வாடா விளக்கு
(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நானும் என் நண்பன் தியாகராஜனும் திருவல்லிக் கேணியில் ஒரு தெருவின் வழியாகப் போய்க்கொண்டிருந்தோம். அன்று பௌர்ணமி. ஆகாயத்தில் பூரண சந்திரன் தன் முழுச்சோபையுடன் பிரகாசித்துக் கொண்டிருந்தான். தெருவின் இரண்டு வரிசைகளிலும் உள்ள வீடுகளில் மின்சார விளக்குகள் பாலசூரியர்கள் போல் ஜ்வலித்துக் கொண்டிருந்தன. கவிகளெல்லாரும் பெண்களின் முகங்களைப் பூரணசந்திரனுக்கு ஒப்பிட்டிருக்கிறார்களே, அந்த முழுமதி என்ன அவ்வளவு அழகுடையதா என்று பார்ப்பதற்கு வந்தாற்போல் மாடிதோறும் இளம் பெண்கள் குழுமியிருந்தனர். சிலர் கும்மியடித்துக் கொண்டிருந்தார்கள்; சிலர் கோலாட்டம் அடித்துக்கொண்டிருந்தனர். ஒரு மாடி வீட்டின் நிலா முற்றத்தில் இளங் காதலர் இருவர் பூரணசந்திரனுடைய அழகைப் பருகிக்கொண்டிருந்தனர். இந்த இன்பக் காட்சிகளை யெல்லாம் பார்த்துக்கொண்டே சென்ற நான், ஆஹா! பூரணசந்திரன் காதலர்களுக்கு எத்தகைய ஆனந்தத்தை அளிக்கிறான்!’ என்று நினைத்தேன். இரண்டு மூன்று அடிகள் அப்பால் சென்றதும், இன்னொரு சிறிய வீட்டைக் கண்டேன். பௌர்ணமிக் கேளிக்கையின் இன்பக் குறிகள் ஒன்றும் அவ்வீட்டில் தென்படவில்லை. எண்ணெய் விளக்கு ஒன்று அங்கு ‘மினுக் மினுக்’ கென்று எரிந்து கொண்டிருந்தது. தற்காலத்தில் நீரில் பால் கலந்திருப்பது போல், அவ்விளக்கின் ஒளியில் இருள் கலந்திருந்தது. “தியாகு! இத்தெருவிற்கே இவ் வீடு ஒரு களங்கமாக இருக்கிறது, பார்த்தாயா?” என்றேன் நான்.
“இந்த வீட்டிலுள்ளவர்களைப்பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது. ஆகையினால் தான் அப்படிச் சொல்லுகிறாய்” என்றான் தியாகராஜன்.
நான் அவனுடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்தேன்.
“அவ் வீட்டில் ஒரு வாடா விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது” என்றான் தியாகராஜன்.
அவன் சொல்லியது ஒன்றும் விளங்காமல் நான் அவனை ஆச்சரியத்துடன் நோக்கினேன். “அது ஒரு பெருங்கதை. கடற்கரைக்குப் போய்ச் சாவகாசமாய் உட்கார்ந்துகொண்டு, உனக்குச் சொல்லுகிறேன், வா” என்றான். இருவரும் பேசாமல் சென்றோம்.
திருவல்லிக்கேணிக் கடற்கரை. ராஜதானிக் கல்லூரிக்கு எதிரே, கடலுக்கு வெகு சமீபத்தில் ஒரு நல்ல இடத்தைப் பார்த்து உட்கார்ந்தோம். பெளர்ணமி தினமாகையால், என்றுமில்லாத ஆரவாரத்துடன் கடல் ஒலித்துக்கொண்டிருந்தது. பரமாத்மாவின் திவ்ய சொரூபம் எண்ணிறந்த ஜீவாத்மாக்களில் பிரதிபலிப்பது போல், வட்ட மதியத்தின் அழகிய வடிவம், அலைகளின் கோடிக் கணக்கான திவலைகளில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. நான் நண்பனின் மடியில் தலையை வைத்துப் படுத்துக்கொண்டு, ”அந்த வீட்டைப்பற்றி ஏதோ கதை சொல்லுகிறேன் என்றாயே; சொல், கேட்கலாம்” என்றேன்.
தியாகு கதையை ஆரம்பித்தான்:
அவ்வீட்டைப் பற்றி நினைக்கும் பொழுதே என் உள்ளத்தில் ஒரு தெய்விக உணர்ச்சி பரவுகிறது. இரண்டு வருஷங்களுக்கு முன்பு, நான் ராஜதானிக் கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தது உனக்குத் தெரியும் அல்லவா? அக் காலத்தில், நான் மாணவர் விடுதியில் வசிக்காமல், ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டு, ஒரு வீட்டில் ஓர் அறை வாடகைக்கு எடுத்துக்கொண்டு குடியிருந்தேன். நான் அங்குச் சென்று இரண்டு மூன்று மாதங்களாகியும், அவ் வீட்டில் யார் இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பது ஒன்றும் எனக்குத் தெரியாமல் இருந்தது. பட்டணத்து வாசிகளுக்கு இது புதிய அநுபவமல்ல. ஆனால் எனக்கு அது விநோதமாகத் தோன்றியது. மாதந்தோறும் முதல் வாரத்தில் ஒரு மனிதர் வந்து என்னிடம் வாடகை வாங்கிக்கொண்டு போவார். அவ்வளவுதான். இப்படி மூன்று நான்கு மாதங்கள் கழிந்தன. அவ்வீட்டிலுள்ளவர்களோடு பழகி, அவர்களுடைய விருத்தாந்தங்களை அறிய வேண்டு மென்று எனக்கு மிகுந்த அவா இருந்தது. அதற்காக ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தேன்.
தனிமையையே நாடும் என்னைப் போன்றவர்களுக்குக்கூடச் சில சமயங்களில் யாருடைய உறவையாவது சம்பாதித்துக் கொள்ள வேண்டும், யாருடனாவது நெருங்கிப் பழகவேண்டும், யாருக்காவது நமது உள்ளத்திலுள்ள ரகசியங்களை யெல்லாம் வெளியிட வேண்டும் என்று அடக்க முடியாத ஓர் உணர்ச்சி உண்டாவது வழக்கம். அத்தகைய அநுபவம் ஒரு நாள் இரவு ஏற்பட்டது. கல்லூரிப் பரீக்ஷைகளெல்லாம் முடிந்துவிட்டபடியால், என் நண்பர்கள் எல்லோரும் அவரவர் ஊருக்குச் சென்றுவிட்டார்கள். அதி சமீபத்தில் இருந்தும் தூர விலகியிருக்கும் அவ்வீட்டு ஜனங்களோடு பழகுவதற்கு அதுதான் ஏற்ற சந்தர்ப்பம் என்று எனக்குத் தோன்றியது. ஆகையால் என் அறையை விட்டு வெளியே வந்து, அந்த இல்லத்துக் கூடத்திற்குள் நுழைந்தேன்.
நாம் இப்பொழுது வரும்போது பார்த்தது போல், அன்றும் ஒரு சிறிய கைவிளக்கு, தன் மெல்லிய சுடரினால் வீட்டிலுள்ள இருளைப் போக்குவதற்கு முயன்றுகொண்டிருந்தது. அக்கூடத்திற்குள் பாதி தூரம் சென்று நின்றுகொண்டு, ஏதாவது மனித சப்தம் கேட்கிறதா என்று கவனித்தேன். பின்பு சற்றுத் தைரியமாய், “அம்மா!” என்று கூப்பிட்டேன். ஐந்து நிமிஷங்கள் வரை யாதொரு பதிலும் இல்லை. ”அம்மா!” என்று கூப்பிடும் அசம்பாவிதமான காரியத்தை நம் வீட்டில் செய்யத் துணிந்தது யார் என்று ‘நினைத்தார்கள் போலும்! நான் மீண்டும் “அம்மா!” என்று சத்தமிட்டேன். “யார் அது? ஏன்?” என்று உள்ளிருந் ஒரு குரல் எழுந்தது. நான் ஒன்றும் பதில் சொல்ல வில்லை.
கொஞ்ச நேரத்தில் ஓர் அறையினின்றும் ஒரு பெண்ணுருவம் வெளியே வந்தது. அந்த ஸ்திரீ என் பக்கத்தில் வந்து நின்றபொழுது, அவளுடைய முகத்திலிருந்த கம்பீரமும், சாந்தமும், அம்மங்கிய வெளிச்சத்திலுங்கூட எனக்கு நன்றாய்த் தெரிந்தன. நல்ல சிவப்பு நிறம். பட்டுப்போன்ற மிருதுவான சரீரம். சுந்தர வதனம். விசாலமான கண்கள். சுருண்டு குழைந்த கூந்தல். நாற்பது அல்லது நாற்பத்தைந்து வயசு இருக்கும். அந்தக் காலத்திலே அவ்வளவு லக்ஷணமாய்த் தோன்றிய அப்பெண்மணி, இளம் பருவத்தில் மிகவும் அழகிய நங்கையாய் விளங்கியிருக்க வேண்டும் என்று நினைத்தேன். மங்கைப் பருவ அழகின் சின்னங்களில் சில முதுமைப் பருவத்திலும் அழியவில்லை.
“நமது வீட்டிலிருக்கும் தம்பியா? உட்கார்” என்றாள்.
நான் உட்கார்ந்தேன். அவளும் சற்றுத் தள்ளி உட்கார்ந்துகொண்டாள்.
“இங்கு நீ கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறா யாக்கும்?”
“ஆம்.”
“எந்த வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறாய்?”
“இண்டர்மீடியட்டில்.”
“உன்னுடைய சொந்த ஊர் எது தம்பி?”
“மதுரை.”
அந்தப் பெண்மணி சிறிது ஆச்சரியத்துடன், “மதுரையா?” என்று கேட்டாள்.
‘ஆம்’ என்றேன்.
“மதுரையில் எந்தத்தெரு?”
“கிழக்கு ஆவணி மூல வீதி.”
“ஊஹும்” என்று தலை ஆட்டிக்கொண்டே, “அங்கே சுப்பிரமணிய ஐயர் என்று ஒரு பெரிய மிராசுதார் இருந்தாரே, உனக்குத் தெரியுமா?” என்று கேட்டாள்.
“தெரியும். அவருடைய மனைவி சிவகாமியம்மாளைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன்.”
“நான்தான் அந்தச் சிவகாமி! இவ் வீட்டில் நீ அடிக்கடி பார்ப்பவர் தாம் யோகீசுவரராகிய என் கணவர்!”
நான் பிரமித்து விழித்தேன். அவ்வம்மையாரின் முகத்தில் ஒரு புன்முறுவல் தோன்றியது. அம் முகத்தில் பச்சாத்தாபமோ, வெட்கமோ அல்லது வேறு எந்த விதமான உணர்ச்சியையோ நான் பார்க்கவில்லை. அதைக் கண்டு ஆச்சரியமும் திகிலும் அடைந்தேன்.
“இந்தச் சமயத்தில் உனக்குச் சிவகாமியம்மையாரின் பூர்வகதையைச் சிறிது சொல்கிறேன், கேள்” என்று என் காதைப் பிடித்துக் கிள்ளினான் தியாகராஜன்.
கதை ஸ்வாரஸ்யமாக இருப்பதைக் கண்டு, நான் எழுந்து உட்கார்ந்து கதையைக் கேட்க ஆரம்பித்தேன்.
தர்மபுரத்தில், சிவராமகிருஷ்ணையர் என்று பெரிய மிட்டாதார் ஒருவர் இருந்தார். அவருக்கு வெகுநாள் வரை புத்திரப்பேறில்லாமல் இருக்கவே, அவர் தம் மனைவியுடன் காசி முதல் ராமேசுவரம் வரைக்குமுள்ள புண்ணிய க்ஷேத்திரங்களுக்கெல்லாம் தீர்த்தயாத்திரை செய்து, சத்திரம், சாவடி, தர்ம ஸ்தாபனங்கள் முதலியவைகளுக்கு ஏராளமான தானங்கள் செய்தார். அவற்றின் பலனாகவோ என்னவோ, வாழ்க்கையின் அந்தி நேரத்தில் அவருக்கு ஓர் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதை அவர்கள் தவக் குழந்தையாகக் கருதி, அது அம்பிகையின் அருளால் பிறந்ததால், அதற்குச் சிவகாமி என்று பெயரிட்டனர். பெற்றோர் குழந்தையைச் சீராட்டிப் பாராட்டி, வெகு ஆதரவுடன் வளர்த்து வந்தார்கள். இங்ஙனம் ஆண்டுகள் பல சென்றன. சிவகாமி சர்வலக்ஷணங்களும் பொருந்திய பெண்ணாகிக் கல்யாணப் பருவம் அடைந்தாள். அவளுடைய முகத்தில் தேஜஸ் ஒரு தெய்விகத் இருந்ததாக ஜனங்கள் கூறுகிறார்கள். அவளைப் பார்த்தவர்கள் அனைவரும், ‘இவள் அன்னை பார்வதியை ஒத்திருக்கிறாள்’ என்று கூறுவது வழக்கமாம். அத்தகைய அருமைப் புதல்வியை விட்டுப் பிரிய மனம் இல்லாதவர்கள் போல், பெற்றோர்கள் அவளைப் பதினான்கு வயசு வரைக்கும் கல்யாணம் செய்து கொடுக்காமல் இருந்தார்கள். ஊரார் எல்லாரும் சிவகாமி புஷ்பவதி ஆகிவிட்டாள் என்றும், ருதுவான பெண்ணைக் கல்யாணம் செய்யாமல் இன்னும் வீட்டில் வைத்துப் பெற்றோர்கள் அழகு பார்ப்பது தங்கள் ஜாதிக்கே பெரும் அவமானம் என்றும் பேசிக்கொண்டார்கள். ஜனங்களின் அவதூறுக்கு அஞ்சி, சிவராமகிருஷ்ணையரும் தம் புத்திரிக்கு ஏற்ற வரனைத் தேட ஆரம்பித்தார். பொருளையும் குலத்தையும் பற்றிக்கூடக் கவலை இல்லை ; மாப்பிள்ளை லக்ஷணமாகவும் குணசாலியாகவும் இருந்தால் போதுமென்பது அவருடைய கொள்கை. அவர் எதிர்பார்த்ததற்கு அதிகமாகவே, குலம், கல்வி, குணம், பொருள், அழகு எல்லாம் ஒருங்கே வாய்க்கப்பெற்றவரன் அவருக்கு வெகு சீக்கிரத்தில் கிடைத்தான். மகாலிங்கையர் என்பவர் மதுரையில் ஒரு பெரிய மிராசுதார். அவருடைய மகன் சுப்பிரமணியனைப் பார்த்ததும், அவனே தம் புதல்விக்கு ஏற்ற கணவன் என்று சிவராமகிருஷ்ணையர் தீர்மானம் செய்தார். பெண்ணின் சந்தோஷத்தையே பெரிதாகக் கருதிய தந்தை, ஜாதகப் பொருத்தத்தைக் கூடப் பாராமல் கல்யாணத்தை நடத்திவிட நிச்சயம் செய்துவிட்டார்.
மணமான இரண்டு வருஷங்கள் வரை தம்பதிகள் இருவரும் வெகு சந்தோஷமாய் வாழ்ந்துவந்தார்கள். இல்லறச் சகடம் இனிது உருண்டது. இங்ஙனம் இருக்கையில் அவர்களுடைய இன்ப வாழ்க்கைக்கு இடையூறாக ஒரு பால சந்நியாசி வந்து சேர்ந்தான். அவன் தன்னை நித்தியானந்த யோகி எனக் கூறிக் கொண்டான். இருபத்தைந்து பிராயமுள்ளவன். கையில் வீணையை ஏந்தி இனிய கீதங்களைப் பாடிக்கொண்டு மதுரை வீதிகளில் பிக்ஷை எடுக்க ஆரம்பித்தான். அவனுடைய பாட்டுக்களில் ஒரு சக்தி இருந்தது. அவனுடைய முகத்தில் ஒரு வசீகரம்.
ஒரு நாள் அவ் வாலிப சந்நியாசி கிழக்கு ஆவணி மூல வீதி வழியாகப் பாடிக்கொண்டு சென்றபொழுது, அந்தப் பாட்டில் ஈடுபட்டுச் சிவகாமி வெளியே வந்தாள். அதில் அவள் தன்னை இழந்து நிற்கும்போது, அந்த வாலிபன் வேறு எந்த வீட்டிற்கும் போகாமல், அவள் முன்னால் வந்து நின்றான். “தேவி! பிச்சை!” என்றான் வாலிபன். உடனே சிவகாமி வீட்டிற்குள் ஓடி, அன்று தன் கணவனுக்குச் செய்துவைத்திருந்த இனிமையான தின்பண்டங்களை யெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். அங்ஙனம் கொடுக்கையில் அவர்கள் கண்கள் சந்தித்தன. சிவகாமி பலகாரங்களைக் கொடுத்ததோடு தன் உள்ளத்தையும் சேர்த்து அவனிடத்தில் கொடுத்துவிட்டாள் போலும்!
அன்றிருந்து அவ்வாலிபன் மற்றத் தெருக்களுக் கெல்லாம் போவதை நிறுத்தி, கிழக்கு ஆவணி மூல வீதிக்கு மட்டும் வந்து கொண்டிருந்தான். சிவகாமியினுடைய வீட்டிற்கு மட்டும் சென்று பிச்சை வாங்கிக்கொண்டு போய்விடுவான். இதை எல்லாம் கண்ட ஜனங்கள் சிவகாமியைப்பற்றிப் பலவாறாகப் பேச ஆரம்பித்தார்கள். கல்யாணத்திற்கு முன்பிருந்தே அவள் அவ் வாலிபனைக் காதலித்து வந்ததாகவும், அவளுடைய தந்தை அவளை அவனுக்குக் கலயாணஞ் செய்து கொடுக்கச் சம்மதிக்கவில்லை என்றும், அதனால் வாழ்க்கையில் வெறுப்புற்ற அவ் வாலிபன் சந்நியாசி ஆகிவிட்டதாகவும், உடை மாறுவதில் என்ன இருக்கிறது,உள்ளமல்லவா மாற வேண்டும் என்றும் சிலர் பேசிக்கொண்டார்கள். ஊர் வாயை மூடவோ என்னவோ, சில தினங்களுக்கு அப்புறம் அவ்வாலிபன் வருவதை நிறுத்திவிட்டான். ஆனால் சிவகாமி தினந்தோறும் அறுசுவையுள்ள உணவுப் பதார்த்தங்களைச் சமைத்து எடுத்துக்கொண்டு, காலையிலும் மாலையிலும் எங்கோ போய்வருவதைப் பார்த்து ஜனங்கள் சந்தேகித்தார்கள். இப்படிச் சில நாள் நடந்துகொண்டிருந்தது. நாளடைவில் சிவகாமியின் கணவனும் அவள் மீது சம்சயம் கொண்டான்.
ஒரு நாள் சிவகாமி வீட்டை விட்டுச் சென்றபின் அவளுக்குத் தெரியாமல் அவளைப் பின்தொடர்ந்தான். வைகை நதியைக் கடந்து, அக்கரையிலுள்ள அடர்ந்த தென்னந் தோப்பினுள் சிவகாமி நுழைந்தாள். அதில் ஒரு பெரிய மண்டபம் இருந்தது. தோப்பிற்கு வெளியி லிருந்து பார்ப்பவர்கள் யாரும், அதற்குள் அத்தகைய பிரம்மாண்டமான மண்டபம் இருக்கிறதென்று சொல்ல முடியாது. மண்டபத்திற்குள் சென்றதும், “ஸ்வாமி!” என்று கூப்பிட்டாள் சிவகாமி. வாலிபன் உள்ளிருந்து வெளியில் வந்து, “சிவகாமி! என்னை ஏன் ஸ்வாமி என்று அழைக்கிறாய்?” என்று ஒரு புன்சிரிப்புடன் கேட்டான். “நீங்கள் தாம் ஸ்வாமி என்று என் அந்தராத்மா கூறுகிறது” என்றாள் சிவகாமி.
பின்பு தான் கொண்டுவந்த பதார்த்தங்களை எல்லாம் அவ்வாலிபனுக்கு அளித்தாள். உண்டகளைப்புத் தீர வாலிபன் சிறிது படுத்தான். சிவகாமி அவன் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு, தன் முன்றானையை விரித்து அவனுக்கு விசிற ஆரம்பித்தாள். வாலிபன் தன் கையினால் வேண்டாமென்று சைகை காட்டினான். சிவகாமி விசிறுவதை நிறுத்திவிட்டுப் பேசாமல் உட்கார்ந்து கொண்டிருந்தாள். “என் கால்கள் நோகின்றன. கொஞ்சம் அமுக்கிவிடேன்” என்று வாலிபன் மெதுவாகச் சொன்னான். சிவகாமியும் அவன் கால்களைப் பிடித்துவிட ஆரம்பித்தாள். இங்ஙனம் இருக்கையில் திடீரென்று சுப்பிரமணிய ஐயர் மண்டபத்திற்குள் நுழைந்தார். சிவகாமி தன் முகத்தில் யாதொரு கலவரமுமின்றிக் கணவனை நோக்கி, “ஏன் இங்கு வந்தீர்கள்? என்னைத் தேடியா? கொஞ்ச நேரத்தில் வந்துவிடுகிறேன். இப்பொழுது தொந்தரவு செய்யாதீர்கள். அவருடைய தூக்கம் கலைந்துவிடும்” என்றாள். அவளுடைய மொழிகளைக் கேட்டு ஒன்றும் சொல்லத் தெரியாமல் பிரமித்து நின்றார் சுப்பிரமணிய ஐயர்.
சில தினங்களுக்குப் பிறகு வாலிபன் அம்மண்டபத்தை விட்டுப் போய்விட்டான். சிவகாமி பித்துப் பிடித்தவள் போல் ஊரெங்கும் அவனைத் தேடித் திரிந்தாள். ஜனங்கள் தன்னைப்பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை அவள் சிறிதும் பொருட்படுத்த வில்லை. இரண்டொரு நாட்களுக்கு அப்புறம் அவளையும் மதுரையில் காணவில்லை. இதைக் கேள்வியுற்ற அவள் தாய்தந்தையர் அதே கவலையால் உயிர் நீத்தார்கள் என்று ஜனங்கள் சொல்லிக்கொண்டார்கள். இதுதான் அந்த அம்மாளின் பூர்விக விருத்தாந்தம். கிழக்கு ஆவணி மூல வீதியிலுள்ள பாலர் முதல் விருத்தர்கள் வரை யாவருக்கும் இந்தக் கதை தெரியும்” – என்று முடித்தான் தியாகராஜன்.
சற்று அருவருப்புடன், “அவளுடைய வீட்டிலா நீ குடியிருந்தாய்?” என்று நான் கேட்டேன்.
“நான் சொல்வது முழுவதையும் கேள்” என்று கூறித் தியாகராஜன் கதையை மீண்டும் ஆரம்பித்தான்:
“தாங்கள் இப்பொழுது சந்தோஷமாய் வாழ்கிறீர்களா?” என்று கேட்டேன்.
“சந்தோஷத்திற்கு என்ன குறை? அவருக்குத் தொண்டு புரிவதில் நான் ஒரு தெய்விக ஆனந்தத்தை அநுபவிக்கிறேன். அவருடைய சுகமே என்னுடைய சுகம். அவருக்குச் சிறிது தலைவலி என்றாலும், என் மனம் மிகுந்த வேதனை அடைகிறது. நாள் முழுவதும் அவரை என் மடியில் வைத்துக்கொண்டு அவருக்கு வேண்டிய சுச்ருஷைகள் செய்வேன். அவர் தூங்கும் வரைக்கும். அவருக்கு உடம்பு பிடித்துக்கொண்டும் விசிறிக் கொண்டும் இருப்பேன். அவர் சாப்பிட்டால் நான் சாப்பிட்டது போன்று இருக்கிறது. சில சமயங்களில் எனக்காக அவர் பாடுவார். அவருடைய பாட்டைக் கேட்கும்பொழுது என் கண்களில் நீர் பெருகும். அவர் எனக்கு என்ன என்னவோ உபதேசிக்கிறார். அவருடைய வார்த்தைகள் என் உள்ளத்தையே தொடுவன போல் தோன்றுகின்றன. எனக்கு இவ்வுலகில் உறவானவர் அவர் ஒருவரே என்று தோன்றுகிறது” என்று அவ்வம்மணி கூறினாள்.
“உங்களுக்குக் குழந்தைகள் உண்டா?”
“உனக்கு நான் சொல்வது விளங்கவில்லை. எங்களுடைய உறவு அத்தகையது அல்ல. அது ஆத்மிகச் சேர்க்கை. அதுதான் நீடித்து நிற்கக்கூடியது. அதுவே நிலையானது. இதர உறவெல்லாம் மாயை. நொடிப் பொழுதில் தோன்றி மறையக்கூடியது.”
இத்துடன் நண்பன் கதையை முடித்துவிட்டான். வெகு நேரம் வரை இருவரும் மௌனமாய் இருந்தோம். அவன் என்ன செய்துகொண்டிருந்தானோ தெரியவில்லை. நான் அவன் சொல்லிய தெய்விகக் காதலைப்பற்றியே சர்வகலாசங்கக் சிந்தித்துக் கொண்டு இருந்தேன். கட்டிடத்திலுள்ள கடிகாரம் பதினொரு மணி அடித்தது. “மணி பதினொன்று அடித்துவிட்டது. வா. போகலாம்” என்றான் தியாகராஜன்.
இருவரும் எழுந்து திருவல்லிக்கேணியில் அதே வீதியின் வழியாக எங்கள் விடுதிக்குச் சென்றோம். நாங்கள் கடற்கரைக்குச் செல்லும்போது அங்கே கண்ட காதற் கேளிக்கைகள் ஒன்றும் அப்பொழுது காணவில்லை. எல்லா வீடுகளும் பூட்டப்பெற்று இருளடைந்த தோற்ற மளித்தன. ஆனால் சிவகாமியம்மாள் வீட்டில் மட்டும் முன்போலவே தீபம் எரிந்து கொண்டிருந்தது. எனக்கு அவ்வம்மணியைப் பார்க்கவேண்டுமென்று அளவு கடந்த அவா எழுந்தது. வீடும் திறந்திருக்கவே என் நண்பன் இரவு நேரமாயிற்றே என்று சற்றும் தயங்காமல் என்னை வீட்டிற்குள் அழைத்துக்கொண்டு சென்றான். சாம்பிராணியின் நறுமணம் வீடு முழுவதும் பரவியிருந்தது. உள்ளே ஓர் அறையில் ஒரு படத்தின் முன் சிவகாமி அம்மையார் உட்கார்ந்து தியானம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தோம். எவ்வளவு நேரமாய் அம்மையார் அந்த ஸ்திதியில் இருந்தார்களோ, தெரியாது. நாங்கள் சென்ற சற்று நேரத்தில் கண் விழிக்கவே, என் நண்பன் அம்மையாரை வணங்கி நின்றான்.
“உட்கார் தியாகு! ஏது. இந்நேரத்தில் இங்கு வந்தது?”
“நாங்கள் இருவரும் கடற்கரைக்குச் சென்றுவிட்டு இப்பொழுதுதான் திரும்பினோம். இந்நேரத்தில் வீடு திறந்திருப்பதைக் கண்டதும், தங்களைத் தரிசித்து விட்டுச் செல்லலாம் என்று வந்தோம்.”
“இப்பொழுது நான் கதவைப் பூட்டுவதே இல்லை. அவர் மாயவாழ்வை நீத்து நித்திய வாழ்க்கையை அடைந்து விட்டார். இரவும் பகலும் அவரையே தியானித்துக் கொண்டிருக்கிறேன். எனக்குத் தூக்கமே வருவதில்லை. அவரை வெகு சீக்கிரத்தில் அடைய வேண்டுமென்று என் உள்ளம் துடிக்கிறது. அவருடைய உருவம் சிற்சில சமயங்களில் என் கண்முன்பு தோன்றி, ‘அவசரப் படாதே. பொறுமையுடன் இரு. காலம் வரும்போது நான் உன்னை அழைத்துக்கொள்கிறேன்’ என்கிறது. ஆகையால் பொறுமையுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.”
இதற்கு அப்புறம் சிறிது நேரம் யாவரும் மௌனமாய் இருந்தோம். பின்பு அவ்வம்மணியிடம் விடை பெற்றுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி னோம்.
நாலைந்து வீடுகள் தாண்டியதும், அழுகைக்குரல் கேட்டது. “இனிமேல் இவ்வீட்டிற்குள் நுழைந்தாயானால், உன் காலைத் தறித்து விடுவேன்” என்று கர்ஜித்துக்கொண்டு ஓர் ஆடவன் யாரையோ முரட்டுத்தனமாய்த் தள்ளிக்கொண்டிருந்தான். அடுத்த நிமிஷம் ஓர் இளநங்கை தலைவிரிகோலமாய்த் தெருவில் நின்று அழுதுகொண்டிருந்தாள்.
– வாடா விளக்கு முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.
![]() |
சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: December 7, 2025
பார்வையிட்டோர்: 82
