மனிதாபிமானம்!




“கனடாவிற்கு யாத்திரை மேற் கொள்வோர் அதிகரிக்கின்றனர்” பாதிக் கழுத்தைத் திருப்பியவாறே அமர்ந்தார் பரமகுரு.
“கனடாவில் மாகாண ரீதியாக இந்து ஆலயங்களின் எண்ணிக்கை எத்தனை தெரியுமாஅல்பேட்டாவில் பத்து பிரிட்டிஷ் கொலம்பியாவில் பதினான்கு மனிட்டோபாவில் நான்கு நியூபுரன்ட்ஸ்விக்கில் ஒன்று நியூபவுண்ட்லாந்தில் ஒன்று நோவாஸ்கோஷியாவில் ஒன்று ஒன்டாரியோவில்எண்பத்தியொன்று பிரின்ஸ் எட்வேட் தீவில் ஒன்றுகியூபெக்கில் ஏழு சஸ்காட்டுவானில் இரண்டு என அண்ணளவாக நூற்றியிருபத்தியிரண்டு இந்து கோவில்கள் கனடாவில் அருள்பாலிக்கின்றன என்றால் வியப்பேதுசனம் அள்ளுப்படத்தானே செய்யும்”

பதிலாக தனக்குத் தெரிந்தவற்றை அள்ளி விட்டார் குமாரசாமி.
“ஸ்கார்பரோ நகரில் பத்து ஆலயங்களுக்கு மேற்பட அரை மணித்தியாலயத்துள் செல்லலாம் எனும் வகையில் கிட்டக்கிட்ட அமைந்துள்ளன” என்றார் பரமகுரு.
“எல்லா ஆலயங்களிலும் அன்னதானமும் உண்டு. அதனை பெற்றுக் கொள்ள சிறிய வரிசையாவது எப்பவும் உண்டு” என்று சொல்லிச் சில அங்குலங்கள் சிரித்தார் குமாரசாமி.
“முடியாத முதியவர்களுக்குத்தான் அன்னதானம் என்பது முடிந்துவிட்டது!” முறுவலித்தார் பரமகுரு.
“குழை சாதம்… சாம்பார் சாதம் தான் எங்குமே. சர்க்கரைப் பொங்கல் வெண்பொங்கல் புளிச்சாதம் தயிர்சாதம் போன்ற வகையறாக்கள் இடைக்கிடை எட்டிப்பார்ப்பதுமுண்டு” என்றார் குமாரசாமி.
ஸ்கார்பரோவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இருவருமே முகாமைத்துவப் பணியிலிருப்பவர்கள். இரவு நேர வேலை. சிற்றுண்டிச் சாலையில் சந்தித்தால் இது போலவே பலதும் பத்தும் பேசிக்கொள்வார்கள். சுத்துமுத்தும் பார்த்துவிட்டு சிலவேளை சொந்தக்கதைகள் பேசுவதும் உண்டு.
பல நாடுகளை பூர்வீகமாக கொண்ட இரவு நேர ஊழியர்கள் தத்தமது உணவுடன் மும்முரமாக உறவாடிக் கொண்டிருக்க நால்வர் மட்டும் குழாய் நீரைப் பருகுவதும் தமது செல்லிடபேசியுடன் அல்லாடுவதும் அலைவதும் தெரிந்தது.
“அவர்கள் எதுவுமே சாப்படுவதில்லை. வழமையே அப்படித்தான். ஏன் பசியோடிருக்கப் பயிற்சிக்கின்றார்கள்என்றார் குமாரசாமி்.
“அவர்கள் தற்காலிக விஸாவுடன் கனடா வந்தவர்கள். உரிய வேலை செய்வதற்கான அரச அனுமதி அற்றவர்கள். அதனால் கிடைத்த வேலையால் வரும் சிறிய வருமானத்தையும் சேமிக்கும் நோக்கமாக இருக்கலாம்” எனப் பதிலளித்தார் பரமகுரு.
அந்த நால்வரில் வயதில் குறைந்தவனான யெலன் தண்ணீர் குடிப்பதற்காக நிதானமாக நடந்து வந்தவன் இருவரையும் கடக்க முன் போதியளவு புன்னகைத்தான்.
“நீங்கள் ஏன் சாப்பிடுவதில்லை யெலன்”
“இருந்தால்தானே!”
சாப்பாட்டு இடைவேளை முடிவதற்கான மணி ஒலித்து அனைவரையும் வேலைக்குத் திரும்ப வைத்தது.
மறு நாள் அருகிலிருந்த கோவிலுக்குச் சென்று மேலதிகமாக யெலனுக்கும் என சிறு அன்னதானப் பெட்டி ஒன்றை எடுத்து வந்து கொடுத்தார்பரமகுரு.
“ஒண்டு காணாது” என்றான் யெலன் உண்ட பின் வந்த திருப்தியில்.
“உவன் ருசிக்காகச் சாப்பிடவில்லை. பசிக்காகவே சாப்பிட்டதை நிருபித்து விட்டான்” என்றார் குமாரசாமி.
“ஒண்டு என்றது தனக்கு மட்டுமா அல்லது மற்ற மூவருக்கும் சேர்த்தாஎன்றார் பரமகுரு.
எந்த ஓரு கோவிலிலும் இரண்டு பெட்டிகளுக்கு மேலாக அன்னதானம் கேட்டாலும் தரக்கூடும். ஆனால் அதனை அநாகரீகம் எனக் கருதிய பரமகுரு அருகருகே இருந்த நான்கு கோவில்களில் இரண்டு வீதம் எட்டினை சேகரித்து தாயினும் சாலப் பரிந்தார்.
“ டொலருக்கு ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம்” எனக் கூறியவாறே யெலன் மற்ற மூவருக்கும் விநியோகித்தது ஏதோ பிட்ஸா விளம்பரம் பாணியில் விளையாட்டாகவே தெரிந்தது.
தம்மைத் தேடி இரு பெட்டிகள் நிறைந்த சாதம் இலவசமாக வருமெனின் அதற்கு ஐந்து டாலர்கள் கொடுப்பது கூட தமக்கு லாபம் எனக் கணித்திருக்கக் கூடும். அல்லது உயரதிகாரியை பந்தம் பிடிக்க இதுவோர் இலகு வழி என்று கருதியிருக்கக் கூடும்.
“தேவாமிர்தம் ஸார். ரொம்ப ரொம்ப நன்றி ஸார்” வயிறு நிறைந்ததை நால்வரின்இதயம் கொட்டியது.
“தினந்தோறும் தருவீர்களா ஸார்பகல் நேர வேலையில் நம்மவர்கள் பேர் பட்டினி கிடக்கிறாங்க ஸார். அவர்களையும் கொஞ்சம் கவனியுங்க ஸார்” என்றான் யெலன்.
பரமகுருவும் குமாரசாமியும் அருகருகேயுள்ள பத்து ஆலயங்களுக்கு தினமும் செல்வதையும் அன்னதான பெட்டிகள் நான்கினை ஒவ்வொரு ஆலயத்திலும் பெற்றுக் கொள்வதையும் அவற்றை தொழிலோர்க்கு பரிமாறுவதையும் வழமையாக்கினர்.
வழித் தேங்காயை தெருப்பிள்ளைக்கு உடைக்கின்றார்கள் என சொல்பவர்கள் சொல்லட்டும். பசி மறந்து போச்சு என்பவர்கள் பசி பறந்து போச்சு என்றால் காணும்.
“இலவசமாகவே கொடுக்கின்றோம் என்பது அவர்களுக்கு தெரியும்தானே” என்றார் குமாரசாமி.
“தம்மை இளக்காரமாகவும் பரிதாபமாகவும் பார்க்கக் கூடாது என்பதால் மிகச் சிறிய அன்பளிப்பு செய்ய விரும்புவதாகக் கதையொன்றும் உலவுகின்றது” என்றார் பரமகுரு.
வேண்டாம் என்றால் மறு தரப்பும் வேண்டாம் என்றிடும் என்பதும் இரு தரப்புக்கும் தெரியும்.
அதற்குள் ஒரு மாதம் எப்படிப் போனது என்று தெரியவில்லை.
புதிய தென்புடன் வேலை செய்கின்றார்கள். உற்பத்தியில் சிறிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது மட்டுமல்லாது கவனப்பிசகால் வரும் நிராகரிப்பும் கணிசமான அளவு குறைந்துள்ளது. ஊழியர்கள் அனைவருக்கும் போனஸ் வழங்குவதற்கு இது வழிவகுத்துள்ளது என அறிவித்தது நிர்வாகம்.
இதயம் இனித்ததில் இனிப்பு வழங்கியஊழியர்கள்பரவசத்தோடுபரமகுருவையும் குமாரசாமியையும் வரவழைத்து “நாளொன்றுக்கு டொலர் வீதம் சேகரித்துச் சேமித்த பணம் உங்களுக்கானது” என எல்லோர் முன்னிலையிலும் கையளித்தனர்.
எவ்வித மறுப்புமின்றி மிகு சந்தோஷமாக இருவரும் அப்பணத்தைப் பெற்றுக்கொண்டது ஒருவரும் எதிர்பாராதது!
“ஓ! உவர்களுக்கும் கோவில் கட்டும் ஆசை வந்துவிட்டது. அத்திவாரத்திற்கான அச்சவாரம்தான் உது!”
மனம் இல்லாதவர்கள் நையாண்டி செய்தனர்.
அந்த ஊழியர்கள் பிறந்த நாட்டில் உள்ள ஏதிலிகள் ஏற்பகமொன்றுடன் ஏற்கனவே தொடர்பு கொண்டதையோ இந்தக்காசு முழுவதையும் அங்கு அனுப்பப் போவதையோ அதனால் நாற்பது பேராவது மாதம் முழுவதும்
அங்கு வயிராற உண்ணப் போகின்றார்கள் என்பதையோ பரமகுருவும் குமாரசாமியும் எவரிடமும் சொல்லவேயில்லை!
– இக்கதை அவுஸ்திரேலியா அக்கினிக்குஞ்சில் (16.09.2024) வெளியாகியது
![]() |
எஸ் ஜெகதீசன், யாழ்ப்பாணம், இளவாலையில் பிறந்த பத்திரிகை யாளார், எழுத்தாளர். 1990 இல் கனடாவிற்கு புலம்பெயர்ந்தார். இவர் இளவாலை புனித என்றியரசர் கல்லூரி, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, கொழும்பு அலெக்ஸாண்டிரா கல்லூரி போன்ற பாடசாலைகளில் கல்வி பயின்றார். மேலும் இலண்டன் கணக்கியல் கல்லூரி, இலண்டன் பத்திரிகைத்துறை கலாசாலை போன்ற இடங்களிலும் பயின்றார். இளவாலை எஸ்.ஜெகதீசன்,பொதிகை எஸ்.ஜெகதீசன்,பாஞ்சாலன் போன்ற பல புனை பெயர்களில் அறியப்படும் இவர் யாழ் ஈழநாட்டில் உதவி ஆசிரியராகவும்,…மேலும் படிக்க... |