நீலகண்டன் ஹோட்டல்





(1958ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-23
19. சிறை சென்றவனைச் சிப்பந்தியாக்கியவர்!
எந்த அளவுக்கு தன்னுடைய விசாரணை முன்னேறி இருக்கிறது என்று ருத்ரபதி இன்ஸ்பெக்டர் பரஞ்சோதியிடம் கூறிக்கொண்டு இருந்தார்.
“ராமையா என்னிடம் சில தகவல்கள் சொன்னான்-” என்று ஆரம்பித்தார் ருத்ரபதி.
“ராமையாவா? அவன் ஒரு அயோக்யன்! பயங்கரமாகப் பொய் சொல்லுவான்” என்று கடுகடுப்புடன் கூறிய பரஞ்சோதி, “இது என்ன, இன்ஸ்பெக்டர்! காலையில் அவனைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் போவதாக என்னிடம் சொன்னீர்கள். இப்பொழுது அவனுடன் தோழமை கொண்டு இருக்கிறீர்கள்” என்று கேட்டார்.

அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுவது தன் அந்தஸ்துக்குக் குறைவானதென்று கருதினார் ருத்ரபதி.
அன்றைய தினம் பூராவும் பரஞ்சோதிக்கு நிறைய வேலை இருந்தது. பல இடங்களுக்கு, தனது கைப்பணத்தைச் செலவழித்து, தொலைதூர டெலிபோன் மூலம் பேசி ஒரு வழியாகப் “புருவம்” பற்றிய மர்மத்தைப் புரிந்து கொண்டார்.
“வானப்பிரகாசம்” ஹோட்டலில், வேறொரு துப்பறிவாளன் இருந்தான். அவனைப்பற்றி, இன்ஸ்பெக்டர் ருத்ரபதிக்கோ, பரஞ்சோதிக்கோ எதுவும் தெரியாது. அந்த துப்பறிவாளன் தான் ராமையா! பிறவியிலேயே ராமையா கெட்டவன். சீர்திருந்த வேண்டுமென்ற எண்ணமே அவனுக்குக் கிடையாது. வாழ்நாள் பூராவும், ஈனத்தனமாக வாழ்ந்து, ஈனத்தனமாகத் திருடி, சிறை வாழ்வே இயற்கை வாழ்வாகக் கொண்டவன் அவன்.
நீலகண்டன் அவனுக்கு உதவி செய்வதற்காக, அவனை வேலைக்கு அமர்த்தியிருந்த போதும் கூட, அவரிடம் அவனுக்கு நன்றியுணர்ச்சி கிடையாது. மொத்தத்தில், கஷ்டப்பட்டு வேலை செய்வதே அவனுக்குப் பிடிக்காது.
அவன் சட்டைப்பையில் ஐம்பது ரூபாயிருந்தது. அதைத் தவிர நூற்றைம்பது ரூபாய் தன்னுடைய அறையில் புதைத்து வைத்திருந்தான். அந்தப் பணமெல்லாம், அவன் அங்கு வந்து தங்கிய வாடிக்கைக்காரர்களிடம், கொஞ்சம் கொஞ்சமாகத் திருடியது தான்.
தற்போது பார்த்து வரும் வேலையை உதறிவிட்டு குறுக்கு வழியில் பணக்காரனாக வேண்டுமென்று அவனுக்கு வெகு நாட்களாக ஆசை இருந்தது. அதனால், கொலை நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பே “வானப்பிரகாசம்” ஹோட்டலை விட்டு விலகிவிட அவன் தீர்மானித்திருந்தான். ஆனால், ராஜாபகதூர் அவனுக்கு வேவு பார்க்கும் வேலையை அளித்து, நிறையப் பணம் கொடுக்க ஆரம்பித்ததும், அதில் ருசிதட்டி அங்கேயே தங்கியிருந்தான்.
கொலை நடந்த தினத்திற்கு முன்னால் பொன்னம்பலத்தோடு தமயந்திக்குத் தகராறு ஏற்பட்டதால் அவள் மீதும் சந்தேகம் திரும்புவதற்கு வழியிருந்தது அதனால், அவளைப் பயமுறுத்தி பணம் பறிக்கலாமென்று திட்டம் போட்டான் ராமையா. அவளைச் சந்தித்தும் பேசினான்.
இந்த விஷயத்தை நீலகண்டனிடம் கூறிவிட்டாள் தமயந்தி, அதைக் கேட்டதும், நீலகண்டன் கொதித்தெழுவார் என்று எதிர்பார்த்தாள் தமயந்தி. ஆனால், அதற்கு நேர்மாறாக, அவர் வெகு அடக்கமாக இருந்தார்.
“அவனைப்பற்றி கவலைப்பட வேண்டாம்! அவன், குறுக்கு வழியில் பணம் தேட முயற்சிக்கிறான்” என்று கூறிவிட்டு, தன் அறைக்குத் திரும்பினார்.
தனது ஆபீஸ் அறையை அடைந்த நீலகண்டன்: ராமையாவுக்குச் சொல்லியனுப்பினார். ராமையா வந்ததும், அவனை சாந்தமாகவே விசாரித்தார்.
ராமையா ஏமாந்து விட்டான்…
“எனக்கு இந்த விவகாரம் ரொம்ப அலுத்துப் போய்விட்டது! நான் ஹோட்டலை விட்டு விலகப் போகிறேன்” என்று தைரியமாகக் கூறிய ராமையா, “எப்படியிருந்தாலும், நான் பிரமாதமான தவறெதையும் செய்து விடவில்லையே–” என்று ஆரம்பித்தான்.
“தவறா? தவறு என்றால் உன் அகராதியில் என்ன அர்த்தம்?’ என்று ஆத்திரமாகக் கேட்டார் நீலகண்டன். அவர் முகம், வெளுத்திருந்தது. அவர் குரல் பயங்கரமாக மாறியிருந்தது.
“வேண்டுமானால் நீ போகலாம்! உனக்கு நான் எவ்வளவோ நன்மைகள் செய்தேன். உன்னைப்போன்ற ஈனப்பிறவிக்கு நன்மை செய்வதால் எந்தப் பயனும் ஏற்படாதென்று நான் புரிந்து கொள்ளவில்லை! ஒன்று மாத்திரம் உனக்குச் சொல்கிறேன், ராமையா! இன்றைய தினம் நீ பல தடவைகள் இன்ஸ்பெக்டர் ருத்ரபதியின் அறைக்குச் சென்றாய் அவரிடம் நீ என்ன என்ன பொய் வதந்திகளைக் கூறினாயோ என்னவோ! ஆனால் தமயந்திக்கோ, பவானிக்கோ, அல்லது இங்குள்ள வேறு யாருக்கோ, நீ எந்தவித தொல்லையும் கொடுக்க முயன்றால், அதன் விளைவு மகாப் பயங்கரமானதாக இருக்கும்”
ராமையாவின் மனதிலிருந்த பயம் போய்விட்டது. மிருகத்தனமாக நீலகண்டனை முறைத்துப் பார்த்தபடி, “அநாவசியமாக மிரட்டாதே–” என்று ஆரம்பித்தான்.
அதற்குமேல் அவன் பேசவில்லை. நீலகண்டன் பிசாசைப்போல் பளாரென்று அவன் முகத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டார். ராமையா கீழே சுருண்டு விழுந்தான். நீலகண்டன் அவனுடைய தலை மயிரைப் பிடித்து வேகமாக உலுக்கி அவனைப் பரபரவென்று இழுத்து வந்து, அங்கு கிடந்த ஒரு நாற்காலியில் உட்காரவைத்தார்: “ஜாக்கிரதை! நாளைய தினம் காலை நீ இங்கிருந்து போய்விடலாம். நீ போகும் பொழுது, உன் பெட்டிகள் சோதனையிடப்படும்! ஹோட்டலில் திருட்டுப்போன சாமான் எதுவுமிருந்தால், நேராக நீ சிறைக்குத்தான் செல்லுவாய்!” என்று கூறிவிட்டு, மீண்டும் அவனைப் பரபரவென்று இழுத்து, அவனது கழுத்தை நெட்டி அறைக்கு வெளியே தள்ளினார்.
இந்தக் காட்சியைத் தன் கண்களால் பார்த்துக் கொண்டு இருந்தார் இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி. ராமையா அப்பால் சென்று மறையும் வரை காத்திருந்துவிட்டு, பிறகு நீலகண்டனை நெருங்கினார்.
“எதுவும் தொந்தரவா?” என்று கேட்டார்.
“ஒன்றும் பிரமாதமில்லை. எப்படி இருந்தாலும் அவனைத் தொலைத்துத் தலை முழுகப் போகிறேன். இவனைப்போன்ற ஒரு ஈனப் பிறவியை நியமித்து, தனது மனைவியை எதற்காக வேவு பார்க்கிறாரோ இந்த ராஜாபகதூர்! ஆண்டவனுக்குத் தான் அது வெளிச்சம்!”
“சந்தேகப் பேய் பிடித்தவர்கள், முட்டாள் தனமாக நடந்துகொள்ளுவது சகஜம்!” என்று கூறிய பரஞ்சோதி, “இந்த ராமையாவுடன் என்ன தகராறு?” என்று கேட்டார்.
நீலகண்டன் தலையை ஆட்டியபடி, “ஒன்றும் இல்லை; நான் ஐம்பது ரூபாயைக் குறிப்பிடவில்லை!” என்றார்.
பரஞ்சோதி, தன் கையிலிருந்த சிகரெட்டின் சாம்பலைத் தட்டியபடி, “அதை உன்னிடம் நான் சொன்னது சரியோ, தவறோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது உனக்குத் தெரிந்திருக்க வேண்டுமென்று நினைத்தேன்” என்றார்.
நீலகண்டன் ஆத்திரத்தோடு உயரே சுட்டிக்காட்டியபடி, “இந்த சர்க்கஸ் இன்னும் எவ்வளவு காலம் நடக்கப்போகிறது?” என்று கேட்டார். அவர் குறிப்பிட்டது, “ரிங்–மாஸ்ட”ரான ருத்ரபதியைத் தான் என்று பரஞ்சோதிக்குத் தெரியும்.
“அவர் இப்பொழுது தூங்குகிறார். நாளைய தினம் புறப்படப் போகிறாரென்று நினைக்கிறேன்” என்று கூறிய பரஞ்சோதி, “ஆனால் தான் இங்கிருந்து கிளம்புவதற்குள் யாரையாவது விலங்குமாட்டி இழுத்துக்கொண்டு போகவேண்டுமென ஆசைப்படுகிறார்– ம்……அவருடைய சந்தேகம் உனக்கு எப்படித் தோன்றுகிறது–அதாவது ராஜாபகதூர் தான் பொன்னம்பலத்தைக் கொன்றிருப்பார் என்ற சந்தேகம்?” என்று கேட்டார்.
“முட்டாள் தனமான சந்தேகம்!” என்று ஆத்திரத்துடன் கூறிய நீலகண்டன் “அவர் அந்தக் கொலையைச் செய்திருந்தால், கையிலே கத்தியோடு பகிரங்கமாகவா நடந்து வருவார்? அவரைப்போன்ற ஆட்கள் கொலைகாரர்களே தவிர, சட்டத்திற்குப் பயந்து ஓடும் கோழைகளல்ல!” என்றார்.
பரஞ்சோதி புன்னகை பூத்தபடி, ‘நீ ஒரு தத்துவஞானி, நீலகண்டன்! ராணிபவானியும் இந்தக் கொலையைச் செய்து இருக்கமாட்டாள் என்று நினைக்கிறாயா?” என்று கேட்டார்.
“அவளும் இந்தக் கொலையைச் செய்திருக்க முடியாது” என்று கூறிய நீலகண்டன் சில வினாடிகள் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு, “இன்ஸ்பெக்டர் இந்த விவகாரத்தில் நீங்கள் சிக்கிக் கொண்டதற்காக ரொம்ப வருத்தப்படுகிறீர்களா?” என்று கேட்டார்.
“இல்லை! அதற்குமாறாக சந்தோஷப்படுகிறேன்! என்னிடமுள்ள சில நளினமான மனித உணர்ச்சிகள் தலை தூக்கி, இந்த விவகாரத்தை தூரத்திலிருந்து கவனிப்பதில் அளவு கடந்த மகிழ்ச்சியை எனக்கு ஏற்படுத்துகின்றன!”
20. ராமையாவின் வேலை? ராஜாபகதூருக்கு வலை?
கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பிரமிக்கத்தக்க முறையிலே ரொம்பவும் சாந்தமடைந்து ராமையா, நீலகண்டத்தின் முன்னால் வந்து நின்றான். அவன் முகம், பன்ரொட்டியைப் போல் உப்பியிருந்தது.
“கோபித்துக் கொள்ளாதீர்கள், சார்! இந்தக் கொலை நிகழ்ச்சி என்னை ரொம்பவும் தடுமாறிப்போகச் செய்தது. எனக்கு, நீங்கள் எவ்வளவோ உதவி செய்தீர்கள்–”
“வீண்கதை வேண்டாம்! நாளைக்கு நீ போகப் போகிறாயா?” என்று சுருக்கமாகக் கேட்டார் நீலகண்டன்.
“இல்லை, சார்! நான் இங்கேயே இருந்து விடுகிறேன். இதைப் போல, எனக்கு வேறு வசதியான இடம் கிடைக்காது……….” என்று மனப்பூர்வமாகக் கூறினான் ராமையா.
ராமையாவின் உள்ளத்திலே ஒரு பிரமிக்கத்தக்க திட்டம் உருவாகியிருந்தது……
நீலகண்டனின் அறையை சுத்தம் செய்வதும், ராமையாவின் வேலைகளில் ஒன்று. அன்று மத்தியான சாப்பாட்டிற்குப் பிறகு, அறையை சுத்தப்படுத்துவதற்காக ராமையா நீலகண்டனின் அறைக்குள் நுழைந்தான். அந்தச் சமயத்தில் நீலகண்டன் அங்கு இல்லை. அதைப் போன்ற ஒரு சந்தர்ப்பம் தனக்கு கிடைக்குமென்று ராமையா எதிர்பார்க்கவில்லை. முதலில், வேகமாகத் தன் வேலையைச் செய்து முடித்து விட்டு, அங்கு கிடந்த ‘ஐந்து–டிராயர் மேஜையின் அடி டிராயரை இழுத்துப் பார்த்தான். அது பூட்டப்பட்டு இருந்தது. இரண்டு முறை அவன் அதை இழுத்தபோதிலும், அது கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லை. அந்த டிராயரின் உட்புறத்தில்
உட்புறத்தில் இரும்புத்தகடு பொருத்தப்பட்டு இருந்தது. அந்த அறையிலுள்ள பெரிய இரும்புப் பெட்டியின் சாவியும் அதற்குள்தான் இருந்தது.
அந்த இரும்புப் பெட்டிக்குள் கத்தை கத்தையாக கரன்ஸி நோட்டுகள் இருந்தன. எஃகுத் தகட்டால் செய்யப்பட்ட கறுப்பு வர்ணம் பூசிய பெட்டி ஒன்றும் இரும்புப் பெட்டிக்குள் இருந்தது. அதற்குள் ரொம்ப மதிப்புவாய்ந்த பொருள் எதுவும் இருக்கக் கூடும்………
ராமையா இயற்கையிலே புத்திசாலியல்ல. இருந்த போதிலும் அவனது கூட்டத்தினருக்குள்ள நயவஞ்சகம் அவனிடம் எல்லை மீறி அமைந்திருந்தது. அன்று பிற்பகல், இன்ஸ்பெக்டர் ருத்ரபதியிடம் வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தான். ருத்ரபதிக்கு அவன் பேச்சில் நம்பிக்கை இருந்ததால், அவன் கூறியவற்றைப் பொறுமையாக கேட்டுக் கொண்டு இருந்தார்.
“அது சரி; ராமையா! ராஜாபகதூர் இருக்குமிடம் உனக்குத் தெரியுமென்றால் என்னிடம் ஏன் விலாசத்தைக் கொடுக்கக் கூடாது? நானே அவரை இங்கு கொண்டு வர ஏற்பாடு செய்வேனே?” என்று கேட்டார் ருத்ரபதி.
“நான் அந்த விலாசத்தைச் சொல்ல முடியாது சார்!” அவரிருக்கும் இடத்தை நீங்கள் அணுக முடியாது” என்றான் ராமையா.
ருத்ரபதி அவனை உற்றுப் பார்த்தபடி, “சட்டப்படி நான் உன்னைக் கட்டாயப்படுத்தி உன்னிடமிருந்து தகவலை கிரகிக்க முடியுமென்பது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.
“நீங்கள் என்ன செய்தாலும், கவலையில்லை, சார்! நான் ஒரு ஏழை. அந்தக்காலத்தில், என்னுடைய கஷ்டகால புத்தியினால் நான் தவறான வழியில் சென்று விட்டேன். ஆனால், இப்போது நல்ல வழிக்குத் திரும்பி, நேர்மையாக நடக்க ஆசைப்படுகிறேன். இருந்தாலும் ராஜாபகதூருக்கு நான் மனமறிந்து துரோகம் செய்ய மாட்டேன்!” என்றான் ராமையா.
கடைசியாக தனது திட்டமொன்றை ராமையா இன்ஸ்பெக்டர் ருத்ரபதியிடம் கூறினான். அந்தத்திட்டம், ருத்ரபதிக்குப் பிடித்திருந்தது. ஒரு மணி நேரத்தில் ராமையாவை மறுபடியும் சந்திப்பதாக உறுதி கூறினார்.
இன்ஸ்பெக்டர் ருத்ரபதியின் அறைக்குள் ராமையா வந்து போவதை வியப்போடு பார்த்துக்கொண்டு இருந்தார் பரஞ்சோதி. ருத்ரபதியிடமிருந்து விஷயத்தை கிரகிக்க அவர் எவ்வளவோ முயன்றும் பயனில்லாமல் போய்விட்டது.
ராமையாவின் திட்டம், வெற்றியடையும் நிலையை அடைந்துவிட்டது. ஏனென்றால், இன்ஸ்பெக்டர் ருத்ரபதி அவன் கூறிய ஏற்பாட்டிற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்.
இன்னும் சிலமணி நேரங்களில், எல்லாம் நிறைவேறிவிடும்.
அதற்காக குறிப்பிடப்பட்டு இருந்த நேரம் இரவு 9:25 மணி.
அன்றிரவு வழக்கத்திற்கு விரோதமாக அதிக பேர் சாப்பாட்டிற்கு வந்திருந்தார்கள். தாம்பரம் உதவி போலீஸ் சூபரின்டென்டென்டான ருத்ரபதியின் மேலதிகாரியும் அன்று வந்திருந்தார். அவருக்கு ருத்ரபதியை அவ்வளவாகப் பிடிக்காதென்று பரஞ்சோதிக்குத் தெரியும்.
பரஞ்சோதிக்கும் ருத்ரபதிக்குமிடையே ஏதோ மனவேறுபாடு இருப்பதையும் அவர் அறிவார் அதனால் தான் ருத்ரபதி, பரஞ்சோதி மீது புகார் எழுதி அனுப்பினார் என்றும் அவருக்குத் தெரியும். அந்த விவகாரத்தைப் பற்றி, பரஞ்சோதியிடம் உதவி சூபரின்டென்டென்ட் விசாரித்துக் கொண்டு இருக்கும் போது தான், இன்ஸ்பெக்டர் ருத்ரபதி அந்தப்பக்கம் வந்தார். இருவரும் அந்தப் பேச்சை நிறுத்திக் கொண்டனர்.
உதவி சூபரின்டென்டென்ட் தனியாக இருந்தபோது இன்ஸ்பெக்டர் ருத்ரபதி அவரிடம், “சார்! பரஞ்சோதியிடம் எதையும் சொல்லி விடாதீர்கள். அவர் ரொம்பவும் மமதைப் பிடித்த ஆளாக இருக்கிறார். என் மேல், அவருக்கு ரொம்பப் பொறாமை!” என்று தளுக்காகக் கூறிவிட்டு “இன்றிரவு நான் செய்திருக்கும் ஒரு ஏற்பாட்டின் மூலம், இந்தப் பயங்கர மர்மங்களுக்கு ஒரு முடிவு தேடுவதோடு, கொலைகாரனான ராஜாபகதூரையும் கைது செய்து கொண்டு வந்து விடலாம்! நமது போலீஸ் காரை ஓட்டும் டிரைவரைத் தவிர ராமையா மாத்திரம் தான் அந்தக் காரிலிருப்பான். வேறு யாரையும் நாம் அனுப்பத் தேவையில்லை!” என்றார்.
எல்லாவற்றையும் உதவி சூபரின்டென்டென்ட் பொறுமையாக கேட்டுக் கொண்டு இருந்தார்.
நேரமாக ஆக ராமையா பரபரப்புடன் காணப் பட்டான். அவன் பல வேலைகளை செய்து முடிக்க வேண்டியிருந்தது. கடைசியாக நீலகண்டனின் ஆபீஸ் அறைக்குள் நுழைந்தான்.
“உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும், சார்!” நீலகண்டன் முதுகைத் திருப்பிக்கொண்டு தனது நாற்காலியில் உட்கார்ந்து ஏதோ எழுதிக் கொண்டு இருந்தார். அறைக்குள் நுழைந்த ராமையா அறைக் கதவை சாத்திவிட்டு, கடிகாரத்தைப் பார்த்தான். மணி 9:20 ஆகியிருந்தது.
ஐந்து நிமிடம் கழித்து ராமையா அந்த அறையை விட்டு வெளியே வந்தான். அறைக்கதவை மெதுவாக சாத்திக்கொண்டு வேலைக்காரர்கள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தான். அவன் கையில் ஒரு சிறு கருப்புப் பெட்டியிருந்தது. அதை எங்கேயெடுத்துச் செல்கிறானென்று வியப்போடு பார்த்துக்கொண்டு இருந்தார் பரஞ்சோதி.
அவர் பார்வை இன்ஸ்பெக்டர் ருத்ரபதி மீதும் திரும்பியது. ருத்ரபதி தனது கைகடிகாரத்தைப் பார்த்து விட்டு முகத்தைச் சுளித்துக் கொண்டார். அந்தச் சூழ்நிலையில், மின்சாரம் பாய்ந்ததைப் போலிருந்தது. ஏதோ ஒரு பிரமிக்கத்தக்க விஷயம் நடக்கப் போகிறதென்று பரஞ்சோதியின் உள்ளுணர்வு கூறியது. இருந்த போதிலும், அந்த நிமிஷத்தில் எந்தவித விசேஷமும் நடைபெறவில்லை என்று பரஞ்சோதிக்குத் தோன்றியது.
தானிருந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, உதவி சூபரின்டென்டென்ட் உட்கார்ந்திருந்த இடத்திற்குச் சென்றார் பரஞ்சோதி.
“இன்றிரவு எதுவும் வானவேடிக்கை நடக்கப் போகிறதா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.
உதவி சூபரின்டென்டென்ட் தோளை உலுக்கியபடி, “எனக்குத் தெரியாது. ருத்ரபதிதான் ஏதோ ஒரு பெரிய திட்டம் போட்டு வேலை செய்கிறார்–ஏதோ ஒரு பெரிய விஷயம் நடக்கப் போகிறதென்ற உள்ளுணர்வு உங்களுக்கும் ஏற்பட்டிருக்கிறதா, பரஞ்சோதி?” என்று கேட்டார்.
‘ஆம்’ என்ற பாவனையில் தலையசைத்தார் பரஞ்சோதி.
அவர்களிருவரும் பேசிக் கொண்டு இருந்ததை தூரத்திலிருந்து கவனித்த ருத்ரபதி, வேகமாக அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தார்.
“இப்போது என் திட்டத்தை உங்களுக்குச் சொல்வதில் ஆட்சேபணை இல்லை, பரஞ்சோதி!” என்று படாடோபமாக ஆரம்பித்த இன்ஸ்பெக்டர் ருத்ரபதி, “இன்றிரவு ராஜாபகதூரை இங்கே கொண்டு வந்துவிடுவேன். இது உங்களுக்கு வியப்பாக இருக்கிறதல்லவா?” என்று கேட்டார்.
“அவர் எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார் பரஞ்சோதி.
அவர் எங்கே இருக்கிறார் என்பது தனக்குத் தெரியாவிட்டாலும், அதைக்காட்டிக் கொள்ளாமல் ருத்ரபதி தலையை ஆட்டியபடி, “அதை நான் உங்களுக்குச் சொல்லத் தயாராகயில்லை. இங்கு சரியாக 11:15 மணிக்கு அவரைக் கொண்டு வந்து சேர்த்து விடுவேன்!” என்றார்.
“அவர் சென்னை மாகாணத்திலேயே இருப்பதாக எனக்குத் தெரியவில்லை!” என்றார் பரஞ்சோதி.
“குப்பை! அவர் எங்கு செல்ல முடியும்? அவரை வலைபோட்டுத் தேடிக்கொண்டு போலீஸ்காரர் எல்லாம் காத்திருக்கிறார்கள். அவர் பகிரங்கமாக எங்கும் செல்ல முடியாது. அதோடு–” என்று கூறிக் கொண்டே வந்த இன்ஸ்பெக்டர் ருத்ரபதி, திடீரென்று, பிளந்தவாய் பிளந்தபடி, வாசற்பக்கம் பார்த்துக் கொண்டு நின்றார்.
அவரையே பார்த்துக் கொண்டு இருந்த பரஞ்சோதி சட்டென்று வாசற்பக்கம் பார்த்தார். ராஜாபகதூர் தில்லையம்பலம் ராஜ கம்பீரத்துடன் உள்ளே வந்து கொண்டு இருந்தார்.
21. வெள்ளைத்தாடிக் கிழவன் வெளிப்பட்டான்!
இரண்டே எட்டில் ராஜாபகதூரை நோக்கி ஓடினார் இன்ஸ்பெக்டர் ருத்ரபதி.
“நான் தான் இன்ஸ்பெக்டர் ருத்ரபதி!” என்று ஆரம்பித்த இன்ஸ்பெக்டர். “பொன்னம்பலத்தின் கொலையைப் பற்றி நான் தான் விசாரணை நடத்திக் கொண்டு இருக்கிறேன்!” என்றார்.
ராஜாபகதூர் தில்லையம்பலம் அவரைத் தலையிலிருந்து பாதம் வரையில் ஒரு பார்வை பார்த்தார். “உண்மையாகவா?” என்று உணர்ச்சியற்றுக் கேட்ட ராஜாபகதூர், “அந்தப் பொன்னம்பலத்தின் கொலை சம்பந்தமான விவரங்களை விசாரிக்கவே நானும் வந்திருக்கிறேன்” என்றார். பிறகு, அவர் பார்வை பரஞ்சோதியின் பக்கம் திரும்பியது: “நீங்கள் பரஞ்சோதி தானே? நீங்கள் இந்த வழக்கு விசாரணையை மேற்கொண்டு இருப்பதாகக் கேள்விப்பட்டேன்-
“பரஞ்சோதிக்கும் இந்த விவகாரத்திற்கும் சம்பந்தமில்லை. முழு பொறுப்பும் என்னிடம்தான் இருக்கிறது!” என்று உரக்கக் கூறிய ருத்ரபதி, ‘ராஜாபகதூர்! நீங்கள் கொலை நடந்த இரவு இந்த வீட்டிலிருந்து புறப்பட்டீர்கள். நீங்கள் எங்கெங்கே போயிருந்தீர்களென்று எனக்குத் தெரியவேண்டும்!” என்று அதிகார தோரணையில் கேட்டார். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டவரைப் போல, “ஏன் அப்படிச் சென்றீர்கள் என்பதற்கும் காரணம் காட்ட வேண்டும்!” என்றார்.
ராஜாபகதூர் இலேசாக புன்னகை பூத்தபடி, “ஏன் சென்றேன் என்று விளக்கம் கொடுப்பது, ரொம்ப கஷ்டம். ஆனால் எங்கு சென்றேனென்று சொல்ல முடியும். நான் பெங்களூருக்குப் போய் விட்டு, இப்பொழுது தான் திரும்பி வந்தேன்!” என்றார்.
அதைக் கேட்டு பிரமைதட்டிப்போன ருத்ரபதி “அது அசாத்தியம்! நீங்கள் சென்னையில் தான் இருந்தீர்கள்! அங்கிருந்தபடி இன்று மத்தியானம் ராமையாவுக்கு டெலிபோன் செய்தீர்கள்!” என்றார்.
“நானா?” என்று வியப்புடன் கேட்ட ராஜாபகதூர், “நான் இன்று சென்னையிலேயே இல்லையே!” என்றார்.
இதுவரை சற்று விலகியே நின்று கொண்டு இருந்த இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி மெதுவாக முன்னால் வந்தார்.
இன்ஸ்பெக்டர் ருத்ரபதி, கொஞ்சம் சுதி இறங்கியவராய், “நீங்கள் சென்னையில் தான் இருந்திருக்கிறீர்கள் என்று எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது. ஏனென்றால் நீங்கள் ராமையாவுடன் டெலிபோனில் பேசியிருக்கிறீர்கள். உங்களைச் சந்திப்பதற்குத்தான் ராமையா போலீஸ் மோட்டாரில் சென்னைக்குச் சென்றிருக்கிறான்!” என்றார்.
“நாசமாய்ப் போயிற்று!’ என்று பதறிய பரஞ்சோதி, ‘ராமையாவை போலீஸ் வண்டியிலா அனுப்பி இருக்கிறீர்கள்? நீலகண்டன் எங்கே?” என்று துடித்தார்.
நீலகண்டனை பெயர் சொல்லி அழைத்தார். பதில் இல்லை. வேகமாக ஓடிச் சென்று, அவருடைய அறைக் கதவைத் தள்ளித் திறந்தார் பரஞ்சோதி.
உள்ளே முனகல் சத்தம் கேட்டது. இருளாக இருந்தபோதிலும் வெளியிலிருந்து அடித்த வெளிச்சத்தில், நீலகண்டன் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பது தெரிந்தது!
இதற்குள் ருத்ரபதியும் அங்கு ஓடி வந்தார். இருவரும் சேர்ந்து அவரைத் தூக்கி வந்து, ஹாலில் கிடத்தினார்கள். அவரது தலையில் பலமான வெட்டுக் காயம் இருந்தது. அவர் சட்டைப்பைகள் காலி செய்யப்பட்டிருந்தன. அவசரமாக டாக்டருக்குத் தகவல் அனுப்பிவிட்டு, மீண்டும் நீலகண்டத்தின் அறைக்குள் நுழைந்து ஆராய்ந்து பார்த்தார் பரஞ்சோதி. அறைக்குள்ளிருந்த இரும்புப்பெட்டி விரியத் திறந்து கிடந்தது. அந்தப் பெட்டி சுத்தமாகக் காலி செய்யப்பட்டு இருந்தது. ராமையா தனது மகத்தான வீர சாகஸ செயலைத் தொடங்கிவிட்டான் என்று புரிந்து கொண்டார் பரஞ்சோதி.
நீலகண்டனைப் பரிசோதனை செய்த டாக்டர், காயம் ரொம்ப அபாயகரமானது என்று கூறி சிகிச்சை செய்தார்.
இன்ஸ்பெக்டர் ருத்ரபதி பிரமை தட்டிப்போய் நின்றார். தனது ஏமாந்த தனத்தினால் ஏற்பட்ட விபரீத விளைவு, அவரை ஆடிப்போகச் செய்தது. தலைகுனிவுடன் உதவி சூபரின்டென்டென்டை நெருங்கி, “நன்றாக சூடுபட்டு விட்டேன்! பெரிய புத்திசாலிகள் கூட, சில சமயங்களில் ஏமாந்து போய் விடுகிறார்கள்! பொன்னம்பலத்தைக் கொலை செய்தது, இந்த ராமையா தான் என்பதில் சந்தேகமில்லை!” என்றார்.
“அவன் எங்கே இப்பொழுது?” என்று பரபரப்புடன் கேட்ட பரஞ்சோதி, “போலீஸ் வண்டி எங்கே போகிறது என்று எனக்குச் சொல்லுங்கள்!” என்று துடித்தார்.
ருத்ரபதி யோசனையுடன் கன்னத்தைத் தடவியபடி, “எனக்கு எந்த இடம் என்று சரியாகத் தெரியவில்லை. நமது கார் சென்னைக்குத் தான் செல்லுகிறது. எங்கோ பெரம்பூர் பக்கமாகச் செல்லுமென்று நினைக்கிறேன். டிரைவரிடம் கூட, ராமையா சொல்லுகிறபடி ஓட்டும்படி கூறினேன்–” என்று இழுத்தார்.
பரஞ்சோதி பயங்கரமாகச் சிரித்தபடி, “அப்படி யானால் நிலைமை இதுதான்! ராமையா, தன் இஷ்டத்திற்கு நினைத்த இடத்திற்குப் போகலாம்! அவன் வசதிப்படி தப்பிச்செல்ல, போலீஸ் இலாக்காவின் வாகனமும், சாரதியும் அவனுக்குக் கிடைத்து இருக்கிறார்கள்!” என்று குமுறினார்……
சில விஷயங்களில் ருத்ரபதி ரொம்ப சமர்த்தர். சென்னைக்குச் செல்லும் ரஸ்தாவிலுள்ள எல்லா போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் டெலிபோன் மூலம் அவசரத் தகவல் கொடுத்தார். அந்தக் காரை, வழிமறித்து நிறுத்த, ஏராளமான பேர், கொஞ்ச நேரத்திற்குள் (வழி நெடுகிலும்) தயாராகி விட்டனர்.
ஆனால் அந்தக் கார், யார் கண்ணிலும் தென்படவில்லை! வேறு குறுக்கு ரஸ்தாக்கள் மூலமாகச் சென்றிருக்கக் கூடுமா என்றாலும் அதற்கும் வழி இல்லை!
நிலைமை ரொம்ப எக்கச்சக்கமாகி விடவே ருத்ரபதி, இன்ஸ்பெக்டர் பரஞ்சோதியை நெருங்கினார்: “நமது கார் தென்படாதது ஒரு பக்கம் இருக்கட்டும்; அதைப் பின்பற்றிப் புறப்பட்ட செல்வராஜின் காரும், யார் கண்ணிலும் தட்டுப்படவில்லை!” என்று வேதனையோடு கூறினார்.
இந்தச் சமயத்தில், நீலகண்டனுக்கு இலேசாகப் பிரக்ஞை வந்திருப்பதாகத் தகவல் கிடைத்து, பரஞ்சோதி பரபரப்புடன் அங்கு ஓடினார்.
“அந்தக் கருப்பு பெட்டியில் என்ன இருந்தது?’ என்று கட்டு மீறிய பேராவலுடன் விசாரித்தார் பரஞ்சோதி.
“ஒரு தஸ்தாவேஜு இருந்தது. அதை அவன் பார்ப்பதை நான் விரும்பவில்லை” என்று முனகினார் நீலகண்டன்.
“இரும்புப் பெட்டியில் எவ்வளவு பணம் இருந்தது?” என்று கேட்டார் ருத்ரபதி.
“இரண்டாயிரம் ரூபாய்தான்……” என்று முனகிய நீலகண்டன் மீண்டும் மூர்ச்சையானார்.
இந்தச் சமயத்தில் ஒரு போலீஸ் சேவகன் பரபரப்புடன் ஓடிவந்து ருத்ரபதியிடம் ஏதோ கூறினான்.
“யார்? செல்வராஜா? எங்கே இருக்கிறான்?வெளியிலா?” என்று கேட்டபடி, வெளிப்பக்கம் பறந்தோடினார் ருத்ரபதி.
செல்வராஜ், தனது காரில் டிரைவர் ஆசனத்தில் உட்கார்ந்திருந்தான். அவனுக்குப் பின்னாலிருந்த ஆசனத்தில் ஒரு மனிதன் முடங்கிக்கொண்டு முனகியபடி கிடந்தான். அவன் போலீஸ் மோட்டாரை ஓட்டிச் சென்றவன் என்று உடனே புரிந்து கொண்டார் ருத்ரபதி.
“அவனை உடனே வெளியே தூக்கிப்போடுங்கள். அவன் கால் ஒடிந்துவிட்டது என்று நினைக்கிறேன். வழியில் ஒரு விபத்து ஏற்பட்டிருக்கிறது. ஸ்டியரிங் சக்கரம் கெட்டுப்போயிருக்க வேண்டும். அவனை இருட்டில் விட்டுவிட்டு செல்லக்கூடாதென்று, அவனை ஏற்றிக் கொண்டு வந்தேன்” என்றான் செல்வராஜ்.
நாலைந்து பேர் ஓடிவந்து அந்த டிரைவரை உள்ளே தூக்கிச் சென்றார்கள்.
“ராமையா எங்கே?”
“எனக்குத் தெரியாது–இந்த டிரைவர் அதை என்னிடம் சொல்லவில்லை. அவன் என்னிடம் கூறியது எல்லாம் இதுதான்: “ஸ்டியரிங்” சக்கரம் கெட்டு விட்டதாகவும், தான் வெளியே தூக்கி வீசப்பட்டதாகவும் தான் சொன்னான்” என்றான் செல்வராஜ்.
“அந்தக் கார் என்ன ஆயிற்று?’
“அது என் கண்ணில் படவே இல்லை. எங்கோ ஓடி மோதி விழுந்திருக்கும். அதைப் பற்றி நான் கவலைப்படாமல், டிரைவரின் உயிரைக் காப்பாற்ற அவனைத் தூக்கி வந்தேன்” என்றான் செல்வராஜ்.
“ஆண்டவனே!” என்று கதிகலக்கத்துடன் கூறிய இன்ஸ்பெக்டர் ருத்ரபதி, “சீக்கிரம் பரஞ்சோதியைக் கூப்பிடு!” என்று கத்தினார்.
பரஞ்சோதி வேகமாக அங்கு வந்தார். “டிரைவரை எங்கு பார்த்தாய்?” என்று அவசரமாக செல்வராஜிடம் கேட்டார்.
“தாம்பரம் காட்டுக்குள்!–யானைக் குட்டைக்கு அருகாமையில்!”
பரஞ்சோதி மெதுவாக, “அப்படியானால், காரும் தொலைந்தது; ராமையாவும் தீர்ந்துவிட்டான்!” என்றார்.
பரஞ்சோதியின் ஜோஸ்யம் உண்மையிலேயே பலித்துவிட்டது. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஏராளமான போலீஸ்காரர்கள் தாம்பரம் காட்டுக்குள் நுழைந்து யானைக் குட்டையின் பக்கம் சென்றார்கள்.
குட்டையில் போலீஸ் மோட்டார் தலைகுப்புற சாய்ந்து கிடந்தது. குட்டையின் நடுமத்தியில் (பலத்த காயமடைந்த) ராமையாவின் பிணம் மிதந்து கொண்டு இருந்தது. அந்தப் பிணத்தின் அருகிலேயே, நீலகண்டனுடைய கருப்பு பெட்டியும் மிதந்தது!
“இவன் தான் வெள்ளைத்தாடிக் கிழவன் வேஷத்தில் கொள்ளையடித்துக் கொண்டு திரிந்தவன்! இப்பொழுது இங்குள்ள குகைப் பக்கம் காரை ஓட்டச்சொல்லி, அங்கு டிரைவரைக் கொலை செய்து விட்டு தனது கொள்ளைப் பொருள்களுடன் தப்பவே முயன்றிருக்கிறான். அதற்குள் எதிர்பாராத விபத்து ஏற்பட்டிருக்கிறது!” என்றார் இன்ஸ்பெக்டர் ருத்ரபதி.
பரஞ்சோதியும், தம்பித்துரையும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ருத்ரபதியால் அர்த்தம் காணமுடியாத புன்னகை, அவர்கள் முகங்களில் மலர்ந்தது.
போலீஸாரெல்லாம், குகையைச் சோதனை போட கிளம்பியபோது, பரஞ்சோதியும் தம்பித்துரையும் மாத்திரம், “வானப்பிரகாசம்” ஹோட்டலுக்குப் புறப்பட்டுச் சென்றனர். பரஞ்சோதியின் கையில், நீலகண்டனின் கருப்புப் பெட்டி இருந்தது.
– தொடரும்…
– நீலகண்டன் ஹோட்டல் (துப்பறியும் நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1958, பிரேமா பிரசுரம், சென்னை.