மனம் எனும் மருந்து

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 25, 2024
பார்வையிட்டோர்: 4,514 
 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கோடம்பாக்கம் ரயிவ்வே ‘லெவல் கிராஸிங்’ கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. ரயில்வே லயன்களின் இருபுறமும் ஜனங்கள் கூட்டம் தேர் திருவிழாக் கூட்டத்துக்குச் சமமாகப் பெருகி வத்தது. ஜனக் கூட்டத்தைச் சிதற அடித்துக் கொண்டும் முந்திக் கொண்டும் ரிக்ஷா, ஆட்டோ ரிக்ஷா, வைக்கோல் வண்டி, டாக்ஸி, டாக்ஸியல்லாத சொந்த மோட்டார். செங்கல் லாரி இப்படி இனத்துக்கொரு வாகன வகையறா கதவை முட்டினாற்போல் நிற்கப் போட்டி போட்டன.

கோவிந்தம்மாள் இந்தச் சந்தடியினின்றும் கொஞ்சம் விலகினாற்போல் நிற்க எண்ணிப் பின்னால் நகர்த்தாள். அவள் இடதுபுறமாக இன்னொரு கார் வந்து நின்றது. கார் என்றால் அழகான கார்! கப்பல் மாதிரி எவ்வளவு பெரிது! அதன் அழகை ஒரு முறை நன்றாகப் பார்த்து ரஸிக்க வேண்டும் என்று திரும்பினாள் அவள். காரினுள் முன் ஸீட்டில் தனக்குப் பரிச்சயமான ஒரு பெண் முகத்தைக் கண்டாள். அதே சமயம் காரினுள்ளிருந்த அந்தப் பெண் பேசினாள்.

“அடி. கோவிந்தம்மா! என்ன உன்னைக் கண்ணிலேயே காணவில்லை! என்னடி ஒரு மாதிரியாக இருக்கிறாய்? ஏதாவது…” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் கோவிந்தம்மாளின் கண்கள் பொலபொல வென்று நீரைப் பெருக்கின.

“போயிட்டாரம்மா! என்னைத் தெருவிலே உட்டுட்டு அவர் போயிட்டாரம்மா!” என்று விக்கலுக்கு நடுவில் அந்தச் செய்தியைச் சொன்னாள் கோவிந்தம்மா!

காரை ஓட்டும் ஸ்தானத்தில் அந்தப் பெண்ணின் கணவர் உட்கார்ந்திருந்தார். கோவிந்தம்மாவைப் பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டே மனைவியிடம் ஏதோ பேசினார், அவருக்குப் பதில் சொல்லிவிட்டுக் கோவிந்தம்மாவைப் பார்த்து ஆறுதல் மொழிகள் சொல்ல ஆரம்பித்தாள் அவள்!

“அட, பாவமே! பெரிய இடி போல இருக்கிறதே இது! அது தான் உன்னைப் பத்து நாட்களாகக் கண்ணிலேயே காணவில்லை, ஏதோ உனக்கு உடம்பு சரியில்லை போலிருக்கிறது என்று எண்ணினேன். போகிறது. நடந்தது நடந்து விட்டது. இதை நினைத்து உருகிக் கொண்டிருக்காதே. துக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய் மறக்க முயற்சி செய்ய வேண்டும். ஒருநாள் வீட்டுக்கு வாயேன்!” என்றாள் அவள்.

“ஆவட்டும்மா!” என்று குழந்தைபோல் இரண்டு கைகளாலும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே கூறினாள் கோவிந்தம்மா.

ஒரு மின்சார வண்டி அலறிக் கொண்டு சென்றது, எல்லோருடைய கவனமும் கதவுகள் பக்கம் சென்றது. ஆனால் சுதவுகள் திறக்கப்பட வில்லை! இன்னொரு எதிர்த்திசை வண்டி எதிர்பார்க்கப்பட்டது.

கோவிந்தம்மா அழகான கார் என்று மதிப்பிட்ட அந்தத் தம்பதிகளின் கார் மட்டும் அப்படித் தனித்து அழகு வாய்ந்திருக்கவில்லை. அவர்களும் அழகின் வடிவங்களாக விளங்கினார்கள், இளம் வயது; ஒருவருக் கொருவர் பொருத்தமான இணைப்பு; கல கலப்பான சுபாவம்.

கோவிந்தம்மா அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றாள். அத்தப் பெண் இவளைப் பார்த்துத் தன் கணவரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். என்ன பேசிக் கொண்டிருந்திருப்பாள்? அவள் மேல் அனுதாபப் பட்டு அவள் நிலையை விவரமாகத் தன கணவனுக்கு எடுத்துச் சொல்லிப் பேசிக்கொண்டிருந்திருப்பாள். அதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்!

அந்தப் பெண்ணைப் போலக் கோவிந்தம்மாவும் இளம் வயது கொண்டவள் தான். இந்த இளம் வயதில் அப்படிக் கணவன் இறந்து போனதைப் போன்ற துரதிருஷ்டம் வேறு வாய்க்க முடியாது. அதை அவளால் தாங்கவும் முடியவில்லை. மறந்து விட நினைக்கிற சமயங்களில் இப்போது நேர்ந்தது போல் எப்படியோ அந்தத் துக்கம் வந்து மனத்தை மூடிக் கொள்கிறது.

கோவித்தம்மா இளம் வயது கொண்டவள் மட்டும் அல்ல; காரிலுள்ள அந்தப் பெண்ணுக்கு இணையான அழகும் கொண்டவள். அழகு பிரதிபலிக்க எந்தப் பூச்சும் முயற்சியும் அவள் மேற்கொள்ளாமலே பரிணமித்த அழகு அது. அந்த அழகு நிலையைக் குலைக்கத்தான் வந்தது போல் அவளுக்கு விதவைக் கோலம் வந்து விட்டது. ஆயினும் அவள் அழகு தேயவில்லை; மங்கவில்லை; பூரித்து ஒளிவிட்டுக் கொண்டிருந்தது.

இன்னொரு மின்சார வண்டி வந்தது. கதவுகள் திறக்கப்பட்டன. கோவிந்தம்மா காரினுள்ளிருந்த பெண்ணைப் பார்த்து விடை பெற்றுக் கொள்வதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினாள். எல்லா வாகனங்களும் நகர்ந்தன. அவற்றுடன் அந்த அழகான காரும் நகர்ந்து மறைந்தது.


கோவிந்தம்மா அவள் புருஷன் இருந்த போதே ஒரு சிறு வியாபாரம் செய்துகொண்டிருந்தாள், அவள் புருஷன் செய்துகொண்டிருந்த வியாபாரத்தின் ஒரு பகுதி என்று கூட அதைச் சொல்லலாம். அவன் ஒரு புஷ்பக் கடையில் மாலை கட்டுவது, புஷ்பங்கள் தொடுப்பது ஆகிய வேலைகளைச் செய்து கொண்டு ஒரு சிப்பந்தியா யிருந்தான். கோவிந்தம்மாவும் மாலை வேளைகளில் சுற்று வட்டாரத் தெருக்களில் சென்று பூ வியாபாரம் செய்து வந்தாள்.

மணக்கும் அந்த வியாபாரத்தை மேற் கொண்டிருந்த அவள் மலர்களை எப்படித் தான் தொடுப்பாள்! கதம்பத்துக்கு எப்படி எப்படி யெல்லாம் புஷ்பங்களையும் வாசனைத் தழைகளையும் இணைப்பாள்! ரோஜா மலர், அல்லி மலர், குண்டு மல்லி, கதிர்ப் பச்சை, வெட்டி வேர், மருக்கொழுந்து, இப்படி இணைத்துத் தொடுத்திருக்கிற கதம்பத்தைப் பார்த்தாலே போதும்! சூடிக் கொண்டால் கேட்க வேண்டுமா?

அவள் சில வீடுகளுக்குக் கதம்பமும் மல்லிகைச் சரமும் வாடிக்கையாக வைத்து வந்தாள். நுங்கம்பாக்கத்தில் இருந்த ஒரு இஞ்சினீயர் வீட்டுக்கும் அவள் வாடிக்கைப் புஷ்பம் தருவது உண்டு. அவர் மனைவி கௌசல்யாவுக்குக் கோவிந்தம்மாளின் புஷ்பம் என்றாலே உயிர். இந்தத் தம்பதிகளைத் தான் அவள் கோடம்பாக்கம் ‘ரயில்வே லெவல் கிராஸிங்’கில் சந்தித்தாள்.

கௌசல்யா அடிக்கடி சொல்வாள்: ”கோவிந்தம்மா! புஷ்பங்களுக்கு ஓரளவுக்குத்தான் வாசனை உண்டு என்று நான் நினைக்கிறேன். ஆனால், உன் கைபட்ட வாசம் உள்ள மலர்கள், வாசமே இல்லாத மலர்கள் எல்லாமே அபாரமான வாசனையைப் பெற்றுக் ‘கம் கம்’ என்று மணக்கின்றனவே! உன்னிடம் என்னதான் மாயம் இருக்கிறதோ, தெரியவில்லை!”

“என்னிடம் மாயம் என்னம்மா இருக்கிறது? பூ தொடுக்கிற நார்தான் இருக்கிறது!அதெல்லாம் புஷ்பத்தை வைத்துக் கொள்கிறவங்களையும், வைத்துக் கொள்கிற பூவை அநுபவிக்கிறவங்களையும் பொறுத்தது அம்மா” என்று கோவிந்தம்மா சிரித்துக் கொண்டே சொல்வாள்.

கடிகாரத்தில் மணி ஐந்தடிக்க வேண்டியதுதான். தினசரி வாசலில் பூ மணக்கும். வீட்டுக்குள்னிருந்து கௌசல்யா வந்து பார்த்தாளானால் அடுத்தபடி கோவிந்தம்மாவின் சிரித்த முகத்தைத் தவறாமல் பார்ப்பாள். அவள் கொடுக்கும் புஷ்பத்தை முதலில் சுவாமிக்குச் சாத்திவிட்டுப் பிறகு அதிலிருந்து ஒரு சரம் கிள்ளியெடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு காரியாலயத்திலிருந்து வரும் கணவனை அவள் அன்புடன் நோக்கியிருப்பாள்.


இந்த நிலையில் ஒரு மாறுதல் ஏற்பட்டு விட்டது. கோவிந்தம்மாலின் புருஷன் இறந்து போனவுடன் அவள் பூ வியாபாரத்தை நிறுத்தி விட்டாள், முதலில் தாற்காலிகமாகத்தான் அவள் அதை நிறுத்தினாள். மறுபடியும் அதைத் தொடங்க நினைத்தபோது அவள் மனத்தின் இன்னொரு மூலையில் ஒரு எண்ணம் தோன்றியது. அது ஒரு விபரீதமான எண்ணம்தான். அவளைப் பொறுத்த வரையில் அது அவளுக்கு அப்படி யெல்லாம் தோன்றவில்லை.

அவள் வாழ்க்கையில் மஞ்சளும் குங்குமமும் புஷ்பமும் ஒதுக்கி விடப்பட்ட மங்களச் சின்னங்களல்லவா? அந்தச் சின்னங்களைக் கொண்டுள்ள – தன்னையொத்த இளம் பெண்களைக் கண்டாலே அவளுக்கு வெறுப்பா யிருந்தது. அவர்களை மட்டும் தெய்வம் அந்தச் சந்தோஷ நிலையில் வைத்து விட்டுத் தன்னைக் கொடுமைப்படுத்து விட்டதே என்று எண்ணினாள். இந்த மங்களச் சின்னத்தில் ஒன்றான புஷ்பத்தை மற்றவர்களுக்கு வழங்க, அவர்கள் சந்தோஷமாயிருப்பதற்குத் துணை செய்வது தான்தானே என்று நோன்றியது கோவிந்தம்மாவுக்கு. அப்படிப் புஷ்பம் வழங்குவதன் மூலம் மகிழ்ச்சியை அளிப்பதை நிறுத்தி விடுவது என்று தீர்மானித்தாள் அவள், பூ வியாபாரத்தை நிறுத்து விட்டாள். வாடிக்கைப் பூ வாங்கிக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம் சிறிது கஷ்டமாகத் தான் போய் விட்டது. கௌசல்யா தான் அதிகமாக வருத்தப்பட்டாள். கோவிந்தம்மா கொடுத்து வந்த பூவுக்கு இணையாக யாராலும் கொடுக்க முடியாது என்பது அவள் முடிவு. அவளுக்கு உடம்பு சரியில்லையோ என்று எண்ணி, கடந்த பத்து நாட்களாக வேறு யாரிடமும் கூடப் பூ வாங்காமல் தோட்டத்தில் அத்தி பூத்தால் போல் பூத்துக் கொண்டிருந்த முல்லை அரும்புகள் இரண்டையெடுத்து அடித்தலையில் செருகிக் கொள்வாள் கௌசல்யா.

அன்றைக்குக் கோடம்பாக்கம் ‘லெவல் கிராளிங்’ அருகில் சந்தித்த பின்பு பதினைந்து நாட்களாகியும் முன் போலக் கோவிந்தம்மா புஷ்பம் கொண்டு வராமல் போகவே தான் கௌசல்யா அவள் மேல் கொஞ்சம் ஆத்திரம் கொண்டாள். என்ன காரணத்தினால் புஷ்பம் வைப்பதை நிறுத்தி விட்டாள் என்று பல வகையாக யூகித்துப் பார்த்தும் அவளால் ஒன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், கோவிந்தம்மா தன்னைப் போன்ற இளம் பெண்களுக்குப் புஷ்பம் வழங்குவதை நிறுத்தி விட்டதில் ஏதோ மகிழ்ச்சி கூடச் சிறிது கொண்டவள் போல இருந்தாள். கீரை வியாபாரம் செய்து பிழைப்புக்கு ‘வழி’யை ஆரம்பித்துக் கொண்டு விட்டாள்.


ஒருநாள் கீரைக் கூடையுடன் கோவிந்தம்மா காலை வேளையில் கௌசல்யாவின் வீட்டுக்குச் சென்றாள். வீட்டின் முன்புறத்தில் ஒன்றும் சந்தடியைக் காணேம். ஆனால், தாராளமாக முன் ஹாலைத் தாண்டி உள்ளே சென்று பழக்கமாகி யிருந்த கோவிந்தம்மா, ”அம்மா….” என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளே போனாள். உள்ளேயும் ஒன்றும் சந்தடியைக் காணலில்லை. ஆனால் மறு நிமிஷம், கௌசல்யா பரபரப்பாக வெளியில் வந்தாள், மாஜி பூக்காரியை அங்கே கண்டதும் முகத்தைக் சுளித்துக்கொண்டாள்.

“என்ன விஷயம்? இப்படி ‘வா….” என்று முகம் கொடுக்காமல் பேசிக்கொண்டே கோவிந்தம்மாலை வெளியில் வரச்சொல்லும் தோரணையில் கௌசல்யா தானும் வெளியில் வேகமாக வந்தாள்.

“பார்த்துட்டுப் போவம்னுதானம்மா வந்தேன், அன்றைக்குக் கூட வரச் சொன்னியே என்னை எப்படியம்மா இருக்கே? நல்லாயிருக்கியா? முழுவுறியா…? என்று கேள்வித் தொடர் ஆரம்பித்தாள் கோவிந்தம்மா.

“எல்லாம் இருக்கேன்; இகற்கெல்லாம் இப்பொழுதுதான் நேரம் பார்த்தாயாக்கும்! அவர் ரொம்ப உடம்பு குணமில்லாமல் படுத்திருக்கிறார். ஆபத்தாயிருக்கு. உன்னிடம் பேசிக் கொண்டு நிற்க எனக்கு நேரம் இல்லை. அப்புறமா வா ” என்று சொல்லிக்கொண்டே உள்ளே போய் விட்டாள் கெளால்யா.

இது பெரிய அதிர்ச்சியாகத்தான் தோன்றியது கோவித்தம்மாவுக்கு. கீரைச் சுமையினால் ஏற்படாத பாரம் மனச் சுமையின் மூலம் வந்து அவளைக் கீழே அமுக்கியது. ஏதேதோ சிந்தித்துக் கொண்டே வீட்டுக்குப் போனாள்.

கௌசல்யாவின் கணவருக்கு என்ன உடம்பாயிருக்கும், அவருக்கு என்ன நேரும் என்று நினைத்துப் பார்த்தபோது இனம் புரியாத ஒரு கிலேசம் அவள் மனத்தில் ஏற்பட்டது. ‘அவர் கதி என்ன ஆகும்!’ என்ற ஒரு கேள்வியே நிலைத்துத் தங்கிவிடடது. ஒரு நிமிஷம் அந்தத் தம்பதிகளைச் சேர்த்துத் தன் மனக்கண்முன் கற்பனை பண்ணிப் பார்த்தாள். அன்பு என்றும் காதல் என்றும் எல்லாம் அறிந்த நிலையில் நாம் கூறுவதை அவள் அநுபவ ரீதியில் எண்ணிப் பார்த்து, ‘எத்தனை ஆசையாயிருக்கிற சோடி அது!’ என்று சொல்லிக் கொண்டாள் தனக்குள்ளாகவே.

இதை நினைத்துப் பார்க்கப் பார்க்க அவன் மனத்தில் ‘அவர் கதி என்ன ஆகும்?’ ‘அந்த அம்மா கதி என்ன ஆகும்?’ என்ற இரு கேள்விகள் மாறி மாறி வட்டமிட்டன.

திடீரென்று தான் ஏதோ பெரிய தவறு செய்து விட்டதாகக் கோவிந்தம்மாவின் மனத்தில் தோன்றியது.

“ஐயோ, பாவி நான்தானே கெடுத்து விட்டேன் காரியத்தை!” என்று வாய்விட்டுச் சொல்லிக் கொண்டாள். பூ வியாபாரத்தை நிறுத்தி, தன்னைப் போன்ற மற்றப் பெண்களுக்குப் பூ வழங்குவதையும் நிறுத்தி விட்டுச் சந்தோஷப்பட்டது எவ்வளவு பெரிய ஆபத்தில் வந்து முடிந்து விட்டது என்று எண்ணினாள். அவள் வயிற்றில் ஏதோ ஒரு சங்கடம் ஏற்பட்டது.

“கடவுளே ! நினைக்காமல் செய்த பாவங்களுக்கெல்லாம்தான் இவ்வளவு பெரிய பேரிடியை என் தலைமேலே போட்டு விட்டாயே! இன்னும் நான் துக்கிரித்தனமா நினைச்சுச் செய்கிற பாவத்துக்கு என்ன தண்டனை எனக்குக் கிடைக்குமோ வேண்டாம்… நான் இனிமேல் அப்படி நினைக்க மாட்டேன்” என்று சொல்லிக் கொண்டே தன் வீட்டுக் கூடத்துப் பிறையுள் வைத்திருந்த வேங்கடாசலபதிப் பெருமாள் படத்தின் முன் போய் நின்று கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.

அன்று மாலை வெகு நாட்களுக்குப் பின் அவள் வீட்டில் பூக் குவியலும் நார்சி சுருளும் வீடெல்லாம் காணப்பட்டன. பூ மணம் பரவி, சற்றைக்கெல்லாம் வீதி யெல்லாம் பரவிக் கொண்டு சென்றது.


மாலை ஏழு மணி இருக்கும். கோவிந்தம்மா கௌசல்யாவில் வீட்டு வாசலில் வந்து நின்றாள். அங்கேயிருந்த குழ்நிலையையும் நிலைத்திருந்த மௌனத்தையும் கண்டதும் அவள் மனத்தில் ‘சொரோ’ என்றது. வாசலில் இரண்டு மூன்று கார்கள் நின்றிருந்தன. யாரோ புதிய புதிய மனிதர்கள் சிலர் வீட்டு மூகப்பில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். சற்றுத் தள்ளினாற்போல் ஒரு பூச்செடிப் பக்கமாக வேலைக்காரர்களும் தோட்டக்காரனும் நின்று பேரிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தவர்கள் உதடுகள் அசைவதுதான் தெரிந்ததே தவிரப் பேச்சொலி காதில் விழவேயில்லை,

வேலைக்காரர் கோஷ்டியிடம் சென்று, “ஐயாவுக்கு உடம்பு எப்படியிருக்கிற தாம்?” என்று கேட்டாள் கோவிந்தம்மா.

“பூசை வேளையிலே கரடியை விட்டமாதிரி நீ எங்கே வந்தே இங்கே! உடம்பு ரொம்ப அதிகந்தான்! ஐயா பிழைச்சா அம்மா புண்ணியம்!” என்று ஒருவன் சொன்னான். அவன் இப்படிச் சொல்லும்போது அவனது கண்கள் கசிய ஆரம்பித்தன.

கோவிந்தம்மாவுக்குத் தொண்டையை அடைத்தது. தனக்கு ஏற்பட்ட ஒரு துரதிருஷ்ட நி&யினால் புத்தி தடுமாறி ஒருவிபரீத எண்ணம் தோன்றி அதன்படி இத்தனை நாள் நடந்து கொண்டதையும் இன்று கௌசல்யாவின் கணவனுக்கு ஏற்பட்டுள்ள நிலையையும் எண்ணிப் பார்த்தாள், அவள் விக்கி விக்கி அழத் தொடங்கிவிட்டாள்.

”இந்தா புள்ளே! நீ இங்கே வந்து ஏன் கலாட்டா பண்ணறே? உன்னை யார் இக்கே கூப்பிட்டா? பூ வைக்க இப்பத்தான் நேரம் பார்த்தியா? எதுக்கு இங்கே வந்தே? வந்தது மில்லாமல் முதலைக் கண்ணீர் விட ஆரம்பிச்சிட்டியே!” என்று தோட்டக்காரன் கடுமையாகக் கூறினான்.

“நான் அழுவலே. அம்மாவைக் கொஞ்சம் பார்த்துட்டுப் போயிடறேன். போய் அவுங்களைக் கொஞ்சம் வரச்சொல்லுங்க, ஐயா” என்றாள் கோவித்தம்மா.

அவர்கள் அவளைத் திட்டி அனுப்ப முயன்று கொண்டிருந்தபோது கௌசல்யாவே வெளியில் வந்தாள். கோவிந்தம்மா இரண்டு எட்டில் பாய்ந்து சென்று அவள் முன் நின்றாள். கௌசல்யாவின் தோற்றத்தைக் கண்டு அவள் உள்ளம் விலவிலத்தது, உடம்பு தருப்பு போல் இளைத்திருந்தது. முகம் வாடிப்போய் வெளிறியும் கிடந்தது.

கோவிந்தம்மாளின் தோற்றத்தை அதே சமயம் கவனித்துக் கொண்டிருந்தாள் கௌசல்யா, ஒரு மாதத்துக்கு முன்’ ‘பளிச்’ சென்று சுமங்கலியாக விளங்கிய அவள் இப் போது தலையில் பூ இல்லாமல், நெற்றியில் குங்குமம் இல்லாமல்…

‘ஐயோ! இவள் இப்போது இங்கே எதற்காக வந்திருக்கிறாள்? தெய்வம் இவள் விஜயத்தின் மூலம் நமக்குச் சூசனையாக எதைத் தெரிவிக்கிறது’ என்று எண்ணிக் கொண்டு போன கெளசல்யா திடீரென்று வெறி பிடித்தவள்போல் அலறிக்கொண்டு கேட்டாள்.

“இப்போ எங்கேடி வந்தே நீ? உன்னை யார் அழைத்தது?”

“யாரும் அழைக்கலை. அம்மா! நானேதான் வந்தேன். இன்னும் சொல்லட்டுமா? உன் புருசன் உசிரைக் காப்பாற்ற வந்தேன்!”

இந்தக் கடைசி வார்த்தைகளைக் கேட்கக் கௌசல்யாவுக்கு ஒரே மகிழ்ச்சியா யிருந்தது.

“உன்னால் என்னடி செய்ய முடியும்? மூன்று டாக்டர்கள் இப்போது இங்கே வந்திருக்கிறார்கள். இன்று இரவு பன்னிரண்டு மணி தாண்டின பிறகுதான் நம்பிக்கையாக ஏதாவது சொல்ல முடியும் என்கிறார்கள். உன்னால் என்ன செய்துவிட முடியும்!”

“முடியும் அம்மா! நான் ஒரு மருந்து கொண்டாந்திருக்கிறேன். உங்கள் டாக்டருங்க எல்லாம் ரொம்ப அபூர்வமான மருந்துகளைக் கொண்டாந்திருக்காங்க, இல்லையா ?” அதையெல்லாம். காட்டியும் இது உசந்த மூலிகை, அம்மா! இந்தா, நீ வேறே ஒண்ணும் பண்ண வேண்டாம். இந்தப் பூவை ஆண்டவன் படத்துக்குச் சாத்தி வைச்சிட்டு, அதிலே ஒரு சரம் கிள்ளித் தலையிலே வச்சுக்கிட்டு அந்த ஆண்டவனை வேண்டிக்கணும்! உன் புருஷன் பிழைச்சிடுவாரு” என்று ஆவேசம் வந்தவள் போல் கூறினாள்.

“பூவுக்கும் மருந்துக்கும் என்னடி சம்பந்தம்? உன் புருஷன் தவறிப் போனதனாலே, பாவம், உனக்கு நிதானம் தெரியாமல் ஏதாவது செய்யத் தோன்றுகிறதா?” என்று கொஞ்சம் விரக்தியோடும் கேட்டாள் கௌசல்யா. அனுநாபத்தோடும்

”நிதாளம் தவறினது மெய்தான். அம்மா! ஆனால் எப்பவோ ஒரு மாசத்துக்கு முந்தி தவறின நிதானத்தைத் திரும்ப அடைஞ்சு விட்டேன்!” என்றாள் கோவிந்தம்மா.

அவளைப் பார்க்கும் போது ஒரு தேவதையைப் பார்ப்பது போலிருந்தது கௌசல்யாவுக்கு. அவள் கொடுத்த பூப்பந்தை வாங்கிக்கொண்டு உள்ளே போனாள்.


அன்றிரவு மணி பன்னிரண்டு நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த வீட்டில் உலகத்து அமைதியெல்லாம் வந்து அடங்கினாற்போல் இருந்தது. டாக்டர்களும் நண்பர்களும் படுக்கையில் சலனமற்றுக் கிடந்த கௌசல்யாவின் கணவனையே கண் கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தனர்,

டாக்டர்களின் முகங்களையும் தன் கணவனின் நண்பர்களின் முகங்களையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள் கௌசல்யா. அபாயகரமான நிலைமை ஏற்பட்டால் டாக்டர்களின் முகபாவங்களிலிருந்து எதுவும் தெரிந்து கொள்ள முடியாதென்று அவளுக்குத் தெரியும்.

பள்ளிரண்டு அடிக்க இன்னும் ஒரு நிமிஷம் இருந்தது. எல்லாம் வல்ல முருகனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டு முருகனின் படம் மாட்டியிருந்த இடத்தை நோக்கினாள் கெளசல்யா, அங்கே கோவிந்தம்மா கொடுத்த பூச்சரம் முருகளை அலங்கரித்துக் கொண்டிருந்தது. உடனே ஏதோ ஞாபகம் வந்தவள் போலப் பாய்ந்து சென்று அந்தப் புஷ்பத்தில் பாதியை எடுத்துத் தலையில் சூட்டிக் கொண்டு ‘முருகா’ என்று கண்மூடி. மெய் உருகி நின்றாள்.


மறுநாள் காலை சூரியோதயம் சமயத்தில் கோவிந்தம்மா கௌசல்யாவின் வீட்டுக்கு வந்தாள், தாராளமாக உள்ளே வந்து, “அம்மா!” என்று கூப்பிட்டாள்.

முல்லை மலர் சிரித்தாற் போல் தன் பல் வரிசை தெரியச் சிரித்துக் கொண்டு, மலர்ந்த முகத்தினளாய் வெளியே வந்த கௌசல்யா “அடி கோவிந்தம்மா! உன் மருந்துதான் அவரைக் காப்பாற்றியது! அவர் பிழைத்து விட்டாரடி! இத்தனை காலமாக நீ எனக்குப் பூ வென்று வழங்கிய அந்த அதிசயப் பொருள் ஒரு மானசீக மருந்தாக உபயோக மாயிற்றடி” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினாள்.

கோவிந்தம்மாளின் மனத்தில் இப்போது தான் திருப்தி உண்டாயிற்று.

– 1957-06-16, கல்கி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *