வசந்த் + வதந்தி..!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 27, 2024
பார்வையிட்டோர்: 3,900 
 
 

(2002ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-14

அத்தியாயம்-10

வசந்த் கணிப்பின்படி ராமுவிற்கு பகலில் சங்கடம். இரவில் தூக்கம் பிடிக்கவில்லை!

ரோஜாவின் கதறிய முகம் அடிக்கடி அவன் மனதில் வந்து கலக்கிச் சென்றது

திருமணம் விலக்கி ரோஜாவைச் சாதாரணமாக ஒதுக்கினாலும் அவள் காதலின் ஆழம் புரிய இவனுக்கு வலித்தது.

‘நீ கெடைக்கலைன்னாலும் பரவாயில்ல. என் மனசுல பதிஞ்ச உன் உருவத்தை உதற மாட்டேன். நீ எவளைக் கட்டி குடும்பம் நடத்தினாலும் மனசு மாறாமல் நான் கடைசி வரைக்கும் இப்படித்தான் இருப்பேன்..! என்றாளே. நாம் எவ்வளவு தூரம் அவள் இதயத்திலே பதிந்து, இரத்தத்தில் கலந்து, பாதிப்பை ஏற்படுத்தி இருந்தால் ரோஜா இந்த முடிவு எடுத்திருப்பாள்?’ நினைக்க எவரோ அவன் இதயத்தைக் கையிலெடுத்து பிழிவது போலிருந்தது.

‘நாம் எவருக்கும் எந்த பாவம், துரோகமும் செய்யவில்லை. ஏனிந்த கஷ்டம்? சம்பந்தா சம்பந்தமில்லாத சிக்கல்?’ நினைக்க நெஞ்சு வெடித்து விடும் போலிருந்தது.

‘எவர் வேலை..? ஏன்..?’ கேள்வி மேல் கேள்வி கேட்டு குழம்பினான்.

‘எத்தனை நாட்கள் கட்டிக் காத்த கண்ணியம். எவரோ திட்டமிட்டு சரித்துவிட தன் தன் மீதுள்ள மதிப்பைக் குறைத்த பெண்கள் ஏதோ காமாந்தங்காரனைக் கண்டு ஒதுங்குவது போல் பயந்து, நடுங்கி ஒதுங்குகிறார்கள்! இவர்களே இப்படி என்றால்…ஊர் எத்தனை கேவலமாக நினைத்திருக்கும்..?’

வசந்தைப் பார்த்து விபரம் கேட்கலாமென்றாலும் வெளியில் செல்ல வெட்கம், பயம் வந்தது.

வசந்த் எங்கே இருக்கிறான், இருந்தால் வந்திருப்பான். வீட்டிலில்லை வெளியூர் சென்றிருக்கிறானா..?!

இந்த சேதி…எங்கெல்லாம் பரவி இருக்கிறது. அலுவலகத்தில் தெரிந்திருந்தால் ஏற்கனவே நாம் எல்லோருக்கும் தொக்கு. வசந்த் ஒருவனைத் தவிர மற்றவர்கள் விடமாட்டார்கள்.

“இன்னா மச்சான்! மாட்டிக்கினியா..!? என்னமோ உத்தம புத்திரன் போல நடிச்சே. இப்போ மூஞ்சியை எங்கே வைக்கப் போறே..? எந்த ஆம்பளையும் பொண்ணுங்ககிட்ட கவிழாம இருக்க முடியாது ஒத்துக்கோ!” வெறியேற்றுவார்கள்.

ஏற்கனவே பொரி இல்லாமல் பற்றியவர்கள். இப்போது கேட்கவே வேண்டாம்! ஜுவாலை விட்டு எரிவார்கள். ராமுவிற்கு நாளைய தினத்தைப் பற்றி நினைக்கப் பயமாக இருந்தது.

திங்கள் காலை 8.30 மணிக்கு வாசலில் வந்து பெல் அடிக்கும் வசந்தைக் காணவில்லை.

ஏன். .. வருவதற்கான அறிகுறியே இல்லை!

பார்த்து பார்த்து கண்கள் பூத்து 8.45 மணிக்கெல்லாம் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெகு வேகமாக மிதித்தான்.

வேர்க்க விறுவிறுக்க நுழைந்த போது அலுவலகத்தில் எல்லோருமே வந்திருந்தார்கள்.

அவரவர் இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள்.

ஏகாம்பரம் மூக்கு நுனியில் தொங்கும் கண்ணாடியால் இவனைப் பார்த்தார்.

‘எப்படி வந்தான்..?’ வசந்தைப் பார்க்க இவனுக்கு வியப்பு.

‘வா ராமு!’ இவன் தலையைக் கண்டதும் அவன் எப்போதும் போல் இவனை அழைத்தது மனத்துக்குச் சற்று ஆறுதலாக இருந்தது. இருந்தாலும் ஏதோ ஒப்புக்கு அழைக்கப்பட்டது போலிருந்தது.

விசயம் இவனுக்கும் தெரிய..’அயோக்கிய ராஸ்கல்!’ என்கிற கோபத்திலிருக்கின்றானா…?

ராமு குழப்பமாய் அவனுக்கு அருகில் இருக்கும் தன் இருக்கைக்குச் சென்றான்.

கையில் எடுத்து வந்த சூட்கேஸை மேசை மேல் வைத்தான்

“உட்கார் ராமு. நான் சனிக்கிழமை கிளம்பி ஞாயிற்றுக் கிழமை ஊர்ல இல்லே. மாமியாருக்கு உடல்நிலை சரி இல்லேன்னு தகவல். பிரபாவைக் கொண்டு விட்டுவிட்டு காலையிலதான் அங்கிருந்து புறப்பட்டு நேரா இங்கே வரேன்” என்றான்.

ராமுவிற்கு இது இன்னும் ஆறுதலாக இருந்தது. நண்பன் எப்போதும் போலத்தான் இருக்கிறான்! என்று நினைக்க மனதின் ஓரத்தில் சின்ன மகிழ்ச்சி வந்தது.

ஆனால் மற்றவர்கள் சரியாக இல்லை என்பது துல்லியமாக தெரிந்தது.

‘ஏன்..கணேஷ், சேகர், வெங்கடேஷ், பாலு தன்னைத் திரும்பிப் பார்க்கவில்லை?!’ விபரம் புரியாமல் யோசித்தான்.

“என்ன ராமு ! போன காரியம் நல்லபடியா முடிஞ்சுதா…?” ஏகாம்பரம் இருக்கையில் இருந்தபடியே விசாரித்தார்.

“முடிஞ்சுது சார்” சொல்லி வசந்த் பக்கம் திரும்பினான்.

“ஏன் ராமு. உன் கண்ணெல்லாம் சிவந்திருக்கு. ராத்திரி தூங்கலையா..?” பார்த்தான்.

“ம்ம்”

”ஏன்?”

“மனசு சரியில்ல.”

“என்ன?”

“வெளியில போய் பேசிக்கலாம்.”

“நானும் உன்கிட்ட ஒரு முக்கியமான சேதி ஒன்னு சொல்லனும்.” வசந்த் எழுந்தான்.

இருவரும் அலுவலகத்திற்குப் பக்கத்திலுள்ள மரத்தடிக்கு வந்தார்கள்.

“என்ன சேதி வசந்த்?”

“இங்கே உன்னைப் பத்தி நிறைய பேச்சு. கெட்ட பேர். பாலு, சேகர் வெங்கடேஷ் எல்லாம் உன் மேல் கோபமா இருக்காங்க.”

“ஏன்…?”

வசந்த் அவிழ்த்து விட்டான்.

“நீ நம்புறீயா..?”

“நம்புற மாதிரி இருக்கு”

ராமுவிற்கு இது அதிர்ச்சியாய் இல்லை. எவரும் நம்பும்படியாகத்தானே இருக்கிறது? இவனே மனசுக்குள் சமாதானம் சொன்னான்.

“சரி. இந்த விசயம் இங்கே எப்படி வந்தது..?”

“வெளியில் யாரோ சேகரைக் கேட்டிருக்காங்க. அவன் அங்கே தெரியாதுன்னு சொல்லி இங்கே வந்து சொன்னான். மத்தவங்களையும் பல பேர் கேட்டிருக்காங்க. ஏன்…என்னையும் ரெண்டொருத்தர் கேட்டாங்க.”

“அப்படியா..?!” ராமு அதிர்ச்சியில் வாய் பிளந்தான்.

விசயம் எங்கேயும் பரவி இருக்கிறது என்பது புரிய நெஞ்சு நடுங்கியது.

“இது மட்டுமில்லே…” என்று குரலைத் தணித்த வசந்த், “என்னையும் எல்லோரும் நம்பல ராமு. உனக்குத் தெரியாம ஒரு விசயமும் நடந்திருக்காது. இதுக்கு நீயும் உடந்தை. தெரிஞ்சு மறைக்கிறேன்னு சொல்றாங்க. இன்னும் ஒரு படி மேலே போய் நீயும் இதுல கூட்டுன்னு சட்டையைப் பிடிச்சி உலுக்காத குறை.” கரகரத்தான்.

தன்னால் வசந்தும் சங்கடத்தில் மாட்டி இருக்கிறான் என்பது புரிய…ராமுவிற்கு மேலும் வருத்தம் வந்தது.

“இல்லேன்னு சொல்ல வேண்டியதுதானே..?”

“சொன்னேன். நிரூபிக்கச் சொல்றாங்க.”

“எப்படி நிரூபிக்க..” ராமு வாய் மூடினான்.

“ராமு..!”

ஏறிட்டான்.

“தயவு செய்து உண்மையைச் சொல்லு. நிஜமா..?” வசந்த் அவனைக் கெஞ்சலாகப் பார்த்தான்.

ராமு பதில் சொல்லவில்லை.

“சரி. உனக்கென்ன மனசு சரி இல்லே..?” ஏறிட்டான்.

“….”

“ராமு! நான் ஒன்னு சொல்றேன் கேட்குறீயா..?”

“சொல்லு..?”

“இது பொய்யாய் இருக்கும்னு நம்பறேன். அப்படி இருந்தா இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரே வழி நீ திருமணம் முடிக்கனும். நிஜம்ன்னா நான் புத்தி சொல்ல விரும்பல..” சொன்னான்.

மூட்டைப்பூச்சிக்குப் பயந்து…ராமுவிற்கு வீட்டைக் கொளுத்த மனமில்லை.

ஏதும் பேசாமல் நின்றான்.

‘படவா..! நீ இன்னும் சங்கடப்படப்போறே..?’ வசந்த் மனசுக்குள் கறுவினான்.

ராமுவை மானேஜர் அழைப்பதற்கு பியூன் வந்து அழைத்தான்.

அவர்கள் பிரிந்தார்கள்.

அத்தியாயம்-11

ராமுவிற்கு வெளியில் தலை காட்டவே பிடிக்கவில்லை.

யாராவது ஏதாவது கேட்டால் என்ன சொல்வது? அவமானம். அதே நேரம்..அலுவலகம் செல்லவும் அவனுக்கு விருப்பமில்லை. இதே கதி வீட்டிலும். நிம்மதியாய் இருக்க முடியவில்லை. முடியவில்லை. அம்மா, அப்பா, இவனைக் குற்றவாளியைப் பார்ப்பது போல் பார்த்தார்கள்.

பத்து நாள்கள் தலைமறைவாகி இருந்தால் எல்லாம் சரியாகும்! என்ற எண்ணத்தில் விடுப்பெழுதி காலையில் வந்த வசந்த்திடம் விபரம் சொல்லி கொடுத்து புறப்பட்டான்.

அலுவலகம் வந்த வசந்த் மாட்டிக்கொண்டான்.

“டேய்..! அவன் ரொம்ப மனசொடிஞ்சி இருக்கான்.. தற்கொலை கிற்கொலை செய்து நம்பளை பாவத்தைச் சுமக்க வைக்கப் போறான்!” என்று பாலு கிலியைக் கிளப்பினான்.

எல்லோர் முகங்களிலும் பேயடித்தது.

ஆனால் வசந்த் மட்டும் எதிலும் அசராமல் உறுதியாய் இருந்தான்.

“அவன் மனசு கஷ்டப்படுறது உண்மை. ஆனா…ராமு தற்கொலை செய்து கொள்ற அளவுக்கு கோழை கிடையாது. தங்கச்சி வீடுகளுக்குத்தான் போயிருப்பான். அங்கே இந்த வதந்தி மறைய முற்றுப்புள்ளி எப்படி, முறியடிக்க என்ன வழின்னு யோசிச்சு திரும்புவான். கவலைப்படாதீங்க.” என்று திடமாக சொன்னான்.

எல்லோர் முகங்களிலும் ஓரளவிற்கு நிம்மதி வந்தது.

வேலைப் பார்த்தார்கள்.

மாலை 5.00 மணிக்குத்தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

வசந்த்திடம் பியூன் வந்தான்.

“சார். ராமுவைத் தேடி ஒரு பொண்ணு வந்து வாசல்ல நிக்குது. அவர் விடுப்புன்னு சொல்லியும் நம்பாமல் வரவேற்பறையில் உட்கார்ந்திருக்கு. நீங்க போய் விபரம் சொன்னா நல்லது.” இவன் காதில் வந்து பவ்வியமாய் சொல்லி சென்றான்.

இதை சேகர், கணேஷ் கவனித்தார்கள்.

‘ராமுவைத் தேடி ஒரு பொண்ணு வந்திருக்காளா?!’ வசந்த்தால் நம்ப முடியவில்லை.

‘இப்படி விடாப்பிடியாக சந்திக்கும் அளவிற்கு யார் வந்திருக்க முடியும். .?’ யோசனையுடன் எழுந்தான்.

“என்ன…?” சேகர் கேட்டான்.

“ராமுவைத் தேடி ஒருத்தி வந்திருக்காளாம்!”

“அப்படியா..??”

“ஆமாம்!”

“யார்..?”

“தெரியல..”

‘ராமுவிற்குத் தெரிந்த ஒரே பெண் ரோஜா மட்டும் தான் . அவள்தான் இவனைத் தேடி வந்திருக்க வேண்டும். ஆத்திரத்துல சத்தியமெல்லாம் செய்து தப்பு பண்ணிட்டேன்னு மன்னிப்பு கேட்க வந்திருக்கலாம். இவனைச் சமாதானப்படுத்த வந்திருக்கலாம். அதற்கு வீட்டிற்குச் செல்லாமல் இங்கு எதற்கு வந்தாள். .? வருங்கால மாமியார், மாமனார் முன் அப்படி கேட்க கூச்சமோ. .?’ நடந்தான்.

“ஆள் தெரியுதா..?” சேகர் மீண்டும் அவனைக் கேட்டான்.

”ரோஜா!” சொல்லி சென்றான்.

“நானும் வர்றேன்!” சேகரும் அவனைத் தொடர்ந்தான்.

அவர்களைத் தொடர்ந்து பாலு, கணேஷ், வெங்கடேஷ் சென்றார்கள்.

வரவேற்பறையில்… கருப்பு நிற பர்தா அணிந்த ஒரு முஸ்லீம் பெண் இருந்தாள். முகத்திரையை விலக்கி இருந்ததால் முகம் நல்ல சிகப்பாய் கொழு கொழுவென்று அழகாய் இருந்தது.

ஒட்டுமொத்தமாய் நான்கு ஆண்களைப் பார்த்த அவள் கண்களில் மிரட்சி.

“யார் நீங்க..?” வசந்த்தான் அவளைக் கேட்டான்.

“ரா…ராமுவைப் பார்க்கனும்..”

“அவர் விடுப்பு. இல்லே.”

அவள் முகம் சட்டென்று விழுந்தது.

“உங்க பேர்..?”

“பே..பேகம். அஜிதாபேகம்!”

“என்ன சொன்னீங்க…?!!” – ஆளாளுக்கு அதிர்ந்தார்கள்.

“அஜிதாபேகம்!” அவள் மறுபடியும் தன் பெயரை அழுத்தி சொன்னாள்.

இவர்களுக்கு வேர்த்தது.

“ஊர்..?” வசந்த் கேட்டான்.

“விழுப்புரத்துக்குப் பக்கம் காசோலைக்குறிச்சி!”

அவ்வளவுதான் எல்லோருக்கும் மயக்கம் வராத குறை.

“சரி. அலுவலகம் விட்டாச்சு. வாங்க பக்கத்து பூங்காவுல உட்க்கார்ந்து பேசுவோம்.”

தொடர்ந்தாள்.

வசந்த் அவளை அழைத்து நடக்க… அவள் எழுந்து நண்பர்களும் திக் திக்…அவர்களைத் தொடர்ந்தார்கள்.

பூங்காவில் அமர்ந்த உடனேயே…

“உங்களுக்கு ராமுவைத் தெரியுமா..?” பாலு கேட்டான்.

“தெரியாது சார்.”

“பார்த்திருக்கீங்களா..”

“இல்லே”

“பின்னே எதுக்கு அவரைத் தேடி வந்தீங்க..?”

“அப்பா பேர் தணிகாசலம். அம்மா செண்பகம். ஊர் ஈச்சம்பட்டு. ஆள் நெட்டையா, கொஞ்சம் சிகப்பா சுருட்டை முடி. இங்கே வேலை செய்யிறதா சொன்னாங்க.”

“யார் சொன்னா..?”

“காமாட்சி பாட்டி. அதுக்கு ஈச்சம்பட்டு ஊர். அதோட பொண்ணு என் வீட்டுக்குப் பக்கத்துல இருக்கு. காசோலைக்குருச்சியில் வாழ்க்கைப் பட்டிருக்கு.”

“ஏன் ராமுவைப் பார்க்கனும்…?”

கொஞ்சம் தயங்கினாள்.

“பரவாயில்லே சொல்லுங்க..” சேகர் சொன்னான்.

“நான் ஒரு பாவமும் பண்ணாதவள். எனக்கும் அவருக்கும் தொடர்புன்னு யாரோ கதை கட்டி விட்டிருக்காங்க.” கமறினாள்.

“என்ன பேகம் சொல்றீங்க..?!”

“அசல் பொய் சார். நான் அந்த ஆளைக் கண்ணால பார்த்தது கிடையாது. ஆனா இப்படி யாரோ ஜோடிச்சு விட்டிருக்காங்க. மகள் வீட்டுக்கு வந்த காமாட்சி பாட்டி என்னைப் பார்த்ததும். .என்னம்மா இது ஒரு பாவமும் அறியாத நீ இங்கே இருக்கே. அங்கே உன் பேர் நாறுதுன்னு சொன்னதும் ஆடிட்டேன் சார். நான் நிக்கா ஆனவள். என் புருசன் துபாய்ல இருக்கார். இந்த சேதி அவர் காதுல விழுந்தா என் வாழ்க்கை நாசம் சார்!” அழுதாள்.

“உங்க வீட்டுக்காரர் பேர்..?”

“முகமது யூசுப்!”

“உண்மையைச் சொல்லுங்க..? யார் நீங்க..?” சேகர் மிரட்டலாக கேட்டான்.

“என்ன சார் இது?” அவள் அதிர்ந்தாள்.

“நீங்க அஜிதாபேகம் இல்லே. உங்க வீட்டுக்காரர் முகமது யூசுப் இல்லே. உலவுற சேதியைக் காதுல வாங்கி நான்தான் அவள்ன்னு எதோ ஒரு திட்டத்தோட ராமுவைப் பார்க்க வந்திருக்கீங்க. எழுந்திரிங்க.” அதட்டினான்.

அவள் அசரவில்லை.

“நான் சொல்றது அத்தனையும் உண்மை. இதோ ஆதாரம்!” சொல்லி…அவள் ஆதார் கார்டை எடுத்து நீட்டினாள். அடுத்து….அவள் விலாசத்திற்கு துபாயிலிருந்து முகமது யூசுப் எழுதிய கடிதம் ஒன்றைக் காட்டினாள். எல்லாம் சரியாக இருந்தது.

‘எப்படி வதந்தி உண்மையானது…?’ எவர் முகத்திலும் ஈயாடவில்லை. திகில்!

”நான் நிரபராதி. எதுக்கு ராமு என் வாழ்க்கையில் விளையாடினார். எனக்கு நியாயம் வேணும்! நியாயம் கிடைக்கலைன்னா தற்கொலைதான்! வேற வழியே இல்லே!” திடமாய் சொன்னாள்.

“அந்த முடிவெல்லாம் எடுக்காதீங்க. ராமு ரொம்ப நல்ல பையன். ஒழுக்கமானவன். எப்படி இந்த புரளி உருவாச்சுன்னு தெரியல. அவன் வந்ததும் விபரம் சொல்லி. இது வதந்தி. யாரும் நம்பவேண்டாம்ன்னு அவன் பேராலேயே நாங்க ஒரு நோட்டிஸ் அடிச்சி வெளியிடுறோம். கவலைப்படாதீங்க.” என்றான் வசந்த்.

“நோட்டிஸ் வேணாம் சார். அதுவே என் புருஷன் கைக்கு ஆதாரமா கிடைச்சா எனக்கு ஆபத்து. எப்படி கிளம்பியதோ அப்படியே நிறுத்திடுங்க. என் வாழ்க்கையைக் காப்பாத்துங்க”. சொல்லி எல்லோரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டாள்.

“சரிம்மா. நாங்க பார்த்துக்கிறேன். நீங்க கவலைப்படாம போய் வாங்க.” கணேஷ் கை கூப்பினான்.

அவள் எழுந்து நடந்தாள்.

அவள் அகன்ற அடுத்த நொடி. ..நண்பர்கள் கலந்து பேசி ஒரு முடிவிற்கு வந்தார்கள்.

அத்தியாயம்-12

அலுவலகத்தில்…வசந்த், பாலு இல்லை.

சேகர், கணேஷ், வெங்கடேசுக்கு…அவர்கள் இல்லையென்பதால் அலுவலகத்தில் வேலை ஓடவில்லை.

“சேகர்! அந்த பேகம் உண்மைன்னா அடுத்த கட்ட நடவடிக்கை..?”

கணேஷ் தன் இருக்கையை விட்டு எழுந்து வந்து கேட்டான்.

அவனுக்கும் அதே யோசனைதான் என்றாலும்….

“போனவனுங்க விசாரிச்சு திரும்பட்டும் பேசிக்கலாம்.” சொன்னான்.

“பாலுவும் வசந்தும் சரியாய் காமாட்சிப் பாட்டியைப் போய் புடிச்சி காசோலைக்குறிச்சுக்குப் போய் ஒழுங்கா விசாரிச்சு வருவானுங்களா..?” சந்தேகம் கேட்டான் வெங்கடேஷ்.

“போன ரெண்டு பேருமே திறமைசாலிங்க சரியாய் முடிப்பாங்க.”

“பொய்யாய் இருந்து.. வந்தவள் பேகம் இல்லே. எவளோ ஒரு ஏமாத்துக்காரின்னா..?”

கேள்வியை காதில் வாங்கிய சேகர்…

“கண்டிப்பா நான் அவளை உதைப்பேன்!” காட்டமாய் சொன்னான்.

“பொம்பளையை ஆண் தொட்டு அடிக்கிறது கிரிமினல் குற்றம். போலீஸ்ல புடிச்சி குடுத்துடலாம்.”

“இதுக்கு காரணமான நாமளும் மாட்டிப்போம்!”

“சரிப்பா. பேகம் உண்மை. அவள் கேட்டுக்கிட்டபடி தீயை அணைக்க வழி..?” கணேஷ் அந்த விசயத்திற்குத் தாவினான்.

“வதந்தி, பொய், புரட்டை…யாரும் சுலபமாய்க் கிளப்பி விடலாம். அணைக்கிறது கஷ்டம்! அதுவும் நாம விட்டது ஆண் பெண் சமாச்சாரம். நம்புற மாதிரி விட்டிருக்கோம். வீரியம் வந்து வேகமாய் பரவி போச்சு. காலம் கரைத்தால்தான் உண்டு.” சேகர் பெருமூச்சு விட்டு கவலையாய் சொன்னான்.

கேட்ட எல்லோர் முகங்களும் தொங்கியது.

“கணேஷ்! இந்த விளையாட்டு வினையானதுனால எங்கே போய் முடிய போகுதுன்னு தெரியல. கண்டிப்பாய் யாரையாவது ஒருத்தரைப் பலி வாங்கும். நாம பாவம் சுமக்கிறது நிச்சயம்!” வெங்கடேஷ் சொன்னான்.

சேகர், காணேஷ் அவனைத் திகிலாய்ப் பார்த்தார்கள்.

“என்ன பார்க்குறீங்க..? நாம யார் யார் வயிறெச்சலைக் கொட்டி, மனக் கஷ்டம் உண்டு பண்ணியிருக்கோம் என்கிறதைப் பட்டியல் போடுறேன் கேட்டுக்கோங்க.

  1. முதல் ஆள் நம்ம நண்பன் ராமு! நல்ல புள்ளைன்னு பேரெடுத்து…அவன் குடும்பம் உண்டு, வேலை உண்டுன்னு இருந்தான். வீணா அவனை ஒருத்தியோட இணைச்சி, பாழ்படுத்தி, அவனை வாழ்வா சாவா நிலைக்குத் தள்ளிட்டோம்.
  2. அவன் அம்மா அப்பா! யோக்கியப் புள்ளைன்னு நினைச்சி இருந்தவங்க நெனப்புல மண்ணையள்ளிப் போட்டுட்டோம்.
  3. இந்த புரளியினால். ரோஜா காதல், வாழ்க்கை ரெண்டையும் குழி தோண்டி புதைச்சுட்டோம்.
  4. இன்னும்… ராமு அக்கா, தங்கச்சிங்க காதுல விழுந்து… அந்த குடும்பங்களுக்கு என்ன பாதிப்புன்னு தெரியல.
  5. முத்தாய்ப்பாய் நாம செய்த முட்டாள்தனம் திருமணமான ஒருத்தியை இழுத்தது. அவள் நடுத்தெருவுல நின்னாள்ன்னா கண்டிப்பா அவள் வயிறெரிச்சல், சாபம் சத்தியமா நம்மைச் சும்மா விடாது. தாக்கும்!

நிறுத்தினான்.

கேட்டவர்களுக்கு வயிற்றைக் கலக்கியது. கண்கள் இருட்டியது.

“எவன் எப்படி போனா நமக்கென்ன..? ராமு திருமணம் முடிச்சாலென்ன, முடிக்காட்டி என்ன. அவன் மனைவியா வந்து நமக்கு உபயோகப்படப் போறாள்ன்னு இருந்திருக்கனும். விட்டுட்டோம்.” நிறுத்தினான்.

இதுவே வேறொரு சமயமாக இருந்தால் வெங்கடேஷ் பேசிய இந்தப் பேச்சுக்கு……

“அடுத்தவன் பொண்ட்டாட்டிக்கு ஆசையைப் பாரு . உபயோகப்படிருக்கணுமாமே..!” சேகர் வெறியேற்றிருப்பான். நிலைமை சரி இல்லை விட்டுவிட்டான்.

ராமுக்கு உண்மையிலேயே மனக் கஷ்டமோ.! இல்லே, இந்த தொல்லையை விட்டு கொஞ்ச நாள் தூர இருப்போம்ங்குற எண்ணமோ என்னவோ..பத்து நாள் லீவு அடிச்சிட்டு அக்கா தங்கச்சி வீடுகளுக்குப் போய் நல்ல விருந்து சாப்பிடுறான். நாம இங்கே அல்லாடுறோம். கணேஷ் புலம்பினான்.

அதோட மட்டும் நிறுத்தாமல்.…

“ஆனா ஒன்னு நிச்சயம். பேச்சு நிஜம்.! அதனால் பாதிக்கப்பட்டு பேகம் வந்தாள், போனாள் என்கிற விசயம் ராமுவுக்குத் தெரிந்தால் செத்தான். பையன் மாட்டலை தப்பிச்சான்!” நிறுத்தினான்.

சேகருக்கு அவன் சொன்னதில் உடன்பாடில்லை.

“அப்படி நினைக்காம கணேஷ் இப்படி நினை. பேகம் அவனைச் சந்திச்சு விசயம் சொல்ல..ராமு பெருந்தன்மையாய்…’சரிம்மா. யாரோ, எப்படியோ நம்ம மேல சேத்தை வாரி பூசிட்டாங்க. பொய் மெய்யாடுச்சு. உனக்கும் கஷ்டம் வேணாம். எனக்கும் கஷ்டம் வேணாம். சொன்னவங்க விருப்பப்படியே நாம சேர்ந்துடலாம். கலியாணம் முடிச்சுக்கலாம்!’ சொன்னால் பேகம் பதில் என்னவா இருக்கும்” கேட்டு எல்லோரையும் பார்த்தான்.

“செருப்படி கிடைக்கும்! வாடா நாயேன்னு போலீசுக்கு இழுத்துப் போவாள். இப்படி புரளியைக் கிளப்பி விட்டு அடுத்தவன் மனைவியை ஆட்டையப் போட எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்கன்னு நாக்கைப் புடுங்குறாப்போல கேட்டு, உண்டு இல்லேன்னு ஆக்குவாள்!” ஆவேசமாக சொன்னான்.

“ஆக நாம உதை வாங்கப்போறது உறுதி. பொய், புரட்டை கிளப்பி விட்டவனுங்களே நீங்கதானா. ஒரு கும்பலே கேட்டு நம்மைத் தூக்கிப்போட்டு மிதிக்கும்!” சேகர் பீதியைக் கிளப்பினான்.

அந்த கற்பனை எல்லோர் இதயத்திற்குள்ளும் புகுந்து உலுக்கியது.

மானேஜர் வர… அகன்றார்கள்.

பொழுது அவர்களுக்கு கடினமாக ஓடியது. மாலை நெருங்க நெருங்க. ..

‘சென்றவர்களைக் காணவில்லை!’ என்கிற கலக்கம் எல்லோர் மனதிற்குள்ளும் புகுந்தது.

நிமிடத்திற்கு ஒருமுறை வாசலைப் பார்த்தார்கள்.

பாலு, வசந்த்… சீக்கிரம் வந்து நல்ல சேதி சொல்லமாட்டார்களா. .? தவித்தார்கள்.

மாலை அலுவலகம் விட்டு வெளியே வந்தும் கணேஷ், வெங்கடேஷ், கவலை கூடியதே தவிர குறையவில்லை.

“நாம அலுவலகம் விட்டு பூங்காவுல சந்திக்கிறதான் பேச்சு. வந்துடுவாங்க. வாங்க.” சேகர் மனம் தளராமல் அதை நோக்கி நடந்தான்.

பூங்காவில் வசந்த், பாலுவைக் காணவில்லை. எங்கு தேடியும் இல்லை.

“பொறுமையைச் சோதிக்கிறாங்கப்பா!” வெங்கடேஷ் ஐந்து நிமிடங்கள்கூட இருக்க முடியாமல் சலித்தான்.

கணேஷ் நிலைமை ரொம்ப மோசம்.

குட்டிப் போட்ட பூனைப் போல புல்தரையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தான்.

கொஞ்ச நேரத்தில்…”அதோ வந்துட்டாங்கப்பா..!” சேகர் கூவினான்.

மற்றவர்களுக்கு உயிர் வந்தது.

பயணக் களைப்போ என்னவோ வசந்த், பாலு நொந்து நூடுல்ஸ் ஆனவர்கள் போல் வந்தார்கள்.

“என்ன ஆச்சு..?” கணேஷ் அருகில் வந்தவர்களிடம் ஆவலாய்க் கேட்டான்.

“சொல்றேன்!” வசந்த் களைப்பாய் வந்து சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தான்.

பாலுவும் அமர…மற்றவர்கள் அவர்களைச் சுற்றி அமர்ந்தார்கள்.

“என்ன ஆச்சு!?” – வெங்கடேஷ்.

“உண்மை!”

பாலு அவர்கள் தலைகளில் இடியை இறக்கினான்.

எல்லோருக்கும் அதிர்ச்சி.

“விலாவாரியா சொல்லு வசந்த்!” பாலு அவனிடம் சொன்னான்.

“சொல்றேன். நாங்க புறப்படும் போதே பாட்டி பொய்ன்னா அடுத்து எல்லாமும் பொய். நம்பி திரும்பிடலாம்! என்கிற எண்ணத்துல கிளம்பினோம். ஊர் போய் விசாரிச்சதும் பாட்டி உண்மையாகிடுச்சு. அப்பவே எங்க மனசுல லேசான உதை. மற்ற விஷயங்கள் ஏன் பொய்யாய் இருக்கக்கூடாது? என்கிற எண்ணத்துல அடுத்தக் கட்ட நடவடிக்கைக்குத் தாவினோம். காசோலைக்குறிச்சி விபரம் வாங்கிகிட்டு அங்கே போனோம். பேகம் வீட்டைத் தேடி புடிச்சு நுழைந்தோம். பாவம் அவள் எங்களை பார்த்ததும் குமுறி குமுறி அழுதாள். என்ன விசயம்? கேட்டோம். மௌனமா மடியில் இருந்த கடிதத்தை எடுத்து எங்ககிட்ட கொடுத்தாள். உண்மையில் இடி. துபாய் கடிதம்.!

‘விசயம் என் காதுவரை வந்தாச்சு. உனக்கு ஏன் நான் தலாக் கொடுக்கக் கூடாதுன்னு..?’ – கணவன் எழுதி இருந்தான்.

“எங்களுக்கு மூச்சே நின்னு போச்சு. திரும்பிட்டோம்.” முடித்தான்.

கேட்ட நண்பர்கள் எவருக்கும் மூச்சு வரவில்லை!

– தொடரும்…

– 04-02-2002 மாலைமதியில் பிரசுரமான குறுநாவல்.

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *