மரம்




மூன்றாம் வகுப்பு மகேஷ், பேரனை அழைக்க அந்த பள்ளிக்கூட வளாகத்திற்குள் நுழைந்த தாமோதரன் அவன் வந்ததுகூட அறியாமல் அங்கு பிரமாதமாய் நிழல்கொடுத்து பிரமாண்டமான நின்ற மரத்தை இரு கை விரித்து ஆசையாய் அணைத்தார்.
அருகில் வந்து நின்ற அவனுக்கு ஆச்சரியம்.
”தாத்தா!” அவர் சட்யைப் பிடித்து இழுத்து அழைத்தான்.
”என்ன கண்ணு !” அவர் மரத்தை விட்டு பையன் தாடையைப் பிடித்தார்.
”மரம்ன்னா உனக்கு ரொம்ப இஷ்டமா ? ” அவர் கையைப் பிடித்து கொண்டு நடந்தான்.
”ஆமாம். இப்போ மட்டுமில்லே. எப்பவும்.” இவரும் நடந்தார்.
”ஏன் ? ”
”அது நமக்கு நல்ல காத்தைக் கொடுக்குது. நிழலைக் கொடுக்குது. மழையைக் கொடுக்குது. இலை மக்கி உரமாகுது. மரம் கதவாகுது,நிலையாகுது, இப்படி நிறைய ஆகுது. அதுக்கு நிகர் அதுதான்.”
”அது தெரியும். நீ ஏன் இந்த மரத்தைக் கட்டிப் பிடிச்சே ? ”
”அதுவா! நானும் இந்தப் பள்ளிக்கூடத்துலதான் படிச்சேன். நான் படிக்கும் போது இது ஆரம்பம். அப்போ….இந்த இடம் அதிக கட்டிடம் இல்லாத பெரிய இடம். நிர்வாகம் நிழலுக்காக மரம் நட்டுது. தப்பு செய்யிற புள்ளைங்களையெல்லாம்…மரச்செடிகளுக்குத் தண்ணி ஊத்தச் சொல்லி தண்டனை குடுத்துது. எனக்கு தண்டனை வந்த போது எதுக்கு இப்படி செய்யச் சொல்றீங்கன்னு வாத்தியாரைக் கேட்டேன். அதுக்கு அவர், மரங்களினால் நமக்கு இன்னின்ன பலாபலன். தண்டனையானாலும் அது பிற்காலத்துல நல்ல பலாபலனைக் கொடுக்கனும்ன்னுதான் இப்படிச் செய்யச் சொல்றோம்ன்னு மொத்த வகுப்புக்கும் எல்லார் மனதிலும் பதியறமாதிரி சொன்னார். எனக்கு அது ரொம்ப பதிஞ்சுப் போச்சு. நான் இந்த மரத்தை வளர்க்கனும்ன்னு வேணும்ன்னே அடிக்கடி தப்பு செய்வேன். பின்னால பெரிய வகுப்பு படிக்கும்போது, படிச்சு முடிக்கும்வரை தண்டனை இல்லேன்னாலும் தண்ணி ஊத்துவேன். அப்படி வளர்த்த மரம் இது. பார்க்க ஆசையாய் இருக்கு. அதான் கட்டிப்பிடிச்சேன்!” சொல்லி பரவசத்தின் காரணமாய் கண்ணில்; வழிந்த நீரைத் துண்டால் துடைத்தார் தாமோதரன்.
மகேசுக்குள்ளும் அவர் மர விதை விழுந்தது.
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |