மேடம் ரொம்ப பிஸி
(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பழனிக்கு மாதம் தவறாமல் கடிதங்கள் வந்துவிடும்.
அப்பொழுது வீட்டு வாசலில் ஒரே சனக்கூட்டம்தான். ஆமாம். அயல் குடியிருப்பாளர்கள் கூடி விடுவார்கள். நரை கண்டதுகள் முதல் இளம் மீசை மயிர் துளிர்க்காததுகள் வரை குழுமி நிற்கும்.
எல்லாம் கேலியும் கிண்டலும் செய்வதற்காகத்தான். எல்லோருக்கும் அப்படியொரு கேலிப் பொருள் ஆனவன்தான் பழனி.
கனகம் நாலு எழுத்துக்கள் படித்திருந்தாள். பிழைகள் மலிந்து கிடந்தாலும் நிறைய எழுதுவாள். என்னென்னவோ எழுதுவாள். ஒவ்வொரு கடிதமும் கிட்டத்தட்ட பத்து பக்கங்களைத் தாண்டிவிடும்.
அவள் தன் கணவனான பழனிக்கு எழுதும் கடிதங்களில் குவைட் நாட்டைப் பற்றியும், அவள் வேலை செய்யும் வீட்டைப் பற்றியும் மற்றும் அன்றாட வேலைகள், வீட்டிலுள்ளவர்கள், சிறியோர், பெரியோர் விவரங்களையும் அவர்களுடன் போனது வந்தது, பேசியது, சிரித்தது, சண்டை பிடித்தது…இப்படி ஒவ்வொரு சம்பவங்களையும் ஒன்று விடாமல் செறிவுடன் வரிசையாக எழுதுவாள். கடிதம் ஒரு கதைக் கொத்தாகத்தான் திகழும்.
பழனி ஓர் அசடு. தான் ஒருமுறையாவது மனதிற்குள் படித்துவிட்டு அப்புறமாகப் பிறருக்குப் படித்துக் காண்பிப்போமே என்று சிந்திக்கும் அளவிற்கும் மன வளர்ச்சி இல்லாதவன்.
எல்லாரும் ஆவல் கொப்பளிக்கப் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே படபடப்புடன் கடிதக் கவரைக் கிழித்து மழை கொட்டுவதுபோல சளசளவென்று வாசிக்கத் தொடங்கிவிடுவான்.
அது அருவருப்பான செயல் என அவன் நினைத்தால் தானே!
இதற்காகப் பெருமைப்படும் மனம் அவனுடையது.
அவன் கடிதம் வாசிப்பதை எவராவது தற்செயலாகக் கேட்காமல் விட்டுவிட்டார்கள் என அறிய வந்தால் பழனி துடிதுடித்துப் போய்விடுவான். தூக்கமில்லாமல் தவிப்பான். அவர்களை மெதுவாக அழைத்துவந்து, வளர்ந்தவர்கள் என்றால் ஒரு சிகரெட்டை வாங்கிக் கொடுத்தும் சிறுவர்கள் என்றால் ஒரு டொபியை வாங்கிக் கொடுத்தும் வீட்டில் உட்கார வைத்து முதலிலிருந்து கடைசி வரை இராமாயணம் போல் வாசித்துக் காட்டுவான். அப்பாடா! அதற்குப் பிறகு தான் நிம்மதிப் பெருமூச்சு என்பனவெல்லாம்.
அயல்வாசிகளும் லேசுபட்டவர்கள் அல்ல. கனகத்தின் கடிதத்தை பழனி ஒரு முறையாவது வாசித்துக் காட்டாவிட்டால் நித்திரை இழந்து தவிப்பார்கள். ஓடு மீன் ஓட உறுமீன் வரும் அளவு காத்திருக்கும் கொக்கைப் போல கடிதத்தில் ஏதேனும் ருசிகரமான தகவல் வருமா? கனகம் எழுதியிருப்பாளா? என நிஷ்டையில் காத்திருப்பார்கள்.
தான் வேலை செய்யும் வீட்டிற்கு யாரேனும் விருந்தாளிகள் வந்தார்கள் என்றோ அல்லது வீட்டிலுள்ள அரபிக் கிழவன் செல்லமாக தூஷணத்தில் ஏசி முதுகில் கிள்ளினான் என்றோ அவள் எழுதியிருந்தாள் போதும், பல்லெல்லாம் வெளியில் தெரிய, அப்படி பற்கள் ஏதும் இல்லை என்றால் பொக்கை வாய் இரண்டாகக் கிழிய ரொம்பவும் விரசமாகச் சிரிப்பார்கள். கண்களில் மதம் கொப்பளிக்கும். இப்படி நமைச்சலும் குமைச்சலுமாக வாழும் விநோதமான பிரகிருதிகள்.
இந்த வசதிக் குறைவான குடியிருப்புகளில் நல்ல புஷ்டியான வாலிபக் குருத்துக்களும் இருக்கின்றன. இந்த இளம் வட்டங்களுக்கெல்லாம் கனகம் மீது ஒரு கண் தான். அக்கா பழனிச்சாமியுடன் இங்கே குடிவந்த நாட்களில் சாடைமாடையாக ஜொள்ளுவிட்டுப் பார்த்தார்கள். அப்புறம்தான் தெரிந்தது இந்த அண்ணனுக்குக் கிடைத்த அசட்டு அக்கா ஒரு கொள்ளிக் கட்டை என்று. நெருங்கவே முடியவில்லை. நெருப்பாகவிருக்கிறாள்.
படைத்தவனுக்குத்தான் எவ்வளவு பாரபட்சம். குளுகுளுவென அழகு தேவதை ஒன்றை இந்த அரைக் கிறுக்கனுக்கு ஜோடியாக்கிட்டானே என அங்கலாய்த்துக் கொண்டார்கள். வீடுகளுக்குள் பொறாமை வெடிகள் சப்தித்தன.
கனகம் குவைட் சென்று மூன்று வருடங்கள் வெகு வேகமாகக் கரைந்துவிட்டன.
கடிதங்கள் வருவதும், வாசலில் சனங்கள் கூடுவதும், பழனி கடிதங்கள் வாசிப்பதும் இன்னும் அமர்க்களமாக நடந்து கொண்டுதானிருக்கின்றன.
இன்றும் அவன் வந்துவிட்டான்.
தபால்காரன் அல்ல; தந்திக்காரன்.
தந்தியைப் பெற்றுக்கொண்ட பழனி பரபரவென தலையைச் சொறிந்து கொண்டான்.
தந்திக்காரன் இழவுச் செய்தியை அல்லவா கொண்டு வருவான். குய்யோ முய்யோவெனப் பெரும் ரகளை. பழனி கையில் தந்தியை எடுப்பதற்குள் கலவரம் உண்டு பண்ணிவிட்டார்கள். பழனி கடிதம் வாசிப்பதைக் கேட்க அந்த ஆத்மாக்களுக்குத்தான் எத்தகைய இதயத்துடிப்பு. சமருடன் சாகிறார்களே!
பாடசாலை விடுமுறைக் காலம் ஆனதால் பையன்கள் வாசலில் குழுமிவிட்டார்கள்.
பழனி அரண்டுவிடவில்லை. இதிலெல்லாம் அவனுக்குப் பெருமைதானே! என்றாலும் அவன் மனத்தில் கோடு கிழித்துக்கொண்டிருந்த வெளிச்சம் ஒன்றே ஒன்றுதான்.
‘தந்தி என்றால் இழவுச் செய்திதானே வரும்!’ என்ற எண்ணம்தான் அது.
அவன் தந்தியைக் கையில் எடுத்துக் கொண்டாலும் வழக்கம்போல் கிழித்து என்ன விவரம் இருக்கிறது என வாசிக்காமல் வீட்டிற்குள் சென்றான். வாசலில் ஆவலுடன் காத்திருக்கும் அனைவரும் கிழவிகளிலிருந்து குமரிகள் வரை, கிழவர்களிலிருந்து இளம் பையன்கள் வரை ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
என்ன என்பதுபோல கண்களைச் சிமிட்டி கேள்வி கேட்டுக் கொண்டார்கள்.
ஒரு நாளுமில்லாமல் பழனி வினோதமாக நடந்து கொள்கிறானே என சங்கடமும் கவலையுமாக மூக்கின் மீது விரலை வைத்துக் கொண்டார்கள்.
அவன் வீட்டிற்குள் நடந்தான். முழுக்கூட்டமும் திகைப்புடன் அவனைத் தொடர்ந்தது. ஊர்வலம் போவது போலே உள்ளே வந்ததும் தந்தியைக் கிழித்தான். மருண்ட விழிகளுடன் ஒவ்வொரு சொற்களாகப் படித்தான். அப்பப்பா! பாசம் பொங்கித் ததும்பும் அந்தப் பசுமையான கண்களில்தான் எத்தனை தகிப்பு, தவிப்பு.
விழிகள் எழுத்துக்களில் மேய்ச்சலிட்டன. பின்னர் பாம்பு கொத்தினாற் போல ஆவெனக் குதித்தான் பழனி. என்னவோ நடந்துவிட்டது என்பதைப் போல அவன் பின்னால் வந்தவர்களும் சட்டெனக் குதித்தார்கள்.
குதித்தவன் வாசற்பக்கமாகத் திரும்பி ஓடி வரவே பின்னால் வந்தவர்களும் ஓடத் தொடங்கினார்கள். களைக்கக் களைக்க முன்னால் பாய்ந்து கொண்டிருந்த கடலை விற்கும் பூங்காவனம் பாட்டி, “ஏலே பழனி! என்னடா சமாச்சாரம்?” என அலறினாள்.
“கனகம் வாரா, கனகம் வாரா!”
பாலைவனத்தில் மழையைக் கண்டவன் ஆனந்தக் கூத்தாடுவதுபோல பழனி கும்மாளமிட்டான்.
அசைய மறந்ததுபோல் அனைவரும் சட்டென நின்றார்கள். ”அட பாவிப்பய மவனே!” என பாட்டி கன்னத்தில் கைவைத்து பொக்கை வாய் குழிய கரிச்சிக் கொட்டினாள்.
கொல்லென சிரிப்பலைகள் கும்மாளமுடன் வெடித்துக் கிளம்பின. அதற்குப் பிறகு பையன்கள் பழனியை நகரவிடவில்லை.
கனகம் குவைட்டிலிருந்து வருகின்றபொழுது வெறுங்கையை ஆட்டிக் கொண்டா வருவாள். ஆப்பிள், டொபி, சொக்கலேட், டீ சேர்ட் இப்படி என்னென்னவோ அள்ளிக் கொண்டல்லவா வருவாள்.
கொஞ்சம் வளர்ந்த பையன்களுக்கு அதிலும் அந்நாட்களில் ‘ஜொள்ளு’ விட்ட முத்தின கரும்புகளுக்கு வேறு மாதிரி எண்ணங்கள்.
‘கனகம் அக்கா இப்ப எப்படி இருப்பாள்?’ என்ற நப்பாசைதான் அது.
கனகம் அக்காவும் இந்தப் பழனி கிறுக்கனைப் போலவே அசல் நாட்டுக்கட்டைதான். எப்படிப் பேசணும், எதற்குச் சிரிக்கணும், எப்பொழுது சிரிக்கணும் என்று தெரியாது. அடச்சீ, கொஞ்சம் நாசுக்காகப் புடவையாவது கட்டத் தெரியாது. ஆனால் அழகோ அழகு. வெள்ளை வெளேறென சொக்கவைக்கும் அழகு. சலசலவென வெற்றிலை சாப்பிட்டு புளிச் புளிச்சென சாற்றைக் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் அருவருப்பு தரும்வண்ணம் துப்பித் துப்பித் திரிந்தாலும் ஜம்பு பழம் போல் கனிந்து சிவந்து கிடக்கும் அந்த உதடுகளை ஒரு கடிகடிக்கலாமென அவர்கள் மனம் அலைபாயும். ஓசையில்லாமல் வெண்பற்கள் அனைத்தும் பிரகாசிக்க சிரித்தால் பூரண சந்திரனோ என பிரமை அலைக்கழிக்கும்.
கனகம் பழனியின் அத்தை மகள். சின்ன வயது முதலே ஒன்றாகப் பழகி வந்தவர்கள். ஒரே மகளை முறை மாப்பிள்ளைக்குக் கட்டிக் கொடுத்ததும் அத்தை கண்களை மூடிவிட்டாள். பிழைப்பிற்கு ஏதேனும் செய்ய வேண்டுமே என்ற எண்ணமுடனே கொழும்பு வந்து இந்தக் குடியிருப்பில் வசிக்கத் தொடங்கினார்கள்.
இருவரும் சுறுசுறுப்பானவர்கள்; என்ன பாடுபட்டாவது நாலு பணம் தேடிக்கொண்டு வந்துவிடுவான் பழனி, கனகமும் சும்மா இருக்கமாட்டாள். அரிசி இடிப்பாள். உலக்கையை கைமாறி மாறி வியர்வை ஒழுக ஒழுக அவள் இடிப்பதே தனி அழகுதான்.
கனகம் நல்ல சிக்கனக்காரி. பழனி கொண்டுவரும் பணத்தைப் பத்திரமாகச் சேர்த்து வைப்பாள். எது எப்படிப்போனாலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சினிமா என்றும் கடற்கரை என்றும் இருவருமே ஊர் சுற்றப் போய்விடுவார்கள். இந்தச் சின்ன வீடுகளில் வாழும் வறிய மக்கள் விடியற் கரைசல் தோன்றுவதற்கு முன்னரே தொழில்களுக்கு ஓடிவிடுபவர்கள்.
இரவில் பத்து மணி அளவிலே குடியிருப்புகள் மயானமாகிவிடும்.
பழனி தம்பதியரின் வீட்டில் விளக்கு எரியும். இருவரும் சளசளவென கதைத்துக் கொண்டிருப்பார்கள்.
கும்மாளமும் கெக்கலிப்பும் இரவின் அமைதியை சிதறடித்துக் கொண்டிருக்கும். அன்று பார்த்துவந்த சினிமாவையும் அதிலுள்ள நகைச்சுவை, காதல், சண்டைக் காட்சிகள் என எல்லாவற்றையும் சிரித்துச் சிரித்துப் பேசுவார்கள். அந்தச் சிரிப்பலைகளில் காதல், பாசம், விரசம், அன்னியோன்யம், பரஸ்பரம் இழைந்தோடும்.
அன்பின் பிணைப்பாகத் தவழ்ந்தோடும் அந்தச் சத்தங்கள் ஒவ்வொரு வீடாக நுழைந்து நுழைந்து வருகின்றபொழுது எத்துணையோ கட்டைகளை ஏக்கப் பெருமூச்சுவிடச் செய்யும்.
ஒரு நாள் திடுதிப்பென பழனியின் நெஞ்சில் ஓர் ஆசை நெருப்பு கொழுந்துவிட்டது. அவன் கேட்டான்:
“ஏன் கனகு! வெளியூர் போறியா என்ன?”
“ம் எனக்கு ஏலாது.”
“அட போம்மா, இரண்டு வருஷம் பொய்ட்டு வந்தா சோக்கா வாழலாம்.”
“என்ன சொல்ற நீ?”
“புள்ள அங்க நல்ல சம்பளம். ரெண்டு வருஷம் வேலைசெஞ்சா போதும். வாழ்க்கை பூரா சந்தோசமா வாழலாம். அது மட்டுமா? நீ மகாராணி மாதிரி ஆயிடுவே.”
”உம்.”
அவன் கண்களில் பளிச்சிடும் வெளிச்சத்தைப் பொங்கிப் பிரவாகிக்கும் ஆவலுடன் பார்த்தவண்ணம் அவள் ‘உம்’ கொட்டினாள்.
அவளுக்கு அவனைப் பிரிந்திட மனமில்லை. ஆயினும் அவன் அடிக்கடி அப்படிச் சொல்லவே அவள் மனத்திலும் அந்த எண்ணம் முளைத்துவிட்டது.
காரியங்கள் கிடுகிடுவென நடக்கலாயின. மிக மிக எளிதிலே அவளுக்கு விசா கிடைத்துவிட்டது. முழுக் குடியிருப்பே கட்டுநாயக்கா விமான தளத்திற்கு படையெடுத்தது.
கனகம் விமானம் ஏறியபொழுது பழனியின் உடல் லேசாக நடுங்கியது. விமானம் நகர்ந்து ஆகாயத்தில் மிதந்து, மேக வெளியை ஊடறுத்து மறைந்தபொழுது அவன் கண்களில் நீர் நிறைந்தது.
வெகுநேரம் விக்கித்துப் போய் நின்றான்.
நேத்து மாதிரி இருக்கிறது.
மூன்று வருடங்கள் மிகமிக வேகமாகத்தான் ஓடிவிட்டன.
கனகம் குவைட்டிலிருந்து வந்து விட்டாள்.
அடேங்கப்பா அவள் அழகை என்னவென்றுதான் சொல்வது. அழுக்குச் சாறியை தாறுமாறாக அணிந்திருக்கும் பொழுதே எல்லோர் கண்களையும் கொத்தி எடுத்தவள் கமகமவென் நாசியைப் பிடுங்கும் ஜெஸ்மின் வாசனையுடன் குங்குமக்கலர் சாறி அணிந்து அதிலும் இந்த பம்பாய் அழகிகள் அணிவது போல வெள்ளை வெளேரென்ற பட்டர் கலர் இடுப்பும், அக்குள் தெரியும் கையில்லாத சட்டையுடன் கைப்பையை சுழற்றிக்கொண்டு வந்தபொழுது குடியிருப்பே கும்மாளித்துப் போனது.
பழனிச்சாமி நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு பார்த்தான். அவனுக்கும் பயடாகவிருந்தது. ‘இது என்னுடைய கனகம்தானா?’ ஆனால் அவன் பயமெல்லாம் ஒரு நொடியில் மறைந்துவிட்டது. ஒரு பெரிய பணக்கார குடும்பத்து எசமானியைப் போல தோன்றும் கனகம் இந்தப் பழனியை மறந்துவிடுவாளா என்ற பயம் வாழ்க்கையில் முதன் முறையாக ஒரே ஒரு நொடி அவன் நெஞ்சுக்குள் நுழைந்து அருட்டுகின்றது.
ஆனால் அவள்…!
இவ்வளவு சனம் வரிசையாக நின்று பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே வியர்வை ஒழுக, அழுக்குத் துணியுடன் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கும் கணவனைக் கொஞ்சமும் கூசாமல் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
கனகம் வந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. வாழ்வே மாறிவிட்டது. வீடு கவர்ச்சிகர மானதாகிவிட்டது. அவள் குவைட்டிலிருந்து நிறைய பொருள்களைக் கொண்டுவந்திருந்தாள். டி.வி. டெக், வீட்டுத் தளவாடங்கள் என ஒரே அமர்க்களம். அவளைத் தேடிக்கொண்டு நிறைய பெண்கள் வந்தார்கள். அவர்கள் ‘மேடம்’ என மரியாதையுடன் அழைத்தார்கள். அவர்களிடம் கடவுச்சீட்டுக்களைப் பெற்று அவற்றை வெளியூருக்கு ‘பெக்ஸ்’ செய்து விசா வரும்வரை காத்திருந்து அவர்களையும் குவைட் அனுப்பி வைக்கும் வேலைகளை அவள் செய்தாள்.
இப்பொழுதெல்லாம் பழனி மிகவும் பிசியான மனிதனாகிவிட்டான். சினிமா என்றும் கடற்கரை என்றும் கனகத்துடன் சுற்றும் வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டன. அவளை எங்கேயாவது அழைத்துக் கொண்டு போகவேண்டும் போல ஆசையாக இருக்கும். ஊரே உறங்கிவிடும் வேளையில் கலகலவென பேசிச் சிரிக்க வேண்டும்போல ஆவலாகவிருக்கும்.
ஆனால் அதற்கு வாய்ப்பே கிடைப்பதில்லை. இரவு நேரங்களில் கனகம் தொலைபேசியை எடுத்தால் மணித்தியாலக் கணக்காக பேசிக் கொண்டிருப்பாள். சிரித்துச் சிரித்துப் பேசிக் கெண்டிருப்பாள்.
அந்தப் பேச்சு, அந்தச் சிரிப்பு அவனை ஏக்கமுறச் செய்து விக்கித்துப் போகச் செய்யும்.
வார இறுதி நாட்களில் பழனிக்கு எங்கும் அசைய முடியாது. ஆபீசின் முழுப் பொறுப்பும் அவனிடம் ஒப்படைக்கப்படும்.
மேடம் வெளிநாட்டு அரபி ஸ்பொன்ஸருடன் வெளியே சென்றார்கள் என்றால் இரண்டு மூன்று நாள்களின் பிறகுதான் வருவார். வரும்பொழுது மிகவும் களைத்துப் போய் மயக்கமான கண்களுடன்தான் வருவார். பாவம், மேடம் இரண்டு மூன்று நாள்களும் ரொம்பவும் பிஸி. வீக்கெண்டுகளெல்லாம் இனிமேல் இப்படித்தான்.
– அன்னையின் நிழல் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: 2004, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
![]() |
கே.விஜயன் மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் 60களில் யாழ்ப்பாண இளம் எழுத்தாளர் சங்கம் நடத்திய அகில இலங்கை சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றதன் மூலம் எழுத்துலகில் தடம் பதித்துள்ளார். இவரது ஆக்கங்கள் ஈழநாடு, வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, தினகரன், மித்திரன் உட்பட அலைகடலுக்கு அப்பால் கணையாழி, தீபம், தாமரை, செம்மலர் என பல இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவரது விடிவுகால நட்சத்திரம், மனநதியின் சிறு அலைகள் ஆகிய இரு நாவல்களும் அன்னையின்…மேலும் படிக்க... |