பைரவநேசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 15, 2024
பார்வையிட்டோர்: 2,782 
 
 

வெளிவாசலின் வெளிச்சம் உள் அறைவரை விழும். இடது புறத்தில் இருக்கும் ஓய்வு அறையில் சுந்தர்லால் படுத்துக் கிடந்தார்.ஐந்தரை மணிக்கெல்லாம் மகள் பூங்கொடி வந்துவிடுவாள்.வந்ததும் தந்தைக்கு தேநீர் தயாரித்து தந்து சிறிது நேரம் தங்கள் தொழிற்ச் சாலை நடப்புகளைப் பற்றி பேசிவிட்டு வீட்டு வேலைகளை கவனிக்க செல்வாள்.தன் ஒரே பேத்தியை டியூஷனிலிருந்து அழைத்து வர புறப்படுவார். இன்று மணி ஆறாகிவிட்டதால் மகளின் அரவமின்றி மனதுக்குள் ஒரு தவிப்பு இருந்தது பெரியவருக்கு.

ஏதோ ஒரு நிழல் அசைந்து உள் செல்வது போல் உணர்ந்தார். வாசலின் தோரணையில் உள்ள மணி சிணுங்கியது. மெதுவாக எழுந்து கூடத்தை பார்த்தார் பெரியவர். மகள் பூங்கொடி சோபாவில் அமர்ந்து தலையை நன்றாக சாய்த்து சுழலும் மின்விசிறியையே பார்த்துக் கொண்டிருந்தாள். அலுவலகத்தில் அவளுக்கு ஏதோ பிரச்சனை ஏற்பட்டிருக்க வேண்டும் என உணர்ந்தவாரு எழுந்து கூடத்திற்கு வந்தார். முன்பெல்லாம் தெருவாசலில் அவளது சொகுசு வாகனம் உள்நுழையும் போது பைரவன் குரைத்து ஆள் வருகையை அறிவுறுத்துவான். பைரவனின் இடம் வெற்றிடமாக ஆனது.

தேநீர் தயாரித்து மகளிடம் தந்துவிட்டு தானும் ஒரு குவளையில் நிரப்பிக் கொண்டு மகளின் அருகே அமர்ந்தார் பெரியவர்.

“என்ன?”- என்று கேட்டார்.

“ஒன்றும்மில்லை அப்பா”- பூங்கொடி.

ஆனால்,இன்று ஒரு கொலை செய்துவிட்டதாக சொன்னாள். பெரியவர் பதறவில்லை. அடுத்த கேள்வி நிதானமாக இருந்தது.

“உனக்கு எப்போதும் சொல்லி இருக்கேன். வண்டி எடுக்கும் போது அதனடியில் ஏதாவது இருக்கா என பார் என்று”-பெரியவர்.

“………………”

“மரங்களை வெட்டி தொழிற் பேட்டையாக்கிவிட்டோம். சாலையில் இருந்த கொஞ்ச மரங்களையும் வர்தாவும், பிக்ஜாமும் பெயர்த்து போட்டுவிட்டன. தெரு நாய்களுக்கு படுத்துக் கொள்ள கார் நிழல்தான் உள்ளது. அதனால் காரை எடுக்கும் போது கீழே பார் என உனக்கு சொல்லி இருக்கேனே பூங்கொடி”-மகளின் தாடையை தனது இரு உள்ளங்கைகளால் தாங்கி கருணை பொங்க சொன்னார் பெரியவர்.

பணிச் சுமையில் சில நேரங்களில் நிதானம் தவறிவிடுவதாக சொன்னாள்.

“இது மனுஷன் தப்புமா. நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். சரிவிடு பைரவனுக்கு ஓரு வேண்டுதல் செய்து பாவத்தை போக்கிக் கொள்வோம்”-பெரியவர்.

“தாத்தா, நீ வருவேனு ரொம்ப நேரம் காத்திருந்துவிட்டு நானே நடந்து வந்துட்டேன்”-பெயர்த்தி துடியாள். தாத்தாவும் அம்மாவும் அவளை சமாதானம் செய்தார்கள்.

அம்மாவின் மடியில் தலை வைத்துக் கொண்டாள். அவள் தலை முடிகளை கோதிவிட்டுக் கொண்டே பூங்கொடி சொன்னாள்.

“நம்ம வண்டிய எடுக்கும் போது ஒரு குட்டி நாய சரியா கவனிக்காம ஏத்திக் கொண்னுட்டேன்”.

“எப்படிமா?”-துடியாள்.

 “காருக்கு அடியில் தூங்கிக் கொண்டிருந்தது, கவனிக்க முடியல”- பூங்கொடி.

 “தாத்தா, நிறைய தடவ உனக்கு சொல்லியிருக்காருமா. நீ ஏன் கவனிக்கல”- துடியாள்.

இரவு நேரங்களில் தாத்தாவிடம் பலமுறை கதை கேட்டிருக்கிறாள். வனத்திலிருந்து நாகரிகம் கருதி வெளிவந்த மனிதனுடன் அவன் அழையாமல் உடன் வந்த உயிரினம் நாய்தான் என்றும், ஒரு முறை நன்றி காட்டினால் ஆயுசு முழுவதும் நன்றியுடன் இருக்கும் உயிரினம் நாய்தான் என்றும் பெரியவர் துடியாளுக்கு உறங்கும் முன் கதையாக சொல்லி இருக்கிறார்.

நாமும் ஒரு நாய்குட்டி வளர்க்க வேண்டும் என்பது அவளின் கனவாக இருந்தது. ஒரு நாள்….

சரியாக இரண்டு மணிக்கெல்லாம் வர்தா புயல் கரையை கடந்து கொண்டிருந்தது. மதுரவாயல் மேம்பாலத்தில் காரில் வந்து கொண்டிருந்தாள் பூங்கொடி. ஒரு வாகனத்தில் அடிபட்ட தாய்நாய் தரையோடுதரையாக தேய்ந்து போய் கிடந்தது. மழை நீரோடு ரத்தம் கலந்து சாலையில் பரவிக் கிடந்தது.குட்டிகள் திசை தெரியாமல் ஆளுக்கொரு மூலையில் போய்க் கொண்டிருந்தன. அதில் வெண்ணிற குட்டி நன்றாக புஷ்டியாக இருந்தது. அதை தூக்கி தன் காரில் போட்டுக் கொண்டு வீட்டிற்கு வந்தாள் பூங்கொடி. துடியாளுக்கு தாளாத சந்தோஷம்.

பெரியவர் நித்தம் அறிவுரை சொல்வார். அலுவலகம் கிளம்பும் முன் அதனுடன் சிறிது விளையாடிவிட்டு போ என்று.

உண்மையிலே பூங்கொடிக்கு நாய்கள் என்றால் பிடிப்பதில்லை. அவளது பால்யத்தில் தன் வீட்டில் இருந்த பைரவனுக்கு ஒரு நாள் உணவிடும் போது தன் இடது கையின் மேற்புறத்தில் நன்றாக கடித்து வைத்தது. அதன் பற் தழும்புகள் இன்னும் இருக்கிறது. அன்று முதல் அவளுக்கு நாய்கள் மீது நேசம் குறைந்தது.

ஆனால், தந்தையின் ஸ்பரிசமும் அன்பும் இல்லாத தன் ஒரே மகள் துடியாளின் ஆசைகளை நிறைவேற்றும் பொருட்டே நாய்குட்டியை எடுத்து வந்து வளர்த்தாள். பின்பு தன் வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்ளவும் நாயின் தேவைகளை பூர்த்தி செய்து பராமரிக்கவும் தன் தொழிற்ச் சாலையில் பணிபுரியும் ஒரிசாவைச் சேர்ந்த மம்தா என்பவளை அழைத்து வந்து தன் வீட்டோடு இருக்க வைத்தாள். மம்தாவிடம் பூங்கொடி மிகவும் கண்டிப்பாக இருந்தாள். பைரவன் மம்தாவிடம் மட்டுமே நேசமாக இருந்தது. பூங்கொடியை பொறுத்தளவில் பைரவன் வீட்டு காவலாளியாகதான் இருந்தது. எப்போதெல்லாம் நேரம் தவறி தாமதமாக வருகிறாளோ அப்போதெல்லாம் பைரவன் குரைத்தது. மம்தா சமாதானப் படுத்துவாள். எஜமானியை பார்த்து குரைக்கும் பைரவன் மீது அவளுக்கு எரிச்சல் வந்தது. ஒரு நாள் அலுவலகம் புறப்பட காரை நோக்கி வந்த பூங்கொடி அந்தக் காட்சியை பார்த்து அசூயையானாள். தன் விலை உயர்ந்த காரின் சக்கரத்தில் பைரவன் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தது. மம்தாவை அழைத்து கடுமையாக கண்டித்துவிட்டு அலுவலகம் போய்விட்டாள். அதற்கு பிறகு மம்தாவும் வேலைக்கு வருவதே இல்லை. மம்தா இல்லாத ஏக்கத்தில் பைரவன் உணவு எடுக்காமல் பித்துப் பிடித்தது போல் இருந்தது. பின்பு அதை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டாள் பூங்கொடி.

பைரவன் இல்லாததால் தெருக் கதவை திறந்து கொண்டு உள்ளே வரும் பூங்கொடியை அறிந்து கொள்ள பெரியவருக்கு தடுமாற்றமாக இருந்தது.

பெரியவருக்கும் துடியாளுக்கும் மீண்டும் ஒரு பைரவன் தேவைப்பட்டது. மத்தியான ஏகாந்த வேளைகளிலும் நள்ளிரவுகளிலும் சாலையில் முகம் தெரியாத ஆட்களின் நடமாட்டம் தெரிகிறது. அவர்கள் யார்ரென்று குரைத்து அறிவுறுத்துவான் பைரவன்.

பெரியவர் சுந்தர்லால் கடுமையாக உழைத்து உருவாக்கிய தொழிற்ச்சாலை அம்பத்தூர் தொழிற் பேட்டையில் உள்ளது. தனது ஒரே மகளை அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமித்துவிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டார்.வெளி நாட்டில் எம்.பி.ஏ.படிக்கும் போது ஏற்பட்ட காதலால் தங்களது சொந்த ஊரான மன்னார்குடியை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டாள்.பின் நாளில் அவள் கணவனுக்கு வெளிநாட்டில் நல்ல வேலை கிடைத்து போனவர் திரும்பி வரவே இல்லை.சில வருடங்களுக்கு பின்தான் தெரிய வந்தது அவள் கணவனுக்கு வேறொரு திருமணம் நடந்திருப்பது பற்றி. முறைப்படி சட்ட விவாகரத்து செய்து கொண்டார்கள்.

வருடத்திற்கு பல கோடிகள் வரும்படி தரும் தன் தந்தையின் தொழிற்ச் சாலையை நிர்வகிப்பதிலேயே தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டாள். கணவன் உறவில் தனக்கு கிடைத்த அதீத உறவுதான் மகள் துடியாள். பெரியவர் தன் மகளின் தனிமை வாழ்வை நினைத்து வருந்தி உடல் தேய்ந்து கொண்டிருந்தார். பெயர்த்தியிடம் அபரிதமான அன்பை காட்டினார். பெயர்த்தியை பள்ளிக்கு அழைத்து செல்வதும், மாலையில் அழைத்து வருவதும் அவர் பணியாக இருந்தது. அவள் விருப்பத்திற்காக ஒரு விலையுர்ந்த மிதிவண்டியை வாங்கி அதை ஓட்டவும் கற்றுத் தந்திருந்தார். தாத்தா சற்று சுகவீனமாக இருக்கும் நேரங்களில் துடியாள் மிதிவண்டியிலே தன் தோழிகளுடன் பள்ளிக்கு சென்று வந்தாள்.

அம்மா சந்தோஷமாக இருக்கும் போதெல்லாம் தனக்கு ஒரு பைரவன் வேண்டுமென சொல்லி குழைவாள் துடியாள்.

“துடியா! நீ சரியா படிக்கிறது இல்லைனு உங்க மேடம் சொன்னாங்க. படிப்புல கவனம் தேவை”- பூங்கொடியின்

கட்டளையை ஏற்று படிப்பதில் கவனம் செலுத்தினாள்.

அன்று மழை பெய்து கொண்டிருந்தது. பூங்கொடிக்கு நிறுவனத்தில் ஆடிட்டிங்கு என்பதால் அரை மணி நேரத்திற்கு முன்பே புறப்பட்டு போய்விட்டாள்.பெரியவருக்கு உடல் நலம் சரியாக இல்லை.துடியாள் தன் தோழிகளுடன் பள்ளிக்கு மிதிவண்டியில் சென்றாள்.அவள் பள்ளி பிரதான சாலையில் உள்ளது.துடியாளும் அவளது தோழிகளும் சாலையை கடந்து பள்ளிக்குள் செல்லும் முன் அந்த விபத்து ஏற்பட்டது. எதிர்புறத்திலிருந்து ஒரு கருப்பு நாயும் சாலையை வேகமாக கடந்தது.அது துடியாளின் சைக்கிளில் மோதி நிலை தடுமாறியது.துடியாள் கீழே விழுந்து தலைக் காயத்துடன் மயக்கமானாள். தோழிகளும்,பள்ளி ஆசிரியைகளும்,ஆசிரியர்களும் ஓடி வந்து துடியாளை தூக்கி ஒரு தனியார் ஆம்புலன்சுக்கு போன் செய்து, சில நிமிடங்களிலே வந்துவிட்ட ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு சென்று அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துவிட்டனர்.

அவளை ஏற்றி வந்த ஆம்புலன்சு வாகனத்தை பின் தொடர்ந்தே கருப்பு நாயும் வந்திருந்தது. அவசர சிகிச்சை பிரிவின் முன் உள்ள வளாகத்தில் கருப்பு நாய் படுத்துக் கொண்டது.அந்த நாயை பற்றி டிரைவரும் அங்குள்ளவர்களும் பேசிக் கொண்டார்கள். அதற்கு உணவு தந்தும் உண்ணவில்லை. துடியாளை காலையிலும் மாலையிலும் பூங்கொடி வந்து பார்த்துக் கொண்டாள். பெரியவர் துடியாளுடன் மருத்துவமனையிலே தங்கிக் கொண்டார். பத்து நாட்களுக்குப் பின் தான் நலமடைந்துவிட்ட செய்தியை கண் விழித்து எல்லோருக்கும் உணர்த்திக் கொண்டிருந்தாள் துடி.பெரியவர் பைரவசாமியிடம் வேண்டிக் கொண்டார்.

துடியாள் குணமடைந்துவிட்டதால் மருத்துவர்களும் செவிலியர்களும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல சொல்லியிருந்தார்கள். பூங்கோடி, மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் நன்றி சொல்லிவிட்டு துடியாளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள். வளாகத்தில் படுத்துக் கிடந்த கருப்பு நாயை கண்டவுடன், “அம்மா! இந்த நாய்தான்”-என்றாள்.

தன் வாலை குழைத்து தன் தலையை தாழ்த்தி கண்களில் கண்ணீர் மல்க சிணுங்கி மன்னிப்பு கோரியது கருப்பு நாய்.மீண்டும், மீண்டும் துடியாளின் கால்களை நக்கி சிணுங்கியது.

“அம்மா! மன்னிப்பு கேட்குதுமா…!”-துடியாள்.

பூங்கொடி தன் கால்களை மடக்கி முட்டியை தரையில் அழுத்தி குனிந்து தன் இரு கைகளையும் அதனிடம் விரித்து -“மன்னித்துவிட்டேன் போ!”-என்றாள்.

கருப்பன் தன் தலையை பூங்கொடியின் கைகளில் வைத்து சிணுங்கி அழுது தன் வருத்தத்தை தெரிவித்தது.

“அம்மா! இது பத்து நாளாவே சாப்பிடலைமா!”-என்றார் அங்கு நின்றிருந்த ஆம்புலன்சு டிரைவர்.பெரியவரின் கண்களில் நீர் பனித்திருந்தது.

பெரியவரும், பூங்கொடியும், துடியாளும் காரில் அமர்ந்து புறப்பட தயாரானார்கள். கருப்பன் தன் முன்னங்கால்களை நீட்டி தலை தாழ்த்தி தன் வாலை ஆட்டி நன்றி சொல்லியது.

பூங்கொடி தன் வீட்டை நோக்கி காரை செலுத்திக் கொண்டிருந்தாள். கண்ணாடியின் பிம்மத்தில் தந்தையின் முகம் வாடிப் போயிருந்ததை உணர்ந்தாள். துடியாள் காரிலிருந்து திரும்பிப் பார்த்தாள்.

தூரத்தில் கருப்பன் ஓடி வந்து கொண்டிருந்தான்!

– செப்டம்பர் 2024 கல்வெட்டு பேசுகிறது இதழில் பிரசுரமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *