கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 26, 2025
பார்வையிட்டோர்: 146 
 
 

(2022ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18

அத்தியாயம் – 16

வீட்டில் அப்பா இருப்பார். நுழைந்ததும்…”படவா ராஸ்கல்!” என்று பாய வருவார். ‘வருவாரா..?’- மனதில் யோசனையுடன் நடந்தான் ரகுநாதன்.

இவர்கள் வீட்டிற்குச் சென்றபோது தணிகாசலம் கூடத்து பெஞ்சில் அமர்ந்திருந்தார்.

முகத்தில் எள், கொள் கோபம். உர்ரென்றிந்தார்.

இவர்களைப் பார்த்ததும் முகத்தில் விழிக்கப் பிடிக்காதவராய் சடக்கென்று தலையைத் திருப்பி கொண்டார்.

யோக்கினைக் கண்டால் அயோக்கினுக்குப் பிடிக்காது! ரகுநாதன் கவலைப்படவில்லை. தன் தோளைத்தொட்டு வந்த சேகரின் கையை எடுக்கச் சொல்லவுமில்லை.

“கோவிச்சுக்கிட்டுப் போனவனை சமாதானப்படுத்தி அழைச்சி வருவேன். யாரும் எதுவும் பேசப்படாது!” கண்டித்து வந்திருப்பானோ..?!

அடுப்படி அருகில் அமர்ந்திருந்த சிந்தாமணி…விருட்டென்று எழுந்து உள்ளே சென்றாள்.

அண்ணன் தம்பி இருவரும்.. ரகுநாதன் அறைக்கு வந்தனர்.

”ரகு! சாப்பிடலாம்!”

“வேணாம்!” நெஞ்சில் இறங்கிய கடப்பாரை இவனுக்கு வயிற்றிலும் இறங்கி இருந்தது.

“இல்லே. நீ சாப்பிட்டுத்தானாகணும்!” என்று சொல்லிவிட்டு சேகர் அவன் கட்டிலில் இருந்து எழுந்து வெளியே வந்தான்.

சொன்னால் கேட்கமாட்டான். மறுத்தாலும் அண்ணனுக்கு இன்னும் கோபம் வருத்தம் மறையவில்லை என நினைப்பான். தம்பி மன சாந்திக்காகவாவது சாப்பிடவேண்டும்! ரகுநாதனுக்குத் தோன்றியது.

சேகர் சிறிது நேரத்தில் சோறு, தட்டு, தண்ணி… சகிதமுமாக உள்ளே வந்தான்.

அண்ணனுக்கு முன் அமர்ந்து பரிமாறினான்.

சாப்பிட்டு முடித்ததும்…

“சேகர்! நீ போய் படு” சொன்னான்.

சேகர் அரை மனதுடன் அறையை விட்டு வெளியேறினான்.

சிறிது நேரத்தில் வீட்டில் எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டு இருட்டாக இருந்தது.

ஒரு வீடு.

நான்கு மனிதர்கள்.

நான்கு மனங்கள்!

நான்கு கோணங்கள்!

மௌனங்கள்!

நம் வீட்டிலேயே நாம் மூன்றாவது மனிதன் போல ஆகிவிட்டோமே! தலையணைக்கு மேல் கைகளை மடித்து வைத்துக் கொண்டு விட்டம் வெறித்தான் ரகுநாதன்.

பொறுத்துக் கொள்ளவேண்டும் . தம்பிக்காகப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் காயம் மறக்க, மறைய நாளாகும். அதுவரையில் அவமதிப்பு, ஊதாசீனம், வெறுப்பு தான். இவைகளிலெல்லாம் ஒவ்வொரு சொட்டு ரத்தம் சுண்டும். இருந்தும்… ஆத்திரப்படக்கூடாது, ஆவேசப்படக்கூடாது. சகித்துக் கொள்ள வேண்டும். நினைத்துக் கொண்டு புரண்டு படுத்தான்.

வீடு கும்மிருட்டாய் இருந்தது. யாருக்கும் விடி விளக்கைப் போடவேண்டும் என்கிற எண்ணமில்லை போல. முன் நிலவு ஒளி வெளியே பாலாக இருந்தது. ஜன்னல் வழியே வானம் துப்புரவாக இருந்தது. வைரக்கற்களாய் நட்சத்திரங்கள். தொலைவு மரத்தில் மின்மினிப்பூச்சிகள்.

‘சிந்தாமணி!’ அடுத்த அறையிலிருந்து தம்பியின் கிசுகிசுப்புக் குரல்.

ரகுநாதன் வந்து தங்கிய இத்தனை நாட்களில் அந்த அறையிலிருந்து எந்த பேச்சு, மூச்சுகளும் கேட்கவில்லை. எல்லோரும் கதவுகளை அடைத்துக் கொண்டு படுத்திருந்தார்கள். இன்றைக்கு வலியால் இரு அறைகளிலும் எல்லாம் அடைக்கப்படாமல் திறந்திருக்க…இருட்டின் நிசப்தத்தில் துல்லியமாக பேச்சுகள் காதில் விழுந்தது.

“இதோ பாரு புள்ள! தனிமை ரகுவை தவறு செய்யத் தூண்டியிருக்கலாம். அது அவர் தப்பில்லே. உனக்கொன்னு தெரியுமா… யாரும் தவறை தெரிஞ்சி செய்யிறதில்லே. இருக்கிற சூழ்நிலை அவனை உசுப்புது. அதில் கொஞ்சம் புத்தி தடுமாறி தடுக்கி விழுந்துடுறான்.

நடந்ததை மறந்துடு. நீ மனசுக்குள்ளேயே போட்டு புழுங்கி உம்முன்னு இருந்தா… பத்து வருஷம் கழிச்சி வந்த என் அண்ணன் மனசு ரொம்ப புண்ணாகிப் போய் வாழ்க்கை வெறுத்துடுவாரு. சட்டுன்னு நடந்ததை மறக்க முடியாதுதான். ஒத்துக்கிறேன். ஆனா…மறந்துதானாகனும். அதுதான் மனுசத்தனம்.

அண்ணன் மனசு ஒடைஞ்சி ஆத்தங்கரையில மல்லாந்து படுத்துக்கிடந்ததை பார்க்க மனசுக்கு ரொம்ப சங்கடமாப் போச்சு. அதுவும் ஒருத்தி தூக்குமாட்டித் தொங்கின இடத்துக்குப் பக்கத்துல பயமே இல்லாம அப்படிக் கிடந்தார்ன்னா அவர் மனசு என்ன வேதனை அடைஞ்சிருக்கும் புரிஞ்சிக்கோ.”

“உங்க அண்ணன் அப்படி நடந்திருக்கலாமா..?”

“நடக்கக் கூடாதுதான். அதான் சொன்னேனே.. சூழ்நிலை ஒருத்தரைத் தடுமாற வைக்கும்னு. தவறிட்டாரு. மத்தபடி குணத்துல தங்கம். சிந்தாமணி ஓடிப்போனவர் ஓடிப்போனவராகவே இருந்திருக்கலாம். ஏன் வந்தார்..? அவருக்கு என் மேல அவ்வளவு பாசம். என்னைப் பத்திதான் அவருக்குக் கவலை அவர் எனக்கு எழுதின கடிதங்களையெல்லாம் படிச்சுப் பார்த்தால் தெரியும்..உனக்குப் புரியும்.!”

“பாச நேசமென்கிறதெல்லாம்.. சும்மா வேசம். சொத்துக்காகத் திரும்பி இருக்கார்!”

“தப்பு சிந்தாமணி. ரகு இதைப் பத்தி நினைச்சிருந்தா… இந்த வீட்டை விட்டே ஓடியிருக்க முடியாது.”

“எனக்கு நம்பிக்கை இல்லே.”

“நீ சொல்ற மாதிரி அப்படியே சொத்துக்காக திரும்பி இருந்தாலும் அதுல என்ன தப்பு. இருக்கறதை ஆளுக்குப் பாதியாய்ப் பிரிச்சாலும் நாம ஒரு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாமே..?!”

“நீங்க அண்ணனை வீட்டுக் கொடுக்காம பேசுறீங்க. என்னை நினைக்கலை..”

“இதுவும் தப்பு. நான் உன்னை நினைக்கிறேன். என்னை நினைக்கிறேன். ஏன்… இந்த குடும்பத்தையே நினைக்கிறேன், நேசிக்கிறேன். அதனாலதான் உன்னை எதையும் பெரிசு பண்ணாம மறந்துடச் சொல்றேன்.”

“மறந்துடு மறந்துடுன்னு சுலபமா சொல்றீங்களே. நீங்க வரலேன்னா என் கதி..?”

“அதான் வந்துட்டேனே. அப்புறம் ஏன் நடக்காததைப்பத்தி கற்பனையில் கரைஞ்சி மாயனும்..? இதோ பாரு சிந்தாமணி. தவறைப் பெரிசு பண்ணாம விட்டுக் கொடுத்து மன்னிச்சாத்தான் செய்தவன் வருந்தி திருந்துவான். அதை விட்டுட்டு வெந்தப் புண்ணிலேயே வேலைப் பாய்ச்சினா குட்டக் குட்டக் குனியறவன் நிமிர்ந்த கதையாய் மாறிடும். அதனால் நடந்ததைக் கெ ட்ட கனவா நெனைச்சி மறந்துடு. பழையபடி முகத்தைக் கலகலப்பா வைச்சிக்கிட்டு வேலையைப் பாரு.”

” ம்ம்….” அதற்குப் பிறகு அவர்களிடமிருந்து பேச்சில்லை.

என்ன தெளிவான பேச்சு. என்ன மனசு இவனுக்கு. மன்னிக்கும் மனோபாவம்! எப்படி இப்படி பெருந்தன்மையாக பேச, நடக்க கற்றுக் கொண்டான்..? அடுத்தவன் தன் மனைவியை ஓரக்கண்ணால் பார்த்தாலே எகிறி சட்டையைப் பிடிக்கும் இந்தக் காலத்தில் எங்கேயிருந்து வந்தது இந்த சாது குணம்..?

அன்பான மகன்களுக்கு யோக்கியமான அப்பா. எப்படி இந்த முரண்..?! தம்பி பசுத்தோல் போர்த்திய புலிக்கடியில் இருக்கிறான். அயோக்கிய மனைவியிடம் அன்பாகப் பேசுகிறான்.

சரி. இருக்கும்படி ஆகிவிட்டது. இனி..?…

பழியை என்மீது போட்டாலும் பாதகமில்லை. நடந்தது மறந்து இனி நடக்காமல் ஒழுங்காக இருங்கள்! அப்பாவும் அவளும் தன்னிடம் தனியாக மாட்டும்போது எச்சரிக்கலாமா..? இருப்பார்களா…?

ஏனிருக்க மாட்டார்கள்..? இந்த விடுப்பு முடிவதற்குள் அவர்களை எச்சரிக்காமல் விட்டு சென்றால்… அப்புறம் நமக்கும் மரியாதை இல்லை. சேகர் கதி என்ன ஆகும் என்று தெரியாது.

எப்படி அவர்களைக் கண்டிக்க..? ரகுநாதன் ஆராய்ந்தான்.

அண்ணனின் எண்ணம் இப்படி என்றால்…தம்பியின் நினைப்பு வேறொன்றாக இருந்தது..!

இருக்கும் விடுப்பில் அண்ணனுக்குத் திருமண ஏற்பாட்டைச் செய்தாலென்ன..? தோன்றியது.

காலை…

சேகர் ரகுநாதனை அழைத்துக் கொண்டு மேட்டுத் தோப்பு பக்கம் காலாற நடந்தான்.

”ரகு!” அழைத்தான்.

“என்ன..?”

“எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்..”

“என்ன உண்மை..?”

“வெண்ணிலா மேல உனக்கு ஆசையா…?”

“இல்லே..”

“நிஜமா..? “

“நிஜம்!”

“அப்புறம் ஏன் தனிச்சுப் பேசுறீங்க..?”

“அப்படியெல்லாம் இல்லியே..?”

“பேசி இருக்கீங்க..’

“யார் சொன்னா..?”

“உங்க உண்மை நண்பர் ”

“செம்பட்டையனா..?”

“ஆமாம்”

“ரெண்டு தடவை யதார்த்தமாய் சந்திச்சுப் பேசினோமேத்தவிர திட்டமிட்ட சந்திப்பு கிடையாது.”

“உங்க ரெண்டு பேருக்கும் காதல் இல்லையா..?”

“இல்லே..”

”ஏன்…”

“நான் அதைப் பத்தி நினைக்கலை..”

“ஏன் நினைக்கலை..?”

“தற்போதைக்கு எனக்கு அது தேவை இல்லை.”

“கலியாணம் ஆகாம இருக்கப் போறியா..?”

“இந்த ராணுவத்தில் பத்து வருசம் வேலையை முடித்தப் பிறகுதான் திருமணம்.”

“உனக்கு அங்கே யாரவது காதலி..?”

“கிடையாது! எதுக்கு சுத்தி வளைக்கிறே சேகர்..?”

“உனக்குத் திருமணம் முடிக்க ஆசை.”

“அந்த ஆசையில்தான் தவறிட்டேன்னு நினைக்கிறீயா..?”

“அப்படி இல்லே. உனக்கு முடிக்க எனக்கு ஆசை. இந்த வெண்ணிலா விவரம் தெரிஞ்சதுனால… ஏன் முடிக்கக் கூடாதுன்னு யோசனை..”

“எனக்கும் வெண்ணிலாவுக்கு எதுவும் கிடையாது”

“நீ அப்படி நினைக்கலாம். ஆனா…வெண்ணிலா உன்னிடம் வலிய வலிய பேசி வம்புக்கிழுக்கிறாள். உன் மனசுல அவள் இருக்காளா இல்லையோ… அவள் மனதில் நீ இருக்கே. அது உண்மை” சொன்னான்.

ரகுநாதனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

சேகர் சொல்வது போல ஏனிருக்கக் கூடாது! – தோன்றியது.

அத்தியாயம் – 17

கிணறு வெட்ட புத்தம் கிளம்புகிறது. கல்மிஷமில்லாமல் பழகினால்…காதலென்று சொல்கிறார்கள்.

செம்பட்டையன் இதை உத்தேசித்துதான் இவனிடம் சொல்லி இருக்கின்றானா..?

“நீ அண்ணனை விட்டுட்டு கலியாணம் கட்டிக்கிட்டே. அவன் ஒரு ஆளைப் புடிச்சிருக்கான். வெண்ணிலாதான்! காதலிக்கிறாங்க. கட்டிப்போடு.” – உபதேசம்

பண்ணி இருக்கின்றானா..? ஏன்..?..! அக்கறை. இவன் செய்துகொண்டான். இவனுக்குக் கீழே உள்ள தம்பி கட்டிக் கொண்டான். இவன் மட்டும் ஏன் ஒற்றை மரமாய் நிற்கவேண்டும்..? என்கிற நினைப்பு.

இருக்காதா..? ! பெற்றவர்களையும், பிறந்தவர்களையும் விட அக்கறையாய் நண்பர்கள் கவலைப் படுவார்கள். அதனால் சொல்லி இருக்கலாம். அவன் மேல் தவறில்லை.

சேகர் கேட்ட கேள்வி நல்ல கேள்வி. சரியான கொக்கி!

உனக்கு அந்த எண்ணமில்லை. அவளுக்கு இருக்காது என்று என்ன நிச்சயம்..?

கன்னிப் பெண்கள் கண்டவர்களுடன் பழக்கமாட்டார்கள். காதலனிடமும், கட்டிக்கொள்ள போகின்றவனிடமும்தான் கலகலப்பாய்ப் பழகுவார்கள்.

கன்னிப்பெண்கள்…கொழு கொம்பு தேடியலையும் கொடி. மனதுக்குப் பிடித்தவனைக் கண்டுவிட்டால் கப்பென்று பற்றிக்கொள்ளும். துரத்தி துரத்தி வம்பு வளர்ப்பார்கள்.

“யாரு பெரிய அத்தானா..?”

“யோவ் பெரிசு!”

“நான் மகாராணி!”

வெண்ணிலாவும் இப்படித்தான் தன்னிடம் பேசுகிறாள்.

எவளையும் நினைக்காத தனக்கே அவள் உருவம் சலனத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் அவளுக்குள் நம் உருவம் இதை ஏற்படுத்தி இருக்காது என்று நிச்சயம்..?

ஏன் சொல்லவில்லை.

எப்படிச் சொல்லுவாள்..? அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு… அத்தனையும் கலந்த கிராமத்துப் பெண். அதுவும் தமிழ்நாட்டுப் பெண். அவளெப்படி சொல்வாள்..?

“ஐயா! உன்னைக் காதலிக்கிறேன்!” எந்தப் பெண்ணாவது வலிய வந்து வெட்கம் விட்டுச் சொல்லி இருக்கிறாளா..?…

சொல்லமாட்டாள்! அவள்தான் பெண்.

நடந்த நடப்பை வைத்து வெண்ணிலா காதலிக்கலாம். காதலிக்காமலும் இருக்கலாம். அவள் சொல்லாமல் நமக்கு உண்மை தெரியப்போவதில்லை.

நாம் காதலிக்கிறோமா..?! – ரகுநாதன் அவனுக்குள்ளேயே கேள்வி கேட்டான்.

சலனமேற்பட்டது உண்மை. ஆனால் அதை தொடவில்லை. தொடரவில்லை.

ஏன்… வெண்ணிலா தனக்குத் தகுதி இல்லாதவளா..? அத்தைப் பெண். அழகு, குணம், மனத்தில் குறைவில்லை. ஆனாலும் காதலிக்கவில்லை. காரணம்…? 33 வயதுக்கு மேல்தான் திருமணம் என்கிற பிடிப்பு. அதற்குள்…. வேண்டாமென்பதற்குக் காரணம்… உயிருக்கு உத்திரவாதமில்லை. வேலை அப்படி. எல்லைப் பாதுகாப்பு. தங்களைப் போல் எதிரே சும்மா நிற்கும் எதிரி… கொஞ்சம் விளையாட்டுக் காட்டுவோம், சுறுசுறுப்பாக்குவோம் என்று சும்மாவாவது சுட்டுவிட்டு ச் செல்வான்.

இவனுக்கு வாக்கப்பட்டவள்…வயிற்றுப்பிள்ளைத்தாச்சியாகவோ, பிள்ளைகுட்டிகளுடனோ தெருவில் நிற்கவேண்டும். – இதற்காகத்தான்… ராணுவ ஓய்விற்குப் பிறகுதான் திருமணம். – முடிவு!

வெண்ணிலாவிடம் இதைச் சொல்லி தான் அவளை இதயத்திலிருந்தால் எடுத்துவிடச் சொல்ல வேண்டும். சொல்லாமல் விட்டால்… அது வளர்ந்து ஆலமரமாகி… தொல்லை..!

வெண்ணிலா ஆடு, மாடு மேய்த்துக் கொண்டு அங்கு தென்படுவாள்..! என்கிற நினைப்பில் ரகுநாதன் மெல்ல எழுந்து ஆற்றங்கரையை நோக்கி நடந்தான்.

இவன் கணிப்பு வீண் போகவில்லை.

வெண்ணிலா… ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தாள்.

“வெண்ணிலா! உன்கிட்ட நான் ஒன்னு கேட்கனும்…” ரகுநாதன் நேரடியாகவே விசயத்திற்கு வந்தான்.

“என்னய்யா இத்தினி நாளா நான்தான் உன்கிட்ட பேசுவேன். வம்புக்கிழுப்பேன். இப்போ அந்த வேலையை நீ செய்யிறீயா..?”

“இல்லே வெண்ணிலா. ஒரு முக்கியமான விசயம்…”

ஆட்டை ஒரு செடியில் கட்டிவிட்டு…

“என்ன விசயம். சொல்லு..?” எதிரில் வந்தாள்.

“நீ என்னைக் காதலிக்கிறீயா..?”

“இல்லே…”

“உண்மையைச் சொல்லு..?”

“உண்மையத்தான்யா சொல்றேன். “

“சத்தியமா…?”

“நீ என்னைக் காதலிக்கிறீயா..?”

“இல்லே.!”

“இப்போ சொல்லு. நீ என்னைக் காதலிக்கிறீயா..?”

“நீ எத்தனைத் தடவைக் கேட்டாலும் இதே பதில்தான். இல்லே”

“ஏன்…?”

“ஏன்னா…?! இது உனக்கேத்தெரியும். நீ ஆசைப்பட்டாலும், நான் ஆசைப்பட்டாலும்…. ஏன் நம்மள்ல யார் ஆசைப்பட்டாலும் எதுவும் நடக்காது..”

“காரணம்…?”

“நீ மலை. நான் மடு. நீ பணக்காரன். நான் ஏழை. நீ மச்சு வீடு. நான் குச்சு வீடு. அதனால்தான் நான் உன் மேல ஆசை வைக்கல. நீ ஆசைப் பட்டிருப்பியோன்னு பயம். இன்னைக்கு அதுவும் தெரிஞ்சி போச்சு. எனக்கும் பயம் விளக்கியாச்சு நிம்மதி.”

“நீ என்னை வலிய வம்புக்கிழுக்கிறது,பேசுறதை எல்லாம் பார்த்தா …?”

“காதலிக்கிறேன்னு நினைச்சியா. ஒருக்காலும் இல்லே. இதெல்லாம் உறவுமுறை. அத்தை மகள், மாமன் மகன் கலாட்டா.”

“நீ ரொம்ப தெளிவா இருக்கே வெண்ணிலா..”

“நீயும் தெளிவாய் இல்லேன்னா… தெளிவாகிடு. தெளிவு, சரியான தேர்ந்தெடுப்புதான் வாழ்க்கையைச் சரியாய் நடத்தும்.”

‘எப்படிப்பட்டப் பெண்!’ ரகுநாதன் அப்படியே ஆடிப்போனான்.

இவளை ஏன் நாம் இழக்க வேண்டும்! சட்டென்று மனசுக்குள் தீ பற்ற… அடுத்த வினாடி அவனிடமிருந்து அவனை அறியாமலேயே வார்த்தைகள் வந்தது. “வெண்ணிலா..! சத்தியமா சொல்றேன். இதுக்கு முந்தின நிமிசம் வரை நான் உன்னைக் காதலிக்கலை. காதலிக்கவே இல்லே. ஆனா… இப்போ நான் உன்னைக் காதலிக்கிறேன். கலியாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். நீ சம்மதிக்கலைன்னா… சரியான வாழ்க்கைத் துணையை இழந்த துக்கம் என் மனசுல சாகிற வரை இருக்கும்.”

“என்னையா பெரிய பெரிய வார்த்த எல்லாம் சொல்றே..?” வெண்ணிலா அவனை அதிர்வாய்ப் பார்த்தாள்.

“ஆமாம் வெண்ணிலா. இதுவரைக்கும் என் திருமண நினைப்பே வேற. ராணுவ வேலை முடிச்சி வந்தபிறகுதான் அதுன்னு தெளிவாய் இருந்தேன். இப்போ மாறினத்துக்குக் காரணம்… உன் பேச்சு.குணம், மனம் எல்லாம். உன்னை உடனே அபகரிச்சுப் போகணும்ன்னு ஆசை. விட்டா நிராசையாகிடும், உன்னை இழந்துடுவேன் என்கிற பயம்..”

“பார்த்துய்யா. உன் வேகம் எனக்கு பயமா இருக்கு.”

“பயப்படாதே வெண்ணிலா. உன்னைத்தான் கட்டிப்பேன். நம்ம திருமணம் கண்டிப்பா நடக்கும்!” சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் வேகமாக நடந்தான்.

வெண்ணிலா… ஏதும் பேச, நினைக்கத் தோன்றாமல் அப்படியே சிலையாய் அவன் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

அத்தியாயம் – 18

தனியே நடந்த ரகுநாதனுக்கு…. இந்த பிரச்சனைக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது..? – யோசனை ஓடியது.

தன் வரவிற்குப் பிறகு அப்பா – சிந்தாமணிக்கு வாய்ப்பில்லை. அதனால் தன்னைத் துரத்தப் பார்க்கிறார்கள். மூன்றில் இரண்டு மாத விடுப்பு ஓடிவிட்டது. இன்னும் எண்ணி முப்பது நாட்களுக்குள் இதை சரி செய்யவில்லை என்றால் குடும்பம் குலநாசம். சேகர் நிலை அதலபாதாளம்.

என்ன செய்யலாம். எப்படி செய்யலாம்…?

கண்டிக்கலாம்…!

“அன்னைக்கு எலிதான் அடிச்சோம்!” சத்தியம் செய்வார்.

“தம்பி பொண்டாட்டி மேல கைவச்சிட்டு என்னைக் கண்டிக்கிறீயா..?” கூசாமல் சொல்வர்.

சிந்தாமணி…

“ஆசைக்கு இணங்களேன்னு அபாண்டமா பழி போடுறீயே பாவி!” அப்படியே திரும்புவாள்.

கண்டிப்பு சரி இல்லை!

பஞ்சையும் நெருப்பையும் பற்ற வைக்க வாய்ப்பளிக்க வேண்டும். நாம் வீட்டில் இருந்தால் இது நடக்காது. வெளியூர் செல்வதாய் போக்கு காட்டிவிட்டு பதுங்கி பாய்வதுதான் சரியான யுக்தி.

சேகரும் இருக்கக் கூடாது. அவனையும் எங்காவது அனுப்ப வேண்டும். அண்ணன் தம்பிகள் ஊரில் இல்லாமல் இருவருக்கும் வாய்ப்பளித்தால்….கண்டிப்பாக இவர்கள் சிக்க வாய்ப்பு உண்டு. இவர்களை பிடிக்க இதைத்தவிர வேறு வழி இல்லை.

எந்த காயை எப்படி நகர்த்த..? திரும்பவும் ஆற்றங்கரைக்கு வந்தான்.

யாரோ ஒருவர்… ஒரு மரத்தடியில் நின்று அழுவதை பார்க்க அதிர்ச்சியாக இருந்தது.

இந்த மரத்தடியில் இவர் அழவேண்டும்…? என்கிற யோசனையுடன் மெல்ல அவரை நெருங்கினான்.

மாயாண்டி…!

அன்றைக்கு இருந்த அதே மாயாண்டி. அந்த மாயாண்டி… இன்னும் வயதாகி, தலை நரைத்து, கிழடு தட்டி….

“மாயாண்டி…!” அழைத்தான்.

அப்போதுதான் அவர் சுயநினைவிற்கு வந்தவராய்…இவனைப் பார்த்து துணுக்குற்றார்.

“என்னைத் தெரியுதுங்களா…?”

“பத்து வருசத்துக்குள்ள முகம் மறந்துடுமுங்களா…?” கண்களைத் துடைத்துக் கொண்டு இவனைப் பார்த்தார்.

“இங்கே என்ன ஐயா பண்றீங்க…?”

“உங்களுக்கான பாவத்தை இப்போ அனுபவிக்கிறேன் தம்பி..”

“என்ன ஐயா… சொல்றீங்க….”

“அன்னைக்கு உங்களை அயோக்கியன்னு நினைச்சோம். அப்புறம்தான் தெரிஞ்சுது உண்மையான அயோக்கியன் யாருன்னு…”

“யார்…?”

“உங்க அப்பா! ஆமாம் தம்பி. அந்த சண்டாளந்தான் என் பேத்தி காவேரியைக் கொன்னான்.”

“என்னய்யா சொல்றீங்க..? காவேரி உங்க பேத்தியா..?!”

“ஆமாம் தம்பி. பொண்ணை அசலூர்ல கட்டிக் கொடுத்தேன்.. திடீர்ன்னு அம்மா, அப்பா ரெண்டு பேரும் விபத்துல செத்துட்டாங்க. அனாதையா இருந்த வயசுப் புள்ளைய நான்தான் வளர்க்க வேண்டியதாச்சு. நல்ல துறுதுறுப்பா எல்லா வேலையும் செய்வா.எப்படியோ உங்க அப்பா கண்ணுல பட்டுட்டா போலிருக்கு. பொண்ணு நல்லா இருக்காளே. என்கிட்டே வேலைக்கு அனுப்பு. வயல் வேலைக்கு அனுப்பாம சும்மா எனக்கு சோறு எடுத்து வர்ற எடுபிடி வேலைக்கு வச்சுக்கிறேன்னு சொன்னாரு.

பெரிய மனுஷன் நல்ல மனசா கேட்கிறாரேன்னு சேர்த்து விட்டேன். ஒரு ஆறு மாசம் கழிச்சி அந்தப் பொண்ணு கர்ப்பவதியாகி என்கிட்ட உண்மையைச் சொல்லி… திடீர்ன்னு இந்த மரத்துல வந்து தூக்கு மாட்டித் தொங்கி செத்துடுச்சி. ஏழை சொல் யாருக்கும் ஏறாது. அதனால் என் பேத்தி நினைப்பு வரும்போதெல்லாம்…உன்னை நான்தான் கொன்னேன், நான்தான் கொன்னேன்னு இங்கே வந்து கதறி கண்ணீர் வடிச்சு பாரத்தை இறக்கிப்பேன்.” சொல்லி கண்ணீர் விட்டார்.

அன்றைக்கு கணித்தது ஊர்ஜிதமாகி விட்டது. அப்பாவை அடித்து துவசம் செய்யும் அளவிற்கு ரகுநாதனுக்குள் ஆத்திரம் கொதித்தது.

அடங்கு! அடங்கு! மனதை அடக்கினான்.

“அப்பா சார்புல நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்!” சொல்லி ரங்கநாதன் கை எடுத்துக் கும்பிட்டான்.

மனசு தாங்காமல் அங்கிருந்து வீட்டிற்கு வந்தான்.

இரவு 8.00 மணி.

ரகுநாதன் … அவன் அறையில் இருந்தான்.

சிந்தாமணி…அவள் அறையில் கட்டிலிலிருந்து துவைத்த துணிகளை மடித்துக் கொண்டிருந்தாள்.

சேகர் கொல்லையிலிருந்து…

“அப்பா…!” அழைத்துக் கொண்டு கையில் கை பேசியுடன் கூடத்திலிருக்கும் தணிகாசலத்திடம் வந்தான்.

“என்ன..?” ஏறிட்டார்.

“ஒரு முக்கியமான துக்கம்..!”

முக்கியமான துக்கம் என்றதுமே… சிந்தாமணி, ரகுநாதன் காதுகள் கூர்மையாகியது.

“சொல்லு…” தணிகாசலம்.

“திருத்துறைப்பூண்டி அத்தை செத்துப் போச்சு..”

“அப்படியா..?” இவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. வாய் பிளந்தது.

“முக்கிய சொந்தமாச்சே..போயாகணுமே…”

“ஆமாம்ப்பா…”

“சரி. நாளை காலையிலேயே அஞ்சு மணி பேருந்தைப் புடிச்சி போய் வந்துடு..”

“நீங்க…?”

“என்னைவிட உன்னைத்தான் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். கோடை விடுமுறைகளுக்கெல்லாம்… அவள் வீட்டுக்குத்தான் நீ போவே. நீயே போயிட்டு வந்துடு.”

“சிந்தாமணி..? “

“அவள் இருக்கட்டும். அவள் போனால் நான் சோதுக்கு என்ன பண்றது..உன் அண்ணனையும் அழைச்சுப் போனால் ரொம்ப நல்லது. பத்து வருஷம் கழிச்சி வந்திருக்கிறவன். பார்த்து எல்லாரும் ஆச்சரியப்படுவாங்க. இவனுக்கும் உறவு சனத்தையெல்லாம் பார்த்தமாதிரி இருக்கும்.”

அப்பா! தன்னையும் அப்புறப்படுத்த காயை நகர்த்துகிறார். இவனுக்குத் தெளிவாகப் புரிந்தது.

புரியாத சேகர்தான்…

“சரிப்பா..” தலையசைத்தான்.

நல்ல வாய்ப்பு! – ரகுநாதனுக்குள் மனம் வேலை செய்தது.

சேகர் நேராக…இவன் அறைக்கு வந்தான்.

“அண்ணா…” அழைத்தான்.

”சேகர்! நான் நாளைக்கு தவிர்க்க முடியாத வேலையாய் புதுச்சேரியை போறேன். காலை 10.30 மணி பேருந்தைப் புடிச்சி போறேன். போய் வந்துடு.” சொன்னான்

”ச…சரி!” அரைமனதாகத் திரும்பினான்.

”சேகர்!” அழைத்தான்.

நின்றான்

“அப்புறம் நான் என்னைப்பத்தி அங்கெ யாரிடமும் வாயைத் திறக்க வேணாம்.”

“சரி..!” அகன்றான்.

அத்தியாயம் – 19

சேகர் ஐந்து மணி பேருந்தைப் பிடிக்க 4.30 மணிக்கே வீட்டை விட்டு வெளியேறினான்.

தணிகாசலம்… வயல் வேலை என்று வழக்கம் போல்… எட்டு மணிக்கே கிளம்பிச் சென்றார்.

ரகுநாதன் 10.00 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினான்.

பேரளத்தில் நல்ல வீச்சரிவாளைப் பார்த்து வாங்கிக் கொண்டு…உடன் 12 .00 வெயிலில் திரும்பினான்.

வழியில் வெண்ணிலா..சாலையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாள்.

“எங்கே மாமா போயிட்டு இந்த வேகாத வெயில்ல நடந்து வர்றே..?” கேட்டாள்.

“காலையில கும்பகோணம் போனேன். திரும்பறேன் புள்ள.” பொய் சொன்னான்.

“ஆமா.! இன்னைக்கு என்ன விசேஷம். சிந்தாமணி அக்கா… களத்து மேட்டுக்கு சோறு எடுத்து போகுது..?” கேட்டாள்.

அப்பா முன்ஜாக்கிரதை, முன் யோசனையாக… இடத்தை மாற்றி விட்டார்! – இவனுக்குப் புரிந்தது.

நல்ல வேளை வீட்டிற்குப் போய்… வீடு பூட்டி இருக்க… குழம்பி, கோட்டை விடாமல்…இடம் தெரிந்ததற்கு நன்றி மனசுக்குள் சொல்லிக் கொண்ட ரகுநாதன்…

“சிந்தாமணி எப்போ, எந்தப் பக்கம் போச்சு..?” கேட்டான்.

“இதோ இப்பதான். உங்க போர் கொட்டாய்ப் பக்கம்தான் போச்சு ” சொன்னாள்.

“சரி. எனக்கு இப்போ பேச நேரமில்லலே. சிந்தாமணிகிட்ட போய் வீட்டு சாவி வாங்கிகிட்டு வீட்டுக்குப் போறேன்!” சொல்லி அவள் பதிலை எதிர் பாராமல் போர் செட்டை நோக்கி விரைவாக நடந்தான்.

பத்து நிமிடங்களில் போர்செட்டை அடைந்தான்.

கதவு சாத்தி இருந்தது. உள்ளே ஆள் அரவமின்றி நிசப்தமாக இருந்தது.

கூர்ந்து கேட்டான். பின்…

முதுகில் சொருகி வைத்திருந்த அரிவாளை எடுத்து அதனாலேயே ….

“டொக்..!டொக்..!” தட்டினான்.

அள்ளி கட்டிய வேட்டியுடன் திறந்த தணிகாசலத்திற்கு அதிர்ச்சி. அள்ளிப்போர்த்திய புடவையுடன் இருந்த சிந்தாமணிக்குப் பேரிடி.

“டேய் ரகு..!” ஆளையும் அரிவாளையும் பார்த்து தணிகாசலம் பதறினார்.

“நீ ஒன்னும் ஆட்டம் காட்ட வேணாம். அசைஞ்சா வெட்டிடுவேன்!” அரிவாளை ஓங்கினான். .

“ரகு..!”

“அன்னைக்கு ஏமாந்துட்டேன். இன்னைக்கு உங்க ரெண்டு பேரையும் ஏமாத்திட்டு இங்கே இருக்கேன். அன்னைக்கு அப்பனை எதிர்த்து அடிக்க மனம், தெம்பில்லே. இன்னைக்கு இருக்கு. ஓங்கி மித்திச்சா செத்துடுவே..உண்மையைச் சொல்லு. ஊர்ல முக்கால்வாசி புள்ளைங்க உன் முகமா இருக்கு. சிறு வயசிலதான் ஆட்டம் போட்டேன்னு நினைச்சா வயதாகியும் உன் ஆட்டம் குறையல.சொல்லு… எத்தனைப் பேரை சாகடிச்சே…”

“கா…கா..காவேரி…”

“அவ மட்டும்தானா இன்னும் வேற இருக்கா…? “

“இ.இல்லே…!”

“பொய் சொல்லாத தணிகாசலம்..!”

“சத்தியமா அவளைத் தவிர வேற இல்லே…”

“அதை எல்லாமே சகிச்சிக்கிட்டாலும்… சொந்த மருமகள்…பெத்தப் புள்ளைக்குக் கட்டி வச்சவளைத் தொட எப்படி மனசு வந்துது…?”

”நான் சொல்றேன் அத்தான்!” சிந்தாமணி சொன்னாள்.

“பசப்புக்காரி நீ சொல்ல வேணாம்.இந்த ஆளே சொல்லட்டும்.”

“ஐயோ! சத்தியமா நான் பசப்புக்காரி இல்லே. இந்த ஆள் சொல்லிக் கொடுத்த வழி..”

ரகுநாதன் துணுக்குற்று தணிகாசலத்தைப் பார்த்தான்.

தலையைக் கவிழ்ந்தார்.

“இரு. அந்தக் கதையை கேக்கிறதுக்கு முன்னாடி…இவரை நம்பமுடியாது. ஒரு வழி பண்றேன்!” சொல்லி ரகுநாதன் தணிகாசலத்தை நெருங்கி… அவர் கைகளை பின்னால் வளைத்து அவர் வேட்டியால் கட்டி கட்டிலில் உட்கார வைத்தான்.

“சொல்லு..?” அவளிடம் அரிவாளை நீட்டினான்.

“இவர் எனக்கு சொத்து கொடுக்கிறேன், சுகம் கொடுக்கிறேன்னு சொன்னதுக்கெல்லாம் நான் மசியலை. காவிரியைப் போல கொன்னுடுவேன்னு பயமுறுத்தியதற்கும் நான் பயப்படலை. சொத்தெல்லாம் அழிச்சி உங்களை வீட்டை விட்டு துரத்திடுவேன்னு மிரட்டினத்துக்கும் நான் மிரளலை.

திட்டமிட்டு என் புருசனை வேலையாய் வெளியூருக்கு அனுப்பி விட்டு…எனக்கு எப்படியோ மயக்க மருந்து கொடுத்து ஆசையைத் தீர்த்துக்கிட்டாரு. அதை தன் கைபேசியில் வீடியோவாய் எடுத்து…நான் கூப்பிடும்போதெல்லாம் வரனும். தினம் கவனிக்கனும், மறுத்தால் இதை உன் புருசனிடம் காட்டி…தானா நீ வந்ததா சொல்லி வாழ்க்கையை நாசம் பண்ணிடுவேன். மீறினா உன் புருசனைக் கொன்னுடுவேன்னும் சொல்லி இவர் என்னைத் தனக்கு அடிமையாக்கிட்டார்.

என் ஒரே தப்பு. இந்த கரை பட்ட உடம்பை வச்சிருக்காம அன்னைக்கே செத்து என் உயிரை அழிச்சிருக்கனும். அது செய்யாம இவருக்கு அடி பணிஞ்சி போனது தப்பு. நான் செத்திருந்தாலும் இவர் கவலைப் படாம் தன் வேலையைத் தொடர்ந்திருப்பார். உங்க அம்மா இருந்த காலத்திலே அடக்க முடியாதவரை யார் வந்து அடக்க முடியும்..?

இந்த ஆளுக்கு பணிந்தேனே தவிர இவர் கரு என் வயித்துல தங்கக் கூடாதுன்னு வைராக்கியம். நான் கருத்தடை மாத்திரை சாப்பிடுறேன். இதுக்காக என் கணவருக்குக் குழந்தை பெற்றுத் தராத பாவியாய் இருக்கேன். இந்த பாவப்பட்ட உடலை என் கணவர் தொடும்போதெல்லாம்…ஐயோன்னு கூசி தினம் தினம் செத்துப் பிழைக்கும் ஜென்மம் நான் ஒருத்திதான்.. இதுதான் சத்தியம், உண்மை!” சொல்லி அழுதாள்.

அப்பப்பா..! அப்பா எவ்வளவு பெரிய அயோக்கியன்! – உக்கிரமாகப் பார்த்தான்.

“ரகு..! என்னை ஒன்னும் செஞ்சிடாதே ! செஞ்சிடாதே..!” உயிரின் பயம் தணிகாசலம் கெஞ்சினார்.

“நான் உன்னை ஒன்னும் செய்யப்போறதில்லே. இதோ இந்த அரிவாள்.. என் தற்காப்புக்காகவும், உன்னை மிரட்டவும்தானேத் தவிர.. வெட்ட இல்லே. இதோ இங்கே நடந்தது, சிந்தாமணி சொன்னதையெல்லம் சட்டைப் பையில் இருக்கும் என் கை பேசியில பதிய வச்சிருக்கேன். இதை அப்படியே போலீஸ்ல ஒப்படைப்பேன். நான் சத்தியமா சட்டத்தைக் கையில எடுக்க மாட்டேன். அதை அங்கேயே ஒப்படைச்சுடுவேன்!” சொன்னான்.

ரகுநாதன் சொல்லி வாய் மூடவில்லை.

“அப்படியே செய்யலாம் ரகு!” சொல்லிக்கொண்டே சேகர் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். பின்னாலேயே வெண்ணிலா.

உள்ளே இருந்தவர்களுக்கு அதிர்ச்சி.

“ஏ… நீங்க…??….” ரகுநாதன் திகைத்தான்.

தணிகாசலம், சிந்தாமணிக்கும் அதிர்ச்சி.

“அன்னைக்கு நடந்த நடப்புல ஆத்திரத்தில் உன்னை பேசிட்டேனேத்தவிர உன்மேல எனக்கு சந்தேகமில்லே. இதுல ஏதோ மர்மம் இருக்குன்னு சிந்தாமணி மேல தாவிச்சு. கையும் மெய்யுமாய் பிடிக்கத்தான்… உங்களிடம் துக்க சேதின்னு பொய் சொல்லி வெளிக் கிளம்பினேன். திரும்பி வரும்போது வழியில நின்ன வெண்ணிலா… உன் அண்ணன் பரபரப்பா போர்செட்டு பக்கம் போனார் எனக்கு ஏதோ சொந்தேகமா இருக்கு வா போகலாம். சொன்னாள். வந்தோம்.”

அதிர்ந்த சிந்தாமணி….அறை மூலையில் நெற்பயிருக்காக அடிக்க வைத்திருக்கும் பூச்சி மருந்தான பாலிடாயிலை எடுத்து கடகடவென்று குடித்தாள்.

“ஐயோ!” வெண்ணிலா அலற….

சேகர் ஓடி அவளைத் தாங்கிப் பிடித்தான்.

“எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க..” சொல்லி…

மொத்த விசமும் உள்ளே இறங்கி வேலை செய்ய… சிந்தாமணி மயங்கி சரிந்தாள்!

(முற்றும்)

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *