வாழ்க்கை எனும் கவிதை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 12, 2025
பார்வையிட்டோர்: 187 
 
 

அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-23

அத்தியாயம் – 19

”ஏன் திவ்யா அழுகிறாள்?”

“என்ன ஜெயமோகன் எப்போது வந்தாய்? காபி சாப்பிட்டாயா?” என்று கேட்டான்.

“எல்லாம் ஆயிற்று”

“நான் சொன்ன விசா விஷயம் என்னாயிற்று?”

“கூடிய சீக்கிரம் ஆகிவிடும்”

‘’என்ன? ஏதோ ஒரு மாதிரியாய் இருக்கிறாய்? புவனா ஏதாவது சொன்னாளா? புவனா? ஏய்.. புவனா? இவள் எங்கே போனாள்?”

“உங்கள் பெண் திவ்யாவை பள்ளியில் கொண்டு விடுவதற்கு போயிருக்காங்க’”

“என்ன ஜெயமோகன் உடல் நிலமை சரியில்லையா? குரல் கூட ஒரு மாதிரி இருக்கு?”

“அதெல்லாம் ஒன்றுமில்ல வரட்டுமா?” என்று எழுந்து சென்றான் ஜெயமோகன்.

புவனா முடிவு பண்ணித் துணிகளை எல்லாம் தன் பெட்டியில் எடுத்து வைத்தாள். “அத்தா நீ ஏன் துணியெல்லாம் அடுக்கிறே. நாம் எங்கேயாவது போகிறோமா?” என்று கேட்டாள் திவ்யா.

“நான் எங்க வீட்டுக்குப் போகிறேன்”.

“நானும் வருவேன்.”

“வேண்டாம் நீ உங்கள் அப்பா கூட இருந்துகொள். நான் எங்க அம்மா கிட்டே போகிறேன்.”

“என்னையும் கூட்டிக் கொண்டு போயேன்.”

“அப்படீன்னா என்னை அம்மா என்று கூப்பிடு.”

“அய்யே அம்மா மொம்மை கொண்டு வர கடவுள் கிட்ட போயிருக்காங்க. நீ அத்தா”

“என்னை அம்மா என்று கூப்பிட மாட்டாயா?”

“ம்கூம். நீ அத்தா தானே. அப்புறம் எப்படி அம்மான்னு கூப்பிட முடியும்?”

“அப்போ நான் எங்கம்மாகிட்ட போகிறேன்.”

“நானும் வருவேன்”

“உன்னைக் கூட்டிக்கொண்டு போக மாட்டேன்.” என்று புவனா சொன்னதும் “ஓ” வென்று அலறிக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள் திவ்யா.

அங்கு வந்த சிவா ”ஏன் திவ்யா அழுகிறாள்?” என்று கேட்டவன் “எங்கே கிளம்பி விட்டாய் புவனா?” என்று கேட்டான்.

“எங்க அம்மாவிடம் போகிறேன். எனக்கு ஊருக்குப் போவதற்கு டிக்கெட் எடுத்துக் கொடுங்கள்.”

அத்தியாயம் – 20

“முடிவே பண்ணி விட்டாயா?”

“என்ன தீடீரென்று அம்மா நினைவு வந்து விட்டதா? சரி வந்து ஆறு மாதம் ஆகி விட்டது. ஒரு முறையும் நீயும் திவ்யாவும் ஊருக்குப் போய் விட்டு வருவது தான் நல்லது.”

“நான் தனியாகத்தான் எங்கள் ஊருக்குப் போகப் போகிறேன்.”

“என்னாச்சு புவனா?”

“நான் போராடிப் பார்த்து விட்டேன் அத்தான். உங்கள் மூத்த மனைவி அதாவது திவ்யாவின் அம்மா அவள் மனதில் ஆழமாகப் பதிந்து போயிருக்கிறார்கள். என்னை திவ்யா ‘அம்மா’ என்று கூப்பிடுவாள் என்று எதிர்ப் பார்த்தது என் தப்புதான். அவளை என்னால் ஜெயிக்க முடியாத போது நான் இங்கே இருப்பதில் அர்த்தமில்லை அத்தான். நான் எவ்வளவு சொல்லியும் ‘அத்தா’ என்று தான் கூபிடுறாளே ஒழிய ‘அம்மா’ சொல்ல மறுக்கிறாள்.”

“அதனாலே உடனடியாக ஊருக்குப் புறப்பட்டு விட்டாயா?”

“உங்களுக்குக் கிண்டலாகவோ கேலியாகவோ கூட இருக்கலாம்.”

“பின்னே என்ன.. இந்தச் சின்னப் பெண் உன்னை அம்மா என்று கூப்பிட வில்லை என்று சொல்லி ஊருக்குக் கிளம்புகிறாயே.”

“நான் திவ்யாவின் மனதில் இடம் பிடித்து விட நினைத்தேன். நான் தான் அவளுக்கு அம்மா, அவளுக்கு எல்லாம் என்று உணர வைத்து ஜெயித்து விட நினைத்தேன். முடியவில்லை. கிளம்புகிறேன்.”

“முடிவே பண்ணி விட்டாயா?”

“என் முடிவில் மாற்றமேயில்லை.”

“சரி எப்போது கிளம்புகிறாய்? திவ்யாவை கூட்டிக்கொண்டு போகிறாயா?”

“என்னை மன்னித்து விடுங்கள் அத்தான். அவளால் என்னை அம்மாவாக பாவிக்க முடியாத போது எனக்கு இந்த உறவே தேவையில்லை என்ற முடிவோடு தான் கிளம்புகிறேன்.”

“அதாவது என்னைக் கூட உதறி விட்டுப் போகிறாயா?”

“வேறு வழியில்லை”

“நான் செய்த தவறைச் சொல்லி விட்டுப் போனால் எனக்குள் உணர்ந்து திருத்திக் கொள்ள முடியும்.”

“இனி உணர்ந்து என்ன பிரயோஜனம்?”

“சரி நான் என்ன தவறு செய்தேன் என்றாவது சொல்லி விட்டுப் போ.”

“நீங்கள் நினைத்திருந்தால் திவ்யாவிடம் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லி அவள் மனதில் நான் தான் அம்மா என்று பதிய வைத்திருக்க முடியும்.”

“நான் அதற்கு முயற்சி செய்யவில்லை என்று நினைக்கிறாயா?”

“ஆமாம். எது வேண்டுமானாலும் ‘அத்தா’விடம் கேள் என்று தான் அவளிடம் சொன்னீர்களே யொழிய ‘அம்மாவிடம்’ போய்க் கேள் என்று சொன்னதே யில்லை.”

“ஓ” இவ்வளவு பெரிய அபாண்டத்தை என் மேல் தூக்கிப் போடுகிறாயா?”

“அத்தான் இது அபாண்டமில்லை. பொய்யுமில்லை. வலிக்கக் கூடிய உண்மை. தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு ஊருக்குப் போவதற்கு ரயில் டிக்கெட் ஏற்பாடு செய்யுங்கள்.”

கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டிருந்த சிவா, “ஓகே. நாளைக்கே இரயில் டிக்கெட்டிற்கு ஏற்பாடு செய்கிறேன்.” என்று கொஞ்சம் வருத்தத்தோடு திவ்யாவை பிடுங்கிக் கொண்டு வெளியே வந்தான் சிவா.

அத்தியாயம் – 21

திவ்யாவைக் காணவில்லை

சூரியனின் கதிர்கள் பட்டு முகம் விழித்த சிவா ‘எப்படி இவ்வளவு நேரம் தூங்கினோம். புவனா நம்மை விட்டுப் போகிறாள் என்ற ஏக்கத்திலேயே நேற்று முழுவதும் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து எப்போது தூங்கினோம்’ யோசித்துக் கொண்டே எழுந்தவன் அருகில் படுத்திருந்த திவ்யாவைக் காணாது எழுந்து போய் பாத்ரூமில் அவளைத் தேடினான். திவ்யா அங்கே இல்லாததால் கதவைத் திறந்து வாசலில் பார்த்தான். அங்கேயும் திவ்யாவைக் காணவில்லை.

சிவாவிற்குள் பதற்றம் பற்றிக் கொள்ள, புவனாவை எழுப்பினான். “புவனா திவ்யாவைக் காணவில்லை” என்று தேட ஆரம்பித்தான்.

“அடுத்தத் தெருவிலே பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருப்பாள் போய்ப் பாருங்கள்” என்று எழுந்து முகம் கழுவினாள்.

திவ்யாவை அடுத்தத் தெருவிலும் காணாது வீட்டிற்கு வந்த சிவா, “புவனா அவளைக் காணவில்லை” என்று சொன்ன போதே அவனுக்கு அழுகை எட்டிப் பார்த்தது.

“எங்கே போயிருப்பாள். நீங்கள் இந்தப் பக்கம் போய்ப் பாருங்கள். நான் இந்தப் பக்கம் போய்ப் பார்க்கிறேன்.” என்று தலை முடியை முடிந்து கொண்டு எதிர்த் திசை நோக்கி திவ்யாவைத் தேடிக் கிளம்பினாள்.

திவ்யாவைக் காணாது இருவரும் திரும்பி வந்து வாசலில் வந்தமர்ந்த போது, “என்னாச்சு” என எதிர் வீட்டு ஆங்கிலோ இந்தி டீச்சர் கேட்டாள்.

“திவ்யாவைக் காணவில்லை” என்று சிவா சொல்ல, பக்கத்து வீட்டு மராட்டியப் பெண், “மூத்தோடியாள் இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்கிமா? இவள் பெற்ற பிள்ளை என்றால் குழந்தையைக் காணவில்லை என்று சும்மா அமர்ந்து கொண்டிருப்பாளா?” என்று

சொல்வது கொஞ்சம் கொஞ்சம் புரிய ‘ஓ’ வென்று சப்தம் போட்டு அழ ஆரம்பித்தாள்.

பக்கத்து வீட்டிலுள்ளோர் எல்லோரும் கூடி விட போலிஸில் கம்ப்ளைண்ட் கொடுக்கலாம் என் மைத்துனன் கூட போலிஸ் இன்ஸ்பெக்டராகத்தான் வேலை செய்கிறான்” என்றார் பெட்னேக்கர். மூன்றாவது வீட்டில் வசிக்கும் மஹராஸ்டிரியன்.

“மை போட்டு தேடலாம்” என்றாள் அந்தப் பக்கம் வந்த பூக்காரப் பெண். எல்லோரும் ஆளாளுக்கு ஒவ்வொன்றாய் சொல்லிக் கொண்டிருக்க “திவ்யா நீ எங்கே போனாஸ்ரீ?” என்று பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள் புவனா.

எதி வீட்டு டீச்சர் “ஸ்கூல் பை இருக்கிறதா பாருங்கள்” என்று சிவாவிடம் கேட்டாள்.

உள்ளே வந்து பார்த்து விட்டு “திவ்யா ஸ்கூல் பையை எடுத்துக் கொண்டுதான் கிளம்பியிருக்கிறாள்” என்றான் சிவா.

“வாங்க போய் ஸ்கூலிலே பார்த்து விட்டு வந்து விடலாம்” என்றாள் டீச்சர்.

புவனாவும் சிவாவும் டீச்சரோடு ஸ்கூலுக்கு வர முன் வரண்டாவில் ஸ்கூல் பையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதுக் கொண்டிருந்தாள் திவ்யா.

“திவ்யா” என்று கத்திக் கொண்டு போய் அள்ளி எடுத்தாள் புவனா. சிவாவும் அவளை வாங்கி முத்தமிட்டு முகர்ந்தான்.

“ஏம்மா இப்படி செய்தே. இவ்வளவு சீக்கிரம் ஏன் ஸ்கூலுக்கு வந்தா?” என்றான் சிவா.

“அப்பா நீதானே சொன்னே புவனா அத்தா ஊருக்குப் போனதிலிருந்து நீதான் தனியாக ஸ்கூலுக்குப் போய் வர பழகிக்கொள்ளனும் என்று. கொஞ்சம் சீக்கிரம் ஸ்கூலுக்கு வந்துட்டேன். இங்கே யாருமில்லாததைப் பார்த்து பயந்து அழுது விட்டேன்”

“சரி அப்பா. அத்தா நீ ஏன் அழறே. நீ ஊருக்குப் போகலியா?”

“நான் சாயங்காலம்தான் ஊருக்குப் போகிறேன் திவ்யா. வா வீட்டுக்குப் போகலாம்” என்று சிவாவிடமிருந்து வாங்கிக் கொண்டாள்.

“போன் வந்திருக்கிறது” என்று பக்கத்து வீட்டுப் பெண் சொல்ல, சமையல் செய்து கொண்டிருந்த புவனா, கையைக் கழுவிக்கொண்டு முந்தானையில் துடைத்தவாறு வந்து போனை எடுத்தாள்.

அத்தியாயம் – 22

ஊருக்குப் போவதற்கு டிக்கெட்

“புவனா நான் சிவா பேசுகிறேன்”

“சொல்லுங்க அத்தான்”

“திவ்யா என்ன பண்ணிக் கொண்டிருக்கிறாள்?”

“தூங்குகிறாள்”

“உனக்கு ஊருக்குப் போவதற்கு டிக்கெட் கிடைத்து விட்டது”

“ரயில் எப்போது?”

“சயங்காலம் ஏழு ஐம்பதுக்கு தாதரிலிருந்து புறப்படுகிறது.”

“நீங்கள் வந்து என்னைக் கூட்டிக் கொண்டு போவீர்களல்லவா?’’

“இல்லை எனக்கு கொஞ்சம் வேலையிருக்கிறது. நான் நேரடியாக ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்டு விடுகிறேன்.”

“திவ்யா”

“அவளை எதிர் வீட்டு டீச்சர் வீட்டிலே விட்டு விட்டு வந்து விடு. துணிமணி எல்லாம் எடுக்க வேண்டும் என்றாயே. எடுத்து விட்டாயா?”

“அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை.”

”ஊருக்குப் போவது என்று முடிவு பண்ணி விட்டாய். அப்படித்தானே?”

“எல்லாவற்றிற்கும் நீங்கள் தான் காரணம்”

“நானா? புவனா என்ன சொல்கிறாய்?”

“அத்தான் நான் ஊருக்குப் போவதற்கு டிக்கெட் எடுத்தது நீங்கள் தான். திவ்யாவிடம் நான் இல்லாமல் தனியாக பள்ளிக்குப் போவதற்கு தயார் செய்து கொள்ளச் சொன்னது நீங்கள்தான்.”

இதையெல்லாம் விட மிக வருத்தம் தந்த விஷயம் நீங்கள் என்றைக்காவது திவ்யாவிடம் என்னை நோக்கி அம்மா என்று கூப்பிடச் சொல்லியிருப்பீர்களா? எப்போதுமே அவளிடம் ‘அத்தா’ என்றுதான் சொன்னீர்கள். நான் புதிதாக வந்தவள். அவள்

எவ்வளவு தான் என்னோடு ஒட்டினாலும் உங்களோடு பாசமாக இருந்தவள்.”

நீங்கள் என்ன சொல்லியிருந்தாலும் கேட்கும் நிலையிலிருக்கிறாள். அவளிடம் கனிவாக புவனா ‘அத்தா’தான் இனி உனக்கு அம்மா… அவளை அம்மா என்று கூப்பிடு என்று சொல்லியிருந்தால் கண்டிப்பாக அவள் உணர்ந்திருப்பாள்.

என்னைப் பொறுத்தவரைக்கும் அவள் என்னை அம்மா என்று கூப்பிட வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு விருப்பமில்லை என்கிற போது நான் இங்கே இருப்பதில் அர்த்தமில்லை என்று தான்தோன்றுகிறது.”

“சரி இவ்வளவு பெரிய பழியை என் மேல் தூக்கிப் போடுகிறாயே! என்றாவது ஒரு நாள் அத்தான் திவ்யாவிடம் என்னை அம்மா என்று கூப்பிடச் சொல்லுங்கள் என்று நீ சொல்லியிருக்கலாமே”

“இதெல்லாம் நீங்களாக அடி மனதிலிருந்து எழும் விருப்பத்தில் செய்ய வேண்டியது. இதை நான் சொல்ல வேண்டியதில்லை.”

“சரி தப்புதான் அதற்காக..”

“அத்தான் நான் புறப்பட்டாகி விட்டது. சாயங்காலம் ஸ்டேஷனில் பார்ப்போம். எந்த பெட்டியில் என் இருக்கை நம்பர் என்ன என்று சொன்னால், நீங்கள் வருமுன் நான் ரயிலில் போய்

அமர்ந்து விடுவேன். நீங்கள் வந்து டிக்கெட்டைத் தந்து விட்டுப்போகலாம்.”

“முடிவு பண்ணிவிட்டாய், பரவாயில்லை. டாக்ஸி பிடித்து நேரே தாதர் ஸ்டேஷன் வந்து விடு அதிகமாக யாரிடமும் பேச்சுக் கொடுக்காதே. உனக்கு இந்தித் தெரியாது என்று மற்றவர்களுக்குத் தெரிந்தால் பிரச்சனையாகி விடும்.”

“சரி”

“நான் ரயில் நிலையத்திற்கு வரும்போது நான்கைந்து சேலைகள் எடுத்துக் கொண்டு வருகிறேன். மிட்டாய் ஏதாவது வாங்க வேண்டுமா?”

“உங்களுக்கு என்னத் தோன்றுகிறதோ வாங்கி வாருங்கள்.”

“ஏன் இப்படியாக பேசுகிறாய்?”

“விரக்தி எல்லாம் ஒன்றுமில்லை.”

“சரி. சாயங்காலம் பார்க்கலாம். பெட்டி எண், இருக்கை எண் சொல்லுகிறேன் எழுதிக் கொள்.”

“சொல்லுங்கள் நினைவில் வைத்துக் கொள்கிறேன்.” என்றாவாறு கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் புவனா.

அத்தியாயம் – 23

பயணச் சீட்டு

டாக்ஸி டிரைவருக்கு ஆங்கிலத்தில் எவ்வளவு பணம் என்று கேட்டு வாடகை தந்து விட்டு பெட்டியை எடுத்துக் கொண்டு தாதர் ஸ்டேஷனுக்குள் நுழைந்தாள் புவனா.

அருகில் நின்ற டிக்கெட் பரிசோதகரிடம் மும்பை நாகர் கோவில் எக்ஸ் பிரஸ் எந்தப் ப்ளாட் பாரத்திலிருந்து புறப்படும் என்று கேட்டுக் கொண்டு மூன்றாவது ப்ளாட்பாரத்திற்கு புவனா வந்த போது மும்பை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் வந்து நின்றது.

எல்லோரும் தங்களுடைய பயணச் சீட்டுகளை சரிபார்த்துக் கொண்டு அவரவர் இருக்கைகளின் மேலேயும் கீழேயும் கொண்டு வந்த பைகளையும் வைத்து விட்டு பயணத்திற்கு தயராகிக் கொண்டிருந்தார்கள்.

புவனா எஸ் மூன்றாவது பெட்டியைத் தேடி அதில் பதின்மூன்றாம் எண் இருக்கையில் அமர்ந்தாள். ஜன்னல் வழியாக சிவா வருகிறானா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

அருகிலிருந்த பெண்மணி “எந்த ஊருக்குப் போகிறாய்?” என்று கேட்டாள்.

“திருநெல்வேலிக்கு” என்றாள்.

‘’தனியாகவா பயணம் செய்யப் போகிறாய்?”

“ஆம்” என்று பதிலளித்த போது சிவா அங்கு வந்து சேர்ந்தான்

அருகில் வந்த சிவா “துணி எடுப்பதற்கு கொஞ்சம் லேட்டாகி விட்டது. இந்தா இதில் கொஞ்சம் துணிமணிகளும் ஐந்து சேலைகளும் வாங்கி வைத்திருக்கிறேன். கொஞ்சம் மிட்டாயும் வாங்கி வைத்திருக்கிறேன்.” என்று பைகளை நீட்டினான்.

வாங்கி தன் இருப்பிடத்தில் கொண்டு வைத்து விட்டு திரும்ப கதவருகில் வந்து நின்று கொண்டாள். என்ன பேசுவது என்று புரிய வில்லை. இவனிடம் ஏதாவது பேசி அழுது விடுவோமோ என்று பயந்து போய் அமைதியாக நின்றிருந்தாள்.

“போவது என்று முடிவாகி விட்டது. ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தாகி விட்டது. தனியாகப் போகிறோமே என்று வருத்தமில்லையா புவனா?”

“…….. “ பதில் சொல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னைக் குறை சொன்னாய் பரவாயில்லை. நான் இனி தனியாக கஷ்டப்பட போகிறேன் என்று யோசித்து பார்த்தாயா புவனா”

“…….”பதில் சொல்லாமல் அழ ஆரம்பித்தாள்

”ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு சாப்பாட்டுக்கு என்ன செய்வது? வியாபாரத்திற்கு போவதா? இல்லை திவ்யாவை கவனித்துக் கொள்வதா என்று திணறிக் கொண்டிருந்த்தால் தான் உன்னை எனக்கு மணம் முடித்து வைத்தார்கள்”

“ஆனால் அத்தான் என்னாலே ஒரு சின்னக் குழந்தையைக் கூட ஜெயிக்க முடிய வில்லை எனும் போது, நான் இங்கு வாழும் வாழ்க்கைக்கு அர்த்த மில்லாமல் போய் விடாதா?”

“திவ்யா உன்னை அம்மா என்று கூப்பிட வில்லை. நான் வருத்தப் படுகிறேன். ஆனால் உனக்கு என் மேல் பாசமில்லையா? நான் தனியாளாகிப் போவேன் என்று புரிய வில்லையா?”

“………” மௌனமாக வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தாள் புவனா.

ரயில் புறப்படுவதற்காக பச்சைக் கொடி காட்டப் பட, பின்னால் நின்றிருந்த ரயில்வே கார்டு விசிலடித்தார். இரயில்வே எஞ்சின் புகை எழுப்பி புறப்பட தயாரானது.

“நீ திவ்யா அம்மா என்று உன்னை அழைக்கவில்லை என்ற போபத்தில் புறப்பட்டு விட்டாய் உனக்கு இந்த சிவா அத்தான் இனி எத்தனை கஷ்டப் படுவார் என்ற யோசனை எழாமலிருந்தது ஆச்சரியமாக இருக்கிறது புவனா”

“திவ்யாவிடம் நீங்கள் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே”

“தவறுதான் புவனா. அதற்காக உன்னை ன்ன் நான் எவ்வளவு திறமையான பெண் என்று நினைத்திருந்தேன் தெரியுமா? ஆனால் ஒரு சின்ன காரியத்திற்காக………. பிரிய நினைத்தாயே. இது என்ன நியாயம். திவ்யா இல்லாத ஒரு ஆணாக என்னை மணந்திருந்தால் நம் காதல், நேசம் எல்லாம் வேற மாதிரி இருந்திருக்குமோ…. நான் உன் மேல் பாசம் காட்டத் தவறி விட்டேனோ புவனா?”

“அய்யய்யோ அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் அத்தான். உங்களை மாதிரி ஒரு நல்ல மனிதரை நான் இந்த உலகில் பார்ப்பது கடினம் அத்தான்.”

“அப்புறம் ஏன் என்னை விட்டு விட்டுப் போக நினைத்தாய்?”

ரயில் மெதுவாகக் கிளம்ப ஆரம்பிக்க “அத்தான் நான் உங்களோடு வந்து விடுகிறேன். என்னைத் திரும்ப வீட்டிற்குக் கூட்டிப் போங்கள்” என்றாள் புவனா.

கூடவே ஓடி வந்த சிவா, ரயிலில் தொற்றிக் கொள்ள “அத்தான் ரயிலின் வேகம் அதிகரிக்கிறது. நாம் இறங்கி விடலாம்” என்று பெட்டிகளை எடுத்து கீழே போட்டு விட்டு புவனா இறங்க முயற்சிக்க, சிவா அவளைத் தாங்கிக் கொண்டு ரயிலிருந்து குதித்தான்.

அருகிலிருந்த சிக்னல் போஸ்டில் புவனாவின் தலை தட்டி விட மெதுவாக ரத்தம் வர ஆரம்பித்தது.

போய்க் கொண்டிருந்த ரயிலையே பார்த்துக் கொண்டிருந்த சிவா, திரும்பி புவனாவைப் பார்த்து “அய்யய்யோ தலையில் ரத்தம் வருகிறது” என்று அவளுடைய தலையில் கர்ச்சீப்பால் கட்டுப் போட்டான்.

அப்படியே அவன் மேல் சாய்ந்து கொண்ட புவனா “என்னை மன்னித்து விடுங்கள் அத்தான்” என்று கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள்.

“பரவாயில்லை. அழாதே” என்று அவளை ஆதரவாகப் பற்றிக் கொண்டு மெதுவாக ரயில்வே நிலையத்திற்கு வெளியே வந்தான்.

டாக்ஸி பிடித்து பைகளை வைத்து விட்டு “சாக்கி நாக்கா சலோ” என்றவன் புவனாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு “நான் திவ்யாவிடம் எடுத்துச் சொல்கிறேன். கூடிய சீக்கிரம் உன்னை அம்மா என்று கூப்பிட வைக்கிறேன்” என்றான் ஆறுதலாக.

“வேண்டாம் அத்தான். திவ்யா என்னை அத்தா என்றே கூப்பிடட்டும். என்றைக்கு என் அன்பை புரிந்து கொண்டு அம்மா என்று கூப்பிடுகிறாளோ அதுவரைக் காத்திருக்கிறேன்.” என்றவாறு அவன் மார்பில் சாய்ந்தாள்.

“ஏய் நாம் டாக்ஸியில் அமர்ந்திருக்கிறோம்” என்று சிரித்தான் சிவா.

“இருந்தாலென்ன. என் அத்தான் மார்பிலே தானே படர்ந்திருக்கிறேன்” என்று அவளும் சேர்ந்து சிரிக்க டாக்ஸி வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.

(முற்றும்)

GeorgeChandran பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *