கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,722 
 
 

மருத்துவமனையில் பிரசவத்திற்கு மனைவி வான்மதியை சேர்த்துவிட்டு வராண்டாவில் உலாத்தினான் மகேஷ்.

லேபர் வார்டிலிருந்து மனைவி வலியால் கத்துவது சன்னமாக கேட்டது மகேஷுக்கு. பதை பதைப்புடன் காத்திருந்தான்.

ஒரு மணி நேர மனைவியின் துடிப்பிற்குப் பின் குழந்தையின் அழுகைச் சத்தம். மலர்ந்த மகேஷ் லேபர் வார்டை அணுகினான்.

வெளியே வந்த டாக்டர் புன்னகையுடன் கூறினார். பெண் குழந்தை என்று. சற்று நேரத்தில் குழந்தையும், மனைவியையும் பார்க்க
அனுமதிக்கப்பட்டான்.

சில மணி நேரம் கழித்துக் கண் திறந்த வான்மதி, கணவன் கையைப் பற்றி ஆனந்தக் கண்ணீர் விட்டாள், மகேஷ் கேட்டான்.

‘ஏம்மா ரொம்ப வலிச்சுதா? நீ உள்ளே படுற பாட்டை வெளியே நின்னு என்னால் சகிச்சுக்க முடியலை. நீ எப்படிம்மா பொறுத்துக்கிட்டே?’’

‘’அதாங்க தாய்மையோட சக்தி…இதே வலியை அனுபவிச்சுத்தானேங்க அத்தை உங்களைப் பெத்திருப்பாங்க. என்னோட சுயநலத்துக்கு
உங்க அம்மாவை காப்பகத்துக்கு அனுப்பினேன். பிரசவ வலியை அனுபவிச்ச முதல் நிமிடத்துல இருந்து அத்தையோட முகம்தான் என் மனசுல ஓடிக்கிட்டு இருந்தது. போய் உங்கம்மாவை சாரி…சாரி..என் அத்தையை அழைச்சுட்டு வந்துடுங்க’’ என்று கண்ணீர் விட்ட மனைவியின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு தாயை காப்பகத்திலிருந்து அழைத்து வர சந்தோஷமாய் கிளம்பினான் மகேஷ்.

– வி.சகிதாமுருகன் (16-1-13)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *