய வேளையைப்போல வேறு எந்த மதிய வேளையும் அவ்வளவு அதிக நேரம் நீடித்ததில்லை. அதேபோல, கிரிஃபின்டார் பொது அறையில் இவ்வளவு கூட்டம் இருந்தும்கூட, அது இவ்வளவு அமைதியாக இருந்தது அதுதான் முதன்முறை. அந்தி நெருங்கியபோது, மேலும் உட்கார்ந்திருக்கப் பிடிக்காமல், ஃபிரெட்டும் ஜார்ஜும் தங்களது படுக்கைக்குப் போய்விட்டனர்.

“ஹாரி, அவளுக்கு ஏதோ விஷயம் தெரிந்திருக்கிறது,” என்று ரான் கூறினான். அவர்கள் அந்த அலமாரிக்குள் சென்றதிலிருந்து அவன் பேசிய முதல் வார்த்தை அதுதான். “அதனால்தான் அவள் பாதாள அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறாள். அது பெர்சி குறித்த ஏதோ உருப்படாத விஷயம் அல்ல. ரகசியங்கள் அடங்கிய பாதாள அறை குறித்த எதையோ அவள் கண்டுபிடித்திருக்கிறாள். அதனால்தான் அவள் –” ரான் தன் கண்களை வேகமாகத் துடைத்துக் கொண்டான். “அவள் தூய ரத்தப் பிறவி. எனவே, அவள் பாதாள அறைக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளதற்கு வேறு எந்தக் காரணமும் இருக்க வழியில்லை.”

வெளியே அந்திச் சூரியன் ரத்த நிறத்தில் வேகமாகச் சரிந்து கொண்டிருந்ததை ஹாரி பார்த்தான். அவன் இவ்வளவு மோசமாக இதுவரை உணர்ந்ததில்லை. அவர்களால் எதையாவது செய்ய முடிந்தால்? அது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை!

“ஹாரி,” என்று ரான் அழைத்தான். “அவளுக்கு – அவளுக்கு ஏதாவது வாய்ப்பிருக்கிறது என்று நீ நினைக்கிறாயா? நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உனக்குத் தெரிகிறதா?”

அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று ஹாரிக்குத் தெரியவில்லை. ஜின்னி இன்னும் எப்படி உயிரோடு இருக்கக்கூடும் என்று அவனுக்குத் தெரியவில்லை.

“ஹாரி, எனக்கு ஒன்று தோன்றுகிறது,” என்று ரான் கூறினான். “நாம் போய் லாக்ஹார்ட்டைப் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நமக்குத் தெரிந்ததையெல்லாம் அவரிடம் சொல்லிவிடலாம். அவர் எப்படியும் பாதாள அறைக்குச் செல்ல முயற்சிப்பார். நாம் அது எங்கே இருக்கிறது என்று நினைத்துள்ளோம் என்பதை அவரிடம் கூறிவிடலாம். அங்கு இருப்பது ஒரு ராஜ ஸர்ப்பம் என்பதையும் அவருக்குத் தெரியப்படுத்திவிடலாம்.”

ஹாரிக்கு வேறு என்ன செய்வது என்பது தெரியாமல் இருந்ததாலும், அவன் எதையாவது செய்ய விரும்பியதாலும், அவன் அதற்கு ஒப்புக் கொண்டான். அவர்களைச் சுற்றி இருந்த கிரிஃபின்டார் அணியினர் மிகவும் பரிதாபமாக இருந்தனர். அவர்கள் iஸ்லீ சகோதரர்கள்மீது பச்சாதாபம் கொண்டிருந்ததால், ரானும் ஹாரியும் எழுந்து சென்று அந்த ஓவியத் துவாரம் வழியாக வெளியேறியபோது எவரும் அவர்களைத் தடுக்கவில்லை.

அவர்கள் லாக்ஹார்ட்டின் அலுவலகத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது, இருள் கவியத் தொடங்கியிருந்தது. அந்த அலுவலகத்திற்கு உள்ளே ஏகப்பட்ட நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்ததுபோல இருந்தது. ஏதோ இழுபட்டச் சத்தமும், எதுவோ தூக்கிப் போடப்பட்டச் சத்தமும், வேகமாக அங்குமிங்கும் நடந்த காலடிச் சத்தமும் கேட்டன.

ஹாரி அந்த அலுவலகத்தின் கதவைத் தட்டினான். உடனே டக்கென்று அமைதி நிலவியது. பின் கதவு மிக மிகச் சிறியதாகத் திறந்தது. அதன் வழியாக லாக்ஹார்ட்டின் ஒரே ஒரு கண் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது.

லாக்ஹார்ட், கதவை முன்பிருந்ததைவிடச் சிறிதளவு அதிகமாகத் திறந்தவாறு, “ஓ, ஹாரியும் ரானுமா?” என்று கூறினார். “நான் இப்போது ஒரு வேலையில் மும்முரமாக இருக்கிறேன். நீங்கள் வந்த காரியத்தை வேகமாகக் கூறினால்…”

“பேராசிரியரே, எங்களிடம் சில தகவல்கள் இருக்கின்றன,” என்று ஹாரி கூறினான். “அது உங்களுக்கு உதவக்கூடும் என்று நாங்கள் நினைக்கிறோம்.”

“ம்ம் – நான் அப்படி நினைக்கவில்லை -” என்று அவர் தடுமாறினார். தங்கள் பார்வைக்குத் தென்பட்ட லாக்ஹார்ட்டின் முகம் சற்று அசௌகரியமாக இருந்ததாக அவர்களுக்குத் தோன்றியது. “சரி. பரவாயில்லை. உள்ளே வாருங்கள்!”

பிறகு அவர் தன் அறைக் கதவைத் திறந்தார். ஹாரியும் ரானும் உள்ளே நுழைந்தனர்.

அந்த அலுவலகம் சுத்தமாகத் துடைக்கப்பட்டிருந்தது. இரண்டு பெரிய டிரங்குப் பெட்டிகள் திறந்த நிலையில் தரையில் கிடந்தன. பல்வேறு நிறங்களில் இருந்த அவரது அங்கிகள் அவசரக் கோலத்தில் மடிக்கப்பட்டு ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. இன்னொரு பெட்டியில் புத்தகங்கள் தாறுமாறாகப் போடப்பட்டிருந்தன. சுவர்களை அலங்கரித்துக் கொண்டிருந்த புகைப்படங்கள் மேசைமீது இருந்த ஒரு பெட்டிக்குள் திணிக்கப்பட்டிருந்தன.

“நீங்கள் எங்கேயாவது கிளம்பிக் கொண்டிருக்கிறீர்களா?” என்று ஹாரி கேட்டான்.

“ம்ம் – ஆமாம்,” என்று லாக்ஹார்ட் கூறினார். அவர் பேசிக் கொண்டே, கதவின் பின்புறம் ஒட்டப்பட்டிருந்த, ஆளுயரத்திற்கு இருந்த தனது புகைப்படத்தை எடுத்துச் சுருட்டி மடக்கிக் தவிர்க்க முடியவில்லை . . கொண்டிருந்தார். “திடீர் அழைப்பு போயே ஆக வேண்டும்…”

ரான் அதிர்ந்து போய், “அப்படியானால் என் தங்கை?” என்று கேட்டான்.

“அது வந்து… மிகவும் துரதிர்ஷ்டவசமானது,” என்று லாக்ஹார்ட் கூறினார். அவர்களுடைய கண்களை நேருக்கு நேராகப் பார்ப்பதைத் தவிர்த்தவாறே, தன்னுடைய மேசையின் இழுப்பறை ஒன்றை வெளியே இழுத்து அதிலிருந்தவற்றை எல்லாம் அவர் ஒரு பையில் கொட்டிக் கொண்டிருந்தார். “உன் தங்கைக்காக என்னைப்போல் யாரும் வருத்தப்பட்டிருக்க மாட்டார்கள்–”

“நீங்கள்தான் தீய மந்திர சக்திகளுக்கு எதிரான பாதுகாப்பு ஆசிரியர்!” என்று ஹாரி கூறினான். “நீங்கள் இப்போது போகக்கூடாது. குறிப்பாக, இப்போது இங்கு நடந்து கொண்டிருக்கும் தீய நிகழ்வுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது, நீங்கள் இங்கிருந்து போகவே கூடாது!”

“நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்,” என்று லாக்ஹார்ட் ஆரம்பித்தார். தன்னுடைய காலுறைகளை அங்கிகளின் மேல் அடுக்கியவாறு, “நான் இந்த வேலையை ஏற்றுக் கொண்டபோது, வேலை விபரங்களில் … நான் இதை எதிர்பார்க்கவில்லை…”

“நீங்கள் ஓடிப் போகப் போகிறீர்களா?” என்று ஹாரி நம்ப முடியாமல் கேட்டான். “நீங்கள் உங்கள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள அவ்வளவு விஷயங்களையும் செய்த பிறகுமா ஓடிப் போகப் போகிறீர்கள்?”

“புத்தகங்கள் சமயங்களில் நம்மை ஏமாற்றக்கூடும்,” என்று அவர் பட்டும் படாமலும் கூறினார்.

“நீங்கள்தானே அவற்றை எழுதினீர்கள்?”

லாக்ஹார்ட் தன்னை நிமிர்த்திக் கொண்டு, ஹாரியை நோக்கித் தன் நெற்றியைச் சுருக்கியவாறு, “இதோ பார், ஹாரி. நீ உன் புத்தியைக் கொஞ்சம் உபயோகப்படுத்து,” என்று கூறினார். “என் புத்தகங்களில் கூறப்பட்டிருப்பவை எல்லாவற்றையும் நான்தான் செய்தேன் என்று மக்கள் நம்பியிருக்காவிட்டால், என் புத்தகம் இப்போது விற்றுள்ளதில் பாதி அளவுகூட விற்றிருக்காது. ஒரு பழைய அவலட்சணமான அர்மீனிய நாட்டு மந்திரவாதியைப் பற்றிப் படிக்க யாருக்குமே விருப்பம் கிடையாது – ஓநாய்மனிதர்களிடமிருந்து ஒரு கிராமத்தை அவர் உண்மையிலேயே காப்பாற்றி இருந்தும்கூட! புத்தகத்தின் முகப்பு அட்டையில் அவர் பரிதாபமாகக் காட்சியளிப்பார். அவருக்கு உடையலங்கார அறிவு துளிகூடக் கிடையாது. அதேபோல, பான்டன் பன்ஷி மோகினிப் பிசாசை ஒழித்துக் கட்டிய அந்த மந்திரவாதினிக்குத் தாடியும் மீசையும் இருந்தன …

“அப்படியானால், ஏகப்பட்டப் பேர் செய்துள்ள விஷயங்களை நீங்களே செய்துள்ளதாக நீங்கள் பெருமையடித்துக் கொண்டுள்ளீர்கள், அப்படித்தானே?” என்று ஹாரி நம்ப முடியாதவனாகக் கேட்டான்.

லாக்ஹார்ட் தன் தலையைப் பொறுமையின்றி அசைத்தவாறே, “ஹாரி, ஹாரி,” என்று கூறினார். “இதில் குழப்பத்திற்கே இடமில்லை. இதில் நிறைய வேலை இருக்கிறது. நான் இப்படிப்பட்ட மக்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். பிறகு, தாங்கள் அவற்றைச் சாதித்த விதத்தை விலாவாரியாக விளக்க அவர்களை நான் ஒப்புக் கொள்ளச் செய்ய வேண்டும். அதன் பிறகு, அவர்கள் அதை ஞாபகம் வைத்துக் கொள்ளாதவாறு அவர்கள்மீது ஞாபகமறதி மந்திரத்தைப் பிரயோகிக்க வேண்டும். ஹாரி, இதில் நிறைய வேலை இருக்கிறது. இது வெறும் புத்தக வெளியீட்டு விழாக்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கும் விஷயமோ அல்லது விளம்பரப் புகைப்படங்களை வெளியிடுவதோ மட்டும் அல்ல. உனக்குப் புகழ் வேண்டும் என்றால் நீண்ட நாட்கள் மாடாகத் தேய நீ தயாராக இருக்க வேண்டும்.”

அவர் தன் டிரங்குப் பெட்டிகளை மூடிவிட்டு அவற்றைப் பூட்டினார்.

“மொத்தம் அவ்வளவுதான் என்று நினைக்கிறேன். இல்லையில்லை, ஒரே ஒரு விஷயம் மட்டும் பாக்கியிருக்கிறது,” என்று அவர் கூறினார்.

அவர் தன் மந்திரக்கோலை எடுத்து அவர்களை நோக்கி நீட்டினார்.

“பையன்களா, என்னை மன்னித்துவிடுங்கள். நான் இப்போது உங்கள்மீது ஒரு ஞாபகமறதி மந்திரத்தை ஏவ வேண்டியிருக்கிறது. நீங்கள் என்னுடைய ரகசியங்களை எல்லா இடங்களிலும் உளறிக் கொண்டிருப்பதை என்னால் அனுமதிக்க முடியாது. அப்புறம் என்னால் என்னுடைய அடுத்தப் புத்தகத்தை விற்கவே முடியாது..?”

ஹாரி சரியான நேரத்தில் தன்னுடைய மந்திரக்கோலை எடுத்திருந்தான். லாக்ஹார்ட் தனது மந்திரக்கோலை உயர்த்துவதற்கு முன்பாகவே, அவன் “எக்ஸ்பெல்லியார்மஸ்!” என்று முழங்கினான்.

லாக்ஹார்ட் படுவேகமாகப் பின்னால் தூக்கி எறியப்பட்டு அவருடைய டிரங்குப் பெட்டிகளின்மீது விழுந்தார். அவரது மந்திரக்கோல் அவரது கையைவிட்டு உயரமாகப் பறந்தது. ரான் அதைப் பிடித்து, திறந்திருந்த ஒரு சன்னல் வழியாக வேளியே தூக்கி எறிந்தான்.

ஹாரி கோபமாக லாக்ஹார்ட்டின் டிரங்குப் பெட்டியை எட்டி உதைத்து அதை ஓர் ஓரமாகத் தள்ளியவாறே, “இந்த வித்தையைப் பேராசிரியர் ஸ்னேப் எங்களுக்குக் கற்றுக் கொடுக்க நீங்கள் அனுமதித்திருக்கக்கூடாது,” என்று கூறினான். லாக்ஹார்ட் ஹாரியையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மறுபடியும் மிகவும் பலவீனமாகத் தெரிந்தார். ஹாரி இன்னும் தன்னுடைய மந்திரக்கோலை அவரை நோக்கி நீட்டிக் கொண்டிருந்தான்.

“நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?” என்று அவர் பலவீனமாகக் கேட்டார். “ரகசியங்கள் அடங்கிய பாதாள அறை எந்தத் திசையில் இருக்கிறது என்றுகூட எனக்குத் தெரியாது. என்னால் எதுவும் செய்ய முடியாது.”

“உங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது,” என்று ஹாரி கூறினான். அவனது கையில் மந்திரக்கோல் இருந்ததால், லாக்ஹார்ட் அவன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு வலுக்கட்டாயமாக எழுந்து நின்றார். “பாதாள அறை எங்கிருக்கிறது என்று எங்களுக்குத் தெரியும் என்று நாங்கள் நினைக்கிறோம். அதற்கு உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எங்களுக்குத் தெரியும். வாருங்கள். போகலாம்.”

அவர்கள் லாக்ஹார்ட்டை அவரது அலுவலகத்தைவிட்டு வெளியே தள்ளிக் கொண்டு வந்தனர். அருகிலிருந்த படிக்கட்டின் வழியாக இறங்கி, இருண்டு கிடந்தத் தாழ்வாரங்களின் வழியாக நடந்து சென்று, சுவரில் மினுமினுத்துக் கொண்டிருந்த புதிய தகவலைக் கடந்து, முனகல் மர்ட்டிலின் குளியலறையின் கதவை அடைந்தனர்.

அதனுள் அவர்கள் லாக்ஹார்ட்டை முதலில் அனுப்பினர். அவர் நடுங்கிக் கொண்டிருந்ததைப் பார்க்க ஹாரிக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

முனகல் மர்ட்டில் கடைசித் தொட்டியின் அருகே உட்கார்ந்திருந்தது.

அது ஹாரியைப் பார்த்ததும், “ஓ, நீயா?” என்று கேட்டது. “இப்போது எதற்காக வந்தாய்?”

“நீ எப்படி இறந்தாய் என்று கேட்க வந்தேன்,” என்று ஹாரி கூறினான்.

உடனடியாக மர்ட்டிலின் மொத்த அம்சமும் மாறியது. அது போன்ற முகஸ்துதியான ஒரு கேள்வியை இதற்கு முன்பு வேறு அதனிடம் ஒருபோதும் கேட்டிருக்கவில்லை என்பதுபோல் அது காணப்பட்டது.

“ஓ! அதுவா? அது மிகவும் பயங்கரமான ஓர் அனுபவமாக இருந்தது,” என்று மர்ட்டில் ரசித்துக் கூறியது. “அது இதே இடத்தில்தான் நிகழ்ந்தது. இதே தடுப்பு அறையில்தான் நான் இந்து போனேன். அது எனக்குத் தெள்ளத் தெளிவாக நினைவிருக்கிறது. நான் போட்டிருந்த மூக்குக்கண்ணாடி குறித்து ஆல்யர் ஹார்ன்பி என்னைக் கிண்டல் செய்ததால், நான் இங்கு வந்து ஒளிந்து கொண்டிருந்தேன். என்னுடைய தடுப்புக் கதவு தாழ்ப்பா போடப்பட்டிருந்தது. நான் அழுது கொண்டிருந்தேன். பின் குளியலறைக்கு உள்ளே யாரோ நுழைந்த சத்தம் கேட்டது. அவர்கள் வினோதமாக எதையோ கூறினர். அது வேறு மொழியில் இருந்தது. எனக்கு அப்படித்தான் தோன்றியது. ஆனால் உண்மையில் என்னை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கிய விஷயம் என்னவென்றால், இங்கு நின்று பேசிக் கொண்டிருந்தது ஒரு மாணவன். மாணவர்களுக்கான குளியலறையை உபயோகித்துக் கொள்ளுமாறு அவனிடம் கூறுவதற்காக என்னுடைய தடுப்பு அறையின் தாழ்ப்பாளைத் திறந்து கொண்டு நான் வெளியே வந்தேன். அப்புறம் -” மர்ட்டிலின் முகம் தன்னை முக்கியப்படுத்திக் கொள்ளும் விதத்தில் வீங்கியது. பிறகு அதன் முகம் பிரகாசமடைந்தது. “நான் இறந்து போனேன்”

“எப்படி?” என்று ஹாரி கேட்டான்.

“எனக்குத் தெரியாது,” என்று மர்ட்டில் கிசுகிசுப்பான குரலில் கூறியது. “மஞ்சள் நிறத்தில் இருந்த பிரம்மாண்டமான ஒரு ஜோடிக் கண்களை நான் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. என்னுடைய மொத்த உடலும் ஸ்தம்பித்துவிட்டது. அப்புறம் நான் அங்கிருந்து மிதக்கத் துவங்கினேன் . . .” அது ஹாரியைக் கனவு மயக்கத்தோடு பார்த்தது. “அப்புறம் நான் மீண்டும் இங்கு வந்துவிட்டேன். நான் ஆலிவர் ஹார்ன்பியைப் பயமுறுத்துவது என்று தீர்மானமாக இருந்தேன். ஓ, என் மூக்குக்கண்ணாடி பற்றிக் கிண்டல் செய்தது குறித்து அவள் வருத்தப்பட்டாள்.”

“அந்தக் கண்களைத் துல்லியமாக எங்கு நீ பார்த்தாய்?” என்று ஹாரி கேட்டான்.

மர்ட்டில், தன் தடுப்பு அறையிலிருந்த தண்ணீர்த் தொட்டியைச் சுட்டிக்காட்டியவாறு, “அங்கே எங்கேயோ,” என்று கூறியது.

ஹாரியும் ரானும் வேகமாக அங்கே ஓடினர். லாக்ஹார்ட் நன்றாகவே பின்னால் தள்ளி நின்று கொண்டார். அவரது முகத்தில் பீதி தாண்டவமாடிக் கொண்டிருந்தது.

அது மற்ற பிற தண்ணீர்த் தொட்டிகளைப்போலவே இருந்தது. அவர்கள் அதன் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் ஒவ்வோர் அங்குலத்தையும் பரிசோதித்தனர். அதன் கீழே இருந்த குழாயையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. திடீரென்று ஹாரி அதைப் பார்த்தான். அங்கிருந்த செப்புக் குழாய்களில் ஒன்றின் ஒரு பக்கத்தில் மிகச் சிறிய பாம்பின் உருவம் ஒன்று சுரண்டி வரையப்பட்டிருந்தது.

ஹாரி அதைத் திருப்ப முனைந்தபோது, மர்ட்டில், “அந்தக் குழாய் ஒருபோதும் வேலை செய்ததே இல்லை,” என்று கூறியது.

“ஹாரி,” என்று ரான் அழைத்தான். “எதையாவது சொல்லு. எதையாவது ஸர்ப்ப பாஷையில் கூறு!”

“ஆனால் -” ஹாரி தீவிரமாக யோசித்தான். அவன் ஸர்ப்ப பாஷையில் பேசியிருந்த சமயங்களில் எல்லாம், அவன் நிஜப் பாம்புடன் மட்டுமே பேசியிருந்தான். அவன் அந்தப் பாம்பின் உருவம் உண்மையிலேயே ஒரு நிஜமான பாம்பு என்பதுபோலக் கற்பனை செய்து கொண்டு அதையே தீவிரமாக உற்றுப் பார்த்தான்.

“திற,” என்று கூறினான்.

பின் அவன் ரானைத் திரும்பிப் பார்த்தான். அவன் இல்லையென்பதுபோலத் தலையை அசைத்தான்.

“நீ பேசியது நம்முடைய மொழி!” என்று ரான் கூறினான்.

ஹாரி மீண்டும் அந்தப் பாம்பு உருவத்தையே பார்த்தான். அது உயிரோடு இருந்ததாக நம்புவதற்கு அவன் தன்னைத் தயார்படுத்திக் கொண்டான். அவன் தன் தலையை அசைத்தபோது, மெழுகுவர்த்தி வெளிச்சம், அந்தக் குழாயின்மீது சுரண்டப்பட்டிருந்த பாம்பு நகர்ந்ததுபோலத் தோன்றச் செய்தது.

“திற!” என்று கூறினான்.

ஆனால் அவனது காதுகளில் விழுந்தது அந்த வார்த்தை அல்ல. ஒரு வினோதமான ‘ஸ்ஸ்ஸ்’ என்ற சீற்றொலி அவனிடமிருந்து வெளிப்பட்டது. உடனடியாக அந்தக் குழாய் பிரகாசமான வெள்ளை ஒளியில் மின்னியது. பிறகு அது சுற்றத் துவங்கியது. அடுத்தக் கணம், அந்தத் தண்ணீர்த் தொட்டி நகரத் துவங்கியது. உண்மையில் அது பார்வையிலிருந்து முழுவதுமாக மறைந்து போனது. அதற்கு பதிலாக அங்கு ஒரு பெரிய குழாய் இருந்தது. ஒரு சராசரி நபர் சுலபமாக உள்ளே நுழையக்கூடிய அளவுக்கு அது பெரிதாக இருந்தது.

ரான் வியப்பில் வாயைப் பிளந்தான். ஹாரி மீண்டும் அதைப் பார்த்தான். தான் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஒரு திட்டவட்டமான முடிவுக்கு அவன் வந்திருந்தான்.

“நான் இதன் வழியாகக் கீழே போகப் போகிறேன்,” என்று அவன் கூறினான்.

பாதாள அறைக்குச் செல்வதற்கான வழியை அவர்கள் இப்போது கண்டுபிடித்திருந்ததால், ஜின்னி உயிருடன் இருப்பதற்கான மிகச் சிறிய, மிகவும் அபூர்வமான, மிக மங்கலான ஒரு வாய்ப்பு இருந்தால்கூட அதைத் தவறவிட ஹாரி விரும்பவில்லை.

“நானும் வருகிறேன்,” என்று ரான் கூறினான்.

ஒரு கண நேரம் அங்கு அமைதி நிலவியது.

“என் தேவை உங்களுக்குத் துளிகூட இருப்பதாக எனக்குத் தெரியவில்லை,” என்று லாக்ஹார்ட் கூறினார். அவரது உதடுகளில் பழைய புன்னகையின் பலவீனமாக சாயல் தெரிந்தது. “அதனால், நான்-“

அவர் தன்னுடைய கையை அக்குளியலறையின் கதவின் பிடியில் வைத்தார். ஹாரியும் ரானும் ஒரே நேரத்தில் தங்களுடைய மந்திரக்கோல்களை அவரை நோக்கி நீட்டினர்.

“நீங்கள் முதலில் குழாயினுள் இறங்குங்கள்,” என்று ரான் உறுமினான்.

மந்திரக்கோலற்றுச் சவக்களையுடன் இருந்த லாக்ஹார்ட் அந்தக் குழாயை அணுகினார்.

“பையன்களா,” என்று அவர் அழைத்தார். அவரது குரல் பலவீனமாக ஒலித்தது. “இதனால் என்ன பிரயோஜனம்?”

ஹாரி தன்னுடைய மந்திரக்கோலால் அவரது பின்புறத்தில் குத்தினான். லாக்ஹார்ட் தன்னுடைய காலை அக்குழாய்க்குள் விட்டார்.

“இது உண்மையிலேயே தேவையா -” என்று அவர் சொல்லத் துவங்கினார். அதற்குள் ரான் அவரைப் பிடித்து அக்குழாயினுள் தள்ளினான். அவர் சறுக்கிக் கொண்டு பார்வையிலிருந்து மறைந்தார். ஹாரியும் உடனடியாக அவரைப் பின்தொடர்ந்து அக்குழாய்க்குள் மெதுவாக இறங்கினான். பின் தன் பிடியை விட்டான்.

முடிவேயில்லாத, இருண்ட, கொழகொழவென்று இருந்த ஒரு சறுக்கில் சறுக்கிச் செல்வதுபோல அது இருந்தது. எல்லாத் திசைகளிலும் பல குழாய்கள் அதிலிருந்து கிளைவிட்டுச் சென்றதை ஹாரியால் பார்க்க முடிந்தது. ஆனால் எந்தக் குழாயும் இவ்வளவு பெரிதாக இருக்கவில்லை. அது வளைந்து நெளிந்து கீழ்நோக்கிச் செங்குத்தாகச் சென்றது. பள்ளிக்கு அடியில், பள்ளியின் நிலவறைகளுக்கு வெகுகீழே தாங்கள் விழுந்து கொண்டிருந்தோம் என்பதை அவனால் உணர முடிந்தது. அவனுக்குப் பின்னால் வந்த ரான், மூலைகளில் லேசாக இடிபட்டுக் கொண்டும் சறுக்கிக் கொண்டும் வந்து கொண்டிருந்தான்.

தரையை அடைந்த பிறகு என்ன நடக்கும் என்று ஹாரி கவலைப்படத் துவங்கிய கணத்தில் அவன் நிலத்தைத் தொட்டான். குழாய் நிலத்தோடு நிலமாக முடிந்திருந்தது. அவன் அதன் முனையிலிருந்து வெளிவந்து ஓர் இருண்ட சுரங்கப் பாதையின் ஈரத் தரையில் போய்த் ‘தொப்’ என்று விழுந்தான். அது ஒரு நபர் நிமிர்ந்து நிற்கும் அளவுக்கு உயரமாக இருந்தது. அவனுக்குக் கொஞ்சம் முன்னால் தள்ளி, லாக்ஹார்ட் தட்டுத் தடுமாறி எழுந்து கொண்டிருந்தார். அவரது உடம்பெல்லாம் பிசுபிசுப்பாக இருந்தது. அவரது முகம் பேயறைந்தாற்போல இருந்தது. ரான் விர்ரென்று அந்தக் குழாயின் முனையிலிருந்து வெளிப்பட்டபோது ஹாரி கொஞ்சம் தள்ளி நின்று கொண்டான்.

“நாம் பள்ளிக்குப் பல மைல்கள் கீழே இருக்கிறோம் என்று நினைக்கிறேன்.” என்று ஹாரி கூறினான். அவனது குரல் அந்த இருண்ட சுரங்கப் பாதையில் எதிரொலித்தது.

ரான் தங்களைச் சுற்றிலும் இருந்த பிசுபிசுப்பான இருண்ட சுவர்களைத் தனது கண்களைச் சுருக்கி உற்றுப் பார்த்தபடி, “ஒருவேளை ஏரிக்கு கீழே இருக்கலாம்,” என்று கூறினான்.

அவர்கள் மூவரும் தங்களுக்கு முன்னால் இருந்த இருட்டை வெறித்துக் கொண்டிருந்தனர்.

ஹாரி தன்னுடைய மந்திரக்கோலிடம், “லூமோஸ்!” என்று முணுமுணுத்தான். அது மீண்டும் ஒளிவிடத் துவங்கியது. “வாருங்கள், போகலாம்,” என்று அவன் ரானிடமும் லாக்ஹார்ட்டிடமும் கூறினான், அவர்கள் நடக்கத் துவங்கினர். அந்த ஈரத் தரையில் அவர்களுடைய காலடி ஓசை சத்தமாகக் கேட்டது.

அந்தச் சுரங்கம் கும்மிருட்டாக இருந்ததால், ஒருசில அடிகள் தூரமே அவர்களால் பார்க்க முடிந்தது. மந்திரக்கோலின் விளக்கு வெளிச்சத்தில் அவர்களுடைய நிழல்களே அவர்களை அச்சுறுத்துவதுபோல இருந்தன.

அவர்கள் எச்சரிக்கையுடன் முன்னோக்கி நடந்து கொண்டிருந்தபோது, ஹாரி, “இதைக் கவனமாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்,” என்று அமைதியாகக் கூறினான். “ஏதாவது அசைந்தால் உடனடியாகக் கண்களை இறுக்கமாக மூடிக் கொள்ளுங்கள்.”

ஆனால் அந்தச் சுரங்கத்தில் மயான அமைதி நிலவியது. அவர்கள் கேட்ட முதல் எதிர்பாராத சத்தம், ரான் எதையோ மிதித்தபோது ஏற்பட்டது. கடைசியில் அது ஓர் எலியின் மண்டை ஓடு என்பது தெரிய வந்தது. ஹாரி தன் மந்திரக்கோலைத் தரைக்கு அருகில் கொண்டு சென்று பார்த்தபோது தரையெங்கும் சிறிய விலங்கெலும்புகள் சிதறிக் கிடந்தது தெரிய வந்தது. தாங்கள் ஜின்னியைக் கண்டுபிடித்தால், அவள் எப்படிக் காட்சியளிப்பாள் என்று கற்பனை செய்யாமலிருக்க ஹாரி கடினமாக முயன்று கொண்டே முன்னே நடந்து கொண்டிருந்தான். அவர்களுக்கு முன்னால் சுரங்கத்தில் ஒரு திருப்பம் இருந்தது.

ரான் ஹாரியின் தோளைப் பற்றியவாறு, “ஹாரி, அங்கே ஏதோ இருக்கிறது . . .” என்று கரகரப்பான குரலில் கூறினான்.

அவர்கள் உறைந்து போய் அதைப் பார்த்துக் கொண்டு நின்றனர். மிகப் பெரிதாகவும் வளைந்து சுருண்டும் இருந்த ஏதோ ஒன்று சுரங்கப் பாதையின் குறுக்காகப் படுத்திருந்தது. அது அசையவே இல்லை.

“அது ஒருவேளை தூங்கிக் கொண்டிருக்கலாம்,” என்று கூறி ஹாரி பெருமூச்சு விட்டான். அவன் பின்னால் திரும்பி மற்ற இருவரையும் பார்த்தான். லாக்ஹார்ட்டின் கைகள் அவரது கண்களின் மேல் இருந்தன. ஹாரி தன் பார்வையைத் திருப்பி அதை மீண்டும் பார்த்தான். அவனுடைய இதயம் அவனது தொண்டைக்குள் அடித்துக் கொண்டிருந்தது.

ஹாரி தன்னுடைய கண்களை எவ்வளவு சிறியதாகச் சுருக்கிக் கொள்ள முடியுமோ அவ்வளவு சிறியதாகச் சுருக்கிக் கொண்டு, உயர்த்திய மந்திரக்கோலுடன் அதை நோக்கி மிக மெதுவாக முன்னேறினான்.

அவனது மந்திரக்கோலின் வெளிச்சம் ஒரு மாபெரும் பாம்புச்சட்டையின்மீது பட்டுத் தெறித்தது. அது பச்சை நிறத்தில் இருந்தது. அது அந்தச் சுரங்கத்தின் தரையில் சுருண்டு கிடந்தது. கழற்றிப் போடப்பட்டிருந்த அந்தச் சட்டையை வைத்துப் பார்த்தால், அப்பாம்பு, குறைந்தபட்சம் இருபதடி நீளமாவது இருக்கும் என்று தோன்றியது.

“அடக் கடவுளே!” என்று ரான் பலவீனமாகக் கூறினான்.

அவர்களுக்குப் பின்னால் திடீரென்று ஓர் அசைவு ஏற்பட்டது. லாக்ஹார்ட் துவண்டு விழுந்து கிடந்தார்.

ரான் தன்னுடைய மந்திரக்கோலை லாக்ஹார்ட்டை நோக்கி நீட்டியபடி, “எழுந்திருங்கள்!” என்று அதட்டினான்.

லாக்ஹார்ட் எழுந்தார் – பிறகு ரானின்மீது பாய்ந்து அவனைக் கீழே தள்ளினார். ஹாரி முன்னால் பாய்ந்தான். ஆனால் அதற்குள் நேரம் கடந்துவிட்டிருந்தது. லாக்ஹார்ட் மூச்சிரைக்க எழுந்தார். அவரது கையில் ரானின் மந்திரக்கோலும், அவரது முகத்தில் புன்னகையும் இருந்தன.

“பையன்களா, உங்களுடைய சாகசப் பயணம் இதோடு முடிவடைகிறது!” என்று அவர் கூறினார். “நான் இந்தப் பாம்புச்சட்டையிலிருந்து கொஞ்சத்தைப் பள்ளிக்கு எடுத்துச் செல்லப் போகிறேன். அந்த மாணவியைக் காப்பாற்ற எனக்குச் சிறிது தாமதமாகிவிட்டது என்றும், அவளுடைய சிதைந்து போன உடலைப் பார்த்ததும் அநியாயமாக உங்கள் இருவருக்கும் புத்திப் பேதலித்துவிட்டது என்றும் அவர்களிடம் நான் கூறுவேன். உங்களுடைய ஞாபகங்களுக்கு இப்போது விடைகொடுங்கள்!”

ஸ்பெல்லாடேப் கொண்டு ஒட்டப்பட்டிருந்த ரானின் மந்திரக்கோலை எடுத்துத் தன் தலைக்கு மேலே உயர்த்தி, “ஆப்லிவியேட்!” என்று அவர் கத்தினார்.

ஒரு சிறு வெடிகுண்டின் ஆற்றலுடன் அந்த மந்திரக்கோல் வெடித்தது. இடியெனக் கீழே விழுந்து கொண்டிருந்த சுரங்க மேற்கூரையின் இடிபாடுகளில் இருந்து தப்பி, ஹாரி தன் கைகளைத் தலைக்கு மேல் தூக்கிப் பிடித்தவாறு அந்தப் பாம்புச்சட்டையின்மீது வழுக்கி விழுந்து எழுந்து ஓடினான். அடுத்தக் கணம் அவன் தனியாக நின்று கொண்டிருந்தான். உடைந்து விழுந்திருந்த கனமான பாறைகளால் உருவாக்கப்பட்டச் சுவர் ஒன்று அவனுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தது.

“ரான்,” என்று அவன் கத்தினான். “உனக்கு ஒன்றும் ஆகவில்லையே?”

“நான் இங்கிருக்கிறேன்,” என்று ரானின் குரல் அப்பாறைகளின் இடிபாடுகளின் மறுபுறத்தில் இருந்து மெல்லியதாகக் கேட்டது. “எனக்கு ஒன்றும் ஆகவில்லை. அந்தக் கசவாளிக்குத்தான் நல்ல அடி.
மந்திரக்கோலின் வெடிப்பு அவரை நன்றாகவே பதம் பார்த்துவிட்டது.”

மிக மெல்லியதாக யாரோ மிதித்தச் சத்தமும், ‘ஐயோ!’ என்ற பலமான சத்தமும் கேட்டன. ரான் லாக்ஹார்ட்டை அவரது முழங்காலில் எட்டி உதைத்திருக்க வேண்டும் என்று ஹாரிக்குத் தோன்றியது.

“அடுத்து என்ன?” என்று ரான் கேட்டான். அவனது குரலில் ஒரு பரிதவிப்பு இருந்தது. “இந்த இடிபாடுகளைத் தாண்டி எங்களால் வர முடியாது. அதற்கு மாமாங்கம் ஆகும் . . .”

ஹாரி சுரங்கத்தின் மேற்கூரையைப் பார்த்தான். அதில் பெரிதாக விரிசல்கள் தோன்றியிருந்தன. இப்பாறைகள் அளவுக்குப் பெரிய பொருட்கள் எதையும் அவன் தனது மந்திரசக்தியை உபயோகித்து அதுவரை ஒருபோதும் தகர்த்திருக்கவில்லை. அதைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கு அது சரியான தருணமாக அவனுக்குத் தோன்றவுமில்லை. ஒருவேளை மொத்தச் சுரங்கமுமே சரிந்து விழுந்துவிட்டால்?

மற்றுமோர் உதைச் சத்தமும், இன்னோர் ‘ஐயோ!’ என்ற கேட்டன. நேரத்தை அவர்கள் வீணாக்கிக் முனகலும் கொண்டிருந்தனர். ஜின்னி இந்தப் பாதாள அறைக்குள் கொண்டு வரப்பட்டு ஏற்கனவே பல மணிநேரம் ஆகியிருந்தது. இப்போது செய்யப்பட வேண்டியது ஒன்றே ஒன்றுதான் என்பதை ஹாரி அறிந்திருந்தான்.

“இங்கு காத்திரு!” என்று அவன் ரானிடம் கூறினான். “லாக்ஹார்ட்டுடன் நீ இங்கேயே காத்திரு. நான் தனியாகப் போகிறேன். நான் ஒரு மணிநேரத்திற்குள் திரும்பி வராவிட்டால் . . .”

அங்கு ஒரு நீண்ட மௌனம் நிலவியது.

“நான் இப்பாறைகளில் ஒருசிலவற்றை நகர்த்த முயல்கிறேன்,” என்று ரான் கூறினான். அவன் தன் குரலை ஒரே சீராக வைத்துக் கொள்ளத் தத்தளித்துக் கொண்டிருந்தான். “நீ திரும்பி வரும்போது – இதன் வழியாகப் புகுந்து வர வசதியாக இருக்கும். அப்புறம் ஹாரி “

ஹாரி, நடுங்கிக் கொண்டிருந்த தனது குரலில் வலுக்கட்டாயமாக தைரியத்தைத் திணித்துக் கொண்டே, “உன்னை விரைவில் சந்திக்கிறேன்,” என்று கூறினான்.

அவன் அந்த பிரம்மாண்டமான பாம்புச்சட்டையைத் தாண்டித் தனியாக நடக்கத் துவங்கினான்.

பாறைகளை அப்புறப்படுத்த ரான் முனகிக் கொண்டிருந்த சத்தம் விரைவில் மறைந்து போனது. அந்தச் சுரங்கம் வளைந்து வளைந்து சென்றது. ஹாரியின் நாடி நரம்புகள் அத்தனையும் ஆட்டம் கண்டிருந்தன. அச்சுரங்கம் ஒரு முடிவுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று அவன் எண்ணினான். ஆனால் அதே சமயம், அது முடிவடையும்போது தான் அங்கு எதைக் கண்டுபிடிப்போமோ என்றும் அவன் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. கடைசியில் அவன் மெதுவாக மற்றொரு திருப்பத்தைக் கடந்ததும் தனக்கு நேரெதிரே ஒரு சுவர் இருந்ததைக் கண்டான். அந்தச் சுவரில் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருந்த இரண்டு நாகங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அவற்றின் கண்கள், மின்னிக் கொண்டிருந்த பச்சை நிற மரகதக் கற்களால் உருவாக்கப்பட்டிருந்தன.

ஹாரி அதை அணுகினான். அவனது தொண்டை வறண்டு போயிருந்தது. கற்களில் செதுக்கப்பட்டிருந்த அப்பாம்புகள் உண்மையானவை என்று கற்பனை செய்ய வேண்டிய அவசியம் அவனுக்கு இருக்கவில்லை. அவற்றின் கண்கள் வினோதமாக உயிருடன் இருந்ததுபோல ஜொலித்துக் கொண்டிருந்தன.

தான் என்ன செய்ய வேண்டும் என்பதை அவனால் எளிதாக ஊகிக்க முடிந்தது. அவன் தன் தொண்டையைச் செருமிக் கனைத்தான். அப்போது அந்த மரகதப் பச்சைக் கற்கள் லேசாக மின்னியதுபோல அவனுக்குத் தோன்றியது.

ஒரு மெல்லிய ‘ஸ்ஸ்ஸ்’ ஒலியுடன், “திற!” என்று ஹாரி கூறினான்.

அப்பாம்புகள் விலகிக் கொண்டன. சுவர் இரண்டாகப் பிளவுபட்டது. அந்த இரண்டு பகுதிகளும் சத்தமில்லாமல் பார்வையில் இருந்து மறைந்தன. பாதாதிகேசம் நடுங்க ஹாரி உள்ளே நுழைந்தான்.

– தொடரும்…

– ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும், மூலம்: ஜே.கே.ரோலிங், தமிழில்: பி.எஸ்.வி.குமாரசாமி, முதற் பதிப்பு: 2013, மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், மும்பை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *