மனசுக்குள் மாலதி…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 18, 2025
பார்வையிட்டோர்: 4,250 
 
 

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம்-10

ஞாயிறு ஓய்வு எல்லோருக்கும் புது தெம்பைக் கொடுக்கும்.

மாலதிக்கும் கொடுத்தது. வழக்கம்போல் எழுந்து ராகுலைப் பள்ளிக்கூடம் கிளப்பிவிட்டு அலுவலகம் கிளம்பினாள்.

” அம்மா ! விழாவுக்கு நீ வருவீல்லே ..? ” அவன் கையில்…. நேரு வேசத்திற்கு வாங்கிய பேண்ட், சட்டை, குல்லாய் போன்றவைகளை திணிக்கும்போதே கேட்டான்.

” கண்டிப்பா வருவேன் ! ” சொன்னாள்.

” இந்த வாரமில்லே. அடுத்த வாரம் !” என்று அவன் சொன்னதும்தான் திக்கென்றது.

மனக் குழப்பத்தில் மறந்து இன்றென்று நினைத்தது அவளுக்கு வெட்கமாய்ப் போய்விட்டது.

அலுவலகத்தில் இன்னும் சுதாகர் வரவில்லை.

‘ ஏன்… என்னாச்சி ? ‘ என்று அவளுக்குள்ளேயே கேள்வி எழும்போதுதான். ..

” பாவம் ! அனாதை ! தனியே கிடந்தது கஷ்டப்படுறான் ! உடம்பு சரி இல்லையாம் ! ” தலைமை குமாஸ்தா தன்னிடம் வந்த எழுத்தர் ரவியிடம் உச்சுக் கொட்டி வருத்தப்பட்டார்.

அன்று மதியமே அலுவலகம் மொத்தமும் அவனைப் பார்க்கப் புறப்பட்டது.

மாலதி பார்க்கப் போகாமல் ஒதுங்கி இருக்கத்தான் முடிவு கட்டினாள்.

ஊரோடு ஒத்துப் போகாமல் நாம் மட்டும் தனித்திருப்பது சரி இல்லை ! நினைத்து புறப்பட்டுவிட்டாள்.

பாவம் ! இரண்டு நாள் சுரத்தில் சுதாகர் இளைத்து துரும்பாகப் போயிருந்தான். கட்டிலில் தனியே போர்த்திக்கொண்டு படுத்திருந்தான்.

” வேளாவேளைக்கு மருந்து சாப்புடுறீயா சுதாகர் ..? ” தலைமை குமாஸ்தா உண்மையிலேயே அவன் மீது அன்பு ,அக்கறையாய்க் கேட்டார்.

” சா. .. சாப்பிடுறேன் சார் ! ‘ குரல் கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பது போல் அவ்வளவு பலவீனமாக இருந்தது.

” சாப்பாடு. .? ”

” குடியிருக்கிற கீழ் வீட்டிலேர்ந்து கொஞ்சம் உதவி பண்றங்க. .”

” வேற உதவி ஒத்தாசைக்கு நானிருக்கவா ..? “‘

” வேணாம் சார் ”

வசந்தாவிற்கு அவன் நிலைப் பார்க்க மனதைப் பிசைந்தது.

”உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா அலுவலக நேரத்துல நான் இவருக்குத் துணையாய் இருக்கேன் சார் . ” துணிவாய் சொன்னாள்.

” நல்ல யோசனைம்மா. உனக்கு விருப்பம்ன்னா தாராளமா இருக்கலாம். ” சொன்னார்.

சுதாகருக்கு இஷ்டமில்லை. மறுத்தான்.

என்றாலும் எல்லோரின் வற்புறுத்தலால் அவன் ஏதும் பேசமுடியாதவனாகிப்போனான்.

அலுவலகம் வந்தும் அவன் பேச்சு.

” அம்மா அப்பா இல்லாத அனாதையா இருக்கிறவங்களுக்கெல்லாம் எவ்வளவு கஷ்டம் !! தலைமை குமாஸ்தா ரொம்பவே வருத்தப்பட்டு வேதனைப்பட்டார்.

தேன்மொழிக்கு மனம் இளகிவிட்டது.

” சுதாகர் சார் உண்மையிலேயே அனாதையா சார். . ? ” நெகிழ்ந்து பாவமாய் கேட்டாள்.

” ஆமாம். எவளோ பெத்து குப்பையிலே வீசிட்டுப் போய்ட்டாள். அந்தப் பக்கமா நடந்து போன ஒருத்தர் குப்பைத் தொட்டியில் குழந்தை அழுறதைப் பார்த்து பரிதாபப்பட்டு அள்ளி எடுத்துப்போய் அனாதை விடுதியில் சேர்த்தார். அந்தப் பையன் அவுங்க ஆதரவுலேயே நல்ல படிச்சு, தன் திறமையால் ஒரு வேலையும் தேடிக்கிட்டான் அவன்தான் நம்ம சுதாகர். துணை மேலாளர் ! ” என்று அவன் சரித்திரத்தையே உடைத்தார்.

மாலதி உட்பட கேட்ட எல்லோருக்கும் மனசு கனத்தது.

‘ சுதாகர் அனாதை! ‘ செவிப்பறையில் மோதியது.

‘ அட..! பாவம் !’ நெஞ்சம் பரிதாபப்பட்டது.

அனாதை விடுதி நடத்துபவர்களும், அவர்களுக்கு உதவுபவர்களும் எப்பேர்ப்பட்ட கழிவிரக்கக்காரர்கள் ! கருணை உள்ளம் கொண்டவராகள். ! நினைக்க சிலிர்த்தது. இதயம் விம்மியது.

சாமிக்குக் குடம் குடமாக பாலாபிசேகம் செய்ய வேண்டாம்.

யாகம் பெயரால்… பட்டும், பீதாம்பரமும் போட்டு கொளுத்த வேண்டாம்.

கட்சித் தலைவன், தலைவி, நடிகர் நடிகைகளுக்காக கொடியும் கொத்தளமும் கட்டி வாழ்வின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

அங்கு கொட்டும் பணம், பண்டம், பால், பலகாரங்களை ஆதரவற்ற அனாதைகளுக்கு கொடுப்பதில்தான் இன்பம். பிறர்க்கு உதவுதான் மனிதனை மனிதன் வாழ வைக்கும் மகத்துவம். இந்த மனதிற்குத்தான் மனிதர்கள் கோயில்கள் கட்டுவார்கள். கட்டாவிட்டால் கடவுள் கொண்டாடுவார். ! மாலதி மனசுக்குள் தோன்றியது.

உலகில் எத்தனை எத்தனை அவலங்கள் இருக்கின்றன.?!

முன் வினைப் பயனோ, பின் வினைப் பயனோ. !! ஊனம், கூன், குருடு, செவிடு , முதியோர்கள் என்று நிறைய அவலம். இவர்களுக்கெல்லாம் உதவாமல் மனிதன் வாழ்ந்து என்ன பயன். .? – மாலதிக்கு இப்படியெல்லாம் யோசனை ஓடியது. .

‘ நம்மையறியாமலேயே சுதாகர் பக்கம் மனம் சாய்கிறதே ! இதனால் அவன் மேல் தனக்கு ஈடுபாடா. .? மெல்ல சாய்ந்து விட்டோமா ..? ‘ – சுதாரித்து மாலதி தனக்குள்ளேயே கேள்விகள் கேட்டாள்.

‘இல்லை ! பரிவு, பச்சாதாபம் !’ – அவளிடமிருந்து பதில் வந்தது.

‘ சுதாகர் உன்னைக் காதலிப்பதாகச் சொன்னான். திருமணம் முடிப்பதாகவும் கூறினானே. .! ‘

அது அவன் விருப்பம் ! மனசு புரண்டது.

கிழவன் குமரியைக் காதலிக்கலாம். பணக்காரன் ஏழையைக் காதலிக்கலாம். உயர்ந்த சாதி தாழ்ந்த சாதியைக் காதலிக்கலாம். எவரும் எவரை வேண்டுமானாலும் காதலிக்கலாம். அது அவரவர்கள் உடன்பாடு,

உரிமை. மனதை பொறுத்த விஷயம். அது காதலிக்கப் படுபவர்களால் அங்கீகரிக்கப்படாமல் போக தொல்லை கொடுப்பதுதான் தவறு.

எவர் மனதையும்…. நீ இதைச் செய்யாதே, நினைக்காதே என்று தடுக்க முடியாது.

சுதாகர் தன் விருப்பத்தைச் சொன்னான். ஆனால் தொந்தரவு , தொல்லை, கஷ்டம் கொடுத்தானா. .? மனசு மாலதியைக் கேள்வி கேட்டது.

”இல்லை ! ” பதிலும் அதுவே சொன்னது.

” அன்று சீறினாயே. .?! ”

” அது மனத்துக்குப் பிடிக்காததைக் கேட்டபோது ஏற்பட்ட இடறல்.! ” என்றது.

மனம் ஒரு நல்ல கண்ணாடி. அதில் எதையும் ஒளித்து வைக்க முடியாது. ஏமாற்றவும் முடியாது. !

சுதாகர் நல்லவன் என்பதினால்தான் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து பரிதாபப்படுகிறான். மனதிலிருப்பதை மறைக்காமல் சொல்லி ஆறுதல் சொல்கிறான்.

தட்டுத் தடுமாறி நடு சாலைக்குச் செல்லும் குருடனை எத்தனை பேர்கள் பார்த்துப் போகின்றார்கள். ஒரு சிலர்தான் அவனைப் பிடித்து இழுத்து ஓரத்தில் விட்டு…. ‘ இப்படி போ ‘ சொல்கிறார்கள். ஏன். ..? நல்லெண்ணம். ! மனப்பாதிப்பு, மனிதாபிமானம். அதனால் அப்படி உதவியவருக்கு அவர்கள் மேல் அன்பு, பாசம் நேசமென்று சொல்ல முடியுமா. .?

அப்படித்தான் இதுவும். சுதாகர் அனாதையா என்று மனம் அக்கறை கொள்கிறதேத் தவிர… ‘அன்பில்லை! ! ‘ ஒதுக்கினாள் .

வீட்டிற்கு வந்தபோது ராகுல் நோட்டைக் காட்டினான்.

அதில் ஆண்டு விழா அழைப்பிதழ் இருந்தது.

அடுத்த வாரம் திங்கள் கிழமை என்றிருந்தது.

” மிஸ் உங்களைக் கண்டிப்பா வரச் சொன்னாங்கம்மா. .! ” ராகுல் சொன்னான்.

அத்தியாயம்-11

மாலதிக்கு சுதாகரால் எந்த தொந்தரவுமில்லை. ஆனால் அவனுக்குத் துணையாய் இருந்த வசந்தா மேல்தான் இவளுக்குக் கொஞ்சம் வலி, கோபம்.

‘ ஒரு கலியாணமாகாத கன்னிப்பெண். திருமணம் முடிக்காத ஒரு ஒண்டிக்கட்டை வாலிபனுக்கு உதவ எப்படி துணிந்தாள் .?! ….உடன் இருந்து பணிவிடைகள் செய்ய முன்வந்தாள்…?!’ – இதுதான் அவளுக்குள் பெரிய கேள்வி குறி, குடைச்சல்.

ஒருவேளை பிரியமோ. .?!! – அவளிக்குள்ளாகவே யோசித்தாள்.

அப்படித்தானிருக்கவேண்டும். !! இல்லையென்றால் இப்படி இருக்க மனசு வராது.!

வசந்தா, அவன்மேல் பிரியம் என்பதைக் காட்டிக்கொள்ள அப்படி செய்தாளா. .?!, தன் மனதைச் சொல்ல சந்தர்ப்பம் ! என்று வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டாளா. .?!, இரண்டு நாட்கள் அவனுடன் இருந்ததில் சொல்லி இருப்பாளா.?!.

வசந்தா இருக்க நம்மை ஏன் தொல்லைக் கொடுத்தான். .? !

ஒருவேளை வசந்தா சமயம் பார்த்து இப்போதுதான் வாயைத் திறக்கின்றாளோ. .?

இல்லை…. இவன் முன்பே அவனிடம் தன் காதலைச் சொல்லி விட்டாள். அவன் மறுத்துவிட்டான். தீராத காதல்… இப்படியாவது அவன் மனதில் இடம் பிடிக்க வேண்டுமென்று வலிந்து உதவப் போனாளா. .?

வசந்தா அழகு , அந்தஸ்தில் குறையே இல்ல. தாராளமாக காதலிக்கலாம். திருமணம் முடிக்கலாம். வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைக்கலாம்.! – மாலதி இப்படி நினைத்து வசந்தாவை அடிக்கண்ணால் பார்த்தாள் .

அவள் வேலையில் கண்ணாக இருந்தாள் .

எதிர் இருக்கை சிவாதான் அவளை விழுங்கி விடுவது போல் பார்த்தான்.

‘ அடப்பாவி ! ‘ மாலதி துணுக்குற்றாள். ‘

இவள் மனசு தெரியாமல்…. சுதாகருக்கு உதவி செய்ததைத் தவறாக எடுத்துக் கொண்டு தவறான எண்ணத்தில் வளைக்கத் திட்டம் போடுகின்றானா. .?!

மாலதி கவனித்து தெரிந்தும் … அவன் பரபரப்பாக வேலைக்குள் புகுந்தான்.

சுதாகருக்கு உதவிகள் செய்து விட்டு வந்த பிறகாவது அவன் மனசு தெரிந்து ஒதுங்காமல் இப்படி பார்ப்பது என்ன நியாயம். .? மாலதிக்கு அவன் மேல் கோபம் வந்தது.

அலுவலகத்தில் இருக்கப் பிடிக்காமல் அரைநாள் விடுப்பு எழுதிக் கொடுக்கும்போது அவளை அறியாமலேயே சுதாகர் அறையைப் பார்த்தாள் மாலதி.

அவன் இருக்கை காலியாகவே இருந்தது.

தணிகாசலமும் இல்லை.

இருவரும் எங்கு சென்று விட்டார்கள் ?! ஒருவேளை மறுபடியும் இவர்கள் வெளியூர் பயணமா. .? சுதாகர் திரும்பவும் வந்து காய்ச்சலாகப் படுக்கப் போகின்றான். .? – மனம் நினைத்து.

மாலதி வீட்டிற்கு வந்து உண்டு, கொஞ்ச நேரம் உறங்கி எழும்போது மணி 3. 30.

விடுவிடுவென்று கிளம்பி சரியாக 4. 30. க்கெல்லாம் பள்ளிக்கூட வாசலுக்கு வந்தாள்.

வாசல் இருமருங்கிலும் வாழை மரங்கள் கட்டியிருந்தார்கள். வண்ண வண்ண தாள்களில் கொடிகள் கட்டியிருந்தார்கள். ட்யூப் லைட்டுகள் வரிசையாக கட்டி சீரியல் பல்புகளை மரங்களில் தொங்க விட்டிருந்தார்கள். வாசலில் ஆரம்பத்தில் அலங்காரமாக மூன்று ஆசிரியைகள் நின்று தாம்பாளங்களில் சந்தானம், கற்கண்டு, பூ துணுக்குகள் வைத்துக் கொண்டு வருபவர்களுக்கு வழங்கி முறையாய் வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். பெற்றவர்களும் குழந்தைகளும் கூட்டமா கூட்டமாக உள்ளுக்குள் சென்றுகொண்டிருந்தார். முகப்பில் ஏராளமான இரு சக்கர வாகனங்களும், கார்களும் நின்றிருந்தான். ஆட்டோக்களும் இருந்தன.

மாலதி சந்தனம் , கற்கண்டும் எடுத்துக்கொண்டாள்.

பூ எடுக்கும்போது அந்த ஆசிரியை …

” ராகுல் மேக்கப் அறையில் இருக்கான் ! ” தகவல் சொன்னாள்.

வகுப்பு பெஞ்சுகளெல்லாம் மேடைக்கு எதிரில் பார்வையாளர்கள் அமர இருந்தன. மக்கள் நிறைந்து அமர்ந்திருந்தார்கள்.

மாலதி முதல் வரிசையில் அமர்ந்தாள்.

‘ காயத்ரியும் அழைத்திருக்கலாம் சந்தோசப்பட்டிருப்பாள் ! ‘ மனம் அவளையும் அறியாமல் நினைத்தது.

எவர் விருந்தாளியாகவாவது வந்திருப்பாளோ. .? ! – நினைத்து திரும்பி பார்த்தாள்.

இல்லை. !!

சீருடைகளில்லாமல்… பல வித வண்ணம், வடிவங்களில் உடை அணிந்து, கண்களில் மையிட்டு, நெற்றியில் பொட்டிட்டு, உதட்டுக்குச் சாயம் பூசி, கூடவே ஒரு திருஷ்டி பொட்டும் வைத்துக் கொண்டு அன்றலர்ந்த பூக்களாய்… இப்போதுதான் பூத்து வந்த பூக்களாய் போலிருக்கும் பெண் குழந்தைகளைப் பார்க்க இவளுக்கு ஆசையாய் இருந்தது.

அழகு, அலங்காரங்களில் அவர்களுக்கு நிகர் அவர்கள்தான். ! வியந்தாள். ஒவ்வொரு குழந்தை கன்னத்தையும் கிள்ளி கொஞ்சி முத்தமிட மனம் துடித்தது.

கைகளில் வளையலும், கால்களில் கொலுசும் பெண் பிள்ளைகள் அழகுகளைக் கண் கொட்டாமல் பார்த்தாள். பார்த்து பார்த்து பரவசப்பட்டாள்.

மேடையில் குழந்தைகள் ஏசு இறைவணக்கம் பாடினார்கள்.

இதுதான் இவளுக்குள் இடறலாக இருந்தது.

கிருஸ்து பள்ளிக்கூடங்களில் ஏசு இறைவணக்கம்தான் பாட வேண்டுமா. .? மாறாக ஒரு முஸ்லீம் இறைவணக்கமோ, இந்து இறைவணக்கமோ ஏன் பாடக்கூடாது.??!

மதியம் உணவின் போது ஏசுவைப்பற்றி சொல்கிறார்கள்.

அவர் இட்ட அப்பம்தான் அனைவரும் உண்பது ! – என்று சொல்ல வைத்து குழந்தைகளை சாப்பிடச் செய்கிறார்கள்.

இவர்களைப் பார்த்து இதே வழியை இஸ்லாமிய பள்ளிகளிகளிலும் செய்கிறார்கள்.

அடுத்த மதக் குழந்தைகள் வந்து, ‘இது நம் தெய்வமிட்ட அன்னமில்லையா. .?’ – குழம்பி போகிறார்கள்.

வேறு தனியார் இந்து பள்ளைகளிலோ, அரசு பள்ளிகளிலோ இந்த அழிச்சாட்டியங்கள் இல்லை. அங்கு பொதுவான இறைவணக்கம். மத்திய உணவு வேளையில் சாப்பாடு! இதைத் தவிர. இந்த உணவை யார் இட்டார்கள் என்ற பேச்சே இல்லை.!

பள்ளிகள் பள்ளிகளாகவே இயங்க வேண்டும். மதங்கள் பரப்பும், வளர்க்கும் பிச்சாரக்கூடங்களாக இருக்கக் கூடாது.

இது அரசாங்கத்திற்கு தெரியுமா..? தெரிந்தும் பாரபட்சமாக்க இருக்கின்றார்களா. ? கல்வித் துறை என்ன செய்கிறது. இதற்கு நடவடிக்கை இல்லையா. ..?? – இதைப் பற்றி மாலதி நிறைய யோசித்தாள்.

விழா மேடையில் தலைமை ஆசிரியை பள்ளி ஆண்டறிக்கை வாசித்தாள்.

கடைசியாகத்தான். .. கலை நிகழ்ச்சிகள்

மாறுவேடப்போட்டியில்…. மாணவர்கள் ஏசு, புத்தர், காந்தி, நேரு வேடங்களில் தோன்றினார்கள். ராகுல் அசல் நேருவாக இருந்து எல்லோர் முகங்களிலும் மலர்ச்சியை ஏற்படுத்தினான். அதற்குரிய முதல் பரிசையும் தட்டி வந்தான்.

விழா முடிவில்….’ அனாதைக் குழந்தைகளுக்கு உதவி! ‘ என்று எழுதப்பட்ட இரு உண்டியல்களை மாணவர்கள் கூட்டத்தில் கொண்டு வந்து குலுக்கினார்கள். அது மாலதிக்கு நெகிழ்ச்சியாக நிறைவாக இருந்தது. நூறு ருபாய் போட்டாள்.

ஒரு வழியாக நாட்டுப்பண் இசைத்து விழா முடிய…மாலதி கைக்கடிகாரத்தைப் பார்த்தாள் மணி 10. 00.

சொரக்கென்றது.!!

இங்கிருந்து அவள் வீட்டிற்குச் செல்ல இனி பேருந்து கிடையாது.! என்பது அவளுக்குள் கலக்கத்தை ஏற்படுத்தியது.

ஆட்டோ, வாடகை கார் பிடித்து செல்ல வேண்டியதுதான். ! நினைத்து மாலதி மகனின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வேகமாக வெளி வாசல் வந்தாள்.

மக்கள் நான் முந்தி, நீ முந்தி என்று…… இரு சக்கர வாகனம், ஆட்டோ, கார்களில் பறந்தார்கள்.

மாலதி ஒவ்வொரு ஆட்டோ, வாடகை கார்களாகப் போய் பார்த்தாள்.

எல்லாருமே அமர்த்தி வைத்துக்கொண்டு வந்திருந்ததால் எவரும் இவளை சட்டை செய்யாமல் சென்றார்கள்.

இந்த விஷயத்தில் நாம் ஏமாந்து விட்டோம் ! அவளுக்குப் புரிந்தது.

ஏறக்குறைய கூட்டம் மொத்தமும் களைய…மாலதி மகனுடன் நின்று கலவரமானாள்.

‘ ஐயோ. .! ‘ அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

அத்தியாயம்-12

இவள் தவிப்பு, தள்ளாட்டத்தைப் பார்த்தபடி சுதாகர் சாலையைத் தாண்டி புது ஸ்கூட்டருடன் எதிரில் நின்றான்.

ஆளை பார்த்ததுமே மாலதி திடுக்கிட்டாள்.

ஏன் நிற்கிறான், எதற்கு நிற்கிறான். நண்பருக்காக காத்து நிற்கின்றானா… இல்லை, தனக்காக நிற்கிறானா. ?

தான் இங்கு வத்து எப்படி தெரியும். தெரிய வாய்ப்பில்லை! இவன் இவருக்கோ காத்து இருக்கிறான்.! என்று நினைத்த மாலதி. .. தன்னைக் காப்பாற்ற ஒரு ஆட்டோ, வாடகை கார் வராதா. .? சாலையைப் பார்த்தாள்.

ராகினி மாதிரி தெரிய. …மகனை இழுத்துக் கொண்டான் அந்த ஜோடியை நோக்கி நடந்தாள். அவர்கள் அருகில் சென்றதும்தான் அவளில்லை. தெரிந்தது.

ஏமாற்றம் !

துக்கமும் கலவரமுமாக திரும்பியவளுக்கு சுதாகர் தன்னை கவனிப்பது தெரிந்தது. இவனிடம் உதவி கெட்டாலென்ன ? தோன்றியது.

எப்படி அழைக்க ,நெருங்க. ..? கையைய்ப் பிசைந்தாள்.

இவள் கஷ்டம் உணர்ந்த அவன். ..

” என்ன மாலதி ! வீட்டுக்குப் போக வழி இல்லியா. .? ” கேட்டுக் கொண்டே சாலையைத் தாண்டி இவள் அருகில் வந்தான்.

” இ. .. இல்லே. .”

” எப்படி போகப்போறீங்க..? ”

” தெ. . தெரியல. .”

” பயப்படாதீங்க. நான் உங்களுக்கு உதவறேன் ! ” என்றவன் இவள் பதிலை எதிர்பாராமல். .. அருகில் நின்ற ஆட்டோவை நெருங்கி. ..

” இரண்டு புது பேட் ! போகனும். ” சொன்னான்.

” முடியாது சார். நாளைக்குப் பந்த். நான் அதுக்குள்ள சவாரியை ஏத்திப் போய் நான் இறக்கி விடனும். .” என்றான்.

” நாளைக்கு என்ன பந்த். ..? ”

” அஞ்சரை மணிக்கே அசம்பாவிதம் ஆரம்பிச்சிருக்கு. படிக்கட்டுல கல்லூரி மாணவர்கள் தொங்கி வந்திருக்கானுங்க. நடத்துனர், ‘ உள்ளாற வாங்க ! ‘ சத்தம் போட்டிருக்கார். இதுனால வாக்குவாதம், சண்டை, அடிதடி. பந்த். ! ” பெருமூச்சு விட்டார்.

அவர் சொல்லி முடித்த அடுத்த வினாடி அந்த ஆட்டோவில் வந்தவர்கள் ஏற. … நகர்ந்தது.

மாலதி, சுதாகர் கலவரமாகிப் போனார்கள்.

” இப்போ என்ன பண்றது. .?” சங்கடமாக இவளைப் பார்த்தான்.

” தெ .. தெரியல. ..” கையைப் பிசைந்தாள். உடல் நடுங்கியது.

” கவலைப்படாதீங்க. உங்களுக்கு இப்போ நான்தான் துணை. ஆட்சேபனை இல்லேன்னேன்னா என் வண்டியில போகலாம். ”

” அது உங்களுதா. .? ”

” ஆமாம். புதுசா எடுத்தேன். எல்லாம் தணிகாசலம் சார் ஏற்பாடு. நீ இனி துணை மேலாளர். பேருந்தில் வர்றது உன் தகுதிக்கு சரி இல்லே ! சொல்லி நேத்து என்னை அழைச்சுப் போய் எடுத்துக் கொடுத்தார். பொழுது போகலையேன்னு இங்கே வேடிக்கைப் பார்க்க வந்தேன். ”

மாலதிக்கு இன்னும் மனம் நிலைக்கு வரவில்லை.

” இதோ பாருங்க மாலதி. மணி 11 .00. த் தாண்டியாச்சு. இனி எதை எதிர்பார்த்தும் பிரயோசனமில்லே. உங்களுக்கு உதவுறேன் என்கிறதுக்காக நான் உங்களுக்கு தொல்லை கொடுப்பேன்னு தப்பா நினைக்காதீங்க. சத்தியமா அதுக்கு வாய்ப்பே இல்லே. எனக்கும் அப்படியெல்லாம் எண்ணம் கிடையாது. வாங்க. உங்க பையன் வேற தூங்குறார் !” சொன்னான்.

‘ வேறு வழி இல்லை. இனி யோசித்து தாமத்தும் பிரயோசனமில்லை ! ‘ மாலதி தெளிந்தாள்.

” சரி. போகலாம் ! ” சொன்னாள்.

– தொடரும்…

– ஆகஸ்ட் 1, 2001ல் குங்குமச் சிமிழ் இதழில் பிரசுரமான குறுநாவல்.

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *