கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 1, 2024
பார்வையிட்டோர்: 1,399 
 
 

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தப் பறவையின் கூவல் இப்போதும் அவன் நெஞ்சுக்குள் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. மரணத்தை அவன் அனுபவித் ததில்லை. ஆனால், அதை, அதன் நகர்வை, அதன் இயங்குதலை, அது திடீர் என நிகழ்த்தும் தாக்குதலைக் கண்டிருக்கிறான். எறும்புபோல் நெஞ்சுக்குள் ‘சுள்’ என்ற சின்னக் கடி, மெல்லிய ஊர்தல், சிலவேளைகளில் மின்னலாய்க் கீழிறங்கி ஒரே அள்ளலில் விழி பறித்துச் செல்லுதல் போன்ற வக்கிரம். பதுங்கிப் பதுங்கி மரங்களிடையே ஒளிந்தொளிந்து பூனைபோல் தலையை உயர்த்து வதும் தாழ்த்துவதுமான வேட்டைக்கான எத்தனம். முகட்டில் தொங்கும் வௌவாலாய் நாட்கணக்கில், ஆண்டுக்கணக்கில் அதன் மௌனித்த அசைந்தாடல். மரணம் என்பது இருந்த ஒன்றின் இன்மையாதல்? அயலில் இருந்தவன் அங்கிருந்து கிளம்பி வேற்றூர் சென்றுவிட்டால், அவனோடு இருந்தவர்களுக்கு அது அவனின் மரணமா? இல்லை, மரணத்தின் ஒத்திகை. வேற்றூர் சென்றவன் வேற்றூரிலேயே இறந்துவிட்டால், அது தெரியாத அவனோடிருந்த அயலவர்களுக்கு, அவன் இருப்பின் போலி, வாழ்க்கையாய் விரிகிறது. ரோட்டில் வேகமாக வந்த லொறியால் மோதுண்டு சிதறிப்போன எட்டு வயதுப் பாடசாலைச் சிறுமியின் உடல் அப்புறப்படுத்தப்பட்ட பின், அங்கே கிடந்த அவள் தலையில் சூடிய றிபன்சுருள் காற்றில் அள்ளுப்பட்டு மெல்லமெல்லப் புரண் டது. அதில் அந்தச் சிறுமியின் உடல் துடித்துக்கொண்டிருந்தது. பஸ்வண்டியினால் துவைத்தெறியப்பட்ட தெருநாய் ஒன்று குட லெல்லாம் வெளியே பிதுங்கி வழிய ரோட்டின் நடுவே கிடந்து கால்மணிநேரமாக அனுங்கிவிட்டு அடங்கிப்போக அதன் வெறித்து நின்ற விழிகளிலே உலகின் வேதனையெல்லாம் குடியேறிற்று. அவ்வேளை, அவ்விழிகளிலிருந்து வியாபித்த பேர்மௌனம் அங்கெழுந்த அத்தனை சந்தடிகளையும் விழுங்கி மேலெழுந்ததை யார் அனுபவித்தார்? அந்தப் பறவையின் கூவல் அப்போதும் அவன் நெஞ்சுள் ஒலித்துக்கொண்டுதான் இருந்தது. எம்மை அறியாமலே, எம் காலின் கீழ் மிதிபட்டு இறந்துபோகும் அற்ப எறும்பு அனுபவிக்கும் மரண வேதனைக்கும், பெரும் பூகம்பத்தில் சிக்குண்டு ஆயிரக்கணக்கானோர் அழிந்துபோகும்போது ஏற்படும் மரண வேதனைக்குமிடையே என்ன வித்தியாசம் இருக்கிறது? 

பல்கலைக்கழக வாழ்க்கை முடிந்து பயணமாவதற்கு மூட்டை முடிச்சுகள் எல்லாம் கட்டியாயிற்று. அடுத்த நாள் காலை புறப்படல். எஞ்சியிருக்கும் ஒரே ஒரு பின்னேரம். அந்தப் பின்னேரமே அவ னோடு பழகித்திரிந்த அந்தப் பெண் புறப்படுகிறாள். ஒடோடிப் போய் அவளை அவன் சந்திக்கிறான். அவளைச் சந்திப்பதில் ஏன் அவ்வளவு வேகம்? காதலா? அவனுக்குத் தெரியாது. அவளும் அவனை எதிர்பார்த்தே அந்த மஞ்சள்நிறப் பூச்சொரியும் மரத்தின் கீழ் நின்றுகொண்டிருக்கிறாள். ஏன் நிற்கிறாள்? இவனை எதிர்பார்த் தவளாய் ஏன் நிற்க வேண்டும்? அவளுக்கும் தெரியாது. அவளை ஏற்றிக்கொண்டு போகக் கார் வரும். அந்தக் கார் வரும் வரைக்கும் அவள் மூட்டை முடிச்சுகளோடு அந்த மரத்தின் கீழ் நிற்கிறாள், பிரிந்துபோகும் தோழியருக்குக் கை காட்டியவாறே. இவனைக் கண்டதும் அவள் கண்கள் அகல விரிகின்றன. விரிந்து கருவிழிகள் உருளும் அந்தக் கண்களுக்குள் குமுறும் உள்ளத்தின் பேரிரைச்சல் அவன் செவிகளில் விழுகிறது. கதைப்பதற்கு எதுவும் இருப்பதாய் இல்லை. அவர்கள் இதயங்கள் மட்டுமே கதைத்தன. அதற்குள் அவளை ஏற்றிச்செல்ல கார் வந்துவிட்டது. அவள் இவனுக்குக் கை காட்டிவிட்டு, காரை நோக்கி நடக்கிறாள். அவள் பெயர்க்கும் ஒவ்வொரு அடியிலும் மரணம் மணக்கிறது. இப்படி எத்தனை ஊமை உணர்வுகள் காலங்காலமாய் மரணித்துக்கொண்டிருக்கின் றனவோ! அன்று காரில் ஏறிப் போனவள்தான், அதன் பின் அவளை அவன் சந்தித்ததே இல்லை. ஆனால், அவள் நினைவு, சாவில் தோய்ந்துவரும் ஒருவகைத் துயராய் மணக்கிறது. எத்த னையோ ஒளியாண்டுகளுக்கு முன்னர் வெடித்துச் சிதறி மரணித்து விட்ட ஓர் நட்சத்திரத்தின் ஒளி, இன்னும் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதுபோல், அவள் நினைவு இவனை நோக்கி இன்னும் வந்துகொண்டுதான் இருக்கிறது. 

சிறுவயதில் மரக்கிளையொன்றில் ஜோடியாய் அமர்ந்திருந்த பறவைகளில் ஒன்றை கவண்கல்லால் அடித்தபோது அவன் இலக்குத் தவறவில்லை. பறவை கீழே விழுந்தது. அதன் சிறகடிப்பில் மரணத்தின் சிதறல்கள் தெரிந்தன. எவ்வளவு முயன்றும் அதைச் சுகப்படுத்தி பறக்கவிட முடியவில்லை. அது இறந்துபோகின்றது. தன் துணையை இழந்த அதன் ஜோடி அவனைத் தொடர்ந்தது. தாழப்பறந்து அவனைத் தாக்க வந்தது. அது அவன் எதிர்பார்த்ததே. ஆனால், அவனால் தாங்கமுடியாமல்போனது, அன்றிரவு அவன் எதிர்வீட்டுக் கோடியில் எங்கோ ஒரு மரக்கிளையில் அந்த துணையிழந்த பறவையிருந்து விட்டுவிட்டுக் குரலெடுத்துக் கூவி யதையே. அது அப்பறவையின் அழுகையா அல்லது மரணத்தினால் தொடர்பறுந்து அமிழ்ந்துபோகும் அத்தனை உயிர்களின் உணர்வுகளையெல்லாம் பிழிந்தெடுத்துக்கொண்டு வரும் மரண கீதமா ? இன்றுவரை அந்த மரண இசை, அவன் நரம்பின் ஏதோ ஓர் ஒற்றை இழையில் மீட்டப்பட்டுக்கொண்டிருப்பது அவனுக்கே தெரியும். அன்றிரவு ஏனோ அவனால் தூங்க முடியவில்லை. அவனோடு கிடந்த அம்மாவை, அவன் அரிபுழுவாக அரித்துக் கொண்டே இருந்தான். “ஏனம்மா அந்தக் குருவி கத்திக்கொண்டே இருக்கு?” என்று இவன் கேட்க, “கத்தாமல் என்னடா செய்யும், அதின்ர சோடியை நீ சாக்கொண்டுபோட்டா, சும்மா இருக்குமா?” என்று அம்மா பதில் சொன்னாள். அவன் நெஞ்சு கனத்தது. திடீரென, சாவின் ஒருதுளியை அவன் நாவில் யாரோ தடவி விட்டதுபோல் இருந்தது. அவன், தான் செய்த தவறுக்குச் சோடி சேர்த்துக்கொள்வதுபோல், “நீ அண்டைக்கு இறைச்சிக்கறி காய்ச்ச எங்கட கோழியைத்தானே சாக்கொண்டனீ? அதுக்கு சோடி இல்லையாம்மா?” என்று அவன் கேட்டதற்கு, “சும்மா அலட்டாமல் கிடவடா” என்று கூறிவிட்டு, வேறொன்றும் கூறாமல் அவள் திரும்பிப் படுத்தாள். அன்று அம்மா கொலை செய்த கோழி அவன் கண்முன்னே வந்தது. கழுத்தில் சுருக்கிடப்பட்டு, கோடி வேலிக் கதியாலில் தொங்கியபோது அது துடித்துத் துடித்து மார்பிலே சிறகுகளை அடித்தடித்து அதுபட்ட வேதனை… அக்காட்சி அவன் கண்முன் திரும்பத்திரும்ப வந்தது. அப்போது மீண்டும் அந்த துணையிழந்த பறவையின் கூவல் உள்ளொலித்தது. அவன் நெஞ்சுக்குள் ஏதோ புல்லரித்தோடியது. கட்டுநாயக்கா விமானத்தாக்குதல் முடிந்தபோது, அதன் சமிக்ஞைக் கோபுரத்தருகே நீட்டி நிமிர்ந்து வானத்தைப் பார்த்தவனாய், கைகளை விசிறி எறிந்து கிடந்த புலிப் போராளியின் நினைவு அவனுள் ஓடிற்று. வீரத்தின் சிகரத் தொடுகையென அவன் அங்கே கிடந்தான். அவன் தன் இறுதி மூச்சை விட்டபோது, அந்த மூச்சு மரணத்தில் எதைப் பெரித்துவிட்டுச் சென்றதோ! அவன் தாய் எங்கிருந்தாளோ அப்போது! புறநாநூற்றுக் காலமாயின், அவள் அங்கே ஓடோடி வந்து அவனைப் புல்லியணைத்து சாவை வாழ்வினால் குளிப் பாட்டியிருப்பாள். அவன் கிடந்தான்; கைகளை வீசி எறிந்து கிடந்தான். அப்போது அங்கே பாதுகாப்பு அமைச்சர் ரத்வத்தை வருகிறார். அவரைப் பத்திரிகையாளர் தொடர்கின்றனர். “இது ஒரு கோழைத்தனமான தாக்குதல்” – அவர் பேட்டியளிக்கிறார். காகங்கள் அவர் தலையில் எச்சமிடாக் குறையாகப் பறக்கின்றன. எங்கு ஓர் உன்னதமான ஆற்றல் மேலெழுந்து சிகரம் அமைக் கிறதோ, அப்போதெல்லாம் அதைச் சந்தித்து, எதிர்கொள்ள முடியாத, சம ஆற்றல் அற்ற கோழைகளும் அற்பர்களும் இப்படித் தான் தம் மறுபக்கத்தைக் காட்டிக்கொள்கின்றனர். இவர்களைச் சந்திக்க மரணம் வெட்கப்பட்டுப் பின்வாங்குகிறது. தொடர்பறுதலே மரணம்? ஒருவன் மரணிப்பதன் மூலம் அவனோடு எமக்கிருந்த தொடர்பு அறுந்துபோகிறது. எம்மோடு அவனுக்கிருந்த தொடர்பும் அறுந்துபோகிறது. எம் உணர்வையெல்லாம் அவனுக்குள் கொட்டி அவனை அன்பால் விரிய வைத்து அதைப் பார்த்து நாமும் விரிய முடியாமல் போய்விடுகிறது. அவ்வாறே, மரணித்தவனுக்கும் அவனிடம் சேகரம் கட்டியிருந்த உணர்வுகளெல்லாம் செல்வழி யற்று ஸ்தம்பிக்க, திடீரென மின்னொழுக்கு நேர்ந்த மின்கம்பியாய், பின்னோக்கி எரிந்துபோக அவனும் உயிர் அவிந்துகிடக்கிறான். ஒருநாள் அதுதான் அவனுக்கு நடந்தது. அவன் நெஞ்சுக்கினிய நண்பன் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் கிடக்கிறான் என்பதைக் கேட்டு அவன் பிற ஊரிலிருந்து ஓடோடி வருகிறான். அதிகாலை ஐந்தரை மணியிருக்கும் நண்பன் படுத்திருந்த கட்டிலை நோக்கி உயிரைக் கையில் பிடித்தவன்போல் ஓடுகிறான். அவன் தன் நண்பனருகே செல்வதற்குச் சற்று நேரத்திற்கு முன்னர்தான் அவன் உயிர் பிரிந்துபோயிற்று; ஓடோடிப் போய் விமானத்தில் ஏறுவதற்குச் சற்று முன்னர்தான் அது take off ஆகிவிட்டதுபோல். உயிர்பிரிந்துபோன நண்பனின் முகத்தில் வேதனையோடான இன்முறுவல். நண்பன் கிடந்த கட்டிலின் அருகிருந்த ஜன்னலூடாக, கீழ்வானில் தேய்நிலா விழுந்துகொண்டிருப்பது தெரிந்தது. என்னென்ன உணர்வுகளெல்லாம் அவனுள் புதைந்துபோயினவோ! நண்பனின் கைகளை எடுத்து வருடி, வருடிக் கொட்டுதற்காய் அவனுக்குள் குமுறி எழுந்த ஆயிரம் உணர்வுப் பெரிகள் போக வழியறியாது அவனுக்குள்ளேயே கவிழ்ந்து, அவன் மூச்சோடு வெளியேறின. இந்த உலகின் எண்ணிறந்த கோடி ஜீவராசிகளின் மூச்சோடு சதா உள்ளும் வெளியும் இழுபட்டுக்கொண்டுவரும் உணர்வுகளுக்கும் நினைவுகளுக்கும் என்ன நடக்கிறது? அவை எங்கே போய்ச் சேருகின்றன ? அது ஊற்றெடுக்கும் மையம் எது? ஏது? அந்தப் பறவையின் கூவல் அப்போதும் அவன் நெஞ்சில் ஒலித்துக்கொண்டுதான் இருந்தது. 

– முடிந்து போன தசையாடல் பற்றிய கதை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, தமிழியல், லண்டன்.

மு.பொன்னம்பலம் மு.பொன்னம்பலம் (1939, புங்குடுதீவு, யாழ்ப்பாணம், இலங்கை) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பல்துறைகளிலும் இவர் பங்களித்திருத்து வருகிறார். 1950களில் கவிதை எழுதத் தொடங்கிய பொன்னம்பலத்தின் முதற்கவிதைத் தொகுதியான அது 1968 இல் வெளிவந்தது. மு. தளையசிங்கம் இவரது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. மு. பொன்னம்பலம் எழுதிய "திறனாய்வின் புதிய திசைகள்" என்ற நூலுக்கு மலேசியாவில் தான்சிறீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியம் 2010/2011ஆம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *