கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 12, 2026
பார்வையிட்டோர்: 41 
 
 

(1965ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இதழ் 1-3 | இதழ் 4-6 | இதழ் 7-9

இதழ் 4 – ரோஸி

ஒன்பதாண்டுகள் லீமாவும் லாரைனும் தம் பாட்டி யார் இல்லத்திலிருந்து வளர்ந்தனர். இப்போது அவர் களுக்கு உணவுக்குத் தட்டில்லை. உடைக்கும் பஞ்ச மில்லை. ஆனால், அவர்கள் சிறை முன்னிலும் கடுமை யாகவே இருந்தது. முன்பு உணவுக்கு அலந்து அவர் கள் பலகணியில் வந் து குந்தியிருந்தனர். இங்கும் பலகணி ஒன்றே புற உலகுக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்டிருந்த ஒரே தொடர்பாயிருந்தது. இரு பிள்ளைகளும் இப்போதும் பிளான்ஸி மாளிகை யின் பலகணியில் வந்து பதுமைகள் போலிருந்து அகன்ற உலகில் தங்குதடையில்லாமல் திரிந்தமக்களைப் பார்த்துக்கொண்டிருப்பர். லாரைன் அடிக்கடி “லீமா! நாம் குழந்தைகளா யிருக்கும்போது, இதுபோலவே பலகணியில் வந்திருப்போமே அப்பா வீட்டில், அது நினைவிருக்கிறதா ? அந்த ஆரஞ்சுப்பழம் வந்து விடுதலை தராவிட்டால், இன்னும் நாம் அங்கேதானே இருந்திருப்போம் ?” என்பாள். ஆனால், அப்பா வீடு என்ற சொல்லே லீமாவை எப்போதும் திடுக்கிட வைத்தது. பாட்டி வீட்டின் சிறையை அவள் அவ்வள வாகப் பொருட்படுத்தவில்லை. அவள் உணவையும் உடையையும் தவிர எதுபற்றியும் கவலைப்படவில்லை. னால், லாரைன் தன் போக்காகத் திரிய முடியாத நிலையில் கிட்டத்தட்ட முன்போலவே வருந்தினாள்.

லாரைனுக்கு இப்போது பதினாலு ஆண்டுப் பருவம். அவள் பொன்னிறக் கூந்தல் இப்போது இவள் முகத்துக்கு மட்டுமன்றி உடலுக்கே ஒரு பின்னணியாகும்படி அடர்ந்து திரண்டு பெருகியிருந் தது. அக்கால முறைப்படி அதனை அவள் மயிர்க் கச்சைகளால் வாரிக் கட்டியிருந்தாலும், அடிக்கடி அது கட்டை அவிழ்த்துக்கொண்டு தோளில் வந்து புரண்டு விழும். அப்போதெல்லாம் பிளான்ஸிப் பெருமாட்டி ஏதோ பெரிய இடையூறு ஏற்பட்டுவிட்டதுபோல, “அம்மணி, மற்ற வேலைகளை யெல்லாம் ஒதுக்கிவை. மேலே போய்த் தலையை வாரிக் கட்டிவிட்டு மறுவேலை பார்” என்று கட்டளையிடுவாள். பொன்முகில் தாங்கிய இளந்திங்கள் அசைந்து செல்வதுபோல, லாரைன் மாடிப் படியேறிச் செல்வாள்.

இரு பெண்களுக்கும் ஆடல் பாடல் கற்றுக் கொடுக்க ஏற்படாகியிருந்தது. இதில் இரண்டுபேருமே மகிழ்ச்சியடைந்தனர். லாரைன் தன் சின்னஞ்சிறிய காலடிகளை நிலத்தில் பட்டும் படாமலும் வைத்து, வகை வகையான ஆடல்கள் பழகி, எல்லாரையும் மகிழ் வித்தாள். லீமா அவ்வளவு விரைவில் ஆடலைக் கற்றுக் கொள்ள முடியவில்லையாயினும், ஆடலில் தன்னை மறந்து களிக்கத் தொடங்கினாள். ஆடலாசிரியரும் அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதையே ஓர் இன்பமாக கருதினார். அத்துடன் அவர் அரண்மனையில் அரசிளஞ் செல்வியர்க்கும் கற்றுக்கொடுத்தவராதலால், அர மனை சார்ந்த பல செய்திகளையும் கதையேபோலக் கூறிப் பெண்களை மகிழ்விப்பார். அவர்களும் ஓய்ந்த பொழுதெல்லாம் அரசவை பற்றிய இனிய நிகழ்ச்சிகளைக் கூறும்படி கேட்பார்கள்.

இளவரசி லூயியின் பண்புச் சிறப்புக்களைப்பற்றி கேட்பதில் அவர்களுக்குச் சலிப்பே தட்டுவதில்லை. முதல் முதல் புதிய ஆட்டமாகிய ‘செவ்வாடல்’ கற்பித்த கதைபற்றி அவர் கூறுவார். “சிவப்பு நிறத்தைவிடப் பச்சை நிறத் திலேயே இளவரசிக்கு விருப்பம் மிகுதி. அத்துடன் சிறுபருவத்திலேயே அவள் அடமும், பிடி முரண்டும் மிக்கவள். ஆகவே, செவ்வாடல் திறம் கூறிப் பாடம் தொடங்கிய பின்னும் அவள் ஆடல் தொடங்காமல் நிலையாக நின்றாள். அத்துடன் என்ன கூறியும் அவள் அடியெடுத்து வைக்க மறுத்தாள். செவ்வாடல் என்ற பெயர் அவளுக்குப் பிடிக்கவில்லை. செவ்வாடல் என்பதைப் பச்சை ஆடல் என்று கூறினா வல்லாமல் ஆட முடியாது என்றாள். ஆடலறிந்த அனை வரையும் வருவித்துக் கேட்டுப்பார்த்தோம். யாவரும் பச்சை ஆடலே அதற்குப் பொருந்திய பெயர் என்றனர்! பச்சை யாடல் என்று நான் கூறிய பின்னே இள வரசி ஆடினாள் ” என்று ஆடலாசிரியர் வம்பளந்தார். அதன் முடிவில் அவர், “அரசவைபற்றி இப்படியெல் லாம் நாம் பேசுவது தவறு. சரி, சின்ன அரசி லாரைன்? இப்போது தலைநிமிர்ந்து உன் பாடம் தொடங்கு. ஆம். பார்வை நேராக இருக்க வேண்டும். எங்கே-ஒன்று, இரண்டு, மூன்று ! சரி, அதுதான் சரி ! இன்னும் சற்று இடதுபுறம் நோக்கிச் சரியாக, போதும் ! உடல் நெளிந்து, கால்களைப் பதமாக எடுத்து வைத்து நடமிடுங்கள். இனி கால் அசைவது தெரியக்கூடாது.. மிதந்து செல்வது போன்றிருக்க வேண்டும். நன்று, நன்று ! மிக நன்று !” என்று பாடத்தை நடத்திச் செல்வார்.

லாரைன் இப்போது குழந்தையாயில்லை. அவள் நடுத்தர உயரமுடையவளாகியிருந்தாலும் அந்த சந்த மாக வளர்ந்திருந்தாள். அக்காலத்தில் மணமாகாப் பருவத்திலேயே பெண்கள் வளர்ந்த மாதர்போல உடை யுடுத்துவது வழக்கம். லாரைனின் அமைந்த, ஆனால் எழுச்சிமிக்க நடைக்கு அந்த உடைகூடப் பொருத்த மாகவே அமைந்தது. மார்க்கச்சின் அருகுகள் உள்ளே மீன் எலும்பு வைத்து அந்நாளில் விறைப்பாகத் தைக் கப்பட்டு வந்தன. இவை லாரைன் உடலுடன் ஒட்டி அதன் செவ்விய வளைவுகளையும் நேரொழுங்கையும் எடுத்துக் காட்டின. அவள் இடையும் நடையும் அக் காலச் செயற்கை முறையான ஆடைகளில் கட்டுப்பட்டிருந்தாலும், அவ்வாடைகள் தேவையில்லாத அளவுக்கு அவள் உடற்கூறுகள் இயற்கைக் குழைவு நெளிவை வெளிப்படுத்தின. உண்மையில் சிறு பருவத் திலேயே தொடங்கப்பட்ட ஆடல் பாடல் பருவ மீறி முன்கூட்டியே அவள் உடலுக்குக் கட்டிளமையையும் கவர்ச்சியையும் தந்திருந்தன.

விளையாட்டுப் பருவத்தில் அவர்கள் விளையாட விடப்படாததனால், ஆண்டின் அளவு கடந்து லாரைன் உடலும் அறிவும் வளர்ச்சியடைந்திருந்தன. அவள் துன்ப வாழ்வு அவள் பெண்மையைத் தட்டி எழுப்பிற்று. மூத்தோர்களின் நடையுடை தோற்றத்திலும் பண்புகளிலும் அவள் கருத்தைச் செலுத்தித் தன் உலகியலறிவை வளர்த்திருந்தாள்.

அவள் வாழ்வின் பெருங்குறை தாய்ப் பாசம் இல்லாததுதான். அதற்கு அவள் ஏங்காமலில்லை. தந்தையுடன் பழகியாவது தன் உள்ளார்ந்த குழந்தை யார்வத்திற்கு நிறைவளிக்க அவள் விரும்பினாள். ஆனால் இதிலும் அவளுக்கு முட்டுக்கட்டைகள் ஏற் பட்டன. தன்னை விட்டு லாரைன் தந்தையிடம் பாசங் கொண்டால், அவள் மீண்டும் தந்தை வீடு சென்று விடக்கூடும் என்று மாது பிளான்ஸி எண்ணினாள். ஆகவே வாரம் ஒரு முறைக்குமேல் குழந்தைகள் தந்தையைப் பார்க்கச் செல்லும்படி அவள் இணங்க வில்லை. அங்கே சென்றபோதும் தந்தையுடன் குழந் தைகள் தங்குதடையின்றிப் பழக முடியவில்லை. மாது பெரோன் பிள்ளைகளுடன் தந்தை பாசங்கொள்வதை வெறுத்தாள். சார்லஸ் பெரோன் தன் வருவாயி லிருந்தே அவர்களுக்குப் பங்கு தந்துவிடக் கூடும் என்று அவள் அஞ்சினாள். இவ்வெண்ணத்துடன் அவள் லாரைனைப் பற்றியும் லீமாவைப் பற்றியும் கண வனுக்குப் பலவகையில் தப்பெண்ணங்கள் ஏற்படும் படி எல்லாச் செய்திகளையும் திரித்துக் கூறி வந்தாள். தந்தை செல்வத்தைக் கறப்பதற்காகவே லாரைன் பாசங் காட்டிச் சூழ்ச்சி செய்கிறாள் என்றும், மாது பிளான்ஸி தந்தையிடம் உட்பகைமை கொள்ளும்படி அவளைத் தூண்டி வருகிறாளென்றும் கணவனுக்கு அவள் ஓதிவந்தாள். இந்நிலையில் பெரோன் லாரை னிடம் ஏதிலாரைப்போல நடந்துகொண்டதில் வியப் பில்லை. பாவம். லாரைனுக்குத் தாய்ப்பாசம் இல்லாமல் போனது மட்டுமன்றி, தந்தையின் பாசத்துக்கும் இட மில்லாது போயிற்று.

குழந்தைகளைத் தாய் தந்தையர் வளர்க்கும்போது கூடக் குழந்தைகள் ஆர்வங்களைத் தாய் தந்தையர் அறிந்து ஆதரவு செய்ய முடிவதில்லை. அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையேயுள்ள வயது வேறுபாட் டால் குழந்தைப் பருவ அவா ஆர்வங்களை அவர்கள் அறியாது போவதுண்டு. ஆனால் லாரைனை வளர்த்த வளோ, தாயல்ல, பாட்டி. அத்துடன் அவள் கடுமை முறையிலே பழகியவள். லாரைனின் இளமைக் கவர்ச்சி யும் அவள் நடையுடையின் எளிமையழகும் அவளுக்குப் பிடிக்கவில்லை. லாரைன் எல்லாரிடமும் அன்பாயிருந்த தனால், பணிப் பெண்கள் வேலையாட்கள் வரை யாவரும் அவளிடம் இரட்டிப்பு அன்பாதரவு காட்டினர். இதுவும் கிழவியின் சீற்றத்தைப் பெருக்கியது, அவள் லாரைனின் உடையில் குற்றங் கண்டாள்; அவள் சிரித் தால் தவறு ; விழித்துப் பார்த்தால் தவறு. சிறை வாழ்வில் குற்றவாளிகள் காணாத கொடுமைகளை, கூண்டில் பறவைகள் அடையாத துன்பங்களை அந்நற் குண நங்கை இளமையிலேயே அனுபவித்தாள்.

தந்தை வீட்டுச்குப் போய் வந்ததும், “அவர் என்ன பேசினார், நீங்கள் என்ன சொன்னீர்கள்?” என்றெல் லாம் பாட்டி குறுக்குக் கேள்வி கேட்பாள். லாரைன் அவ்வப்போது ஏதேனும் மறைத்தாலும், சொல்லாது விட்டாலும் லீமா உளறிக் கொட்டிவிடுவாள். பாட்டி சில சமயம் சினங்கொள்வாள். சிலசமயம் எச்சரிப்பாள்• ‘தந்தை வீட்டில் எதுவும் பேசக்கூடாது. அங்கே எல்லாம் நஞ்சிடப்பட்டே இருக்கக்கூடும். அங்கே எதுவும் உட்கொள்ளக் கூடாது. இவ் எச்சரிக்கைகள் தாயில்லாப் பிள்ளைகள் உள்ளத்தைப் பெரிதும் புண் படுத்தின என்று கூறத் தேவையில்லை.

தந்தைக்கு எப்படியாவது தன் அன்பைக் காட்ட லாரைன் அரும்பாடு பட்டாள். அவள் தன் குழந்தைக் கலையார்வ முழுவதும் ஈடுபடுத்தி ஒரு படம் வரைந் தாள். அதை அவர் பிறந்த நாளில் அவருக்குப் பரிசாகக் கொடுக்க எண்ணினாள். ஆனால் பாட்டி அதனைக் கண்டு செய்தி யுணர்ந்ததும் அதனைக் கிழித் தெறிந்து விட்டாள். லாரைனின் கனவுக் கோட்டையும் ஆர்வமும் அதனுடன் தகர்ந்தன.

அவர்களிடம் உள்ளார்ந்த பற்றுக் காட்டிய உற வினர் ஒரே ஒருவர்தாம்-அது மாது பிளான்ஸியின் மகனும் அவர்கள் மாமனும் ஆகிய திரு. மான்கண்டர் மட்டுமே. அவர் தாய்க்கு அடங்கியவர்; தாயின் சீற்றத்துக்கு அஞ்சியவர். ஆகவே தாயறியாமலே தான் அவர் பிள்ளைகளிடம் தம் அன்பைக் காட்டி வந்தார்.

ஒருநாள் காலை அவர்கள் படுக்கையறைக் கதவில் ஏதோ பிறாண்டும் அரவம் கேட்டது. கதவைத் திறந்த போது மான்கண்டர் அவர் கண்முன் நின்றார். தம் தாயில்லாதபோது அவர் குழந்தைகள், நாய்கள், பூக்கள் எல்லாவற்றிலும் மிகுதி ஈடுபட்டு மகிழ்வார். லாரை னிடம் அவளுக்கு உள்ளூரப் பற்று மிகுதி. இன்று அவர்தம் சட்டைப் பையிலிருந்து ஒரு பெட்டி போன்ற கூண்டு கொண்டு வந்திருந்தார். அதை அவர் லாரை னிடம் எடுத்துக் கொடுத்தார். ஆர்வத்துடன் லாரைன் அதை வாங்கிப் பார்த்தாள். அதனுள்ளிருந்து இரு சின்னஞ்சிறு கண்கள் அவளை உற்று நோக்கின. அது ஓர் அழகிய சிறு குச்சுநாய். அதை எடுத்து முத்த மிட்டு உச்சி தடவிக்கொண்டு, ‘இது ஏது மாமா? எனக்கா?” என்று அவள் கேட்டாள்.

திரு. மான்கண்டர் “ஆம். ஆனால் நான் உங்க ளுக்கு ஒரு செய்தி கூறவந்தேன். இந்த நாயின் பெயர் ரோஸி. இது இனி எப்போதும் உன்னுடன் இருக்கும். வேறு யார் உன்னைக் கடிந்து கொண்டாலும், ரோஸி உனக்கு ஆறுதல் தரும். நீ பள்ளிக்கூடம் செல்ல இருக் கிறாய். இது உன் படிப்புக்குத் துணையாயிருக்கும்” என்றார்.

ரூஸென்ட் ஒணோரே என்னும் தெருவிலுள்ள கன்னித் துறவியர் கலைமாடத்திற்கு லாரைனும் லீமா வும் அனுப்பப்பட்டனர். இச்செய்தியையே குழந்தை கள் மனம் புண்படா வகையில் மான்கண்டர் அவர் களிடம் இவ்வாறு தெரிவித்தார். கடுமையான இப் பயிற்சியிலிருந்து மூன்றாண்டுக்காலம் அதனினும் கடுமையான கன்னிமாடப் பயிற்சிக்கு மாற்றப்பெற்றனர்.

லாரைன் வாழ்வின் மூன்றாம்படி தொடங்கிற்று.

இதழ் 5 – கன்னி மாடம் 

ரூஸென்ட் ஒணோரேயிலுள்ள ‘தாய்மைக் கன்னி மாடம்’ எல்லாவகையிலும் பெருமாட்டி பிளான்ஸியின் மனத்துக்கேற்றதாயிருந்தது. கண்டிப்பு முறைபற்றிய அவள் குறிக்கோளுக்கு அது நிறைவளிப்பதாக அமைந்தது. பதினெட்டாம் நூற்றாண்டிலுள்ள கன்னி மாடங்கள் பெரும்பாலும் பயிற்சிக்காக வரும் பிள்ளை களை நாகரிக மக்கட்குழுவுக்கேற்ற புதுமையிற் பழக்கு பவையாக இருந்தன. ஆனால், இக்கன்னிமாடம் பயிற் சிப் பிள்ளை களையும் கன்னித் துறவிகளைப்போலவே கட்டுப்பாட்டுடன் பயிற்றுவித்தது. பிள்ளைகளின் காள்முறை வாழ்வில் ஒழுங்கு முறைகள்-சமய ஆசா ரங்கள்-ஒழுக்க அமைதிகள்- தண்டனைகள்-அடக்கு மூறைகள். இவைகளில்லாத வேளை கிடையாது; இக் கசப்பவியலுக்கான கசப்புத் தாளிதமாயிருந்தது அவர்கள் கல்வி.

மடத்தின் அன்னை லாரைனிடம் மிகவும் அன்புடை யவளாகவே இருந்தாள். ஆனால், பயிற்சித் துறைப் பொறுப்புத் தாங்கிய தமக்கை இம்பீரியா, அவளிடம் அழுக்காறு கொண்டு கொடுமைகள் செய்து வந்தாள் இம்பீரியாவுக்கு முப்பது ஆண்டு இருக்கும். பதினான் காவது ஆண்டில் அவளுக்கு அம்மை நோய் கண்டு முக மெல்லாம் தழும்புபட்டது. அவள் மணவாழ்வு இதனால் தடைப்பட்டுப் போயிற்று. அது முதல் அவள் கன்னி மாடப் பணியில் தன் கவர்ச்சியற்ற வாழ்வைக்கழிக்கத் துணிந்தாள். ஆனால், இன்ப ஆர்வத்தில் அவளுக் கேற்பட்ட ஏமாற்றம் அவளைக் கொடியவளாகவும் கல் நெஞ்சுடையவளாகவும் மாற்றிற்று. குறிப்பாக லாரைன் போன்ற அழகு நங்கைகளைக் கண்டால் அவளுக்குப் பிடிப்பதில்லை. இயற்கையிலேயே எப்போதும் கடுகடுப்பாயிருந்த அவள் முகம் லாரைனையோ அவளுடன் சிரித்து விளையாடும் பிள்ளை களையோ கண்டால் கடுஞ் சீற்றங்கொண்டது. லாரை னின் அழகிலும் குணத்திலும் ஈடுபட்டு அவளிடம் பற்றுடையவராகவோ மதிப்புடையவராகவோ காணப் பட்ட எல்லார் மீதும் அவள் எரிந்து விழுந்தாள்.

கன்னிமாடங்களில் விருப்பு வெறுப்பைக்காட்ட வும் கொடுமை செய்யவும் ஆட்சிப் பொறுப்பேற்றவர் களுக்கு எத்தனையோ வாய்ப்புக்கள் இருந்தன. லாரைன் மீதே கண் வைத்திருந்த இம்பீரியா அவளது ஒவ்வொரு செயலிலும் குற்றங்கண்டாள். அவள் வாளா இருந்தால் படிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு. சிரித்தால் ஒழுக்க முறைபற்றிய சொற்பொழிவு. விளையாட்டு நேரத்தில் வேலைகள் கொடுக்கப்படும் வெளியே போயிருந்தால் எங்கே, எதற்கு, யாருடன் என்ற குறுக்குக் கேள்விகள். இவற்றினிடையில் லாரைன் வாழ்வு அலைக் கழிவுற்றது.

லாரைன் அறிவு மந்தமுற்ற தமக்கையை எப்போதும் நிழல்போலத்தொடர்ந்து குறும்புப் பிள்ளை களின் தொல்லைகளிலிருந்து பாதுகாத்து வந்தாள். அவளை யாராவது துன்புறுத்தினால், தங்கையைக் காக்கும் உடன்பிறந்த ஆண்மகன்போல அவள் போராடி அவளைக் காப்பாள். லீமா மீது லாரைன் இப்படி உயிராயிருப்பது கண்ட இம்பீரியா அவளைப் புண்படுத்தும் எண்ணத்துடனே லீமாவை வைது கொடுமைப்படுத்தினாள். லீமாவைப் பாதுகாக்க விடாமல், அவளை வேறு இடத்தில் ஏதாவது சாக்குப் போக்குடன் அனுப்பிக்கொண்டே யிருப்பாள்.

லாரைன் மீது இம்பீரியாவின் கொடுமைகளைக் கவனித்த அன்னை அவளிடம் தனிக் கனிவு காட்டி அவளுக்காகப் பரிந்து பேச முனைவாள். இதனால் இம்பீரியாவின் பகைமையும் பொறாமையும் இன்னும் மிகுதியாயிற்று. லாரைனிடம் எல்லாரும் பரிவு கொள் வதற்கு அவள் அழகு மட்டுமின்றி, குணமும் காரணம் என்பதை அறிந்து இம்பீரியா அவளைப்பற்றிய நல்லெண்ணத்தைக் கெடுக்கவும் வழி தேடினாள். சிறப் பாக அன்னைக்கு அவள் பேரில் கெட்ட எண்ணம் உண் டாக்க அவள் சூழ்ச்சி செய்தாள்.

அன்னை அருமையாக வளர்த்த ஒரு பூனையிடம் மடத்தின் சிறுவர் சிறுமியர் அனைவருமே வெறுப்புக் கொண்டிருந்தனர். ஒருநாள் இம்பீரியா லாரைனின் பெயர் பொறித்த அவளது கோப்பையை அதன் வாயில் கட்டிவிட்டாள். பூனை செல்லுமிடமெல்லாம் கோப்பை இழுபட்டு ஓசையுண்டாயிற்று. அது கேட்டுக் கலவரமடைந்த பூனை மேன்மேலும் எங்கும் ஆடியோடி அதை உதறித்தள்ள முயன்றது. சிறுவர் சிறுமியர் கைகொட்டி ஆரவாரம் செய்து அதனுடன் ஓடி அதைத் துன்புறுத்தலாயினர்.

இம்பீரியா இதனைத் தானே சென்று அன்னையிடம் கூறினாள். இக்குறும்பு செய்தது லாரைன்தான் என் பதைத் தெளிவுபடுத்தக் கோப்பையையும் எடுத்துக் காட்டினாள். இதனால் அன்னைக்கு லாரைன் மீது கடுஞ் சினம் ஏற்பட்டது; அத்துடன் இம்பீரியாவே அன்னை யிடம் லாரைனுக்கு இன்னவகையான

தண்டனை தரவேண்டும் என்று கூறி அவளிடமிருந்து அதற்கான கட்டளை பிறப்பித்தாள். அத் தண்டனை லாரைனுக்குட் பொறுக்க முடியாத வேதனை தந்தது. ஏனெனில் அத்தண்டனை வேறு எதுவுமன்று; அவள் அருடை நாய்க் குட்டியை அவளிடமிருந்து அப்புறப்படுத்துவதே.

இம்பீரியாவுடன் இக் குறும்பில் பல சிறுவர், பல நங்கையர்கள் ஈடுபட்டனர். லாரைன் ரோஸியை எண்ணி எண்ணி இரவு பகல் தூங்கவில்லை; ஒழுங்காக உண்ண உடுக்கவில்லை. குறும்பர்கள் அவள் துன்பங்கண்டு வேடிக்கை பார்த்துக் களித்தனர். இரண்டு, மூன்று நாள் சென்றும் ரோஸியைக் காணாமல் லாரைன் “என் ரோஸி எங்கே? அது எப்படியிருக்கிறது?” என்று எல்லாரையும் கேட்கத் தொடங்கினாள். இறுதியில் ரோஸியை இம்பீரியா தோட்டக்காரனிடம் ஒப்படைத் திருந்தாள் என்று கேள்விப்பட்டு அவனை அணுகினாள். அவன் பல நையாண்டிகளுக்கிடையே ரோஸியை அனை வரும் சேர்ந்து கறிவைத்துத் தின்றுவிட்டனர் என்று தெரிவித்தான்.

தன்பற்றுதல்கள் அத்தனையையும் ஒருங்கே இணைத்து ரோஸிபின் மீதே வைத்திருந்தாள் லாரைன் அதற்குச் செய்யப்பட்ட கொடுமையைக் கேட்ட அவள், ‘ஆ!’ என்று கூறி அப்படியே கல்லாய்ச் சமைந்திருந் தாள். அத்துயரமே அவள் களிப்பையெல்லாம் போக்கி, அவளுக்குக் கடுநோயாயிற்று. நாட்கணக்காக அவள் படுக்கையில் கிடந்து வதங்கினாள்.

பாரிஸ் மக்கள் நாயிடம் மிகுதி பற்றுடையவர்கள். மிகப் பெரிய குடும்பத்தினர்கூட நாய் வளர்ப்பவர் களைக் காண நெடுந்தொலை சொல்லக் கூச மாட்டார் கள். நாயிடம் பற்றுடையவர்களிடமும் எல்லாரும் நேசங்காட்டினர். நாய் வளர்ப்பு அத்தகைய கலையா யிருந்தது. லாரைன் வளர்த்த அந்த அழகிய சிறு நாயைப் பார்ப்பதற்காக அடிக்கடி பெரிய குடும்பத்துப் பெண்களும் ஆண்களும் கன்னிமாடத்துக்கு வருவ துண்டு. ரோஸிக்கு இழைக்கப்பட்ட கொடுமை, ரோஸியிடம் லாரைன் காட்டிய பாசம், அதன் முடிவால் அவளுக்கேற்பட்ட நோய் ஆகிய இச்செய்திகள் நாய் வளர்ப்புக்கலை யன்பர் உலகில் ஒரு புதிய எழுச்சி யூட்டிற்று. ரோஸியை யிழந்து ஆற்றாது தவிக்கும் இக் கலை நங்கையைக் கண்டு துயர் விசாரிக்கவும், ஆறுதல் தரவும், வேறு தக்க நாயைப் பரிசளிக்கவும் நாள் தோறும் பாரிஸ் நகரின் செல்வர், நங்கையர் வந்த வண்ணமாயிருந்தனர். அவர்களை வரவேற்கும் பொறுப்பை அன்னை இம்பீரியா விடமே ஒப்படை த் தாள். அது அவள் செய்த செயலுக்கேற்ற நல்ல தண்டனையாயிற்று. ஏனனில் அவள் ஓயாது வாசலி லிருந்து காத்து வரவேண்டிய தாயிற்று. அவள் அருவருப்பான உருவையும் கொடுங் குணத்தையும் எப்போதுமே எல்லாரும் வெறுத்தனர். இப்போது நாய்க்கு அவள் தீமை இழைத்த பின் நாய்க் கலையன்பருக்கு அவள் ஒரு பேய்மகாளகவே காட்சியளித்தாள். அவள் வரவேற்புக்கு எங்கும் கிண்டலும் வசையும் அவமதிப்புமே எதிர் பரிசாகக் கிடைத்தன.

இம்பீரியா தன் புதிய அவமதிப்புக்களுக் கேற்ப, லாரைனிடம் புதுப் பகைமை கொண்டு புதுப் பழிகள் நாடினாள்! ஆனால் அன்னை இப்போது அவளிடம் தனிச் சிறப்பான சலுகை காட்டி வந்தாள். அவள் லாரைனிடம் கொண்ட மதிப்பைக் கெடுக்கப் புதுவகை கண்டாலன்றி, அவள் மீது வஞ்சந் தீர்க்க வழி இல்லை. மடத்தின் மாணவமாணவிகள் வாரத்தில் ஒரு நாள் தாய் தந்தையருக்குக் கடிதம் எழுத இணக்கம் அளிக்கப் பெற்றனர். லாரைனுக்குத் தந்தையிடம் இருந்த பற்று இம்பீரியாவுக்குத் தெரியும். தந்தைக்குக் கடிதம் எழுத முடியாதபடி செய்தால் அவள் மனம் வருந்துவாள் என்றும் அவள் கண்டாள். ஆகவே சிறுபிள்ளைகள் கடிதம் எழுத உதவும்படி அவர்களுக்கு வழக்கப்படி மாதிரிக் கடிதப் படிவங்கள் வழங்கும்போது, அவளுக்கு மட்டும் வழங்காது விட்டாள். லாரைன் மீண்டும் மீண்டும் கேட்டும் அவ் வாரம் அவளுக்கு அதன் படிவம் கிட்டவில்லை.

கடிதம் எழுதுவதிலேயே கருத்தாயிருந்த லாரைன் மாதிரிக் கடிதம் எங்காவது கிடைக்காதா என்று மடத்து நூல்நிலையத்தில் சென்று புத்தகங்களைப் புரட்டினாள். மாது தேமாந்திஞி எழுதிய கடிதங்களின் தொகுதி ஒன்று அங்கே இருந்தது. முன்னுரையிலேயே அம்மாது “பேசுவது போல் எழுதுக. கடிதம் எழுதச் சிறந்த வழி இதுவே” என்று அதில் கண்டிருந்தது. மேற் போக்காக ஒன்றிரண்டு கடிதங்களை வாசித்த போது, இவ்வறிவுரைப்படியே அவள் பேச்சுப் போக்கில்தான் எழுதியிருந்தது தெரியவந்தது. தந்தைக்கு எழுதும் ஆர்வத்தால் தூண்டப் பெற்று லாரைன் தன் மனத்திலுள்ள உணர்ச்சிகளை யெல்லாம் எப்படியோ கடிதத்தில் கொட்டி எழுதலானாள்.

தந்தையின் எதிர்கடிதம் அவளை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. “என் அருமை லாரைன்! உன் கடிதம் காண மகிழ்ச்சி. நீ இவ்வளவு நல்ல கடிதம் எழுதக்கூடும் என்று நான் கனவிலும் கருத வில்லை. மடத்துப் பயிற்சியும் முன்மாதிரியும் உனக்கு எவ்வளவு கைத்திறம் தந்திருக்கிறது என்று காண நான் பெரிதும் உவகையடை கிறேன். இப்படியே நீ முன்னேறினால் உன் எதிர்காலம் என் நம்பிக்கைக்கும் மீறியதாயிருக்கும் என்பது உறுதி. உன் அன்பான நல உசாவுதல்களுக்கு நான் தரும் மறுமொழி இங்கே யாவரும் நலம் என்பதும் உன் நலத்தில் யாவரும் அக்கரை கொண்டிருக்கிறாம் என்பதுமே” என்று தந்தைஎழுதியிருந்தார்.

துணையின்றித் தானே எழுதிய கடிதநடை மடத் திற்குப் பெருமையும் தந்தைக்கு மனநிறைவும் தந்து விட்டன. லாரைனின் உள்ளத்தில் கருக் கொண்டிருந்த எழுத்தாண்மைத்திறம் இம்முதற் பாராட்டினால் ஊக் கம் பெற்று அரும்பவிழத் தொடங்கிற்று.

இம்பீரியா போன்ற கன்னித்துறவியரின் கொடுமை யிடையே ஃபிரான்சு நாட்டின் ஒரு நல்ல கடித எழுத்தாண்மைக் கலைஞர் கலை எழுந்து அலைபாயத் தொடங்கிற்று. விரைவில் மடத்தின் முன்மாதிரி கடந்து லாரைனின் பெரோனின் கடித முன் மாதிரி மடத்திலும் வெளியிலும் புகழப்பட்டது. இம்பீரியா மீண்டும் ஏமாற்றமும் கசப்பும் அடைந்தாள்.

தந்தைக்கு எழுதுவதுடன் நில்லாமல் லாரைன் தன் பழைய பள்ளித் தோழியர்களுக்கும் உறவினர்க் கும் எழுதத் தொடங்கினாள். அவள் உள்ளார்ந்த அன்புக் கனிவார்வமும், அவள் குழந்தையுள்ளத்தின் கனவார் வங்களும் படிப்படியாக இனிய ஃபிரஞ்சுமொழி உரை நடையாகி சிறகு விரித்துப் பறக்கத் தொடங்கின. அவள் தன் நேரத்தின் பெரும் பகுதியையும் கடித மொழுதிக் கழித்தாள். நாட்டின் புதிய வாசகர் பலர் இப் புத்திலக்கியத்தைத் தேடிப் படித்து மகிழ்ந்தனர்.

தமக்கை இம்பீரியா அக்கடிதங்களின் புகழ் வளாரது தடுக்கப் பலவகையிலும் முயன்றாள். பல கடிதங்களை அவள் எழுதும் மேடையறையிலிருந்து சேகரித்து, மற்றப் பிள்ளைகள் நையாண்டி செய்யும்படி வாசித்துக் காட்ட முனைந்தாள். வாசிக்கத் தொடங்கு முன் ஓவிய வகுப்பின் மணியடிக்கவே, அவள் அதை லாரைனின் தலையணியினுள் திணித்து அனுப்பினாள் ஓவிய வகுப்பில் தலையணி நழுவி விடக் கடிதங்கள் சிதறின. ஆசிரியர் அவற்றுட் சிலவற்றை எடுத்துப் படித்தார். அது அவள் கடிதம் என்று கேட்டு அவர் அவற்றைஎல்லாப் பிள்ளைகளின் முன்னும் பாராட்டினார். இம்பீரியா ஏளனம் செய்யத் தொடங்கிய கடிதங்களின் புகழ் அவள் சுவையறிவற்ற தன்மையைச் சுட்டிக் காட்டுவதா யமைந்தது.

நகரின் பல செல்வச் சீமாட்டிகளும் நங்கையர்களும் புதிய எழுத்துக் கலைஞரை வந்து பாராட்டினர்.

லாரைனுடன் கடிதம் எழுதுங் கலையில் ஈடுபட்டு அவள் புகழைப் பங்கிட்ட நங்கை மதாம். மரீலி, திடுமெனக் கன்னி மாடத்திலிருந்து தன் மணவினை குறித்து விலகினாள். அவள் பாரிஸின் முதல் தர உயர் குடியில் மணந்து கோமாட்டி சார்விஸ்லாரி ஆயினாள். அவள் வாழ்க்கைப்படி விரைவில் உச்ச நிலை யடைந்தது. அவள் அரசன், அரசியுடன் அடிக்கடி உலாவச் சென்று மன்னவையின் மங்கையர் ஒளி விளக்கங்களுள் ஓர் ஒளிவிளக்கமானாள். அவள் தன் பழைய பள்ளிக்கு வந்து தோழருடன் அளவளாவினாள். பழைய தோழியரனைவரும் தம் பழைய தோழி வெளியுலகில் இவ்வளவு உயர்வடைந்தது கண்டு மகிழ்வும் மலைப்பும் உடையவராய், அவளைச் சூழ்ந்து மொய்த்தனர். ரோஸை இழந்ததன் பின் லாரை ன் அதனிடமாக வேறு எந்த நாயையும் பரிசாக ஏற்க மறுத்து, ரோஸையே நினைத்து மனமாழ்கினாள். ஆயினும் நாளடைவில் அவள் தேறுதலடைந்து பள்ளி நடவடிக்கைகளில் அக்கரை செலுத்தத் தொடங்கினாள்.

மரீலி கோமாட்டி (சார்விஸ் லாரி) லாரைனுடன் அளவளாவிப் பேசிக்கொண்டிருக்கும் போது, பேச்சு ரூஸோ பற்றி எழுந்தது. ரூஸோவின் புதிய கருத்துக் களில் அப்போது புத்தார்வம் பரவி வந்தது. பெண்கள் உலகில் அவர் நூல்கள் மிகவும் விருவிருப் பூட்டி வந்தன. ஆயினும் பழம்போக்காளர்களிடையிலும் ரூசென்ட் தேணொரே கன்னிமாடம் போன்ற இடங்களி லும் புதுப்புனைவுகள் பொதுவாகவும், ரூஸோவின் புனை கதைகள் சிறப்பாகவும் கண்டித் தொதுக்கப் பெற்றி ருந்தன. மரீலி ரூஸோபற்றி மிகுதி ஆர்வங்காட்டினாள். லாரைனுக்கும் அவள் அவரது ‘எமிலி’ யின் ஒரு சுவடி கொடுத்தாள். லாரைன் அதைப் பிறருக்குத் தெரியாமல் தன் உட்பையில் மறைத்து வைத்துக் கொண்டாள்.

தனிமாடம் சார்ந்து லாரைன் ‘எமிலி’யைத் திறந்து வாசிக்க முனைந்தாள். ஆனால் முதல் வரியிலேயே, இந்தப் புனைகதையை வாசிக்கத் துணியும் எந்த இளநங்கையும் தன் குடிமதிப்பை இழந்து விடுவாள்” என்ற வாசகம் அவள் கண்ணிற்பட்டது; இதுகண்டு அஞ்சி லாரைன் உடனே புத்தகத்தை மூடிவிட்டாள்.

தன் குடிமதிப்பு இதற்குள்ளாகப் போயிருக்குமோ என்று அவள் சிறிது அஞ்சினாள்!

இங்ஙனம் மூன்று ஆண்டுகள் சென்றன. கன்னி மாடப் பயிற்சி முடிவடைந்தது. அவள் மீண்டும் தமக்கையுடன் பாட்டியின் வீடு வந்து சேர்ந்தாள்..

இதழ் 6 – திருமணப் பேச்சுக்கள் 

இளவேனிற் பருவம் கழிந்து நடுவேனிற் பருவம் வந்தது. மரங்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கின. இப் போது இருபதாண்டு நிறைந்து இளமையின் முழுமலர்ச் சியுடன் எழிலரசியாக லாரைன் விளங்கினாள். அழகு நடமிடும் பாரிஸ் உயர்தர வாழ்விலேகூட அவள் அழகு எல்லார் கருத்தையும் கொள்ளை கொண்டது. குழந்தைப் பருவத்திலேயே அமைதி மிக்க அவள் தோற்றம் இப் போது விழுமிய பெருமித உணர்ச்சியும் தருவதா யிருந்தது. ஆனால் அவள் உடலிலும் தோற்றத்திலும் இருந்த மலர்ச்சி இன்னும் அவள் வாழ்வில் இடம்பெற வில்லை. அவளது ஒவ்வொரு விருப்பத்தையும் மலரைக் கசக்கி யெறிவது போல எறிவதே தன் கடன் என அவள் பாட்டி மாது பிளான்ஸி கருதினாள். தந்தையோ அவளை என்றும் ஒரு சிறிதும் அறிய முடியாதபடி மாற்றாந்தாய் இடையிலிருந்து தடுத்து வந்தாள்.

மலர்களிலும் மலர்ச் செண்டுகளிலும் லாரைனுக் குள்ள அவாவை உணர்ந்து திரு. மான்கண்டர் ஒரு நாள் அவளுக்கு ‘வாடாத’ செயற்கை மலர்ச் செண்டு கொண்டு வந்து கொடுத்தார். மலர்கள் இயற்கை மலர் களின் நிறமும் மென்மையும் உடையவையாயிருந்த துடன், அவ்வம் மலர்க்குரிய நறுமணமும் ஊட்டப் பெற்றிருந்தது. எலினாரின் உள்ளார்ந்த ஆர்வமுழுதும் இம்மலர்ச் செண்டில் ஈடுபட்டு மகிழ்ந்தது. அவள் அப்போது பாட்டியைக் காணச் சென்று கொண்டிருந் தாளாதலால், அதனைக் கையிலெடுத்துக்கொண்டு அவளைப் பார்வையிடச் சென்றாள். பாட்டியுடன் அவள் வண்டியேறி உலாவச் சென்றபோதும் இது அவள் ஆடையுள் இடம் பெற்றிருந்தது.

லாரைனைத் திடீரென்று மாது பிளான்ஸி ஏறெடுத் துப் பார்த்து, “நிமிர்ந்திரு, லாரைன்!” என்றாள். லாரைன் தன் பன்மலர்ச் செண்டைக் கீழே வைத்து விட்டு நிமிர்ந்தாள். கிழவியின் கண்கள் பன்னிறக் கவர்ச்சியுடைய அப் பூங்கொத்துக்கள் மீது பட்டன. அவள் உடனே “உனக்கு எவ்வளவு திண்ணக்கம், என் முன் இம் மலர்களைக்கொண்டு வர! மலர்களின் மணம் வீசினால் எனக்கு மண்டையிடி வந்துவிடும் என்று உனக்குத் தெரியாதா?” என்றாள்.

“அவைகள் மெய்யான மலர்களல்ல, பாட்டி. இதோ பாருங்கள்! அவை மலர்கள் போலச் செய்யப் பட்ட தாள் வேலையே!” என்றாள்.

“என்னிடம் வாதம், விளக்கம் எதுவும் வைத்துக் கொள்ளாதே. நாற்றம் பொறுக்க முடியவில்லை. அதை அப்படியே பலகணியின் வழியாக வெளியே எறிந்து விடு!”

“எறிவானேன் பாட்டி! வீட்டிற் கொண்டுபோய்…”

மாது பிளான்ஸி அவள் பேசி முடிவதுவரைப் பொறுக்கவில்லை. பூச்செண்டைக் கையிலிருந்து பறித்துப் பலகணி வழியாக வீசி யெறிந்தாள். அவை சேற்றில் விழுந்து கசங்கி நைந்தன. பின் வரும் வண்டி சக்கரம் அவற்றைச் சேற்றுள் அமுக்கிக் கரைத்து விட்டன. லாரைன் உள்ளத்தின் கிளர்ச்சிகளும் அத்துடன் நைந்து போயின.

பாட்டி வீட்டின் கசப்பறிந்து தந்தையிடம் தன் குறைகளைக் கூற எண்ணினாள் அவள். “என்னைப்பற்றி அக்கரை கொள்ள என் தந்தையைத் தவிர வேறு உலகில் யார் இருக்கிறார்கள்?” அவர் என்னை நேரில் கண்ட டால் ஏதாவது கட்டாயம் வழி செய்வார்” என்று அவள் தனக்குள் கூறிக்கொண்டாள்.

ஆனால் தந்தையை அவள் பார்க்கவே முடியவில்லை. அவள் வரும் எண்ணத்தை மாற்றாந்தாய் அவரிடம் திரித்துக் கூறியிருந்தாள். அவளுக்குத் தந்தையிடத் தில் இம்மியளவும் பாசமில்லை யென்றும், தன் செல் வத்தை நயமாக இப்போதே தன் கைக்குக்கொண்டுவர வேண்டுமென்னும் சூழ்ச்சியுடன்தான் நேரில் பார்க்க விரும்புகிறாள் என்றும் திரு. பெரோன் நம்பும்படி அவள் கூறியிருந்தாள். ஆகவேதான் லாரைன் சென்ற போதெல்லாம் தந்தையில்லை என்ற மாற்றம் பணியாள் மூலம் தெரிவிக்கப்பட்டது.

ஒரு நாள் உணவு வேளை பார்த்து லாரைன் தந்தை வீடு சென்றாள். வழக் கம்போல, பணியாள் பெரோன் வீட்டிலில்லை’ என்றான்.

லாரைன்: வீட்டிலில்லையா? நான் வருவதாகத் தான் அவருக்குத் தெரியுமே! முன்கூட்டி எழுதிவிட்டுத் தானே வந்திருக்கிறேன்.

பணியாள்: அம்மா! நான் உங்களிடம் என்ன சொல்வேன்! தந்தை வெளியே போயிருக்கிறார் என்று தங்களிடம் கூறத்தான் எனக்கு உத்தரவு. நான் வேறு எதுவும் செய்ய வழியில்லை.

லாரைன் நிலைமையை உணர்ந்துகொண்டாள், தந்தையைக் காண முடியாவிட்டால், அவருக்கு ண்மையான நண்பர் யாரையாவதுதான் காண வேண்டும். ஆகவே, “சரி, தந்தையின் குடும்ப குருவை நான் பார்க்கலாமா?” என்று கேட்டாள். பணியாள் ‘அது என்னால் செய்யக்கூடும். அவரை இதோ அனுப்புகிறேன்” எனறு சொல்லி உட்சென்றான்.

சிறிது நேரத்துக்குள் நல்ல நாகரிக ஆடை யுடுத்த ஒரு வெண்தாடிப் பெரியார் அங்கே வந்தார். அவர் லாரைனிடம் அன்பாக ‘என்ன அம்மணி! நலமாயிருக்கிறாயா? ஏன் கவலைப்படுகிறாய்?” என்றார்.

லாரைன் அவரை வணங்கித் தன் துயரங்களை யெல்லாம் எடுத்துக் கூறினாள். “உலகில் எனக்கிருக் கும் செல்வம், உறவு, அவாக்கள் எல்லாம் என் தந்தை ஒருவர்தாம். அத் தந்தையைக்கூடக் காணமுடியாத பாவியாயிருக்கிறேன். மாண்ட அன்னை என் துயரை ஒரு வேளை அறிந்து உதவினாலும் உதவலாம் போலிருக் கிறது. உயிருடனிருக்கும் தந்தை என்னைக்கண்டு ஆறுதலளிக்கக்கூடமுடியாதவரா யிருக்கிறார்” என்றாள்.

அவள் துயரமே உருவெடுத்து வந்தாற் போலத் தோற்றமளித்தாள். அவளைக் கண்ட எவருக்கும் கனிவு தோன்றாமலிராது. அவள் கண்களில் நீர் பெருகி வழிந் தது. அடர்த்தியான அவள் நீல நிறக் கூந்தல் அவள் தோள்களையும் முதுகையும் மறைத்துப் புரண்டு கிடந் தது. பனித்திரையிலும் முகில் கூட்டத்திலும் மறைந் தொளிரும் வெண்மதிபோல் அவள் முகம் பொலி விழந்து வாடியிருந்தது.

குடும்ப குரு அவள் துயர் கண்டு சிறிது கண்கலங் கினார். ஆனால், அவர் வெறும் சமயகுரு மட்டுமல்ல. உலகியலறிவும் நிரம்பியவர். ஆகவே சிறிது நேரம் அவள் உணர்ச்சிகள் தெளியும்வரை அவர் வாளா இருந்துவிட்டுப் பின் அறிவுரை கூறினார்: “அம்மணி! நீ ஆண்டில் இளமையுடையவள். உலக அனுபவம் பெறாதவள்; துணையற்றவள் என்று நீ கருதுவது அதனாலேயே. ஆனால் நீ அறிவுடைய பெண். தம் அறிவுக்கு மிஞ்சிய துணை உலகில் யாருக்குமே கிடையாது.  அதை நீ பயன்படுத்த வேண்டும். நீ இன்று துணையற்றிருப்பதற்குக் காரணம் இன்னதென்று உனக்குத் தெரியுமா? நீ பெருஞ் செல்வத்துக்கு உரிய வளாய்ப் பிறந்திருக்கிறாய். மணமாகும் வரை அந்தச் செல்வத்தை நீ கைக்கொள்ள முடியாது. அது உன் தந்தையிடம் தான் இருக்கும். நீ தந்தையைக் கண்டால் விரைவில் நல்ல மன உறவு ஏற்பட்டு அதன் பயனை நீ அடைந்து விடக்கூடும். இன்று அதைப் பிறர் துய்க்க விரும்புவதால்தான் உன்னை அண்டவிடாமல் செய்கின்றனர். ஆயினும் நீ அவரைப் பார்த்தாலும் மிகுதி பயன் இராது. அவர் தற்சார்புடையவராயில்லை. ஆகவே நீ வீண் உணர்ச்சிகளில் காலந்தள்ளாமல், நீயாகவே திருமணம் செய்துகொள்ளப்பார்; அதன் பின் உனக்குத் துணை யார் என்று நீ தேட வேண்டி யிராது. உன் துணையை யாவரும் நாடுவர். நீ இன்று கண் கலங்குகிறாய். நாளை இந்நிலையை எண்ணி நான் சிரிக்க வேண்டிவரும்” என்றார்.

லாரைனின் கலங்கிய உள்ளத்தில் குருவின் சொற்கள் சிறிது தெளிவு தந்தன. அது வெறும் அறவுரையன்று; தன் எதிர்கால வாழ்க்கைக்கு ஓரளவு வழிகாட்டுவது என்று உணர்ந்தாள்.

ஆனால் வழி தெரிந்ததேயன்றி, அதற்கான வாயில் எதுவும் காணோம். வழியும் தற்போது எளிதாயில்லை. தனக்கு ஒரு தமக்கை இருக்க, தான் தன் காரியத்தை முதலில் நினைத்தலாகாது என்று அவள் மீண்டும் அமைந்தாள். தன்னறிவற்ற அத்தமக்கையைத் தான் பார்ப்பதுபோல, கண்ணாகப் பாவித்துப் பேணத்தக்க ஒரு கணவனைக் கண்டுபிடித்து அவளை மணம் செய் விக்க வேண்டுமே என்று அவள் கவலைப்பட்டாள். தமக்கைக்கும் தன்னை ஒத்த செல்வம் இருப்பதால், குரு கூறிய இடையூறுகள் தன்னைவிட அவளுக்கு இன்னும் மிகுதி என்பதையும் அவள் எண்ணிப் பார்த்தாள். தமக்கை மணமானால், அவள் கணவனே அப்பெருஞ் செல்வத்துக் குரியவன். அதனை ஆள்பவன் அவள் கணவனாகவே இருப்பான். இச்செல்வத்தைக் குறியாகக் கொண்டு எவரேனும் அவளை மணந்தால், அவளை ஏமாற்றிச் செல்வத்தைப் பறித்துக்கொண்டு. அவளைப் பின்னும் துணையற்றவளாக்கலாம்; அல்லது அப்பணத்தை வைத்துக்கொண்டே கொடுமைப்படுத் தலாம். ஆகவேதான் கவலைப்பட வேண்டியது தன்னைப்பற்றியன்று, அவளைப் பற்றியே என்று லாரைன் முடிவு செய்துகொண்டாள்.

அவள் அஞ்சியது முற்றிலும் சரியாய்ப் போய் விட்டது. மாது சூசேன் பெரோனின் தொலையுறவின னான எவ்ரிமாண்டு என்ற ஒரு பகடி திரு. பெரேனின் மனத்தைக்கரைத்து அவர் இணக்கம்பெற்று லீமாவிடம் காதல் பேச்சுப் பேசத் தொடங்கினான். உலகமறியாத லீமா அவனை மனமார நம்பி அடிக்கடி தங்கையின் பாதுகாப்பின்றி அவனுடன் போகவரத்தொடங்கினாள்.

ஃபிரஞ்சு நாட்டார் வழக்கப்படி காதலுரிமை பெற்றபின் காதலர் தொடர்பில் யாரும் தலையிட முடியாது. அண்ணன் தங்கைகூட அவர்களைத் தொலை விலிருந்தே கவனிக்க முடியும். ஆகவே, லாரைன் இன்னது செய்வதென் றறியாமல் மனங்குழம்பினாள்.

லாரைன் கவலையை விரைவிலேயே காலதேவன் போக்கினான். எப்போதுமே நலிவுற்றிருந்த லீமா தன் புதிய மாறுபட்ட உணர்ச்சி தாங்காமல் மடிவுற்றாள். தமக்கையின் துணையுமற்று லாரைன் பாகாயுருகினாள். ஆனால், அத்துன்பத்திடையேகூட, தமக்கை அச் சமயம் இறந்ததால் உண்மையில் சாவினும் கொடிய ஒரு பாழ்ங் கசக்திலிருந்து தப்பினாள் என்று நினைக்கா மலிருக்க முடியவில்லை. அப்பாழ்ங் கசம் எத்தகையது என்பதையும் அவள் அறிய நெடுநாட் செல்லவில்லை.

தமக்கையின் இறுதி வினைகள்ஆற்றி ஒன்றிரண்டு நாட்களே ஆயின. லாரைன் இன்னும் கறுப்பாடை யுடனேயே இருந்தாள். அச்சமயம் லீமாவை மணஞ் செய்ய இருந்த நயவஞ்சகன் எவ்ரிமாண்டு அவளைக் காணவந்தான். துயர் வினாவும் சமயமாதலால் அவளும் அவனுடன் உரையாட மறுக்கவில்லை. “அம்மணி! தங்கள் பெருந்துயரில் பங்குகொண்டு ஆறுதல் தரும் உரிமையுடன் வந்திருக்கிறேன்” என்று அவன் பேச்சுத் தொடங்கினான்.

“தங்கள் அன்பாதரவுக்கு நன்றி. என் இன்னுயிர்த் தமக்கையிடம் தாங்கள் காட்டும் பரிவுகண்டு மகிழ்கிறேன்!” என்றாள் லாரைன்.

தறுவாய்க்கேற்ற முறையில் நயமாகவும் அதே சமயம் புற உணர்ச்சிப் போர்வையைச் சுட்டியும் அவன் பேசியது கேட்டு அவள் சிறிது நேரம் திகைத்து நின்றாள். ஏனெனில் அவன் உண்மையில் லீமாவின் பிரிவுத்துயர் உசாவ வரவில்லை. அந்தச் சாக்கில் தன் திருமண விலங்கை லீமாவின் தங்கையிடம் மாற்றிப் போகவே திட்டமிட்டு வந்தான். முதற் பேச்சின் அதிர்ச்சியிலிருந்து தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டு அவன் தன் பேச்சுப் பாணியை மாற்றி, நேரடியாகத் தன் கருத்தைப் புலப்படுத்தத் தொடங்கினான்.

“மாண்டவர்க்காக எவ்வளவு நாம் வருந்தினாலும் அவர்கள் மீண்டும் வருவதில்லை என்பதை நீங்கள் அறியலாம், அம்மணி. தவிர இச்சிறு துயரால் நீங்கள் உங்கள் அழகிய பொன்னுடலை வருத்திக்கொள்ளவும் கூடாது. உங்கள் அழகு, குணம், இளமை……”

லாரைன் அவன் பேச்சுப் போக்கைக்கண்டு திடுக் கிட்டாள். அவள் அவன் பேச்சை வாளா கேட்டுக் கொண்டிருக்காமல் சினங்கொண்டு எழுந்தாள்.

அக்காலப் பகட்டாரவார வாழ்வில் பொறுப்பற்ற விடலை ஆடவர் தம்முடன் தம் நாயையோ அல்லது வேறு வளர்ப்பு விலங்குகளையோ இட்டுச் செல்வ துண்டு. லீமாவை மணம் புரிய எண்ணிய இவ்விடலை தன்னுடன் ஒரு குரங்கையே உடன்கொண்டு சென்று வருவது வழக்கம். லாரைன் எழுந்த வேகத்தில் குரங்கு சலசல வென்று பற்கடித்துக் கொண்டு அப்பால் ஓடியது. விடலை அதைப் பிடித்திழுத்துத் தடவிக் கொடுத்துக்கொண்டே, “அம்மணி! என் நெஞ்சகத்தைத் தங்கள் வசத்தில் ஒப்புவிக்க உங்கள் தந்தையிட மிருந்து உரிமை பெற்றே வந்திருக்கிறேன்” என்றான்.

அவன் துணிச்சல் லாரைனுக்குச் சினமூட்டியது. அதே சமயம் இத்தகைய ஈனர்களுக்குத் தந்தை ஒரு சிறிதும் மனிதப் பாசமின்றித் தம்பெண் க ளை ஒப்படைக்க நினைப்பது பற்றி அவள் மனங் கசந்தது.

அவள் இப்போது நயமாகவே பேசினாள். ஆனால், தன் முழு வெறுப்பையும் சீற்றத்தையும் அவன் மீது கொட்டினாள்.

“தாங்கள் தன்னைக் காதலித்ததாகத்தான் அப்பாவி லீமா நம்பியிருக்கக்கூடும். ஆனால், லீமாவைத் தாங்கள் காதலித்த வகையை நான் இதோ பார்க்கிறேனே! தங்கள் காதலை லீமா நம்பியிருக்கக் கூடும். நல்லகாலம், அவள் அக்குழியில் விழாமல் உயிர் விட்டாவது தப்பினாள். அவள் செல்வமும் என்னிடமே வர இருப்பதால், நீங்களும் காதலித்த செல்வத்தைப் பின்பற்றி இப்பக்கம் நாடினீர்கள். பாவம்! தாங் களாவது செல்வத்துக்காகக் காதலிப்பதாக நடிக்க முடிந்தது. நான் எதற்காக நடிப்பது?” என்றாள்.

அவன் வாயடைத்துப் போயிற்று. பேச்சில் வெல்ல முடியாதென்று அவளை அச்சுறுத்தி அடக்க எண்ணிக் காலை ஓரடி முன் வைத்தான். லாரைன் பெண் புலி போலச் சீறி எழுந்தாள். தன் கைப்புறச் சட்டையை ஒதுக்கி அதிலுள்ள ஒரு படுதழும்பைச் சுட்டிக் காட்டி, “இதோ பார்; நீ ஆள் தெரியாமல் விளை யாட வேண்டாம். என் லீமாவை ஒரு பெண் அடிக்க வந்தாள். அவள் மிக முரட்டுப் பெண். அவளை நான் தடுத்தபோது அவள் கடித்த தடம் இது. அவள் கடித்துப் பல்லின் திறத்தைத் தன்னால் ஆனமட்டும் காட்டி னாள். நான் தலையைப் பிடித்த பிடிவிடாமல் இழுத்து என் கைத்திறத்தைக் காட்டி வென்றேன். அவள் பல் தழும்பு என் கையில் அழியாது. அதுபோலவே என் கைத் தழும்பும் அவள் வழுக்கைத் தலையில் என்றும் தெரியும். இப்போது கண்டு கொண்டாயா நான் எப்படிப்பட்டவள் என்பதை?” என்றாள்.

அவன் ‘ஆ!’ என்று கூறிப் பின்னடைந்தான்.

அவன் குரங்குகூட லாரைன் சீற்றங்கண்டு அஞ்சி அவனை இழூத்துக் கொண்டு ஓடிற்று.

அவள் பேரில் விடலை கொண்ட அச்சம் அவனை மீண்டும் லாரைன் பக்கம் வராமல் தடுத்தது. ஆனால் உரிமை பெற்ற காதலனென்ற முறையில், லாரைனு டைய தந்தையிடமிருந்து அவள் செல்வத்தை அவன் கறப்பதை இது தடுக்கவில்லை. லாரைன் துடுக்குத் தனத்தை மாது பெரோனிடம் அவன் ஒன்றிரண்டு ஆகப் பெருக்கிக்கூறி, அவள் ஒத்துழைப்புடன் முன் னிலும் விரைவாக அவள் செல்வத்தைக் கரைத்து அவள்மீது பழி தீர்ப்பதென்று அவன் கச்சைக் கட்டி னான். நாளாக ஆக, லாரைனின் செல்வம் அத் தீயோன் தீய வாழ்வுக்கு இரையாகலாயிற்று.

மாது பிளான்ஸி இப்போது லாரைன் பக்கமிருந்து திருமண வகையில் வற்புறுத்தினாள். “மாது பெரோன் ஒரு புறம், இவ்விடலை ஒரு புறம் உன் செல்வத்தை இரண்டருகிலிருந்தும் தின்று கொண்டிருக்கிறார்கள். இன்னும் திருமண வகையில் காலந் தாழ்த்தினால் விரை வில் ஓட்டாண்டியாய் விடுவாய்” என்று அவள் லாரைனை முடுக்கினாள்.

லாரைனும் யாரையாவது விரைவில் மணஞ் செய்து கொள்வது என்றுதான் துடித்தாள். ஆனால் இது செல்வங் கரையுமென்ற அச்சத்தினால் அன்று. மாது பிளான்ஸியின் ஆட்சியிலிருந்து தப்பவேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் அன்புக்கு அலைந்த அவள் வாழ்வில் அவளுக்கு ஓயாக் கவலையே மிகுதியா யிருந்தது. அக்கவலையிலேயே தோய்ந்த அவள் உள்ளத்தில் காதல் என்ற உணர்ச்சிக்குச் சிறிதும் இட மில்லாது போயிற்று. அவள் பேரழகு எவரையும் கவர்ந்தது. ஆனால் எவரும் அவளைக் கவரவில்லை.

இளமை, நற்குணம் உடையவராய், நட்புக்கு உரிய வராக லாரைன் தேர்ந்தெடுத்த எந்த இளைஞரையும் பாட்டியோ மாற்றாந்தாயோ விரும்புவதாகக் காண வில்லை. அவர்கள் உள்ளத்தில் லாரைனது காதலுக் குரியவன் இளைஞனாயிருக்கக்கூடாது என்ற எண்ணம் இருந்தது போல் காணப்பட்டது. நடுத்தர வயதுடைய வரைத் தேர்ந்தெடுத்துப் பார்த்தாள். இத்தகையோர் களைப் பாட்டி ஆதரித்தால், மாற்றாந்தாயும் அவளைப் பின்பற்றித் தந்தையும் தடுத்தனர். மாற்றாந் தாயும் தந்தையும் ஆதரித்தால், பாட்டி உடனே எதிர்த் தாள். லாரைன் திருமணப் பேச்சு இங்ஙனம் அவர்கள் இருவர் போட்டிக்குரிய ஒரு போராட்டமாயிருந்தது. இவ்வகையில் தனக்குத் திருமணம் என்பது அவர்கள் உயிருடனிருக்கும் வரை முடியாத காரியமேயாகும் என்று அவள் தனக்குள் எண்ணலானாள்.

– தொடரும்…

– வாடாமல்லி (நாவல்), முதற்பதிப்பு: ஜூலை 1965, சேகர் பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *