சொல்ல முடியாத கதை…!
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 5, 2024
பார்வையிட்டோர்: 2,058
(2003ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
அத்தியாயம்-4
மூன்று மாதங்களுக்கு மேல் ராணியைப் பற்றி பேச்சே இல்லை.
சிவபுண்ணியம், சேகர், இருவரும் ஆபிசர் டிரெய்னிங் என்று எல்லாரும் பெங்களுர் சென்றுவிட்டார்கள்.
அடுத்து…. அலுவலகம் வந்து வழக்கம் போல் டீ குடிக்க வரும்போது ராணி இல்லை.
‘‘ஏன் தினேஷ் ! ராணியைச் சொந்தக்காரங்க கூட்டிப் போயிட்டாங்களா ?‘‘ – சிவா கேட்டான்.
‘‘தெரியலியே !‘‘
‘‘பைத்தியத்தையாவது யாராவது திரும்ப புடிச்சிக்கிட்டுப் போறதாவது ?‘‘ கணேஷ{க்கு நம்பிக்கையில்லை.
‘‘இந்தப் பொண்ணு வீட்டைவிட்டு யாருக்கும் தெரியாம கௌம்பி இருப்பா. சம்பந்தப்பட்பவங்க கண்டுபுடிச்சி அழைச்சுப் போயிருப்பாங்க.‘‘
‘‘நல்லது நடந்தா சரி‘‘ – சிவபுண்ணியம் திருப்தியாய் தலையாட்டினான்.
இந்த திருப்தியையும் மாஸ்டர் கெடுத்தார்.
கணேஷ் டீக்கு ஆர்டர் கொடுத்து விட்டு ‘‘ மாஸ்டர் ! ராணி எங்கே?‘‘ கேட்டான்.
‘‘அது டவுன்ல சுத்துது.‘‘ சொல்லி டீயை ஆற்றி வைத்தார்.
‘‘நீங்க கண்ணால பார்த்தீங்களா ?‘- சிவா ஆர்வமாக கேட்டான்.
‘‘பார்த்தேன்..‘‘
‘‘அப்புடியேத்தானிருக்காளா ?‘‘
‘‘யார் மாத்த முடியும் ?‘‘
டீ குடித்துவிட்டுச் சென்றார்கள்.
ஆனால் அடுத்த நாளே ராணி பழைய இடத்திற்கு வந்துவிட்டாள். பழைய வாழ்க்கையைத் தொடர்ந்துவிட்டாள். மறு நாள்.
சேகர். ‘‘ராணிகிட்ட எவனோ மண்டை உடைபட போறான். இல்லே சாவப்போறான்.‘‘ என்று அலுவலகத்தில் பேச்சைத் தொடங்கினான்.
‘‘ஏன் என்ன விசயம் ?‘‘- எல்லாரும் அவனைச் சுற்றி ஆவலாக அமர்ந்தார்கள்.
‘‘ராத்திரி நான் ரெண்டாவது ஆட்டம் சினிமா சினிமாவிட்டு வரும்போது பெரிய கூத்து.‘‘
‘‘என்ன ?‘‘
‘‘நம்ம வங்கிகிட்ட ரோந்து போலீஸ் ஒருத்தனைப் போட்டு பின்னினாங்க என்ன சார்ன்னேன். இவன் அங்கே படுத்துக் கிடந்த பையித்திடம் போய் வாலாட்டிருக்கான். நாங்க போகலைன்னா செத்திருப்பான்னு சொல்லி போட்டார்.‘‘
‘‘எ…….ப்படி சார்??‘‘
‘‘அது பள்ளிக்கூடத்து வரண்டாவுல வழக்கம் போல் படுத்திருக்கு. குடிச்சிட்டு போற இந்த நாய் சும்மா இருக்காம. அதுகிட்ட போய் மெல்ல படுத்து திடீர்ன்னு முரட்டுத்தனமா அமுக்கி இருக்கான். அவ திமிறி இவனை ஒரே புடியாய் உயிர் நாடியைப் புடிச்சுட்டா. பையன் மூச்சுத் திணறி சாவறதுக்குள்ள நாங்க போய் நாலு போடு போட்டு இழுத்து வந்துட்டோம்.‘‘
‘‘ராணியையா அடிச்சீங்க ?‘‘
‘‘பாவம் அதை எதுக்கு அடிக்கனும். இவனைப் போட்டோம் அவ விட்டுட்டா.‘‘ முடித்தான்.
‘‘ஆள் யாரு ?‘‘- தினேஷ் கேட்டான்.
‘‘எவனோ டவுன் பொறுக்கி. அங்க பிளாட்பாரத்துல படுத்திருக்கிற பிச்சைக்காரி, அனாதை, புறம்போக்குகளிடம் இப்படி நடக்கிறது வழக்கம் போல. இவளிடமும் வந்து வாலாட்டி இருக்கான். மாட்டிக்கிட்டான். ! எல்லாம் போலீஸ்காரர்தான் விபரம் சொன்னார்.‘‘
‘‘என்ன அநியாயம் ? ‘‘- சிவபுண்ணியம் வாய்விட்டு சொல்லி தன் கொதிப்பை வெளிப்படுத்தினான்.
‘‘அநியாயம்தான். தண்ணி அடிச்சா பசங்களுக்குத் தலைகால் தெரியறதில்லே போலிருக்கு!‘‘- தினேஷூக்கும் நெஞ்சு பொறுக்கவில்லை.
‘‘அப்படியெல்லாம் ஒன்னுமில்லே. இப்படி இலவசமா பண்ணனும்ன்னே சில பொறுக்கிங்க போதை அடிச்சிட்டு சுத்துது,‘‘ – கணேஷ் வெறுப்பைக் கொட்டினான்.
மாலை எல்லோரும் டீக்கடைக்கு வரும்போது ராணி ஒதியன் மரத்தடியில் ரொம்ப சோர்ந்து படுத்திருந்தாள். உடல் இளைத்துப் போயிருந்தது.
‘‘மாஸ்டர்! ராணிக்கென்ன ? ‘‘சிவா கேட்டான்.
‘‘என்னமோ தெரியலை அடிக்கடி வாந்தி மயக்கமா இருக்கா‘‘
‘‘என்ன மாஸ்டர் சொல்றீங்க ?‘‘ – எல்லோருமே திடுக்கிட்டார்கள்.
‘‘கழுதை டவுன்ல போய் என்னத்தை மேய்ஞ்சுதோ தெரியலை. ஒடம்பக்கு ஒத்துக்கலை. இரக்கப்பட்டு நாம கவனிக்கிறா மாதிரி அங்கே எவன் கவனிப்பான். எச்சலைப் பொறுக்கி இருப்பா. வயித்துல கோளாறு. ராத்திரி வேற அநியாயம் சுருண்டுட்டா. மொரட்டுப் பய. சார்கூட அவன் போலீஸ்ல அடிபட்டதைப் பார்த்தாரே!‘‘ – சேகரைக் காட்டினான்.
அவனுக்குத் தர்மசங்கடமாய் இருந்தது.
‘‘என்ன சார் என்னைப் பார்க்கலை ?‘‘ மாஸ்டர் அவனையேக் கேட்டார்.
‘‘நாலைஞ்சு பேர்ல நானும் சர்வரும் இருந்தோம்.‘‘ அவனை வேறு துணைக்கு அழைத்தார்..
‘‘இருட்டுல நான் கவனிக்கலை.‘‘- சேகர் சமாளித்து வழிந்தான்.
‘என்ன ஜென்மங்கள் ?‘- சிவபுண்ணியத்திற்கு வெறுப்பாய் இருந்தது.
அலுவலகம் விட்டு வீட்டிற்குச் சென்ற போது சௌம்மியா ‘‘அந்த பையித்தியத்தை யாரோ கெடுத்திடாங்களாம்ல்லே…?!‘‘- இடியை இறக்கினாள். ‘‘யார் சொன்னா‘‘ சிவபுண்ணியம் திடுக்கிடடான்.
‘‘ஏரியா நர்ஸ் சொல்லிச்சு.‘‘
‘‘யார் வெள்ளை புடவை கட்டிக்கிட்டு தெருத்தெருவா வீடு வீடா போறாங்களே அவுங்களா ?‘‘
‘‘அவுங்களேதான். மாசமா இருக்காளாம் !‘‘
‘இது என்ன புது கதை ?‘- இவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
‘‘உங்களுக்கு விசயம் தெரியாதா…?!‘‘
‘‘ராத்திரி ஒருத்தன் அவகிட்ட கலாட்டா பண்ணி மாட்டிக்கிட்டான். நீ சொல்றது அதுன்னு நெனைச்சேன்.‘‘
‘‘ராத்திரி வேற விசயம் நடந்திருக்கா…? பாவிங்க எந்த பொண்ணுங்களையும் விட்டுவைக்க மாட்டானுங்க போலிருக்கே ?!‘‘
‘‘ஒன்னும் நடக்கலை. அவ கத்த போலீஸ் புடிச்சுக்கிட்டு போயிடுச்சு.‘‘ விபரத்தைச் சொன்னான்.
‘‘ஆனா இது நெசம்.!‘‘ – சௌம்மியா உறுதியாக சொன்னாள்.
‘‘அந்த நர்ஸ் கையைப் புடிச்சிப் பார்த்தாளாமா?‘‘
‘‘பார்க்கலை. எத்தனை கேஸ் பார்த்திருப்பாங்க. ஆள் வாந்தி மயக்கத்தை வைச்சே கண்டு புடிச்சாங்களாம்.‘‘
‘ராணி வாந்தி மயக்கம் இதனால்தானா ? யார் செய்திருப்பார்கள். எப்படி ?‘- சிவபுண்ணியத்திற்குள் யோசனை ஓடியது.
‘எப்படி முடியும் ?’ அதையேக் குடைந்தது,
பைத்தியங்கள் அதிகம் தூங்காது, தூக்கம் வராது. அசந்திருக்கும் நேரம் பார்த்து நாலைந்து ஆட்களாக சூழ்ந்து அமுக்கி வாயில் துணியை வைத்து அடைத்து எங்கேயாவது கொண்டு சென்று…….முடியும்.!. இல்லையென்றால் அவள் தின்னும் உணவில் மயக்க மருந்து, மாத்திரை கலந்து.. முடித்திருப்பார்கள். உஷாராக இருப்பவள். நேற்றுகூட ஒருவன் மாட்டினான். ஒருவேளை முன்னைய தாக்கம் இந்த உஷாரா ? ஒருவனா இருவனா எத்தனை பேர்.?
எங்கு கெட்டாள் ? இங்குள்ளவர்கள் இந்த வேலையைச் செய்திருப்பார்களா. யார் யார் ?- மனதுக்குள் லிஸ்ட் போட்டான்.
இரண்டு பள்ளிக்கூடத்திலும் தடித்தடியாய் இரண்டு வாட்ச் மேன்கள் இருக்கிறார்கள்.
ஒருத்தனுக்கு நாற்பத்தைந்து வயது. மனைவி இறந்து போய் பத்து வருடங்களாக ஒரு பிள்ளையுடன் கைச்சமையல். பள்ளிக்கூடத்தில் பகுதி நேர பணிப்பெண்ணை வைத்துக்கொண்டு காலம் தள்ளுகிறான்.
இன்னொருத்தன் இப்போதுதான் வேலைக்கு வந்திருக்கிறான.; இளம் வயது 27 திருமணம் முடிக்கவில்லை. எவளோ ஒரு ஆசிரியையை கண்ணடித்ததாய்க் குற்றச்சாட்டு.
‘டீக்கடை மாஸ்டர்…?‘- மனைவி மக்கள் எங்கோ தொலை தூரத்தில் இருப்பதாக கேள்வி. ஆறு மாதத்திற்கொரு முறை நாலைந்து நாட்கள் தங்கி வருவதோடு சரி. அப்புறமெல்லாம் கடையே குடித்தனம், காவல்.
‘சர்வர்?‘- அவன் சின்னப்பையன். வயசு கோளாறு கடைக்கு வரும் பெண்களை அடிக்ண்ணால் பார்ப்பதுண்டு. கெட்ட சவகாசம் தெரியவில்லை.
பங்க் கடைக்காரன் ஒரு மாதிரி. ஒரு சின்னவீடு இருந்தாலும் படிகிற மாதிரி பெண்கள் வந்தால் மட்டுமே பல்லிளிப்பான்.
இவர்களில் யார் ராணியைக் கற்பழித்திருப்பார்கள்?!
பள்ளிக்கூட வாட்ச்மேன்கள் இருவரும் ஒன்றாக கலந்து பேசி தூக்கிப்போய் பள்ளிக்கூட சந்திலோ. அறையிலோ முடிப்பதென்பது எவ்வளவு தூரம் சாத்தியம்.?
சர்வர், டீ மாஸ்டர் கூட தனித்து செய்ய சாத்தியம். சர்வர் இட்லிக்குள் மயக்க மாத்திரை தூக்க மாத்திரை வைத்துக்கொடுத்து ஆளைச் சாய்க்கலாம்.
மாஸ்டர் யாருக்கும் தெரியாமல் கொடுக்கும் டீ பாலில் சமயம் பார்த்து கரைத்துக் கொடுத்து காரியம் சாதிக்கலாம். யார் குற்றவாளி…?!- சிவபுண்ணியத்திற்குத் தலை வெடித்துவிடும் போலிருந்தது.
மறு நாள்.
சிவபுண்ணியம் விசயத்தை அலுவலகத்தில் வெளியிட்டபோது அனைவருக்குமே அதிர்ச்சி.
‘‘இதைக் கண்டுபிடிச்சி ஆகனும் ! ‘‘- கணேஷ் ஆவேசப்பட்டான்.
‘‘கண்டுபிடிச்சி ?‘‘ – தினேஷ் கேள்வி கேட்டான்.
‘‘போலீஸ்ல ஒப்படைக்கனும்.‘‘
‘‘அவார்டு தருவாங்கன்னு நெனைக்கிறீயா?‘‘
‘‘குற்றவாளியைச் சும்மா விட்டுறதா?‘‘
‘‘போலீசெல்லாம் இப்போ அக்கறையா வேலை செய்யிறதில்லே. ரோட்டுல விபத்து அடிபட்டுக் கெடந்தாலும் யாராவது கேஸ் வந்து குடுத்தா பார்த்துக்கலாம்ன்னு திரும்பிக்கிறாங்க. சைக்கிள், இருசக்கர வாகனங்கள் திருட்டுன்னாப் புகார் குடுத்துட்டுப் போங்கன்னு தாளோடு முடிச்சிக்கிறாங்க வீட்டுல திருட்டுன்னா வந்து பார்க்கிறதோட சரி. அடிச்சான் புடிச்சான் கேஸ்ன்னா கெடைச்சவனைப் புடிச்சுப்போய் ரெண்டு பக்கமும் காசு வாங்கிறதோட சரி. இப்போ எல்லாம் எம்.எல்.ஏ அமைச்சர் சொன்னாக்கூட ஆடுறது கெடையாது. முதலமைச்சர் சொல்லனும். போலீஸ்காரங்களெல்லாம் சரியான நேரத்துக்கு சீருடையில வந்து காவல் நிலையத்துல உட்கார்ந்து கள்ளச்சாராயம் அது இதுன்னு வர்ற மாமூலை வாங்கிப் போறதோட சரி.‘‘ – சேகர் நிறுத்தினான்.
‘‘அப்போ இந்த விசயத்துல அக்கறை காட்ட வேண்டாம்ங்குறீயா ? ‘‘- சிவபுண்ணியம் பரிதாபமாக கேட்டான்.
‘‘அக்கறை காட்டி புண்ணியம்?‘‘ – சேகர் எதிர் கேள்வி கேட்டான்.
‘‘பாவம் ஒரு உயிர் இல்ல ரெண்டு..!! ‘‘ – மெல்ல சொல்ல எல்லோருமே யோசித்தார்கள்.
‘‘ஆளைப் புடிச்சு பாதிக்கப்பட்டவ அடையாளம் காட்டினாக்கூட பைத்தியம்ன்னு கோர்ட்டே ஒதுக்கும் அப்புறம் என்ன போலீஸ் சுண்டைக்காய்.‘‘
‘‘மரபணு சோதனை அது இதுன்னு….. ‘‘ சிவபுண்ணியம் நம்பிக்கையை இழக்காமல் இழுத்தான்.
‘‘எல்லாம் செய்யலாம் சரி. செலவு…? மெனக்கெடு ? குற்றவாளிக்கும் நமக்கும்தான் வ Pண் விரோதம் வரும்.‘‘
‘‘இது யோசிக்கவேண்டிய விசயம்தான். ‘‘ – தினேஷ் நியாயத்தைச் சொன்னான்.
‘‘வேணும்ன்னா இன்னொன்னு செய்யலாம். குற்றவாளி யார்ன்னு தெரிய விசாரிக்கலாம். அதையும் நாசூக்காத்தான் விசாரிக்கனும்.‘‘
இது எல்லாருக்கும் ஏற்புடையதாக இருந்தது.
‘‘கொஞ்சம் துணிஞ்சு அந்த பாவியைப் புடிச்சு ஏன்டா இப்புடி செய்ஞ்சேன்னு சட்டையைப் பிடிக்கலாம். சபிக்கலாம். அதைத்தவிர வேற ஒன்னும் செய்யமுடியாது.‘‘
‘‘விசாரிக்கலாம். சாயந்தரம் தொடங்கலாம்‘‘- சிவா சொல்ல எல்லோரும் தலையசைத்தார்கள். திட்டம் போட்டார்கள்.
சிவபுண்ணியம், கணேஷ், தினேஷ், சேகா,; சிவா அனைவரும் இரவு ஏழு மணிக்கு அந்த வேலையைத் தொடங்கினார்கள். எல்லோரும் வாக்கிங் செல்வதுபோல் சாதாரண லுங்கி, சட்டையில் பள்ளிக்கூடம் சென்றார்கள்.
முதல் பள்ளிக்கூடத்தில் இரவு காவலாளியான அந்த வாலிபன் இருந்தான். நல்ல நிலவொளி.
‘‘உட்காரலாமா…?‘‘ கேட்டு அமர்ந்தார்கள்.
அவன் சந்தேகப்படாமலிருக்க…‘‘நிலா காய வந்தோம்.’’ சிவா சொன்னான்.
அவன் ஆட்சேபணை எதுவும் சொல்லவில்லை.
‘‘அந்த பையித்தியம் பாவமில்லே?‘‘- சேகர் மெல்ல அவனிடம் பேச்சுக் கொடுத்தான்.
‘‘ஆமாம் சார் ! ‘‘- அவனும் வருத்தப்பட்டான்.
‘‘அவள் கர்ப்பமா இருக்காளாமே ?!‘‘- தினேஷ் விசயம் தெரியாதவன் போல் இடையில் புகுந்தான்.
‘‘ஆமாம் சார் டீச்சருங்க குசுகுசுன்னு பேசிக்கிட்டாங்க‘‘
‘‘யாராய் இருக்கும்.?‘‘
‘‘தெரியலை சார்.‘‘
‘‘நீ நைட் வாட்ச்மேன். ராத்திரியெல்லாம் தூங்காம காவல் காக்கற உத்தியோகம் . உனக்குத் தெரியலைங்குறது ஆச்சரியம்.‘‘ – சிவபுண்ணியம் அவன் வாயைப் பிடுங்கினான்.
‘‘எங்க சார்! எனக்கு பத்து மணிவரைக்கும்தான் முழிப்பு. அப்புறம் தூங்கிடுவேன்.’’ ஏதார்த்தமாகச் சொன்னான்.
‘‘அப்போ காவல்?!‘‘- சிவா ஆளை ஆச்சரியமாகப் பார்த்தான்.
‘‘இவ்வளவு பெரிய கட்டிடம், இடத்தை நான் மட்டும் ஒருத்தனா எப்படி காவல் காக்க முடியும்..? என்கிட்ட கத்தி கபடா இருந்தாகூட நாலு பேர் வந்தா என் ஒருத்தனால சமாளிக்க முடியாது. இங்கே எனக்கு ஏதாவது நடந்தால் கேட்க நாதி கிடையாது. அசம்பாவிதம்ன்னா தகவல் கொடுக்கதான் நான்.’’
சொன்னான்.
‘‘அதைவிடு. நீ முழிச்சுக்கிட்டு இருக்கிற சமயத்துல அவகிட்ட எவனாவது வாலாட்டம்?‘‘
‘‘அப்படி ஒன்னும் தெரியலை சார்.‘‘
‘‘எதிர் பள்ளிக்கூடத்து வாட்ச் மேன் எப்புடி?‘‘
புரியாமல் பார்த்தான்.
‘‘பொண்ணுங்க விசயத்துல?‘‘
‘‘யோக்கியம் சார்.‘‘
‘‘அவர் யாரோ ஒருத்திய வைச்சிருக்கார்ன்னு……………‘‘
‘‘அவளோட சரி சார்.‘‘
‘இவனிடம் விசாரணை வீண்!’ உணர்ந்த கணேஷ் ‘போவலாம்!‘ – எழுந்தான்.
மற்றவர்களும் அவனைத் தொடர்ந்து வெளியே வந்தார்கள்.
‘‘இவனைப் பத்தி அந்த ஆள்கிட்ட விசாரிச்சாதான் சரியான தகவல் கெடைக்கும்.‘‘ – சொல்லி கணேஷ் பிரதான சாலையில் செல்வது மாதிரி போக்குக்காட்டி எதிர் பள்ளிக்கூடத்தை நோக்கி நடந்தான்.
அத்தியாயம்-5
இவர்கள் சென்றபோது அவர் பீடி பிடித்துக் கொண்டிருந்தார். ஆட்கள் கூட்டமாய் வருவதைப் பார்த்து மிரண்டார்.
பீடியைச் சடக்கென்று மறைத்து, அணைத்து…
‘‘யாருங்க?‘‘- கேட்டார்.
‘‘நாங்க இந்த ஊர் வங்கி ஊழியர்கள் ஐயா..!” சொல்லி – தினேஷ் ஆசுவாசமாக அவர் அருகில் அமர்ந்தான்.
‘‘என்ன விசயமா வந்தீங்க?‘‘- அவருக்குள் பீடியை அணைத்த வருத்தம் துல்லியமாக தெரிந்தது.
‘‘சும்மா பொழுது போகலைன்னு புறப்பட்டோம். நீங்க தனியே உட்கார்ந்ததைப் பார்த்து இங்கே வந்தோம்.‘‘
‘‘பையன் என்ன சார் படிக்கிறான்.’’ ஆள் தோரணையை வைத்து குத்துமதிப்பாகக் கேட்டான்.
‘‘எங்கே படிக்கிறான். சித்தாள் வேலைக்குப் போறான்.‘‘
‘‘ஏன் படிக்கலையா?‘‘
‘‘படிப்பு ஏறலை.‘‘
‘‘ஐயா..! எதிர் பள்ளிக்கூடத்துல இருக்கிற வாட்ச்மேன் பேரென்ன?‘‘
‘‘ஏன் ஏதாவது தப்பு தண்டா பண்ணிட்டானா?‘‘
‘‘அப்படிதான் வைச்சுக்கோங்களேன். அந்த பையித்தியம் புள்ளதாச்சியா இருக்கிறதுக்கு அவன்தான் காரணம்ன்னு சொல்றாங்க.‘‘
‘‘என்ன ராணி புள்ளதாச்சியா இருக்காளா ?!‘‘- திடுக்கிட்டுக் கேட்டார்.
‘‘அப்பத்தான் பேசிக்கிறாங்க உங்களுக்குத் தெரியதா?‘‘
‘‘நமக்கு அதெல்லாம் கண்டுக்க நேரமே கெடையாது.‘‘
‘‘அவ்வளவு வேலையா?‘‘
‘‘வெளி சேதியெல்லாம் நான் காதுல வாங்கிக்கிறது இல்லே.‘‘
‘‘வயசு பையன் கெடுத்திருப்பானோன்னு எங்களுக்குச் சந்தேகம்.‘‘
‘‘இருக்கலாம். ஒரு டீச்சரைக் கண்ணடிச்சு பெரிய வாத்தியார் கண்டிச்சி விட்டிருக்கார். படிக்கிற பொண்ணுங்ககிட்ட விளையாறான். ஒரு நாள் மாட்டிப்பான்.‘‘
‘‘அவ்வளவு மோசமான ஆளா ?‘‘
‘‘வயசுகோளாறு இவனென்ன செய்வான்.!‘‘
‘‘ஆக அந்த பையித்தியத்தைக் கெடுத்தது அவனா இருக்கும்ன்னு சொல்றீங்களா?‘‘
‘‘இருக்கலாம்.!‘‘
‘‘எப்படி?‘‘
‘‘அந்த பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்துல உள்ள ஒதியமரத்தடியிலதானே அவளுக்குப் படுக்கை. எதிலேயாவது மயக்க மருந்தைக் கொடுத்து பன்னிரண்டு மணிக்கு அப்படியே அலாக்காத் தூக்கிக்கிட்டு போனா யாருக்கு என்ன தெரியும்.?‘‘
அவர் பேச்சில் நியாயம் தெரிந்தது.
‘‘சாந்தி டீக்கடையில வேலை செய்யிறவங்க எப்புடி?‘‘
‘‘மாஸ்டர் ! சர்வர் ! ’’ – சிவா எடுத்துக் கொடுத்தான்.
‘‘அவனுங்க மேல சந்தேகப்படுறீங்களா?‘‘
‘‘இல்லே எப்படின்னு விசாரிச்சேன்.‘‘
‘‘தங்கம்..‘‘
எழுந்தார்கள்.
அவர் மீண்டும் பீடி பற்றவைத்தார்.
மணி 8.30ஐத் தாண்டி இருந்தது.
சாந்தி டீக்கடை ஏறக்குறைய மூடும் நிலையிலிருந்தது. வாசலில் பாய்லர் மட்டும் கொதித்துக் கொண்டிருந்தது. உள்ளே ஆட்கள் இல்லை. பெஞ்ச் மட்டும் இருந்தது. காலையிலிருந்து பலபேர் கைபட்டு நைந்துபோன தினத்தந்தியை இப்போது சர்வர் ஏடுஏடாகப் புரட்டிக் கொண்டிருந்தான். கல்லாவில் முதலாளி இல்லை. அவருக்கு ஏழு மணிக்கு மேல் தவணை வசூல் செய்யும் வேலை. மாஸ்டர் கடையை முடிக்க ஆயத்த வேலைகள் செய்தார்.
இவர்கள் தலையைக் கண்டதும,; ‘‘வாங்க.. வாங்க..என்ன இந்த நேரத்துல ?‘‘- வரவேற்றார்.
‘‘சும்மாதான் மாஸ்டர்‘‘- சிவபுண்ணியம் சொல்ல எல்லோரும் அமர்ந்தார்கள்.
‘‘டீ வேணுமா?‘‘
‘‘வேணாம்.‘‘
‘‘நல்லா ஸ்ட்ராங்கா போட்டு விடுறேனே !?‘‘
‘‘வேணாம்.‘‘
‘‘என்னமோ போங்க இந்த அநியாயத்தைக் கேட்க ஆளில்லே.‘‘- மாஸ்டர் வருத்தமாக வந்து இவர்கள் எதிரிலமர்ந்தார். ‘‘என்னய்யா சொல்றீங்க? ‘‘கணேஷ் திடுக்கிட்டவன்போல் கேட்டான்.
‘‘இந்த ராணியைத்தான் எந்தப் பயலோ புடிச்சு அநியாயம் பண்ணி கெடுத்துட்டானுங்களே!‘‘
‘‘அப்புடியா மாஸ்டர் ?! ‘‘-சேகர் ஒன்றும் அறியாதவன் போல் கேட்டான்.
‘‘ஆமாம் தம்பி கட்டையில போறவனுங்க எப்புடி புடிச்சி நாசம் பண்ணினானுங்களோ தெரியலை. கடைக்கு வர்ற போற பையலுங்களெல்லாம் என்ன மாஸ்டர் உங்க வேலையான்னு நக்கலா கேட்கிறானுங்க. நான் பொண்டாட்டி புள்ளையோட இல்லை, சர்வர் பையன் அனாதைன்னு. கஸ்மாலம்ங்க வாய்க்கு வந்ததெல்லாம் பேசலாம்ன்னு நெனைச்சி; பேசிப் போவுதுங்க .வயித்தெரிச்சலா இருக்கு வருத்தமாவும் இருக்கு. எனக்கு ஊர்ல வயசுக்கு வந்த பொண்ணு இருக்கு தம்பி. ராணி என் பொண்ணு மாதிரி அதைத் தொட்டா பாவம் !‘‘ – அவர் பாட்டுக்குப் பேசினார்.
எல்லோருக்கும் கேட்க வருத்தமாக இருந்தது.
மேலும் தொடர்ந்தார்:‘‘என்ன சார் பெரிய எழவெடுத்த காமம். தெனைக்கும் பேப்பரை பிரிச்சா வயித்தெரிச்சலா இருக்கு. வயசுக்கு வராத பொண்ணுங்களை நாசம் பண்றாங்களாம். அதுக்குத்தான் நெறைய போட்டா போட்டியாம் காசாம். அந்த பொண்ணுங்க படுறபாட நெனைச்சா நெஞ்சு குலை நடுங்குது. இவனுங்க காசையும் ஆசையையும் தூக்கி கட்டையில வைக்க.
இவனுங்களையெல்லாம் நிக்க வைச்சு சுடனும். வேணாம்…..! பொட்டுன்னு போயிடுவானுங்க. அதை வெட்டனும் இஇல்லே.. கை காலை எடுக்கனும். உலகம் அப்புடி போய்க்கிட்டிருக்கும்போது பையித்தியக்காரி என்ன பத்ரகாளியென்ன எல்லாரையும் நாசம் பண்ணிடுவானுங்க. தாம்பத்தியம் தெய்வீகமானது தம்பி அதை இப்புடி கேவலமாவும் கோரமாவும் செய்யும்போது கொலையே செய்யத் தோணுது, ‘‘- ஆவேசப்பட்டார்.
இவர்கள் மௌனமாக இருந்தார்கள்.
‘‘சரி இதை விடுங்க. இவளைத் தொட்டவன் ஆள்..எப்படி சுமப்பா, எப்படி பெத்துப்பாள்ன்னு யோசிச்சானா…!? கர்ப்ப காலத்துல பொண்ணு அலுங்காம குலுங்காம இருக்கனும். இவ இருப்பாளா. இந்த புள்ள சுகமா பொறக்குமா. செத்துப் பொறக்குமா. பெத்து… இவ செத்து அனாதையா கிடந்தால் பொணத்தை யார் தூக்குவா, புள்ளையை யார் தொடுவா. சரி ரெண்டு உசுருமே பொழைச்சி இருக்குன்னு வைச்சுக்கோங்க. புள்ளைய இவ தூக்குவாளா, பால் கொடுப்பாளா…!? யோசிக்க யோசிக்க ராப்பகலா துக்கம் வரமாட்டேங்குது தம்பி. சமயத்துல எவளுக்காகவோ நாம ஏன் இப்புடி வருத்தப்படனும்ன்னு தோணும். மனிதாபிமானம் செத்துப்போனாதானே தம்பி வருத்தப்படாம இருக்க முடியும். நாம மனுசன் எதிர்ல ஒன்னு இப்படி இருக்கும்போது எப்படி வருத்தப்படாம இருக்க முடியும். ஒரு பையித்தியக்காரி புள்ளையைப் பெத்து நஞ்சு கொடி விழாத நெலையில ரத்தமும் சதையுமா தூக்கிக்கிட்டுப் போறா. கொஞ்சம் கற்பனைப் பண்ணிப் பாருங்க வயித்துக்குள்ள சோறு இறங்காது.‘‘
‘எல்லாருக்கும் ஏன் இங்கு வந்தோம் ?‘ தோன்றியது. சிவபுண்ணியத்திற்கு… ‘ இவர் எவ்வளவு தூரம் அவள் மேல் பாசமாய் இருக்கார். மனதை அல்லாடவிட்டிருக்கிறார்!’ – புரிந்தது.
நம் வீட்டுப் பெண்கள் கர்ப்பம் என்றால் எவ்வளவு தாங்குகிறோம். தலையே தூக்க முடியலைங்க… கெஞ்சுவார்கள். எழ முடியலை, நடக்க முடியலை, சமைக்க முடியலை…. புலம்புவார்கள். மாதம் ஆக ஆக அப்படி நடக்காதே, இப்படி நடக்காதே என்று வேறு பெரிசுகளின் போதனை. அதிக பாரம் சுமக்காதே, அலுங்காதே, குலுங்காதே என்று வேறு கறார், கண்டிப்பு, எச்சரிக்கை. மருந்து மாத்திரை, மாதம் ஒருமுறை டாக்டர் செக்கப்… செலவுஇ அலைச்சல். இந்த காட்டுச்செடிக்கு யார் பராமரிப்பு, எப்படி பராமரிக்க முடியும் ? – யோசிக்க யோசிக்க தலை சுற்றியது.
நாசம் செய்தவன் கொலையே செய்யலாம் தோன்றியது. மாஸ்டர் தொடர்ந்தார்.
“இனி…கெடுத்தவன் வந்து நான்தான் காரணம்ன்னு பொறுப்பேத்துக்க மாட்டான். ஏத்துக்கிட்டாலும் பையித்தியத்தைக் கட்டமாட்டான். முகம் தெரியாத அவனை நெனைச்சு ஆத்திரப்படுவதைவிட வீணாகிப்போன ஒரு உசுருக்குள்ள ஒரு சின்னஞ்சிறிய நல்ல உசுர் இருக்குது. அதை எப்படியாவது காபந்து செய்யனும்ன்னுங்குற முடிவுக்கு வந்துட்டேன். எப்படி செய்யலாம்இ உங்களையெல்லாம் ஆலோசிச்சு, வைச்சு பத்திரிக்கைக்கு எழுதிப் போட்டு உதவி கேட்கலாமாஇ இல்லை.. பணக்காரங்கஇ பெரியவங்களைப் பார்த்து யோசனைக் கேட்கலாமாஇ அநாதை ஆசிரமம் அது இதுன்னு போய் உதவி கேட்கலாமான்னு நான் யோசிச்சிக்கிட்டிருந்தேன் நீங்க வந்துட்டீங்க.‘‘- சொன்னார்.
இவர் சொல்வதுபோல் நல்லவளையே நாசம் செய்து கைகழுவிவிட்டுப் போகும் போது இந்த பையித்தியக்காரியை எவன் வந்து பொறுப்பேற்றுக் கொள்வான். கிடைத்தால் மிரட்டி உருட்டிஇ ‘கற்பழிப்புக்கு ஏழாண்டு சிறை. இவ ஒழுங்கா புள்ளை பெற பொறுப்பேத்துக்கிட்டீன்னா மன்னிக்கிறோம்.’ சொல்லி பராமரிப்பு செலவை அவன் தலையில் கட்டலாம். கையில் அகப்பட வேண்டுமே…! எப்படி அகப்படுவான்…? அவன் அகப்படும்வரை இவள் கதி. வயிற்றில் வளரும் சிசு கதி ? – எல்லாருக்குமே கலக்கியது.
‘‘வீண் பேச்சாலும், அவன் யார்ன்னு கண்டுபிடிப்பதாலும் ஒன்னும் பிரயோசனமில்லே. தப்பு செய்ஞ்சவன் என்னைக்காவது அகப்படுவான். அகப்படலைன்னாலும் தெய்வம் கூலி கொடுக்கும். இப்போ மனுசன்ங்குற முறையில நாம செய்ய வேண்டிய மொத காரியம். இந்த ரெண்டு உசுருங்களையும் காப்பாத்தனும். அதுக்கு வேண்டிய ஏற்பாடு செய்யனும். நான் ரொம்ப படிக்காதவன். உங்க புத்திக்கு எது சரி தெரியுதோ… அதைச் செய்ங்க. மனுச உசுர் ரொம்ப அரிதானது சார். புள்ளை இல்லாதவங்களைக் கேட்டா அதன் மதிப்பு, மரியாதை தெரியும். ஆண்டவனும் ரொம்ப மோசம். வேண்டுறவனுக்குக் கொடுக்க மாட்டான். வைக்கத் தெரியாத இடத்துல வைப்பான். காப்பாத்துற அளவுக்கு அந்த உசுர் என்ன அவ்வளவு முக்கியம்இ நமக்கு என்ன அக்கறைன்னு உங்களுக்குள்ளேயே கேள்வி வரலாம். இவ்வளவு சொல்லற எனக்கே அந்த கேள்வி வந்துது. மொதல்ல நின்னது மனிதாபிமானம.; அடுத்து… உள்ளே இருக்கிற உசுருக்குள் வீரியம் இருக்கலாம். அதுக்குள்ள என்ன சக்தி இருக்கோ நாளைக்கு நாட்டையே ஆளலாம். கண்ணு தெரிஞ்சு எதுக்காக நாம அதை இழக்கனும் ?. இப்படித்தான் துணிந்தேன். அக்கiறையாய் உங்ககிட்ட சேதி சொல்றேன். ‘‘- முடித்தார். .
இந்த அளவிற்கு புத்தி, யோசனை உள்ளவர் எப்படி இந்த வேலைக்கு வந்தார். கல்லுக்குள் தேரை இருப்பது போல புத்தி எல்லாரிடமும் இருக்கிறது. – நினைக்க சிவாவிற்கு மலைப்பாய் இருந்தது,
‘‘பத்திரிக்கை ஆபிசுக்கு எழுதலாமாடா ?‘‘- பக்கத்தில் அமர்ந்திருந்த சேகரைக் கேட்டான் சிவா.
‘‘நாட்டுல எவ்வளவோ அநியாம் நடக்குது. அவனுக்கெல்லாம் இது ஒரு பெரிசா தெரியாது தூக்கிப்போட்டுடுவான்.‘‘
‘‘இதுவும் ஒரு அநியாயம்தானே.?!‘‘
‘‘எழுதிப் பார்க்கலாம். ஆனா…. அதுக்கு சரியான மதிப்பு மரியாதை கிடைப்பது சந்தேகம். மெனக்கட்டு போட்டோ எடுத்துப் போட்டா போடுவான். பிரசுரமானா நல்ல மதிப்பு மரியாதை இருக்கும். அரசாங்கம் ஏதாவது செய்யும்.‘‘
‘‘அதைச் செய்யுங்க. செய்ஞ்சுட்டு சும்மா இருக்காம இதை ஆஸ்பத்திரியில சேர்க்க ஏற்பாடு செய்யுங்க.‘‘ மாஸ்டர் இடையில் புகுந்து கெஞ்சலாகச் சொன்னார்.
‘‘இதை எப்புடி செய்ய முடியம்…?’’ தினேஷ் அவரை ஏறிட்டான்.
‘‘யாராவது எம்.எல்.ஏ, அமைச்சரைப் பாருங்க. நீங்க பார்க்கிறது சுலபம். அரிமா சங்கம் ரோட்டரி கிளப் போங்க உங்களுக்குத் தெரியாததா தம்பி ..?’’ அனைவரையும் ஏறிட்டார்.
‘‘நல்ல யோசனைதான் இருக்கு. யார் மெனக்கெடுறது ?’’ கணேஷ் முணுமுணுத்தான்.
‘‘மெனக்கெடுறது போகட்டும் சரியான பலாபலன் கெடைக்குமா ?’’ சேகர் கேள்வி கேட்டான்.
‘‘இப்படியெல்லாம் ஆளாளுக்குப் பேசிகிட்டிருந்தா குழப்பம் வரும். தூக்கிப் போடச் சொல்லும். துணிஞ்சு இறங்குங்க. காரியம் நடக்கும். துணைக்கு வர எனக்கு ஆசை. நான் வந்தா இங்கே பொழைப்பு நாறிடும். அதுமட்டுமில்லே வேலை செய்ஞ்சாத்தான் எனக்கு சம்பளம். உங்களுக்கு அப்படி இல்லே. விடுப்பு எடுத்தாலும் சம்பளம் உண்டு. தைரியமா இறங்கலாம் மெனக்கெடலாம்.‘‘
எல்லோரும் மௌனமாக இருந்தார்கள்.
‘‘பூனைக்கு யார் மணிகட்டுறதுங்குற யோசனையெல்லாம் வேண்டாம் தம்பி. மனிதாபிமானத்தோட எல்லாரும் துணிஞ்சு இறங்கனும். இங்கே பொழைப்பு என் சம்பளம் போனாலும் பரவாயில்லே. நானும் இறங்கறேன். ரெண்டு உசுர் விசயம் மனசு வையுங்க.‘‘- மாஸ்டர் தயவுடன் சொன்னது எல்லார் மனதையும் நெகிழச் செய்தது.
அத்தியாயம்-6
அலுவலக சாப்பாட்டு இடைவேளையில் சிவபுண்ணியம் இசிவா இசேகர் இகணேஷ் இதினேஷ் எல்லாம் ஒன்று கூடினார்கள். எதை எப்படி செய்ய வேண்டும் என்று ஆலோசித்தார்கள். ‘‘மொதல்ல எதாவது ஒரு பத்திரிக்கைக்கு சேதி அனுப்புவோம்டா ‘‘- கணேஷ் சொன்னான்.
‘‘எந்த பத்திரிக்கை?‘‘
‘‘ஜுனியர் விகடன், ரிப்போர்ட்டர், நக்கீரன்……….‘‘ வரிசையாக தினேஷ் அடுக்கினான்.
‘‘ஏன்… தேவி, ராணிக்குக்கூட அனுப்பலாம்.‘‘
‘‘அனுப்பலாம். மொதல்ல மேட்டரை ரெடி பண்ணலாம்.‘‘
‘‘எப்படி?‘‘
‘‘இன்னார் இப்படி பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு எழுதினா போதும்.‘‘
‘‘உதவி அது இது…?‘‘
‘‘ம்ம்….அதையும் எழுதலாம். அதில்.. ஏதாவது தொண்டு நிறுவனம் அவளைத் தத்தெடுத்து புள்ளைய காப்பாத்தனும்ன்னும் சொல்லலாம். அரசாங்கம் முயற்சி எடுக்கலாம்ன்னும் எழுதலாம்.‘‘
‘‘அவ போட்டோ?‘‘
‘‘‘ஸ்டுடியோக்காரனை வைச்சி புடிச்சிடலாம். அம்பது ரூபாய்க் கேட்பான் குடுத்துடலாம்.‘‘
‘‘சிவா மேட்டரை எழுது‘‘.- சேகர் அவனுக்குத் தாளும் பேனாவும் கொடுத்தான்.
அவன் சிறிது நேரம் யோசித்து….எழுதத் தொடங்கினான். சிவபுண்ணியத்திற்கு எல்லாரும் கடைசி வரையில் இப்படி ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்கிற கவலை வந்தது.
பத்து நிமிடத்தில் சிவா அழகாக எழுதி முடித்தான். படித்த எல்லாருக்கும் திருப்தியாக இருந்தது.
காவேரி ஸ்டுடியோக்காரனை போன் செய்து வரழைத்தார்கள். சேகர்தான் அவனோடு சென்று ராணியைக் காட்டி போட்டோ எடுக்கச் செய்தான்.
டீ மாஸ்டர், ‘‘ராணி!‘‘- என்று கூப்பிட…. அவள் திரும்ப…. ஸ்டுடியோக்காரன் டக்கென்று போட்டோ எடுத்தான். ‘‘சார்! படம் காலையில தர்றேன் ‘‘- சொல்லிப் போனான்.
மாலை அவர்கள் டீக்கடைக்கு வரும்போது ராணி தள்ளாடி எழுந்து சென்றாள்.
‘‘மாஸ்டர் ! எவனாவது அவளை நோட்டம் விடுறானான்னு பாருங்க. தூண்டில்காரனுக்கு மிதவை மேல கண் போல…தப்பு செய்தவனுக்கு இவ மேல கண்ணிருக்கும்.‘‘- சிவா அவருக்கு ஐடியா கொடுத்தான்.
‘‘நானும் ரோட்டுல போற வர்ற, இங்க வர்றவனுங்க மேல ஒரு கண்ணு வைச்சிக்கிட்டுத்தானிருக்கேன். மாட்டினா தாளிச்சிடுவேன். ஒரே அப்பா அப்பி பாய்லர்ல மூஞ்சியைக் காட்டி அவளைக் கைப்பிடி இல்லே புள்ளையைக் காப்பாத்துன்னு சொல்லலாம்ன்னு ஒரு முடிவுலதான் இருக்கேன். நீங்க என்னைப் பத்தி கவலை படாதீங்க அவனைப் பிடிக்கிறது நானாச்சு. என் பொறுப்பு. நீங்க நான் சொன்ன மத்த வேலையைப் பாருங்க.‘‘-
என்றார்.
ராணி பங்க் கடைப்பக்கம் சென்றாள். கடையையேப் பார்த்துக்கொண்டு கொஞ்ச நேரம் நின்றாள்.
வியாபாரத்தை முடித்த கடை முதலாளி, ‘‘இந்தா‘‘ என்று இரண்டு ரஸ்தாளியைப் பிய்த்துக் கொடுத்தார்.
ராணி பேசாமல் வாங்கி பழைய இடத்திற்கு வந்தாள். பழத்தை உரித்துக் கொண்டே எதையோ நினைத்துச் சிரித்தாள். அப்புறம் தின்றாள்.
‘‘வாழைப்பழத்துக்கெல்லாம் சண்டை போட்டா மவராசி!‘‘- மாமியாரைத் திட்டினாள்.
அவளைத்தான் திட்டியிருக்க வேண்டும்.!
‘‘ஏன்… இவ பூர்வீகத்தைக் கண்டு பிடிச்சு ஒப்படைச்சா என்ன ?‘‘- தினேஷிற்குள் திடீரென்று ஒரு யோசனை தோன்ற…நண்பர்களிடம் சொன்னான்.
‘‘மனநிலை பாதிக்கப்பட்டு அவர்களா துரத்தி விட்டாலும்…. இல்லே, இவளா வந்தாலும் இப்போ அவுங்க சேர்க்கிறது சாத்தியம் இல்லே. சேர்த்துக்கிற முடிவுக்கு வந்தாலும் இப்போ இவள் கர்ப்பம். யார் வீட்டுப் புள்ளையை யார் ஏத்துக்கிதுன்னு கழட்டி விட்டுட்டுப் போவாங்க.‘‘
‘‘ஆக…. நம்ம கையாலதான் ராணிக்கு விமோசனம் ?‘‘- சேகர் பெருமூச்சு விட்டான்.
‘‘ஆமாம் !‘‘- சிவா சொல்ல…
மற்றவர்களுக்கும் பொறுப்பு மலைப்பாக இருந்தது. எந்த பத்திரிக்கைக்குச் செய்தி அனுப்புவது என்று முடிவு செய்து, அந்த பொறுப்பை சேகரிடம் ஒப்படைத்தோடு விடாமல் அடுத்தநாள் என்ன செய்வது என்றும் அலுவலகம் விட்டு பூங்கா வந்து யோசனையிலிறங்கினார்கள்.
‘‘ரோட்டரி கிளப் அரிமா சங்கம்ன்னா யாரையாவது தெரிஞ்ச ஆளை வைச்சி பேசினாத்தான் காரியம் நடக்கும்.‘‘- கணேஷ் சொன்னான்.
‘‘தண்டபாணிக்கும் ரோட்டரி சங்கத்துக்கம் சம்பந்தம் உண்டா ?‘‘ தினேஷ் திடீரென்று கேட்டான்.
‘எந்த தண்டபாணி ?‘- சிவபுண்ணியத்திற்கு ஆள் புரியவில்லை.
‘‘பள்ளிக்கூடத்துல உனக்கும் எனக்கும் வாத்தியாராய் இருந்தாரே குண்டு பூசணிக்காய் அவர்.!‘‘
‘‘ஓ…ஓ அவரா ?‘‘- புரிந்தது.
‘‘அவர் ரோட்டரி சங்கத்து மெம்பர்தான். போன வாரம்கூட நான் அவர்கிட்ட பேசிட்டு வந்தேன். ரொம்ப நல்ல மனுசன். உதவி செய்வார்.‘‘- சேகர் அவர் மேலுள்ள அபிப்பிராயத்தைத் தெரிவித்தான்.
‘‘சரி அவரையேப் பார்க்கலாம்! நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை‘‘ . முடிவாயிற்று.
சிவபுண்ணியம் வீட்டிற்கு வந்தான்.
‘‘உங்க நண்பர் மதன் போன் பண்ணினாருங்க‘‘ – சௌம்மியா சொன்னாள்
‘‘என்னவாம் ?‘‘
‘‘நல்லா இருக்கீங்களான்னு விசாரிச்சார்.‘‘
‘‘அப்புறம் ?‘‘
‘‘அடுத்து ஒன்னும் சேதி இல்லே அப்புறம் பேசுறேன்னு சொல்லி வைச்சுட்டார்.‘‘
ஞாயிறு.
சிவபுண்ணியம், சிவா, சேகர், தினேஷ்….நால்வர் மட்டும் தண்டபாணியிடம் சென்றார்கள்.
கணேஷ் முக்கிய வேலையென்று ஒதுங்கிக்கொண்டு விட்டான்.
‘‘வாங்க வாங்க…‘‘- தண்டபாணி இவர்களைப் பார்த்ததும் உற்சாகமாக வரவேற்றார்.
‘‘என்ன வங்கி மொத்தமும் வந்திருக்கீங்க ?‘‘- விளையாட்டாய் வரவேற்றார்.
‘‘உங்ககிட்ட ஒரு உதவி……!‘‘- என்று சிவா ஆரம்பித்து வந்த வேலையைச் சுருக்கமாக சொன்னான்.
பத்து நிமிடங்கள் நேரம் யோசித்த தண்ட்பாணி, ‘‘அது கொஞ்சம் கஷ்டமான காரியம் ….‘‘ -. இழுத்தார்.
‘‘என்ன சார் ?‘‘
‘‘மொதல்ல அவளை ஆஸ்பத்திரியில சேர்த்துக்க மாட்டாங்க. அடுத்து சங்கத்துக்குப் பேர் வராது.‘‘
திகைப்பாய்ப் பார்த்தார்கள்.
‘‘ சின்னதாய்… பத்துலட்ச ரூபாயில் பஸ் ஸ்டாண்டு கட்டுறது, கண் சிகிச்சை முகாம் நடத்துறதெல்லாம் எங்களுக்குப் பேர், விளம்பரம். இதுல எங்களுக்கு பேர் வராது. இதை நான் யோசிக்கலை. தலைவர், செயலாளர் யோசிப்பார்.‘‘- என்றார்.
‘‘அப்படின்னா எல்லாம் விளம்பரத்துக்காகத்தான் செய்யுறீங்களா ?‘‘- தினேஷ் கேட்டான்.
‘‘நல்லதும் செய்யனும் அப்படியே எங்களுக்கு விளம்பரம,; பேர் வரனும். பேருந்து நிலையம் காலாகாலத்துக்கும் நிற்கும். கண் சிகிச்கை முகாம்…நிறைய விளம்பரம் செய்வோம். புயனாளிகள் வாழ்த்துவாங்க. இந்த விசயத்துல எதுவும் இருக்காது !‘‘
‘‘நல்லது செய்ய எதுக்கு சார் விளம்பரம் ?‘‘
‘‘எங்கள் பழைய தலைவர்களெல்லாம் அது செய்ஞ்சேன் இது செய்ஞ்சேன்னு பேர் இருக்கும்போது பின்னாடி வர்றவங்க அதை தாண்டனும் முறியடிக்கனும் என்பதில்தான் முனைப்பா இருப்பாங்க. ரோட்டரி கிளப் போனாலும் இதே கதைதான்.‘‘
‘‘இது ரெண்டு உசுர் காரியம் …..‘‘. என்றான் சிவா.
‘‘உங்களுக்கும் எனக்கும் மனிதாபிமானம் இருக்கு யோசிக்கிறோம், பேசிக்கிறோம். இதை மத்தவங்ககிட்ட எப்படி எதிர் பார்க்க முடியும்….? இந்த ரோட்டரி, அரிமா சங்கத்து மக்கள் எல்லாருமே…..பேர், புகழ், பெருமைக்கு ஆசைப்படுறவங்க. உங்களுக்குச் சந்தேகமா இருந்தா நேரடியா தலைவரைப் போய் மோதிப் பாருங்க. சம்மதிக்க மாட்டார் சம்மதிச்சா நல்லது.‘‘-என்றார்.
‘‘பார்க்கிறோம் சார்!‘‘- எழுந்தார்கள்.
தலைவர், பெரிய எல்.ஐ.சி முகவர். வீடு பாரதி நகரில் இருந்தது.
அவரைச் சுற்றி சிறிது கூட்டம் இருந்தது. நாளைந்து பேர்கள் இருந்தார்கள்.
அடுத்த தேர்தலுக்கு நிற்கும் அடித்தளமோ என்னவோ…. ‘‘ வாங்க சார் !‘‘ முகம் தெரியாமலேயே வரவேற்றார்.
‘‘உட்காருங்க‘‘ – எல்லோரையும் உட்காரவைத்தார். அமர்ந்தார்கள்.
‘‘என்ன விசயம். ?‘‘
சிவபுண்ணியம் விசயத்தைச் சொன்னான்.
‘‘நல்ல காரியம்தான். உசுர் விசயம். பேங்கல வேலை செய்யுற நீங்க இப்புடி சமுதாயத் தொண்டுல இறங்கினது பெரிய வரவேற்க வேண்டிய காரியம். ஆனா… நான் எதையும் தன்னிச்சையாய் செய்யமுடியாது. எல்லாத்துக்கும் பொதுக்குழு கூட்டித்தான் முடிவு செய்யனும். செயலாளர் இ;ப்போ ஊர்ல இல்லே. அவர் வர பத்து நாளாகும்.’’ சொன்னார்.
பேச்சிலேயே ஆள் நழுவுகிறார் என்று எல்லாருக்கும் துல்லியமாக தெரிந்தது.
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள்.
தலைவரைச் சுற்றி இருப்பவர்களும் இவர்களைப் பரிதாபமாக பார்ப்பதாய்ப் பட்டது.
‘‘சீக்கிரம் வேலைக்காகாது என்கிற உங்க சங்கடம் எனக்குப் புரியுது. நான் ஒரு பெரிய மனுசன் விலாசம் தர்றேன். ஆவர் ரொம்ப மனிதாபிமானம் உள்ளவர். அவரைப் போய்ப் பாருங்க. அவர் உங்களுக்கு உதவி செய்ய நிறைய வாய்ப்பிருக்கு செய்வார்.’’
சொன்னார்.
எதைத் தின்றாலென்ன பித்தம் தெளிந்தால் போதும் நிலையிலிருந்த சிவபுண்ணியம்…
‘‘பார்க்கிறோம் சார் !‘‘ சொன்னான்.
‘‘கோபால்சாமி பேர். பெருமாள் கோவில் தெருவுல கடைசி வீடு. மனுசன் இந்த கைக்கு உதவறது அந்த கைக்குத் தெரியாது.’’ என்றார்.
நன்றி சொல்லி எழுந்தார்கள்.
தலைவரும் பெரிய கண்டத்திலிருந்து தப்பியவராக நிம்மதி மூச்சு விட்டார்.
வெளியே வந்த தினேஷ்.. ‘‘இந்த ஆள் தனக்குப் பிடிக்காத ஆள் பெயரைச் சொல்லி இருக்கப் போறான்!‘‘. என்றான்.
‘‘ ………….’’
‘‘அந்த ஆளிடம் சேதியைச் சொன்ன அடுத்த நொடி… நான் இப்படி உதவுறேன்னு எந்த நாய் சொன்னான்னு நம் மேல பாய்ந்து குதறப் போறான்.! ‘‘ என்றான்.
கேட்ட மற்றவர்களுக்கும் கொஞ்சம் யோசனையாய் இருந்தது.
‘‘நாட்டுல இப்படியுமா மனுசனுங்க இருப்பானுங்க ‘‘?- சிவண்ணியம் ஆச்சரியப்பட்டான்.
‘‘இவன் என்னடா உலக நடப்பு தெரியாத குழந்தைப் புள்ளயா இருக்கான்…?!‘‘-சேகர் அவனை வெறியேற்றினான். எல்லாரும் தலைவர் சொன்ன இடத்தில் வண்டிகளை நிறுத்தினார்கள்.
வீடு பிரம்மாண்டமாய் இருந்தது. நாய்கள் இருக்கிறதா, ‘நாய்கள் ஜாக்கிரதை’ போர்டு இருக்கிறதா என்று கவனமாகப் பார்த்து இல்லை என்று தெரிந்ததும் சேகர் வாசல் கேட்டைத் திறந்தான்.
கிரீச்சிட்டது.
எல்லாரும் நுழைந்தார்கள்.
வீட்டு அழைப்பு மணி அழுத்தி நின்றார்கள்.
கதவு திறக்கும் ஒரு நிமிட நேரத்தில் இதெல்லாம் தமக்கு தேவையா தினேஷ் மனதில் பட்டது.
கதவு திறந்தது.
நாற்பது வயது பெண்மணி நின்றாள்.
‘‘சார்ர்…………? ‘‘- சேகர் இழுத்தான்.
‘‘இருக்காரு. நீங்க ?‘‘
‘‘பேங்க்லேர்ந்து வர்றோம்ன்னு சொல்லுங்க‘‘
‘‘அவர் ஒன்னும் கடன் வாங்கலையே ?‘‘
‘‘இது வேற விசயம். நல்ல காரியம்.‘‘
‘‘கோயில் கட்டுறதுக்கு நன்கொடையா ?‘‘
‘இவளென்ன முழு சேதியும் சொன்னால்தான் விடுவாளா ?‘ சேகர்… சிவபுண்ணியத்தைப் பார்த்தான்.
நல்லவேளையாக அவள் அடுத்து கேள்வி கேட்காமல்… ‘‘உட்காருங்க. வரச் சொல்றேன்.‘‘ சொல்லி உள்ளே திரும்பினாள்.
வாசல் வரண்டாவில் வசதியாக பிரம்பு நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. ஆடம்பரமான பெரிய குஷன் சோபா செட்டொன்றும் அங்கு இருந்தது. அவருக்கு இதுதான் ஆசனம் போல என்று நினைத்து ஒதுங்கி நாற்காலிகளில் அமர்ந்தார்கள்.
நாற்பத்தைந்து வயது ஆள் வர எழுந்தார்கள்.
‘‘உட்காருங்க உட்காருங்க ‘‘ அவர் அந்த நாற்காலியில்தான் அமர்ந்தார். அமர்ந்தார்கள்.
‘‘எல்லாரும் பேங்கல இருக்கீங்களா?‘‘
‘‘அ….ஆமா சார்.‘‘
‘‘எந்த பேங்க் ?‘‘
சிவா சொன்னான். அப்படியே ராணி விசயத்தையும் சொல்லி ‘‘ வயிற்றில் வளரும் அந்த புள்ளையையாவது காபந்து பண்ணலாம்ன்னு முயற்சிக்கிறோம் சார்.‘‘- என்றான்.
‘‘…………………………………….’’
‘‘பிரசவிக்கிற வரை எங்கேயாவது ஒரு மருத்துவமனையில சேர்த்து தாயும் சேயும் நல்லவிதமா வெளியில வரனும் சார்.‘‘
‘‘அதுக்கப்புறம் புள்ளைய யார் வளர்ப்பா ?‘‘- கோபால்சாமி கேள்வி கேட்டார்.
‘‘இதுவரைக்கும் அதைப் பத்தி யோசிக்கலை. ஆனா..அனாதை ஆசிரம், அரசாங்க தொட்டில் ஏதாவது ஒன்னுல சேர்த்துவிட்டா பொழைச்சுக்கும் சார்.‘‘
‘‘கேட்க நல்லா இருக்கு. ‘‘ தலையை ஆட்டினார். ‘‘அரசாங்க ஆஸ்பத்திரியில சேர்ப்பாங்களா ?‘‘- யோசனையுடன் கேட்டார்.
‘‘ தெரியலை சார்…’’
‘‘கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ப்பாங்களா ?‘‘
‘‘தெ…தெரியலை சார் ‘‘
‘‘தெரிஞ்சுகிட்டு வந்திருக்கனும்‘‘
விழித்தார்கள்.
‘‘ஒரு பத்தாயிரம் செலவாகுமா ?‘‘
‘‘ஆகலாம் சார்.‘‘
‘‘கணக்கு வழக்கு யார் குடுப்பா ? நான் ஆத்துல போட்டாலும் அளந்து போடுறவன். நீங்க என்ன செலவாகும்ன்னு சரியா தெரிஞ்சுகிட்டு வந்தீங்கன்னா நான் பணம் குடுக்க சௌகரியமா இருக்கும்.‘‘
‘இது ஒன்றும் பிரச்சனை இல்லை. தனியார் மருத்துவமனையில் வாங்கலாம். பணமென்றால் அவர்கள் பைத்தியத்திற்கும் வைத்தியம் பார்க்காமலா விடுவார்கள் !! – சிவாவிற்குத் தோன்றியது.
‘‘அடுத்து ஒரு முக்கியமான விசயம் இந்த முழு செலவும் என் தலையில வேணாம். அஞ்சுல ஒன்னு என்கிட்ட எதிர்பாருங்க.’’ என்றார்.
ஆளை அப்படியேத் தூக்கி மிதிக்க வேண்டும் போல் எல்லாருக்குள்ளும் ஆத்திரம் வந்தது.
– தொடரும்…
– 12-05-2003 மாலைமதியில் பிரசுரமான குறுநாவல்.