முகவரி தேடும் காற்று





அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18
அத்தியாயம் 13 – தூக்கம் வரவில்லையா?

வசாய்ரோடு பங்களாவில் ஜே.கே மிகுந்த களைப்போடு வீட்டிற்கு வந்து கோட்டைக் கழற்றிய போது அழுகை சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார்.
ராணி மூக்கைச் சீந்தி அழுதுகொண்டிருந்தாள். ஜே.கே.வுக்கு கோபமும் எரிச்சலும் வந்தது. மெதுவாக படுக்கை அருகே வந்து அவளை ஆதரவாகத் தொட்டார்.
ராணி கோபத்தில் எழும்பிவிட “கொஞ்சம் உன் அழுகையை நிறுத்துகிறாயா? எதற்காக இந்தச் சொத்து.. எதற்காக இந்த அலைச்சல் எல்லாவற்றையும் உதறி விட்டு நேரே இமயமலை அடிவாரத்திற்கு போய் சாமியாரிடம் சரணடைந்து விடவா…இல்லை… எல்லாவற்றையும் இல்லாதவர்களுக்கு அள்ளி வீசி விட்டு காலையிலே இருந்து “அம்மா… தாயி..சோறு போடுங்கள் என்று பிச்சை எடுக்கவா…?”
“அம்மாவும் பிள்ளையும் சேர்ந்து ஏன் இப்படி என்னை அலைக்கழிக்கிறீர்கள்?”
”உனக்குக் கூடத் தெரியும் ராணி. ஒரே நேரம் சாப்பிட்டு விட்டு மற்ற இரண்டு வேளை பட்டினி கிடந்தது. இதே அரசு பிறப்பதற்கு ஆஸ்பத்திரிகுப் போக பணமில்லாமல் யார் காலையெல்லாமோ பிடித்துக் கெஞ்சியது மறந்து போனதா?”
“அவன் என்னடாவென்றால் தன் காலிலேயே நிற்கப்போகிறேன் என்று வீட்டை விட்டுக் கிளம்பி விட்டான். நீ அவனை நினைத்து அழுது கொண்டிருக்கிறாய். நான் எதை நினைத்து அழ… எதை எடுத்தெறிந்து கோபப்பட..”
“ராணி நாம்பட்ட கஷடம் நம் ஒரே மகனும் படக்கூடாது என்பதற்காகத்தானே இந்த வேகமான ஓட்டமும் சம்பாத்தியமும். நான் நிறுத்தி விடத் தயார். அவனைப் போய் கூட்டிக்கொண்டு வருகிறாயா?”
“நீயாவது என்னைப் புரிந்து கொள்வாய் என்று நினைத்தால்.. நான் களைப்படைந்து வரும்போது நீ அழுது கொண்டிருந்தால் எனக்கு இன்னும் எவ்வளவு கஷ்டமாக இருக்கும்.”
“நேற்றுத்தானே சொன்னேன். அதற்குள்ளே திரும்பவும் உன்னிடம் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டதே.”
”அவன் நேற்று முழுவதும் தாராவி, சுன்னப்பட்டி, சயான், நெரூல், பகுதியெல்லாம் சுற்றி விட்டு காந்திவிலி, பொய்சருக்குப் போயிருக்கிறான்.”
“அவனைப் பற்றி ஒவ்வொரு நிமிடமும் செய்தி சொல்ல ஆள் இருக்கிறதென்று சொன்ன பிறகும், சின்னப்பிள்ளை மாதிரி இருந்து அழுதுகொண்டியுக்கிறாய்.”
“அவன் அலையட்டும்… கொஞ்சம் விட்டுப் பிடிப்போம். அவனுக்குப் பணம் தர மறுத்து வீட்டிற்குத் திரும்பச்சொல்லி அறிவுரை சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா?”
அத்தியாயம் 14 – அந்நாளைய டைரி
“என்ன அரசு, இன்னும் தூங்காமல் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?” தூக்கக் கலக்கத்தோடு எழுந்து வந்த திலக் கேட்டான்.
“ஒன்றுமில்லை” என்று சொல்லி விட்டு தந்தையின் பழைய நாட்குறிப்பை மடித்து பையில் வைத்துக் கொண்டான்.
“அவ்வளவு சீரியஸாக படித்துக் கொண்டிருந்தீர்கள். என்னிடம் சொல்ல வேண்டா மென்றால் உங்கள் விருப்பம்.”
“அப்படி ஒன்றும் ஒளித்து மறைக்கிற பெரிய ரகசியம் ஒன்றுமில்லை இது. என் தந்தையின் அந்நாளைய டைரிபோல் எழுதி வைத்திருந்ததில் சில பங்கங்களை கிழித்து வைத்திருந்தேன். அதைத்தான் வாசித்துக் கொண்டிருந்தேன்.”
“எவ்வளவு கஷ்டத்திலும் சுவாரஸ்யமான வாழ்க்கை. தீர்க்கமான குறிக்கோளோடு எவ்வளவு போராடியிருக்கிறார் என்று நினைக்கும்போது உள்ளுக்குள்ளே வலி எழும்புகிறது.”
“ஆயிரத்தில் என்ன கோடியில் ஒரு பகுதி கூட இந்தப் போராட்டத்தை என் வாழ்க்கையில் சந்தித்து என்னால் எதிர்த்து நிற்க முடியுமா என்று நினைத்தால் உண்ணையாகச் சொல்கிறேன் பயமாகத்தானிருக்கிறது. அதே சமயம் எவ்வளவு ஆச்சரியங்களும் மலைப்புமாக இருக்கிறது.”
“எப்படி இருந்து இன்று மும்பையை ஆட்டிப் படைக்கும் ஒரு பெரிய பணக்காரர் ஆனார் என்று எண்ணிப் பார்க்கும் போது ‘வானம் ஒன்றும் தொடமுடியாத தூரத்திலில்லை’ என்றே தோன்றுகிறது.” கண்களில் பிரகாசம் மினுங்க தெளிவாக, தீர்க்கமாகப் பேசிய தமிழரசை ஆச்சரியத்தோடு, தூக்கம் கலைந்தவாறு கவனித்த திலக், “இவ்வளவு அழகாக தந்தையின் வாழ்க்கையைத் தெரிந்து கொண்ட நீங்கள் உங்கள் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் எந்த ஏணிப்படியில் ஏறினல் ‘வானம் வசப்படும்’ என்பதை ஏன் புரிந்து கொள்ளாமல் போனீர்கள்…. அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.”
“ஒன்று கேட்கட்டுமா திலக்…” என்று எழுந்து நின்றான் அரசு.
“உட்கார்ந்து கொண்டே பேசலாமே.”
“இல்லை நிற்கிறேன். நீங்கள் தயாரிக்கும் மிருக உணவு உற்பத்தியிலே இறங்கி அதை லோக்கல் சப்ளை மட்டுமில்லாமல் ஏற்றுமதி என்றும் விரிவு படுத்தலாமே.”
புன்னகைத்துக் கொண்ட திலக் “இன்னும் ஏன் கத்துக்குட்டியாகவே… அல்லது கத்துகுட்டித் தனமாகவே பேசுகிறீர்கள்.”
“அரசு மிருக உணவு தயாரிப்பது என்கிறீர்கள். எந்த மிருகத்திற்கு உணவு தயாரிக்கப் போகிறீர்கள்? ரேஸ் கோர்ஸ் குதிரைக்கா? வீட்டில் வளர்க்கும் நாயினத்திற்கா? கோழித்தீவனமா? கால்நடை என்று சொல்லும் பசு மாட்டுத் தீவனமா? என்பதை முடிவு செய்யுங்கள்.”
“……. ஒ.கே. நீங்கள் தயாரிக்கும் பிராய்லர் கோழியுணவு தயாரிப்பையே விரிவு படுத்தி முடிந்தால் எக்ஸ்போர்ட் ஆர்டர் மூலம் உலக சந்தைக்குக் கூட போகலாம்.” என்றான் அரசு.
“அரசு திரும்பத் திரும்பச் சொல்கிறேன் என்று வருத்தப்படாதீர்கள். தீர்க்கமாக, திட்ட வட்டமாக, என்னால் முடியும், நான் செய்வேன் என்றும் ஆழ்மனப் பயிற்சி யோடு ஆளுமைத் தன்மையோடு பேசுங்கள். முடிந்தால்…. செய்யலாம் என்கிறீர்கள். முடியவில்லை என்றால் விட்டு விடுவீர்களா? அடுத்த வியாபாரத் தையும் முடிந்தால் பார்க்கலாம் என்று கோழைகள் மாதிரி கணக்குப் போடுவீர்களா?”
“வீரனாக உங்களை நீங்களே நீங்களே கஷ்டப்படுத்திக் கொண்டு செய்து காட்டுவேன் என்று பேசுங்கள்.” என்று திலக் சொல்லும் போது அவனை தீர்க்கமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன மௌனமாகி விட்டீர்கள்?”
“ஒன்றுமில்லை. ஜெயிப்பதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. ஆனால் ஜெயிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும்தான் இருக்கிறது. வழியை இன்னும் தேடி கண்டுபிடிக்காமல் இன்னும் முட்டி நின்ற சுவரிலே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறேனோ என்று தோன்றுகிறது.”
“எல்லாம் போகப் போகச் சரியாகி விடும். நீங்கள் இவ்வளவு ஆர்வமாக இருப்பதால் ஒன்று கேட்கிறேன். என் கப்போலி யூனிட் ஒன்று ஆரம்பிக்கும் பணியில் இருக்கிறது. அதைச் செய்கிறீர்களா? அதுவும் முழு மூச்சாக இறங்கி… “ என்று கேட்டான்.”
“கண்டிப்பாக…. எப்போது நாம் கப்போலி போகிறோம்.” ஆர்வமாகக் கேட்டான் அரசு.
“நாளை காலையில்” என்றான் திலக்.
அத்தியாயம் 15 – கப்போலி ரயில்
திலக்கும், அரசும் தன் உடைமையோடு காந்திவிலி ரயில் நிலையம் வந்த போது, சர்ச்கேட் போகும் ரயில் வந்து சேர, இருவரும் அடித்துப் பிடித்து ஏறிக் கொண்டனர்..
உள்ளே வந்த போது “ஒழுங்காக என் காரிலேயே போயிருக்கலாம்” என்றான் திலக்.
“பரவாயில்லை. ரயிலில் சீக்கிரம் போய் சேர்ந்து விடலாம். இப்போது… என்ன தாதர் மாறி கப்போலி ரயில் பிடித்தால் இரண்டு மணி நேரத்திற்குள் கப்போலி போய் விடலாம். அங்கிருந்து உங்கள் தங்கை பூனம் நடத்தும் தொழிற்சாலைக்கு எவ்வளவு தூரம்?” மற்ற பயணிகளுக்கு வழி விட்டவாறு கேட்டான் அரசு.
“ஒரு மணி நேர பயணம். பூனம் கார் அனுப்புவாள். இல்லை என்றால் போன் பண்ணிக் கேட்டு விட்டு நாம் ஒரு டாக்சி வைத்துப் போய் விடலாம்.”
“வீணாக எதற்கு? பஸ் கிடையாதா?” என்று கேட்ட அரசுவிடம் “என்ன காரிலே போய் சலித்து விட்டதா?” என்று கேட்டான்.
“அப்படி ஒரு வித்தியாசமான அனுபவத்திற்கு மட்டுமல்லாமல் இனி கார், டாக்சி என்று எடுத்தவுடனே செலவுகள் முடியாதோ?”
“அது நீங்கள் நினைக்கிற அவசர உலகத்தில் ஒத்து வராது என்று நினைக்கிறேன். வாருங்கள். கார் வந்து நிற்கிறது. “ என்றவாறு கப்பொலி இரயில் நிலையத்திற்கு வெளியே நின்ற காரில் ஏறினார்கள்
அலுவலகம் வந்த பிறகு உள்ளே வந்தனர்.
– தொடரும்…
– முகவரி தேடும் காற்று (நாவல்), முதல் பதிப்பு: 2020, மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற வெளியீடு.
![]() |
பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க... |