மது





அந்திசாயும் நேரம் ஓட்டமும் நடையுமாக வீட்டை நோக்கி போய்க் கொண்டிருந்தாள் கிருஷ்ணவேணி. அவள் முன் நெற்றியில் வகிடிற்கு இரண்டு பக்கமும் இருந்த நரைமுடிகள் அவள் வயது நாற்பத்தைந்துக்கு மேல் இருக்கும் என்பதை நமக்கு உணர்த்தியது. வழியில் இவளைப் பார்த்த பங்கஜம்,
“என்ன வேணி உன் மகளும் மருமகனும் வந்திருக்கிறாக போல, இப்ப என்ன கேக்க வந்திருக்கானோ? போ போ என்னைக்கு உனக்கு விடிவு காலமோ” என்று அலுத்துக்கொண்டாள்.
கிருஷ்ணவேணி பதிலொன்றும் சொல்லாமல் வீட்டைநோக்கி விரைந்தாள். வீட்டை நெருங்கும் போதே மனசெல்லாம் பட படவென அடித்துக் கொண்டது. புருஷன் செத்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. கல்யாணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியிருந்த நிலையில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான அவள் கணவன் மஞ்சக்காமாலை வந்து போய்ச் சேர்ந்து விட்டான். கையில் ஒரு குழந்தையும் வயிற்றில் ஒரு குழந்தையுமாக நிர்க்கதியாக நின்ற அவளுக்கு அவள் மட்டுமே துணை. பிறந்த வீட்டிலும் எந்த ஆதரவும் இல்லாததால், தன் குழந்தைகளை வளர்க்க பக்கத்திலிருந்த அரிசி மில்லில் வேலை பார்த்து வயிற்றைக் கழுவினாள். பிள்ளைகள் பெரிதாக வருமானம் பத்தாததால் இடையிடையே காட்டு வேலைக்கும் சென்றாள்.
மூத்தவள் மல்லி அவளுக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் 30 தடவையாவது மூக்கைச் சீந்திக் கொண்டு வந்திருப்பாள். நல்ல இடமென்று புரோக்கர் சொன்னதை நம்பி மகளைக் கட்டிக் கொடுத்தாள். அவனும் ஒரு அலுவலகத்தில் பியூனாக வேலை பார்த்தான். ஆயினும் அந்தப் பாழாய்ப் போன குடிப்பழக்கம் அவனையும் விடவில்லை. அடிக்கொருதரம் உன் அம்மாவிடம் அதுவேண்டும், இதுவேண்டும் வாங்கி வா என அடித்து அனுப்பி விடுவான். இப்பொழுது அவனும் சேர்ந்து வந்துள்ளான். என்ன விசயமாக இருக்கும் என எண்ணிக்கொண்டே வீட்டிற்கு வந்த அவள் வாசலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த மருமகனைப் பார்த்து,
“வாங்க மாப்ள, எப்ப வந்தீங்க? நல்லாருக்கீங்களா? வீட்ல எல்லோரும் எப்படி இருக்காங்க?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தாள். அவளை ஏறிட்டுப் பார்த்த கதிரேசன்,
“ம்..ம்..இருக்கட்டும் எல்லாம் நல்லாருக்காங்க”
என்றான் தெனாவெட்டான பார்வையோடு. உள்ளே சென்ற கிருஷ்ணவேணியைப் பார்த்ததும் மூலையில் அழுதபடி உட்கார்ந்திருந்த மல்லி முகத்தைத் திருப்பிக் கொண்டாள். பக்கத்தில் அழுதுகொண்டிருந்த அவளின் இரண்டு வயது மகனைத் தூக்கிக் கொண்ட வேணி பேரனைக் கொஞ்சியபடி,
“என்ன சாமி பசிக்குதாப்பா இரு பாட்டி பாலாத்தித் தாரேன்”
என்று அடுப்பங்கரைக்குள் சென்று இருந்த பாலில் தண்ணி கலந்து குழந்தைக்கும் மீதமிருப்பதை இருவருக்கும் காப்பி போட்டு எடுத்து வந்தாள். அப்பொழுது வீட்டிற்குள் நுழைந்த மகன் சேகரை,
“எங்கடா ஊர்சுத்த போன வீடு தங்காத” என்று கடுமையான குரலில் திட்டிவிட்டு,
“இந்தா குழந்தைய எங்கனா வெளில கொண்டுபோயி அழுகைய அமத்து”
என்று அவன் கையில் திணித்தாள். சேகர் பத்தாம் வகுப்புவரை படித்துவிட்டு பத்தாம் வகுப்பில் பெயில் ஆனதால், வெட்டியாக ஊரைச்சுற்றிக் கொண்டிருந்தான். இதில் வேண்டாத சேர்க்கை வேறு. அவ்வப்போது தம் அடித்து வேணியிடம் மாட்டிக்கொண்டு அடியும் வாங்குவான். அவன் சென்ற பின்பு மெதுவாக மல்லியிடம் சென்று பேச்சை ஆரம்பித்தாள்.
“இப்ப என்னாச்சுடி” என்று கேட்டதுதான் தாமதம் மடைதிறந்த வெள்ளமாய் மல்லி புலம்பி அழ ஆரம்பித்தாள்.
“நா என்னத்தச் சொல்ல இவர் குடியினால இருந்த ஒரு வேலையும் போச்சு எனக்குன்னு பாத்து கட்டி வச்சுருக்கியே. இதுக்கு என்ன நீ பாழுங்கிணத்துல தள்ளியிருக்கலாம்” என ஓவெனக் கதறியழுதாள். இதைக்கேட்ட வேணிக்கு மயக்கமே வரும்போல இருந்தது.
“இப்ப என்ன பண்ணலாம்னு இருக்கீங்க”
என்றதும் இதற்காகவே காத்துக்கொண்டு இருந்ததுபோல் அங்கே வந்த கதிரேசன்,
“அதான் அத்த ஒரு மளிகைக்கடை வைக்கலாம்னு இருக்கோம். நீங்க கொஞ்சம் பண உதவி செஞ்சா போதும்”
என்று அசடு வழிந்தான். இதைக்கேட்ட கிருஷ்ணவேணிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மல்லி திருமணத்திற்காக இருந்த ஒரு காரை வீட்டையும் அடமானம் வைத்துவிட்டாள். அந்தக் கடனையே இன்னும் கட்டாத நிலையில் இனி எதை வைத்துக் கொடுப்பாள். இந்தக் குடிப்பழக்கத்தினால் எத்தனை குடி கெடப்போகிறதோ என்று தன் நிலையை எண்ணி மனம் வெதும்பினாள்.