வசந்த் + வதந்தி..!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 23, 2024
பார்வையிட்டோர்: 4,025 
 
 

(2002ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம்-4

வசந்த், பாலு, சேகர், கணேஷ், வெங்கடேஷ் அனைவரும் மாலை அலுவலகம் விட்டு கூடினார்கள்.

அருகிலுள்ள பாரதி பூங்கா அதற்கு வசதியாக இருந்தது. தனி இடம் பார்த்து புல்வெளியில் அமர்ந்தார்கள்.

“பேர், ஊர் சொல்லுங்க..?” உடனே….வசந்த் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான்.

“சீதா..!” கணேஷ் சொன்னான்.

“மார்டனாய் வைக்கலாம்..!” – என்றான் பாலு.

“இந்து பேர் வேணாம். கிறிஸ்டின், முஸ்லீம் பெண் பேரை வைக்கலாம். ராமுக்கு இப்படியாவது நாம கலப்பு திருமணம் முடித்து சாதி, மதத்தை ஒழிக்க நாமும் கொஞ்சம் ஒத்தாசையாய் இருக்கலாம்.!” வெங்கடேஷ் சொன்னான்.

“இதுவும் நல்ல ஐடியாவாதான் இருக்கு!” – சேகர் முகத்தில் மலர்ச்சி. அவனுக்கு சாதி, மதம் பிடிக்காது.

அதைத் தொடர்ந்து…. ஆளாளுக்கு தன் வாயில் வந்த பெயர்களைச் சொன்னார்கள்.

கடைசியாய் வசந்த்…

“அஜீதாபேகம்!” என்றான்.

எல்லோருக்கும் பிடித்திருந்தது.

திருப்தி!

“சரி. ஊர்..?” கணேஷ் அடுத்த கட்டத்திற்குத் தாவினான்.

“காசோலைக்குறிச்சி!” சேகர் சொன்னான்.

“அது எங்கே இருக்கு..?” – வசந்த் அவனைப் பார்த்தான்.

“அது யாருக்குத் தெரியும்.?!… நீ கற்பனையாய் இருக்கனும்ன்னு சொன்னே. நான் வாயில வந்ததைச் சொன்னேன். மத்தபடி… இப்படி ஒரு ஊர் இருக்கா இல்லியா, அது எங்கே இருக்கு எல்லாம் தெரியாது!” என்றான்.

“பேர் நல்லா இருக்கு. இந்தப் பேரை, ஊரை எங்கேயாவது பார்த்திருக்கிறீங்களா, கேள்விப்பட்டிருக்கீங்களா.?” வசந்த் மற்றவர் முகங்களை ஆராய்ந்தான்.

“இல்லே!” எல்லோரும் தலையாட்டினார்கள்.

வசந்திற்குத் தட்டுத் தடங்களில்லாத திருப்தி.

“அஜீதாபேகம், காசோலைக்குருச்சி…பெண், ஊர் பேர்கள் முடிவாகிடுச்சி. அடுத்து…பெண்ணோட கணவர் பெயர்..?” கேட்டு கணேஷ் பார்த்தான்.

“அது தேவை இல்லே. இருந்தாலும் முகமது யூசுப் வச்சுக்கலாம்.” வசந்த் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காமல் அந்தப் பெயரைச் சொன்னான்.

“முகமது யூசுப் எந்த வெளிநாட்டுல இருக்கான்.? அவன் திருமணம் முடிச்சு அங்கே போய் எத்தினி வருசம் ஆகுது.? எப்போ திரும்புவான் ? என்கிற விசயங்களை இப்பவே நாம முடிவு பண்ணிட்டோம்ன்னா நம்மில் யாரும் குழப்பமில்லாம ஒரே மாதிரி வதந்தியை விடலாம்”. சேகர் தன் யோசனையைச் சொன்னான்.

அவனுக்கு எதையும் சரியாய் துல்லியமாய் செய்யவேண்டும்!

“இதுவும் நல்ல யோசனைதான். விசயம் ஒரே மாதிரி பரவினாத்தான் எல்லோரும் நம்புங்க.” வெங்கடேஷ் ஒத்துப் பாடினான்.

வசந்திற்கு இதுவும் சரியாகப் பட்டது.

“ஓ. கே.! இதுவும் சரியான யோசனை. ராமுவைக் கவிழ்க்க எல்லோருக்கும் நல்ல யோசனையாவே வருது. இப்படி வச்சுக்கலாம். ‘முகமது யூசுப் துபாய்ல இருக்கான். அவன் அஜிதாபேகத்தைத் திருமணம் முடித்து துபாய் போய் மூணு வருசம் ஆகுது. இவர்களுக்குக் குழந்தை இல்லே. அஞ்சு வருச ஒப்பந்தத்துல அங்கே போய் இருக்கான். திரும்ப இன்னும் ரெண்டு வருசமிருக்கு. என்ன சரியா..?” கேட்டு எல்லோரையும் பார்த்தான்.

“சரியா இருக்கு. இதை இப்படியே சொல்லலாம்!” எல்லோரும் ஒட்டு மொத்தமாக சொன்னார்கள்.

“இப்போ வதந்தி முழு வடிவம் ஆச்சு. இனி…நாம அடுத்து யோசிக்க வேண்டியது ராமு!” சொல்லி வசந்த் நிறுத்தினான்.

“ராமுவைப் பத்தி யோசிக்க என்ன இருக்கு..?” வெங்கடேஷ் புரியாமல் கேட்டான்.

“இருக்கு.! நாம விடுற இந்த வதந்தி ஒழுங்கா பரவினா…ராமு மூச்சு விட்டு திரும்புற திசையெல்லாம் இதே பேச்சாய் இருக்கும். இதை நம்பினவங்களும், நம்பாதவங்களும் அவன்கிட்டேயே கேட்பாங்க. இதனால் ராமு நொந்து நூலாகிப் போவான். வீண் கெட்ட பேர், அவமானம் ஆத்திரம் மனசளவுல ரொம்ப கஷ்டப் படுவான். ஏன் ? விரக்தியின் எல்லைக்கே போய் பைத்தியக்காரன் மாதிரிகூட ஆகலாம். அவன் கஷ்டத்தைப் பார்த்து யாரும் அவனிடம் உண்மையை உளறக்கூடாது. அவனை வழிக்கு கொண்டு வர இதுதான் வழி, கிடுக்கிப் பிடி.!. வெற்றிக்குப் பிறகு நாம் அவன்கிட்ட உண்மையைச் சொல்லாம்” என்றான்.

பாலு, சேகர், கணேஷ், வெங்கடேஷ் இதை ஆமோதிப்பது போல் மௌனமாக இருந்தார்கள். அவர்கள் மனதில் வசந்த் சொல்வதெல்லாம் சரியாகவேப் பட்டது.

வசந்த் அப்படித்தான் எல்லாவற்றையும் சரியாக யோசித்து வைத்திருந்தான்.

மாலை பூங்கா மரங்களில் பறவைகளின் கூக்குரல்கள் அதிகமாக இருந்தது. விளக்குகள் எரிய ஆரம்பித்தன.

“சரி வசந்த்! இந்த வதந்தியால் ராமு அதிகம் பாதிக்கப்பட்டு மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டால்…?” கணேஷ் திகிலாய்க் கேட்டு அனைவரையும் பீதியில் ஆழ்த்தினான்.

பாலு, சேகர், வெங்கடேஷ்…முகங்களில் சட்டென்று கலவரம் பற்றியது. ஓர் உயிர் அநியாமாகப் போக எவருக்கு சகிக்கும்..?!

வசந்த் முகத்தில் எந்த கலவரம், அதிர்ச்சி இல்லை. முகம் எப்போதும் போல் தெளிவாக இருந்தது.

“ராமுவைப் பத்தி எனக்கு நல்லாத்தெரியும். கோழை இல்லே அப்படி போகமாட்டான். அப்படி ஒரு முடிவெடுத்தான்னா தடுக்க நானிருக்கேன். இந்த வதந்திக்குப் பிறகு நான், அவன் மேல் கண்கொத்தி பாம்பாய் கண் வைத்திருப்பேன். அதனால் நீங்க அவன் உயிரைப் பத்தி கவலைப்படாதீங்க.” என்றான் வசந்த்.

கேட்டவர்கள் முகங்களில் நிம்மதி சாயல்.

“அப்புறம் இதையும் நல்லா கேட்டுக்கோங்க. வதந்திக்கு முழு வடிவம் கொடுத்தாச்சு. பரப்பப் போறது நீங்க. நான் சம்பந்தப்பட மாட்டேன். நான் ரொம்ப நல்ல பிள்ளையாய் எப்போதும் போல ராமு கூடவே இருப்பேன்.

இந்த வதந்தியச் சுட்டிக் காட்டி நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் அவனை உண்மையா..? கேட்டு நச்சரிப்பேன். இல்லேன்னா திருமணத்துக்கு சம்மதின்னு வற்புறுத்துவேன். மணமகள் அவன் மாமன் மகள் ரோஜா. இதில் எந்த எந்த மாற்றமும் கிடையாது. அவள்தான் இவனுக்காகப் பொறந்திருக்காள், காத்திருக்காள். இவன் மேல் உயிரையே வச்சிருக்காள்.” என்றான்.

கேட்ட எல்லோருக்குள்ளும் ஓரளவிற்குத் தெளிவு தெம்பு வந்தது.

“சரி. இப்போ மணி 7:10. யார் யார், எப்போ, எங்கே, எப்படி வதந்தியைப் பரப்புறது..?” கேட்டு கணேஷ் நண்பர்களைப் பார்த்தான்.

“அது மொத்தமும் பாலுவோட பொறுப்பு. அவன் யோசனை, திட்டப்படி மத்தவங்க செயல் பட்டால் காரியம் கச்சிதமாக முடியும்.” சொல்லி சுமையை அவன் மேல் சுமத்தினான் வசந்த்.

எல்லோரும் அவனைப் பார்த்தார்கள்.

அவன் முகம் தீவிரமானது.

பாலு சிறிது நேரத்தில் தன் மனதில் உதித்த திட்டத்தைச் சொன்னான்.

மற்றவர்கள் மலர்ந்தார்கள், பிரிந்தார்கள்.

அத்தியாயம்-5

அடுத்த நாள்.

பாலு விடுப்பெடுத்துக் கொண்டு தன் யமஹாவில்…. எவரோ வெளியூர் ஆள் போல பந்தாவாக ராமு கிராமத்தை நோக்கி சென்றான்.

உண்மையில் பாலுவிற்கு திருச்சி சொந்த ஊர். பெண் எடுப்பு தஞ்சாவூர். சர்க்கரை ஆலையில் வேலை கிடைத்ததால் எடப்பாடியில் தங்கல்.

ஈச்சம்பட்டு கிராமம்…. மெயின் ரோட்டிலிருந்து தொலைவில் ஒரு தீவாய் இருந்தது. சுற்றிலும் வயல்கள் பசுமையாய் இருக்க… அந்த ஊரை நோக்கி இரு புறமும் புளிய மரங்கள் நின்று நிழல் தர…சாலை சென்றது. சாலையில் கிராமத்து மக்கள் நடமாட்டம் இருந்தது.

அவர்கள், எதிரே யமஹா மோட்டார் சைக்கிள் வருவதை பார்த்து வழி விட்டு ஒதுங்கினார்கள்.

பாதி வழியில் ஐம்பது வயது பெரியவர் ஒருத்தர் வந்தார். தலை முக்கால்வாசி வழுக்கையாய் இருந்தது. மீசை, ஒரு வார தாடி, முடியெல்லாம் வெளுப்பாக இருந்தது. கொஞ்சம் உயரம் கம்மியாக இருந்தார். வெற்றிலை போட்டுவார்போல… வாய் காவி. வெற்றிலைப் பொட்டலம் மடி சரிந்து பெரிதாக இருந்தது. தோளில் துண்டு நழுவாமலிருந்தது. காலில் செருப்பிலை.

பாலு சாலையோர புளிய மர நிழலில் வண்டியை நிறுத்தினான்.

அவர் அருகில் வர..

“பெரியவரே!” அழைத்தான்.

அவர் திரும்பிப்பார்த்தார்.

“கொஞ்சம் நில்லுங்க.” பவ்வியமாய் கை காட்டி நிறுத்தினான்.

‘ஆள் எதோ ஊருக்குப் புதுசு. வழிப்போக்கு!’ நினைத்து நின்றார்.

“நீங்க அந்த ஊர்லேர்ந்துதானே வர்றீங்க..?” தூரத்தில் தெரிந்த கிராமத்தைக் காட்டி தெரியாதவன் போல் கேட்டான்.

“அ..ஆமாம்!”

“அது ஈச்சம் பட்டு கிராமம் தானே…?”

“அதேதான்! …”

“அங்கிருந்துதானே ராமு என்கிற பையன் எடப்பாடி சீனி ஆலையில வேலை செய்யிறார்..?”

“ஆமாம்!”

“அவர் வீடு ..?”

“மூணாவது தெரு கடைசியில் சின்ன புது ஒட்டு வீடு!”

“பெரிய ஊரா..?”

“பெரிசு. ஏழெட்டுத் தெரு. மளிகைக்கடை, டீக்கடையெல்லாம் இருக்கு.!”

“அந்த பையனை உங்களுக்குத் தெரியுமா. .?”

“எங்க ஊர் பையன்தான். என்ன விசயம் சொல்லுங்க?”

“ஆள் எப்படி…?”

“புரியல..?!”

“நல்லவரா..?”

“எதுக்கு கேட்குறீங்க..?”

“இல்லே. என் தங்கச்சி ஜாதகம் அவருக்குப் பொருந்தி இருக்கு…”

“அப்படியா…?!” ஆள் முகத்தில் சட்டென்று வியப்பு திகைப்பு.

“அதான்…பையனைப் பத்தி விசாரிச்சிப் போகலாம்ன்னு வந்தேன்.”

“சுத்தத் தங்கம்! தாராளமா பொண்ணைக் கொடுக்கலாம்.”

“ஆனா விசாரிச்ச வகையில்…விசயம் வேற மாதிரி இருக்கு!” பாலு தர்மசங்கடமாய்ச் சொல்லி கையைப் பிசைந்தான்.

“அப்படியா…!?” அவருக்கு சின்ன அதிர்ச்சி வாய் பிளப்பு.

“ஆமாம் சார். அதான் ஊர்ல வந்து நல்லா விசாரிச்சு போகலாம்ன்னு வந்தேன்…” சொல்லி அவரை அடிக்கண்ணால் பார்த்தான்.

அவர் அதிர்ச்சியிலிருந்து இன்னும் விடுபடவில்லை.

“பெண்ணைக் கொடுக்கிறது . கண்ணைக் கொடுக்கிறாப்போல சார்..” என்று கொஞ்சம் கலங்கினாற்போல் கமறினான் பாலு.

“ரொம்ப சரிங்க..” என்றார் பெரியவர்.

“அ….அந்த பையன் அலுவலக வேலையாய் அடிக்கடி ஒரு வாரம், பத்து நாள்னு வெளியூர் போவாராம். அங்க எங்கேயோ காசோலைக்குருச்சின்னு ஒரு ஊராம். அங்கே அங்கே முகமது யூசுப்புன்னு ஒருத்தர் வெளிநாடு போயிருக்கிறாராம். துபாய்ல வேலையாம். போய் மூணு வருசம் ஆகுதாம். திரும்ப இன்னும் ரெண்டு வருசம் இருக்காம். அவரோட மனைவி பேர் அஜிதாபேகம்ன்னு சொன்னாங்க. அந்த ஊர்ல தனியாத்தான் இருக்காங்களாம். புள்ள இல்லையாம். புருசன் அனுப்புற காசை வச்சி குடும்பம் நடத்துறாங்க. எப்படியோ அந்த பொண்ணுக்கும் இந்த ராமு பையனுக்கும் தொடர்பு ஏற்பட்டு போச்சு. ரொம்ப நாளா நடந்துக்கிட்டிருக்கு. இது எப்படியோ வெளிநாட்டுல இருக்கிற புருசனுக்குத் தெரிஞ்சு போச்சு. யாரோ போன் போட்டு, கடுதாசு போட்டு விபரம் சொல்லிட்டாங்க போல.” நிறுத்தினான்.

பெரியவர் முகத்தில் ஈயாடவில்லை.

“எந்த புருசனுக்குப் பொறுக்கும்.? அந்த ஆள் உடனே இவளுக்கு விவாகரத்து நோட்டிஸ் அனுப்பிட்டாப்போல. பாதிக்கப்பட்டவள் சும்மா இருப்பாளா..?! நடுத்தெருவுல நிப்பாளா.! உடனே அவள் ராமுகிட்ட…’உன்னாலதான் என் வாழ்க்கைப் போச்சு, கெட்டேன். என்னைக் கலியாணம் பண்ணு. இல்லே… நீயும் பண்ணாம என்னை இப்படியே வச்சு குடித்தனம் நடத்து. இன்னொருத்தி கழுத்துல தாலி கட்ட நினைச்சி என்னைக் கை கழுவ நெனைச்சே.!?. மவனே..! மண்டபத்துல வந்து கலாட்டா பண்ணி நியாயம் கேட்பேன். இல்லே, போலீசுக்கு விபரம் தெரிவிச்சு தற்கொலை பண்ணிப்பேன்’னு மிரட்டுறாளாம்!

ராமு, அவள் பிடியிலிருந்து தப்ப முடியாம, வெட்க கேட்டை வெளியில சொல்லவும் முடியாம…திணறி, வீட்டில திருமணமே வேணாம்ன்னு சொல்லி திரியறதா கேள்வி. இதைக் கேட்டதும் நான் அப்படியே ஆடிப்போயிட்டேன். இப்ப சொல்லுங்க. ராமு நல்லவனா கெட்டவனா..? சேதி உண்மையா, பொய்யா? தயவு செய்து உண்மையை ஒளிக்காம சொன்னீங்கன்னா ஒரு பொண்ணைக் காபந்து பண்ணிய புண்ணியம் உங்களை வந்து சேரும். நிஜத்தை சொல்லுங்க சார்..?!” ஏறக்குறைய அழும் அளவிற்கு குரலை மாற்றி ஏற்ற இறக்கமாய்ச் சொல்லி…. ஆளைப் பாவமாகப் பார்த்தான்.

இதுதான் பாலு.!

எந்த பொய்யையும் மெய்போல் சொல்வான்.! எதை எப்படி சொல்ல வேண்டுமோ அப்படி சொல்வான்.! எங்கு எப்படி நடிக்க வேண்டுமோ அப்படி நடிப்பான்.!

இவனின் இந்த திறமையை மனதில் வைத்துதான் வசந்த் ஒளிபரப்பும் வேலையை இவனிடம் ஒப்படைத்தான்.

கேட்ட பெரியவர் அப்படியே பேச்சு, மூச்சற்றுப் போனார்.

ராமு நல்லவன், யோக்கியன், குடும்ப பொறுப்பு உள்ளவன். அக்கா தங்கைகளோடு பிறந்த காரணம் எந்த அடுத்த பெண்களையும் ஏறெடுத்து பார்க்காதவன்! என்று முத்திரைக் குத்தி இருக்க…. பின்னணியில் இவ்வளவு பெரிய அயோக்கியனா..? ஆள் திருமணமே வேண்டாம் என்று முடிவில் இ ருப்பதற்கு இதுதான் காரணமா. அவரால் அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை.

“அப்படிங்களா…?” நம்ப முடியாமல் கேட்டார்.

“அ…ஆமாம் சார்…”

“பையன் நல்லவன். எப்படி இப்படி…?” அவர் குழம்பினார்.

“சார்! விசயம் உங்களுக்குத் தெரியாதா..?” பாவமாகப் பார்த்தான்.

“தெரியாது சார். எந்த புத்துல எந்த பாம்பு இருக்குன்னு யாருக்குத் தெரியும்.? பையன் முடிவு, நீங்க சொல்ற சேதி… எல்லாத்தையும் சேர்த்து பார்த்தால்…. பையன் போக்கு சரி இல்ல போலத்தான் தெரியுது.

ஆனா…. நான் இதுவரைக்கும் அவனைத் தப்பா பார்த்ததில்லே. காதால கேட்டதும் இல்லே. ஆளைப் பொறுத்தவரை இங்கே நல்ல பையன். இங்கே இப்படி நடிச்சி வெளியூர்ல அப்படி இருக்கவும் வாய்ப்பு உண்டு. எதுக்கும் யோசனைப் பண்ணி பொண்ணைக் கொடுங்க. இந்த காலத்துல எவன் நல்லவன், எவன் கெட்டவன்னே தெரிய மாட்டேங்குது?” நொந்து கொண்டு நகர்ந்தார்.

‘இந்த நெருப்பு போதும் பற்ற..!’ மனசுக்குள் சொல்லி வண்டியை எடுத்தான் பாலு.

அடுத்த கால்கிலோமீட்டர் தூரத்தில் ஜாக்கெட் போடாத அறுபது வயது கிழவி ஒருத்தி எதிரில் வந்தாள்.

‘ஆண்களைவிட பெண்கள் காதில் ரகசியத்தை வெளியிட்டால்தான் அது சீக்கிரம் வெளிவரும்!’ என்பது பாலுவிற்குத் தெரியும்.

வண்டியை நிறுத்தி…நல்ல பிள்ளை மாதிரி அவள் காதிலும் விசயத்தைப் பற்ற வைத்தான்.

இப்படியே நான்கைந்து ஆண், பெண் ஆட்கள் காதுகளில் சேதியைப் போட்டு கடைசியாக…

ராமு வீட்டு வாசல் முன் வண்டியை நிறுத்தி இறங்கினான்.

அத்தியாயம்-6

வாசலில் ….

‘பேண்ட், சட்டை போட்ட புது ஆள்!’ பாலு தலைப் பார்த்ததுமே உள்ளே அமர்ந்திருந்த தணிகாசலம் எழுந்து பரபரப்பாக வெளியே வந்தார்.

கூடவே…அவர் மனைவி செண்பகமும் வந்தாள்.

வண்டியை விட்டு இறங்கிய பாலு…

“சார்! ராமு வீடு…” கேட்டு இழுத்தான்.

“அவர் வீடுதான். நான் அப்பா. இவள் என் மனைவி! அவன் அம்மா..” தணிகாசலம் பதற்றம் மாறாமல் தன்னை, மனைவியை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“வணக்கம்..!” மரியாதை நிமித்தம் அவர்களை பார்த்து கை கூப்பி…

“நான் ராமுவோட வேலை பார்க்கிறவன். பேர் பாலு!” இவன் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டான்.

“வணக்கம். உள்ளே வாங்க தம்பி!” சொல்லி தணிகாசலம் திரும்பி நடந்தார்.

அவர் மனைவியும் அவரைத் தொடர்ந்தாள்.

தணிகாசலம் கூடத்தில் பாலிமர் நாற்காலி போட்டார்.

“உட்காருங்க தம்பி!” சொல்லி ஓடிக் கொண்டிருந்த தொலைக்காட்சி பெட்டியை அணைத்தார். எதிர் நாற்காலியில் அமர்ந்தார்.

செண்பகம் உள்ளே சென்றாள். அடுப்படியில் பாத்திரங்கள் பயன்படுத்தும் சத்தம் கேட்டது.

சிறிது நேரத்தில் அவள் ஒரு டம்ளரில் மோர் எடுத்து வந்து நீட்டினாள்.

வாங்கி பருகினான். வெயிலுக்கு இதமாக இருந்தது.

அவள் கணவன் அருகில் நின்றாள்.

“ராமு வெளியூர் போயிருக்காப்போல.” தணிகாசலம் தகவல் சொன்னார்.

“தெரியும். ஒரு வாரம் அலுவலக வேலையாய் போயிருக்கார்!” இவன் காலி டம்ளரைக் கீழே வைத்து சொன்னான்.

‘பெற்றவர்களுக்கு அதிர்ச்சியை தொப்பென்று போடக்கூடாது!’ என்று முடிவெடுத்துக்கொண்டான்.

“ராமுக்குக் கலியாண வயசு தாண்டுதே. முடிக்கிற எண்ணமில்லையா…?” வந்த விசயத்தைத் தொட… மெல்ல பேச்சை ஆரம்பித்தான்.

“எங்கே தம்பி! சொல்லக் சொல்லக் கேட்காம இப்படியே இருக்கேன்னு நிக்கிறான். என்ன பண்ண…?” அவர் தன் இயலாமையை வெளியிட்டார்.

“எங்களால முடிஞ்ச அளவுக்கு சொல்லியாச்சு. வசந்த், உங்களைப்போல நண்பர்கள்தான் அவன் மனசை மாத்தி வேலையை முடிக்கனும்..” தாய் ரொம்ப அக்கறையாய்ச் சொன்னாள்.

“எங்கே எங்களுக்கும் பிடி கொடுக்க மாட்டேங்கிறான், தண்ணி காட்றான்” என்ற பாலு கொஞ்சம் நிறுத்தி…

“என்ன விசயம்ன்னு கேட்டீங்களா..? ” கேட்டு அவர்களைப் பார்த்தான்.

“கேட்டோம் தம்பி! நாங்க பொண்ணுங்களைப் பெத்ததுதான் வினையே. தப்பா போச்சு.! அதுங்களுக்கு செய்து முடிக்கிறதையே வாழ்க்கையாய் நினைக்கிறான். சுமக்கிறவனுக்கு அப்படித்தான் தெரியும். அதையெல்லாம் உடைச்சி வெளியே வந்து கலியாணம் பண்றதுதான் வாழ்க்கை. ராமுக்கு எவ்வளவோ எடுத்து சொல்லியாச்சு. புரியல. பிடிவாதமா நிக்கிறான். நீங்க ஏதாவது கேட்டீங்களா..?” அவர் இவனைத் திருப்பிக் கேட்டார்.

“கேட்டோம். உங்ககிட்ட சொன்னதையே எங்ககிட்டேயும் சொல்றான். சரின்னு விட்டுப் போனப்பத்தான் ஒரு தகவல் எங்க காதுக்கு வந்தது…”

“என்ன சொல்லுங்க..?” – கணவன் மனைவி முகங்களில் ஆர்வ, ஆவல் மின்னல்.

“உண்மையா பொய்யா தெரியல.” கையைப் பிசைந்து நிறுத்தினான்.

அவர்களிடம் அதிக வெளிச்சம்.

“இ…இவன் எங்கேயோ ‘வைப்பு’ ஒன்னு வச்சிருக்கானாம். அவள்கிட்டேயிருந்து விலக முடியாம தவிக்கிறானாம்..!”

“தம்பிஈஈ..” இருவரும் சேர்ந்து அலறினார்கள்.

“உங்களுக்குத் தெரியாதா…?”

“தெ…தெரியாது…” விசய தாக்கம். தணிகாசலம் நடுக்கத்துடன் சொன்னார்.

“நான் வந்து உடைச்சதாய் சொல்ல வேணாம். அப்புறம் எனக்கும் அவனுக்கும் மனஸ்தாபம் ஏற்படும். நாசூக்கா விசாரிங்க. நானும்…விசயத்தைச் சொல்லாம இந்த ஊர்ல கொஞ்சம் பேர்கிட்ட விசாரிச்சேன். கேள்வி பட்டதாய் சொன்னாங்க. யார், என்னன்னு விசாரிங்க. அப்புறம் அதை எப்படி முடிக்கலாம்ன்னு நாம பேசலாம். விசயம்….அவன் மாமன் பொண்ணு ரோசா காதுக்குப் போகாம இருக்கட்டும். காத்திருப்பவள். ரொம்ப கஷ்டப்படுவாள். பின்னால கலியாணம் கட்டிக்க மறுப்பாள். மூச்!” எச்சரித்தான்.

“தம்பி !..ராமு வைப்பு வச்சிருக்கான்னு சொன்னீங்களே…ஆள் கன்னிப்பொண்ணா? கலியாணமானவளா..?” தணிகாசலம் கேட்டார்.

“என்ன கேட்குறீங்க..?”

“ஏன் திருட்டுத்தனம்.? பேசாம அவளையே முடிச்சுடலாம்” – இவருக்கு அப்படியாவது மகன் ராமுவிற்கு திருமணத்தை முடிக்க ஆசை, சொன்னார்.

பாலு உஷாரானான்.

“நாங்களும் அப்படித்தான் நினைச்சோம். விசயம் வில்லங்கம்..!” என்றான்.

“என்ன..?” – செண்பகம்.

“கலியாணமானவளாம்..!”

“புருசன் இருக்கானா..இல்லியா..?” – தணிகாசலம்.

“இருக்கான் ! வெளிநாட்டுல வேலை. முஸ்லிமாம். வேத்து மதம்.! மொட்டை பாப்பாத்தி மாதிரி முக்காடு போட்டவள். விசயம் தெரிஞ்சி அவன் இவளுக்குத் தலாக் கொடுத்துட்டானாம்.”

“தலாக்ன்னா..?”

“விவாகரத்து..!”

“ஐயையோ..!”

“அவளுக்குப் புள்ளைக்குட்டி இருக்கா..?”

“இல்லேன்னு கேள்வி. சரியாத் தெரியல..?!”

மாறி மாறி கேள்விகள் கேட்ட… கணவன் மனைவி முகங்களில் கலவரம், குழப்பம்..

“விசயம் வெளியில வர்றவரைக்கும் எத்தினி நாளானாலும் கொஞ்சமும் கோபப்படாம விசாரிங்க. உண்மை, பொய் தெரிஞ்ச பிறகு நாம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம். இதை உங்க காதுல போடத்தான் வந்தேன். தயவு செய்து விசயத்தை வெளியில கேள்வி பட்டதாய் சொல்லுங்க. யாருக்கும் எந்தவித கெடுதலும் இல்லாம நாம் எச்சரிக்கையாய் செயல் படனும். வெண்ணெய் எடுக்க தாழியை உடைச்சிடக்கூடாது. ஆள் கோபப்பட்டால் விசயத்தை விட்டுடுங்க.ரொம்ப தொல்லைக்கு கொடுத்து ஆள் விரக்தி எல்லைக்குத் தள்ளி விபரீத முடிவுக்கு ஆளாக்க வேணாம். வர்றேன்!” பொறுப்பாய் சொல்லி எழுந்தான்.!

சேகர், கணேஷ், வெங்கடேசுகள் இதே விசயத்தைத் தங்கள் பாணியில்…ராமு நண்பர்கள், தெரிந்தவர்களிடம் கூறினார்கள்..!

– தொடரும்…

– 04-02-2002 மாலைமதியில் பிரசுரமான குறுநாவல்.

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *