வாடகைப் போர்ஷன்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 11, 2025
பார்வையிட்டோர்: 16,765 
 
 

இவன் வீட்டை நெருங்கியவுடனே லைட் அணைந்து போனது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருட்டு அப்பிக் கொண்டது.

“விளக்கு ஏற்றலையா?” கேட்டுக் கொண்டே வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தான்.

“ஏத்தறேன்.. தீப்பெட்டியை எங்கே வச்சேன்னு தெரியலை.” தட்டுத் தடுமாறித் தேடிக் கொண்டிருந்தாள் விமலா

“விமலாம்மா.. கொஞ்சம் மேட்ச் பாக்ஸ் இருந்தா தர்றியாம்மா…” சைடு போர்ஷன் தாத்தா வேறு கத்தினார். கதவைப் படபடவென்று தட்டினார். இவனுக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. “வந்ததும், வராததுமா என்ன டென்ஷன்.” ‘பாவம், அவருக்குக் காது கேட்காது. அதனால்தான் அப்படி பலமா தட்டறார்…” சொல்லிக் கொண்டே கதவைத் திறக்கப் போனாள் விமலா.

“பொறு, பொறு… முதல்ல தீப்பெட்டியைத் தேடிக் கண்டுபிடி பிறகு கதவைத் திறக்கலாம்…” தடுத்தான் இவன்.

ஒரு வழியாய் விளக்கை ஏற்றியவுடன் தீப்பெட்டியை வாங்கினான் சைடு போர்ஷன் கதவைக் கால்வாசி திறந்து நீட்டினான். அந்தப் பெரியவரின் கை நீண்டு வாங்கிக் கொண்டது. கதவை மூடினான்.,

அவசர ஆத்திரத்துக்குன்னு ஒரு தீப்பெட்டி கூடவா கைவசம் வெச்சிக்க மாட்டாங்க. காதில் விழுந்தாலும் பரவாயில்லை என்று சத்தமாகவே கத்தினான்

“பேசாம இருங்கோ.. பாவம்.” என்றாள் விமலா. அவளுக்கு இரக்கம் மிகுதி. யாரும் குழைந்து, குனிந்து, சோகக் குரலில் எதையும் கேட் டுவிடக் கூடாது மனம் இளகி விடும். இல்லையே என்று பதில் வராது. மற்றவர் துன்பம் கண்டு உருகும் உள்ளம்.

இந்தக் காலத்துலே இருநூறுக்கும், முன்னூறுக்கும் எங்கே வீடு கிடைக்குது உன் தோழியோட பேரன்ட்ஸ்ங்கிறதால ஐம்பது குறைச்சு முன்னூற்றி ஐம்பதுன்னு சொல்லச் சொன்னா பழைய வாடகை முன்னூறையே ஒப்பிச்சிட்டு வந்திருக்க சரி. தொலையுதுன்னு விட்டா, என்னவெல்லாம் தொல்லைகள்

சுந்தரம். நீங்க தப்பா நினைச்சுக்கபடாது . இரண்டாயிரம் அட்வான்ஸ் தா்ற நிலைமைல இப்ப நாங்க இல்லை . ஒரு ஆயிரம் தந்துடறேன். சித்தப் பொறுத்துக்கணும் விமலாம்மா, நீதான் உங்க ஆத்துக்காரர்ட்ட கொஞ்சம் சொல்லணும் அட்வான்சும் குறைந்து போனதில் பெருத்த ஏமாற்றம்

“எல்லாம் உன்னால வந்தது தான். வருஷத்துக்கு ஆயிரத்தி இருநூறு நமக்கு நஷ்டம், இரக்கப்பட்டா இந்தக் காலத்துல பிழைக்க முடியாது. ஒரு வருஷந்தான் பார்ப்பேன். அடுத்த மார்ச்சுல ரூபாய் நானூறு தான் வாடகை இருந்தா இருக்கட்டும். போனா போகட்டும்…வயசானவா. பென்ஷன் காசை வச்சு. பொங்கி சாப்டுண்டு ஜீவனம் கழியறது. போகட்டும், பாவம்..

இவன் மனம் சம்மதமாகவேயில்லை. விமலாவுக்காகப் பொறுத்துக் கொண்டான். ஆனால், அவ்வப்போது அந்தக் கோபம் வேறு ரூபங்களில் தலைகாட்டியது.

இந்த மாதிரியெல்லாம் தொந்தரவு வரும்னுதான் வாடகைக்கு விடற மாதிரி நான் வீட்டைக் கட்டலை. வாழக்கைல ஒரு முறை கட்டறோம். நாமே இருந்து நல்லா அனுபவிச்சிட்டுப் போவோமே..

அலுவலக நண்பர் தியாகராஜன் வேறு அவ்வப்போது இப்படித்தூபம் போட்டார்.

“நமக்குன்னு வாடகைக்கு ஆட்கள் அமையுது பார் விமலாவிடம் குறைபட்டுக் கொண்டான் இவன்,

ஒரு வழியாக கரண்ட் வந்த போது டிவியில் ஏழு முப்பது செய்திகள் முடிவடைந்திருந்தது. மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்டது. விமலா வந்து கதவைத் திறந்தாள்.

“மோட்டார் போடறியாம்மா.. போர் வாட்டர் பிடிச்சிக்கிறேன்.” பாட்டி நின்று கொண்டிருந்தான். விமலா போய் சுவிட்சை ஆன் செய்தாள்.

‘கரெக்டா அந்த ஒளியும் ஒலியும் போடற நேரம் பார்த்து, போர்த்தண்ணி பிடிக்கணும்னு நுழைய வேண்டியது. தண்ணியைப் பிடிச்சமா, கதவை மூடினமாங்கிறது இல்லை. அந்தச் சாக்கில்டிவி பார்க்க உட்கார வேண்டியது. கொஞ்சம் சத்தமா வையுங்கங்கிறது. கலரைக் குறைக்கணும்… கூட்டணும்ங்கிறது. இந்த வயசான காலத்துல இதெல்லாம் தேவையா . ரிமோர்ட்டை எடுத்து அணைத்தாள் பட்டென்று. விடுவிடுவென்று இவனறைக்குள் வந்தாள்.

“ஏனிப்படி கஞ்ஜூஸ் மாதிரி நடந்துக்கறிங்க வயசானவா அசைப்படறா. பார்த்திட்டுப் போறாங்க…டி.வி.யை முழுங்கிடவா போறாங்க. போடுங்க படத்தை – சொல்லிக் கொண்டே ரிமோர்ட்டை எடுத்து அமுக்கினாள். இவன் பேச்சு அவர்கள் காதில் விழுந்து விடக் கூடாதே என்று சத்தம் அதிகமாக வைத்தாள்.

“இதெல்லாம் எனக்குக் கொஞ்சம் கூடம் நமக்கு விருப்பம்னா பார்ப்போம்; பின்ன பண்ணுவோம். உட்கார்ந்திட்டுப் பார்ப்போம். படுத்திட்டுப் பார்ப்போம்-கூட்டி வைப்போம், குறைச்சு வைப்போம், சத்தமா பார்ப்போம். இந்த மாதிரி சுதந்திரமெல்லா கெடுது. இதில் எனக்கு உடன்பாடு இல்லை பையன் வீடு இருக்குல்ல. போய் பார்க்கவேண்டிதானே…” படபடவென்று பொரிந்தான் இவன்.

இவன் வாயில் கை வைத்துப் பொத்தி கையெடுத்துக் கும்பிட்டாள்.

“மத்தவா மனசு புண்படற மாதிரி நடந்துக்காதீங்கோ… அதிலயும் வயசானவா மனம் நோகப்படாது. அது நம்மை பாதிக்குமாக்கும்.”

“சைடுல குடியிருக்கத்தான் வாடகைக்கு விட்ருக்கோமே தவிர, இதுக்கெல்லாம் சேர்த்தில்ல. போன வாரம் வெள்ளிக்கிழமை சினிமா. நாம ஏற்கனவே பார்த்தது . இவங்க பார்க்கிறாங்களேன்னு டிவி.யை ஆஃப் பண்ண முடியாமப் போச்சு. நமக்கு ராத்தூக்கம் கெட்டுது.

ஞாபகமிருக்கட்டும். இரக்கப்படு, வேண்டாங்கல. ஆனா அதுக்கும் ஒரு அர்த்தம் இருக்கணும். நம்ம வசதியை சுருக்கிண்டு சங்கடங்களையும் அனுபவிக்கணும்ங்கிற அவசியமில்லை தாமரை இலைத் தண்ணி மாதிரி இருக்கப் பழகிக்கோ. இந்தக் காலத்துக்கு அதுதான் சூட்டாகும்.”

சொல்லி விட்டு அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தான் இவன்.

ஒவ்வொரு முறையும் வாடகைக்கு அமையும் நபர்களால் ஏதாவது பிரச்னை இருந்து கொண்டு தான் இருக்கிறது.

“வீடு கட்டினா, வாடகைலேயிருந்து லோன் தவணை கொடுக்கிற மாதிரி, சைடு போர்ஷனோ, மாடியோ வச்சுக்கட்டணும். அது தான் புத்திசாலித்தனம், அலுவலகக் கண்காணிப்பாளர் ராமரத்னம் கூறிய யோசனைப்படி தான் செய்தான். உறவினர்கள் முதல் எல்லோரும் பாராட்டத்தான செய்தார்கள். “விவரமான ஆளுயா என்றார்கள் நண்பர்கள்,

ஆனால் வாடகைக்கு வைப்பதால் உண்டாகும் சங்கடங்களை, விலாவரியாகப் பிட்டு வைத்துக் குறைபட்டுக் கொண்டவர் தியாகராஜன் மட்டும்தான்.

“சின்னவீடு செட்டப் ஆன கதையெல்லாம் உண்டுய்யா இதுல. ஜாக்கிரதை” என்று எச்சரித்தார் ஒருநாள், இதற்கு முன் வாடகைக்கு வைத்திருந்தவர்கள் குடியிருந்த காலங்களில் தியாகராஜனின் இந்தப் பயமுறுத்தல்தான் அடிக்கடி ஞாபகத்துக்கு வந்து இவனை அச்சுறுத்தியது.

தேவையா விமலா இதெல்லாம் நமக்கு? வேலியோட போற ஒணானைப் பிடிச்சு மடில கட்டிண்ட கதையால்ல இருக்கு புருஷன், பெண்டாட்டி, ஒரு குழந்தைன்னு சொன்னதுனால தானே வாடகைக்கு வச்சோம். இப்போ புருஷன்காரன் என்னடான்னா இந்த வீட்டுப் பக்கமே எட்டிப் பார்க்கலை.

நானா காவல்காரன் அந்தப் பொண்ணுக்கு? நாளைக்கு ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆச்சுன்னா, எவன் பதில் சொல்றது? கோர்ட்டுக்கு சாட்சி சொல்லவான்னு கூப்பிட்டா நம்மால அதைத் தாங்க முடியுமா

இதைச் சொன்னபோது விமலாவுக்குக்கும் பயம் தொற்றிக் கொண்டது. பிறகு அவள் வேண்டாத தெய்வமில்லை. எத்தனையோ கோவில்களுக்கெல்லாம் நேர்ந்து கொண்டாள். ஒருவிடிகாலைப் பொழுதில் வீட்டைக் காலி செய்யும் அந்த நல்ல காரியம் நடந்து முடிந்தது.

“அந்த மாதிரித் தொந்தரவெல்லாம் இவாள்ட்டக் கிடையாது. அவாளுண்டு, அவா ஜீவனமுண்டுன்னு, வெந்ததைத் தின்னுட்டு விதி வந்தா சாவோம்னு கிடக்கிறவா இவா. நல்லா நினைச்சுப் பாருங்கோ, இது வரைக்கும் இருந்தவாளைவிட, இவா பரவாயில்லை. மனசுல கோபத்தை ஒதுக்கிட்டு பார்க்கணும். அப்பத்தான் புரியும்.”

“என்ன சொல்ற நீ? பிள்ளைப் பூச்சி மாதிரி சதா எதுக்காச்சும் அரிச்சிட்டே இருக்கிறதுதானா வாடகைக்கு இருக்கிறவங்க வேலை? வந்த முதல் மாதத்துல ரேஷன் கார்டை வாங்கிண்டாங்க…. இன்னும் திருப்பித் தரலை. நமக்கு ஜீனிமட்டும் தானேன்னு. அதை அவங்களே வாங்கிக் கொடுத்திட்டு விவரமா வாடகைல கழிச்சிடறாங்க… ரேஷன்ல போடுற மற்ற பொருள்களை நாம வாங்க மாட்டோம்னு அவங்களே முடிவு பண்ணிட்ட மாதிரில்ல இருக்கு. ரேஷன் கார்டை கொடுக்கிறதும், கொடுக்காததும் நம்ம இஷ்டம். அவங்களே

வச்சிக்கிட்டா எப்படி? அட்வான்ஸை குறைச்சாங்க, வாடகையை நாம குறைச்சிட்டோம். அதையும் ஒவ்வொரு மாதமும் பதினைந்தாம் தேதி தான் தரமுடியும்னு இப்போ சொல்றாங்க. கூடப் பிறந்தவனுக்கும், சொந்தக்காரனுக்கும் கூட அட்ஜஸ்ட் ஆகாத காலம் இது. இதெல்லாம் நமக்குத் தேவையா?”

குடிவந்து மூன்று மாதங்கள் மட்டுமே முடிந்த வேளையில், இம்மாதிரிச் சிறு சிறு விஷயங்களைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியவில்லையே என்று மனம் வருந்தினாள் விமலா. வீட்டுப் பெண்மணிகளுக்கிடையிலான பொருள் பரிவர்த்தனை, விஷயப் பரிமாற்றங்கள், கொடுக்கல், வாங்கல் ஆகியவற்றிற்கெல்லாம் தலையைக் கொடுத்துக் கொண்டு தடுமாறுகிறானே என்ற ஆதங்கம் மேலிட்டது விமலாவுக்கு.

“இன்னிக்கு அசோசியேஷன் மீட்டிங் ஆச்சே… நீங்க போகலியா” என்ற போதுதான் சுந்தரத்திற்கு அந்த ஞாபக வந்தது. அந்தத் தெருவின் பிரதிநிதியே அவன் தான். அதன் ஒரு முக்கியப் பிரச்னைக்காகவே அன்று பொதுக்குழு, கூட்டமானது கூட்டப்பட்டிருந்தது. அரக்கப் பரக்கப் போய்ச் சேர்ந்தான் இவன்.

“என்ன சார். உங்க ஸ்ட்ரீட் ப்ராப்ளமா இருக்கு. நீங்கதான் ரெப்ரஸென்டேடிங், நீங்களே லேட்டா வந்தா எப்படி? என்று குறைப்பட்டுக் கொண்டே எடுத்த முடிவைச் சொன்னார்கள்.

“இந்தப் பராப்ளத்தை அந்த வீட்டுக்காரரே தீர்த்துக்க வேண்டியது தான், வாடகைக்கு விடறபோதே நல்ல ஆட்களா, ஒழுக்கமான குடும்பமாங்கிறதை ஜட்ஜ் பண்ணி, செலக்ட் பண்ணி விட்டிருக்கணும். ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு மேலே அந்த வீட்ல தப்புத்தண்டா நடக்குதுன்னு தெரிஞ்சா, போலீஸ்ல புகார் கொடுத்து ஆதாரத்தோட அதை நிருபிச்சு அவங்களைக் காலி பண்ண வைக்க வேண்டியது வீட்டுக்காரர் பொறுப்பு. நாம அசோசியேஷன் மூலமா புகார் கொடுக்கிறதானா அந்த வீட்டுக்குப் பக்கத்து வீடு, எதிர்வீடுகள்னு இருக்கிறவங்களும் புகார் எழுதிக் கொடுக்கணும்.

போலீஸ்ல புகார் எழுதிக் கொடுக்கிற பட்சத்துல, ஸ்ட்ரீட் பிரதிநிதிங்கிற முறைல இதை ஃபாலோ பண்ண வேண்டியது அவர் பொறுப்பு. முடியுமா அவராலே? என்ற போது சுந்தரம் வாயடைத்துப் போனான்.

எல்லோரும் நழுவுவதாகவே பட்டது. பயப்படுவதாகவும் தோன்றியது. ஒரு அமைப்பே இதைக் கண்டு விலகும் போது, தனியொருவன் எப்படி ரிஸ்க் எடுக்க முடியும்? என்று தோன்றியது.

“உங்களுக்கென்ன வந்தது ஆத்திரம்? நீங்கதான் போலீஸ்ல புகார் கொடுத்து, வெளியேற்றப் பார்க்கிறீங்கன்னு அந்த வீட்டு ஆட்களுக்குத் தெரிஞ்சா, நாலு குண்டர்களை வச்சு அடிச்சிப் போட்டான்னா? யார் வந்து காப்பத்துவா? வீட்டுக்காரருக்கு இல்லாத அக்கறை நமக்கென்ன? காலம் அவ்வளவு கெட்டுக்கிடக்கு. வேண்டாத தலைவலியெல்லாம் நமக்கெதுக்கு?”

விமலா சொல்வது போல் உணர்ந்த இவன் “சப்ஜெக்ட் மேட்டர் டிராப்டு” என்றான், கூட்டத்தின் இறுதியில், வெவ்வேறு விதமான சிக்கலான விவகாரங்களெல்லாம்.. அன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது இவனுக்கு.

“ஒவ்வொருவரின் பிரச்னைகளைப் பார்க்கும் போது தன்னுடையதெல்லாம் ஒன்றுமேயில்லை!”

“சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் மேலே போட்டுக் கொண்டு வீணாய் அவஸ்தைப் படுகிறோமோ?”

“இதுவரை வாடகைக்கு விட்ட ஆட்களை விட இவர்கள் பரவாயில்லையோ? நாகாக்கத் தவறி விட்டோமோ?”

பலவாறாக எண்ணியவாறே வீடு வந்து சேர்ந்தபோது தெருவே இருளில் மூழ்கியிருந்தது. வழக்கம் போல் பவர்கட் வீடு பூட்டியிருப்பதைக் கண்டு துணுக்குற்றான்.

‘ஸார், விமலாக்கா திடீர்னு மயக்கமாகி விழுந்திட்டாங்க…. தாத்தா பாட்டி ஆட்டோவுல வச்சு கூட்டிப் போயிருக்காங்க. தேவகி ஹாஸ்பிடலுக்கு உங்களை வரச் சொன்னாங்க…”

விருட்டென்று அப்படியே வண்டியைத் திருப்பினான் இவன்.

“பயப்படாதீங்க. எல்லாம் நல்ல செய்தியாகத்தான் இருக்கும்..” எதிர் வீட்டுக் கோமளா மேடம் கத்திச் சொல்வது காதில் விழுந்தது.

ஆஸ்பத்திரியை அடைந்து, வரவேற்பில் விமலா இருக்கும் அறையைக் கேட்டு அறிந்துக் கொண்டு பரபரப்பாய் போய் நின்ற போது

“கங்கிராட்ஸ்… சுந்தரம்.. விமலாவுக்கு கன்சீவ் ஆகியிருக்கு. இன்னைலேர்ந்து பெட்ரெஸ்ட் டாக்டர் சொல்லிட்டாங்க…” என்றவாறே அந்தப் பெரியவர் வெளியே வர கண்கள் கலங்கியவாறே “ரொம்ப தேங்க்ஸ் ஸார்…” என்றான். ஏதோ குற்றவுணர்வு நெஞ்சில் சட்டென உறுத்த அவர் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

‘என்ன! என்னாச்சு? சந்தோஷமான சமாச்சாரம் தானே? எதுக்கு கண் கலங்கிட்டு? நோ நோ. முதல்ல போய் உங்க ஒய்ஃப்பை பாருங்க… க்விக்’ என்றவாறே உற்சாகமாக சந்தரத்தின் முதுகில் தட்டிக் கொடுத்து அவனை உள்ளே அனுப்பினார் அவர். –

– மனைமாட்சி, 1998.

உஷாதீபன் 1987 முதல் உஷாதீபன் என்கிற புனை பெயரில் எழுத ஆரம்பித்த இவர் தனது எழுத்துப் பணியை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார். வார, மாத இதழ்களிலும் இலக்கியச் சிறு பத்திரிகைகளிலும் இவரது கதைகள் வெளி வந்துள்ளன. அச்சு மற்றும்இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இயற்பெயர் கி.வெங்கட்ரமணி. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நகரைச் சொந்த ஊராகக் கொண்டவர். 1951 ல் பிறந்த இவர், தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறையில் கண்காணிப்பாளராகப்…மேலும் படிக்க...

2 thoughts on “வாடகைப் போர்ஷன்

  1. Vaadagai portion – good story, when I am reading, it will take me to 1990s period. We would like to read this type of tamil story..

    Thank you

  2. வாடகை போர்ஷன் கதை மிகவும் நல்ல கதை நன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *