மனிதன்





(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கிழவன் தெருவில் நின்றபடியே பிரமாண்டமாக வளர்ந்திருந்த அந்தப் புளியமரத்தைப் பார்த்துக்கொண்டு நின்றான். பொழுது மேற்கே சரிந்து வெகு நேரமாகிவிட்டது. பிள்ளைகள் அந்த மரத்தினடியில் உட்கார்ந்தும் ஆடியும் பாடியும் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

நேரம் மெல்ல நகர்ந்து சென்றது. ஆனால் கிழவன் மட்டும் அப்படியே நின்றான். அந்த மரத்தையும் கீழே விளையாடும் பிள்ளைகளையும் பார்ப்பதில் அவனுக்கு திருப்தி இருந்தது. அதனால் மேலும் கீழுமாக மாறி மாறிப் பாத்தபடியே நின்றான். ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன் அவனும் அந்த மரத்தடியில் இவர்களைப் போல ஒரு சிறுவனாக நின்று விளையாடியிருக்கிறான். அப்போது இந்த மரம் இவ்வளவு பெரியதாக இல்லை. இன்று கொஞ்சம் பருத்து அகன்று வளர்ந்திருக்கிறது. ஆனால் வடகிழக்கு புறத்தில் வளர்ந்திருந்த ஒரு பெரிய கிளை அப்போது பட்டுப் போயிருக்க வில்லை. பக்கத்தில் உள்ள நிலப்பரப்பு ஓவென்ற ஒரே வெளியாகவே கிடந்தது. வீடுகள் என்ற கதை அதையடுத்த பிரதேசங்களில் அன்று காணப்பட்டதில்லை. இன்றோ இருபது முப்பது யாருக்குள் வீடுகள் சுற்றிவர முளைத்திருந்தன.
கிழவன் நீண்ட ஒரு பெருமூச்சுடன் இரண்டடி வைத்துத் தெருக்கானில் இறங்கி நின்று மறுபடியும் அந்த மரத்தையும் சிறுவர்களையும் மாறி மாறி உற்றுப் பார்த்தான். அப்பொழுதுதான் அங்கே நின்ற பிள்ளைகளின் கண்கள் அவன் பக்கம் திரும்பின.
முதலில் ஒரு சிறுவன் கிழவனுக்குக் கிட்டப் போய், “என்ன வேண்டும்?” என்று கேட்டான். மற்றவர்களும் ஒருவர் பின் ஒருவராக அங்கே வந்து சேர்ந்துவிட்டார்கள். ஆனால் அந்தக் கிழவனைப் பார்த்து கேலி செய்யவோ” தொந்தரவு கொடுக்கவோ யாருமே விரும்பவில்லை. சும்மா நின்றபடியே கிழவனைப் பார்த்தார்கள்.
சுருக்கங்கள் விழுந்த க்ஷவரஞ் செய்யாத முகம். கிழத்தன்மையை மறைப்பது போன்ற கெம்பீரமான மூக்கு, அகன்ற நெற்றி, சோகம் ததும்பும் பெரிய கண்கள், அழுக்கேறிய உடையின் நடுவிலும் வசீகரமான ஒருவித கம்பீரமான அலக்ஷியம் செய்ய முடியாத தோற்றம். எல்லாமாகச் சேர்ந்து அங்கே நின்ற பிள்ளைகளை ஆகர்க்ஷித்து விட்டன.
கிழவன் முதலில் அந்தக் குழந்தைகளைப் பார்த்து ஒரு மாதிரிச் சிரித்தான். பிறகு மெல்ல நடந்து வந்து அந்த மரத்தடியில் உட்கார்ந்தான். சுற்றிக் கொண்டிருந்த பிள்ளைகளில் ஒருவன் கேட்டான்.
“தாத்தா, எங்கேயிருந்து வருகிறீர்கள்?”
கிழவன் அந்தப் பையனை ஒரு முறை பார்த்து விட்டுத் தலையைத் தொங்கப் போட்டபடி மௌனமாகவே உட்கார்ந்திருந்தான். அதற்குள் மற்றொரு பிஞ்சுக்குரல் எழுந்தது.
“மிகவும் களைத்திருக்கிறீர்களே, சாப்பிடவில்லையா?”
கிழவன் தலையைத் துாக்கி, “எனக்குப் பசியில்லை” என்று சுருக்கமாகச் சொன்னான்.
“அப்படியானால் சாப்பிடுகிறதே இல்லையா தாத்தா?” என்று ஒருவன் ஆச்சரியத்தோடு கேட்டான்.
“சாப்பிடாமல் யாராவது இருக்கமுடியுமா தம்பி?” என்று பதிலுக்கு கிழவனது வரண்ட தொண்டையிலிருந்து ஒரு கேள்வி பிறந்தது.
மற்றொரு குரல் இதைக் கேட்டது,
“அப்படியானால் எப்போது சாப்பிட்டீர்கள்?”
“ஞாபகமில்லை”
கிழவனை எல்லோரும் ஒரு வித பயங்கலந்த ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். ஒருவன் மட்டும் கொஞ்சம் உரத்த குரலில், “பொய், பொய்” என்று கத்தினான்.
கிழவன் இப்பொழுது யாரையுமே கவனிக்க விரும்பாதவன் போல் மெல்ல மரத்தோடு சரிந்து உட்கார்ந்தான். அந்த நிலையிலும் மரத்தின் ஸ்பரிஸம் அவனுக்கு ஏதோ ஒருவித இன்பத்தைக் கொடுத்தது போலும், அவனது வாடிய முகம் கொஞ்சம் மலர்ந்து விளங்கியது.
சிறுவர்கள் ஒவ்வொருவராக உட்கார்ந்து விட்டார்கள். கிழவனது தோற்றமும் வார்த்தைகளும் அவர்களுக்குள் ஏதோ ஒருவித வேதனையை உண்டுபண்ணிவிட்டன.
க்ஷணத்துள் ஒரு சிறுவன் எழுந்து நின்று, “தாத்தா, சாப்பாடு கொண்டு வருகிறேன் சாப்பிடுகிறீர்களா?” என்று கேட்டான்.
“வேண்டாம்” என்பது போலக் கிழவன் வெறுமனே தலையை மட்டும் அசைத்துவிட்டு மௌனமாகவே இருந்தான்.
“ஏன் சாகப்போகிறீர்களா?”
யாரோ ஒருவன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டான்.
அதற்குப் பதில் வரவில்லை. கிழவனுடைய அந்த மௌன நிலை பிள்ளைகளைக் கூட கொஞ்சம் அசந்துபோகும்படி செய்து விட்டது. அதனால் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்தபடி நின்றார்கள். ஆனாலும் அவர்களுடைய உள்ளங்கள் கிழவனோடு நெருங்கி ஒட்ட ஆரம்பித்துவிட்டன. அதனால் அவர்கள் கிழவனுக்கு மிகச் சமீபமாக வந்து தொட்டுக் கதைக்கவும் தொடங்கி விட்டார்கள்.
அந்த நிலையைக் கிழவனும் உணர்ந்து கொண்டு முதலிற் பெரிய ஆறுதல் அடைந்தான். ஆனால்….? சிறிது நேரத்துள் அவன் எதையோ நினைத்துக்கொண்டவன் போல்ல நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு நீண்ட பல மூச்சுக்கள் விட்டான். அந்த மூச்சுக்களை தொடர்ந்து அவனது அகன்ற கண்களில் நீர் ததும்பியது.
திடீரென்று ஒரு சிறுவன் கேட்டான்:
“தாத்தா, ஏன் அழுகிறீர்கள்?”
கிழவனுக்கு ஒன்றுஞ்சொல்லத் தோன்றவில்லை. ஒருவாறு சமாளித்துக் கொண்டு, “ஏன், நான் அழுதேன்?” என்று அந்தப்பையனையே திருப்பிக் கேட்டான்.
சிறிது நேரவேளை எல்லோரும் மௌனமாயிருந்தார்கள்.
ஒரு சிறுவனுடைய குரல் அந்த மௌனத்தைக் கலைத்தது.
“தாத்தா உங்களுக்கு எந்த ஊர்?”
இதற்குப் பதில் கிடைத்தது.
“அது வெகு தொலைவில் இருக்கிறது. ஒரு நாள் பயணம் செய்ய வேண்டும்.”
“அப்படியானால் இரவுக்கு எங்கே படுப்பீர்கள்?” அந்தச் சிறுவனே தொடர்ந்து சொன்னான்,
“எங்கள் வீட்டுக்கு வாருங்களேன், வருகிறீர்களா?”
கிழவன் உடனே வாயைத் திறந்து அந்தப் பையனிடம் ஒரு கேள்வி கேட்டான்.
“’இந்தக் கிழவனை ஏனடா அழைத்து வந்தாய்’ என்று அப்பா அம்மா கேட்கமாட்டார்களா?”
“அப்படியும் யாராவது கோபிப்பார்களா?” என்று உடனே சிறுவன் கிழவனிடமே கேட்டான்.
அப்போது பிரகாசித்த கிழவனது கண்களை அந்தப் பிள்ளைகள் காணவேயில்லை.
அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு” எங்கள் வீட்டுக்கே வரவேண்டும்” என்று தனித்தனி கேட்டுக் கொண்டார்கள்.
மௌன நிலையில் அவர்களது குழந்தை முகங்களையே பார்த்துக்கொண்டிருந்த கிழவன்
திடீரென்று எழுந்து நின்று தன் சட்டைப் பையினுள் கையை வைத்து ஒரு ரூபாய் நோட்டுக்களை எடுத்தான். ஒவ்வொரு சிறுவனையும் கூப்பிட்டு, “குழந்தாய், உனக்குப் பிரியமானதை வாங்கிக்கொள்” என்று தலைக்கு ஐந்து வீதம் கொடுத்தான். சிலர் முதலில் பெற்றுக்கொள்ள மறுத்தார்கள். பின்பு எப்படியோ கட்டுண்டவர்கள் போல் கையை நீட்டி வாங்கி விட்டார்கள்.
சிறுவர்களுக்கு அது புதிய அனுபவமாகவே இருந்தது. ‘யார் இவர்? ஏன் இது நடக்கிறது?” என்று எதையுமே சிந்திக்காமல் அவர்களுடைய மலர் மனங்கள் கிழவனோடு ஒன்றிக் கலந்து குழைந்துவிட்டன. அதற்குள் ஒரு சிறுவன் எழுந்து பக்கத்திலுள்ள தன் வீட்டை நோக்கி ஓடினான். உள்ளே போனவன் யாரிடம் எதைச் சொன்னானோ, ஒரு கிழவியும் அவள் மகளும் உள்ளேயிருந்து வந்து அந்தக்கிழவனை உற்றுப்பார்த்து விட்டுப் போனார்கள். கிழவனும் அவர்களை அப்படியே பார்த்தான். உடனே அவனுடைய முகத்தில் ஆயிரம் சிந்தனைகளின் * ரேகைகள் படர்ந்து மறைந்தன. அவன் மறுபக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டான்.
பிறகு, தனக்குள்ளே சொன்னான்.
“ஒரு ரத்தத்தில், ஒரு வயிற்றில் பிறந்த உயிர்கள், கால வெள்ளம், ஞாபகப்படுத்த முடியாத அளவிற்கு உருவையும் மாற்றியமைத்து நினைவுகளை கழுவிவிட்டது.”
கிழவன் தன் மனத்தை மேலும் கடினமாக்க விரும்பியவன் போலக் கஷ்டப் பட்டான். அவனுடைய முகத்தில் திடீர் திடீரென்று தோன்றிய மாற்றங்களைக் குழந்தைகளால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஆசையோடு பார்த்துக்கொண்டே இருந்தார்கள். பிறகு, “தாத்தா, நீங்கள் எங்கள் வீட்டுக்கு வரவேண்டும்” என்று ஒவ்வொருவரும் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
கிழவன் எழுந்து நின்று சொன்னான்.
“நான் ஒரேயொரு மனிதன். ஒரே நேரத்தில் எல்லா வீட்டுக்கும் எப்படி வரமுடியும்? நீங்களே சொல்லுங்கள்,”
பிள்ளைகள் மெளனமாகி நின்றார்கள். கிழவன் அவ்வளவில் தெருவை நோக்கி நடந்து கொண்டே, “குழந்தைகளே? சந்தோஷம். நான் போகவேண்டும். நீங்களும் வீடு போய் சேருங்கள். நேரமாகிறதல்லவா?” என்ற சொன்னான்.
‘போகவிடக்கூடாது’ என்ற எண்ணம் எல்லாரிடமுமிருந்ததேனும், ‘வேண்டாம், நில்லுங்கள்’ என்று யாருமே தடுத்துச் சொல்லவில்லை. எல்லோரும் எழுந்து அந்தக் கிழவனுக்குப் பின்னால் நடந்தார்கள். தெருவை அடைந்ததும் கிழவன் அந்தப் புளிய மரத்தையும், தன்னை வந்து உற்றுப்பார்த்து விட்டுப் போன அந்தப் பெண்கள் இருந்த வீட்டையும் மாறி மாறிப்பார்த்து விட்டுப் பிள்ளைகளிடம் விடைபெற்றுக்கொண்டு நடந்தான்.
குழந்தைகள் கிழவனுடைய உருவம் மறையும் வரை அதில் நின்றபடியோ பார்த்து விட்டு எதையோ இழந்தவர்கள் போல வேதனை தோய்ந்த முகங்களோடு திரும்பினார்கள்.
கிழவன் முதலில் வேகமாக நடந்தான். இந்தப் பாசம் தன்னை இழுத்துவிடுமோ என்ற பயமே அப்படி நடக்கும்படி அப்போது அவனை துாண்டியது. அந்த நேரத்தில், ஏன் இங்கே வந்தோம்’ என்று அவன் மனமே சலனப்பட ஆரம்பித்து விட்டது.
பிறகு தன்னோடு தானே பேசிக்கொண்டு நடந்தான்.
“பிறந்த இடம். சிறுவயதில் ஓடியாடி திரிந்த இடம் அவள்…..? ஆம் அருமை பாராட்டி வளர்த்த தங்கை எப்படியோ அவள் செய்த ஒரு தவறுக்காக விரக்தி கொண்டு இங்கே இருக்கப்பிடிக்காமல் வெளியேறினேன். அவள் அண்ணா என்று அழுது வேதனைப்படுவாள் என்று அன்று என்னால் உணர முடியவில்லை. அதற்கு முடிந்திருந்தால் என் கதையே வேறு. அந்த வேதனையின் வடு அவள் இதயத்தையே விட்டகன்று எத்தனையோ வருஷங்கள் கழிந்திருக்கும். மறந்து போன நினைவுகளை தூண்டி விடுவதில் எனக்குத்தான் என்ன ஆறுதல் கிடைக்கப்போகிறது? அவளைக் கண்ட பிறகும் மெளனமாக இருந்துவிட்டது நல்லதாய்ப்போயிற்று.”
“மற்றது, எனது சோகக் கதைகளையும் அவள் அறிய நேரிடலாம். எனக்கென்றிருந்தவர்கள் என்னுடையவர்கள் என்ற எல்லாரும் ஒரே நாளிற் போய்விட்டார்கள். யாரோ ஒரு மூலையில் தூண்டிவிட்ட வெறி மக்களை ஆட்டி இவ்வாறு செய்துவிட்டது. படிப்பில்லாதவர்கள் என்றாலும் நன்றி உள்ளவர்கள் அந்தச் சனங்கள், ‘நீங்கள் பயப்பட வேண்டாம். நாங்கள் இருக்கிறோம்’ என்றெல்லாம் அடிக்கடி சொன்னார்கள். எனக்காக உயிரை பணயமாக வைத்து நெருப்பில் குதித்தானே அந்தத் தொழிலாளி! அவன் உயிர் அதிலேயே போய்விட்டது. மற்றொருவன் படுகாயமடைந்து இரண்டு நாட்களின் பின் மாண்டான். என் மக்கள் – அவர்கள் பிள்ளைகள் எல்லோரையும் அந்தக் கோர சம்பவம் விழுங்கி விட்டது. சொந்தப் பிள்ளைகளை விட என் பிள்ளைகளுக்காக உயிர் விட்ட அந்த அன்னிய பிள்ளைகள் மேல் அல்லவா?” கிழவன் அவர்களுக்காகவும் நடந்துகொண்டே கண்ணீர் சிந்தினான்.
“எல்லாம் முடிந்துவிட்டது. யார் இதற்குக் காரணமாக இருந்தார்களோ அவர்கள் அழுகிற காலம் வரத்தான் செய்யும். ஆமாம், அதில் நமக்கென்ன ஆறுதல் வரப்போகிறது’ உற்று நோக்கினால் அவர்களுக்காவும் நாம் வருந்தியேயாக வேண்டும்.”
கிழவன் நில்லாமலே நடந்து கொண்டிருந்தான். அவனுடைய உள்ளம் விடாமல் பழைய நிகழ்ச்சிகளையே தொட்டுக் காட்டிக் கொண்டிருந்தது.
“ஒரு புறம் இத்தனை கொடுமையும் நடந்தே விட்டது. ஆனால் அதற்காக என்னடியில் வந்து கிடந்து கண்ணீர் விட்ட அதே ஜாதியைச் சேர்ந்தவர்களின் நன்றி மறவாத உள்ளத்தை இன்று நினைத்தாலும் ஆறுதல் உண்டாகிறது. ‘தாத்தா, நீங்கள் போகவே வேண்டாம். உங்களை நாங்கள் விடமாட்டோம். நீங்கள் எங்களைச் சேர்ந்த ஒருவரே’ என்று அசையவிடாமற் பிடித்து வைத்துக்கொண்டார்களே – ஒருவருக்கும் தெரியாமலே கிளம்பி இங்கு சேர்ந்தேன். இந்தப் பாசம் இழுத்துவிட்டது. இங்கே வந்த பிறகுதான் இதைவிட அன்னியர்கள் – வேறு சாதிக்காரர் – என்ற அவர்களுக்கும் எனக்கும் உள்ள பந்தம் பெரியது என்ற உண்மை தெளிவாகத் தெரிகிறது.
நெடுநாட் பழகிய அன்பு நிறைந்த அநேக முகங்கள் அவன் மனக் கண்களிலே தோன்றி மறைந்தன.
கிழவன் தொடர்ந்து நடந்துகொண்டேயிருந்தான். அவனது முன்னோர்கள் குலதெய்வமாக வணங்கும் பிள்ளையார் கோவில் வாசலுக்கு வந்து சேர்ந்தான். உடனே அவன் உள்ளத்தில் ஒருவித குமுறலும் விம்மலும் கலந்த உணர்ச்சி உண்டாயிற்று. கைகளை உயரத்தூக்கி, “பகவானே! உன் சித்தம் எது என்று யார் அறிவார்? மறுபடியும் அந்த மக்களின் நடுவிலே போய் என் சக்திக்கேற்றளவு செய்து சாந்தியடைய அருள்வாயாக” என்று வாய்விட்டுக் கேட்டான்.
திடீரென்று அவனுக்கு பசி எடுத்தது. பக்கத்திலிருந்த கடையினுள்ளே நுழைந்து எதையோ வாங்கி வயிற்றை நிரப்பினான். சாப்பிட்டானதும் சிறிது கூட தாமதியாமல் வெளியேறி நடக்க ஆரம்பித்தான்.
கிழவனுடைய நடையில் ஒரு அலாதியான – ஆச்சரியப்படத்தக்க -யௌவனத்தின் சாயைபடிந்த கெம்பீரம் இருந்தது.
சம்பந்தன்
ஈழத்தின் முன்னோடிப் புனைகதை ஆசிரியர் சம்பந்தன் ஆவார். 1939 தொட்டு எழுத்துலகில் கோலோச்சியவர். குலமகள், சுதந்திரச்சங்கு, பாரததேவி, பிரசண்டவிகடன் போன்ற இந்தியப்பத்திரிகைகளில் நிறையவே எழுதியவர். ஈழகேசரி, ஈழநாடு, மறுமலர்ச்சி, கலைச்செல்வி, வீரகேசரி முதலான இலங்கைப் பத்திரிகைளில் எழுதியவர் பாசம் இவருடைய நாவல். சாகுந்தல காவியம் இவராக்கிய காவிய நூல். சம்பந்தன் கதைகள் தொகுதியாக வெளிவந்துள்ளது.
– 21.09.1959, ஈழநாடு.
– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.