விண்ணும் மண்ணும்




(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அழகான இடத்தில்தான் கடவுள் இருக்கிறார் என்றால், அவர் அங்குதான் இருக்க வேண்டும். ஆமாம். அதைவிட அழகான இடம் வேறு எங்கு தான் காணமுடியும்?… காலை இளம் பரிதியின் பொன் னொளி தூவும் அழகு ஜாலம் எப்படிக் கண்ணைக் கவர்கிறது! உருவற்று ஓடித் திரியும் மேகங்கள்கூட அதற்கு வேளைக்கு ஓர் வனப்பு அளிக்கிறது. சுட்டெரிக் கும் சூரியன் அவ்விடத்து ஜோதி அன்றோ? மாலை நேரங் களிலே அந்த ஒளிக்கோளம் என்னென்ன வர்ண வேடிக் கைகளை உண்டாக்குகிறது!..இரவு ஆ, என்ன மோகனம்! யாரோ தேவமகள் தீட்டிய – வைரப் புள்ளிகளால் ஆக் கிய – கோலம்போல் மலர்ந்து கிடக்கும் நட்சத்திரத் தாகுப்பு. அக்காட்சியை விட்டுக் கண்களைத் திருப்ப முடியவில்லையே. எல்லாவற்றுக்கும் மேலாக, அமுத ஒளி அள்ளித்தெளிக்கும் சந்திரன்…. ஆம், கடவுள் அங்கு தான் இருக்கவேண்டும். அவ்வழகுகளுக்கிடையே அவர் எங்கு மறைந்திருக்கிறாரோ, அதுதான் தெரியவில்லை.”
இவ்விதம் மண்ணுலகம் வானை நோக்கி ஏங்குகிறது. ஆனால், வானகம் மண்ணை நோக்கி நெடுமூச்செறிகிறது-
“என்ன அழகு! எத்தகைக் கவர்ச்சி! கீழே தெரி யும் வனப்புக் காட்சிகள் நெஞ்சை அள்ளும் தன்மையன. மலைகளும், மரங்களும், மலர் செறிந்த வனங்களும், நீர் நிலைகளும் – ஆகா,அதுவே அழகின் ஆலயம். சந்திரி கையில் அவை எல்லாம் எப்படி பளபளக்கின்றன! சூரி காந்தியிலே அவை தகதகக்கும் பொழுது என் மனம் துள்ளுகிறது. ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் நீர் நிலைகள் காட்டும் எழில் காட்சிகள் – காலைக் கதிரொளியில் அவை தெறிக்கும் பிரகாசமும், மத்தியான வேளைகளில் துள்ளும் பாதரசப் பரப்பென வெள்ளிக் கதிர்களை மினுக்கிக் தெறிப்பதும், மாலைப் பொன்னிறத்தைப் பிரதிபலிப்பதும், சந்திரனின் வனப்பையும், விண்மீன்களின் மோகனத்தையும் எடுத்துக் காட்டுவதும் – அற்புதம், அற்புதம்! கடவுள் – அழகின் தேவன் — அங்குதான் இருக்க வேண்டும்.”
உலகைத் தினம் தினம் கண்டு ஏங்கும் வானம், மண்ணிலே கடவுளைக் காணத் தவிக்கிறது. கண்ணீர சொரிகிறது – பனியாகவும், மழையாகவும்.
மண்ணகமோ விண்ணிலே கடவுளைக் காண மலைக் கரம் அலைக்கரம் நீட்டி அங்கலாய்க்கிறது.
ஆனால், இவ்விரண்டுக்கும் இடையே கிடந்து அலைந்து திணறும் மனிதர்களோ?
– வல்லிக்கண்ணன் கதைகள், முதல் பதிப்பு: ஜூன் 1954, கயிலைப் பதிப்பகம், சென்னை.