வழிப்போக்கன்
கதையாசிரியர்: சாவி
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 22, 2025
பார்வையிட்டோர்: 351
(1997ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
அத்தியாயம் – 1
முதல் கல்.
வெயிலின் கடுமை தணித்து மரங்களின் நிழல்கள் நீண்டு படியும் நேரம்.
சுந்தரம் சாலை ஓரமாக நடந்து கொண்டிருந்தான். அவன் கையிலே ஒரு பையை தவிர பாரமாக எதுவும் இல்லை. ஆனால் அவ்வளவுக்கு உள்ளத்தில் சுமை இருந்தது. அவன் தன் முகத்தை துடைத்து கொள்ள பைக்குள் இருந்த கைக்குட்டையை எடுத்தான். அத்துடன் சட்டை பைக்குள் பாதியாக மடித்து வைக்கப்பட்டிருந்த கார்ட் ஒன்றும் வெளியே வந்தது. அது அவன் மனைவி எழுதிய கடிதம்.
நமஸ்காரம்! தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறான். வரும் புதன் கிழமை அன்று நாவதரனம் நடக்கிறது. நம் தலைச்சன் குழந்தைக்கு பெயர் சூட்டிய போது தாங்கள் வராமலே இருந்து விட்டீர்கள். அதை பற்றி என் அம்மா இன்னமும் பெரும் குறையாக சொல்லிக் கொண்டிருக்கிறாள். இம் முறையாவது தாங்கள் அவசியம் வந்து குழந்தைகளை பார்த்து விட்டு போகும்படி பிராத்திக்கிறேன். முடியுமானால் வரும் போது பட்டணம் பாக்கும் வெற்றிலையும் ராமானுஜன் செட்டிக்கடை பெருங்காயமும் வாங்கி வரவும்.
கடிதத்தை படித்து முடித்த சுந்தரம் தனக்குள்ளே சிரித்துக்கொண்டான்.
மனைவியின் விருப்பப்படியே கிராமத்துக்கு வந்து பத்து தினங்களுக்கு மேல் தங்கி ஆயிற்று.
பொற்கொடி என துவளும் பச்சைக் குழந்தையையும் பார்த்தாயிற்று.
இனி?…
சென்னைக்குப் போய் என்ன செய்வது?
எங்கெங்கேயோ முயன்று பார்த்துவிட்டான். ஒரு வேலை யும் கிடைக்கவில்லை அவனுக்கு. போதுமான வருமானம் இன்றிச் சென்னையில் தனிக் குடித்தனம் போடுவது எப்படி?
கிராமத்தில் தங்கியிருந்தபோது அவன் மனைவி கூறிய உருக்கமான வார்த்தைகள் அவன் நினைவுக்கு வந்தன.
‘எத்தனை காலத்துக்குத்தான் என்னை என் தாய் வீட்டிலேயே வைத்திருக்கப் போகிறீர்கள்? மற்ற பெண்களைப் போல எப்போதுதான் நானும் குடியும் குடித்தனமுமாக உங்களுடன் வாழப் போகிறேனோ?’
பத்து நாட்களாக மாமனார் வீட்டில் வேளா வேளைக்கு டிபனும் காப்பியும் அவன் அறையைத் தேடி வந்துகொண்டிருந்தன. மாமனார் அவ்வப்போது வந்து, ‘குளித்தாயா, சாப்பிட்டாயா?’ என்று அன்புடன் விசாரித்துக் கொண்டிருந்தார். அவர் ரொம்ப சாது மனிதர்; உரக்கப் பேசத் தெரியாது அவருக்கு. ஏழெட்டு வருட காலமாக மாப்பிள்ளை நிரந்தரமான வேலை எதுவுமின்றிச் சென்னையில் சுற்றிக் கொண்டிருப்பது பற்றி அவர் சிறிதும் மனக்கிலேசம் அடையவில்லை; அதைப் பற்றிச் சலிப்புடன் ஒரு வார்த்தை பேசியதுமில்லை. “அவர் புத்திசாலிதான்; அதிருஷ்டம் நிலைக்கவில்லை அவனுக்கு. கத்தரி யோகம்!” என்று மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பார்.
சுந்தரத்தின் பெரிய மாமனாரும் அதே கிராமத்தில்தான் இருந்தார். சுந்தரத்துக்கு இதமான வார்த்தைகள் சொல்வதாக எண்ணிக்கொண்டு, “உனக்குத்தான் நன்றாக டிராயிங் போட வருகிறேதே! டிரெயினிங் படித்துவிட்டு ஏதாவது ஒரு ஸ்கூலில் டிராயிங் மாஸ்டராக அமர்ந்து விடுவதுதானே?” என்று யோசனை கூறினார்.
சுந்தரத்தின் லட்சியம் வெறும் டிராயிங் மாஸ்டர் ஆவதல்ல என்பதை அறியாத அப்பாவி அவர்!
அவன் தினமும் காலை வேளைகளில் ஏரிக்குச் சென்று குளித்துவிட்டு வந்தான்.
அங்கிருந்து திரும்பும்போது அவனைப் பார்த்த குடியானவன் ஒருவன், “யாரு சாமி, தென்னமரத்து வூட்டு மருமகப் புள்ளெதானே? ஏஞ்சாமி, பெஞ்சாதி குளிகுளிச்சிருக்குதாமே? எப்பத்தான் பட்டணத்தாவுக்கு இட்டுகினு போவப் போறே?” என்று கபடம் இல்லாமல் கேட்டான்.
இங்கிதம் தெரியாத கிராமத்துப் பாமர மக்களுக்கு எதையும் வெளிப்படையாகப் பேசித்தான் பழக்கம்.
கிராமத்துப் பெண்கள் தென்னை மரத்து வீட்டில் பிறந்திருக்கும் குழந்தையைப் பார்க்க வரும் சாக்கில் சுந்தரத்தின் காதில் கேட்கும்படியாக அசட்டுப் பிசட்டென்று ஏதேதோ சொல்லிவிட்டுப் போனார்கள்.
கோடி வீட்டுப் பொன்னம்மாள் சுந்தரத்தின் மாமியாரிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்:
“ஏண்டியம்மா! ஒண்ணாச்சு, இரண்டாச்சு. குடும்பம் பெரிசாயிண்டே போறது. அவனுக்கோ கொஞ்சங்கூடப் பொறுப்பைக் காணோம்! இப்படியே எத்தனை நாளைக்குத் தான் நீ உன் பெண்ணை வைத்துக் காப்பாற்றப் போகிறாய்?”
இவ்வார்த்தைகள் சுந்தரத்தின் இதயத்தில் சுருக்கெனத் தைத்தன. கிராம வாசம் அவனுக்குப் பிடித்திருந்தது; சகவாசம்தான் பிடிக்கவில்லை.
மணி நாலு இருக்கும். ‘”மல்லீ…யப்!” என்று வழக்கமாகக் கூவிக் கொண்டு வரும் பூக்காரப் பெண்ணின் குரல் கேட்டது.
சுந்தரத்தின் மனைவி வெளியே வந்து நின்றாள். “ஏம்மா, உங்க வூட்டுக்காரரா வந்திருக்காரு? பட்டணம் போவப் போறியாம்மா?” என்று அந்தப் பெண் கேட்டாள்.
“போடி, உனக்கெதுக்கு அந்தச் சங்கதியெல்லாம்?… பூவைப் பாரு! விட்டு விட்டு வெலத்தியாகத் தொடுத்திருக்கிறாயே? முழம் என்னடி விலை?” என்று கேட்டாள் சுந்தரத்தின் மனைவி.
“ஒரு துட்டம்மா!”
“அநியாயக்காரியடி, நீ முழம் போடுகிற அழகைப் பார்; இன்னும் கொஞ்சம் விட்டுக் கிள்ளு!”
பூச்சரத்தை வாங்கிப் போய், சுவரிலே வைத்து நகத்தால் கீறி மூன்று துண்டாக்கினாள் அவள். ஒன்றை அம்மன் படத்துக்குச் சூட்டிவிட்டு, “தேவி, அவருக்கு நல்ல வழியைக் காட்டு, தாயே!” என்று மனமுருக வேண்டிக் கொண்டாள்;
இன்னொரு துண்டைத் தன் தாயிடம் தந்துவிட்டு, மற்றொன்றைத் தன் தலையில் வைத்துக் கொண்டாள்.
“என் நரைத்த தலைக்குப் பூ ஒன்று தான் கேடு! குழந்தை ஓயாமல் அழகிறது; பசிக்கிறதோ, என்னவோ? வாசலில் போய்ப் பூக்காரியுடன் எத்தனை நேரம் பேச்சு? போய்க் குழந்தையை எடுத்துவிடு, போ!” என்று அதட்டினாள் தாய்.
குழந்தையை எடுத்து விட்டதும், தாய் கொடுத்த பலகாரத் தட்டுடன் சுந்தரத்தின் முன்னால் போய் நின்றாள் அவள்.
சஞ்சலத்துடன் காணப்பட்ட கணவனைப் பார்த்ததும் அவளுக்கு வேதனையாயிருந்தது. “ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்?” என்று கேட்டாள்.
“ஒன்றுமில்லை; நாளை நாலு மணிக்கு நான் புறப்படுகிறேன்!” என்றான் சுந்தரம்.
“இன்னும் பத்து நாள் இருந்துவிட்டுப் போகிறேன் என்று சொன்னீர்களே, அதற்குள் என்ன நினைத்துக் கொண்டீர்கள்?”
“நான் வேலையில்லாமல் இருப்பது எல்லோருக்கும் கேவலமாக இருக்கிறது. சீக்கிரமே ஒரு வேலையில் அமர்ந்து உன்னை அழைத்துக் கொண்டு போய்க் குடித்தனம் போட்டால்தான் என் மனம் நிம்மதி அடையும்.”
“இந்தக் கிராமத்துப் பீடைகளுக்கே வாய் அதிகம்; என் அத்தைக்கும் புத்தி கிடையாது. அவர்கள் ஏதோ சொல்லி விட்டார்கள் என்று நீங்கள் அவசரப்பட்டுப் போகவேண்டாம். உங்களை அனுப்புவதற்கே எனக்குச் சங்கடமாயிருக்கிறது.”
“நான் லெட்டர் போடுகிறேன். இரண்டே மாதத்துக்குள் உன்னை அழைத்துக் கொள்கிறேன். நீ கண்கலங்காதே!”
மறுநாள் இரண்டரை மணிக்குள்ளாகவே புறப்பட்டு விட்டான் சுந்தரம். அவன் மாமனார் கூட எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். அவன் பிடிவாதமாக புறப்பட்டு விட்டான்.
கணவன் புறப்படும் சமயத்தில் ஒரு காகிதப் பொட்டலத்தைக் கொண்டுவந்து கொடுத்து, “இந்தாருங்கள். இதை வைத்துக் கொள்ளுங்கள்!” என்கிறாள் அவன் மனைவி.
சுந்தரம் அதைப் பிரித்துப் பார்த்தான். அதில் ஐந்து ரூபாய் நோட்டுக்கள் இரண்டும், ஒற்றை ரூபாய் நாணயங்கள் ஐந்தும் இருந்தன – பதினைந்து ரூபாய்.
“இது ஏது உனக்கு?”
“பிறந்த குழந்தையைப் பார்க்க வந்தவர்கள் ஆசீர்வாதமாகக் கொடுத்துவிட்டுப் போனார்கள். குழந்தைக்கு ஒரு வெள்ளி அரைஞாண் செய்து போடலாமென்று இருந்தேன். இந்தச் சமயம் அது உங்களுக்கு உதவியாயிருக்குமே என்று தோன்றியது. ஓட்டலில் சாப்பாட்டு டிக்கெட் புத்தகம் ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள்” என்றாள். சுந்தரத்தின் நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது.
‘புறப்படும் சமயத்தில் கண்ணீர் விடக்கூடாது’ என்று மனைவிக்கு ஆறுதல் கூறியவன், தன் துக்கத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் தவித்தான். ‘குழந்தைக்குத் தன் கையால் அரைஞாண் வாங்கிப் போட வேண்டியது போக அதற்கு ஆசீர்வாதமாக வந்த பணத்தைத் தான் எடுத்துப் போக வேண்டியிருக்கிறதே!’ என்பதை நினைக்கும் போது அவனுக்குச் சங்கடமாயிருந்தது. மனைவி கொடுத்த அந்தப் பொட்டணத்தை அப்படியே மடித்துத் தன் கைப் பைக்குள் வைத்துக் கொண்டான்.
குழந்தையைக் கொண்டு வந்து அவனுக்கு முன்னால் நீட்டினாள் அவன் மனைவி. அந்தப் பச்சை மண்ணின் சிவந்த உதடுகளைத் தன் விரலால் தொட்டுப் பார்த்தான் சுந்தரம்.
“அப்பாவைச் சீக்கிரம் வந்து அழைத்துப் போகச் சொல்லுடா, கண்ணு!” என்றாள் அந்தப் பேதை. மாமனாரிடமும் மாமியாரிடமும் சொல்லிக்கொண்டு சுந்தரம் சரேலெனக் கிளம்பிவிட்டான்.
பொழுது சாய்ந்து, மேற்றிசை வானமெங்கும் மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்த்துக் கரைத்து ஆரத்தி கொட்டியது போல் இந்திர ஜாலம் நடந்து கொண்டிருந்தது. எந்தச் சைத்திரிகன் தீட்டிய வண்ண ஜாலமோ அது!
பாலாற்றுக்குள் சரிவாக இறங்கும் பாதைக்கருகே வந்து விட்டான் அவன். ஊர்ப் பெண்கள் தலையில் சும்மாடிட்டுப் பளபளக்கும் நீர்க்குடங்களில் ஊற்று நீர் சுமந்து சென்று கொண்டு இருந்தனர். தொலைவில் சிறு பிள்ளைகள் எக்களிப்புடன் கும்மாளமிட்டு விளையாடிக் கொண்டு இருந்தனர். ஆவினங்கள் கிண்கிணி ஓசை எழுப்பிய வண்ணம் வீடு திரும்பிக் கொண்டு இருந்தன.
ஆற்று மணலில் தோண்டப் பெற்ற பளிங்கு போன்ற ஊற்றுச் சுழல்தான் நீண்டகாலமாகச் சுற்றுப்புற மக்களுக்குக் குடிதண்ணீர் வழங்கி வருகிறது.
அதன் கரையில் ஒரு பிள்ளையார் கோயில். அந்தக் கோயிலின் முன்னால் ஒரு விளாமரம். சுந்தரம், விநாயகர் கோயிலை வலமாக வந்தான். அந்த விளாமரத்தின் கீழே இருந்த அகலமான பாறைமீது போய் அமர்ந்து யோசிக்கலானான்.
‘டொக்’கென விழுந்த விளாம்பழம் ஒன்று அவன் சிந்தனையைக் கலைத்தது. அதை எடுத்துப் பார்த்தான். நன்றாகக் கனிந்து உள்ளுக்குள்ளேயே பற்றற்றுப் பக்குவப்பட்டிருந்தது அப்பழம்.
அந்த விளாம்பழத்தைக் கண்டதுமே சுந்தரத்துக்கு அவளுடைய நினைவு தோன்றிவிட்டது. தன் இளம் பிராயத்தில், இதே பிள்ளையார் கோயில் எதிரில், இதே விளாமரத்தடியில் அவளுடன் சிரித்து விளையாடி மகிழ்ந்த நாட்களெல்லாம் அவன் நினைவில் பசுமையாகத் தோன்றத் தொடங்கின.
“டேய், சுந்தர்! எனக்கு ஒரு பழம் பறித்துப் போடுடா!” சகுந்தலா கெஞ்சினாள்.
“போட முடியாது, போடி!” – இது விளாமரத்தின்மீது உட்கார்ந்திருந்த சுந்தரின் மறுப்பு.
“இரு, இரு; என் தாத்தாவிடம் போய்ச் சொல்கிறேன், சுந்தர் ஆற்றங்கரை விளாமரத்தில் ஏறி உட்கார்ந்திருக்கிறான் என்று!”
சுந்தரின் வயிற்றில் ‘பகீர்’ என்றது. பாடம் படிக்காமல் அவன் ஆற்றங்கரைக்கு வந்திருக்கும் விஷயம் சகுந்தலாவின் தாத்தாவுக்குத் தெரிந்தால்?…
“ஐயோ வேண்டாமடி! உனக்கு வேண்டிய பழம் போடுகிறேன், இந்தா!”
பழம் நிறைந்த கிளையொன்றைப் பலமாக ஓர் உலுக்கு உலுக்கினான் அவன். அந்த உலுக்கலில் ‘டொக், டொக்’ கென்று இரண்டு கீழே விழுந்தன.
அவற்றைத் தொடர்ந்து சுந்தரம் குதித்தான்.
“பிள்ளையாருக்கு விளாம்பழம் என்றால் பிரியமாம். இதில் ஒன்று பிள்ளையாருக்கு; இன்னொன்று எனக்கு!” என்றாள் சகுந்தலா.
”எனக்கு?”
“உனக்கு வீட்டிலே தாத்தா பிரம்பம் பழம் கொடுப்பார்! அவருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஆற்றங்கரையிலா ஆடிக் கொண்டிருக்கிறாய்?”
“தாத்தா என்னைத் தேடினாரா?”
“சுந்தர் எங்கே தொலைந்தான்? பள்ளிக்கூடம் விட்டு அரைமணி நேரம் ஆச்சே?” என்று கேட்டார்.
“நீ என்ன சொன்னாய்?”
“ஆற்றங்கரையிலே ஆடிக் கொண்டிருப்பான்னு சொன்னேன்!”
”நிஜம்மா?”
சகுந்தலா சிரித்துவிட்டாள்.
“இல்லேடா, இல்லே; டிரில் கிளாசிலே இருக்கான்னு சொன்னேன்!” என்றாள்.
சுந்தர் அவளை நன்றியோடு பார்த்தான். சகுந்தலா விளாம்பழத்தைத் தின்று தீர்த்தாள். பிறகு கையில் குடத்துடன் ஊற்று நீரை நோக்கி நடந்தாள் சகுந்தலா; அவளுக்குப் பின்னால் சுந்தரும் நடந்தான்.
பாதையின் மீது கூட்கார்ந்திருந்த சுந்தரம் அந்தப் பழைய இன்ப நினைவுகளில் ஊன்றித் தன்னை மறந்தவனாய், சகுந்தலாவின் பின்னால் செல்வதாக எண்ணிக்கொண்டு நடந்தான். அந்த இன்ப மயக்கத்தில் தன் கையோடு கொண்டு வந்த பையைப் பாறைக்குப் பக்கத்திலேயே மறந்து வைத்து விட்டுப் போய்க் கொண்டிருந்தான்.
அத்தியாயம் – 2
ஆற்காட்டிலிருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ளது மாங்குடி கிராமம். சுந்தரம் பிறந்தது அந்தக் கிராமத்தில் தான்.
சுந்தரம் வீட்டில் ஒரே மகன்; செல்லப்பிள்ளை. எனவே “அவன் மேலே படிக்க வேண்டிய அவசியமில்லை. ஊரோடு இருந்து நிலங்களைப் பார்த்துக் கொண்டாலே போதும்; உட்கார்ந்து சாப்பிடலாம்” என்று கூறிவிட்டார் அவன் தந்தை. நாலாம் வகுப்போடு படிப்பை முடித்துக் கொண்ட சுந்தரத்தின் புத்தி குரங்காட்டம் ஆடியது. அதை அவன் எத்தனை நாட்களுக்கு அடக்கி மடக்கி வைத்திருக்க முடியும்?
சித்திரக் கலையில் அவனுக்குக் கொள்ளை ஆர்வம் இருந் தது. அவனிடம் மறைந்துள்ள கலைத் திறமையை, ஆர்வத் தைத் தூண்டிவிட யாருமே முன்வரவில்லை. ஆகவே, தனக் குத் தானே முயற்சி கொண்டான் அவன். பாடப் புத்தகங் களிலும் காலண்டர்களிலும் காணப்பட்ட படங்களைப் பார்த் துப்பார்த்து அவற்றைப் போலவே எழுதிப் பழகினான்.
அப்போது கோடை விடுமுறை. வெளியூருக்குப் படிக்கச் சென்றிருந்த மாங்குடி கிராமத்துப் பிள்ளைகள் எல்லோரும் விடுமுறையைக் கழிக்க ஊருக்கு வந்திருந்தார்கள். அந்தப் பிள்ளைகளைக் காணும் போதெல்லாம் சுந்தரத்துக்குத் தானும் அவர்களைப் போல் படித்து முன்னுக்கு வரவில்லையே என்ற ஏக்கமும் வெட்கமும் ஏற்படும்.
“ஊர்ப் பிள்ளைகளெல்லோரும் வெளியூருக்குப் போய்ப் படித்து விட்டு வருவதைப் பார்க்கும்போது எனக்கு வெட்க மாயிருக்கிறதம்மா! அவர்களைப் போல் நானும் படிக்கப் போகிறேன்.” உறுதியோடு, உணர்ச்சியோடு கூறினான் – துணிவுடன் தவம் செய்யக் கிளம்பிவிட்ட துருவனைப் போல!
“என்னடி அங்கே, அம்மாவும் பிள்ளையும் என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டே வந்தார் கங்காதரய்யர் அச்சமயத்தில்.
“மேலே படிக்க வேண்டுமாம், அவனுக்கு. அவனை அழைத்துக் கொண்டு போய் ஆற்காட்டுப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடுங்களேன்!” என்றாள் தாய்.
“கழுதைக்குப் படிப்பில் அவ்வளவு அக்கறை வந்து விட்டதாமா? ஆற்காட்டில் போய்க் கரிக்கோலம் போடுவான் அவன்!” என்றார் அவர்.
“படிக்கிறேன் என்று அவனாக விரும்பிக் கேட்கும்போது படிக்க வைத்துத்தான் பாருங்களேன்?”
“ஆற்காட்டில் இவனை யார் வைத்துப் படிப்புச் சொல்லிக் கொடுப்பார்கள்?”
“ஏன், நெல் மண்டி நடேச சர்மாவிடம்தான் கொண்டு போய் விடவேண்டும். ஆயிரம் பேருக்கு ஆயிரம் உதவி செய்கிறார் அவர். உங்களுக்குத்தானா மாட்டேன் எனப் போகிறார்?”
“ஓகோ! எல்லாம் திட்டம் போட்டு வைத்திருக்கிறாயா? சர்மாவேகூட இதைப்பற்றி என்னிடம் ஒரு முறை கேட்டார். நம் குடும்பத்தில் உண்மையான அன்பும் பற்றுதலும் கொண்டவர் அவர். நம் பெண் கலியாணத்தின் போது அவரிடம் கடன் வாங்கச் சென்றபோது அவர் என்ன சொன்னார், தெரியுமா? ‘அவ்வளவு பணம் எதற்கு? இன்றைக்கு வாணவேடிக்கைப் பார்க்க வருகிறவர்களெல்லாம் நாளைக்கு நீ சறுக்கும் போதும் வேடிக்கை பார்ப்பவர்கள் தான். பணத்தை விரயமாக்காதே!’ என்று புத்திமதி கூறினார். நான்தான் அவருடைய பேச்சைக் கேட்காமல் ஐயாயிரம் கடன் வாங்கிக் கலியாணத்தை நடத்தினேன். ஐந்து வருஷத்துக்கெல்லாம் அதற்கு வட்டி மட்டும் இரண்டாயிரம் ஆகிவிட்டது. நிலத்தை விற்று வட்டியும் முதலுமாக ஏழாயிரம் எடுத்துக்கொண்டு போனேன். சர்மா அப்போது என்ன சொன்னார், தெரியுமா? ‘அன்றே சொன்னேன்; நீ கேட்கவில்லை’ என்று கூறி, வட்டியைத் தள்ளிவிட்டு அசலை மட்டுமே பெற்றுக்கொண்டார்!” என்றார் அவர் நெஞ்சம் நெகிழ.
“அவரிடம் கொண்டு போய் விட்டால் சுந்தரம் எப்படியும் முன்னுக்கு வந்துவிடுவான்!” என்றாள் அவர் மனைவி.
“என்னிடம் அவர் கொண்டுள்ள நட்புக்கும், மதிப்புக்கும் இவனால் பங்கம் வந்துவிடக் கூடாதே என்றுதான் யோசிக்கிறேன்!” என்றார் அவர்.
“அவனை அவர் நல்வழியிலேயே கொண்டு செல்வார். நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள். அதோ கவுளி சொல்கிறது. நாளைக்கே சுந்தரத்தை அழைத்துக்கொண்டு புறப்படுங்கள்!” என்று அந்த அம்மாள் அவரைத் தைரியப்படுத்தினாள்.
“சரி; உங்கள் இருவர் ஆசையையும் கெடுப்பானேன்? நாளைக்கே புறப்படுகிறேன்!” என்றார் அவர் தீர்மானத்துடன்.
மறு நாள் காலை.
புதிய இடமாகையால், ஏதோ கூண்டில் பிடித்துப் போட்ட மாதிரி இருந்தது.
சுந்தரம் மெதுவாகப் படுக்கையை விட்டு எழுந்து தோட்டத்துப் பக்கம் சென்றான். குளிக்கும் அறை கரிப்புகை படிந்து ஒரே இருட்டாயிருந்தது. அந்த அறைக்குள் நுழைந்த சுந்தரம் பாசித் தரையில் காலை வைத்துவிடவே, சறுக்கிக் கீழே விழுந்துவிட்டான். யாரோ குபீரெனச் சிரிக்கும் குரல் கேட்டு வெட்கத்துடன் திரும்பிப் பார்த்தான். அங்கேதான் அந்தப் பெண் நின்றுகொண்டிருந்தாள் – அவள்தான் சகுந்தலா!
பில்ட்டரிலிருந்த வடி கட்டிய காப்பித் தூளை எடுத்து ரோஜாச் செடித் தொட்டியில் போட்டுக் கொண்டிருந்தாள் அவள். சுந்தரத்தையும், அவன் குடுமியையும், பித்தான் போடாத நலுங்கிய சட்டையையும் பார்த்தபோது அவளுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை!
“பாவம், விழுந்துட்டியா? அடிபட்டுதா?” சகுந்தலா கேட்டாள்.
“இல்லே!” என்று கூறிய சுந்தரம் சட்டையைச் சரி செய்து கொண்டே வேதனையுடன் எழுந்து நின்றான்.
“பொத்தான் எங்கே? கீழே விழுந்துட்டுதா?”
“இருந்தாத்தானே விழும்? என் சட்டைக்குப் பொத்தானே கிடையாது!”
“இந்தா, இந்தப் பின்னைப் போட்டுக்கோ!” என்று கூறித் தன் கை வளையலில் மாட்டியிருந்த பின் ஒன்றைக் கழற்றி அவனிடம் கொடுத்தாள் அவள். கொடுத்துவிட்டு, “நீ யாரு?” என்று கேட்டாள்.
“நான் சுந்தரம்; படிக்க வந்திருக்கேன். நீ…?”
“நான்தான் ஆர்.சகுந்தலா. பஸ்ட் பாரம் ஏ செக்ஷன்; போர்டு ஹைஸ்கூல், ஆற்காடு. எங்கப்பா டில்லியிலே இருக்கார்!” என்றாள் பெருமிதத்துடன்.
“அம்மா?”
“அம்மா இல்லே; செத்துப் போயிட்டா!” உதட்டைக் கோணலாகச் சரித்துக்கொண்டாள் சகுந்தலா.
சுந்தரம் பல் துலக்கிக்கொண்டு உள்ளே வருவதற் குள்ளாகவே சகுந்தலா பாட்டியிடமிருந்து அவனுக்குத் தயாராகக் காப்பி வாங்கி வைத்திருந்தாள். ஊரில் பழையது சாப்பிட்டுப் பழகிப்போன சுந்தரத்துக்கு, சகுந்தலா கொடுத்த காப்பி தேவாமிருதமாயிருந்தது!
“மாடிக்கு வா, என் கொலுப் பொம்மைகளையெல்லாம் காட்டறேன் உனக்கு!” என்று சுந்தரத்தின் கையைப் பிடித்து மாடிக்கு அழைத்துச் சென்றாள் அப்பெண். அவளுக்கு என்னவோ சுந்தரத்தை ரொம்பப் பிடித்துவிட்டது. கண்ணாடி பீரோ ஒன்றை திறந்து, அதிலிருந்த பொம்மைகளையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டினாள். இன்னொரு பீரோ நிறையப் புத்தகங்கள் நெட்டுக் குத்தாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. அவற்றின் முதுகுப்புறத்தில் பொறிக்கப் பட்டிருந்த பொன் எழுத்துக்கள் கண்ணைப் பறித்தன.
“இதெல்லாம் என் தாத்தாவின் புத்தகங்கள்” என்றாள் சகுந்தலா பெருமையோடு.
கீழே, பூஜை அறையிலிருந்து மணி ஓசை கேட்டுக் கொண்டிருந்தது. சகுந்தலா ஒரு சின்ன அட்டைப் பெட்டியைக் கொண்டு வந்து, “இதோ பார்த்தாயா?” என்றாள் கட்டுக்கடங்காத பூரிப்புடன். அதில் உடைந்த வளையல் துண்டுகள், கனமான அரையணாக் காசு ஒன்று, சாக்லேட்டி லிருந்து உரித்த வெள்ளி நிற ஜிகினாத் தகடு, ஏழெட்டுச் சோழிகள், சிவப்பு உல்லன் நூல், மயில் இறகு, ஒரு முழுப் பென்சில் – அவ்வளவும் இருந்தன.
“இந்தப் பென்சில் உனக்கு வேணுமா? இந்தா எடுத்துக் கோ, தாத்தா எனக்கு நிறையப் பென்சில் வாங்கிக் கொடுப்பாரே! வரயா, ஊஞ்சல்லே விளையாடலாம்?” என்று உற்சாகத்துடன் ஊஞ்சலுக்குத் தாவினாள் சகுந்தலா.
‘கிரீங்…கி…ர்……ங்’ என்று ஊஞ்சல் இரண்டு சுருதி யில், இரண்டு கதியில் இயங்கிக் கொண்டிருந்தது. அந்த ஓசை கேட்ட சர்மா கீழே இருந்தபடியே, “சகுந்தலா! அங்கே என்ன சத்தம்?” என்று குரல் கொடுத்தார். அவருடைய குரலில் ஒரு கனமும் கண்டிப்பும் இருந்தது.
“ஒண்ணுமில்லே, தாத்தா! நானும் சுந்தரமும் ஊஞ்சல்லே விளையாடறோம்!” என்றாள் சகுந்தலா.
“சுந்தரத்தை இங்கே வரச் சொல்லு!”
சுந்தரம் பயந்தபடி அவருக்கு எதிரே போய் நின்றான். “ஏண்டா, காப்பி சாப்பிட்டாயா?”
“சாப்பிட்டேன்!”
“தினமும் காலையில் ஆறு மணிக்குள் எழுந்து விட வேண்டும்; தெரிஞ்சுதா? இது மாங்குடி இல்லே; ஆற்காடு. ராத்திரியில் பத்து மணி வரை படிக்க வேண்டும். ஹெட் மாஸ்டரிடம் சொல்லி உன்னை பஸ்ட் பாரத்தில் சேர்த்து விடுகிறேன். காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு, நெற்றிக்கு இட்டுக்கொள்ள வேண்டும். பிறகு, ஒன்பது மணிவரை படிப்பு: அப்புறம் சாப்பிட்டு விட்டுப் பள்ளிக்கூடம். என்ன?”
சுந்தரம் பயந்தபடியே தலையை ஆட்டினான். அன்று மாலை சர்மா மண்டியிலிருந்து திரும்பி வந்தபோது ஞாபகமாக சுந்தரத்துக்கு நாலு சட்டைகளும் நிஜார்களும் வாங்கி வந்து, “இந்தா இவற்றைப் போட்டுக் கொள்; துணிகளை அழுக்காக்காமல் வைத்துக்கொள்!” என்றார்.
ஆறு மாதங்களுக்குள்ளாகவே சுந்தரத்துக்கும் சகுந்தலாவுக்கும் இடையே நட்பு வளர்ந்துவிட்டது. சர்மா அதைக் கவனிக்காமல் இல்லை. இருவரும் ஒரே வகுப்பில் ஒரே செக்ஷனில் படித்துக் கொண்டிருந்தார்கள். ஆயினும் படிப்பிலே சுந்தரத்தினால் சகுந்தலாவோடு போட்டி போட முடியவில்லை.
சித்திரம் வரைவதில் மட்டும் அவனுக்கு முன்னைக் காட்டிலும் அப்போது நல்ல தேர்ச்சி ஏற்பட்டிருந்தது. அதாவது, முன்னெல்லாம் அவன் ஒரு யானையின் படத்தைப் பார்த்து எழுதினால் அது ஒட்டகம் மாதிரி இருக்கும். இப்போது அப்படி இல்லை; பார்க்காமல் எழுதினாலே ஒட்டகம் மாதிரி இருக்கிறது!
சர்மா வீட்டிலே இல்லாத நேரங்களில் சகுந்தலாவுக்கும் சுந்தரத்துக்கும் ஒரே கும்மாளம்தான்! பாட்டிதான் செவிடாயிற்றே? இவர்கள் அடிக்கும் “லூட்டி” அவர்கள் காதிலே விழாது.
அத்தியாயம் – 3
செடியில் இருக்கும் மொட்டுகள் மலரும் வரை வண்டு அவற்றை அண்டி வட்டமிடவும், ஊதிக் களிக்கவும் அனுமதிக் கப்படுகின்றன. மலர்ந்துவிட்ட மறுகணமே அந்தப் பூக்கள் கடவுளின் வழிபாட்டுக்குரிய புனித சின்னங்களாகி செடியிலிருந்து பறிக்கப்பட்டு விடுகின்றன. அப்புறம் அம் மலர்களை வண்டுகள் அண்டவோ, தீண்டவோ முடிவதில்லை.
பூரண மலர்ச்சியுடன், புதுமைப் பொலிவுடன், மோகன வசீகரத்துடன் பூஜை அறையில் காத்திருக்கும் புஷ்பமென விளங்கினாள் சகுந்தலா.
அவள் இப்போது சுந்தரத்தின் நெருக்கத்துக்கு எட்டாத ஒரு புனிதப் பொருள். சுந்தரம் அவளை அண்ட விரும்பிய போதெல்லாம் அவள் எட்டாத பொருளாகத் தொடுவானம் போல் தொலைவில் நகர்ந்து போய்க் கொண்டிருந்தாள். அதற்குக் காரணம், அவ்விருவருக்கும் இடையே சர்மா ஒரு பெரும் வேலியைப் போட்டுத் தடுத்து வைத்திருந்ததுதான். கட்டுப்பாடு என்னும் அவ்வேலியைக் கடக்கவோ, கலைக்கவோ முடியவில்லை அவர்களால்.
இளமைத் தொடக்கத்தில் நின்று தயங்கிக் கொண்டி ருந்த சுந்தரத்தின் உள்ளத்தை ஏதோ ஒரு கவர்ச்சி மயக்கி அழைத்தது.
மலர்ந்த தாமரையெனக் குலுங்கி நின்ற சகுந்தலாவின் வனப்பும் வசீகரமும் சுந்தரத்தைக் கவர்ந்திழுக்கும் மயக்கத்தின் மாயமாயிருக்குமோ?
சுந்தரம் எப்படியோ ஐந்தாவது பாரத்தை எட்டிப் பிடித்துவிட்டான். சகுந்தலா மட்டும் மூன்றாவது பாரத்தோடு படிப்பை முடித்துக் கொண்டு விட்டாள். ‘போதும் படிப்பு’ என்று சர்மாதான் அவள் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
சுந்தரம் எந்நேரமும் மாடியிலேயே புத்தகமும் கையுமாகக் கிடந்தான். காரியமின்றி அவன் கீழே இறங்கி வரக் கூடாது; சகுந்தலாவும் மாடிப் பக்கம் செல்லக் கூடாது என்று சர்மாவின் உத்தரவு. உத்தரவுகூட அல்ல; அன்புக் கட்டளை!
விளையாட்டாகவே நான்கு வருடங்கள் ஓடிவிட்டன. இப்போதெல்லாம் சகுந்தலாவுக்குச் சுந்தரைக் கண்ணால் காண்பதே அரிதாகிவிட்டது. குளிக்கவும் சாப்பிடவும், பள்ளிக்கூடம் போகவும் அவன் மாடியிலிருந்து கீழே இறங்கி வரும் சமயங்களில் அவள் எங்கேயோ ஒரு மூலையில் பதுங்கி விட்டிருப்பான். எங்கேயாவது ஒளிந்து நின்றபடியே மாடிப் படிகளில் இறங்கிவரும் சுந்தரத்தின் அழகிய முகத்தையும், மிடுக்கான நடையையும், நன்கு வளர்ந்துவிட்ட கம்பீரமான தோற்றத்தையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பாள்.
சில நேரங்களில் அவர்கள் இருவரும் எதிர்பாராத விதமாகச் சந்தித்துக் கொள்வதும் உண்டு. அத்தகைய சந்தர்ப்பங்களில் சகுந்தலா கண்ணிமைகள் படபடக்க, புன் முறுவல் பூத்தபடியே அந்த இடத்தினின்றும் நழுவி மின்னலென மறைந்து விடுவாள்.
கூடத்து கடிகாரத்தில் மணி எட்டு அடித்தது. சர்மாவின் சகோதரி காவேரிப் பாட்டி மணைக்கட்டையைத் தலைக்கு அணையாக வைத்துக் கொண்டு தூங்க ஆரம்பித்துவிட்டாள். மாடி அறையில் மேஜை முன் உட்கார்ந்து சுவாரசியமாக சித்திரம் வரைந்து கொண்டிருந்தான் சுந்தரம். அழகிய தாமரை மலர் ஒன்று இதழ் விரித்துச் சிரிக்கிறது; வண்டு ஒன்று அதை நாடி வருகிறது. இதுதான் சித்திரம். சுந்தரம் கை தேர்ந்த சித்திரக்காரனாகிவிட்டான்’ என்பதை அம் மலர் வண்டினிடம் சொல்லிக் கொண்டிருந்தது!
திடீரெனப் பின் பக்கத்திலிருந்து முல்லை மொட்டின் நறுமணம் கமழ்ந்து வருவதை உணர்ந்த சுந்தரம், ‘சகுந்தலா வருகிறாள்!’ என்பதைக் கண்டு கொண்டுவிட்டான்.
தான் எழுதிக்கொண்டிருந்த சித்திரத்தைச் சட்டென எடுத்து மறைத்துவிட்டுப் படிப்பதில் தீவிரமாக ஈடுபட்டான். முல்லையின் மணம் வெகு அருகில் நெருங்கிவிட்ட போதுங் கூட அவன் தலை நிமிராமல் அத்தாழம்பூ மேனியாளின் தந்தக் கைகளை ஒருமுறை கீழ்க் கண்களாலேயே கவனித்துக் கொண்டான். பூனைபோல் நடந்துவந்த சகுந்தலா தன் தலை யிலிருந்த முல்லை அரும்புகளில் ஒன்றை எடுத்துச் சுந்தரத்தின் பின் கழுத்தில் சீண்டி விளையாடினாள்.
“சட், பூச்சி!” என்று திரும்பிப் பாராமலேயே பின் கழுத்தைத் தட்டினான் அவன்.
“பூச்சி இல்லே, வண்டு!” என்றாள் சகுந்தலா.
திரும்பிப் பார்த்த சுந்தரம். “முல்லை மொட்டு!” என்றான்.
“இல்லே; தாமரைப் பூ!” என்றாள் அவள்.
“நான் எழுதிக்கொண்டிருந்த படத்தைப் பார்த்து விட்டாயா? நீ ஏன் இங்கே வந்தே?”
“வரக்கூடாதா? அப்படித்தான் வருவேன்! நீ சரியாகப் படிக்கிறாயா? என்று பார்க்கத்தான் வந்தேன்; படமா வரைந்து கொண்டிருக்கிறாய்? இரு, இரு; தாத்தாகிட்டே சொல்றேன்!”
சுந்தரம் அவளுடைய கைகளைப் பிடித்துக்கொண்டான்.
“என்னவாம்” என்றாள் அவள்.
“தாத்தாவிடம் சொல்லாம இருந்தால்….”
“சொல்லாம இருந்தால்….?”
“உனக்கொன்னு கொடுப்பேன்!”
“என்ன கொடுப்பே?”
“உன் எம்ப்ராய்டரியிலே படம் போட்டுக் கொடுப்பேன்!”
“படமா?…ம்.. என்ன படம்?”
“இதோ பாரு!”
“ரொம்ப அழகாயிருக்கு! இந்தத் தாமரை மலருக்கு என்ன வர்ணம் கொடுப்பாய்? தாமரைன்னா அசலாயிருக்கணும்!’
“எனக்கு ஒரு ஐடியா தோண்றது!”
“என்னது?”
“நீ அப்படியே கொஞ்ச நேரம் இங்கே நில்லு; பூவிதழ் போன்ற உன் உதட்டிலிருந்து அதை நான் எடுத்துக்கிறேன்!”
“போ…டா!”
சட்டன நாக்கைக் கடித்துக் கொண்டாள் சகுந்தலா. மறுகணமே அந்த ‘டா’வை நீக்கிவிட்டுப் “போ, சுந்தர்!” என்று கொஞ்சும் மொழியில் கூறினாள்.
பின்னர், “வண்டுக்குக் கறுப்பு வர்ணம் வேண்டுமே, அதற்கு என்ன செய்வே?” என்று கேட்டாள்.
“உன் கருங் கூந்தலிலிருந்து எடுத்துக்கொள்வேன்!” என்று அவள் சடையைப் பற்றி இழுத்தான் அவன்.
“சுந்தர், என் பின்னலை விடு!”
“விடமாட்டேன்!”
“விடப்போறியா, தாத்தாவைக் கூப்பிடட்டுமா?”
“கூப்பிடு; தாத்தாதான் கீழே இல்லையே?”
“அது உனக்கு எப்படித் தெரியும்?”
“அவர் இருந்தால் நீ வந்திருப்பியா?”
“ஓகோ! அந்தத் தைரியம்தானா? அவர் கதை கேட்கப் போயிருக்கார்னு தெரியுமா உனக்கு?”
“அது சரி; நீ இப்போ ஏன் இங்கே வந்தே?”
“எதுக்கோ வந்தேன்!”
“சொல்லப் போறியா இல்லையா? இல்லே, இந்த விளக்கை அணைச்சுடட்டுமா?” அவளைப் பயமுறுத்திக் கொண்டே சுந்தர் விளக்கை அணைக்க எழுந்தான். சகுந்தலாவுக்கு இருட்டென்றால் ஒரே பயம் என்பது அவனுக்குத் தெரியும்.
“ஐயோ சுந்தர் வேண்டாம், வேண்டாம். எனக்குப் பயமாயிருக்கு!” என்று பதறினாள் அவள்.
“எதுக்கு வந்தேன்னு சொல்லு?”
“உன்னைப் பார்க்கத்தான்!”
“அப்படி வா, வழிக்கு; ஓர் ஆண்பிள்ளை தனியாயிருக்கிற இடத்துக்கு ஒரு பெண் பிள்ளை வரலாமா!”
“வந்தால் என்னவாம்?’
“வரக் கூடாது!”
“சரி, அப்படின்னா நான் போறேன்” சகுந்தலா திரும்பினாள்.
“நீ போகக்கூடாது.”
“நீதானே வரக்கூடாது என்றாய்?”
“ஆமாம்; இப்போ போகக்கூடாதுன்னு சொல்றேன்!” சுந்தர் அவள் கரங்களைப் பிடித்துக்கொண்டு அவளுடைய முகத்தையே பார்த்தான். “இந்தப் பின்னலும் நேர் வகிடும் உனக்கு எவ்வளவு அழகாயிருக்கு, தெரியுமா?” என்றான்.
“ம்ம்ம்… உனக்குக்கூடத்தான் இந்தக் கிராப்பும் கோணல் வகிடும் ரொம்ப நன்றாயிருக்கு!” என்றாள் சகுந்தலா.
“அதுக்கு ஏன் பெருமூச்சு விடறே?”
“உனக்குத் தலைவாரிப் பின்ன முடியலையேன்னுதான்!”
“அப்படின்னா மறுபடியும் குடுமியே வைத்துக் கொள்ளட்டுமா?”
“ஐயோ, வேண்டாம்! உன் கிராப்புத் தலையை வேண்டுமானால் வாரி விடட்டுமா இப்போ?”
சுந்தரம் அவள் முகத்துக்கு எதிரே தன் முகத்தைக் கொண்டு போய் காட்டினான். சகுந்தலா அவன் தலையை அழகாக வாரி விட்டாள். அவன் முன் நெற்றி முடியில் கொஞ்சம் எடுத்து, ‘ஸ்பிரிங்’ போல் சுருட்டி, நெற்றியிலே தவழவிட்டாள்!
“வாசலில் யாரோ கதவைத் தட்டறாப்போல இருக்கு…!”
“ஐயோ, தாத்தா வந்துவிட்டார்!” என்று அலறிக் கொண்டே கீழே ஓடினாள், சகுந்தலா.
– தொடரும்…
– வழிப்போக்கன் (நாவல்), எட்டாம் பதிப்பு: 1997, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.