கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 30, 2025
பார்வையிட்டோர்: 26 
 
 

(1997ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம் – 13

எங்கேயோ வானத்தில் மேகங்கள் கிடுகிடு வென்று குமுறிக் கொண்டிருந்தன. மழை வரப்போவதற்கு அறிகுறியாக அந்த அறையிலுள்ள விளக்கைச் சுற்றிலும் ஈசல்களும் விட்டில்களும் சூழ்ந்து வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

சுந்தரம் எழுந்துபோய் விளக்கை அணைத்தான்.

“ஏன் விளக்கை அணைக்கிறீர்கள்?’ சகுந்தலா கேட்டாள். 

“விளக்கின் ஒளியிலே மடியப்போகும் விட்டில் பூச்சிகளைச் சாகாமல் தடுப்பதற்குத்தான்…” என்று மறை பொருளாக அவளுக்கு எதையோ உணர்த்தினான் அவன். 

“எனக்கு இருட்டென்றால் ரொம்பப் பயம் என்று உங்க ளுக்குத் தெரியாதா?” என்று கேட்டாள் சகுந்தலா. 

“தெரியும் வராந்தாவில் உள்ள விளக்கு வெளிச்சமே போதுமென்று பார்த்தேன்” என்றான் அவன். 

அடுத்தகணம் சகுந்தலாவின் கண்ணிமைகள் நனைந்திருப் பதைக் கண்டு திடுக்கிட்ட சுந்தரம், “ஏன் அழுகிறாய் சகுந்தலா?…” என்று கேட்டான். 

“என் சாந்தி முகூர்த்தத்தன்று படுக்கை அறையில் ஏற்றி வைக்கப் பட்டிருந்த குத்துவிளக்கு திடுமென அணைந்து விட்டது. இப்போது அது நினைவுக்கு வந்தது. எதிர்காலத் தில் நேரப்போகும் பயங்கரத்தை முன்கூட்டியே அறிவிப்பது போல் இருந்தது அது” என்றாள் சகுந்தலா. 

“அப்படியா! அப்புறம் என்ன நடந்தது?” என்று கேட்டான் சுந்தரம். சுந்தரம் அவளை விட்டுப் பிரிந்து வந்த பிறகு நடந்தவற்றையெல்லாம் விவரமாகக் கூறினாள் அவள். “கடைசியாக நான் கொடுத்து வைக்காத பாவியாகிவிட்டேன், சுந்தர்!” என்று கண்ணீர் வடித்தாள். அவளுடைய துயரம் நிறைந்த கதையைக் கேட்டு சுந்தரம் வருத்தத்தில் ஆழ்ந் தான். 

“பாவம், நீங்கள் எங்கெங்கே அலைந்துவிட்டுக் களைத்து வந்திருக்கிறீர்கள். கீழே போய் ஐ.ஆர்.ரூமிலிருந்து சாப்பாடு கொண்டு வருகிறேன். சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொள்ளுங்கள்’” என்றாள் சகுந்தலா. 

“வேண்டாம், நானே போய்க் கொண்டு வருகிறேன்” என்று கூறினான் சுந்தரம், 

”ஏன், நான் கொண்டுவந்தால் சாப்பிடமாட்டீர்களா?” என்றாள் அவள். 

“சரி சரி, உன் இஷ்டப்படியே செய். கோபித்துக் கொள்ளாதே, உனக்குத் தொந்தரவு எதற்கு என்று பார்த்தேன்.” 

“தங்களுக்கு நான் எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிறேன்” என்றாள் சகுந்தலா. 

“நகைகளை கொண்டு வந்ததற்காகவா சொல்கிறாய்? சர்மா எனக்குச் செய்துள்ள உதவிகளுக்கு இதெல்லாம் எம் மாத்திரம்? ஆனால் பாவம், அந்தக் குறவனுடைய குடும்பத்தை நினைத்துக் கொண்டால்தான் வருத்தமாயிருக் கிறது. அவன் மனைவியும் குழந்தையும் ரொம்பத் திண்டா டிக்கொண்டு இருப்பார்கள். அவன் குடும்பத்தைக் காப்பாற்றுவதாகக் குறவனிடம் வாக்குறுதி அளித்துவிட்டு வந்திருக்கிறேன்.” 

“கவலைப்படாதீர்கள் சுந்தர்! அந்தக் குறவனுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவது நம்முடைய கடமை. அந்தப் பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன். முதலில் அவர்கள் இருக்கும் இடத்தைத் தேடி கண்டு பிடியுங்கள்” என்றாள் சகுந்தலா. 

“காமுவையும், சர்மாவையும் பார்த்துவிட்டு வந்த பிறகு என்னுடைய முதல் வேலை அதுதான்” என்றான் சுந்தரம். 

“எனக்குக்கூட காமுவைப் பார்க்க வேண்டும் போலிருக் கிறது. பாவம் அவளைப் பற்றி எண்ணும்போதே மனம் வேதனைப்படுகின்றது…” என்றாள் சகுந்தலா. 

“காரியரை எடுத்துக் கொடு. நான் சாப்பாடு கொண்டு வருகிறேன்.” 

அவள் காரியருடன் பத்து ரூபாய் நோட்டையும் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். 

“என்னிடம் பணம் இருக்கிறது” என்றான் சுந்தரம், 

“இருக்கட்டும்; எனக்குச் சில்லறை வேண்டும். சாப்பாட் டுக்குப் பணம் கொடுத்துவிட்டு அப்படியே சில்லறை வாங்கிக் கொண்டு வாருங்கள்” என்றாள் சகுந்தலா. 

‘சகுந்தலா எத்தனை நாசூக்காகப் பேசிப் பணத்தை என்னிடம் கொடுத்து விட்டாள்!’ என்று தனக்குள்ளாகவே அவள் திறமையை மெச்சிக் கொண்டான் சுந்தரம். 

அவன் சாப்பாடு எடுத்துக்கொண்டு திரும்பி வருவதற்குள் அவனுக்காக பெஞ்சு மீது தயாராக படுக்கையைப் போட்டு வைத்தாள் அவள். சற்று நேரத்துக்கெல்லாம் சுந்தரம் திரும்பிவந்தான். அவன் பசியுடன் இருப்பதை உணர்ந்து கொண்ட சகுந்தலா, அவசரம் அவசரமாக இலையைப் பிரித்துப்போட்டு காரியரைத் திறந்து ஒவ்வொன்றாகப் பரிமாறினாள். 

“உருளைக் கிழங்கு பொடிமாஸ்!” என்றான் சுந்தரம்.

“அப்பளம் கூட இருக்கிறது!” என்றாள் சகுந்தலா.

அவர்களிருவருக்கும், மாரியம்மன் திருவிழாவன்று மாங்குடியில் நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்துவிட்டன! 

“மாங்குடியில் அன்று என் அம்மாவுக்குத் தேள் கொட்டி விட்டபோது நீ எனக்குப் பரிமாறினாயே, அது ஞாபகம் இருக்கிறதா!” என்று கேட்டான் சுந்தரம். 

“ஆமாம், ஆமாம்; அன்று இரவு வாசலில் போய் படுத்துக் கொண்டீர்களே, அது கூட நினைவு இருக்கிறது!” என்று பதிலுக்குக் கேலி செய்தாள் சகுந்தலா! 

“நீ வாசல் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாயே, அது நினைவிருக்கிறதா?…” என்றான் சுந்தரம். 

“அப்புறம் கதவைத் தட்டி உள்ளே வந்து படுத்துக் கொண்டீர்களே, அது நினைவிருக்கிறதா?…” என்றாள் சகுந்தலா. 

“காற்றிலே விளக்கு அணைந்ததே அது நினைவிருக்கிறதா?” 

“பூனைபோல் வந்து என் காலை மிதித்தீர்களே, அதை மறந்து விட்டீர்களா?” என்றாள் சகுந்தலா. 

“நீ அலறிக்கொண்டு எழுந்து ஓடினாயே?” என்று சிரித்தான் சுந்தரம். 

“பின்ன என்னவாம்; அப்படித்தான் பயமுறுத்துகிற தாக்கும்!” என்றாள் சகுந்தலா. 

பேசிக்கொண்டே இலையிலிருந்த பொடிமாசைத் தீர்த்து விட்டான் சுந்தரம். அதைக் கண்ட சகுந்தலா ‘களுக்’ கெனச் சிரித்து விட்டாள். 

“என்ன சிரிக்கிறாய்?” 

“இலையில் வைத்த பொடிமாசைக் காணோமே என்று சிரித்தேன்!” 

“பொடிமாஸ் ரொம்பப் பிரமாதம்!” 

“ஓட்டல் சமையல்களைப் புகழ்கிறீர்களாக்கும்! இதில் எனக்கென்ன பெருமை?” 

“நீ சமைத்துப் போடு; உன்னையும் புகழ்கிறேன்…” 

“தங்களுக்குச் சமைத்துப் போட்டுக் கொண்டிருக்க வேண்டிய கைதான் இது…” அவள் குரலில் வருத்தமும் ஏக்கமும் தொனித்தன. 

சுந்தரம் அளவுக்கு மீறியே சாப்பிட்டு விட்டான். பிறகு, “உனக்கு ஏதாவது மிச்சம் வைத்திருக்கிறேனா இல்லையா, சகுந்தலா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான். 

“உங்களைப் பார்த்தது முதலே என் உள்ளமும் வயிறும் மகிழ்ச்சியால் நிரம்பிக் கிடக்கிறது, எனக்குச் சாப்பாடுகூட வேண்டியதில்லை.ம்.. நாம் எப்படியோ இருந்திருக்க வேண்டியவர்கள்!” தன் ஏக்கத்தைப் பெருமூச்சாக வெளிப்படுத்தினாள் அவள். 

விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுந்தரம் தனக்கு வந்த தூக்கத்தைக் கொட்டாவிகள் மூலமாகப் போக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். 

“பாவம், களைத்துப் போயிருக்கிறீர்கள்!” என்றாள் சகுந்தலா. 

“உடல் களைப்பு, உள்ளக் களைப்பு, உண்ட களைப்பு மூன்றும் சேர்ந்து என்னை வாட்டுகின்றன…” 

“தாங்கள் இந்த பெஞ்சு மீதே படுத்துக்கொள்ளுங்கள். படுக்கைப் போட்டு வைத்திருக்கிறேன்” என்றாள் சகுந்தலா. 

“நான் வராந்தாவில் படுத்துக் கொள்கிறேனே!” சுந்தரம் தயங்கினான். 

“வேண்டாம்; மழை பலமாக வரப்போகிறது. இங்கேயே படுத்துக் கொள்ளுங்கள்” என்றாள் அவள். 

சுந்தரம் படுத்துக் கொண்டான். 

சகுந்தலா அந்தப் பெஞ்சுக்கு அண்மையிலேயே இன்னொரு விரிப்பை எடுத்து உதறித் தரையில் போட்டுக் கொண்டு, நகைப் பெட்டியைத் தலைக்கு அணையாக வைத்துக் கொண்டு படுத்தாள். படுத்தவள் உடனே எழுந்துபோய் அறைக் கதவைச் சாத்தித் தாளிட்டு விட்டு வந்தாள். அவ்வாறு செய்தது அவளுக்கே ஏதோபோல் இருந்தது. “உனக்கும் பயமாக இருக்கிறது, நகைகளை வைத்துக்கொண்டு கதவைத் திறந்து வைக்க” என்று தன் செய்கைக்குச் சமாதானம் கூறுவதுபோல் உரக்கச் சொல்லிக் கொண்டாள் அவள். 

வானத்தில் வெகு நேரமாக உறுமிக் கொண்டிருந்த பெரிய இடி ஒன்று புக்கத்தில் நெருங்கி வந்து வெகு பயங்கரமாக முழங்கியது. அடுத்த கணம் அது இன்னும் பயங்கர மாக அண்டமே கிடுகிடுக்கும்படியாக இடித்து அதிர்ந்தது. 

இந்த இடி எங்கேயோ சமீபத்தில்தான் விழுந்திருக்க வேண்டும்” என்றான் சுந்தரம். 

“எனக்குப் பயமாக இருக்கிறது, சுந்தரம்!” என்று பெஞ்சுக்கு அருகில் நகர்ந்து வந்து படுத்துக் கொண்டாள் சகுந்தலா. 

“விடியற்காலம் மூன்று மணிக்கு எனக்கு ரயில், அதில் நான் பெருந்துறை போக வேண்டும்.” 

“இந்த மழையில் தாங்கள் என்னைத் தனியாக விட்டுப் போகக் கூடாது.நாளை இரவு பெருந்துறை போகலாம். காலையில் என்னோடு ஆற்காட்டுக்கு வாருங்கள்” என்றாள் சகுந்தலா. 

“என் உயிரெல்லாம் பெருந்துறையில் இருக்கிறது. நாளைக்கே நான் காமுவைப் பார்த்தாக வேண்டும்” என்றான் சுந்தரம். 

“முதலில் இப்போது தூங்குங்கள். பொழுது விடியட்டும்” என்றாள் அவள். 

சுந்தருக்கு தூக்கம் வரவில்லை. திடீரென்று எங்கிருந்தோ ‘கம் மென்று வீசிய மல்லிகை மணம் அவனைக் கிறங்கச் செய்தது. 

“இந்த மணம் எங்கிருந்து வருகிறது?” என்று புரியாமல் கேட்டான் அவன். 

“உங்கள் தலையணைக்கு அடியிலிருந்து-” என்றாள் சகுந்தலா. 

“தலையணைக்கு அடியிலிருந்தா…?” 

“ஆம்; நீங்கள் சாப்பாடு கொண்டுவரப் போயிருந்த போது மீண்டும் அந்தப் பூக்காரக் கிழவி வந்தாள். நான் தான் ஒரு மல்லிகைச் சரத்தை வாங்கி உங்கள் தலையணைக்கு அடியில் வைத்தேன். தங்களுக்கு மல்லிகைப்பூ வாசனை என்றால் ரொம்பப் பிடிக்குமே!” 

சுந்தர் எழுந்து தலையணைக்குக் கீழிருந்த மல்லிகைச் சரத்தை எடுத்து அப்பால் வீசி எறிந்தான். 

“அதை ஏன் எறிந்து விட்டீர்கள்? உங்களுக்கு பிடிக்க வில்லையா?” 

“கசங்கிய மலர்தானே? இனி எதற்கு அது?” என்றான் அவன். 

“மலர் கசங்கிய போதிலும் அதற்குள்ள மணம் போய் விட வில்லையே?”

“உனக்குத் தூக்கம் வரவில்லையா?” 

“எனக்குத் தூக்கம் வராது…” 


மணி பதினொன்று இருக்கும். பலமாக வந்த மழையை வேகமாக காற்று எங்கேயோ அடித்துக்கொண்டு போய் விட்டது. 

சகுந்தலா மெதுவாக எழுந்து சுந்தரின் முகத்தைப் பார்த்தாள். அவன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அப்படித்தான் அவளுக்குத் தோன்றியது. சகுந்தலா அவனுடைய தழும்பேறிய தலையையும் வலது கையையும் தொட்டுப் பார்த்தாள். அவள் கண்கள் சிந்திய வெம்பனித் துளிகள் அவன்மீது விழுந்தன. பிறகு… பேதையின் உள்ளத் தில் என்னென்னவோ எண்ணங்கள்! ஆசைகள்! அப்புறம் அவள் எப்போது தூங்கினாளோ? காலையில் கண்விழித்துப் பார்த்தபோது…சுந்தரைக் காணவில்லை, சுந்தர் எங்கே? 

சுந்தரம் கண்விழித்துப் பார்த்தபோது சகுந்தலாவின் குருத்து போன்ற தந்தக் கரங்கள் தன்மீது கொடியோடியிருப் பதைக் கண்டான். அந்தக் கொடிகளை மெதுவாக அப்பால் நகர்த்திவிட்டு சந்தடி செய்யாமல் மூன்று மணி ரயிலுக்கே எழுந்து போய்விட்டான். அவள் பெருமூச்சு விட்டாள். ஆண் பெண் உறவுக்குச் சமூகம் விதித்திருந்த எல்லைக்கோட்டை மீறி விடுவதற்கு இருந்த தன்னை, இயற்கையின் சக்திக்குப்பலி யாகி விடுவதற்கு இருந்த தன்னை, சுந்தரம் காப்பாற்றி விட்டான் என்பதை அறிந்தபோது அவள் பரவசமானாள். 

“அவர் எத்தனை உத்தமமானவர்!” அவள் பெருமூச் செறிந்தாள். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஒவ்வொரு விநாடியும் ஒரு வெறியல்லவா? இரவு அவள் விட்ட பெரு மூச்சுகளுக்கும் எத்தனை வித்தியாசம்! 

அத்தியாயம் – 14

ரயில் பெருந்துறை ஸ்டேஷனில் போய் நிற்கும்போது மணி இரண்டு. ரயிலை விட்டு இறங்கிய சுந்தரம் எதிரில் வந்த வர்களை வழி விசாரித்துக் கொண்டே நேராக ஆஸ்பத்திரியை நோக்கி நடந்தான். அதை நெருங்க நெருங்க அவன் உள்ளத் திலே ஒரு பரபரப்பு உண்டாயிற்று. காமுவைக் காணப் போகிறோம் என்பதில் அளவில்லாத மகிழ்ச்சியும் அவள் எப்படி உருக்குலைந்து தேய்ந்து போயிருக்கிறாளோ என்பதை நினைத்தபோது வருத்தமும் ஏற்பட்டன. 

ஆஸ்பத்திரிக்குள் சென்று வலது பக்கமாகத் திரும்பி நடந்தான். 

‘காமு எந்த வார்டில் படுத்திருக்கிறாளோ?’ 

சுற்று முற்றும் பார்த்துக்கொண்டே போனான். 

எதிரில் அன்ன நடை போட்டு வந்துகொண்டிருந்த நர்ஸ் ஒருத்தி சுந்தரின் கவனத்தைக் கவர்ந்தாள். கேரளநாட்டைச் சேர்ந்தவள் என்பது அவள் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது. அவளுடைய பொன்மேனியையும் புன்சிரிப்புத் தவழும் முகத் தையும் கண்டபோது சுந்தரம் வியந்தான். ஆண்டவன் படைப்பில் இத்தனை அழகும் உண்டோ? 

அவள் நெருங்கி வந்தபோது, “காமு என்ற பெயருடை யவள் எந்த வார்டில் இருக்கிறாள் என்று சொல்ல முடியுமா?” என்று விநயமாகக் கேட்டான் சுந்தரம். 

“அங்கே விசாரியுங்கள்” என்று ஓரிடத்தைச் சுட்டிக் காட்டினாள் அவள். இனிமையும் அன்பும் தேனில் குழைந்து அவள் குரலாக ஒலித்ததோ!… 

அவள் சுட்டிக் காட்டிய இடத்துக்குச் சென்றபோது சுந்தரின் மாமனாரே அங்கு நின்றுகொண்டிருந்தார் திடுமெனச் சற்றும் எதிர்பாராத நேரத்தில் சுந்தரைக் கண்டதும் அவருக்கு ஒன்றும் தோன்றவில்லை. அழுதுவிட்டார். 

“காமு எங்கே? அவள் எப்படி இருக்கிறாள்?’ பலபல வென்று பொங்கி வந்த கண்ணீரை அடக்கியபடியே ஆவலுடன் விசாரித்தான் சுந்தர். 

“அதோ அந்த வார்டில் படுத்திருக்கிறாள். அவளுக்சூ எந் நேரமும் உன் நினைவுதான் துரும்பாக இளைத்துப் போயிருக் கிறாள். இருமல் அவளை அணு அணுவாகக் கொன்று கொண்டி ருக்கிறது. அவளோ உன்னைப் பார்ப்பதற்காகவே உயிரை வைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறாள்; வா, போய்ப் பார்க்கலாம்…” சுந்தரம் பறந்து சென்றான். 

காமு கண்களை மூடிப் படுத்திருந்தாள். 

“காமு!” – அவள் கைகளைப்பற்றி அன்போடு எழுப்பினான் சுந்தரம். உணர்ச்சி அவன் நெஞ்சை அடைத்துக்கொண்டது கண் திறந்து பார்த்த காமுவுக்கு ஒரு கணம் இதயமே நின்றே விட்டது. 

“நீங்களா! எப்போது வந்தீர்கள்?” அதற்குமேல் அவளால் பேச முடியவில்லை. கண்களில் இருந்து கீற்றாகப் பெருகி ஓடியது கண்ணீர். 

“என்னிடம் சொல்லாமல் சிறைக்குப் போய்விட்டீர்களே என் உடம்பைப் பாருங்கள்!… இந்த வியாதி என்னைக் கொண்டு போய்விடும் போலிருக்கிறது.” 

“அழாதே காமு! இதோ நான் வந்துவிட்டேன். இனி கவலையில்லை.” 

“இனி எனக்கு இந்த உயிரில் அக்கறை இல்லை. உங்களைப் பார்த்து விட்டேன் அல்லவா? அது போதும் எனக்கு. நான் உங்களை இனி எங்கும் போகவிடமாட்டேன், ஆமாம்; விடவே மாட்டேன்’ அவன் கைகளை அழுத்தமாகப் பற்றிக்கொண்ட வள் “ஐயோ! இதென்ன உங்கள் கையில் தழும்பா?” என்று பதறினாள். 

“சிறையில் என்னை அடித்துவிட்டார்கள் காமு! தலையிலே கூட நல்ல அடி. இதோ பார் மண்டையிலே தையல் போட்ட டத்தை! நான் உயிர் தப்பியதே ஆண்டவன் செயல்!” அதைக் கேட்டபோது, அதிர்ச்சி தாங்காமல் காமு கண்களை மூடிக்கொண்டாள். 

தன் கழுத்திலிருந்த மாங்கல்யத்தை எடுத்துக் கண்க ளிலே ஒற்றிக் கொண்டு, “தேவி! நான் பாக்கியம் செய்தவள் என்றாள், சுந்தருக்கு சட்டென சகுந்தலாவின் நினைவு வந்து விடவே, “உனக்குத் தெரியுமா? சகுந்தலாவின் புருஷன் இறந்துவிட்டானாம். பாவம்! சர்மாவுக்கு வேறு டைபாய்டு ஜூரம்.வேலூர் ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறார்” என்றான். 

“அப்படியா? சகுந்தலாவின் கதி இப்படியா ஆகவேண்டும் உங்களுக்கு யார் சொன்னது இதெல்லாம்?” 

“நேற்று சகுந்தலாவை காட்பாடி ஸ்டேஷனில் பார்த் தேன். அவள் குடும்ப வரலாறு முழுவதும் ஒன்று விடாமல் சொன்னாள். உன்னைப் பார்க்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கிறாள்.” 

“நீங்கள் பேசிக் கொண்டிருங்கள். இதோ நான் போய் காப்பி வாங்கி வந்துவிடுகிறேன்” என்று பிளாஸ்க்கை எடுத்து கொண்டு போனார் காமுவின் தந்தை. 

சுந்தரம் மனைவியின் கைகளைத் தன் கைகளுள் அடக்கிக் கொண்டு வெகு நேரம் அவள் அருகிலேயே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தான். அவனைக் கண்ணாரக் காண வேண்டுமென்ற வேட்கை தணிந்தது அவளுக்கு. 

இதற்குள் மாமனார் இட்லியும் காப்பியும் வாங்கிக் கொண்டு வந்தார். “பசியோடு வந்திருப்பாய். இதை மரத்தடி யில் கொண்டுபோய்ச் சாப்பிடலாம். வா” என்று சுந்தரை அழைத்தார் அவர். காமுவிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டான் சுந்தரம். 

மரத்தடிக்குச் சென்று இட்டிலி பார்சலை அவிழ்த்து, இட்டிலியை விண்டு வாயில் போட்டுக்கொண்டான். 

“வீட்டுக்குப் போவோம். பக்கத்திலேயே தான் வீடு” என்றார் மாமனார். 

“காமு உடம்பைப்பற்றி டாக்டர்கள் என்ன சொல்லு கிறார்கள்? சரியாகிவிடுமா?” சுந்தரம் கேட்டான். 

“அவர்கள் நம்மிடம் பேசினால்தானே? கேட்டாலும் சரியாகப் பதில் சொல்வதில்லை. அடிக்கடி வந்து பரிசோதித்து விட்டு ஒருவருக்கொருவர் இங்கிலீஷில் பேசிவிட்டுப் போகிறார் கள். இரண்டு மாதங்களுக்கு முன் காமுவின் உடம்பு இன்னும் ரொம்பக் கேவலமாக இருந்தது. பிழைப்பாளோ என்றே பயந்துவிட்டோம். இப்போது எவ்வளவோ தேவலை. அவளுக்கு கவலையே பாதி…வியாதி குணமானாலும் இன்னும் ஒரு வருஷம் ஆகும் அவள் உடம்பு தேறுவதற்கும்..ம்.. நீ என்ன செய்யப் போகிறாய்? ஏதாவது வேலைக்குப் போகப் போகிறாயா?” 

“இப்போதுள்ள நிலையில் நான் என்ன செய்ய முடியும்? எனக்கு ஒன்றுமே புரியவில்லை.” 

“நீ எவ்வளவோ புத்திசாலிதான். ஆனால் அதிர்ஷ்டம் தான் கூடிவரவில்லை உனக்கு.” 

“நெருப்பு தங்கத்தைச் சோதிப்பதுபோல் துன்பங்கள் என்னுடைய தைரியத்தை சோதித்துக் கொண்டிருக்கின்றன!” என்றான் சுந்தரம். 

“எதற்கும் சர்மாவைப் போய்ப் பார்! அவர் உன்மீது அக்கறை கொண்டவர். உனக்கு ஏதாவது வழிகாட்டுவார்!” என்றார் மாமனார். 


புகழ் பெற்ற வேலூர் மிஷன் ஆஸ்பத்திரி வாசலில் போய் நின்ற சுந்தரம் கடிகாரத்தைப் பார்த்தான். மணி மூன்றடித்து ஐந்து நிமிஷங்கள் ஆகியிருந்தது. 

“தெய்வம், நோயாளி, குழந்தை-இம் மூவரையும் காணச் செல்லும்போது வெறுங்கையுடன் போகக் கூடாது என்பார்களே, சர்மாவுக்கு என்ன வாங்கிப் போவது?” என்று ஒரு கணம் வாசலிலேயே நின்று யோசித்தான். 

ஆஸ்பத்திரி வாசலிலேயே பழக் கூடைக்காரர்கள் கடை போட்டிருந்தார்கள். இன்னொரு பக்கத்தில் காலி சீசாக்களும் அவுன்ஸ் பாட்டில்களும் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. இரண்டு டஜன் சாத்துக்குடிப்பழங்களை வாங்சிப் பைக்குள் போட்டுக் கொண்டான் சுந்தரம். 


இரண்டு நாட்களாகவே சர்மாவின் ஜுரம் நார்மலுக்கு வந்திருந்தது. தலைப்பக்கம், கட்டிலுக்குமேல், சுவரில் மாட்டப் பட்டிருந்த “டெம்பரேச்சர் ஷீட்”டில் ஜூரக்கோடு புள்ளிக்குப் புள்ளி மலைத்தொடர்போல் ஏறியும் இறங்கியும் காணப் பட்டது. அப்போதுதான் அந்தக் கோடு நேராகப் போகத் தொடங்கியிருந்தது. 

சர்மா கண் திறந்து பார்த்தார். 

சுந்தர்!…. 

அவனைக் கண்டதும் துக்கம் பீறிட்டுக்கொண்டு வந்து விட்டது அவருக்கு. 

“சுந்தரம்!” அவர் தம் கைகளைத் தூக்கி அவனை ஆவலோடு அணைத்துக்கொள்ள முயன்றார், முடியவில்லை. அநாதைபோல் ஆஸ்பத்திரியில் படுத்துக் கிடந்த சர்மாவைக் கண்டதும் சுந்தருக்கு துக்கம் நெஞ்சை வெடித்துக்கொண்டு வந்தது. அவன் கேவிக் கேவி அழுதுவிட்டான். 

“நீ அழாதே சுந்தரம்! ஜெயிலில் உன்னை அடித்துவிட்டார் களாமே? எப்படித்தான் அந்தக் கஷ்டங்களைச் சகித்துக் கொண்டாயோ?…சகுந்தலா எனக்கு எல்லாம் சொல்லிவிட்டாள். உன்னைக் காட்பாடி ஸ்டேஷனில் பார்த்தாளாமே…” அவருக்குப் பேச முடியாமல் மூச்சுத் திணறியது. 

“நீங்கள் பேச வேண்டாம். உங்கள் உடம்பில் சக்தி இல்லை நாக்கு வறண்டு போயிருக்கிறது. சாத்துக்குடி ரசம் பிழிந்து தருகிறேன்,சாப்பிடுங்கள்…” 

சுந்தரம் பையிலிருந்த இரண்டு பழங்களை எடுத்து ரசம் பிழிந்து அவரிடம் கொடுத்தான். அதை வாங்கிக் குடித்த போது சர்மாவின் கண்கள் பலபலவென்று நீரைப் பெருக்கின. “நான் மகாபாவி,சுந்தரம்!” உணர்ச்சி வசமாகிவிட்ட சர்மா உரக்கக் கூவிவிட்டார். 

“ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்?… உடம்பை அலட்டிக் கொள்ளாதீர்கள்” என்றான் சுந்தரம். 

“என் மனசிலுள்ள துக்கம் வாய் திறந்து சொன்னால்தான் தீரும். உன்னை நான் அநாதையாக்கினேன். கடவுள் என்னைத் தண்டித்துவிட்டார். உன் ஜாதகம் சரியில்லை என்று உன்னை யும் சகுந்தலாவையும் பிரித்தேன். உன்னைத் தனியாகப் பட்டணத்துக்கு அனுப்பித் தவிக்கவிட்டேன். சாம்பசிவம் தீர்க்காயுசுடன் வாழ்வான் என்று நம்பி அவனுக்கு என் சகுந்தலாவைக் கொடுத்தேன். ஒரு அநாதைக்கு வாழ்வு அளிக்க வேண்டும் என்பதற்காக உன்னை அநாதையாக்கினேன். அவன் என்னையும் சகுந்தலாவையும் அநாதையாக்கிவிட்டு இந்த உலகைவிட்டே போய்விட்டான். தெய்வம் நின்று கொல் கிறது என்னை…எனக்கு இது வேண்டியதுதான்; இன்னமும் வேண்டியதுதான்…” 

“மனசைத் தளர விடாதீர்கள். உங்களுக்கு ஒரு குறைவும் நேராது…” 

“இதைவிட வேறு என்ன நேரவேண்டும்? என் குடும்பம் நிர்க்கதியாக நிற்கிறதே, அது போதாதா? என் சகுந்தலா வாழ்வு இழந்து கண்ணீர்விட்டுக் கலங்குகிறாளே, அது போதாதா?” சர்மா கதறி அழுதார். 

“காமுவுக்கு இப்போது எப்படி இருக்கிறது? நீ போய்ப் பார்த்தாயா?” நீங்கள் இருவருமே சுகத்தைக் காணாதவர்கள். அவள் வளரும் பயிர். அவளை எப்படியாவது காப்பாற்றியே தீரவேண்டும். சகுந்தலா அவள் கவலையாகவே இருக்கிறாள்…”

“அவள் பிழைத்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை பூரணமாக எனக்கு உண்டு. எங்கள் கலியாணத்தின்போது தீர்க்காயுஷ்மான் பவ, தீர்க்க சுமங்கலீ பவ!” என்று தாங்கள் மனப்பூர்வமாக வாழ்த்தினீர்களே, அந்த ஆசீர்வாதம் வீண் போகாது.”அப்பாவுக்குச் சொல்லி அனுப்பக் கூடாதா? நீங்கள் ஆஸ்பத்திரியில் இருப்பதே அவருக்குத் தெரியாது. தங்களுக்கு ஜுரம் என்று கேள்விப்பட்டால் அவருக்குத் துக்கமே தாங்காது. பறந்து வந்து விடுவார் இங்கே.” 

“அவருக்குள்ள துன்பங்களோடு என்னுடைய கவலையும் எதற்கு என்றுதான் பேசாமல் இருந்துவிட்டேன். சாம்பசிவம் சமாசாரம்கூடச் சொல்லி அனுப்பவில்லை அவருக்கு. எனக்கும் அவரைக் கண்ணிலேயே கட்டி வைத்திருக்கிறது. நாங்கள் இருவரும் பால்ய சிநேகிதர்கள். பூசணிக்காய் காய்த்தால் அதை எடுத்துக்கொண்டு ஆற்காட்டுக்கு என்னைப் பார்க்க வந்துவிடுவார். அவ்வளவு பிரியம் என்னிடம் அவருக்கு…” 

“நான் ஊருக்குப் போய் அவரை அனுப்புகிறேன்.” 

“உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேனே … நகைகள் கிடைத்து விட்டது பற்றி நான் மண்டி கணக்குப்பிள்ளை மூலமாகப் போலீசுக்குத் தகவல் கொடுத்துவிட்டேன். அதைப் பற்றி கவலை இனி உனக்கு வேண்டாம். குறவனுடைய மனைவி எங்கே இருக்கிறாள் என்று தெரியுமா உனக்கு?” 

தானே பிரஸ்தாபிக்க வேண்டும் என்று துடித்துக் கொண் டிருந்த விஷயத்தைச் சர்மாவே கூறிவிட்டதும், சுந்தரம் மன நிம்மதி அடைந்தான். போலீசுக்குச் சொல்லாமல் இருக் கிறோமே என்ற திகில் இதுவரை அவன் உள்ளத்தில் உறுத்திக் கொண்டிருந்தது. இப்போது அந்தக் கவலையும் தீர்ந்துவிட்டது 

“இங்கே முள்ளிப்பாளையத்தில்தான் நாடகக் கொட்டகைக்கு அருகில் இருப்பதாகக் குறவன் சொன்னான். போய்த் தேடிப் பார்க்க வேண்டும்” என்றான் சுந்தரம். 

“அப்படியா? வண்டிக்கார சாயபுவையும் அழைத்துக் கொண்டு போ. இரண்டு பேருமாகப் போய்ப் பாருங்கள்… கிடைத்தால் எனக்குத் தகவல் சொல்லி அனுப்பு-” என்றார் சர்மா. 


குதிரை வண்டி முள்ளிப்பாளையத்தில்போய் நின்றது. குறவன் மனைவி குடியிருந்த இடத்தைத் தேடிக் கண்டு பிடித்த னர் இருவரும். ஆனால் அங்கே குறவன் மனைவியைக் காணோம் குடிசை மட்டும் குட்டிச்சுவராக நின்று கொண்டிருந்தது. 

“இந்த வூட்லேதான் இருந்தான் அந்தக் குறவன். அவன் பெண்சாதி இந்த வீட்டைவிட்டுப் போயி ரொம்ப நாளாச்சு” என்றார்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள். 

“எங்கே போனாங்கன்னு தெரியுமா? என்று கேட்டான் சுந்தரம். 

“யார் கண்டாங்க? எங்கே போனாளோ? திருடன் பெண்சாதிக்கு நிம்மதி ஏது? போலீசுக்குத் தொந்தரவு தாங்காமல் ஊரைவிட்டுப் போயிட்டா அவ” என்றாள் ஒரு கிழவி. 

சுந்தரம் சோர்ந்த உள்ளத்துடன் குறவனுக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைத்துக்கொண்டான். அவன் மனம் வேதனை பட்டது. 

சுந்தரம் பெருந்துறை சானடோரியத்துக்கு வந்து சேர்ந்த போது, சகுந்தலா அங்கு கவலையே உருவாகக் காமுவின் கட்டிலுக்கருகில் உட்கார்ந்திருப்பதைக் கண்டனர். 

“நீ எப்போது வந்தாய் சகுந்தலா! இங்கு வரப் போவதாக என்னிடம் சொல்லவேயில்லையே!” என்றான் சுந்தரம், வியப்பும் மகிழ்ச்சியும் மேலிட்டவனாக. 

“சொல்லாமல் போகிறவர்களிடம் சொல்லிக் கொண்டா வருவார்கள்?” என்று சுந்தருக்கு மட்டுமே புரியும்படி மறை பொருளாகக் கூறினாள் சகுந்தலா. 

‘யாருக்கும் சொல்லாமல் தன் கணவர் சிறைக்குப் போனது பற்றியே சகுந்தலா அவ்வாறு கூறுகிறாள்’ என்று காமு எண்ணிக் கொண்டாள். 

“சகுந்தலா நேற்றே இங்கு வந்துவிட்டாள். அவளைப் பார்த்தது எனக்கு எவ்வளவோ ஆறுதலாயிருக்கிறது” என்றாள் காமு. 

சுந்தர் டாக்டரை பார்க்கச் சென்றான். 

மேகக் குவியல்கள் காற்றிலே கலைந்து கலைந்து உருமாறு வதைப் போல் சகுந்தலாவின் உள்ளத்தில் பல்வேறு உருவங் களைப் பெற்றுக் கொண்டிருந்தன. ஒன்றும் தோன்றாதவளாக உள்ளம் கலங்கிய நிலையில் உட்கார்ந்திருந்தாள் அவள். 

என் மனம் ஏன் குழம்புகிறது? இதோ சுந்தரின் கை பிடித்த காமு எத்தனை சாந்தமாக, எவ்வளவு அமைதியாக இருக்கிறாள். சுந்தரிடத்தில் அவளுக்கு இல்லாத உரிமை எனக்கு என்ன இருக்கிறது? 

காமு! 

‘எத்தகைய உத்தம குணம் படைத்தவள்! தன் கணவன் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாள்!’ 

“என்ன சகுந்தலா, பலமான யோசனையில் மூழ்கி விட்டாய்?” 

”ஒன்றுமில்லை அக்கா!” என்றாள் சகுந்தலா. காமுவைப் பார்க்கப் பார்க்க அவள் மனம் என்னென்னவோ எண்ணத் தொடங்கியது. 

“சகுந்தலா! உன்னுடைய அன்பும் ஆதரவும் இருக்கும் போது எனக்கு ஒரு கஷ்டமுமில்லை. உன்னுடைய நிலைமையை எண்ணும் போதுதான் எனக்கு வருத்தமாயிருக்கிறது…” என்றாள் காமு. 

“என்னுடைய வாழ்வு போய் விட்டது. அக்கா! அது திரும்பி வரப் போவதில்லை. நீங்கள் பிழைத்து எழுந்திருக்க வேண்டும். இனி நீங்கள்தான் வாழவேண்டும். இப்போது நான் தெய்வத்தை வேண்டிக் கொள்வதெல்லாம் இதுதான்” என்றாள் சகுந்தலா. 

சுந்தர் திரும்பி வந்தான். 

“தலைமை டாக்டரைப் பார்த்தேன். காமுவை ஸ்பெஷல் வார்டில் வைத்து கவனிப்பதாகச் சொல்கிறார். எப்படியும் ஒரு மாதத்தில் குணமாக்கி விடுவதாகக் கூறுகிறார்” என்றான் சுந்தர். 

அந்த வார்த்தைகளைக் கேட்டபோது சகுந்தலா மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தாள். 

“எவ்வளவு பணம் செலவழிந்த போதிலும் கவலையில்லை. நான் ஐந்நூறு ரூபாய் எடுத்து வைத்திருக்கிறேன், இன்னும் தேவையான பணத்தை ஊருக்குப் போய் அனுப்புகிறேன் காமுவை இன்றே ஸ்பெஷல் வார்டில் சேர்த்துவிடச் சொல்லுங்கள்” என்றாள் சகுந்தலா. 

சகுந்தலா, காமுவின்மீது கொண்டுள்ள அன்பைக் கண்ட சுந்தரின் நெஞ்சம் நெகிழ்ந்துவிட்டது. 

அன்றே சகுந்தலா வேலூருக்குப் புறப்பட்டு விட்டாள். 

“நான் போய் தாத்தாவைக் கவனித்துக் கொள்கிறேன். அவர் தனியாக ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறார். நீங்கள் இங்கேயே இருந்து காமுவைப் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது எனக்குக் கடிதம் போட்டுக் கொண்டிருங்கள். பணம் தேவையானால் எனக்கு எழுதுவதற்குச் சங்கோசப்பட வேண்டாம்” என்று கூறிப் புறப்பட்டாள் சகுந்தலா. 


எவ்வாறோ இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. ஆஸ்பத்திரியில் படுத்திருந்த சர்மா முற்றிலும் குணம் அடைந்து ஆற்காட்டுக்குத் திரும்பி வந்துவிட்டார். அவர் பிழைத்தது புனர் ஜன்மம் என்றே கூறவேண்டும். மாங்குடியில் இருந்த கங்காதரய்யரும் குடும்பத்துடன் ஆற்காட்டுக்கே வந்து சர்மாவுடன் தங்கியிருந்தார். சர்மா அவரை ஊருக்குப் போகவிடவில்லை. மேலும் சில நாட்களுக்குத் தம்முடனேயே இருக்க வேண்டுமென சர்மா அவரைக் கட்டாயப்படுத்தி வைத்திருந்தார்; அவரால் சர்மாவின் பேச்சைத் தட்ட முடியுமா? இருவரும் பகல் வேளைகளில் வால்மீகி இராமாயணத்தைப் படித்து விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். 

அன்று வெள்ளிக்கிழமை. காலை ஒன்பது மணி இருக்கும். சர்மா பூஜை புனஸ்காரங்களை முடித்துவிட்டு வாசல் வராந் தாவில் உள்ள ஈஸிசேரில் அமர்ந்தவண்ணம் விஷாரம் சாயபுவுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். அப்போது தபால்காரர் இரண்டு கவர்களைக் கொண்டுவந்து சர்மாவிடம். கொடுத்துவிட்டுப் போனார். ஒன்றின்மீது “சகுந்தலா C/o. நடேச சர்மா” என்றும், இன்னொன்றின்மீது ‘நடேச சர்மா, என்றும் விலாசம் எழுதப்பட்டிருந்தன. 

கல்கத்தாவுக்கு மாற்றலாகியிருந்த அவருடைய மாப் பிள்ளை எழுதியிருந்த கடிதம் ஒன்று. சகுந்தலாவின் பெயருக்குக் காமு எழுதியிருந்த கடிதம் இன்னொன்று. 

“சகுந்தலா!” என்று அழைத்த சர்மா அவள் அருகில் வந்ததும் “இந்தா, பெருந்துறையிலிருந்து உனக்குக் கடிதம் வந்திருக்கிறது. காமு எழுதியிருக்கிறாள் போலிருக்கிறது” என்று கவரை அவளிடம் கொடுத்தார். சகுந்தலா ஆவலுடன் கவரை வாங்கிப் பிரித்தாள். 

“என் அன்புள்ள சகுந்தலாவுக்கு காமு. அநேக ஆசீர்வாதம். 

உன்னுடைய அன்பினாலும் ஆதரவினாலும் நான் பிழைத் தெழுந்து விட்டேன். நீ அனுப்பியிருந்த முன்னூறு ரூபாயும் கிடைத்தது. சர்மா மாமாவுக்கு என் நமஸ்காரங்களைச் சொல்லவும். அவருக்கு உடம்பு குணமாகி விட்டது என்பதை அறிய மிக்க சந்தோஷம். நானும் ‘அண்ணா’ வும் என் அப்பா அம்மாவும் நாளை ரயிலுக்குப் புறப்பட்டு ஆற்காட்டுக்கு வருகிறோம். 

என் வாழ்நாளில் உன்னை என்னால் மறக்கவே முடியாது. உன் அன்பும் உதவியும் இல்லையென்றால் நான் பிழைத்திருக்கவே மாட்டேன். 

என் மாமனார், மாமியார், குழந்தை சாரதா மூவரும் ஆற்காட்டில் இருப்பதாக எழுதியிருந்தாய். ரொம்ப சந்தோஷம். அவர்களைப் பார்க்க மிகவும் ஆவலாயிருக் கிறேன். முடியுமானால் ராணிப்பேட்டைக்கு வண்டி அனுப் பவும். எல்லா விவரங்களையும் நேரில் விவரமாகச் சொல்லுகிறேன். 

இப்படிக்கு,
காமு.” 

“தாத்தா, நாளைக்கு காமு, சுந்தர் எல்லோரும் குடும்பத் தோடு இங்கு வருகிறார்களாம். ஸ்டேஷனுக்கு வண்டி அனுப்பச் சொல்லி கடிதம் எழுதியிருக்கிறாள் காமு!” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினாள் சகுந்தலா. 

“அப்படியா! காமுவுக்கு நன்றாகக் குணமாகிவிட்டதாமா? ரொம்ப சந்தோஷம். இங்கே வருவதற்கு இன்னும் கொஞ்ச நாள் ஆகும் என்று முன் கடிதத்தில் எழுதியிருந்தார்களே!… கங்காதரய்யரை எங்கே காணோம்?” என்று கேட்டார் சர்மா 

“அவர் கடைத்தெருவுக்குப் போயிருக்கிறார்.” 

“சரி; சுந்தரின் அம்மாவிடம் போய்ச் சொல்லு. இதோ பார்த்தாயா? இந்தக் கவர் உன் அப்பா எழுதி வைத்திருக் கிறார். இதில் உனக்கும் ஒரு கடிதம் எழுதி வைத்திருக்கிறார். ரொம்ப முக்கியமான விஷயம் இருக்கிறது இதில். படித்துப் பார். சந்தோஷப்படுவாய்” என்று கூறி கடிதத்தைச் சகுந்தலாவிடம் கொடுத்தார் சர்மா. 

அதைப் படித்த சகுந்தலாவுக்குச் சந்தோஷம் தாங்க வில்லை. 

“தாத்தா, நாளைக்கு நானே ராணிப்பேட்டை ஸ்டேஷ னுக்குப் போய் அவர்களை அழைத்து வரப் போகிறேன்” என்றாள் சகுந்தலா. 

“வண்டியில் அத்தனை பேருக்கும் இடம் இருக்குமா? சாமான்களெல்லாம் வருமே!” என்று கூறினார் சர்மா. 

“இடமில்லையென்றால் இன்னொரு வண்டி பிடித்துக் கொள்கிறோம்” என்றாள் சகுந்தலா. 

“சரி இப்போதே சாயபுவைக் கூப்பிட்டுச் சொல்லிவைத்து விடு! அவன் போய்விடப் போகிறான்” என்று கூறிக்கொண்டே எழுந்து உள்ளே போனார் சர்மா. 

அத்தியாயம் – 15

மறுநாள் மணி பதினொன்று இருக்கும். சர்மாவின் வீட்டு வாசலில் வந்து நின்ற குதிரை வண்டியில் இருந்து முதலில் காமுவும் சுந்தரும் இறங்கி வந்தார்கள். பின்னொடு சகுந்தலா, காமுவின் அம்மா, காமுவின் அப்பா மூவரும் இறங்கிவந்தார் கள் இன்னொரு வண்டியிலிருந்து மூட்டை முடிச்சுகளும், பெட்டி படுக்கைகளும் இறக்கப்பட்டன. 

பார்வதி அம்மாள் தயாராக வைத்திருந்த ஆரத்தியைக் காமுவுக்கும் சுந்தருக்கும் சுற்றிக் கொட்ட எல்லோரும் உள்ளே சென்றார்கள். 

“எல்லாம் நல்லபடி சேமமாக வந்து சேர்ந்தீர்கள் ரொம்ப சந்தோஷம் சகுந்தலா. இவர்களெலாம் ரயிலில் எப்போது சாப்பிட்டதோ, என்னவோ? முதலில் கமுவுக்கு ஹார்லிக்ஸ் கரைத்துக் கொடு போ” என்றார் சர்மா. 

“காமு உங்களுக்கு நமஸ்காரம் செய்ய வேண்டுமாம். கொஞ்சம் இப்படி வந்து நிற்கிறீங்களா, தாத்தா” என்றாள் சகுந்தலா. 

“மாமனாருக்கு முதலில் செய்யச் சொல்… கங்காதரய்யர், இப்படி வாங்களேன் என்றார்” சர்மா. 

சர்மா, மாமனார் இருவருக்கும் நமஸ்கரித்து எழுந்தாள் காமு. 

“தீர்க்ச சுமங்கலீ பவ!” என்று வாழ்த்திய சர்மா, “இன்று தான் நாம் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறோம். என் மனம் இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது. இன்னும் ஒரு வாரம் எல்லோரும் இங்கேயே தங்கிவிட்டுப் போகலாம். அடுத்த சனிக்கிழமை வேங்கடரமண சுவாமிக்குப் பூஜை செய்து பிரசாதம் பெற்றுக் கொண்ட பிறகு ஊருக்குப் போக லாம். அப்போதுதான் எனக்குத் திருப்தி ஏற்படும்” என்றார் சர்மா. 

“சுவாமி காரியத்துக்கு என்ன தடங்கல் சொல்லப் போகிறோம். தங்கள் விருப்பப்படியே செய்து விடுவோம்” என்றார்கள் காமுவின் தந்தையும் கங்காதரய்யரும். 

அந்த ஒரு வாரம் காமுவும் சகுத்தலாவும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியவில்லை. “அக்கா உங்களைப் போன்ற உயர்ந்த குணம் படைத்த பெண்களை நான் பார்த்ததே இல்லை. உங்கள் பொறுமையும், கபடமற்ற குணமும், அன்புப் பேச்சும், சிரித்த முகமும் யாருக்கு உண்டு? உங்களை ஆஸ்பத்திரியில் கண்ட பிறகு என் மனமே மாறிவிட்டது. அக்கா! நீங்கள் நல்லபடி பிழைத்தெழ வேண்டும் என்பதற்காக எத்தனையோ தெய்வங்களைத் தினமும் வேண்டிக் கொண்டிருந்தேன். என் பிரார்த்தனை வீண்போக வில்லை. சுந்தரமும் நீங்களும் சந்தோஷமாக வாழ வேண்டும். இப்போது அதுதான் என்னுடைய ஆசை. இனி இந்த உலகத்தில் எனக்கென்று தனிப்பட்ட இன்பம் எதுவும் கிடையாது. நீங்கள் அடையும் மகிழ்ச்சிதான் என்னுடைய மகிழ்ச்சி. இனி நான் நீங்களாகவே வாழப் போகிறேன் அக்கா! இன்று முதல் நான் சகுந்தலா இல்லை. காமு! ஆமாம், காமுவாக வாழப்போகும் சகுந்தலா!” 

இந்த வார்த்தைகளைக் கேட்டபோது காமுவின் கண்களில் நீர்த் திரையிட்டது. 

“நீ சொல்வது எனக்கு ஒன்றுமே புரியவில்லை, சகுந்தலா!”

“உங்களுக்குப் புரியாது அக்கா, புரியாது. நீங்கள் ஒரு குழந்தை!” என்றாள் சகுந்தலா. 


அன்று சனிக்கிழமை. வேங்கடரமண பூஜை முடிந் ததும் சர்மா ஒவ்வொருவராகப் பூஜை அறைக்கு அழைத்துப் பிரசாதம் வழங்கினார். பிறகு எல்லோரும் சாப்பிட்டு முடிந்ததும், சர்மா கங்காதரய்யரையும், காமுவின் தகப்பனாரையும் அழைத்துக்கொண்டு வாசல் வராந்தாவில் போய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். பேச்சுக்கு இடையில் சகுந்தலாவைக் கூப்பிட்டு, “சுந்தரை வரச் சொல்லு!” என்றார் சர்மா. 

சுந்தரம் அவர் எதிரில் போய் நின்றான். 

“வா, சுந்தநம்! நான்தான் கூப்பிட்டேன். மேற்கொண்டு என்ன செய்யப் போவதாக உத்தேசம் உனக்கு? பட்டணத்தில் ஏதாவது வேலைக்குப் போகப் போகிறாயா?” என்று கேட்டார் சர்மா. 

“எனக்கு ஒன்றும் தோன்றவில்லை மாமா! பட்டணத்தில் எந்த வேலையும் சரிப்பட்டு வரவில்லை எனக்கு. போர்டு எழுதிப் பார்த்தேன். பத்திரிகைகளுக்குச் சித்திரம் வரைந்தேன். புத்தகங்களுக்கு அட்டைப் படம் எழுதினேன். எல்லோரும் என் திறமையைப் பாராட்டுகிறார்கள். பணம் தான் கொடுப்பதில்லை. தமிழ்நாட்டில் இன்னும் சித்திரக் கலைஞர்களுக்குரிய மதிப்பு ஏற்படவில்லை. கலையை மதிப்ப தாகச் சொல்கிறவர்கள் கலைஞனை மதிப்பதில்லை. மிதிக் கிறார்கள்” என்றான் சுந்தரம். 

“அப்படியானால் வேறு என்னதான் செய்யப் போகிறாய்?” என்று கேட்டார் சர்மா. 

“நீங்கள் என்ன சொல்லுகிறீர்களோ, அதன்படி செய்கிறேன், என்னைத் தாங்கள்தான் கைதூக்கி விட வேண்டும்.” 

“சகுந்தலா! அந்தக் கவரை இங்கே கொண்டுவாம்மா” என்றார் 

சர்மா. சகுந்தலா கவரைக் கொண்டு வந்து கொடுத்தாள். 

“ஓகோ, தயாராக எடுத்து வைத்திருக்கிறாயா நீ!” அதை அவளிடம் இருந்து வாங்கி சுந்தரிடம் கொடுத்த சர்மா “உரக்கப் படியேன்” என்றார் சுந்தரைப் பார்த்து. அவன் படித்தான். 

“சகுந்தலாவுக்கு, உன் கடிதம் கிடைத்தது. 

இங்கு நான் சவுக்கியம். உன் தாத்தாஉடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளவும். சுந்தரின் மனைவிக்கு இப்போது எப்படி இருக்கிறது? சுந்தரம் இன்னும் பெருந்துறையில்தான் இருக்கிறானா? 

உன் இஷ்டப்படியே இங்கே கல்கத்தாவில் சுந்தருக்கு உத்தி யோகம் பார்த்து வைத்திருக்கிறேன். கல்கத்தா காலண்டர் மானுபாக்சரிங் கம்பெனியில் ஆர்ட்டிஸ்ட் வேலை. மாதச் சம்பளம் ஆரம்பத்தில் முன்னூறு ரூபாய் கொடுப்பார்கள். நீ அனுப்பியிருந்த சில படங்களை அவர்களிடம் காண் பித்தேன். அந்தப் படத்தைக் கண்டு விட்டு அவர்கள் சுந்தரின் சித்திரத் திறமையை வெகுவாகப் புகழ்ந்தார்கள். உடனே வந்து வேலையை ஒப்புக் கொள்ளும்படி சொல்லியிருக் கிறார்கள். இந்தத் தகவலைச் சுந்தருக்குத் தெரியப்படுத்தவும். அவன் மனைவிக்கு உடம்பு பூரணமாக குணமாகி விட்டிருக்கும் என நம்புகிறேன். அவர்கள் இரண்டு பேருமே இங்கு வந்து விடலாம், அவர்களுக்கு வசதியான வீடும் பார்த்து வைத்திருக்கிறேன். 

இப்படிக்கு,
ராமநாதன்.” 

“வேலையை ஒப்புக்கொள்ளும்படி அந்தக் கம்பெனி யிலிருந்து நேற்று ஆர்டர்கூட வந்துவிட்டது. என்ன சொல்லுகிறாய், சுந்தரம்! கல்கத்தா போகிறாயா?” என்றார் சர்மா. 

சுந்தரத்தின் உள்ளம் மகிழ்ச்சியினால் திக்கு முக்காடியது. “போகிறேன்” என்றான் உள்ளத்தில் பொங்கிய மகிழ்ச்சியை அடக்கியவனாய். 

“உன் மனைவியையும் குழந்தையையும் கூடவே கையோடு அழைத்துக் கொண்டு நாளைக்கே புறப்படு. மாப்பிள்ளைக்கு நான் தந்தி கொடுத்து விடுகிறேன்.” 

“சரி” என்று கூறிய சுந்தரம் உள்ளே போனான். சகுந்தலா அங்கே ஓரமாக புன்சிரிப்போடு நின்று கொண்டிருந்தாள். 

“உன் வேலைதானா இது?” என்று கேட்டான் சுந்தரம் அவளைப் பார்த்து. “இல்லை, இது உங்களுடைய வேலை!” என்றாள் அவள் சிரித்துக் கொண்டே. 

“நீ ரொம்பப் பொல்லாதவள் சகுந்தலா! என்னிடம் எதையுமே சொல்லாமல் மனதிற்குள் மூடி வைததிருந்தாயே…” என்றான் சுந்தரம். 

சகுந்தலா தலைகுனிந்தபடியே, “என்னை மன்னித்தேன் என்று சொல்லுங்கள். இப்போது என் மனதில் ஒன்றுமே கிடையாது. நான் களங்கமற்றவள். என் மனதில் இப்போது எந்த ஆசையும் இல்லை” என்றாள். 

காட்பாடியில் அன்றிரவு நடந்த நிகழ்ச்சிகள் சுந்தரத்தின் உள்ளத் திரையில் நிழலாடின. சகுந்தலா எதைக் குறித்து இப்போது இப்படிப் பேசுகிறாள் என்பதை அவன் புரிந்து கொண்டான். 

“சகுந்தலா! உங்களையெல்லாம் பிரிந்து நானும் அவ்வளவு தொலைவில் போய் வாழ வேண்டியிருக்கிறதே என்பதை நினைக்கும்போதுதான் வருத்தமாயிருக்கிறது…” 

“காமுவின் உடம்பை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள் ளுங்கள். அடிக்கடி எனக்குக் கடிதம் போட்டுக் கொண்டிருங் கள். உங்களை மறுபடியும் எப்போது பார்க்கப் போகி றேனோ…” பெருகி வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் சகுந்தலா. 


மறுநாள் சகுந்தலா விடியற்காலம் மூன்று மணிக்கே எழுந்து காமுவையும் எழுப்பி விட்டாள். காமுவுக்குத் தலை வாரிப் பின்னி, இரவே தொடுத்து வைத்திருந்த மல்லிகைச் சரத்தை அவள் தலையில் சூடினாள். ‘சுந்தருக்கு மல்லிகை மணம் என்றால் ரொம்பப் பிடிக்கும்’ என்று தனக்குள்ளாகவே எண்ணிக் கொண்டாள் அப் பேதை. 

“அக்கா இந்தாருங்கள்! இதையெல்லாம் அணிந்து கொள்ளுங்கள்” என்று கூறிய சகுந்தலா, தன்னுடைய நகை களையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துத் தன் கைகளாலேயே காமுவுக்கு அணிவித்து அலங்காரம் செய்தாள். 

“இதெல்லாம் ஏது சகுந்தலா?” 

“எல்லாம் தங்கள் கணவர் கொண்டு வந்து என்னிடம் கொடுத்ததுதான்” என்றாள் சகுந்தலா. 

“என் கணவரா? அவருக்கு ஏது இந்த நகைகளெல்லாம்?” வியப்புடன் கேட்டாள் காமு. 

“திருட்டுப் போன என்னுடைய நகைகளைச் சுந்தரம்தான் கொண்டு வந்து கொடுத்தார்” என்று முழு விவரங்களையும் காமுவிடம் சொன்னாள் சகுந்தலா. 

“இதுவரை என்னிடம் சொல்லவேயில்லையே!” 

“சமயம் வரும்போது சொல்லலாம் என்றுதான் காத் திருந்தேன். இந்த நகைகளெல்லாம் இனி உங்களுக்குத்தான் சொந்தம். நாங்களாகவே வாழப் போகும் எனக்கு அதில் பெருமை உண்டு” என்றாள் சகுந்தலா. 


மறுநாள் விடியற் காலையிலேயே எழுந்துவிட்ட சுந்தரம் கல்கத்தாவுக்குப் புறப்படுவதற்கான ஏற்பாடுகளில் முனைந் திருந்தான். இரண்டு குதிரை வண்டிகளில் எல்லோரும் ஸ்டேஷனுக்குப் புறப்பட்டார்கள். புறப்படுமுன் சர்மா சுந்தரை அழைத்து ஒரு கவரைக் கொடுத்து “இந்தா இதை செலவுக்கு வைத்துக்கொள்” என்றார். அதில் ஆயிரம் ரூபாய் இருந்தது. 

ரயில் புறப்பட்டது. ரயிலில் உட்கார்ந்திருந்த சுந்தரையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு நின்ற சகுந்தலா, தன் புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். 

சென்னையை அடைந்ததும் கல்கத்தா மெயிலில் வசதியாக இடம் கிடைத்துவிட்டது சுந்தருக்கு. 

ரயில் ஓடிக்கொண்டிருந்தது. 

வழிப்போக்கன் சுந்தரத்தின் பயணம் இன்பமாகவே ஓடத் தொடங்கியது.

(முற்றும்)

– வழிப்போக்கன் (நாவல்), எட்டாம் பதிப்பு: 1997, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *