பொறாமை கூடாது!
கதையாசிரியர்: இரா.கலைச்செல்வி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 9, 2026
பார்வையிட்டோர்: 28
ஒரு அடர்ந்த காட்டில் கிட்டா, சிட்டா என்ற இரண்டு குட்டிக் குரங்குகள் வாழ்ந்து வந்தன. இரண்டும் ஒரே மரத்தில் வசித்தன. ஒன்றாக விளையாடின. ஆனாலும் கிட்டாவிற்கு எப்போதும் சிட்டாவின் மேல் ஒரு சிறு பொறாமை இருக்கும்.சிட்டா மற்ற குரங்குகளுடன் அன்பாகப் பழகும். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் கிட்டாவோ, “சிட்டாவிற்கு மட்டும் ஏன் எல்லாக் குரங்குகளும் இவ்வளவு உதவி செய்கின்றன? சிட்டாவிற்கு மட்டும் ஏன் எப்போதும் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்” என்று நினைத்து வருந்தும். ஒவ்வொரு நாளும் பொறாமை அதிகரித்துக் கொண்டே வந்தது.
ஒரு நாள், இரண்டு குரங்குகளும் மர உச்சியில் உட்கார்ந்து இருந்தபோது, மிக உயரத்தில், பெரிய கிளையின் நுனியில் ஒரே ஒரு மிகப் பெரிய, மஞ்சள் மாம்பழம் தொங்கிக் கொண்டிருந்தது.
அப்போது சிட்டா, கிட்டாவிடம், “கிட்டா, அது மிகவும் மெல்லிய கிளை. தனியாகப் போனால் ஒடிந்துவிடும். நாம் இருவரும் சேர்ந்து முயற்சி செய்யலாம். நான் போய் அந்தக் கிளையை பிடித்துக் கொள்கிறேன். நீ மெதுவாக சென்று அப் பழத்தை எடு என்றது. நான் பிடித்துக் கொண்டால் கிளை ஒடியாது,” என்றது.
கிட்டா ஒரு கணம் யோசித்தது. ‘சிட்டா எப்போதும் என்னைவிடச் சிறப்பாக யோசிப்பதால் தான் எல்லோரும் அதைப் பாராட்டுகிறார்கள்’ என்று நினைத்து பொறாமை கொண்ட கிட்டா, “நீ சொன்னால் நான் கேட்க வேண்டுமா? முடியாது என்னால் தனியாகவே எடுக்க முடியும்!” என்று கர்வத்துடன் கூறி, சிட்டாவைப் பார்த்து முறைத்தது.
சிட்டா புன்னகைத்தது. “சரி கிட்டா. உனக்கு வெற்றி கிடைக்க நான் வாழ்த்துகிறேன். ஆனால் உதவி தேவை என்றால் கேள்,” என்று அமைதியாக இருந்தது.
கிட்டா மீண்டும் கிளைக்குத் தாவி, வேகமாக முன்னேறத் தொடங்கியது. ஆனால், அதன் பாரம் தாங்காமல், மெல்லிய கிளை சடாரென்று ஒடிந்தது!
கிட்டா ‘ ஆ.. ஆ..’ என்று கத்தியவாறே கீழே விழுந்தது. நல்ல வேளையாக, சிட்டா அதன் அருகில் இருந்த ஒரு பெரிய கிளையில் தாவி, கிட்டா கீழே விழாமல் பிடித்துக் காப்பாற்றியது.
கிட்டாவிற்கு உயிர் பிழைத்துவிட்ட மகிழ்ச்சியும் அதிர்ச்சியும். மேலும் கிட்டாவிற்கு மனதிற்குள் ஒரு குற்ற உணர்வு. சற்று வெட்கமாகவும் இருந்தது. “சிட்டா, என்னை மன்னித்துவிடு. நீ எனக்கு உதவ வந்த போதும், உன் மேல் கொண்ட பொறாமையால் நான் உன்னை அவமதித்துவிட்டேன். தனியாகச் சென்று பழத்தை அடைய வேண்டும் என்று பேராசைப்பட்டேன்,” என்றது. சிட்டா “பரவாயில்லை கிட்டா. நாம் இப்போது பாதுகாப்பாக இருக்கிறோம், அதுதான் முக்கியம்.” என்றது.
பின்னர், இரண்டு குரங்குகளும் சிட்டாவின் யோசனைப்படி, கிளையை பிடித்துக் கொண்டு , கவனமாக நகர்ந்து, மாம்பழத்தைப் பறித்து சமமாகப் பிரித்து, மகிழ்வோடு சாப்பிட்டன.
நீதி: பிறர்மேல் பொறாமைப்படுவதால் நமக்கு எந்தப் பயனும் இல்லை. பொறாமையைக் கைவிட்டு, அன்போடும் ,பரிபோடும், ஒத்துழைப்போடும் இருந்தால், கடினமான காரியங்களையும் எளிதில் செய்து முடிக்கலாம்!
![]() |
இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க... |
