வாங்கூவர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 22, 2024
பார்வையிட்டோர்: 3,091 
 
 

(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான் யாரைப் பற்றியும் குற்றம் குறை சொல்வதில்லை. குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்று எங்கள் ஆயா சொல்லும். எனக்கு அப்பொழுது ஆறு வயது. ஆயா சொன்னது அப்படி ஒன்றும் புரியவில்லை. மூஞ்சியைப் பார்த்தபடி இருந்தேன். ஆயா என் கையைப் பிடித்துக் கொண்டு, “எல்லாம் உனக்கு கொஞ்ச நாள்ல தெரியும்” என்றது. நான் தலையை அசைத்தபடி மாந்தோப்புக்கு விளையாட ஓடிவிட்டேன். மாந்தோப்பில் ரவியோடு சண்டை போட்டுக் கொண்டுதான் ஆயாவிடம் ஓடி வந்தேன்.

நான் திரும்பி சென்றபோது ரவி, “வாடா. எங்க ஓடிப்போயிட்ட” என்று என் கையைப் பிடித்தான். நானும் அவன் சிநேகிதமாகி விட்டோம். பத்து நாள்கள் நான் ஆயா வீட்டில் இருந்தேன். ரவிதான் என் சிநேகிதன். அப்புறம் நானும் அவனும் சண்டை போட்டுக் கொள்ளவே இல்லை. சாதாரணமாக நான் சண்டைக்காரன். எனக்கு நான்தான் முக்கியம். எல்லாரும் நான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இருந்தது. நான் என்ன கேட்டாலும் அம்மா வாங்கிக் கொடுக்கும்.

நானும் அம்மாவும் அபூர்வா என்ற அப்பார்ட்மெண்டில் மூன்றாவது மாடியில் இருந்தோம். அப்பா சவூதி அரேபியாவில் துறைமுகத்தில் எஞ்சீனியர். வருஷத்திற்கு ஒருமுறை வருவார். ஆனால் வார வாரம் வெள்ளிக்கிழமை டெலிபோனில் பேசுவார். நான்தான் போன் எடுப்பேன்.

அப்பாவின் குரல் என் குரல் மாதிரியே இருக்கும். நானும் அப்பாவும் ஒரே மாதிரி இருப்பதாக ஆயா சொன்னது. அதோடு சின்ன வயது போட்டோவைக் கொண்டு வந்து காட்டியது. நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். அப்பாவிற்கும் எனக்கும் வித்தியாசமே தெரியவில்லை. நான் போட்டோவை தூக்கிக்கொண்டு அம்மாவிடம் ஓடினேன்.

“எதுக்கு இப்படி ஓடி வர்ற. கீழ விழுந்தா கை, கால் உடைந்து விடும்” என்றது அம்மா.

”பாரும்மா, சின்ன வயது அப்பா படம்” என்று அம்மா மூஞ்சிக்கு நேராகக் காட்டினேன்.

“உன்ன மாதிரியே இருக்கு?”

“அது எப்படி அம்மா?”

“அதென்ன ஆச்சரியம். நீ அப்பா புள்ளதானே.’

“எல்லாரும் அப்பா மாதிரிதான் இருப்பாங்களா?”

“கொஞ்சம் பேர்’

“மத்தவங்க யார் மாதிரி, அம்மா?”

“இதுக்க எல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது. எனக்கு வேலை கிடைக்குது ?” என்று அம்மா படி இறங்கியது.

“அப்பாவிற்குத் தெரியுமா?

“போன் வருமில்ல. அப்ப கேட்டுப்பார்”

நான் அப்பா போன் பேசும் வெள்ளிக்கிழமையை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன். அப்பா போன் வந்ததும், முதலில் கேட்க வேண்டியது என்னுடைய கேள்விதான். எனக்கு கேள்வி கேட்பது என்றால் ரொம்பப் பிடிக்கும். ஆயா கிட்ட நான் நிறைய கேள்வி கேட்பேன். ஆயா என் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லாமல் பாட்டுப் பாடும், ராகம், இழுத்துப் பாடும். அந்தப் பாட்டு சினிமா பாட்டு மாதிரி இல்லை. அது வேறு ஒரு தினுசாக இருக்கும்.

“இது என்ன பாட்டு ஆயா?”

“நிஜ பாட்டு”

“அப்ப பொய்ப் பாட்டு இருக்கா.”

“பொய்ப்பாட்டு இருந்தால், நிஜப்பாட்டு இருக்கத்தானே வேண்டும்.”

“நீ பாடுன பாட்டு என்ன பாட்டு ஆயா.”

“அதான் சொன்னேனே. நிஜ பாட்டு” என்று ஆயா கால்களை நீட்டி, என்னை இழுத்து மடியில்போட்டுக்கொண்டு பாட ஆரம்பித்தது, அந்தப் பாட்டு அதுவரையில் நான் கேட்காத பாட்டு. காதின் வழியாக மனசுக்குள் இறங்கியது. என்னால் ஆயா மடியில் படுத்துக்கிடக்க முடியவில்லை. பாட்டு என்னை மேலே தூக்கிக் கொண்டு வந்துவிட்டது. நான் இருபதடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தேன். ஆயா பாட்டைக் கேட்டுக் கொண்டு கிர்கிர்றென்று சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன். சுற்றும் போதே மயக்கம் வருவது மாதிரி இருந்தது. வீடு, ஆயா, பேன், நாற்காலி, மேசை, கடிகாரம் – எல்லாம் சுற்றுவது மாதிரி இருந்தது.

“போன் எவ்வளவு நேரமா அடிக்குது?” என்று சொல்லிக் கொண்டே வெளியில் இருந்து வந்த அம்மா அவசர அவசரமாக உள்ளே சென்றது.

“ஆயா, இன்னக்கி என்ன கிழமை?”

“வியாழக்கிழமை”

“வெள்ளிக்கிழமை தானே அப்பாகிட்ட இருந்து போன் வரும்.”

“ஆமாம்”

“நான் அடுத்த வாட்டி, டேப் ரிக்கார்டு எடுத்துக்கிட்டு வர்றேன்.”

“ஏன்?”

“உன் பாட்டையெல்லாம் டேப் பண்ணிக்கறேன்.’ “உஷ்… அம்மாவிற்கு அதெல்லாம் பிடிக்காது.” “எனக்குப் பிடிக்குது, ஆயா”

“ஐயோ”… என்று அலறியபடி அம்மா உள்ளே இருந்து ஓடிவந்தது.

ஆயா பரபரக்க என்னைத் தள்ளிவிட்டு எழுந்தது. அம்மா, ஆயாவைக் கட்டிக்கொண்டு, “மோசம் போயிட்டோம் அத்தை’ என்று அழுதது, எனக்கு ஒன்றும்புரியவில்லை. அம்மா இப்படி அழுது நான் பார்த்ததே இல்லை.

“என்ன ருக்கு, சொல்லு” என்று ஆயா அம்மாவைக் கட்டியணைத்தது.

அம்மா ஆயாவை திடீரென்று விட்டுவிட்டு என்னைப் பிடித்துக் கொண்டு, “அப்பா போயிட்டாங்களாம். கார்ல போகும்போது ஆக்ஸிடெண்டாம். பாடிய பிளையின்ல அனுப்புறாங்களாம் அம்மாவால் பேசி முடியவில்லை. என்னை அணைத்துக்கொண்டு சோபாவில் உட்கார்ந்தது. தலையை ஒருமுறை சிலுப்பிக் கொண்டது.

டெலிபோன் அடித்தது. ஆயா சென்று போனை எடுத்தது. ஆயா டீச்சராக இருந்து ஓய்வு பெற்றது.

“பதினொரு மணிக்கு பிளேன் வருதாம்” என்றது ஆயா.

அப்புறம், எங்கள் வீட்டில் பாட்டு, ஆட்டம், விருந்து எல்லாம் இல்லாமல் போய்விட்டது. ஆயா கொஞ்ச நாள் எங்களோடு இருந்தது. அப்புறம், “நான் வர்றேன்டா, ராஜா” என்று கன்னத்தை வருடி கொடுத்துவிட்டு ஊருக்குப் போய் விட்டது.

ஆறுமாதம் போய் இருக்கும். நான் அம்மாவிடம் ஆயா வீட்டிற்குப் போகலாமா என்று கேட்டேன். அம்மா பதிலொன்றும் சொல்லாமல் என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றது. நான் அப்புறம் ஆயாவைப் பற்றி அம்மாவிடம் கேட்கவில்லை. அம்மாவும் சொல்லவில்லை.

நான் கல்லூரியில் சேர்ந்து படித்துக்கொண்டு இருந்தேன். இரண்டாம் ஆண்டு முடிவில், கோடை விடுமுறை. பழைய பெட்டியை சுத்தம் செய்து கொண்டு இருந்தேன். அதில் ஒரு பழைய போட்டோ கிடந்தது. எடுத்துப் பார்த்தேன் ஆயா, சிரித்துக் கொண்டு இருந்தது.

அப்பா காலமானபிறகு, ஆயா போட்டோ ஒன்றுகூட எங்கள் வீட்டில் இல்லை. எல்லாவற்றையும் அம்மா தூக்கிப் போட்டு விட்டது. அம்மாவிற்கும் ஆயாவிற்கும் என்ன சண்டை என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஆயா, அம்மா அளவிற்குச் சண்டை போடாது. அது யாரிடமும் குற்றம் பார்ப்பது இல்லை. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதுதான் அதன் தாரக மந்திரம். அம்மா அப்படி இல்லை. அப்பா போனபிறகு அம்மா ஒரேடியாக மாறிவிட்டது. முதலில் ஆயா வீட்டில் இருந்து வெளியில் சென்றது. அப்புறம் சித்தப்பா, அத்தை – என்று யாரும் எங்கள் வீட்டிற்கு வருவதில்லை. அது மட்டுமல்ல, சிநேகிதர்கள், உறவினர்கள் என்று யார் கூடவும் அம்மா பழகவில்லை. டெலிபோனை எடுத்து விட்டது. பேப்பர், புத்தகம் ஒன்றுகூட வீட்டில் இல்லை.

பழைய ரேடியோ இருந்தது. அதில் ஒரோர் சமயம், அம்மா பாட்டுக் கேட்கும். அப்பொழுதுகூட அம்மா முகம் இறுகிப் போய் இருக்கும்.

‘ஐயோ’ என்று அலறிய நாளில் இருந்து அம்மா வேற்று மனுஷியாகி விட்டது. அதற்கு ஊர், உலகம் எல்லாம் நான்தான். அதை நான் ரொம்ப சின்ன வயதிலேயே தெரிந்து கொண்டு விட்டேன். எனவே அம்மா பிள்ளையாகி விட்டேன். அம்மா என்ன சொன்னாலும் ஏன் என்று கேட்பது இல்லை. மறுப்பு சொல்வதில்லை. அம்மாவிடம் நான் சரணாகதி அடைந்து விட்டேன். அதில் சந்தோஷமோ – வருத்தமோ எனக்கு இல்லை.

அம்மாவின் பிள்ளையாக இருந்தேன். தெரிந்து இருந்தது பாதி என்றால் தெரியாமல் இருந்தது இன்னொரு பாதி என்பது இப்பொழுது தான் தெரிகிறது. தெரிந்து இருந்திருந்தாலும், நான் அப்படித்தான் இருந்து இருப்பேன். அதில் ஆச்சரியம் இல்லை.

நான் ஆயாவின் போட்டோவை, மாருதி ஸ்டியோவிற்கு எடுத்துப் போய் பெரிதாக்கி, லாமினேஷன் போட்டு வந்து நடுக்கூடத்தில் மாட்டினேன். அது மாலை பொழுது வெள்ளிக்கிழமை. அம்மா, அப்பா படத்திற்கு இரண்டு முழம் மல்லிகை வாங்கிப் போட்டு, ஊதுபத்தி ஏற்றிவைத்து விளக்கேற்றி கும்பிடும்.

எங்கள் வீட்டில் நடைபெறும் நல்ல காரியம் அது ஒன்றுதான். அப்பொழுது வீடு முழுவதும் மணக்கும். நான் வீட்டில் இருந்தால் ஒரு நிமிஷம் அப்பா படத்தின் முன்னே நிற்பேன். சின்ன வயதில், நானும் அப்பாவும் ஒன்றுபோல் இருப்பதாகச் சொல்லிக் கொண்டே இருந்தேன். நான் இப்போது, பார்க்கும்போது, நான் வேறு ஆளாகவும் அப்பா இன்னொரு ஆளாகவும் இருந்தார். அது தலைமுடி, மீசையால் வந்தது இல்லை. நாங்கள் இரண்டு பேருமே சம்பந்தமே இல்லாமல் வேறு வேறு ஆளாக இருந்தோம். அவர்க்கு எனக்கும் துளிகூட ஒற்றுமை இல்லை. இந்த அன்னியம் – வித்தியாசம் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. நான் அப்பா படத்தையே ஒரு நிமிஷம் பார்த்துக்கிட்டே இருந்தேன்.

“நீ அப்படியே உன் அப்பா” என்றது அம்மா.

நான் அம்மாவை திரும்பிப் பார்த்தேன்.

அம்மா கண்களை மூடியபடி அப்பாவின் படத்தைக் கும்பிட்டுக் கொண்டு இருந்தது. எங்கள் வீட்டில் அப்பா படம் ஒன்றுதான் மாட்டப்பட்டு இருந்தது. அப்பா காலமாவதற்கு முன்னால் வீட்டில் நிறைய படங்கள். அம்மாவும், அப்பாவும் சேர்ந்து இருக்கிற படம். அப்புறம் நான் மட்டும் தனியாக பெரிய படம். வர்ணப்படம். கிருஷ்ணன் மாதிரி கொண்டைப் போட்டுக் கொண்டு கையில் மயிலிறகு பிடித்துக்கொண்டு இருப்பேன். இடது கன்னத்தில் ஒரு கரும்புள்ளி. ரண்டரை வயதில் எடுத்த போட்டோ ஒரே நாளில் காணாமல் போய்விட்டது. பழைய போட்டோ எல்லாம் போக, அப்பாவின் புது போட்டோ வீட்டிற்குள் வந்தது. அது எப்படி வந்தது என்பது எனக்குத் தெரியாது. அம்மா என்னிடம் எதைப் பற்றியும் பேசுவதில்லை.

அம்மா சாப்பாடு,படிப்பு பற்றிதான் பேசும். அப்புறம் துணிக் கடைக்கு அழைத்துக் கொண்டு போய் அப்பாவிற்குப் பிடித்தமான நீல நிறத்தில் எனக்கு சட்டை பேண்ட் வாங்கிக் கொடுக்கும். அம்மா சொல்லுக்கு நான் மறுப்பேதும் சொன்னதில்லை. தாய்ச்சொல் மிக்க மந்திரமில்லை என்பதுதான் என் இலட்சியம். சாலையில் அன்னை இல்லம் என்ற பெயரைப் பார்த்தால், நான் ஒரு கணம் நின்றுவிடுவேன். அப்படியே தாயகம். இவையெல்லாம் தாயின் மகத்துவம் சொல்பவை. கடவுள் எல்லா வீட்டிலும் இருக்க முடியாது என்பதால் தாயை ஒவ்வொரு வீட்டிற்கும் அனுப்பிவைத்து இருக்கிறார் என்று ஏ.கே. செட்டியார் தொகுத்த பொன்மொழிகள் கொண்டநூலில் படித்து இருக்கிறேன்.

உலகத்தில் உள்ள ஜீவராசிகளில் தாய்தான் முதன்மையானது. தாயின்றியெதும் கிடையாது என்பது என் திடமான அபிப்பிராயம். அதுபற்றி நான் வெளியில் சொல்வதில்லை. ரொம்ப விஷயம் பற்றி நான் பேசுவதில்லை. பேசுவதே பலவீனம் என்பது என் கருத்து. பேச்சு என்பதே கண்டுபிடிப்புத்தான். பல ஆயிரம் ஆண்டுகள் மனிதர்கள் பேச்சு இல்லாமல் இருந்து இருக்கிறார்கள். அதனால் அவர்கள் வாழ்க்கையென்பது குற்றம் குறையாக இருந்ததில்லை. பேச்சால் கூடுதல் செளகரியம் அவ்வளவுதான்.

நான், பேசாத சார்லி சாப்ளினின் படம் பார்த்துதான் கற்றுக் கொண்டேன். என் சிநேகிதி பார்வதி குட்டி ஓணத்தை முன்னிட்டு தன் வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தாள். நான் அம்மாவிடம் என்.சி.சி.க்குப் போவதாகச் சொல்லிவிட்டு உடையெல்லாம் மாட்டிக் கொண்டு கிளம்பி பார்வதி குட்டி வீட்டிற்குச் சென்றேன். அவன் என் கோலத்தை பார்த்துவிட்டு, ஒரு சிரிப்பு சிரித்து வரவேற்றாள்.

நான், கேசவமேனன், உன்னி பாலகிருஷ்ணன், ரேணுகா ராமாராவ் – என்று ஒரு கூட்டம். கல்லூரியில் நாங்கள்தான் சிநேகிதம். சிநேகிதம் என்றால் அப்படியொரு சிநேகிதம். எங்கே இருந்தாலும் நாங்கள் ஒரு கூட்டம். ஒரு ஆள் இல்லாமல் இன்னொரு ஆள் கிடையாது. அது எப்படி அமைந்தது என்பது தெரியவில்லை. ஆனால் பிரியாமல் அப்படியே இருந்தது.

பார்வதி குட்டி அப்பா நாராயண மேனன் சிவில் எஞ்சீனியர். அம்மா வக்கீல். அதோடுகூட சமூக சேவகி. இரண்டு பேரும் பேச முடியாதவர்கள், காது கேட்காதவர்களுக்காக பணம் திரட்டி சேவா சமாஜத்திற்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

பெரிய பழங்காலத்து வீடு. கிரீன்வேஸ் சாலையில் புங்கமரங்கள் சூழ்ந்து இருந்தன. எனக்கு என்னவோ, ஆயா கிராமத்து வீட்டுப் பக்கம் வந்ததுபோல இருந்தது. வீட்டில் அப்பா அம்மாவை பெரும்பாலும் பார்க்க முடியாது. ஆனால் வீடு முழுவதும் போட்டோக்கள். அதில் பார்வதி குட்டி படந்தான் அதிகம். அவள் மோகினி ஆட்டம் ஆடுவாள். எனக்கு மோகினி என்றால், பேய், பிசாசுதான் நினைவிற்கு வந்தது. நான் கொஞ்சம் பயந்துகூட போனேன். ஆனால் அவளோ என் பயத்தைப் போக்கி, மோகினி ஆட்ட சி.டி.யை போட்டுக் காண்பித்தாள். மோகினியில் அழகு தேவதையைக் கண்டேன். உடல் புல்லரித்துப் போனது. மோகினியைப் பார்த்து தலையசைத்தேன். சந்தோஷம் முகத்தில் பிரதிபலித்தது.

அவள் என் பக்கம் வந்து உட்கார்ந்து கொண்டு “மோகினி, உன்ன பிடிக்க போகுது, ஜாக்கிரதை” என்றாள்.

“என்னை ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே ஒரு மோகினி பிடிச்சிக்கிட்டு இருக்கு” என்றேன்.

“அப்படியா? யார் அந்த மோகினி”

“எங்க அம்மா?’ என்றேன்.

பார்வதி என்னைப் பார்த்துவிட்டு எழுந்துபோனாள். நிஜத்தில் நான் அம்மாவின் பிடியில்தான் இருந்தேன். அது நல்லதோ, கெட்டதோ என்று நான் பகுத்துப் பார்க்கவில்லை. அதுதான் விஷயம். நான் பார்வதியோடு பழக ஆரம்பித்த பிறகு அம்மாவின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகத் தெரிந்தது போலும். நெருப்பை புகையில் இருந்து கண்டு பிடித்துவிடலாம் என்பதுபோல என்னில் இருந்து, என் உணர்வுகளை அம்மா கண்டு பிடித்துவிட்டது.

நான் அதைத் தெரிந்து கொண்டுவிட்டேன். ஆனால் தெரியாதது மாதிரி இருந்தேன். அது அம்மாவிற்குத் தெரியும். அதுதான் வாழ்க்கையின் விசித்திரம். மனித அறிவு என்பது லேசு பட்டது இல்லை. அது ஒரு நாளையில் வருவதுமில்லை. எத்தனையோ யுகம் யுகமாக யார் யார் மூலமாகவோ வளர்ந்து வந்து இருப்பது, என்பது தெரிந்தது.

நான் ஆயாவின் போட்டோவை எடுத்துக்கொண்டு போய் பார்வதி குட்டியிடம் காட்டினேன். அவள் ரொம்ப சந்தோஷப் பட்டாள். அவளே பிரேம் போட்டு வந்து கொடுத்தாள். பிரேம் போட்டதும், ஆயாவின் படம் புத்துணர்ச்சி பெற்றுவிட்டது. மனத்தில் இருந்து ஆயா வெளியில் வந்து சிரிப்பது மாதிரி இருந்தது.

ஆயா படத்தை நடு கூடத்தில் அப்பா படத்திற்கு எதிராக மாட்டி, மல்லிகை மாலைபோட்டு, மருக்கொழுந்து ஊதுபத்தி கொளுத்தி வைத்தேன். வாசனை கமகமவென்று வீடு முழுவதும் பரவியது.

அம்மா அறையில் இருந்து வெளியே வந்தது. என்னையும் ஆயா படத்தையும் ஒருமுறை மாறி மாறி பார்த்தது. அப்புறம் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கேவிகேவி அழுதது. கண்களில் திரண்ட நீர் கன்னத்தில் வழிந்து என் தோள் மீது விழுந்தது.

“நீ கட்சி மாறிடுவேன்னு எனக்குத் தெரியும்” என்று முணுமுணுத்தது அம்மா.

“அம்மா!” என்றேன்.

“நீ உன் அப்பா, ஆயா – எல்லாம் ஒரே கட்சி. எனக்கு அது தெரியும்” என்று அப்பா படத்தைப் பார்த்தபடி சொன்னது.

“நாங்கள் எல்லாரும் உன் கட்சி தான், அம்மா”

அம்மா என்னை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தது.

அம்மாவின் கோபம், வெறுப்பு எல்லாம் அழுகையாக வெளிப்பட்ட டது. என்னால் தாங்க முடியவில்லை. குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என ஆயா சொன்னதை நினைத்துக் கொண்டேன். அம்மா ஆயா இல்லை. தாய் பெண்தான், என்றாலும் எல்லா தாயும் ஒன்றில்லை. ஒவ்வொரு தாயும் ஒருவிதம். ஆயாவும் அம்மாவும் வேறு வேறு தாய். ஒருதாயை இன்னொரு தாய்க்குத் தெரிவதில்லை. அதுதான் வாழ்க்கையின் புதிர். புதிரை யாராலும் விளக்க முடியாது.

நான் அம்மாவை கட்டியணைத்துக் கொண்டேன். அது எனக்குச் சுகமாக இருந்தது.

நான், என்னுடைய கதையை, வாங்கூவரில் மகனிடம் சொன்னேன்.

“பாவம், அம்மா” என்றான்

“எங்க அம்மா”

“இல்லப்பா, எங்க அம்மா” என்றான்.

ஒவ்வொரு அம்மாவும் பாவம் என்றுதான் மகன் சொல்கிறான். ஆனால் அப்பனைப் பற்றி ஒரு மகனும் நினைப்பதில்லை. அதுதான் வாழ்க்கை. எனக்கு ஐம்பத்தேழாவது வயதில், பிரேஸர் ஆற்றின் கரையில் காரில் போகும்போது தோன்றியது.

நான், என் அம்மாவை நினைத்துக் கொண்டது மாதிரி, என் மகன் தன்னுடைய அம்மாவை நினைத்துக் கொண்டான். அவன் என்னிடம் நெடுநேரம் பேசவில்லை. கார் நெடுஞ்சாலையில் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. தொலைவில் பைன், மேபிள் மரங்களும், பனிபடர்ந்த ராக்கி மலைத் தொடரும் தெரிந்தது.

– ஆறுமுகசாமியின் ஆடுகள், முதற் பதிப்பு: 2011, நற்றிணை பதிப்பகம், சென்னை.

Sa_kandasamy சா.கந்தசாமி (1940 - சூலை 31, 2020) சாகித்திய அகாதமி விருது பெற்ற ஒரு தமிழக எழுத்தாளர், நாவலாசிரியர் ஆவார். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்த இவர் 1968-இல் எழுதிய சாயாவனம் புதினம் பிரசுரமானதிலிருந்து எழுத்துலகில் பிரபலமானார். இப் புதினத்தைத் தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது. சவகர்லால் நேரு, பெரியார், உ. வே. சாமிநாதையர் மற்றும் வெ. சாமிநாத சர்மா போன்றோரின் படைப்புகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *