மாற்றாள் பிள்ளை
(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஒரு பானைச் சோற்றையும் ஒருமிக்கத் திங்குது. அழுகிற பிள்ளையை அம்த்தத் திறனில்லை. கொண்டா இங்கே பிள்ளையை” என்று கத்தினாள் தங்கம்மாள்.
“அழுகாதே அப்பா, அழுகாதே” என்று சொல்லிக் கொண்டே ஒரு குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்தான் ஒரு சிறுவன். அவன் பெயர் சுந்தரம்.
“எட்டு வயசு எருமை மாட்டுக்கு ஒரு குழந்தையை வச்சிருக்கத் தெரியாது? திங்கத் தெரியுமா? தின்னி மாடு” என்று சொல்லிக்கொண்டே சிறுவன் முதுகில் இரண்டு அடி வைத்துப் பிள்ளையை அவன் கையினின்றும் பிடுங்கிக்கொண்டாள் தங்கம்மாள்.
சிறுவன் அழுதுகொண்டே வெளியில் ஓடிவிட்டான். தங்கம்மாள் மாரியப்பஞ் செட்டியாருக்கு இரண்டாம் பெண்டாட்டி. சுந்தரம் அவருடைய முதல் தாரத்துக்குப் பிறந்த ஒரே புதல்வன். அவனுக்கு ஒரு வயதாய் இருக்கும் பொழுது, அவனுடைய தாயான பார்வதியம்மாள் வைகையில் குளிக்கப் போயிருந்தாள். ஐப்பசி மாதம். வைகையில் இக்கரைக்கும் அக்கரைக்கும் தண்ணீர் போய்க்கொண்டு இருந்தது. படித்துறையில் குளித்துக்கொண்டிருந்த பார்வதியம்மாளுக்குத் திடீ ரென்று கால் கழுவிவிடவே, கரையற்ற வெள்ளம் கருணையுமற்று அவளை இழுத்துக்கொண்டு சென்று விட்டது. தகனம் செய்வதற்குக்கூட அவள் பிணம் கிடைக்கவில்லையே என்று மாரியப்பஞ் செட்டியார் துடியாய்த் துடித்தார். பச்சைக் குழந்தை சுந்தரத்தின் முகத்தைப் பார்க்கும்போதெல்லாம் அவர் நெஞ்சம் பதைத்தது. தாயில்லாக் குழந்தையை எங்ஙனம் வளர்க்கப்போகிறோம் எனத் தவியாய்த் தவித்தார். மனைவி இறந்த துக்கத்தையும் மறந்து மகன் கதியை எண்ணி எண்ணி மனம் புண்ணானார். போனதை எண்ணி மனம் புழுங்குவதில் பிரயோசனம் இல்லை எனத் தீர்மானித்து, பிள்ளையை வளர்ப்பதற்காக தாம் உடனே இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கொள்வதே உசிதமென எண்ணினார். ஆகையால் மனைவி இறந்த ஒரு மாதத்திற்குள்ளேயே செட்டியார் மறு விவாகம் செய்து கொண்டார்.
செட்டியாருக்குப் பலசரக்கு வியாபாரம். மத்தியான்னம் அவர் சாப்பிட வரும்பொழுது, தெருவில் சுந்தரம் விளையாடிக்கொண்டு இருப்பதைப் பார்த்து, அவனையும் சாப்பிடுவதற்காகக் கூடவே கூட்டிக்கொண்டு வந்தார். சாப்பிடும்பொழுது அவன் முதுகில் ஐந்து விரல் தடம் இருப்பதைக் கண்டு, “இது யாரப்பா அடித்தது?” என்று கேட்டார்.
சுந்தரம் உண்மையைச் சொல்வதற்கு அஞ்சி, கண்ணீர்விட ஆரம்பித்தான். “அப்பாவைக் கண்டவுடன் அழுகை வந்திரும் போலிருக்கு. எந்தச் சுளிப் பயலோடு விளையாண்டு அடி வாங்கிகிட்டு வந்தே? உள்ளத்தைச் சொல்லேன்?” என்று சொல்லி அவன் கன்னத்தில் தங்கம்மாள் ‘பளீர்’ என்று இன்னோர் அறை கொடுத்தாள்.
சுந்தரம் விம்மி விம்மி அழ ஆரம்பித்தான். அவனை அமர்த்துவதற்கு வேறு வழி ஒன்றும் தெரியாமல், “இன்னொரு கரண்டி நெய் ஊற்று. பாவம், அழுகிறான்!” என்றார் செட்டியார்.
“இப்படிச் செல்லம் கொஞ்சிக் கொஞ்சித்தானே பிள்ளையைக் கெடுத்துப் பிட்டிய எட்டு வயசாகுதே எருமை மாட்டுக்கு. ஒரு புள்ளை வச்சிருக்கத் தெரிஞ்சிருக்கா. அடிச்சு வளக்காத புள்ளை அதென்ன புள்ளை?” என்று செட்டியாருக்குப் பிள்ளை வளர்க்கும் விதத்தைப்பற்றிப் பிரசங்கம் செய்தாள் தங்கம்மாள்.
“மாடு வர்ர நேரமாச்சு. சட்டுணு இந்த விதையை ஆட்டு. மாடு வந்ததும் வைக்கணும்” என்று சுந்தரத்தைப் பருத்தி விதை அரைக்கச் சொல்லிவிட்டுத் தங்கம்மாள் தண்ணீர் எடுக்கப் போய்விட்டாள்.
கடுந்தவம் செய்துகொண்டு காலம் தள்ளும் சிவபெருமானை விஷ்ணு மோஹினி உருவெடுத்துக் கலைத்ததுபோல், எதிர்த்த வீட்டு ராமன் அங்கு வந்து சேர்ந்தான்.
“அடே சுந்தரம், கிளித்தட்டு விளையாடப் போறோம்; வரையா?”
“நான் வரமாட்டேன் அப்பா. மாடு வரத்துக்குள்ளே விதை அரச்சிரணும். இல்லை யிண்ணா எங்கம்மா வந்து உதைப்பாள் ” என்றான் சுந்தரம்.
“ஒரு ஆட்டை ஆடீட்டு, அப்புறம் வந்து அரைக்கலாமடாப்பா.”
“ஒரு ஆட்டை ஆடினா, அப்புறம் விட மனம் வருமா?”
“நீ இப்ப விளையாட வந்தியானா, அப்புறம் எல்லோரும் வந்து விதை அரச்சுக் குடுப்போமப்பா” என்று தனது கடைசி மோகனாஸ்திரத்தை எறிந்தான் ராமன்.
“உன் தந்திரமெல்லாம் எனக்குத் தெரியும்” என்றார் விதை அரைக்கும் தபஸ்வி.
ராமன் தோற்று ஓடிவிட்டான்.
சுந்தரத்தின் கைதான் உரல் குழவியைச் சுற்றிக் கொண்டிருந்தது. அவன் மனமெல்லாம் கிளித்தட்டில் இருந்தது. தெருவில் பையன்கள் சப்தமிடும் பொழுது, ‘பூனை இல்லாத இடத்தில் எலிகள் கொம்மாளம் அடிக்கின்றன’ என்று சுந்தரம் நினைத்துக் கொள்ளுவான். “நான் இருந்தேனானால், சுப்பையா முதல் தட்டை விட்டுப் போய்க்கிருவானா?” என்று அவனை அறியாமலே அவனுடைய வாய் மெள்ளச் சொல்லிற்று. அதே சமயம் தெருவில் “உப்பு!” என்று உரத்துக் கூவிக்கொண்டு ஒருவன் ஓடினான். “ஒங்க மேலே இன்னைக்குப் பத்து உப்பு வைக்கிறோம் பாருங்கடா!” என்று அந்தக் கக்ஷிக்காரப் பையன்க ளெல்லாம் பெருமை யடித்துக் கொண்டார்கள். “எங்க பக்கம் சுந்தரம் மட்டும் இருக்கணும். அப்புறம் பார்க்கலாம். நீ உப்புக் கொண்டுபோற கெட்டிக் காரத்தனத்தை” என்றான் எதிர்க் கக்ஷியில் ஒருவன்.
அதைக் கேட்டதும் சுந்தரத்திற்கு உச்சி குளிர்ந்து விட்டது. தன்னையறிந்த முனிவர்கட்கும் தற்பெருமையை வெல்வது கடினம். விதை அரைப்பதை விட்டுவிட்டு, கிளித்தட்டு விளையாட ஓடிவிட்டான் சுந்தரம்.
சிறிது நேரத்தில் தங்கம்மாள் தண்ணீர் எடுத்துக் கொண்டு திரும்பி வந்தாள். விதை அரைக்காமல் இருப்பதைப் பார்த்ததும், அவளுக்குக் கோபம் பொறுக்க முடியவில்லை. காளி அவதாரம் எடுத்து விட்டாள். துடைப்பமும் கையுமாய்த் தெருவிற்குச் சென்று, சுந்தரம் கையைப் பிடித்துக்கொண்டு அவன் முதுகில் ஏழெட்டு அடி கொடுத்தாள்.
“அம்மா! அம்மா! இனிமே விளையாடப் போகலே. நீ சொன்னபடி கேக்கிறேன்,விட்டிரம்மா, விட்டிரம்மா” என்று துடித்தான் சுந்தரம்.
“நீ கெட்ட கேட்டிற்கு உனக்கு விளையாட்டு வேறேயா? போய் விதை அரை போ” என்று இன்னோர் அடி கொடுத்தாள்.
விம்மி விம்மி அழுதுகொண்டே விதை அரைத்தான் சுந்தரம்.
“சட்ணு விதை அரைத்துவிட்டு எங்கயாவது தொலஞ்சு போ. இன்னைக்கு ராத்திரி ஒனக்குச் சோறு கிடையாது ” என்றாள் தங்கம்மாள்.
விதை அரைத்து மாட்டிற்குத் தண்ணீர் காட்டி விட்டு, சிம்னியைத் துடைத்து விளக்கேற்றினான். பின்பு சாப்பிடுவதற்கு அம்மாவின் தயவை எதிர் பார்த்திருந்தான்.
தங்கம்மாள் தன் மகனுக்குச் சோறு போட்டு உண்ணச் சொன்னாள். அவன் உண்ண மாட்டேன் என்று பிடிவாதம் செய்தான். “இன்னுங் கொஞ்சம் நெய் விடறேன் அப்பா சாப்பிடு. தம்பி சமத்தில்ல” என்று அவனைக் கெஞ்சிக் கூத்தாடினாள்.
பக்கத்தில் நின்றுகொண்டிருந்த சுந்தரம், “அம்மா, வயிறு பசிக்குதம்மா, கொஞ்சம் சோறு போடம்மா” என்று கெஞ்சினான்.
“தங்கச் சிலை போலெ பிள்ளை சோறுங்க மாட்டேங்குதே இண்ணு நான் தவிக்கிறேன். இப்ப உனக்கென்ன கொள்ளை வந்திருச்சு?” என்று அவன் மேல் சீறி விழுந்தாள்.
”அம்மா வயிறு பசிக்குதே.”
“பால் ஊற்றுகிறேன். சோறு உங்கிறீயாப்பா?” என்றாள் தங்கம்மாள்.
“ஆகட்டும் அம்மா” என்று ஆவலுடன் சொன்னான் சுந்தரம்.
”உனக்குத்தான் இப்ப ஆத்திரமாச் சொல்றாக. தொலை எங்கையாவது. நீ பக்கத்திலே நிண்ணு வயிறு எரிஞ்சுக்கிட்டிருக்கத்தான் பிள்ளை சோறுங்க மாட்டேன் என்கிறது” என்று சொல்லிக்கொண்டே தங்கம்மாள் பிரம்பை எடுத்தாள். பிரம்பைக் கண்டானோ இல்லையோ, ஓட்டமெடுத்துவிட்டான் சுந்தரம். ஊர்ச் சத்திரம் ஒன்றில் போய்ப் படுத்தவன், பசி பொறுக்க மாட்டாமல், அப்படியே அயர்ந்து தூங்கிவிட்டான்.
காலையில் எழுந்து, இப்பொழுதாவது கொஞ்சம் சோறு கிடைக்குமா என்று வீட்டுக்குச் சென்றான்.
“ராத்திரி எல்லாம் எங்கே அவிஞ்சு கெடந்தே? ஒங்கப்பன் எனக்குக் கொலைகாரிப் பட்டங்கட்டி, ஊரெல்லாம் எம் மண்டையைத் தூத்துறார். அவருக்கு ஓம் மூஞ்சியைக் காட்டீட்டு வா. அப்பத்தான் இன்னைக்கு ஒனக்குச் சோறு” என்று சுந்தரத்தைத் துரத்தி விட்டாள்.
மகனைக் கண்டதும், மாரியப்பஞ் செட்டியார் மகிழ்வுடன் வீட்டிற்கு வந்தார். வீட்டில் கோதுமை உப்புமாச் செய்திருந்தது ஆனால் சுந்தரத்துக்குக் கிடைத்தது என்னவோ ஒரு வாரமாய்ப் புளித்த பழைய சோறுதான்.
“அவனுக்குக் கொஞ்சம் உப்புமாப் போடு டீ” என்றார் செட்டியார்.
“வளர்ர பிள்ளைக்கு அதிகாலையிலே பழைய நுதான் போடணும். இந்த வயசிலேயே பிள்ளைக்குப் பலகார மெல்லாம் குடுத்து வழக்கப்படுத்தாதிய” என்றாள் தங்கம்மாள்.
“நம்ம பிள்ளையா, குட்டியா, எக்கேடு கெட்டும் போகுது இண்ணு தைரியமாய்ப் போட” என்று சொல்லிக்கொண்டே தன் பிள்ளைக்கு உப்புமாவைக் கொட்டினாள்.
தங்கம்மாள் தன் மாற்றாள் பிள்ளைக்குச் செய்யும் கொடுமையைப் பார்த்துக் கண்ணீர் வடிக்காதவர்கள் அந்தத் தெருவில் ஒருவரும் இல்லை. சுந்தரம் பசியாய்க் கிடந்து தவிக்கும்பொழுது, சிலர் தங்கள் வீட்டிற்கு அவனைக் கூப்பிட்டுச் சோறு போடுவார்கள். சிலர் தங்கள் வீடுகளில் செய்த தின்பண்டங்களைக் கொடுப்பார்கள். இது தங்கம்மாளுக்குத் தெரிந்துவிட்டால், ‘வீடு வீடாய்ப் போய் எச்சிச் சோறு தின்னுவிட்டு வருதே, எச்சிக்கலை நாய்’ என்று திட்டுவாள்.
செட்டியார் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பிராமணத்தி யம்மாள் வந்து குடியேறி ஒரு வருஷம் ஆகிறது. தனக்குச் சொந்த ஊர் பரமக்குடி என்றும், தன் பொல்லாத விதி வசத்தால், தன் கணவனையும் ஒரே ஆண் குழந்தையையும் ஒரே நாளில் இழக்க நேரிட்டதென்றும் அத் துக்கம் பொறுக்கமாட்டாமல், அவ்வூரையே விட்டு மதுரைக்குக் குடிவந்து விட்டதாகவும் சொன்னாள். சுந்தரத்தின் முகத்தைக் கண்டவுடன், அவள் தன் குழந்தையைப் பறிகொடுத்த துக்கத்தைக் கூட மறந்தாள். அவன் பசியாயிருக்க அவள் மனம் பொறாது. அவனை அன்புடன் தன் வீட்டிற்கு அழைத்து, வயிறாரச் சோறு போட்டு அனுப்புவாள். அவன் கண் கலங்குவதைப் பார்த்தால், அவளுடைய நெஞ்சு துடிக்கும். அவன் கண்களைத் துடைத்து, அழுகையை அமர்த்தி, அவனுக்குத் தின்பண்டங்கள் கொடுத்து அனுப்புவாள். அவனுடைய தம்பிக்கும் அதில் கொஞ்சம் கொடுக்குமாறு சொல்லுவாள். தன் ஒரு குழந்தையின் மீது வைத்த குறுகிய அன்பு விதி வசத்தால் தவறி விடவே, பொதுவாய் எல்லாக் குழந்தைகளின் மேலும் ஒரு பேரன்பாய் மலர்ச்சியுற்றது.
இங்ஙனம் இருக்கத் தங்கம்மாள் கர்ப்பமுற்றாள். என்ன காரணமோ தெரியவில்லை, அவளுக்குப் பிறந்த குழந்தைகளெல்லாம் ஒரு வருஷம் அல்லது இரண்டு வருஷங்கள் இருந்து, இறந்து போய்க்கொண்டே இருந்தன. தலைப் பிள்ளையாகிய சிற்றம்பலம் ஒருவன் தான் பிழைத்திருந்தான். அவன் தான் அவளுக்கு உயிர்.
இப்பொழுது தங்கம்மாள் எட்டு மாதக் கர்ப்பவதி. வீட்டில் சமையல் முதலான காரியங்களைக்கூட அவளால் சரி வரச் செய்ய முடியவில்லை. பிள்ளைகள் வேளையில் சாப்பாடு கிடைக்காமல் தவித்தன. சில சமயங்களில் செட்டியாரே கடைக்குப் போவதை விட்டு விட்டுச் சமையல் செய்வார். இங்ஙனம் அக்குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பதை அறிந்த பர்வதம்மாள் (பிராமணத்தியின் பெயர்) அவர்களுக்கு உதவி செய்ய முன் வந்தாள். பர்வதம் குழந்தையையும் கணவனையும் இழந்ததிலிருந்து, வீட்டைவிட்டு வெளி யேறுவதே இல்லை. ஆடவர்கள் முகத்திலும் விழிப்பதில்லை. ஆகையால் சாமான்களை எல்லாம் எடுத்துக் கொண்டு போய்த் தன் வீட்டிலேயே சமையல் செய்து அவர்களுக்குக் கொண்டுவந்து வைப்பாள். தங்கம் மாளுக்கு வேண்டிய சேவை சுச்ருஷைகள் எல்லாம் செய்வாள்.
சிற்றம்பலம் மிகவும் பலஹீனமான பையன். அவனுக்கு எப்பொழுதும் ஏதாவது ஒரு வியாதி வந்து கொண்டே இருக்கும். சில சமயம் ஜூரம், சில சமயம் பேதி, இருமல், ஒன்றும் இல்லாவிட்டால் ஜலதோஷம், ஏதாவது ஒன்று அவனை விட்டு அகலாமல் இருந்தே தீரும். பலஹீனச் சிறுவர்களுக்கு மழைக்காலம் மிகக் கெட்ட காலம். காற்றுக்கே ஜலதோஷம் பிடிக்கும் போது, சிறுவர்கள் எம்மட்டு?
ஒரு நாள் நல்ல மழை பெய்திருந்தது. தெரு வெல்லாம் தெப்பக்குளமாய் இருந்தது. சிற்றம்பலத்துக்கு அன்று கொண்டாட்டம். சிறுவர்களுக்குத் தண்ணீரில் விளையாடுவதை விடச் சந்தோஷகரமான விளையாட்டு வேறு என்ன இருக்கிறது? தங்கம்மாள் எழுந்திருக்க முடியாமல் வீட்டில் படுத்த படுக்கையாய்க் கிடந்தாள். சிற்றம்பலம் தெருவில் கொம்மாளம் அடிக்க ஆரம்பித்தான். இரண்டு மூன்று மணி நேரம் விளையாடிய பின், வீட்டிற்கு வந்து சேர்ந்தான். நன்றாய் ஜலதோஷம் பிடித்துக்கொண்டது. மூக்கு ஆறாய் ஓட ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் தலைவலி என்று படுத்துக்கொண்டான். உடம்பு நெருப்பாய்க் காய்ந்தது. றீர் ஹீர் என்று இளைத்து இரும ஆரம்பித்தான். பிள்ளைகளை ஒன்றன் பின் ஒன்றாய்ப் பறி கொடுத்த தங்கம்மாளுடைய ஹிருதயம் துடித்தது. அத்தகைய பயங்கரச் சப்தத்தை அவள் பல தடவை கேட்டிருக்கிறாள். அதன் அர்த்தம் அவளுக்கு நன்றாய்த் தெரியும். ஆனால் என்ன செய்வாள் பாவம்! ஒரு மஞ்சள் துண்டை எடுத்துத் தன் மகனுக்குத் தூபங் காட்டுவதற்குக் கூடச் சக்தி யற்றவளாய் இருந்தாள். உடனே ஒரு யோசனை தோன்றியது. சுந்தரத்தை அனுப்பிப் பர்வதம்மாளைக் கூட்டி வரச் சொன்னாள்.
பர்வதம்மாள் பையனைப் பார்த்ததும் திடுக்கிட்டாள். “அட பாவி! குழந்தைக்கு நன்றாய் ஜலதோஷம் பிடித்துக்கொண்டதே. டாக்டரை உடனே கூப்பிட்டு வரச் சொல்லடி” என்றாள். டாக்டர் வந்து ஏதோ மருந்துகள் கொடுத்துவிட்டுச் சென்றார். அன்று இரவு முழுவதும் சிற்றம்பலம் தூங்கவில்லை. படுக்கையில் இங்கும் அங்கும் உருண்டு புலம்பிக்கொண்டு இருந்தான். பர்வதம்மாளும் இரவு முழுவதும் கண் விழித்து, அவன் பக்கத்திலேயே இருந்து, அவனுக்கு வேண்டிய சேவை சுச்ருஷைகளெல்லாம் செய்து கொண்டிருந்தாள். டாக்டரை உடனே கூட்டிக்கொண்டு வந்தது மிகவும் நல்லதாய் விட்டது. நாலைந்து தினங்களுக்குள் பையன் சௌக்கியமடைந்து விட்டான். ஆனால் அந்த ஐந்து நாட்களுக்குள் பையன் எலும்புந் தோலுமாகி விட்டான். அவனைப் பார்க்கவே பயங்கரமாய் இருந்தது. உண்மையைச் சொல்லுவோமானால், பர்வதம்மாளின் தவப் பயன் தான் பையன் பிழைத்ததென்று சொல்ல வேண்டும். தாயார் தூங்குவாள். தகப்பனாரும் தூங்குவார். ஆனால் பர்வதம்மாளின் கண்களில் தூக்கம் எட்டிக் கூடப் பார்க்காது. அவளுடைய பசியும் தாகமும் எங்கு ஒளிந்துவிட்டன என்று தெரியவில்லை. ஊரிலுள்ள கோயில்களுக்கெல்லாம் தேங்காய் உடைப்பதாக நேர்ந்தாள். தன் பிள்ளையைக்கூடத் தாய் அம்மாதிரி கவனிக்க மாட்டாள். அம்மாதிரி அதற்குச் சிகிச்சை செய்து வந்தாள்.
ஒரு நாள் காலை நேரம். பையன் சிற்றம்பலம் படுக்கையில் தூங்கிக்கொண்டிருக்கிறான். செட்டியார் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு இருக்கிறார். தங்கம்மாள் கட்டிலில் படுத்துக்கொண்டிருக்கிறாள். பர்வதம்மாள் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு பையன் படுக்கையினருகில் உட்கார்ந்திருக்கிறாள். திடீரென்று செட்டியார் பர்வதம்மாளை நோக்கி, “அம்மா, நீங்கள் தாம் எங்கள் பிள்ளைக்கு உயிர்ப் பிச்சை கொடுத்தீர்கள். நீங்கள் செய்த உபகாரத்தை நாங்கள் உயிரோடு இருக்கும் வரை மறக்க மாட்டோம்” என்றார்.
இந்த அம்மாளைச் சாதாரணப் பெண் என்று நினைக்கக் கூடாது. சாக்ஷாத் பார்வதி தேவியே நம் பிள்ளையைக் காப்பாற்ற ஒரு பெண்ணுருவம் எடுத்து வந்திருக்கிறாள். இந்த அம்மாள் இல்லாவிட்டால், நம் பையன் என்ன கதி அடைந்திருப்பானோ, தெரியாது. தாயே! உங்களிடத்தில் எனக்கு ஒரே ஒரு பிரார்த்தனை. பிள்ளை பிழைப்பதும் சாவதும் ஈசுவர சங்கற்பம். என்றாலும், நம் முயற்சியிலும் ஒன்றுமில்லை என்று சொல்ல முடியாது. நான் துர்ப்பாக்கியவதி. இப்பொழுது உங்களுடைய புண்ணியந்தான் என் மகன் பிழைத்தது. இந்த ஒரு குழந்தையையும் ஈசுவரன் என்னிடமிருந்து பிடுங்கிக் கொள்ளுவானோ என்று நான் அஞ்சுகிறேன். இன்றிலிருந்து நீங்கள் இவனை உங்கள் பிள்ளையென்று நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளையான பிறகு, அவன் ஒரு வேளை பிழைக்கலாம். நான் பாவி. என்னிடம் இருந்தால், பிள்ளைக்கு ஏதாவது நோய் வந்து கொண்டே ருக்கிறது. இன்றிலிருந்து நீங்களே அவனுக்குத் தாயாக இருங்கள். அவனை உங்கள் வீட்டிற்குக் கூட்டிப் போய் விடுங்கள். அல்லது எங்கு வேண்டுமானாலும் கூட்டிப் போங்கள். உங்கள் கையில் பையனை ஒப்பித்த பின் எனக்கு ஒரு கவலையும் இராது. உண்மையில் தாங்கள் தாம் அவனுக்குத் தாய்” என்றாள் தங்கம்மாள்.
“அம்மா! கடவுள் குழந்தையைக் காப்பாற்றுவார். ஏன் அம்மா இவ்வளவு பயப்படுகிறாய்?”
“இல்லை அம்மா, நான் சொல்வது நிஜந்தான். இதுவரை எனக்கு மூன்று குழந்தைகள் பிறந்து இறந்திருக்கின்றன. இந்த ஒரு மகனாவது பிழைத்திருக்கட்டும்.”
பர்வதம்மாளின் கண்களில் கண்ணீர் துளும்பியது. ”அம்மா, நான் உயிரோடு இருக்கும் வரை, உன் பிள்ளைக்கு என்னால் இயன்ற சேவை செய்வேன். ஆண்டவன் அவனுக்கு நீண்ட ஆயுள் கொடுக்க வேண்டும். இதுதான் என் பிரார்த்தனை” என்று சொன்னாள்.
சிற்றம்பலம் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தாள். அவனுக்கு மருந்து கொடுக்கவேண்டிய நேரமாகி விட்டது. அவனை எழுப்பி மருந்தைக் கொடுக்கலாமென்று பர்வதம்மாள் அவனை எழுப்பினாள். பிள்ளை எழுந்திருக்க வில்லை. உடனே திடுக்கிட்டுக் கூச்சலிட்டாள். சிற்றம்பலத்தின் உடம்பு ‘ஜில்’லென்று இருந்தது. முகம் வெளுத்துவிட்டது. அவள் உள்ளம் துடித்தது ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். அவள் கண்களினின்று கண்ணீர் மாலை மாலையாக வடிந்தது. பையனை மார்போடு கட்டித் தழுவிக்கொண்டு, “அடி பாதகி! அதிருஷ்ட மற்றவளே!” என்று கதறினாள். தங்கம்மாளும் செட்டியாரும் முட்டி மோதிக்கொண்டு அழுதார்கள்.
தங்கம்மாள் என்ன நினைத்தாள்; இப்பொழுது எப்படி முடிந்தது? யமனுக்கு ஏமாற்றுவதில்தான் இன்பம் போலும்! அவனை யாவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சமயம் அவன் வருவதில்லை. நோயாளி எப்பொழுது குண மடைந்து வருகிறானோ, எப்பொழுது வீட்டிலுள்ளவர்கள் எல்லாரும் இனிமேல் பிழைத்துக் கொள்ளுவான் என்று கவலையற்றுச் சந்தோஷமாக இருக்கிறார்களோ, அச்சமயத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததுபோல், திடீரென்று யமன் வருகிறான். நாள் முழுவதும் அவ்வீடு துக்கமயமாக இருந்தது. உயிருக்கு உயிர் வாங்கிக்கொண்டு போக யமன் தயாராக இருந்தால், தன் உயிரைக் கொடுத்துப் பிள்ளையைக் காப்பாற்றி யிருப்பாள் பர்வதம்மாள்.
தங்கம்மாள் மகன் இறந்த சோகத்தால், நாளுக்கு நாள் இளைக்க ஆரம்பித்தாள். அவளுடைய நோயும் நாளுக்கு நாள் அதிகரித்தது. எலும்பும் தோலுமாக இருந்தாள். இறுதியில் ஈசுவரன் கிருபையில் அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் தங்கம்மாள் குழந்தை பிறந்த பின் வெகு நாட்கள் உயிரோடிருக்க வில்லை. அவளுக்குத் தன் இறுதிக் காலம் கிட்டிவிட்டது போல் தோன்றியது. பர்வதம்மாள் அவள் பக்கத்தில் உட்கார்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். செட்டியாரும் ஒரு புறம் உட்கார்ந்திருந்தார். தங்கம்மாள் கணவனைப் பக்கத்தில் அழைத்து, “நான் இன்னும் சில மணி நேரத்தில் இவ்வுலக வாழ்வை விட்டு நீங்கி விடுவேன். என் குழந்தையைப் பற்றிய கவலை தான் பெரும் கவலையாக இருக்கிறது. எனக்குப் பின் அதை யார் காப்பாற்றுவார்கள்?” என்று கண்ணீர் விட்டாள்.
“அந்தக் கவலை உனக்கு வேண்டாம், அம்மா. என் மகன் சுந்தரத்தை நான் எப்படி வளர்க்கிறேனோ அதைவிடப் பன்மடங்கு அதிகமாக உன் குழந்தையை வளர்ப்பேன்” என்றாள் பர்வதம்மாள்.
மாரியப்பஞ் செட்டியார் திடுக்கிட்டு நோக்கினார். நேக வருஷங்களுக்கு முன்னால் வைகை வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகப்பட்ட அதே பார்வதி அங்கு உட்கார்ந்திருப்பதைக் கண்டார்!
– வாடா விளக்கு முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.
![]() |
சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: December 7, 2025
பார்வையிட்டோர்: 78
