வண்டி எருது!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 5, 2024
பார்வையிட்டோர்: 4,247 
 
 

பெரிய அளவில் தண்ணீர் நிற்கும் பகுதியை ஏரி என்கிறோம். குளம் என்பது தான் சரி. குளத்து தண்ணீரை பாதுகாக்க சுற்றிலும் மண்ணால் போடப்படுவதற்கு பெயர் தான் ஏரி. கோழி கூவுது என்கிறோம். சேவல் தான் கூவுகிறது. மாட்டு வண்டி என்கிறோம். காளைகளைத்தான் வண்டியில் பூட்டி ஓட்டுவார்கள். காளைகளுக்கு வயது கூடினால் எருது எனக்கூறுவார்கள். உடலில் வலிமையுள்ள, பருமனான நடுவயது கொண்டிருக்கும் எருதுகளால் தான் அதிக பாரமுள்ள வண்டிகளை இழுக்க முடியும். 

சுப்பையனுக்கு குடும்ப செலவின் பாரம் மனதை அழுத்த, தனது வண்டியில் பாரத்தை அதிகமாக்கினார். அன்னூரிலிருந்து கோயம்புத்தூருக்கு முப்பது கிலோமீட்டர் தூரம் மாட்டு வண்டிகளில் கிராமங்களில் விளையும் கொண்டைக்கடலை, வேர்கடலை பருப்புகளை சாக்குப்பைகளில், ஒரு சாக்கு நூறு கிலோ வரை நிரப்பி, மழை வந்தால் மூட்டைகள் நனைந்து விடாமல் பாதுகாக்கும் கூண்டு வண்டியில் பதினைந்து முதல் இருபது மூட்டைகள் வரை ஏற்றி, அரிக்கேன் லைட்டை மண்ணெண்ணெயை நிரப்பி பற்ற வைத்து வண்டிக்கு அடிப்பகுதியில் மாட்டி, எருதுகளை வண்டி நுகங்களில் கன்னிக்கயிறால் பூட்டி, இரவு நேரத்தில் ‘ஹை ஹை’ என விரட்டி ஓட்டுவார். 

இரவு தொடங்கியவுடன் புறப்பட்டால் விடியும் தருணம் கோவை ராஜ வீதி மார்கெட் சென்று சேர்ந்து விடும். ஆனால் இன்று சென்று சேருமா….? என்பதில் அவருக்கு சந்தேகமும், கவலையும் அதிகரித்தது. காரணம், இரட்டை மாட்டு வண்டியில் இடது பக்கம் பூட்டி ஓட்டும் எருதின் நுகம் வைக்குமிடத்தில் சிறிதாக ஏற்பட்டிருந்த புண் தற்போது பெரிதாகி ஈக்கள் மொய்க்க, கொம்பினை ஆட்டிக்கொண்டே போட்ட தீவனத்தை தின்னாமல் எருது நிற்பதுதான்.

நுகம் வெகு நேரம் உரசுவதாலும், பாரம் அதிகமானால் வண்டியை எருதுகள் முண்டி இழுக்கும் போது அழுத்தம் அதிகரிப்பதாலும் கழுத்தின் தோலின் மேல் பகுதி காயமாவதுண்டு. அக்காயத்தில் வடியும் ரத்த வாடையைக்கண்டு காகங்கள் காயங்களை கொத்தி பெரிய காயமாக்கி விடுவதுண்டு. அவ்வாறு காகங்கள் காயத்தை பெரிதாக்கியதில் ஏற்பட்ட வலி தாங்க முடியாமலும், ஈக்களின் தொல்லை தாங்க முடியாமலும் தினமும் நான்கு கத்தை சோளத்தட்டும், ஒரு தாளி தவிடு, புண்ணாக்கு தண்ணீரும் குடிக்கும் எருது எதற்கும் வாயைத்திறக்காதது சுப்பையனுக்கு விசனம் அதிகரிக்க காரணமாகி விட்டது.

வேறு வழியே இல்லாமல் எருதுகளைப்பூட்டி ஓட்ட ஆரம்பித்தார். காயம்பட்ட எருது வண்டியை இழுக்க மறுத்தது. புதிதாக வாங்கியிருந்த சாட்டையில் எருதின் முதுகில் ஓங்கி அடித்தார். சாட்டைக்கயிறு நன்றாக உடலில் பதிந்து சிவந்து போனதும் மெதுவாக எட்டி வைக்க ஆரம்பித்தது.

மற்ற வண்டிகளெல்லாம் தமது வண்டியை முந்திச்செல்வதைப்பார்க்கையில் எருதுகளை இன்னும் விரட்டி அடித்து ஓட்டலாம் என கை ஓங்கியவர் அப்படியே கொரடா குச்சியை கூண்டின் மேல் சொருகி விட்டு எருது வண்டி இழுக்கப்படும் சிரமம் கண்டு கதறி அழுதார்.

‘கடவுளே…. எதுக்கு இப்படி சோதிக்கிறே…? வாயில்லா ஜீவன என்னைய வெச்சு வதைக்கிறே…? எருதுகளுக்கு தீவனம், தவுடு புண்ணாக்கு வாங்க பணம், ஊட்ல அரிசி, பருப்பு, துணி மணி, முய்யி, மொற, ஆஸ்பத்திரி செலவு இதுக்கெல்லாம் பணம் வேணும். இந்த வண்டி ஓடுலேண்ணா  செலவுக்கு ஆரப்போயிக்கேட்பேன்….? பாட்டன் வயித்தக்கட்டி, வாயக்கட்டி மிச்சம் பண்ணி வெச்ச ரெண்டு ஏக்கரா காடு செரியா மழ பேஞ்சு வெளையாமப்போனதுனால தானே அத ஐநூறுக்கு வித்து எருது வண்டி வாங்குனேன். இந்தப்பொழப்பும் இப்ப நாரப்பொழப்பாப்போனா, இப்படி கால விரிச்சு நின்னா நானெப்புடிப்பொழைப்பேன்..‌.?’ என தனக்குத்தானே சொல்லி தலையில் அடித்துக்கொண்டார்.

மூட்டைகளுக்கு சொந்தக்காரரான வியாபாரி சைக்கிளில் பின் தொடர்ந்து வந்தவர் ‘என்ன சுப்பியா… உன்ன நம்பி மொத்தக்கொள்மொதலையும் ஏத்தி அனுப்புனா நேரத்துக்கு போயி சேரமாட்ட போலிருக்குதே….? கொஞ்ச அடிச்சு ஓட்டு பார்க்கலாம்’ எனக்கூறிச்சென்றது சுப்பையனுக்கு மேலும் கவலையை அதிகரிக்கச்செய்தது.

வாரத்தில் ஒரு நாள் சோமாரம் எனப்படும் திங்கட்கிழமை மட்டும் முட்டாய் பருப்பு எனப்படும் வறுக்க பயன்படும் பருப்பு கூடுதல் விலை போகும். அதிகாலை நான்கு மணி முதல் காலை எட்டு மணிக்குள் பெரிய வெளியூர் வியாபாரிகள் பருப்புகளை வாங்கி விடுவர். அதன் பின் உள்ளூரின் சிறிய வியாபாரிகள் விலையை குறைத்தே கேட்பர். இதற்காகவே போட்டி போட்டுக்கொண்டு மாட்டு வண்டிகள் ஒன்றை விட மற்றொன்று வேகமாகச்செல்ல முயலும். முன்பு செல்லும் வண்டியில் உள்ள பொருள் கூடுதல் விலைக்கு விற்றால் வண்டிக்காரருக்கு கூடுதல் வாடகையை வியாபாரி கொடுப்பார். அந்த வகையில் இன்று தமது வண்டி கடைசியாகச்செல்லுமென்பதால் வாடகையும் குறையும். அடுத்த முறை இன்று மூட்டை கொடுத்த வியாபாரி வேறு வண்டிக்கு கொடுத்து விடுவார் என்பது மற்றுமொரு கவலையாக இருந்தது.

நிலைமை இப்படியிருக்கு வலது பக்கம் செல்லும் எருதின் கால் லாடம் கழண்டு மொண்ட ஆரம்பித்தது. “என்ன சுப்பியா….? இத்தன வாடகை வாங்கறியே ….எல்லாருக்கும் ஒரு நடைக்கு தொன்னூறு தான். உனக்கு மட்டும் பத்து சேத்தி நூறாக்குடுக்கறனில்ல. ஆசாரியக்கூப்பிட்டு அஞ்சு ரூபா கொடுத்து உன்றனால லாடங்கட்ட முடியலையாக்கும்….?’ என வியாபாரி கேட்க சுப்பையனுக்கு சுர்ரென கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

“வண்டி எருது வாங்க வட்டிக்கார சின்னப்பங்கிட்ட காடு வித்த பணம் பத்தாம கடன வாங்கினதுக்கு வட்டி, மாட்டுக்கு தவுடு புண்ணாக்கு, தீவனம் வாங்கறதுக்கே நீ குடுக்கறது செரியாப்போகுதுன்னு தெரியுமா உனக்கு…? நீ வேவாரத்துல வார லாபத்த எடுத்து இடுப்பு பைல சொருகீட்டு சைக்கிள்ல சல்லுனு போயர்றே…. மாடுக கூட கஷ்டப்பட்டுட்டு என்ற பேரனுக்கு தேங்காப்பன்னும், பிஸ்கட்டும் கூட வாங்க முடியாமப்போற எனக்குத்தா மன வேதன தெரியும் பாத்துக்கோ” சிடு சிடுத்தார் சுப்பையன். 

“சேரி, சேரி கோபப்பட்டுக்காத… ஒன்னொன்னையும் பாத்ததுனால சொல்லிப்போடறே… வண்டி சக்கரத்துல பட்டா ரொம்பம்மே தேஞ்சு போயி எப்பக்கழண்டுழுகும்னு தெரியாம இருக்குது. அடுத்த தடவை அதையும் மாத்தினீனாத்தா நானும் மூட்டை குடுப்பேன். இல்லீன்னா கெழக்கால வழுவு சங்கரப்பம் வண்டிக்கு கொடுத்துப் போடுவேன். சொந்தம்னு பாத்தா நானும் சோறுங்கோணுமில்ல’ எனக்கூறி சைக்கிளை கோவையை நோக்கி அழுத்தினார் வியாபாரி மாரப்பன்.

கணபதி ரயில் பாதையை கடப்பதற்கு முன் கழுத்தில் காயம்பட்ட எருது நடக்க முடியாமல் படுத்துக்கொண்டது. ரயில் பாதையில் படுத்திருந்தால் வண்டி, எருதுகள் அடிபடுவதோடு வண்டியில் ஏற்றியிருந்த மூட்டைகளும் சேதமாகியிருக்கும். அரிக்கேன் லைட்டும் மண்ணெண்ணெய் தீர்ந்து அணைந்து விட்டது. எருது படுத்த இடத்தில் இருள் சூழ்ந்திருந்தது. 

சுப்பையன் கூண்டில் சொருகியிருந்த சாட்டை எனும் கொரடாவை எடுத்துக்கொண்டு வண்டியை விட்டு கீழே இறங்கி எருதை எழ வைக்க அடித்தார்…. அடித்தார்…. கை வலிக்க அடித்துக்கொண்டே  இருந்தார். இருந்தும் எருது எழுந்த பாடில்லை. 

அப்போது இன்னும் வண்டி வந்து சேரவில்லையென திரும்பி வந்த வியாபாரி மாரப்பன் தனது சைக்கிள் லைட்டை எரியச்செய்ய, சைக்கிளை ஸ்டேண்ட் போட்டு நிறுத்தி பின் சக்கரத்தை சுழலச்செய்து, டைனமோவை இயங்கச்செய்ய பெடலைச்சுற்றிய போது ஏற்பட்ட வெளிச்சத்தில் பார்த்த‌போது தான் சுப்பையனுக்குத்தெரிந்தது ‘இவ்வளவு நேரம் பாவம் படுத்ததும் இறந்து போன எருதைத்தான் அடித்துக் கொண்டிருந்திருக்கிருக்கிறோம்’ என்று. 

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *