வந்தே மாதரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 11, 2024
பார்வையிட்டோர்: 1,710 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சோமுவின் உள் மனதில் ஊடாடிக் கிடந்த அந்த மா பெரும் உணர்வுகள் கோபமா, துயரமா என்று உருப்புரியாமல் தத்தளித்தன. அவன் படபடப்பாகச் சுமதியின் முகத்தை நோக்கினான். நேர்வழியில் செல்லும் நிதானத்தோடு, கொஞ்சம் கூடத் தட்டுத் தடங்கலின்றி அவள் மிதமான நடையோடு அவனைப் பின் தொடர்ந்தாள். மலர்ந்தும், மலராத, பெண்மை முழுதும் விகசிக்காத தோற்றம். மதர்த்த விழிகளில் ஏக்கத் தேக்கம். ரகசியமாகக் கட்டிக் காத்த உள்ளாசைகளைப் பிறர் உணர்ந்துவிட்ட வேதனையான வெட்கம். ஆனால் ஈடு கொடுத்து எதிர்த்தே தீருவேன் என்ற உறுதியான முகபாவம், வீட்டுக்குள் நுழைந்ததும் இனி நடக்கப் போகும் விஷயங்களைக் கேட்டால் அம்மா எத்தனை அதிர்ச்சி அடைவாள்? 

தெருவே வெரிச்சோடிக் கிடந்தது. இந்த நீண்ட தெரு வின் தொலைவே தீராமல் வளர்ந்து கொண்டிருந்து விட்டாலும் நல்லதுதான். சோமுவின் கோபக் கனல் பெருகியது. வாய் திறந்து வார்த்தைகளைக் கொட்டி, அவள் உள்ளாசைகளை வெளியில் எடுத்து எறிந்துவிட்டு, அவள் மனதைச் சுத்தமாகத் துடைத்துவிட வேண்டும் என்ற ஓர் துடிப்பு. ‘சலீம்’ என்ற துமே உடல் முழுதும் ஒரு ரத்த வெறி பரவுகிறது. அது நேற்று வரை தோன்றாததுதான். ஆனால் மறைந்திருந்த வெறிபோல் ‘சட்’டெனப் பற்றிக் கொண்டது. சோமு தன்னை அடக்கிக் கொள்ளத் தூர நோக்கினான். தேசீயக் கொடிகள் கம்பங்கள் மீதெல்லாம் படர்ந்து மகிழ்வால் துடிதுடித்தன. அந்தத் துடிப் பின் லயத்தில் அவன் உடல் முழுவதும் புதிய ஊற்றுணர்ச்சி பரவியது. சந்தேகமில்லாமல் அவன் ஒரு சராசரி மனிதனை விட, நாட்டுப் பற்று மிகுந்தவன் தான்! ஆனாலும்…விரும் பாததைக் கண்ட நேரத்தில், கேட்ட நேரத்தில் சொந்தமான விருப்பு, வெறுப்புக்களை உதறிவிட்டு அமைதியடைபவன் யார்? 

சுமதியின் பள்ளியில் கொடியேற்று விழா. பள்ளித்தலைமை மாணவி என்ற முறையில் நாட்டு வணக்கமும், தமிழ்மொழி வணக்கமும் பாடினாள் சுமதி. பிறகு கொடி வணக்கமும், அணி வகுப்புமுறையும் நடந்தன. சுமதியை விழா முடியும் வரை இருந்து அழைத்து வர வேண்டும் என்று சோமு, அம்மா சொன்னபடி வந்திருந்தான். பள்ளி நிர்வாகியின் மகன் என்ற முறையில் சலீமும் மாணவர்கட்கு இனிப்புக்கள் வழங்கினான். அடிக்கடி ஏற்பாடு முறைகளைக் குறித்து சுமதியும், சலீமும் பேசிக் கொள்வதைச் சோமு கவனித்தான். அந்தப் பேச்சில், பழகிய நட்பும், ஆழ்ந்த பாசமும், ஒருவரையொருவர் வென்ற சிரிப்பும் தெறிப்பதை உணர்ந்து அவன் திடுக்கிட்டான். சூழ் நிலை தந்த வெறுப்பிற்கு ஈடு கொடுத்துவிட்டு, சுமதியருகே சென்று அம்மா அவசரமாக அழைப்பதாகக் கூறி விழா முடியு முன்பே அழைத்து வந்து விட்டான். 

சாலையில் சின்னஞ்சிறு சிறார்கள் சுதந்திர மூவர்ணக் கொடி யணிந்து, பெருமிதமான நடையோடு வீடு நோக்கி ஓடினர். இந்தப் பொன்னாளை நினைத்து சோமு உடல் சிலிர்த்த நாட்கள் உண்டு: இன்று வெறுப்பின் சிகரமான நிகழ்வுகள் குலை நடுக்கம் காட்டி மிரட்டின. இந்தச் சுமதிக்கு எப்படி விளங்க வைப்பது? இப்படி அண்ணனும், தங்கையும் அரவமில்லாது, வாக்கு வாத மில்லாது நடந்து வருவது இது முதல் தடவை! இந்த அந்நியம் கொடூரமான உள்ளுண்மை! சோமு சட்டெனத் திரும்பிய போது சுமதியின் கைகளில் நழுவிய ஒரு புகைப்படம் தென் பட்டது. அவன் சந்தேகம் புகைப்படத்தைத் தழுவ, மௌன மாகப் படத்திற்குக் கை நீட்டினான் அவன். சுமதி, நடுக்கத்தை யெல்லாம் வாங்கும் கைகளுக்குத் தந்துவிட்டு, சலனமின்றி படத்தைக் கொடுத்தாள்! 

மகாத்மா காந்தி! 

சட்டென்று மனத்திற்கு ஒரு சவுக்கடி: புன்னகையும், எழிலுமாய் அவரின் சிரிப்பு, அவன் சந்தேகத்தின் அர்த்த மின்மைக்கோ? புத்தரைத் தொழுதுவிட்டு, புலால் உணவு கொள்வதுபோல், காந்தியைப் போற்றிவிட்டு, முகம்மதிய சகோ தரர்களை வெறுப்பதா? இந்த அர்த்தத்தைக் கற்பிக்கத்தான் சுமதி இதைக் கையில் வைத்திருக்கிறாளா? ஆனாலும்…படத்தைத் திருப்பியபோது. மறுபடியும் மாயையாகி மறைந்த கோபம் பீறிட்டது. வெண்மையான வழவழப்பில் பச்சை நிறத்தில் “நாதிராவுக்கு அன்பளிப்பு -சலீம்’ என்ற ஆங்கில வாசகங்கள், சட்டென கைகளுக்குள் சுருள இருந்த புகைப்படத்தை சுமதி பறித்துக் கொண்டாள். அவள் கண்களில் பொங்கும் நீர். அவன் கண்களில் விசுவரூபமாகி நின்ற வெறி. அதை வெல்ல அவள் மெல்ல மொழிந்தாள்.”அது பாபுஜியின் படம் அண்ணா! அவள் குரலில் தொய்ந்து கனிந்த உணர்வு இரக்கமா, ஏக்கமா என்றே அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அவன் தன்னை உணர்ந்தான். ‘சன்மார்க்க நெறி பிறழா. சத்தியப் போர் முனையில் அன்பு சுதந்திரம் கண்ட மகானையா அவமதிக்க இருந்தேன்? அதன் மூலம் நான் என்னையே அவ மானப் படுத்திக் கொள்ள இருந்தேனா?” இந்தச் செயலைத் தடுத்த சுமதியை நன்றியோடு பார்த்தவாறே அவன் மிகவும் சிரமத்துடன் அவளைப் பெயர் சொல்லி அழைத்தான். அவள் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டுக் குனிந்தாள். முழுக்கப் பார்க்கத் தெம்பில்லை. 

தெருவோரம் சிலுசிலுத்த காற்றசைவில், உயர்ந்திருந்த காட்டுத் தீ புஷ்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து விழுந்தன. இரத்தமென சிவந்த பூக்கள் சிகப்பு வெல்வெட் படுதாவை விரித்தாற்போல் மிகப் பயங்கரமாகப் பெருகி… ஓடும் ரத்தமாக, தேங்கும் நாற்றமாகப் பரவி, நினைக்கவே நெஞ்சு நடுங்கும் ஓலமாக… இனம் தெரியாத ஊர்தான், அப்பாவுக்கு அங்கு வேலையென்றால் அம்மாவும், சோமுவும் அங்கு இருக்க வேண்டியதுதானே? ஒரு நாள் அடுத்த வீட்டு முக்கர்ஜி பள்ளிக்கூடத்திற்கு வந்து அவனை அழைத்துப் போனார். பள்ளிக்கூட மணி அடித்தும் கூட அன்று பிள்ளை களை வெளியே விடும் பெரிய கேட்டோ, சின்ன கேட்டோ திறக்கப்படவில்லை. ஒன்றும் புரியாத சிறுவர்கள் தவிக்கும் போது வீட்டிலிருந்து வேண்டியவர்கள் வந்து குழந்தைகளை அழைத்துப் போனார்கள். அதே போல் தான் முக்கர்ஜி வந்து சோமுவைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார். சோமு விற்கு ஆச்சரியம்! கடைகள் சாத்திக் கிடக்கின்றன, அங் காடிகள் சிதறிக் கிடக்கின்றன. வீடெல்லாம் திறந்து கிடக் கின்றன. நீள் நோக்கு வரையும் புகையும், மனித ஓலமும், தீயுமாக ஒரு பயங்கரச் சித்திரம் மனிதப் பூண்டே ஏதோ அழிக்கும் வெறிக்குப் பயந்து ஒடுங்கிவிட்ட நிலை முக்கர்ஜியின் கண்களில் நீர் கொட்டுகிறது. சோமு அவர் கண்ணீரைத் துடைக்கிறான். அவர் ‘கோ’வென்று கதறி “உன் அப்பாவைக் கொன்று விட்டார்களடா” என்று துடித்தார். சோமுவிற்கு எதுவும் புரியவில்லை. அவன் “அப்பா”என்று அலறினான். இதைப் போன்ற ஆயிரம் குரல்கள் அன்று ஒலித்தன. 

“அண்ணா!” என்று வீறிட்டவாறே அவன் கைகளைப் பற்றினாள் சுமதி. 

“சுமதி, என்னம்மா, நான் ஏதாவது உளறினேனா…?” திடுக்கிட்டவாறு கேட்டான் சோமு. 

“அப்பா என்று என்னமாக தீனமாக அலறினாய் நீ…என் குலையே நடுங்கி விட்டதண்ணா…” 

“உள்ளத்தில் வேகமாக வந்த பழைய நினைவுகள் அம்மா அவை. சுதந்திரம் பெற்ற ஓராண்டுக்குள் நிகழ்ந்த ஊழிக் கூத்து. அன்று ஜகத்தை அழிக்க உறுதி கொண்ட சாதிச் சண்டை, மதச் சண்டை. அந்த இம்சைப்போரில், அருவருப் பான கீழ்த்தரமான குழப்பத்தில், நம் தந்தையைப் பலி கொடுத்து, அந்தத் தீமை செய்த கொடுமைகளை அனுபவித்தவள் நம் தாய்…” சோமுவின் குரலில் ஒலித்த சோகமான அமைதி பாவம் பளிச்சென மாறிவிட்டது. “சு…ம..தி” கடும் முரட்டுத் தனம் ஒலித்தது, அந்த மூன்றெழுத்தில். ”சுமதி ! என் ரணத் தில் ரத்தத் துளிகள் கசியும் வேதனை இப்போது, நான் கண்ட காட்சி… நீ நாதிரா’ என்று அழைக்கப்படும் போது என் காதில் காய்ச்சி ஊற்றிய நாராசம் என்னைச் செவிடாக்காமல் விட்டது குறித்து ஆச்சரியப் படுகிறேன்…” உள்ளத்தில் புதைந் திருந்ததை வெளியே இழுத்த திகிலோடு அவளை நோக்கினான். தன் சொற்களில் ஒலித்த ரௌத்திரத்தை எண்ணி அவன் கண்களே கலங்கின. 

தெருவின் நாற்சந்தி வந்தது. வலது கை ஓரமாகத் திரும்பி இருவரும் நடந்தனர். நாற்சந்தியின் கடிகாரம் மணி ஒன்பது காட்டியது. நகரம் விழிப்புற்று சுறுசுறுப்பாக மாறி ஏறும் வெய்யிலில் களைப்படையக் காத்திருந்தது. அம்மா பூஜை செய் யும் நேரம் இது! எந்த நிமிடமும் அம்மா, அம்மா’ என்று வளர்ந்து விட்ட நிலை அவனுக்கு. எல்லாம் அம்மாவுக்காகத் தான். அவளுக்கு ஆகாதது, அவனுக்கும் ஆகாது. அவளுக்குப் பிடித்தவை, அவனுக்கும் வெகு பிரியமானவை. 

வாசல் இரும்புக் கிராதியைக் கடக்கும் போதே உள்ளே ஊதுவத்தியின் மணமும், உள்ளடங்கும் இனிமை பொங்கும் குரலில் பக்திக் குழைவு கலந்து பாடும் தாயின் குரலும் துல் லியமாகக் கேட்டது. முன் வாயிற் படியோரம் இருவரும் மயங்கி நின்றபோது, தாயின் குரலின் சோகம் அவன் நெஞ்சை வெட்டியது. அந்தக் கானத்தின் மொழிகள் சுமதியின் நெஞ்சை கிளுகிளுக்க வைத்தன. 

ஈஸ்வர அல்லா தேரே நாம்
ஸப்கோ சன்மதி தேபகவான் 
ராம ராம ஜய ராஜா ராம்
ராம ராம ஜய சீதாராம் 

“அம்மா!” 

“அம்மா!” 

ஒரு குரலில் விதிர்ப்பு! ஒரு குரலில் களிப்பு! 

அன்னை சட்டென விழித்துக் கொண்டாள். மைந்தன் உணர்ந்து கொண்ட துயரத்தை, அப்படியே புன்சிரிப்பாக்கி, அதைப் பார்வை மாலையாக அவனுக்குச் சாத்தினாள். அவன் நிறைவோடு அவளை உற்று நோக்கிச் சிரித்தான். “பூஜை செய்கிறாயா, அம்மா?” என்று அர்த்தமில்லாமல் கேட்டான். 

சுமதி எதுவுமே பேசாதது சோமுவிற்கு உறுத்திற்று. அவள் வேற்றுமையாகி நிற்பதுபோலக் குற்றம் சாட்டும் பாவனையில் அவளைப் பார்த்தான். 

“சுமதி! போய் அண்ணாவிற்கு டிபன்’ எடுத்து வை என்றாள் அம்மா?” 

“எனக்கு ஒரே அலுப்பு, அம்மா” அவளின் கீழ்ப்படி யாமை செல்லமாக மொழிந்தது. 

சட்டெனத் தாயின் முகத்தைக் கண்டு திடுக்கிட்டான் அவன். கோபம் சீறும் விழிகள். அவள் பார்வையில் தங்கை யின் மீது மட்டும் என்றும் அன்பு கனிந்து பொங்கியதில்லை. எப்போதுமே அதில் சுரீரென எரியும் தீப்போன்ற சுடர் தெறித்து மங்கி மறைவது போலத்தான் தோன்றும். இந்தப் பார்வையைத் தினமும் பார்த்துப் பயந் தெளிந்தவளாயிற்றே சுமதி ! அவள் எழத் தயாராக இல்லை. அண்ணா கோபித்துக் கொண்டதை எல்லாம் வைத்து, அம்மாவிடம் செல்லமாகக் கீழ்ப்படிய மறுத்துப் பிடிவாதம் செய்தாள். நலிந்த உருவான அம்மா, அவளிடம் எப்போதும் போலவே ஒட்டியும், ஒட்டா மலும் “பெண்ணென்றால் இப்படியா? எழுந்திருடி, நானே வருகிறேன். இரண்டு பேருமே சாப்பிடுங்கள்’ என்று முன் வந்தாள். சுமதியின் பிடிவாதத்தை, அம்மா இப்படிப் பெரும் போக்காக விட்டுத்தான், இப்படித் தான் தோன்றியாகி விட்டாளோ அவள்? 

அம்மா இரண்டு தட்டுக்களில் இட்டிலி வைத்துவிட்டு, தானும் ஒரு தட்டில் இட்டிலி வைத்துக் கொண்டாள். மூவரும் விண்டு சாப்பிட ஆரம்பித்தார்கள். 

“இன்றைக்கு மோர்க்குழம்பு தானேம்மா?” என்றான் சோமு. 

”இல்லை, மோர்க்குழம்புதான் சுமதிக்குப் பிடிக்காதே…” உதைத்துவிட்ட அந்தக் குழந்தையை எடுத்தணைக்கும் பரிவு அவள் குரலில். 

“சுமதிக்குப் பிடித்ததெல்லாம் செய்வதானால் அது உன்னால் ஆகாதும்மா…” என்ற சோமுவை எதிர்த்து “அண்ணா! சும்மா இருக்கமாட்டாய்…” என்று குறுக்கிட்டாள் சுமதி. 

சோமு அதை லட்சியம் செய்யவில்லை. “சு..ம..தி என்று இல்லே நீ பெயரிட்டாய். அது நாதிராவாகிவிட்டது அம்மா. அனார்க்கலி கதை ஞாபகம் இருக்கிறதா அம்மா உனக்கு? அந்த சலீமின், அனார்க்கலியின், பெயர்தான் நாதிரா. இப்போது பள்ளி நிர்வாகியின் மகன் சலீமுக்காக இவள் பெயர் நாதிரா ஆகிவிட்டதம்மா…”

சோமு எதிர்பார்த்தபடி அம்மா எடுத்த விள்ளலைத் தயங் கவே செய்தாள். ஆனால் அடுத்த கணமே ஆட்டம் காணாத உறுதியாக நிலைத்தன கரங்கள். அவள் மிகவும் கஷ்டத்தோடு தன் முகத்தைக் கனிவாக்கிக் கொண்ட முயற்சி அது. “அதைப் பற்றி அப்புறமாகப் பேசலாமா, சோமு…!” 

அவள் குரலில் செயற்கையான நிறைவு! 

சிட்டுக்குருவியின் இறகுகளைப்போல் படபடத்த சுமதியின் உள்ளம் சில்லிட்டு உறைந்தது. அந்தக் கணத்தில் எதுவுமே பெரிதாகாமல், அன்னையின் பரிவே பெருகி, அவள் நெஞ்சு நிறைந்து அவளை விம்ம வைத்தது. “அம்மா” என்று உட் கார்ந்த வாக்கிலேயே தாயின் மடிமீது முகம் பதித்துத் தேம்பித் தேம்பிக் கதறினாள் அவள். அன்னை அவளைத் தேற்றவும் இல்லை, கடியவும் இல்லை. மகனை அவள் நோக்கவுமில்லை, அதிர்ந்து உட்கார்ந்து விடவுமில்லை. மகள் மடியில் கதற, மகன் எதிரில் குமுற, ஒரு தாய் சலனமின்றி உண்டு கொண்டி ருக்கிறாள்! பூகர்ப்பத்தில் எரிகுழம்பை வைத்துக்கொண்டு நதி களையும், வளங்களையுமே காட்டிக்கொண்டிருக்கும் பூமித்தாய் தானா இவள்? அவள் எப்போது குமுறுவாள்! தாயின் முன் தனக்குத்தான் குன்றி அடி பணிந்து சிறுமியாகிவிட்ட வெட்கம். ஏன்? நிமிர்ந்தான் சோமு. அவள் முகத்தில் இத்தனை நாள் நிலவிய சாந்திக்குப் பதில் விதிர்ப்பு ! இந்த விதிர்ப்பை இதற்கு முன்பு எப்போதோ கண்ட நினைவு… அந்தத் தவிப்பில் விடு படாத பயங்கரமான, நினைத்தால் நெஞ்சு கலங்கும் சீர் குலைவு… அவன் வயிற்றில் தீக்கங்குகள் உறையும் வேதனை பீறிட “அம்மா” என்றான். 

அவள் பேசவில்லை. மனநிழலில் ஒதுக்கம் கண்ட நினைவின் கூர்மை உறுத்தும் வேலாகிவிட்டதா? மாண்டுவிட்ட தந்தை நினைவு வந்துவிட்டதா அவளுக்கு? 

“சுமதி!” சுமதியின் தோழி நீலாவின் குரல். 

அம்மா சுமதியை எழுப்பினாள். ‘போ முகத்தை நன்றாகத் துடைத்துக்கொண்டு போ. நம் துயரங்களை எல்லாம் பிறர் உணரும்படி வைக்காதே. உன் தோழி நீலா போலிருக்கிறதே, அங்கேயே உட்கார்ந்து பேசுங்கள்…” 

சுமதி முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டு நகர்ந்தாள். அவள் தட்டில் விண்ட இட்டிலிகள், சோமு மறுபடியும் அம்மா வைக் கூர்ந்து நோக்கினான். 

“நீ நினைப்பது சரிதான், சோமு. என்றுமில்லாத விதமாக உன் தாய் குழம்பிக் கிடக்கிறாள். ஆனால் எல்லாவற்றிற்கும் சேர்த்து இன்று நீயே ஒரு முடிவு காட்டிவிட்டாய். சோமு. 

”முடிவா…? என்னம்மா சொல்லுகிறாய் நீ…?” 

“முடிவுக்கு வராமலேயே, முடிவுகள் கிளைப்பதுண்டு சோமு ! நீ உன் தங்கையை என்றாவது ஒரு நாள் பிறனுக்கு விட்டுக் கொடுக்க வேண்டியவன் தானே…?” அம்மாவின் கண்களில் பெருகிய நீர் மனமூடி திறந்துகொண்டாற் போல் உருப்புரியா ஓர் உண்மையை அவனுக்கு உணர்த்த முயல்கிறாளோ. ஏதோ உள் பொருள் புதைந்து, அதை வார்த்தை நிறைய எடுத்துக் கூற முடியாத தயக்கம் ஏன் அவள் வார்த்தைகளில்? 

அடுப்பின் புகையெல்லாம் கவிந்து கொண்டு விட்டது. எரிந்தும், எரியாமல் கிடந்த பச்சை விறகு புகையாய்க் கப்பிச் சூழ்ந்தது. அந்தப் பின்னோட்டத்தில் கிளைக்கும் சின்னஞ் சிறு சுடர் முகமாய் அம்மாவின் முகம், ஒளி மங்கி, துயர் தேங்கி நிற்கிறது. சோமு விதிர்த்தான். இதே முகம், துயர்… நீண்டு நீண்டு நெஞ்சையழிக்கும் துயரிடையே அன்று 

“அன்று…” சட்டென சோமு நினைத்த அன்று அம்மா வின் வாயில் சொற்களாக வந்தது. அன்று என்று அந்த நாளைக் குறிக்கும் போதெல்லாம், இந்தச் சோகமான பீறிட் டோடும் வேதனை கிளர்ந்து சோமுவின் நெஞ்சை வெட்டும். இதோ இப்போதும் அம்மா அன்று” என்று விட்டு உருகி நிற்கிறாள்…மேலே தொடரவில்லை. 

புகை போன்ற தூரமான ஒரு பழைய மங்கிய காட்சியில் இதோ நிற்கும் துயரத்தோடு கைகள் கட்டிலில் கட்டப்பட்டு ஆடைகள் கிழிந்து அரைகுறையான அலங்காரத்தோடு…அடுத்த வீட்டு முக்கர்ஜி பள்ளிக்கூடத்திற்கு வந்து சோமுவை அழைத்துக்கொண்டு வந்தபோது, தந்தை பலியாகிவிட்ட செய்தியைக் கூறியதும் அவனை வீட்டினுள் அழைத்து வந்தார். அவரைக் கண்டதும் அம்மா வீறிட்டலறினாள். அவர் அம்மா வின் கட்டுக்களை அவிழ்த்தார். உடனே அவள் சோமுவைக் கட்டிக்கொண்டு ‘ஓ’வென்று கதறினாள். முக்கர்ஜி முகத்தை மூடிக்கொண்டு கேவினார். ஒரு நண்பனே தன் தோழனின் மரணத்தைப் பற்றி, அவன் மனைவியிடம் கூறும் துர்ப்பாக்கியத் திற்கு வருந்தினார் அவர். 

“அன்று… முக்கர்ஜி உன்னைப் பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வந்து, கட்டிக் கிடந்த என்னை விடுவித்து விட்டு மறுபடியும் அம்மாவின் தழதழத்த குரல் பொங்கும் உஷ்ண நீரோட்டமாகப் பீறிட்டது. “நான் தவித்துத் திணரும்போது ‘அவர்’ வருமுன் நான் என்னைக் கொன்று கொள்ள நினைத்த போது, அதை முக்கர்ஜி புரிந்து கொண்டார். அவர் தணி வான குரலில் ‘தற்கொலைக்குத் துணியாதீர்கள் அம்மணி. உங்கள் செல்வ மகன் தந்தையற்றவன்… ஆம்! என்னெதிரி லேயே அவர் தாக்கப்பட்டு மாண்டார். அப்போது உயிர் பெரிதென ஓடி வந்தேன். இப்போது இதைச் சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்போது, நானும் தாக்குண்டு இறந்திருக்க லாம் என்று தோன்றுகிறது அம்மணி!’ என்றார். என் துயரத் திலும் அவரைக் கையெடுத்துக் கும்பிட்டேன். அவர் மட்டும் உன் தந்தை இறந்த செய்தியைக் கூற வராவிட்டால்… நான் உன்னை அனாதையாக்கிச் சென்றிருப்பேனடா சோமு…’ எத்தனை நாளோ கட்டிக்காத்த துயரம் கரை மோதியது. 

சோமு விக்கித்து விட்டான். 

“நான் ‘கோ’ வென்று கதறினேன். அந்தக் கணம் சோமு… நான் உன்னைத்தவிர என் சகலத்தையும் இழந்தேன். உலகத்தில் இனி என்ன எனக்கு ஈர்ப்பு? உன்னைத் தக்கவிடத் தில் ஒப்புவித்துவிட்டு, நான்…” 

“அம்மா!” என்று வீறிட்டான் சோமு. 

“அதை நினைத்து இப்போது ஏன் அஞ்சுகிறாய் சோமு? என்றாவது ஒரு நாள் உனக்குத் தெரிய வேண்டிய உண்மை கள்தான் இவை என்று கட்டிக் காத்து வந்தேன். இன்று… அதற்குறிய நேரம் வந்துவிட்டது. அப்போது நீ சிறுவனல் லவா…? தீமை செய்த கொடுமைகளை அநுபவித்தவருள் முதன் மையானவர்கள் தாய்மார்கள். பிள்ளைகளைப் பள்ளிக்கனுப்பி விட்டு, கணவனை அலுவலுக்கனுப்பிவிட்டு, ‘சட்’டென தன்னைப் பலி கொடுத்தவர்கள். கண் சிமிட்டு முன் மூண்டெழுந்த கனலில் வெறுப்பு, குரோதம், சதை, இரத்தம் இவைகளின் ஆட்சி வியூகமிட்டு விட்டது. கொடுமைக்குக் கொடுமை, பழிக் குப் பழி என்று பாதிக்கப்பட்டவர்களும் வெகுண்டெழுந்தனர். அறிவுக்கு, அறிவில்லை, அன்புக்கு அன்பில்லை. புன்னகையே உருவாக, சத்தியமே உறுதுணையாக நின்ற காந்திஜீ எந்த இரு பெரும் சமுதாய நலத்திற்குப் பாடுபட்டாரோ அதே இருவரும் கை கலந்தார்கள். வெற்றி அல்லது வீர மரணம் என்பதல்ல அது. அழிவு அல்லது மானக்கேடு. ஆண்களைக் கொன்று குவித்து, பிள்ளைகளை வெட்டியெறிந்து, பெண்களை அவமதித்து…அன்னையர் குலத்தைப் பழித்ததால் மாறாத சாபம் பெற்ற கரங்கள்… வீடெரித்து, மங்கையர் நெஞ்செரித்து, மாண்ட உடலெரித்து மாளாத சிசுக்கள் பெற்ற தாய்மார் மட்டும் எஞ்சிய மக்களோடு நெஞ்சு துடித்து நிற்க…இனி சாவா, வாழ்வா? ஏன் இந்தக் கேள்வி ? மானமழியின் தானழியும் பாரதப் பெண்ணல்லவா? பின் தயக்கம் ஏன்?” 

”சோமு! உனக்குத் தெரியாது. அன்று இந்த நாடு ஒரே ஒரு மனித பலத்தில், சத்தியத்தின் திருக்கரத்தில், சாத்வீகத் தின் இனிப்பில், தன்னை மறந்து கட்டுப்பட்டிருந்தது. அந்த எளிய புன்னகைக்கு நாற்பது கோடி மக்களும் கட்டுப்பட்டுக் கிடந்தபோது, நான் ஒரு பொருட்டா? ஒரு முழ வேட்டி கட்டிய :ஒருவரிடத்தில் அடி பணிந்த பாரதம் இது. அது சத்திய உபாசகம்! அதையும் மீறி மூண்ட கனலில் ஈ, எறும்பு கடித்த நினைவாக, அதை ஒரு துர்க்கனவாக எண்ணி அன்னை யாக வாழுங்கள், அன்பு மனைவியாக வாழுங்கள், என்று அறிக்கை விடுத்தார். ஆங்காங்கே முளைத்த சின்னஞ்சிறு கலகங் களுக்காகக் காந்தி அண்ணல் அந்தந்தப் பிராந்தியத்திற்கும் பாதயாத்திரை வந்தார். அவர் புன்னகைக்கும், பொன்மொழிக் கும் கட்டுப்பட்டது கலகம். அது நின்றுவிட்டது. தீமை புரிந்த கரங்களெல்லாம், அவர் கால் தூசி ஒற்றி நின்றன. அன்பும், தருமமும் அழிந்த நெருப்பில் பலியான என் போன்ற வர்களும், அவரைக் கண்டு கதறித் துயர் தீர்ந்தோம். தோளுக் கும் நேஞ்சத் துணிவுக்கும் இடமற்ற மறப்போரில், மாதர்கட் கும், மழலைகட்கும் முதல் சுடுகாடாகிய அதர்ம வெறியில் சிக்கிவிட்டு மீண்டபோது மனப்பாரத்தை எல்லாம் கழட்டி அவர் பாதத்தில் வைத்தோம். ஏசுவைத் தொட்ட குஷ்ட ரோகிகள் நோய் தீர்ந்தாற்போல் அவர் பாததூளிகளைத் தொட்டு ஒற்றிக்கொண்டதின் மூலம் மாசு களைந்து புனிதமானது போல் தோன்றியது.” 

“…ஆனால்…” அம்மாவின் குரல் இப்போது சன்னமாக இழைந்து வந்தது. மீட்புக் குழுவில் சேர்ந்து, உன்னோடு தமிழ் நாட்டுக்கு வந்த பின்தான் உணர்ந்தேன். எந்த

(மிச்ச கதை உங்களிடம் இருந்தால், தயவு செய்து எங்களது முகவரிக்கு அனுப்பவும்)

– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *