கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 30, 2025
பார்வையிட்டோர்: 4,442 
 
 

சென்னையின் பிரபல மருத்துவமனை அது.

கல்யாண் வசந்த் என்ற பிரபல நடிகர், இசிஆர் ரோடில் தன்னுடைய காரை ஓட்டிச் சென்ற போது, அந்த கார் விபத்துக்கு உள்ளாகி அதில் அவர் அடிபட்டு ஐசியூவில் அனுமதிக்கப் பட்டு இருந்தார். அவர் சமீபத்தில் சொந்தமாய் எடுத்த ஒரு படம் படு தோல்வி அடைந்து, அதனால் அவர் பெரிய கடனில் இருப்பதாகவும், அந்த மனக் குழப்பத்தில் அவர் காரை ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் சொன்னார்கள். ஒரு வாரம் ஆகி விட்டது. நினைவு இன்னும் திரும்ப வில்லை என்றும் சொன்னார்கள்.


கல்யாண் வசந்தின் மேனேஜர் நட்டு வெறுப்புடன் மருத்துவ மனையின் ரிசப்சனில் உட்கார்ந்து இருந்தான்.

அந்த வசுதா மேல் அவனுக்கு கோபம் பொங்கிக் கொண்டு வந்தது. நான் ஒருத்தன் மட்டும் இவருக்காக ஏன் இப்படி இந்த மருத்துவ மனையில் உட்கார்ந்து இருக்க வேண்டும்.

அவள் போனை எடுப்பதே இல்லை. பல முறை போன் செய்தாகி விட்டது. கல்யாண் வசந்துடன் இப்போது அவள் தானே வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஆக்சிடெண்ட் ஆகி அவர் மருத்துவ மனையில் படுத்துக் கிடக்கும் இந்த செய்தி டிவி, பத்திரிக்கைகளில் வந்து கொண்டிருக்கிறது. அவளும் பார்த்து இருப்பாள். இவரை மருத்துவ மனைக்கு வந்து இது வரை அவள் ஏன் பார்க்க வில்லை. இவரிடம் பணம் ஏதும் இப்போது இல்லை என்பது தான் காரணமா. எவ்வளவு பணத்தை இது வரை இவரிடமிருந்து அவள் கறந்து இருப்பாள்.

”யாருங்க அந்த சினிமா ஸ்டாரோட அட்டெண்டர். பெரிய டாக்டர் கூப்பிடறாங்க..”

நர்ஸ் வந்து சொல்ல, கல்யாண் வசந்த் படுத்திருக்கும் ஐசியூ அறைக்குள் போனான் நட்டு.

பெரிய டாக்டர் நடிகரின் கேஸ் ஹிஸ்டரியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

நடிகர் ஆரஞ்சு ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தார்.

நினைவு திரும்பி விட்டதா இவருக்கு.

ஆனால் நட்டுவை அவர் கண்டு கொள்ளவே இல்லை.

என்ன ஆயிற்று இவருக்கு.

அடிபட்டதில் மூளை குழம்பி விட்டதா.

இல்லை என் மேல் கோபமா.

நான் செய்த திருட்டுத்தனம் எல்லாம் அவருக்குத் தெரிந்து விட்டதா.

ஐசியூவில் படுத்துக் கிடக்கும் இவரிடம் என்னைப் பற்றி யார் போட்டுக் கொடுத்து இருப்பார்கள்.

“இப்படி வாங்க..” நட்டுவை ஐசியூவுக்கு வெளியே கூட்டி வந்த டாக்டர்,

”நாளைக்கு இவரை டிஸ்சார்ஜ் செய்யலாம்னு இருக்கேன். பணத்தைக் கட்டிட்டு வீட்டுக்கு கூட்டிக் கிட்டு போங்க.”

”இப்போ எப்படி இருக்குங்க டாக்டர் எங்க சாருக்கு. குணமாயிட்டாரா. வேற ஏதும் பிரச்சினை இல்லையா. அடிபட்டதிலே உடம்பில வேற ஏதாவது..”

“உடம்பிலே எந்த பிரச்சினையும் இல்லை.. ஆனா..”

“என்ன அவருக்கு..”

”தலையிலே அடிப்பட்டதிலே மூளையிலே பாதிப்பு ஏற்பட்டு இருக்கு. ஞாபக சக்தியிலே ஒரு கோளாறு. அவருக்கிட்டே நாங்க பேசிப் பார்க்கும் போது ஒரு ஷாக்கான விஷயம் தெரிய வந்திருக்கு. அவருக்கு ஒரு விசித்திரமான ஒரு மறதி நோய் வந்து இருக்கு. புதுசு எல்லாம் மறந்து போச்சு. ஆனா பழைய விஷயம் எல்லாம் அவருக்கு ஞாபகம் இருக்கு..”

”ஐயோ.. புதுசு எல்லாம் அவருக்கு மறந்து போயிடிச்சா.. அதனால தான் என்னை அவராலே அடையாளம் கண்டுக்க முடியலையா..”

“ஆமா. அப்படித்தான் இருக்கணும்.. நீங்க தான் அவரோட மேனேஜரா.. எவ்வளவு நாளா இவருகிட்டே வேலை பார்க்கறீங்க..”

”ஐந்து வருஷம் இருக்கும்..”

”அவரோட வாழ்க்கையிலே இந்த கடைசி பீரியட் தான் அவருக்கு ஞாபகம் இல்லை போல இருக்கு..”

மெலிதான ஒரு சந்தோஷம் நட்டுவின் முகத்தில் பரவியது.

கடன் என்று சொல்லி அவரிடமிருந்து நான் வாங்கிய அந்த ஐம்பது லட்சம் அவருக்கு மறந்து போய் இருக்குமா. அப்புறம், கணக்கில் பணத்தில் நான் கையாடல் செய்து விட்டதாக அந்த ஆடிட்டர் கொடுத்த ரிப்போர்ட்..

”பழசு மட்டும் தான் ஞாபகம் இருக்குன்னா, எந்த வயசு வரைக்கும் அவருக்கு ஞாபகம் இருக்குங்க டாக்டர். குழந்தைப் பருவம் மட்டும் தான் ஞாபகம் இருக்கா..”

”அப்படி சொல்லிட முடியாது. நாங்க பல முறை பேசிப் பார்த்திலே அவரோட எந்த வயசு வரைக்கும் அவருக்கு ஞாபகம் இருக்குன்னு தோராயமா கண்டு பிடிச்சிட்டோம். அவரோட கல்யாணம், அவரோட கிராமத்து வாழ்க்கை வரைக்கும் அவருக்கு ஞாபகம் இருக்கு. அதுக்கு பின்னால நடந்தது பூராவும் அவருக்கு மறந்து போயிடிச்சி..” என்ற டாக்டர், ”அவரோட மனைவி எங்கே..” என்றார்.

“அவங்க கிராமத்துக்குப் போயிட்டாங்க. ரொம்ப நாளாச்சு.. ரெண்டு பேருக்கும் நடுவிலே ஏதோ மனஸ்தாபம்..”

”அது சரி. இந்த நடிகர் எப்போ இங்கிலீஷ் பேசக் கத்துக்கிட்டார்னு தெரியுமா.” என்று கேட்டார்.

“அவர் பிரபலம் ஆனதும், வீட்டில் டியூசன் வாத்தியார் வைச்சி கத்துக் கிட்டார்.. அப்போது அவருக்கு முப்பது வயது இருக்கும்.”

“அப்படியா.. அவரோட இங்கிலீஷ்ல நான் பேசனப்ப, அவருக்கு இங்கிலீஷ் புரியல.. ஒரு வேளை அந்த மறதி நோய் தான் காரணமாக இருக்கும்னு நெனக்கிறேன்.”

நட்டுவின் சந்தோஷம் உறுதி ஆனது.

கல்யாண் வசந்த்தின் இந்த மறதி நோய் என் நன்மைகே.

“நாளைக்கு டிஸ்சார்ஜ் செய்யறேன். வீட்ல வைச்சிப் பார்த்துக்கோங்க..”


வைதேகி, மளிகைக் கடையை நோக்கி நடக்கும் போது, தனது இட்லிக் கடைக்கான மளிகைப் பொருட்கள் கடனில் இன்று கிடைக்குமா என்று கவலைப் பட்டாள்.

ஏற்கனவே பாக்கி இருக்கிறதே.

அவளுடைய இட்லிக் கடை சரியாக ஓடவில்லை. கடனுக்கு சாப்பிட்டவர்கள் பணத்தைக் கொடுக்கவில்லை.

அந்த குழப்பத்தில் இருந்ததாலோ என்னமோ, அவள் நடையில் சற்று தடுமாற்றம்.

ஹார்ன் சத்தம் வெகு அருகில் கேட்க, கிறீச் என்ற சப்தத்துடன் பிரேக் போட்டு ஒரு வேன் நின்றது.

”ரோட்டைப் பார்த்துப் போம்மா..”

அவளைக் கடிந்து கொண்டு, அந்த வேன் கிளம்பியது.

அந்த வேனின் பின்னால் ஒரு சினிமா கம்பெனியின் பெயர் எழுதி இருந்தது.

சினிமா படப் பிடிப்புக்கு தனது கிராமத்துக்கு வந்திருக்கும் வேன் அது என்று அவள் புரிந்து கொண்டாள்.

இப்படி வந்த ஒரு சினிமா கம்பெனியின் வேன், தன்னுடைய வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது என்பது ஞாபகம் வர, வைதேகிக்கு ஒரு பெருமூச்சு வந்தது.

மளிகைக் கடையை அவள் அடைந்த போது,

“என்ன வைதேகி. டிவியிலே வந்து கிட்டு இருக்கிற சேதியைப் பார்த்தியா..”

“என்ன சேதிங்க.. என்கிட்டே டிவி கெடையாதுங்களே. ஃப்ரியா கெடச்ச டிவியைக் கூட வித்துப்புட்டேன். கேபிளுக்கு என்னால பணம் கட்ட முடியல..”

“அது சரி. இட்லி சாப்பிட்டுட்டு கடன் சொல்லிட்டு போயிடறானுங்க வெட்கம் கெட்ட பசங்க. டிவி கனக்சனுக்கு எப்படி பணம் கட்ட முடியுமா உன்னால..”

“அது இருக்கட்டும்ங்க. என்ன சேதி..”

“உன்னோட புருஷனைப் பத்தி தான்.. ஓடிக்கிட்டு இருக்கு டிவியிலே.. வந்து பாரு..”

அனைத்து டிவி சேனல்களிலும், பத்திரிக்கைகளிலும் வந்த இந்த செய்தியை அனைவரும் பார்த்தது போல வைதிகேகியும் தனது கிராமத்தில் அந்த மளிகைக் கடையில் இருந்து பார்த்தாள்.

”நீ சென்னைக்குப் போய்ப் பாரு வைதேகி.. உன் புருஷனை நீ கையோட கூட்டிக் கிட்டு வந்துடு..” மளிகைக் கடைக்காரர் சொன்னார்.

”சென்னைக்குப் போக காசு..”

“நான் கடனா தர்ரேன். ஏற்கனவே நீ வாங்கி இருக்கிற கடனோட சேர்த்து இதையும் எழுதிக்கிறேன்.. உன் புருஷன் ஊருக்கு வரட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்.. அவன் நான் பார்த்து வளர்ந்த பையன்.”

கலங்கிய கண்களோடு வைதேகி கை எடுத்துக் கும்பிட்டாள் அந்த மளிகைக் கடைக்காரரை.

வைதேகிக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அவளுக்கு அந்த கல்யாண் வசந்தோடு திருமணம் நடந்த போது அவனுக்கு வயது இருபத்து மூன்று. அவளுக்கு வயது பதினெட்டு. பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த கல்யாணம். அப்போது அவன் கார், வேன் ரிப்பேர் செய்யும் ஒரு மெக்கானிக். அப்போது அவன் பெயர் முத்துச் செல்வன்.

அவர்கள் கிராமத்தில் ஒரு சினிமா சூட்டிங் நடந்தது. அப்போது, அந்த அவுட்டோர் படப் பிடிப்பு குழுவின் வாகனங்கள் ரிப்பேர் ஆகி விட, அதை அவன் ரிப்பேர் செய்து கொடுத்தான். அந்த பழக்கத்தின் மூலம் அவனுக்கு சினிமாவில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தது. மற்ற உறவினர்கள் எல்லாம் வேண்டாம் என்று சொன்னபோதும், வைதேகி தன் கணவனுக்கு ஊக்கம் கொடுத்து, அவனுடன் சென்னைக்கு வந்து, பல இடங்களில் ஒண்டுக் குடித்தனம் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்து, கதா நாயக நடிகன் என்ற அந்தஸ்த்தை அவன் அடைய, வைதேகியும் உடனிருந்து பாடுபட்டாள்.

அப்படி ஒரு பெயரை எடுத்தவுடன் வைதேகியை துரத்தி விட்டான் அவன்.

அதற்குப் பிறகு ரேஷ்மா. பிறகு ராக்கி.. இப்போது வசுதா.


தொலைக் காட்சியில் கல்யாண் வசந்துக்கு ஏற்பட்டுள்ள அந்த மறதி பற்றிய செய்தியை அந்த வசுதாவும் பார்த்தாள்.

நட்டுவைப் போல் அவளும் இது தனக்கு சாதகமா, பாதகமா என்று யோசித்தாள்.

மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்தாலும், அவரால் மீண்டும் நடிக்க முடியுமா. சம்பாதிக்க முடியுமா. ஏற்கனவே அவருக்கு கடன் அதிகமாக இருக்கிறது.

அது இருக்கட்டும்.

நான் அவரிடம் இருந்து கடன் என்று சொல்லி நான் பெற்ற பணம்.

இந்த மறதி நோயினால் அதை எல்லாம் மறந்து இருப்பாரா..

இந்த மேனேஜர் நட்டு, போன் செய்து கொண்டே இருக்கிறான்.

அந்த நட்டு மூலம் ஏதாவது தொந்திரவு வந்து விடக் கூடாது. இந்த சமயத்தில் மருத்துவ மனைக்கு நான் போகாமல் இருப்பதும், கல்யாண் வசந்த்தைப் பார்க்காமல் இருப்பதும் சரியா. எது செய்தாலும், அவனுடன் சேர்ந்தே செய்ய வேண்டும். இல்லை என்றால் அவன் சும்மா விட மாட்டான். மாட்டி விட்டு விடுவான்.

அடுத்த நாள் அரை மனதுடன் வசுதா, மருத்துவ மனைக்குப் புறப்பட்டாள்.

நட்டுவைப் பார்த்தாள்.

இருவரும் உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

கல்யாண் வசந்துக்கு அவருடைய இருபத்து ஐந்து வயதுக்குப் பின் நடந்தவைகள் எல்லாம் மறந்து போய் விட்டது. அதே சமயத்தில் இப்போது அவருக்கு ஏகப் பட்ட கடன். ஒரு விதத்தில் அவருடைய மறதி நோய் நம் இருவருக்கும் நல்லதே. அந்த மறதி நோயில் நாம் இருவரும் அவரிடமிருந்து கறந்த பணம், மோசடி, கையாடல் எல்லாம் அவருக்கு மறந்து போய் இருக்கும். கல்யாண் வசந்தை இத்தோடு கழட்டி விட்டு விடுவதே நல்லது.

“ஆஸ்பிட்டல் பில்லையாவது நாம கட்ட வேண்டி வரும்.. டாக்டர் என்னைக் கூப்பிட்டுச் சொல்லிட்டாரு. இந்த ஆஸ்பிட்டல் பில்லை நாம கட்டலேன்னா விஷயம் பெருசாயிடும்.” நட்டு சொல்ல,

“நாமன்னு சொல்லி ஏன் என்னையும் இழுக்கறே.. அவரோட பணத்தை நீ தானே வைச்சிருக்கே..” வசுதா கேட்டாள்.

“நீங்க மட்டும் என்ன.. நீங்களும் நெறையா அவருக்கிட்டே இருந்து பிடுங்கி இருக்கீங்க..”

“நாம எதுக்கு இப்படி சண்டை போடணும்.. சரி.. இந்த ஆஸ்பிட்டல் பில்லை நாம ரெண்டு பேரும் சேர்ந்து சரிபாதியா ஏத்துக்கிட்டு கட்டிடலாம். என் கிட்டே ஜி பே இருக்கு. உன் கிட்டே..”

“என் கிட்டேயும் ஜி பே இருக்கு..”


சென்னைக்கு உடனே புறப் பட்டு வந்த வைதேகி, அந்த மருத்துவமனையை அடைந்து அதன் ரிசப்ஷனில் காத்திருந்தாள். வசுதாவும், நட்டுவும் அதே ரிசப்ஷனில் இருந்தார்கள்.

டிஸ்சார்ஜ் செய்யப் பட்டு, வார்டில் இருந்து வெளியில் வந்த முத்து செல்வன், வசுதா, நட்டு உட்பட அனைவரையும் பார்த்தான். யாரையும் அவனால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.

வைதேகி தன் கணவனை நோக்கி ஓடினாள்.

“என்னங்க.. எப்படி இருக்கீங்க ..” என்று கண்ணீர் மல்க கேட்க,

“வைதேகி. எப்படி இருக்கே.. உன்னைப் பார்த்து ரொம்ப நாள் ஆயிட்ட மாதரி இருக்கு..” என்றான் முத்து செல்வன்.

அவனுடைய கண்களிலும் கண்ணீர்.

“சரி வாங்க. நம்ம ஊருக்குப் போகலாம்..” என்ற வைதேகி, ஒரு ஆட்டோவை வரவழைத்தாள்.

முத்துச் செல்வனை ஏற்றிக் கொண்ட அந்த ஆட்டோ, சென்டிரல் ஸ்டேஷனுக்குக் கிளம்பியது.

– கல்கி, ஆகஸ்டு 2025

தாரமங்கலம் வளவன் தாரமங்கலம் வளவனின் முப்பது சிறுகதைளை கொண்ட முதல் சிறுகதை தொகுப்பு, ‘ ஐயனார் கோயில் குதிரை வீரன்’ என்ற தலைப்பில் காவியா வெளியீடாக 2016 இல் வெளி வந்தது. பிறகு இவர் எழுதிய சிறுகதைகளையும், குறுநாவல்களையும் தொகுத்து ‘தோற்றப் பிழை’ என்ற தலைப்பில் காவியா பதிப்பகம் 2019 இல் வெளியிட்டு உள்ளார்கள். இந்த இரு தொகுப்பிப்பிலும் இடம் பெற்ற பல படைப்புகள் சிறுகதைகள்.காமில் பதிவிடப் பட்டு இருக்கிறது. இவ்விரண்டு தொகுப்புகளும்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *