ராமசாமிகள் வம்ச சரித்திரம்: மறைக்கப்பட்ட உண்மைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 10, 2025
பார்வையிட்டோர்: 167 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முற்றிலும் எதிர்பாராத காலையைச் சந்திக்க நேர்ந்தது. வரிசை வரிசையாக நகரும் ஜனக்கூட்டம். எங்கிருந்து புறப்பட்டு வருகிறார்கள் என்பது தெளிவில்லை. ஜெமினி மேம்பாலத்தின் மீது உட்கார்ந்து காலைத் தொங்கவிட்டபடியே பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். குதிரை வீரன் சிலை மீது இருவர் தொற்றியபடியே புகைப்படமெடுத்துக் கொண்டிருந்தனர். பீச் ரோட்டில் இதை விடவும் ஜனத்திரள் அதிகமென செய்தி வந்தபடியிருந்தது.

யாருடைய திட்டமெனத் தெரியவில்லை. முன் எப்போதும் இதுபோல நடந்திருக்கிறதா என்பது கூட சந்தேகமே. ராமசாமி என்ற பெயருள்ள எல்லோரும் ஒரே இடத்தில் கூடி மாநாடு நடத்துவது மனிதகுல சரித்திரத்தில் இதுவே முதல் தடவை எனச் செய்தித் தாள்களில் அச்சேறி இருந்தது. உலகெங்குமிருந்து ராமசாமிகள் புறப்பட்டு வந்தபடியே இருந்தனர். பெயரில் என்ன இருக்கிறது என விட்டுவிட முடியாது. ராமசாமிகளும் மற்ற பெயர்களும் ஒன்றா என்ன!

ராமசாமிகளே ஒன்று சேருங்கள், உங்கள் உலகம் சீரணி அரங்கில் உருவாக உள்ளது எனத் தமிழகமெங்கும் அறைகூவல் விடப் பட்டிருந்தது. நகரெங்கும் வால்போஸ்டர்கள், பேனர்கள். மூன்று நாள்கள் நடக்க இருந்த மாநாட்டுக்கு இலக்கிய, விவசாய, மருத்துவ, மொழியியல், அரசியல், தத்துவ, போஸ்ட் மார்டனிச, சமூக, மத, யதார்த்த; அதார்த்த, ஸ்ட்ரக்சுரலிச, வித்தக, முத்தமிழ் ராமசாமிகள் பலர் கலந்து கொள்கிறார்கள் என்ற விவரம் உலகமெங்கும் பரவ, ராமசாமி அல்லாதவர்கள் பரபரப்பாகச் செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

மாநாட்டின் சிறப்புப் பிரதிநிதிகளாக காங்கோ நாட்டின் உம்பர்ட்டோ ராமசாமியும், நுவா தேசத்தின் எட்வர்ட்டி ராமசாமியும், பிரபல சூப்பர் ஸ்டார் நடிகரும், ஹாலிவுட்டின் மொழியியல் அறிஞருமான ஆர்னால்ட் ராமசாமி ஸ்வாஸ் நெக்கர் அவர்களும், இன்னும் ராமசாமிஸ்கி, சூ என் ராமசாமி (ஐ.நா. சிறப்புத் தூதுவர்) எனப் பலரும் வருகை தர இருந்தனர். லட்சக்கணக்கான ராமசாமிகள் ஒன்றுதிரண்ட அந்த நாட்களைப் பற்றிய வரலாற்று உண்மைகள் எந்தச் சார்புமற்று ஆன்ம ஒளியில், சுயப்பிரகாசமாக உங்கள் முன் என்னால் முடிந்தவரை நான் விவரிக்க விரும்புகிறேன். என் புலன்களின் வழியே செய்தி நிறைந்து கொண்டிருப்பதால் நான் சில செய்திகளை விட்டுச் சிலவற்றைக் கற்பனை வழியின் நீட்சியில் உங்களிடம் விவரிக்கிறேன்.

ராமசாமிகள் நேற்றே ரயிலில், லாரிகளில் வந்து குவியத் தொடங்கி விட்டார்கள். தாம்பரம் ரயில் நிலையத்தில் எட்டாயிரம் ராமசாமிகள் டிக்கெட் வாங்காமல் பிடிபட்டு நிற்பதாகத் தகவல் வருகிறது. ராமசாமிகளின் மாநாட்டுக்காக எல்.ஐ.சி.யின் பதினான்கு மாடிகளும் காலி செய்யப்பட்டு விட்டன. எல்லா மாடியிலும் ராமசாமிகள் நிறைந்துவிட்டார்கள். துவைத்துக் காயப்போட்ட ஈர வேஷ்டிகள் படபடக்க எல்லா ஜன்னல் களிலும் ராமசாமிகளின் தலை தெரிகின்றது. ஒரு வயதிலிருந்து வயதைப் பற்றிய பிரக்ஞை மறந்த நிலை வரை பல ராமசாமிகள் திரிகிறார்கள். முக இயல்பு மாற்றம் கொண்டு திரிகின்றனர். யாரோ ஒருவன் ராமசாமி எனக் கைதட்டிக் கூப்பிட அலை போல பல வயது முகங்கள் திரும்புகின்றன நான்கு கோடி ராமசாமிகள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என பி.பி.ஸி. ரேடியோ அதிகார பூர்வமாக அறிவித்தது. சீரணி அரங்கில் சுழல் மெத்தை அமைக்க இருநூறு ராமசாமிகள் இரவு பகலாக வேலை செய்தனர்.

மாநாட்டுப் பந்தலின் வெளியே தியாகி ராமசாமிகளின் திரு வுருவப் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. எல்லோர் முகமும் ஒன்றுபோல் இருந்த ராமசாமிகளின் உருவப்படங்களை ராமசாமிகளே கண்டனர். வணங்கினர். எல்லாத் திருவுருவப் படங்களின் அடியிலும் உப்புப் பொட்டலம் வைக்கப்பட்டி ருந்தது.உப்புக் காய்ச்சிய ஞாபகம் மீண்டும் நினைவு வர ராமசாமி கள் உப்பைச் சுவைத்தபடியே தியாகிகளுக்காகக் கண்ணீர் வடித்தனர்.

மாநாட்டுக்காக ஜோதி கொண்டு வருவது அந்தமானிலிருந்து தியாகி ஆராவயல் ராமசாமியின் கடமையாக இருந்தது. ஆயிரம் ராமசாமிகள் ஒன்றுதிரண்டு அந்தமானிலிருந்து கப்பலில் புறப்பட்டனர். துறைமுகத்தில் பல ராமசாமிகள் கையசைத்து வழியனுப்பினர். கப்பலெங்கும் ராமசாமிகளின் முகங்கள். கப்பல் கூரை மீது அமர்ந்து தியாகி ஆராவயல் ராமசாமி சுதந்தர உரையாற்றினார். அதன் கருத்தாழமிக்க சில பகுதிகள்:

“ராமசாமிகளே! ராமசாமி என்பதும் மற்ற பெயர்களும் ஒன்றல்ல என்பதை அன்றே நாம் ஆங்கிலேயருக்கு நிரூபித்தோம். ராமசாமி என்பது தமிழ் அடையாளம். உலகெங்கிருந்தாலும் ராமசாமி தன் இயல்பை விட மாட்டான். ராமசாமிகள்தான் தமிழ் வாழ்வை, அரசியலை, தத்துவத்தை, இலக்கியத்தை நூற்றாண்டுகளாகக் காத்து வருகிறார்கள். சந்திரனில் காலடி வைத்த முதல் நபர் ராமசாமியே. சரித்திரம் அதை மறைத்துவிட்டது. ஆனால் வரலாற்றின் பக்கங்கள் ராமசாமிகளால் நிறைந்துள்ளதை எவர் மறுக்க இயலும். (கைத்தட்டல்) நம் அபிமான தத்துவஞானி ஹெகல் ராமசாமி, சொல்லுவது போல “ராமசாமி மாறாத பெயர்’ ஆகும். ராமசாமிகளின் எதிர்காலத்தை இந்த மாநாடு தீர்மானிக்கும் ராமசாமிகளே!”

இந்த உரை முடிவதற்குள் கடலில் சீற்றம் அதிகமாகி அலைகள் கப்பலை விட உயர்ந்து வீசத் தொடங்கிவிட்டன. அலையின் பிடியில் திசை தவறியது கப்பல். இரவெல்லாம் அலை சப்தம் கேட்டு உறங்கிக் கிடந்த ராமசாமிகளுக்கு கடலில் பிறந்த மஞ்சள் நோய் தாக்க அடுத்த நாளின் பிற்பகலில் 999 ராமசாமிகள் இயற்கை எய்திவிட்டனர். சரிந்து கிடக்கும் உடல்கள் உப்பு நீரில் மிதக்க கப்பலின் உயர்தளத்தில், நின்றபடி தன் பயத்தைப் போக்கிக்கொள்ள ஆராவயல் ராமசாமி “தாயின் மணிக்கொடி பாரீர்!” என்ற பாடலைப் பாடினார். 999 ராமசாமிகளின் உடலோடு கப்பல் திசை தப்பி அலைந்தபடி இருந்தது. தனி ஆளாகப் பிணங்களுடன் இருந்த ஆராவயல் கடலை வெறித்துக் கொண்டிருந்தார். பறவைகள் கப்பலைச் சுற்றி வட்டமிட்டன. ராமசாமிகளின் வரலாற்றில் நடந்த துயரச் சம்பவம் அறியாது சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் கூட்டம் அலைமோதியபடி வந்து இறங்கிக்கொண்டிருந்தது. மாநாட்டுக்காகப் பிரபலக் கவிஞரான தெப்பக்குளம் ராமசாமி, நவீன விமர்சகரான சுண்டுவிரல் ராமசாமி, உலக நாவல்களை மட்டுமே எழுதும் நீர்வீழ்ச்சி ராமசாமி, இன்னும் ஆர்ப்பாட்டம் ராமசாமி, யதார்த்தம் ராமசாமி அவர்களின் அன்பர்கள், வாசகர்கள், ரசிகர்கள், நேசர்கள், பிரியர்கள், தற்கொலைப் படை எனப் பல ராமசாமிகள் இந்த ராமசாமிகளுடன் இணைந்து கன்னியா குமரியிலிருந்து சென்னை வந்த இலக்கிய ஸ்பெஷல் ரயிலில் வந்துகொண்டிருந்தனர்.

ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் எழுத்தாள ராமசாமிகளைக் காண மற்ற ராமசாமிகள் முட்டி மோதிக்கொண்டு நின்றனர். ராமசாமிகளின் வாசகங்கள் அடங்கிய அட்டைகள் பிளாட்பார மெங்கும் அடுக்கப்பட்டிருந்தன. பிளாட்பாரத்தில் ரயில் வந்து நின்றது.

“சூடான நாவல் சார், சூடான சிறுகதை சார், கவிதை…சார். நாவல் சார். கவிதை சார், கதை சார்…” எனப் புஸ்தகங்களைக் கூவிக்கொண்டு விற்றுக்கொண்டு போனார்கள் நீலநிற ஊழியர்கள். தனி குளிர்சாதனப் பெட்டியில் உட்கார்ந்திருந்த நீர்வீழ்ச்சி ராமசாமி தன் அன்பர்களிடையே சொன்னார்.

“இந்த ஊர் நாவல் ரொம்ப நல்லாயிருக்கும். வட்டாரத்து ருசி அப்படி” என்றார். அன்பர்கள் ஓடிப்போய் ஆளுக்கொரு நாவல் வாங்கி வந்து சுடச்சுடப் படித்தார்கள். ரயில் கொக்கலாஞ்சேரி ஸ்டேஷனுக்கு வந்தபோது அங்கே தனி ஆளாக உட்கார்ந்திருந்த சீனியர் ரைட்டர் பவளக்கொடி ராமசாமியை சுண்டுவிரல் ராமசாமி கைதட்டிக் கூப்பிட்டார்.

“அவுகள உள்ள வரச் சொல்லுங்க. பழைய பவளக்கொடியில கதை எழுதுன சீனியர் ரைட்டர். உள்ள கூப்பிடுங்கோ.”

எண்பது வயதான பவளக்கொடி ராமசாமி விற்றுப்போகாத தனது பதினெட்டு நூல்களுடன் ரயிலில் ஏறினார். அவருக்கு சுண்டு விரல் ராமசாமி ஒதுங்கி இடம் கொடுத்தார். சீனியர் ரைட்டர் வெறும் தங்கபஸ்பம் புகையிலை மட்டும் போடக்கூடியவராத லால் அவர் ஜன்னல்புறமாக உட்கார்ந்து கொண்டார். ரயில் புறப்பட்டதுமே தனது பவளக்கொடி கால நினைவுகளைக் கொட்டத் தொடங்கினார். உடனே ராமசாமிகள் தூங்கத் தொடங்கினர்.

அடுத்த பெட்டியிலிருந்த ஆர்ப்பாட்டம் ராமசாமி தன் சிஷ்யர் களுக்கு ஆர்ப்பாட்ட நினைவுகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவரது சமீபத்திய ஆர்ப்பாட்டம் தாலுகா அலுவலகத்தின் முன்பு நடைபெற்றது. தமிழில் தற்போது பிரபலமாகி வரும் மேஜிக்கல் ரியலிசம், போஸ்ட் மார்டனிச எழுத்துகளை எதிர்த்து தாசில் தாரிடம் மனுக்கொடுக்க நூறு ராமசாமிகளுடன் போராடினார். எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் ராமசாமியின் புகார் தகர சிலேட்டில் எழுதி தாசில்தாரிடம் கொடுக்க அவர் அதில் “O” மார்க் போட்டு அவருக்கே திருப்பித் தந்துவிட ஆர்ப்பாட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சீரணி அரங்கினை ராமசாமி அரங்கம் என அறிவித்து வேலைகள் நடந்தன.ராமகிரிசாமி தமிழின் முதல் பவுண்டன் பேனா எழுத்தாளர். அதற்கு முன்பெல்லாம் மயிலிறகு, தொட்டு எழுதும் பேனா புழங்கிய காலத்தில் முதன் முதலாக பவுண்டன் பேனாவில் கதை எழுதத் தொடங்கிய பெருமை ராமகிரி சாமிக்கே உண்டு. கன்னத்தில் ஒரு கையை ஊன்றியபடி பவுண்டன் பேனாவுடன் அவர் உருவப்படம் மாநாட்டுப் பந்தலில் தீட்டப்பட்டிருந்தது. மிகப் பெரிய மைக்கூடு ஒன்று அவர் ஞாபகமாக வீட்டு முன்பு திறக்கப்பட்டது. ராமகிரிசாமி அரங்கின் பின்புறத்தில் அமர்ந்து யதார்த்தம் ராமசாமி தனது புதிய யதார்த்த நாவலான கோ 17:17:17ஐ எழுதிக்கொண்டிருந்தார். அதை வேளாண்மை விவசாயக் கழகம் வெளியிட முன் வந்திருந்தது. கோடையில் பருத்திச் சாகுபடி செய்வது பற்றிய அந்த நாவலை எழுதும்போது துயரம் தாளாது அவரே விம்மி விம்மி மூன்று பேனா முனையை உடைத்துவிட்டார்.

வழிதவறிய கப்பல் தெலுங்கு தேசக் கரையில் முட்டி நின்றது. ஜோதியோடு உறங்கிக்கொண்டிருந்த ராமசாமி கிளம்பி நடைப் பயணமாக ஆந்திரக் கிராமங்களில் வந்தபோது நாய்கள் அவரை விரட்ட, ஓட்டமாகவே சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். எக்மோர் ஸ்டேஷனில் இலக்கிய ரயிலை வரவேற்க பல ராமசாமிகள் இரவெல்லாம் காத்திருந்தனர். மாநாட்டில் கௌர விக்கப்பட உள்ள நூறு பிரபல ராமசாமிகள் லாட்ஜ்களுக்குக் கூட்டிப் போகப்பட்டனர். பொன். ராமசாமி தலைமையில் நூற்றியெட்டு பேர் கூடி அறிக்கை தயாரித்துக் கொண்டிருந்தனர். இந்த வேளையில் மானுடவியல் துறையின் லெவிஸ்ட்ரோ ராமசாமி மகாபலிபுரப் பாறைகளுக்குள் மெழுகுவர்த்தி ஒளியில் “ராமசாமிகளின் வம்ச சரித்திரம்: மறைக்கப்பட்ட உண்மைகள்”

என்ற வரலாற்று ஆவணத்தை எழுதிக்கொண்டிருந்தார். அதிலிருந்து…

“ஆதியில் எல்லாத் தமிழ் எழுத்துகளும் ‘ரா’ என்ற முதல் எழுத்தில்தான் தொடங்கின. அதன் வழியே தமிழர்கள் ‘ராமசாமி’ எனப் பெயரிட்டனர். ராமசாமிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நாகரீக முறையில் ஒப்பனை செய்துகொண்டு வாழ்ந்த தற்குச் சான்றாக மொகஞ்சதாரோவுக்கு அருகிலுள்ள குறுநிலப் பரப்பின் ‘ராப்பா’ என்ற இடத்தில் சான்றுகள் கிடைத்துள்ளன. இங்கு தோண்டி எடுக்கப்பட்ட மண்பானைகளில் ‘ரா’ என செதுக்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிய இயலும் (புகைப்பட உதவி : ராப்பா அகழ்வாராய்ச்சி). அதை முதுபெரும் மானுடவியல் அறிஞர் த.நா.அல்டன் சிங்களோ ராமசாமி ஒப்புக்கொண்டி ருக்கிறார். ஆக உலகில் தோன்றிய முதல் பெயர் ராமசாமியே (ரா.வ.ச. பக். 24)

ரயிலில் புகையிலையை மென்றபடி நவீனக் கதைகளைப் பற்றித் திரித்துப் பேசிய பவளக்கொடி ராமசாமியைத் தெப்பக்குளம் ராமசாமிக்குப் பிடிக்கவேயில்லை. இலக்கியச் சர்ச்சை முற்றி இருவருக்குள் வந்த சண்டையில் தெப்பக்குளம், புகையிலை மட்டையைப் பிடுங்கி வெளியே எறிய, சீனியர் ரைட்டர் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த, சீனியர்ரைட்டரை அவமானப்படுத்திவிட்டதாக ராமசாமிகளுக்குள்ளே சண்டை தொடங்கியபோது ரயில் விருத்தாச்சலம் ஸ்டேஷனுக்கு அரை மைல் தூரத்தில் நின்றிருந்தது.

ராமசாமிகளின் மாநாட்டில் இலக்கிய விவாதங்கள் நடக்க ஜெமினி பாலத்தினை மேடையாக்கினர். கூட்டம் கீழே நின்று சொற்பொழிவு கேட்க வசதி செய்யப்பட்டது. இலக்கிய உரைகளின் பட்டியல்கள் அறிவிக்கப்பட்டதும் ராமசாமிகள் முண்டிக்கொண்டு தலைப்புகளைப் படித்தனர்.

‘பிரபஞ்ச வரலாறும் தேவராட்டக் கலையும்’ என்ற தலைப்பில் திகில் ராமசாமி. ‘எனது சுண்டுவிரலும் தமிழ் இலக்கியமும்” என்றபடி சுண்டுவிரல் ராமசாமி. இன்னும் யதார்த்தம் ராமசாமி ‘கதை சொல்லிகளைக் காயப் போடுங்கள்” எனவும் பலதரப்பட்ட உலகத் தலைப்புகள் இடம் பெற்றன. பவளக் கொடி ராமசாமிக்கு மட்டும் தலைப்பைத் தானே தேர்ந்தெடுக்கும் சிறப்புச் சுதந்தரம் கொடுக்கப்பட்டிருந்தது.

எக்மோர் ரயில் நிலையத்தில் இலக்கிய ரயில் வந்து நின்றதும் ராமசாமிகள் ஓடி ராமசாமிகளை வரவேற்றனர். ஆளுக்கொரு பவுண்டன் பேனாவும், ராமகிரிசாமி உருவப்படப் பேட்ஜும் கொடுத்து கரகாட்டக் குழுவின் நடனத்துடன் அழைத்துப் போனார்கள். இலக்கிய ரயிலின் கூரைகளில் அமர்ந்து வந்த தமிழ் வாசக ராமசாமிகள் குளிக்கத் தண்ணீர் வேண்டி நகரமெங்கும் அலைந்தனர். தண்ணீரற்ற கார்ப்பரேஷன் குழாய் முசுமுசு என சப்தம் விட்டபடியிருந்ததைக் கண்டு அருகில் அமர்ந்து புகார் கவிதை எழுதினர். பர்மா பஜார் சாலையில் சில ராமசாமிகள் உறங்கிக்கொண்டிருந்தனர். பக்த ராமசாமிகள் மயிலை கபாலி கோயில் பிரகாரத்தில் நெய் அப்பம் சாப்பிட்டபடி பக்தியைப் பெருக்கினர்.

இதுவுமன்றி, தமிழ்நாட்டின் தென்மூலையிலிருந்து எரிச்ச நத்தத்திலிருந்து ராமசாமி ஒருவர் பால் கேனுடன் தனது மொழிபெயர்ப்பு ஒன்றை இணைத்து பதிமூன்றாம் நம்பர் டவுன் பஸ்ஸில் அனுப்பி வைத்தார். தன்னுடைய நீண்டகாலக் கனவான நாலாயிரம் பக்க நாவலை எழுதி முடித்து ஒட்டன்சத்திரம். ராமசாமி காவடியின் இரு பக்கத்திலும் நாவலை இரு பாகமாகப் பிரித்து நாவல் காவடி எடுத்து பழனியிலிருந்து சென்னை நோக்கி வர, உடன் எண்பது இளம் கவிஞர்கள் கவிதைக் காவடி எடுத்து வர ராமசாமிகளின் நாவல் யாத்திரையைக் காண கிராமந்தோறும் பெண்கள் ஆரவாரமாக வரவேற்று, அன்னதானமளித்து வந்ததும் தனிக்கதை.

ஆராவயல் ராமசாமி தீபத்துடன் வரும் முன்பே மாநாடு தொடங்கப்பட்டுவிட்டது. மாநாட்டு வரவேற்பு உரையை ஆந்திர முன்னாள் கவர்னரும் காந்தியவாதியுமான நுன்ன கொண்ட ரெட்டைக் கதவு ராமசாமி நிகழ்த்தினார்.

“இக்கடலு, ராமசாமிலு, மாநாடுலு, நஸ்சலு, நடக்கலு, அக்கடலு, ராசமாகலு, கவிதைலு, நாவலு, சிறுகதையிலு, விமர்சனமிலி ராசிலு நோபலு பரிசுலு பெற்றாருலு, ராம சாமிகலு, எதிர்காலமலு, நம்மலு, தேசத்தலு, முக்யமலு, உலகராமசாமிகலு, ஒற்றுமைலு, வளர்கலு.”

பேசி முடிக்கும் முன்பு ஆராவயல் அணையா ஜோதியுடன் மேடைக்கு வர ஆட்கள் அவரைப் பிடித்துக்கொண்டு மாநாட்டின் ஜோதி தாமதமாக ஏற்றப்பட்டதும் ராமசாமிகளுக்கு ராமசாமி

களின் மரண முடிவை ராமசாமி சொன்னார். கண்ணீர் மல்க 999 ராமசாமிகளுக்காக மாநாடு அரை நாள் ஒத்தி வைக்கப்பட்டது. அத்தோடு தலைவர் 999 ராமசாமிகளின் உடலோடு கப்பலில் ஆறாவயல் ராமசாமி மிதந்து வருவது போன்ற தபால் தலையொன்றை வெளியிட வேண்டுமென மத்திய அரசைக் கேட்டுக்கொண்டார்.

மாநாடு ஒத்திவைக்கப்பட்டதால் எழுத்தாளர்கள் அவசரமாகத் தங்கள் குழுக்களுடன் பிரிந்துபோயினர். வந்திருந்த கூட்டத் திடையே சிறு பத்திரிகை ராமசாமி “நீங்கள் என்னை ராமசாமி ஆக்கினீர்கள்” “ராமசாமி முதல் ராமசாமி வரை” போன்ற சிறு நூல்களை விற்றுக்கொண்டு வந்தார். ராமசாமிகளுக்குள் நடந்த விவரங்களை முழுமையாகச் சொல்ல முனைந்தால் அது கடற்கரை மணலை எண்ணத் தொடங்கிய அங்கதப் புத்திரனின் கதையாகிவிடும் என்பதால் எழுத்தாளர்களின் சுய அறிமுகத்தை மட்டும் சொல்லி வைக்கலாமென நினைக்கிறேன்.

சீனியர் ரைட்டர்களில் இதுவரை பரிசுகள் எதையும் பெறாத, பரிசுகளைத் தன் புறங்கையால் புறந்தள்ளிய வீரர் பழத்தோட்டம் ராமசாமிதான் தமிழ்க் கதை உலகின் பிதாமகர். இவரது நூல்களைத் தாண்டி எவரும் எழுதிவிட முடியாது என்பது திண்ணம். அன்னார் பன்றிமலை சுவாமியின் சிஷ்யராகவும் சில காலம் நீட்ஷே, சோபன்ஹீர எனத் தத்துவ விசாரத்திலும் பின்பு கலையிலும் மனம் கூடியவர். இவருடைய உள்ளார்ந்த மௌனம் கலாதெளிவுடையது என்கிறார்கள் பிரபல விமர்சகர்கள். அவர்கள் தொகுத்த நூல் ஒன்றில் ‘பழத்தோட்டம் ராமசாமியின் வாழ்வில் சில தடவை’ என்ற கட்டுரை உள்ளது. அதில் ஒரு பகுதியை நீங்களும் படிக்கலாமே.

“பழத்தோட்டம் ராமசாமியின் வீட்டினைச் சுற்றிப் பல வகையான பழமரங்கள் உண்டு. எப்போதும் அவரை நண்பர்கள் சுல்தான் என அழைப்பர். பழவாடையில்லாத காலத்தில் அவர் எழுதுவது இல்லை. தினமும் காலை கதை எழுதியவுடன் அவர் கலை கூடி வந்துவிட்டதே எனப் பரவசப்பட்டு பழங்களைப் பறித்துத் தின்னும் காட்சி அபாரமானது. ‘முக்கனி’ எனும் பிரசுராலயம் இவருக்கு உண்டு.” (ப.ரா. வாழ்வில் சில தடவை, பாரா-18)

அவர் காட்டிய வழியில் வந்த தமிழ் இலக்கிய நவீன விமர்சகர் களில் சுண்டுவிரல் ராமசாமி முக்கியமானவர். அவருடைய வீட்டுக்குத் தினமும் ரிவ்யூவுக்காக வரும் புத்தகங்களையும் கொண்டுவர தபால் இலாகாவிலிருந்து எட்டு ஊழியர்கள் தனியே நியமிக்கப்பட்டிருந்தனர். பகலும் இரவும் இவர்கள் தபால் நிலையத்துக்கும் வீட்டுக்குமாக ரிலே முறையில் விமர்சனப் புத்தகக் கட்டுகளுடன் இடைவிடாது ஓடிக்கொண்டி ருந்தனர்.

சுண்டுவிரல் ராமசாமி எந்தப் புத்தகத்தையும் தன் கைகளால் புரட்டிப் படிப்பதில்லை. கால் சுண்டுவிரலால்தான் புரட்டுவார். நல்ல புத்தகமெனச் சுண்டுவிரல் அறிகுறி செய்தால் புரட்டிப் படிப்பார். மற்றவற்றைச் சுண்டுவிரலால் அழுத்தி வீட்டின் உள்ளே புதையுண்டுபோகச் செய்துவிடுவார். இப்படிப் புதையுண்ட புத்தகத்தால் பெரிதானது வீடு. சுண்டுவிரல் அங்கீகரித்த இலக்கியப் பிரதிகள் வெகு சிலவே. இலக்கிய விமர்சனத் தகுதி கொண்டதால் சுண்டுவிரலினைச் சுற்றி மெல்லிய புத்தகக் காகிதத்தால் ஆன பழுப்புக் கிரீடம் ஒன்று உருவானது. கர்வம் கொண்ட சுண்டுவிரல் மற்ற விரல்களை ஏளனமாகவும், கர்வம் மிகுந்தும் பார்க்கத் தொடங்கியது. சுண்டு விரலின் இலக்கிய மேன்மையைக் கண்ட மற்ற விரல்கள் பயந்தன. இருந்தும் சுண்டுவிரலுக்கும் மற்ற விரல்களுக்கு மிடையில் அவ்வப்போது இலக்கியச் சர்ச்சைகள் நடந்த படியிருந்தன.

மற்ற விரல்கள் – புத்தக விமர்சனத்தால் கிரீடம் கொணட சுண்டுவிரல் விமர்சகரே, சோளக்கொல்லை பொம்மைக்குக் கதை சொல்வது யார்?

சுண்டுவிரல் – வைக்கோல் மூதிகளே, கதை கிதை எனப் பிதற்றுகிறீர்கள். அகமும் புறமும் இணைவதே கதை.

மற்ற விரல்கள் – ‘அபாந்தகன் எனும் நரி’யின் துரோகக் கதையை என்ன சொல்கிறாய்?

சுண்டுவிரல் – யாரென்ன சொன்னாலும் நானே விமரிசக ராஜா!

இப்படியாக, உரையாடல்கள் தொடர்ந்தன. பல ஊர்களிலும் சுண்டுவிரல் ராமசாமியின் விரலைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் அலைமோதுவார்கள். அவர் தனது வேஷ்டியால் சுண்டுவிரலை மூடியபடியே நடந்து செல்வார். இந்திய இலக்கியத்தில் இடம் பெற்ற தனி சுண்டுவிரல் என அவரைக் கௌரவித்தது தனி நிகழ்வு.

நாவலாசிரியர்களில் நீர்வீழ்ச்சி ராமசாமியின் திறமை அசாத்தியமானது. எழுதிய கதைகளைத் தினமும் அவர் அருவி யில் காட்டி வருவார். வார்த்தைகளை அருவி அடித்துக்கொண்டு போனது போக மீதம் உள்ளவற்றை வைத்து நூல் வெளியிடுவார். அவரது பிரசித்தி பெற்ற நாவலான ‘கள்ள நாணயக்காரர்களும் நூறு ஆட்டுக்குட்டிகளும்’ மூன்று முறை நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டு புரூப் தவறுகளால் புறக்கணிக்கப்பட்ட இருத்தலிய நாவலாகும். இதில் ஆட்டுக்குட்டியொன்று யாருமற்ற வீட்டுக்கு வந்து தினமும் தன்னைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டு போகும் சம்பவத்தை முதன்மையாக்கி மானுட வாழ்வின் சாராம்சத்தைத் தத்துவச் சரடாக்கியிருந்தார். அவரது நாவல் ‘பூனைகளுடன் பேசக் கூடாது’ மாநாட்டில் வெளியிட இருந்தது.

இவர்கள் அன்றியும் தானே வீட்டில் காகிதங்கள் தயாரித்து, அதிலே மட்டுமே கதை எழுதிவந்த யதார்த்தம் ராமசாமி, எதைப் பார்த்தாலும் எழுதக் கூடியவர். இவரது கதைகள் ஐ.நா. சபையில் கையடக்கப் பிரதிகளாக உபயோகிக்கப்படுகின்றன. பொடி போடும் இவர், ஒவ்வொரு முறை தும்மும்போதும் யதார்த்தம், யதார்த்தம் என்றே தும்முவார்.

இவர்களன்றியும் நூறு ராமசாமிகள் மாநாட்டில் கௌரவிக்கப் பட்டிருந்தனர். நாயனம் கல்லிடைக்குறிச்சி ராமசாமி, போளி ஆம்பூர் ராமசாமி, நெல்லிவளை ராமசாமி, கோ.ராமசாமி, சொ.ப.ராமசாமி, வி.வி. ராமசாமி, திசையன்விளை ராமசாமி, மச்சு வீட்டு ராமசாமி, எக்ஸ். ராமசாமியா பிள்ளை, புளிமூட்டை ராமசாமி, எட்டுவீட்டு ராமசாமி, மூப்பன் ராமசாமி, தமிழ் ராமசாமி, எஸ்தபான் ராமசாமி, பிரிட்டோ ராமசாமி, எஸ்.போ. ராமசாமி, ராமசாமி குமார், கவிக்கிழார் ராமசாமி, நடைவண்டி ராமசாமி என மாநாடு ராமசாமிகளின் திறமையைத் துல்லிய மாக்கியது.

அடுத்த நாள் மாநாட்டுக்காக காலை கடற்கரையில் குளிக்க ஆயிரக்கணக்கான ராமசாமிகள் நீச்சல் உடையுடன் அலைந்தனர். சில ராமசாமிகள் புல்தரையில் படுத்து கவிதை பாடினர். ராமசாமிகளே படித்து, ராமசாமிகளே எழுதி, ராமசாமிகளே கைதட்டிக்கொண்டனர். ஒரு பக்கம் ராமசாமியல்லாதவர்களுக்கு ஞானஸ்நானம் நடந்து கொண்டிருந்தது. எல்லோர் பெயரின் பின்பும் ராமசாமியிடப்பட்டு, பிரிட்டோ ராமசாமி, பரூக் ராமசாமி, அலெக்சாண்டர் ராமசாமி, முபாரக் ராமசாமி என மாநாட்டுப் பந்தலில் உட்புகுந்துகொண்டிருந்தனர்.

மாநாட்டு இரைச்சல் அதிகமாகிக்கொண்டே போனதால் ஜெமினி காம்ப்ளெக்ஸில் குடியிருந்த அல்லேலூயா ராமசாமிக்கு வார்த்தை ஜுரம் வந்தது. விடாமல் வார்த்தைகளை உளறிய படியே இருந்த அவரைச் சுற்றி இரவும் பகலும் அல்லேலூயா பாடினார்கள் ராமசாமிகள். அல்லேலூயா ராமசாமியின் வீட்டுச் சுவரில் “ராமசாமி நல்லவரா என்பது ருசித்துப் பாருங்கள்” “ராமசாமி என்றும் கைவிட மாட்டார்” என்ற வாசகங்கள் இருந்தன.மாநாடு உச்சநிலையை அடைந்தபோது அல்லேலூயா ராமசாமியின் உடல் எகிறி எகிறி விழுந்தது.

ராமசாமியாயிருந்தபோதும் கருப்புச் சட்டை ராமசாமியை மாநாட்டுக்குள் அனுமதிக்கவில்லை. அவர் வெளியே சிக்னல் போஸ்டில் சாய்ந்தபடி ஆதங்கப்பட்டார்.

“எங்க ஈரோட்டு அய்யா ராமசாமி அன்னைக்கு எத்தனை நல்லது பண்ணி வச்சாரு. அவர் இல்லேன்னா… இந்நேரம் இப்பிடிப் பேச முடியுமா? இன்னைக்கு அவருக்கு மதிப்பில்லை. மத்த ராமசாமிகளுக்கு மதிப்பு வந்திருச்சு.”

பந்தலின் வெளியே ஸ்பானிய உரைகள் கேட்டுக் கொண்டி ருந்ததால் சிலர் கலைந்துபோயினர். பௌண்டன் பேனா ஒழுகி சட்டையை நனைத்தது பற்றி சிறப்பு அழைப்பாளர் ராமசாமி பேசிக்கொண்டிருந்தார். பந்தலின் வெளியே இருந்த கூட்டம் கலவரமானது. அதன் நடுவே கவுண்டர் கல்ச்சர் ராமசாமி நின்றுகொண்டிருந்தார். சுற்றிலும் ஆட்கள் அவரை வளைத்து நின்றனர். அவர் கைகளை வானுக்கு உயர்த்திச் சொன்னார்.

“நான் உம்பர்ட்டோ ராமசாமியின் ரசிகன். அவர் பேச்சு கேட்க வந்திருக்கேன். பேச்சு முடிஞ்சதும் கலைஞ்சுபோயிருவேன். போயிடுங்க.”

உம்பர்ட்டோ ராமசாமி தனது ‘காத்திருக்கும் ரோஜா’ தமிழில் வேறு யார் பெயரிலோ வந்திருப்பதாகச் சொன்னதும் கவுண்டர் கல்ச்சர் ராமசாமி அவசர அவசரமாக மாநாட்டுப் பந்தலை விட்டு வெளியேறிப் போனார். பந்தலுக்கு வெளியே நான்-லீனியர் பஞ்சுமிட்டாய் விற்றுக்கொண்டிருந்தார் ஒருவர்.

மாநாட்டு அறிக்கை வாசிக்கப்பட்டது. ராமசாமிகள் தங்களை மற்றவர்களிடமிருந்து விலக்கிக் காட்ட ஒரே நிற ஆடை அணிய வேண்டுமென, ராமசாமிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டுமென, நான்-லீனியர் ரைட்டிங்கை ராமசாமிகள் ஒதுக்க வேண்டுமென, ராமசாமிகள் வாழும் பகுதியை ராமசாமிஸ்தான் என மாற்றிப் பெயரிட வேண்டுமெனப் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அறிக்கையில் உடன்பாடில்லாத பல ராமசாமிகள் தனியே காந்தி சிலை அருகில் உட்கார்ந்து விவாதித்தனர். பவளக்கொடி ராமசாமி ‘முட்டாள் உலகில் முருகேசன்” என்ற தனது முதல் புதுக்கவிதையைப் பற்றி விரிவாக நாலு மணி நேரம் பேசினார். கூட்டம் சிதறுண்டது. அறிக்கையின் மீதான விவாதம் தொடங்கியதுமே கூச்சலும் சப்தமும் கூடின. பலர் வெளிநடப்பு செய்ய மீண்டும் அரை நாள் மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. அன்று ராமசாமிகள் பலர் திருப்பதி சென்று மொட்டை போட்டுத் திரும்பினர். மாலையில் ராமசாமிகள் மாநாடு தத்துவார்த்தப் பிரச்னையால் இரண்டாகப் பிரிவுற்றதாக அறிவிக்கப்பட்டது. மிதவாத ராமசாமிகள், தீவிரவாத ராமசாமிகள் என இரு குழுக்களாகப் பிளவுண்டது. எழுத்தாளர்கள், அரசியல் பிரமுகர் கள், வியாபாரிகள், கவிஞர்கள், பிரசுரகர்த்தாக்கள், ஓவியர்கள், மருத்துவர்கள், நகலெடுப்பவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், சுகாதார அதிகாரிகள் என எல்லாத் துறைகளையும் இந்தப் பிரிவு பற்றிக்கொண்டது.

வரலாற்று முக்கியமான இந்தப் பிரிவு தத்துவார்த்தப் பிரிவு என இரண்டு ராமசாமிகளும் கூச்சலிட்டனர். கடற்கரைச் சாலையி லிருந்த சிலையொன்று போவோர் வருவோரைப் பார்த்து விரலை நீட்டி “நீ ராமசாமியா?” எனக் கேட்டபடியிருந்தது. ஆம்! ஆம்! எனத் தலைகள் அசைந்து சென்றன. தமிழக வரலாற்றின் மிக முக்கியமான சரித்திர நிகழ்வு நடந்து முடிந்த அன்று சென்னை மாநகரை இயற்கையாக வரும் புயல் தாக்கியது. பந்தல்கள் சிதறின, காகிதங்கள் பறந்தன. மறுநாள் கடற்கரையில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள், ராமசாமிகளின் படங்கள் ஒதுங்கிக் கிடப்பதை ராமசாமியல்லாத மற்றவர்கள் பார்த்துக் கலைந்தனர்.

– எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2014, உயிர்மை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *