மெய்ப்பொருள் காண்பது அறிவு
கதையாசிரியர்: கே.என்.சுவாமிநாதன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: December 12, 2025
பார்வையிட்டோர்: 69
(2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அபார்ட்மெண்ட் மீட்டிங் முடிந்து வந்ததிலிருந்து கடு கடுவென இருந்தார் சுந்தரராமன்.
“என்ன ஆச்சு? மூஞ்சிலே எள்ளும் கொள்ளூம் வெடிக்கிறது” என்று கேட்டாள் அவர் மனைவி மாலதி.
“மொட்டை மாடியில இனிமேல் யாரும் புறா மற்றும் பறவைகளுக்கு உணவு போடக்கூடாதாம். பறவை எச்சத்தாலே நோய் வருமாம். மொட்டை மாடித் தரையும் அழுக்காகி பார்க்க நன்றாக இருப்பதில்லை. மாடியில் நடப்பவர்கள் சிரமப்படுகிறார்கள்” அப்படின்னு சிவாரமன் இன்னிக்கு மீட்டிங்ல சொன்னார்.
“சொல்றது சரிதானே. மொட்டை மாடித் தரை அழுக்காக இருந்தா நடக்கறதுக்கு பிடிக்கறது இல்லை. இனிமேலே நீங்க மொட்டை மாடியில் புறாவிற்கு உடைத்த கடலை போடாதீங்க” என்றாள் மாலதி.
“சிவராமன் சரியான கஞ்சன். எச்சக் கையால கூட காக்கா ஒட்ட மாட்டான். பறவை எச்சத்தினால நோய் வரும் அப்படிங்கிறதெல்லாம் சும்மா புருடா. என்னை அவனுக்குப் பிடிக்காது. நான் எதை செஞ்சாலும் அதைத் தடுக்கணும். நம்ம அசோசியேஷன் மெம்பர்ஸ் எல்லாம் ஆமாம் சாமி வகை. சிவராமன் சொன்ன உடனே ‘பூம் பூம்’ மாடு மாதிரி தலையாட்டினாங்க.”
“உங்க பேரைச் சொல்லி ஏதானும் சொன்னாரா. அப்புறம் எதுக்கு அநாவசியமா கோபப்படறீங்க” என்றாள் மாலதி.
சுந்தரராமன் வசிக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பில் எட்டுக் குடித்தனங்கள். அறுபத்தி ஐந்து வயதைக் கடந்த சுந்தரராமன், சர்க்கரை வியாதிக்காரர். உணர்ச்சி வசப்பட்டு கோபம் கொள்பவர்.
“நீங்க மருந்து மட்டும் சாப்பிட்டால் போதாது. சர்க்கரை வியாதி கட்டுக்குள் இருக்க நிறைய நடக்க வேண்டும். வியாதி அதிகமானா இன்சுலின் போட்டுக்க வேண்டி வரும்” என்றார் அவருடைய டாக்டர். காலையில் மொட்டை மாடிக்குச் சென்று, புறாக்களுக்கு உடைத்த கடலை போட்டு விட்டு சற்று நேரம் நடந்து விட்டு வருவார் சுந்தரராமன். தெருவில் இறங்கி நடப்பதற்கு சோம்பேறித்தனம்.
“மொட்டை மாடியை சுத்தம் பண்ணி, தரைக்கு பெயிண்ட் அடிச்சிருக்கு. மறுபடியும் புறாக்கள் வந்து எச்சம் போட்டுத் தரை அசுத்தமானால், புறாவுக்கு உணவு போட்டவங்க அவங்க செலவிலே மொட்டை மாடியை சுத்தம் பண்ணி மறுபடியும் பெயிண்ட் அடிக்கணும். இதைச் சொல்லும் போதே அந்த சிவராமன் என்னை ஓரக் கண்ணாலே பார்த்தார். ஆனாலும் அவருக்கு திமிர் கொஞ்சம் அதிகம்” என்றார் சுந்தரராமன்.
“நீங்க ஏன் இப்படி எதையுமே தப்பா பார்க்கிறீங்க. புறா எச்சத்தால நோய் வரும் அப்படின்னு நானும் படிச்சிருக்கேன். நாம் இருக்கிற இடம் சுத்தமா இருக்கணும்னு சொன்னா கேட்கிறதிலே என்ன தப்பு?” என்று கேட்டாள் மாலதி.
“நீ எப்ப என்னைசப்போர்ட் பண்ணிருக்கே. என் மீதுதான் எல்லா தப்பும் அப்படின்னு சொல்லுவே” என்று சலித்துக் கொண்டார் சுந்தர்ராமன். இனி புறாவிற்கு உடைத்தகடலை போடுவதில்லை என்ற முடிவிற்கு வந்தார்.
அடுத்த நாள் காலை சிறிது நேரம் வெளியில் நடக்கலாம் என்று கிளம்பினார் சுந்தரராமன். இரண்டு தெரு தள்ளியிருந்த சிவன் கோவில் மைதானத்தில் பலர் பறவைகளுக்குப் பொரி, உடைத்த கடலை, பழங்கள் அளித்துக் கொண்டிருந்தனர். சிலர் மைதானத்தில் நடந்து கொண்டிருந்தனர்.
வாகனத் தொல்லை இல்லாமல் நடப்பதற்கு இந்த மைதானம் அருமையான இடம் என்று தோன்றியது. அடுத்த நாள் முதல் காலையில் சுந்தரராமன் உடைத்த கடலை எடுத்துக் கொண்டு, கோவில் மைதானத்திற்குச் செல்ல ஆரம்பித்தார். புறாவிற்கு உணவளித்துச் சற்று நேரம் மைதானத்தில் நடப்பார். நாளடைவில் இவருடைய வயதை ஒட்டிய நண்பர்கள் அறிமுகமானார்கள். நடந்து முடித்து ஊர்க்கதை, அரசியல் பேசிவிட்டு வீட்டிற்குத் திரும்புவார். நண்பர்களைப் பார்க்க மற்றும் பழகும் ஆர்வத்தில், காலையில் சுறுசுறுப்புடன் எழுந்து மைதானம் செல்ல ஆரம்பித்தார்.
இரண்டு மாதங்கள் உருண்டோடின. முன்பிருந்த அசதி மறைந்ததுடன், புதிய தெம்பும், உற்சாகமும் கூடுவதை உணர்ந்தார் சுந்தரராமன். அடுத்த முறை சர்க்கரை வியாதி பரிசோதனை எடுத்துக் கொண்டு டாக்டரைப் பார்க்கச் சென்றார், “என்ன மாயாஜாலம் பண்ணிணீங்க சுந்தரராமன். உங்க சர்க்கரை வியாதி நல்லா குறைஞ்சு கன்ட்ரோல்ல இருக்கு. இப்படியே நீங்க பராமரிச்சிக்கிட்டு வந்தா உங்க உடம்பிற்கு ஒரு தொல்லையும் வராது.” என்றார் டாக்டர். சிவராமனுக்கு மனத்தில் நன்றி சொல்லிக் கொண்டார் சுந்தர்ராமன்.
– நம் உரத்தசிந்தனை, நவம்பர் 2023.
![]() |
பொறியியல் பயின்று, அரசுத் துறை, பொதுத் துறை, தனியார் குழுமங்களில் பணி புரிந்து, பின்பு, 15 ஆண்டுகளாக கணிதமும், தர்க்கமும் கற்பித்து வந்தேன். “யு-டியூப் – ஸ்வாமிமேடிக்ஸ்” என்ற சேனலில், சுலப கணிதம் குறித்து ஆங்கிலத்தில் விளக்கி வந்தேன். கோவிட் ஊரடங்கு என்னை கதை, கட்டுரை, எழுத ஊக்கம் அளித்தது. கதைகள், கட்டுரைகள் வெளியான இதழ்கள் - தினமலர்-வாரமலர், கலைமகள், அமுதசுரபி, தினமணி, சிறுவர்மணி, கதிர், நம் உரத்த சிந்தனை,…மேலும் படிக்க... |
