மனித மந்தை
கதையாசிரியர்: அண்ணாதுரை சி.என்.
கதைத்தொகுப்பு:
சமூக நீதி திராவிடநாடு
கதைப்பதிவு: December 3, 2025
பார்வையிட்டோர்: 191
(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மந்தை மந்தையாக ஆடுகள் மிரண்டோடின யாரும் விரட்டவில்லை – இருந்தாலும், சிதறியோடின, அந்த செம்மறி ஆடுகள்!
அதோ, கண்களில் செந்தீ கொழுந்து விட்டெரிய ஒடி வருகிறாள், ஒரு பெண் – ஆம், அவள்தான் மந்தவெளி மாரியமமன்!
மாரியம்மன், ஊரிலே கொள்ளை நோய் கொடுப்பவள் கொடுமை புரிபவளுக்குக்கூட கோயில், அவளுக்கும், தெய்வப் பட்டம், படையல், பூசை, விழா எல்லாம் உண்டு- பக்தியே, பயந்தாங் குள்ளிகளின்’ மூளையிலேதானே உற்பத்தி!
ஒரு மூளியான கோயில், அதற்கு முன்னால் மூர்க்க புத்தி படைத்து ஒரு கூட்டம் – அவர்களுக்கிடையே இரண்டு ஆடுகள், குளுப்பாட்டி. மஞ்சள் பூசி, மாலையிட்டு நிறுத்தியிருந்தார்கள்.
ஓடிவந்தாள் மந்தவெளி அம்மன் உரக்கக் கூவினாள்.
“வெட்டாதீர்கள் ஆடுகளை வெட்டினால், வைசூரி போட்டு ஊரையே அழித்துவிடுவேன் நீங்களாடா, என் பக்தர்கள் நீங்கள் மகா பாதகர்கள்! என் பெயரே மந்தவெளி அம்மன் இந்த மந்தைகளைக் காப்பது என் கடமை. நீங்களோ, இரண்டு ஆடுகளைக் கொண்டு வந்து எனக்கு வெட்ட வந்து விட்டீர்களே. துட்டர்களே! எனக்குப் படைக்க நீங்கள் யார்? என் பசி போக்கிக் கொள்ள எனக்கு சக்தியில்லையா? ஆடு வேண்டுமானால், எனக்கு எடுத்துக் கொள்ளத் தெரியாதா?”
”தாயே, இப்படி பேசலாமா? கொஞ்ச நேரத்திற்கு முன்னாலே, இந்தத் தறுதலை அப்படித்தான் சொன்னான் அவனையே வெட்டி விடுவோம் என்று மிரட்டினோம் அடங்கிவிட்டான், அறிவு கெட்டவன்.”
“அவனுக்கு அறிவு கெடவில்லை. உங்கள் புத்திதான் சரியில்லை என்னைத் தெய்வம் என்று நம்புவது உண்மை யானால் சகல சக்திகளும் உண்டெனக்கு என்று ஒப்புக் கொள்வது உண்மையானால், எனக்கு நான் படைத்த உயிரையே பலியிடத் துணிவீர்களா?”
“மாதா, அதுதானே வழக்கம்!”
“வழக்கம் என்று சொல்லி எங்கள் கடவுள் குலத்தையே இன்று காட்டிக் கொடுத்துவிட்டீர்கள்! கணக்கற்ற கடவுள்களைச் சொல்லி, ஆளுக்கு குடும்பம் ஏற்படுத்தி கோயில்கள் பல கட்டி, திருவிழா, படையல், வாணவேடிக்கை செய்து, எல்லாம் வெறும் பொம்மை விளையாட்டு என்று காட்டிவிட்டீர்கள்.”
மந்தைவெளி அம்மன், ‘காவு’ கொடுக்கவந்த ஆடுகளை விரட்டி விட்டாள். அந்த ஆடுகள் ஓடுமுன் அங்குக் கூடியிருந்த ‘மனித மந்தை’ சிதறியோடிவிட்டது.
அம்மன் அருளைப் பெற தெய்வப்படைப்பில் ஒரு உயிரைப் பலியிடுவது என்ன நியாயம்? கருணையில்லாதது ஒரு புறமிருக்கட்டும் கருத்தில்லையே! உணவுப் பொருளாக உட் கொள்கிறார்கள் அர்த்தமிருக்கிறது. ஆடு வெட்டுவதும், கோழி அறுப்பதும் எவ்வளவு பைத்தியக்காரத்தனம்!
மனித அறிவு வளராத காலத்தில் மனிதன், ‘முழுமனிதன்’ ஆகாத நேரத்தில், காட்டுமிராண்டி காலத்தில் வெட்டினான் வீழ்த்தினான் இரத்தத் துளிகளைத் தெளித்து தனது முரட்டு பக்தியை தீர்த்துக் கொண்டான்.
இந்தக் காலத்திலும் அது ஆகுமா? ஆடு கேட்கிற சாமியும் ஒரு சாமியா அது கசாப்புக்கடைக்குப் போகட்டுமே என்று இப்படித்தான் கூறி அவன் தடுத்தான் அவனை ஆதரித்தோர் மிகச் சிலர்! வைரங்கள் அதிகமில்லாததால் அதன் மதிப்பு குறைந்தா விடுகிறது – மணல் நிறைந்துதானிருக்கிறது – யார் ‘சட் டை’ செயகிறார்கள்!
அந்த மனித மந்தை அவனை எப்படி பயமறுத்திவிட்டது!
இந்தப் பூலோகத்திலிருப்பதைவிட, நாமெல்லாம் கூண்டோடு ‘நம்ம லோகம்’ போய்விட வேண்டியதுதானே! இந்தியாவில் மட்டுந்தான், ‘நம்மவர்’ இன்னமும் இருக்கிறார்கள் – வெளியுலகில் எவ்வளவோ கடவுள் குடும்பங்கள், ஊரை விட்டே ஓடிவிட்டன – சில நாடு கடத்தப்படடன அவைகளெல்லாம் மாஜிகளாகிவிட்டன.
தார், ஓடின் போன்ற தெய்வங்கள் எங்கு போய் மறைந்தன என்றே தெரியவில்லை. ஆனால் இங்கு மட்டும் மாரி, காளி, திரிசூலி, முத்தாலு ராவுத்தன், முனியன், சங்கிலிகருப்பன் வரையில் ஒருவர்கூட விடாமல் வாழ்கிறார்கள்.
என்னைப் பொறுத்தமட்டில் நான் மனித உலகை விட்டே போய்விடுவதென்று முடிவிற்கே வந்து விட்டேன்.
எனக்குக் கொடுத்த வேலை, ஊரை நோயால் வாட்டல் – இதைச் செய்யும் என்னையும் இந்த மக்கள் விட்டு வைத்திருக் கிறார்கள்! ஆனால், அதிக நாள் நீடிக்க முடியாது.
அம்மை பரவுகிறது என்றாலே, ‘ஊசி போட’ வந்து விடுகிறார்கள் இப்பொழுது – என் சக்திக்கு எங்கே மதிப்பு! என் பக்திமான்களுக்கு, புத்திதான் இல்லை என்றால் தைரியமும் இல்லை. என்னை நம்புவது போல, அவர்களை எதிர்க்கிறார்களா என்றால் இல்லை. ஓடி ஒளிந்து விடுகிறார்கள். நான் என்ன செய்யட்டும்? நான் போய்விடுகிறேன், எங்கள் லோகத்திற்கு!
எனக்கு ஆடு வெட்டுகிறான்களாம் என்ன கோரம்! இதைத் தடுத்தவர்களெல்லாம் எனக்கு விரோதிகளாம் என்ன மதியீனம்! இப்பொழுதே, இந்தக் கோயில் கர்த்தா, கோணங்கிப் பிள்ளையைக் கேட்கிறேன்.
படுத்திருந்த பூசாரி, போகலிங்கம் திடுக்கிட்டு எழுந்தான். ஏதோ, கோயிலுக்குள்ளே முணுமுணுப்பு சத்தம் கேட்கிறதே என்று! மந்தைவெளி அம்மன், தனக்குத்தானே பேசியபடி வெளியில் கிளம்புவதைக் கண்டு திடுக்கிட்டான்.
“தாயே”
“தடுத்தால்,ஆபத்து – விலகடா, வீணா. . .”
“எங்கே.அம்மையே.”
”ஊர்ப்பயணம் சொல்லிக் கொள்ள..”
“கோணங்கிப் பிள்ளையிடம்…”
மந்தை வெளியம்மன் நடந்து விட்டாள். பூசாரி கால் விடவிடென நடுங்க, அவள் போன திசையிலே அடியெடுத்து வைக்க முயற்சி செய்ய, முடியவில்லை. ஆகவே அங்கேயே உட்கார்ந்து விட்டான்.
“அடே, பரமபாதகா, படுபாவி நீ என் பக்தனா” சீறினாள் அம்மன்.
“ஆடு வெட்டுவது தவறு என்று நான் சொன்னேன்” என்றாள் தேவி,
“அந்தப் பயல்களோடு நீங்க சொல்லியும் நாலு ஆடுகளாக வெட்டிவிட்டேன்.”
“கொலைகாரா!”
“காவு கொடுத்தேன் – கொலை செய்யலீங்களே.”
“அது மட்டுமா? பொய் சொல்லியிருக்கிறாய் – இல்லை, அதற்குமேலே, எனக்கு சக்தியில்லையென்று ஊராருக்குச் சொல்லிவிட்டாய்!”
“என் கோயிலிலிருந்து என் சிலையைப் பண்ணையாளை விட்டுத் தூக்கிக்கொண்டு போனாய்!”
”அட, அதுவா? அந்தக் காலிப்பயல்களைப் போலீசிலே சிக்கவைக்க”
“என்னை ஒரு பொம்மையென்று நினைத்துக்கொண்டு பொய்ச் சொன்னாய்!”
”இல். . .லீ. . . ”
“எனக்கு சக்தியிருக்கிறதென்றால் என்னிடமல்லவா சொல்லியிருப்பாய் – போலீசுக்குப்போய், பொய் வழக்கு கொடுத்திருக்கமாட்டாயே!”
“அப்படியில்லை தாயே – அக்கிரமக்கார பசங்களைத் தண்டிக்க வேண்டாமா?”
“தண்டிக்க நீ யார்? அம்மன் நானிருக்க, மனிதன் நீ எப்படி முயற்சி செய்தாய்? அதுவும் அவன் தப்பு செய்யவில்லையே, நல்லதைத்தான் சொன்னான்”.
”உங்களுக்கு பலிகொடுக்கக் கூடாதென்று…”
“எனக்கு பழிவரக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் சொன்னான் தடுத்தான்!”
கோணங்கிப் பிள்ளை தலை சுழல ஆரம்பித்துவிட்டது. அவருக்கு எதுவும் புரியவில்லை.
”கோணங்கி, உன் போன்ற கோணங்கி பக்தர்களால் எங்கள் மானம் காற்றிலே பறக்க விடப்படுகிறது – இனி நாங்கள் இங்கு இருக்க முடியாத அளவு நிலைமை வந்துவிட்டது. எல்லாம் பக்தர்கள் என்ற பெயரால் உலவும் உங்கள் செயல்களால் அவர்களால் அல்ல! ஆகவே நான் போகிறேன். இனி மந்தைவெளி இருக்கும் – அங்கு உங்கள் மனித மந்தைதான் கூடிக் கும்மாளம் போடவேண்டும். அம்மன் இருக்கமாட்டாள்” என்று கூறிவிட்டுப் போய்விட்டாள்!..
கோணங்கிப் பிள்ளை கண் விழித்துப் பார்த்தார். இத்தனைக் காட்சிகளும் கனவில் கண்டவை என்று அப்பொழுது தான் புரிந்து கொண்டார்.
எதிரில், எவருக்கும் தெரியாமல், எடுத்து வந்த அம்மன் சிலை இருந்தது – அது அவரைப் பார்த்துக் கேலியாக சிரித்தது.
அந்த ஊரிலே பரவி வந்த பகுத்தறிவுப் பிரச்சராத்தைத் தடுக்க அவரிட்ட சதித் திட்டம் – பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்தோர் மீது கோயில் சிலையைக் களவாடினார்கள் என்று வழக்குக் கொடுத்து விடலாம் என்பது பண்ணையாளே பகுத்தறிவு இயக்க பரமசிவமும், பார்த்திபனும் திருடியதாக ஊரிலே கூறவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். பூசாரி போகலிங்கத்திற்கும் அதே உத்தரவு – ஆனால் பொழுது விடிவதற்குள்ளே சிலையைத் தூக்கிப் போன பண்ணையாளே, உண்மையை ஊர் முழுவதும் சொல்லிவிட்டான்.
கனவிலே கண்ட காட்சியின் நினைப்பு முடிவதற்குள்ளே, ஊர் மக்களின் கூட்டம் வீட்டு எதிரில் கூடியிருப்பதைக் கண்டார் கலங்கினார் அவருக்கு இப்பொழுது பயம் வந்ததற்குக் காரணம். கூடியிருப்பது மனித மந்தையல்ல, மக்கள் மன்றம் என்பது தெரியும்!
– 18-3-1951, திராவிடநாடு.
![]() |
காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில்…மேலும் படிக்க... |
