கதையாசிரியர்:
தின/வார இதழ்: தமிழ் முரசு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 5, 2024
பார்வையிட்டோர்: 1,525 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“மாதா உன் கோயிலில்
மணிதீபம் ஏற்றினேன்,
தாயென்று உன்னைத்தான்
பிள்ளைக்குக் காட்டினேன்… மாதா..!”

மேரி மாதாவின் முன்பு மண்டியிட்டுக் கண்ணீர் வழிந்தோட அந்தப் பிஞ்சுக் கரங்கள் பூவாய்ப் பதிகின்றன. திரும்பிப் பார்க்கிறாள். அவளது ஐந்து வயது மகன் மைக்கல் மல்லிகையாய்ச் சிரித்துக் கொண்டு நின்றான்.

தாயின் கன்னத்தில் வழிந்த நீர்க்கோடுகளை அவன் பிஞ்சுக் கைகள் மெல்லத் துடைக்கின்றன. ரோஸியின் உடம்பு சிலிர்க்கின்றது. “மகனே! என் செல்வமே..!” என்று அணைத்துக் கொள்கிறாள்.

“அம்மா…தாத்தா எங்கேம்மா… ரொம்ப நாளா தாத்தா வரலையே ஏன்மா..” அவன் வார்த்தையை முடிப்பதற்குள் அவள் கண்களில் நீர்முத்துகள் பூக்கின்றன.

‘வருவார்டா கண்ணு.. தாத்தா நிச்சயம் நம்மள பார்க்க வருவார்.”

“எப்பம்மா… நாளைக்கு வருவாரா… ஆமா ராஜா… நிச்சமாய் நாளைக்கு வருவார்..” தாயும் பிள்ளையும் கோயிலில் இருந்து வெளியே வருகிறார்கள். பீட்டர் எதிர்கொள்கிறார். ரோஸி தோத்திரம் சொல்கிறாள். அவள் பள்ளிக்குப் போன காலத்திலிருந்தே அந்தக் கோயிலில் மணி அடித்துக் கொண்டிருப்பவர் இந்தப் பீட்டர்

“என்னம்மா, தாஸ் இன்னும் வரலையா? மகா வீம்பு பிடிச்ச மனுஷனாச்சே… நீயும் அப்பாவுக்குப் பிள்ளையை விட்டுக் கொடுக்காமலேயே இருக்கிறீயே… உங்க ரெண்டு பேர் மனசுக்கும் அந்தக் கர்த்தர்தான் அமைதியைக் கொடுக்கணும்…”

ரோஸி தன் பிள்ளையுடன் நடந்தாள். வெளியே நிறுத்தியிருந்த காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

வழிநெடுகிலும் மின்னும் விளக்குகள், அலங்காரத் தோரணங்கள், வரப்போகும் கிறிஸ்துமஸ் பெருநாளை நினைவுபடுத்தின. நினைக்கும்போது மனம் வலிகண்டது. எட்டு ஆண்டுகளாய் அவள் முடங்கிக் கிடக்கும் நிலையை அந்தக் கர்த்தர் கூடவா அறியவில்லை. என்னமாய்ச் சிறகடித்துப் பறந்தவள் இந்த ரோஸி.

“மேரி… உன்னோட பொண்ணுக்குக் கால்ல கட்டுப் போட்டு வைக்கக்கூடாதா… அவிழ்த்து விட்ட கன்னுக் குட்டியாட்டம் துள்ளாட்டம் போடறாளே…’ என்று லூர்தம்மாள் சொல்ல..

“அவளுக்கு ஏன் கால்ல கட்டுப் போடணும். பேசாம ஒரு கல்யாணம் பண்ணிட்டா தானா அடங்கிப் போறா” என்று அடைக்கலமேரி சொல்வாள். அதைக் கேட்டு மேரிக்கு மகிழ்ச்சியும் கவலையும் சேர்ந்து கொள்ளும்.

அடைக்கல மேரி சொன்னதுதான் பலித்துப் போனது. ரோஸிக்கு அவ்வளவு விரைவில் கல்யாணம் நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. தனக்குப் பிடித்திருப்பதாகச் சொல்லி ஆஜானுபாகுவான ஒருத்தனைக் கொண்டுவந்து பெற்றோர்களின் முன்னால் நிறுத்தியபோது வீட்டில் எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை அவளுக்கு.

ஊரே வியக்கும் வண்ணம் மணவிழா நடந்தது. எல்லோரும் பாராட்டினார்கள். வாழ்த்தினார்கள். எல்லாம் இரண்டு வாரம்தான்.

யாரை நல்லவன் என்று நம்பி, தன்னை அவனிடம் ஒப் படைத்தாளோ அவன் ஒரு முழுப் பொய்யனாய் அவளுக்குத் தக்க நண்பர்களால் அடையாளம் காட்டப்பட்டான். ஏற்கெனவே கல்யாணம் ஆனவன். இன்னொருத்தியோடு குடும்பம் நடத்துபவன். ஊரெங்கும் கடன் வாங்குபவன். குடிகாரன்…இன்னும் என்னென்ன அயோக்கியத்தனங்கள் உண்டோ அத்தனைக்கும் அவன் உரிமையாளன் என்று தெரிய வந்தபோது அவள் பாறையாய் இறுகிப் போனாள்.

மறுநாளே தாய் வீட்டில் அவள் அடைக்கலம் ஆனாள். அருமை மகளின் வாழ்வு அநியாயமாய், பாழாய்ப்போன அதிர்ச்சியில் அருமைத் தாயார் அடைக்கலமேரி அப்போதே கர்த்தரின் திருவடியில் அடைக்கலமானாள்.

“ரோஸியின் நெஞ்சில் எரிமலை வெடித்தது. எந்தத் தப்பும் செய்யாத எனக்கு ஏன் இந்தத் தண்டனை” என்று இரவு பகலாய் அழுதாள்.

பலமுறை முயன்ற அவளின் அப்பா மரியதாஸ் அவள்மேல் கோபித்துக் கொண்டு அன்பு மகளின் வீட்டை விட்டுப் போனவர்தாம் இரண்டு மாதமாகியும் இன்னும் வீடு திரும்பவில்லை.

கார், சாலைச் சந்திப்பில் நின்றது. வழக்கத்திற்கு மாறாக நெருக்கடிதான். எல்லாமே கிறிஸ்துமஸ் கொண்டாட்ட ஷாப்பிங் என்பது பார்த்தாலே தெரிந்தது. பக்கத்து சீட்டில் அமர்ந்து புத்தகம் புரட்டிக் கொண்டிருக்கும் மகனைப் பார்க்கிறாள்.

“என்ன குற்றம் செய்தான் இந்தப் பிள்ளை. இவனுக் காகவாவது நீ மறுமணம் செய்துகொள்ள வேண்டாமா மகளே…! பிற்காலத்தில் இந்தப் பிள்ளைக்கொரு கௌரவம் வேண்டாமா…இவன் அப்பன் பேர் தெரியாத பிள்ளை யாகவே வாழ வேண்டுமா?”

மகளின் முகத்தைப் பார்த்து அன்றைக்கு அவள் அப்பா சொன்ன சொல் அவள் காதில் பட்டு நெஞ்சில் அழுத்துகிறது.

“உன்னால அவனுக்கு எல்லாத்தையும் வாங்கிக் கொடுக்க முடியும்… ஆனால் ஒரு தகப்பனை வாங்கித்தர முடியுமா… தகப்பனோட அன்பையும், ஆதரவையும் உன்னால… உன் படிப்பால.. உன் செல்வத்தால நீயும் இவனுக்குக் கொடுக்க முடியாது மகளே… அதை ஒரு தகப்பன்தான் கொடுக்க முடியும்… வீணா வைராக்யம் பேசி இவனோட எதிர்காலத்தைக் கேலியாக்கிடாதே.. நாலு பேருக்கு முன்னால தலைகுனிய வைச்சுடாதே..”

அப்பாதான் அப்படிச் சொன்னார். அந்த வார்த்தைகள் அப்போது நெருப்பாய்… வெறுப்பாய் இருந்ததால் அப்பாவைக் கோபத்தால் திட்டிவிட்டாள்.

“என்னோட வார்த்தைக்கு நீ மதிப்பளிக்காத வரைக்கும் நான் இந்த வீட்டுக்கு வரமாட்டேன். உனக்கு நான் வேணும்னா… உன்னோட அப்பா உனக்கு வேணும்னா உன் பிள்ளைக்கு ஒரு அப்பாவைத் தேட எனக்கு அனுமதி கொடு.. ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடு”

என்ற வார்த்தையோடு சென்றவர்தாம். இன்றுவரை திரும்பவில்லை. அவரையும், அவரது அன்பையும் நினைக்க நினைக்க இப்போது அழுகை வருகிறது ரோஸிக்கு.

தாய் பிள்ளையைப் பத்து மாதம் வயிற்றில் சுமக்கிறாள். தந்தையும் காலம் முழுமைக்கும் நெஞ்சில் சுமக்கிறார் என்பதைக் கடந்தகாலம் வந்து அறிவுறுத்தியது.

அப்பாவுக்கோ மகளுக்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்ற வைராக்யம், மகளுக்கோ இந்த உலகில் எந்த ஆடவனுமே நல்லவன் இல்லை.. அதனால் ஆண் துணை இல்லாமலேயே நான் வாழ்ந்து காட்டுவேன், என் பிள்ளையை வளர்த்துக் காட்டுவேன் என்ற வைராக்யம்.

அந்த வைராக்யம்தான் இன்றைக்கு அப்படியொரு பிரிவை உண்டுபண்ணி மனத்தைச் சஞ்சலப்படுத்தியது.

சிவப்பு விளக்கு மறைந்து சாலையில் வாகனங்கள் நகரத் தொடங்கிவிட்டன. எங்கோ நினைவைப் பதித்திருந்த ரோஸி பின்னாலிருந்த வாகனத்தில் உரிமையாளர் கொடுத்த எச்சரிக்கை ஒலிக்குப்பின் காரை எடுக்கிறாள். கண்ணாடியில் பின்னால் வரும் காரின் ஓட்டுநர் முகம் தெரிகிறது. அவளது கவனம் தன்மேல் படுவதை உணர்ந்தவராய் அந்த இளைஞர் கைகளால் எதையோ சொல்கிறார். ரோஸிக்கு என்னவோ போல் ஆகிறது. காரை வேகமாய்ச் செலுத்திவிட்டுப் பறக்கிறாள். அவள் வந்து நின்றதும் அந்தக் காரும் பின்னாலேயே வந்து நிற்கிறது.

மனத்தில் பயமும், கோபமுமாய்க் காரில் இருந்து இறங்கி அவரிடம் வருகிறாள். அதற்குள் அவரும் இறங்கி வருகிறார். இருவரும் சிறிது நேரம் பார்க்கின்றனர். முகத்தில் புன்னகை தவழ்கிறது. ஆர்வத்துடன் அவர் கையைப் பற்றிக் குலுக்குகிறாள்.

“இத்தனை நாளா எங்கே போயிருந்தே ஜோன். உன்னைப் பார்த்தே பத்து வருஷத்துக்கு மேலே இருக்கும் போலிருக்கே… ஆள் ஆள் ரொம்ப மாறிட்டே.. பெரிய மனுஷனாட்டும் இருக்கிறியே..!”

மனம் திறந்த உரையாடல் தொடர்கிறது. இருவரும் நீண்ட நேரம் பேசுகிறார்கள். கடந்து போன காலத்தில் நடந்துவிட்ட அவலத்தை அவள் அவனிடம் கூறுகிறாள். அப்பா கோபமாய்ப் போனதைச் சொல்கிறாள். வரப்போகும் கிறிஸ்துமஸ்கூடத் தனக்கு மகிழ்ச்சி இல்லாத நாள்தான் என்கிறாள். அவள் மடியிலிருந்த பையனை ஆர்வமாய்த் தூக்கித் தன் மடியில் வைத்து முத்தமிட்டான். அவளிட மிருந்து விடைபெறுகிறான்.

ரோஸிக்கு இரவு பூராவும் ஜோனின் நினைவாகவே இருந்தது. வாழ்க்கையில் ஒரு உன்னத நிலையை அடைந்த பின்பே பிறந்த மண்ணை மிதிப்பேன் எனறு ஒரு வைராக் கியத்துடன் சின்ன வயதில் வெளிநாட்டிற்கு ஒரு டாக்டரின் வேலைக்காரப் பையனாய்ப் போனவன். இன்றைக்குப் படித்துப் பட்டம் பெற்று ஒரு டாக்டராகவே திரும்பியிருக்கிறான் என்றால்… அவனது வைராக்யம் போற்றப்பட வேண்டியதுதானே…

ஆனால் தனக்குள் மூடிவைத்துள்ள வைராக்யம் அழுத்தமுள்ளதா..? அதனால் எதிர்காலத்தில் என்ன பயன் கிடைக்கும்… காலா காலத்திற்கும் இதே தனிமை… இதே கவலை..! இதனால் எதைச் சாதிக்கப் போகிறாள்.

“ஒவ்வொரு விஷயத்திற்கும் ஆரம்பம் ஒன்று இருந்தால் முடிவுன்னு ஒன்னு இருக்கும்… மத்தவ பாரத்தைத்தான் சுமக்க விரும்பித்தானே தேவகுமாரன் சிலுவையைத் தன் பூப்போன்ற மேனியில் சுமந்தார்.. உன் பிள்ளைக்காக நீ ஏன் மறுபடியும் ஒரு வாழ்க்கையை ஒத்துக்கக் கூடாது. நமக்கு வேண்டியவங் களுக்காகச் சோகங்களைக் கூடச் சுகமா நினைச்சு சுமக்கிற மனப் பக்குவம் நமக்கு வந்துட்டா கல்லும் முள்ளும் நிறைந்த காடுகூடச் சோலையா மாறிடும் ரோஸி. நீ கொஞ்சம் யோசனை பண்ணு..

எவ்வளவு தீர்க்கமாய்ப் பேசுகிறான் அவன். ஆச்சரியம் தான், காலத்தின் விளையாட்டில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்! அந்த மாற்றங்களின் உதாரணமாய்த்தான் ஜோன் தெரிந்தான். அதே நினைவில் உறங்கிப் போனாள்.

மறுநாள் பொழுது விடிந்தபோது எங்கிருந்தோ ஓடிவந்து ஒருவித சோகம் உடம்பில் ஒட்டிக்கொண்டது. மறைந்து போன தாயும், பிரிந்து போன தந்தையும் நினைவில் நின்றார்கள். குளித்தாள். தூய உடையணிந்தாள். பிள்ளைக் காக வீட்டை அலங்கரிக்க ஆரம்பித்தாள். சின்னச் சின்ன மின்விளக்குகள் கண்சிமிட்ட ஆரம்பித்தன. பையன் உற்சாகமாய் விளையாட ஆரம்பித்தான். வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. வெளியே வந்து பார்த்தாள். கை நிறைய பரிசுப் பொருள்களும், மலர்க்கொத்துமாய் ஜோன் வந்து கொண்டிருந்தான். அம்மாவின் பின்னால் வந்து நின்ற பையனின் கையில் அவற்றைக் கொடுத்தான்.

“உனக்கு ஒரு பரிசு கார்ல காத்திருக்கு ரோஸி.. போய்ப் பாரேன், ஜோன் ரோஸியிடம் சொன்னான். அவள் காருக்குப் போனாள். கதவைத் திறந்ததும் உள்ளே அமைதியாய் உட்கார்ந்திருக்கும் அப்பா அவளைப் பார்த்து புன்னகை புரிகிறார். அப்பா என்று அவர் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பிக்கிறாள் ரோஸி. அப்பாவும் மகளும் வீட்டிற்குள் நுழைகின்றனர்.

“உன்னோட அப்பாவை ஜோன் உனக்குக் கொண்டு வந்து காட்டிட்டாரு ரோஸி, உன் பிள்ளையோட அப்பாவை அவனுக்கு நீ என்றைக்குக் காட்டப் போகிறாய் மகளே…’

தன் கைக்குள் மகளை அணைத்துக்கொண்டு மரியதாஸ் ஆர்வமாய்க் கேட்கிறார்.

“கவலைப்படாதீங்கப்பா…கர்த்தர் என்னை ஆசீர்வதிச்சு தான் ஜோனை நம்மகிட்ட அனுப்பியிருக்கணும். நேற் றைக்குதான் கர்த்தரோட கருணையினால் நாளைக்கு உனக்கு நல்லது நடக்கும்னு ஜோன் சொன்னாருப்பா… அந்த நல்லது என்னன்னு இப்ப தெரிஞ்சு போச்சுப்பா..”

எழுந்து போனார். மகனைத் தன் அருகில் அழைத்தாள். “மகனே அப்பாவுக்கு உன் அப்பாவுக்குத் தோத்திரம் சொல்லிக்க.”

சொன்னவள் அவனை ஜோனின் கையில் கொடுத்து அவன் கால்களில் பணிகிறாள். அவன் நீர் தளும்பும் விழி களோடு அவர்களைத் தன்னோடு சேர்த்துக் கொள்கிறான்.

நல்லவனோடு ஒரு உன் வாழ்க்கை மீண்டும் தொடங்கும்போதுதான் உன்னிடம் வருவேன் என்ற அந்தப் பரிசுத்த மனம் கொண்ட மனிதரின் வைராக்யம் வென்றது. தன் பிள்ளைகளைத் தன்னோடு சேர்த்து முத்த மழை பொழிந்தார்.

– தமிழ் முரசு 24-12.95.

– கவரிமான் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: அக்டோபர் 2007, சீதை பதிப்பகம், சென்னை.

சிங்கை தமிழ்ச்செல்வம் நூலாசிரியர் பற்றி... - மனங்கவர் மலர்கள், முதற் பதிப்பு: ஜூன் 2005 இலக்கிய வடிவங்களில் சிறுகதை. புதினம், கட்டுரை, உரைவீச்சு போன்ற அனைத்து நிலைகளிலும் சிந்தனையை வெளிப்படுத்துகின்ற ஆற்றல் மிக்கவராக மதிக்கப்படுகின்ற சிங்கை. தமிழ்ச்செல்வம் அவர்களை 1995-ம் ஆண்டு முதல் நான் நன்கு அறிந்து வைத்து உள்ளேன். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் உறுப்பியம் பெற்றுத் தொண்டாற்றினார். துணைச் செயலாளர் பொறுப்பேற்றுத் துணை நின்றார். கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராய்த் தொடர்ந்து…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *