கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 22, 2025
பார்வையிட்டோர்: 502 
 
 

(2022ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம் – 10

தணிகாசலம் அவர் அறைக்குச் செல்ல…சேகர் அண்ணனை நோக்கி வந்தான்.

“காலையிலேயே எங்கே அவ்வளவு அவரசமா போனே சேகர்..?” – ரகுநாதன் கேட்டான்.

“நானும் அப்பாவும் கொல்லுமாங்குடிக்குப் போனோம்..!”

“ஏன்..?”

“மரம் வாங்க..”

“எதுக்கு…”

“செங்கல் சூளை போட..”

“அது எதுக்கு…?”

“கல் விக்கத்தான்!”

கிராமத்துப் பண்ணையாளர்களுக்கு, பணம் உள்ளவர்களுக்கு மரம் மலிவாக கிடைக்கும்போது வாங்கி… அறுவடை, விவசாயம் முடிந்ததும் கோடைக்காலத்தில் செங்கல் சுடுவது உப தொழில். விவசாயம் முடித்து சும்மா இருக்கும்போது ஆட்களுக்கும் வேலை கிடைத்தது போலிருக்கும் செங்கல் நல்ல விலை போகும்.

பேரளம், மயிலாடுதுறை, காரைக்காலென்று வீடு கட்டுபவர்கள், கட்டுமானத்தொழிலில் உள்ளவர்கள் எல்லாம் அதிக விலை கொடுத்து வாங்குவார்கள்.. மக்களுக்கு வேலைக்கு வேலை. செய்பவர்களுக்குக் குறைந்த முதலீட்டில் வருவாய்.

என்ன.. இதற்கு மரங்கள் கிடைப்பதுதான் கொஞ்சம் கஷ்டம். தேடிப் பிடித்து வாங்க வேண்டும். புளியன், புங்கன், தென்னை, பனை… என்று எந்த மரமாக இருந்தாலும் விலை கொடுத்து வாங்குவார்கள். கற்களுக்கு நல்ல செந்நிறம் வரவேண்டுமென்பதற்காக தென்னை நிறைய உபயோகிப்பார்கள். புளியன் அதிக வெப்பத்தைத் தரும் என்பதால்… கொஞ்சம் கூடுதல் விலை கொடுத்து வாங்குவார்கள்.

இந்தப் பக்கமெல்லாம் அடுப்பு காளவாய்த்தான் கரி காளவாய்களுக்கு வேலை கிடையாது. கரி காளவாய் கற்கள் நிறம் இருக்காது. சரியாய் வெந்திருக்காது, சுடப்பட்டிருக்காது என்பதால்…. இந்தப் பக்கம் அவைகள் கிடையாது.

“வருசா வருசம் காளவாய் போடுவீர்களா சேகர்..?”

“கண்டிப்பா போடுவோம். கோடை வேலையே அதுதான்!”

“எத்தனை கல் சுடுவீங்க…?”

“அது மரம் கிடைக்கிறதை பொறுத்து..அதிகம் கிடைத்தால் ரெண்டு லட்சம், மூணு லட்சம்ன்னு சுடுவோம்..”

“மரம் வாங்கிட்டீங்களா…?”

“பார்த்துட்டு வந்திருக்கோம். இன்னும் வாங்கல.”

“வாங்க வேணாம்..!”

“ஏன்..?”

“இந்த வருசத்திலிருந்து அந்த தொழிலை நிறுத்திடுங்க..”

”ஏன்..?'”

“நான் இந்த ஊருக்கு வந்ததும் ஏதோ வெறிச்சின்னு இருந்துது. அது என்னன்னு அப்பா புரியல. இப்ப புரியுது”

“என்ன..?”

“இங்கே நிறைய மரங்கள் காணாமல் போயிருக்கு..!”

“…..”

”நான் இந்த ஊர்ல இருக்கும்போது மரம் மட்டைகள்ன்னு இந்த ஊரே செழிப்பா இருந்துது. எங்கேயும் நிழலாய் இருந்துது. இப்போ நிறைய காணாமல் போயிருக்கு. காளவாய்க்கள் கபளீகரம் செய்திருக்கு.”

“ஆமாம். அதனாலதான் இங்கே கிடைக்காம அசலூர் போய் வாங்கறோம்.”

“இனி அந்த கஷ்டம் வேணாம். சூளையும் வேணாம்.”

”ஏன் ரகு..?”

“நீங்க இப்படி வருசத்துக்கு பல மரங்கள் வெட்டி சாய்க்கிறதுனால மரங்கள் குறைந்து மழை இல்லாம போச்சு சேகர். மரங்கள் இல்லாததினால் மழை இல்லே. மழை இல்லாததினால் தண்ணீர் வரத்து இல்லே. விவசாயம் படுத்துடுச்சி.”

‘நாட்டில் மரங்கள் இல்லை. மழை இல்லை!’ அண்ணன் என்ன சொல்கிறான் என்பது புரிந்து விட்டது.

“நாம் நிறுத்தினா வேறொருத்தன் செய்ய மாட்டானா..?”

“அவனும் புரிஞ்சி நிறுத்தனும்..”

“சரி. கல் இல்லேன்னா வீடு, கட்டுமானத் தொழில்கள் எப்படி நடக்கிறது..?”

“கொஞ்சம் கஷ்டம்தான். ஒரு மரம் வெட்டினால் பத்து மரங்கள் வளர்க்கிறதுதான் இதற்குத் தீர்வு.”

“சரி எல்லோராலேயும் அப்படி செய்ய முடியுமா..?”

“கஷ்டம்தான்!”

அறையிலிருந்து தணிகாசலம் வந்தார்.

“அண்ணன் சொல்றபடி செய்யலாம்ப்பா..” – சேகரைப் பார்த்துச் சொன்னார்.

அப்பாவா இப்படி சொல்கிறார்?! – சேகருக்கு வியப்பாய் இருந்தது.

“சரிப்பா..” சொல்லி அகன்றான்.

தணிகாசலம் இவன் அருகில் அமர்ந்தார்.

“ரகு! எத்தினி நாள் விடுப்பில் வந்திருக்கே..?” கேட்டார்.

“மூணு மாசம்!”

“ஆள் இல்லாதவரை உன்னைப் பத்தி யாரும் பேசல. இப்போ நீ வந்ததும்…. தம்பி கலியாணம் முடிக்கவா வந்திருக்குனு ஊர்ல கேட்குறாங்க. முடிச்சிக்கிறீயா..?”

‘கட்டிவிட்டுப் போடா. நான் வைச்சிக்கிறேன்!’ – சொல்கிறாரா..?!

“இல்லேப்பா. இப்போ நான் அந்த நோக்கத்தில் வரல. நான் கேட்கும்போது நீங்க ஏற்பாடு செய்யலாம்..” ரகுநாதன் அவரிடம் பேசப்பிடிக்காமல் எழுந்தான்.

அப்பாவும் அண்ணனும் ஏன் ஒருவருக்கொருவர் சரி இல்லை. எதற்கும் தழையாத அப்பா… அவன் சொல்லுக்குக் கட்டுப்படுகிறார். இவன் அவரிடம் முகம் கொடுத்து பேச மறுக்கிறான்! – உள்ளே நின்று கவனித்த சேகருக்குள் கேள்வி எழுந்தது!

அத்தியாயம் – 11

மறுநாள் சேகர் வெள்ளெனவே எழுந்து விட்டான். காபியுடன் வந்து ரகுநாதனை எழுப்பினான்.

இவனுக்கு அண்ணனை அழைத்துக் கொண்டு ஊரில் நடக்க ஆசை. அவனின் ஆகிருதியான உடலையும், சிவந்த மேனியையும் ஊர் மக்கள் பாத்து பொறாமைப்படவேண்டும், தங்களைப் பற்றி பெருமை பட வேண்டும் என்கிற நினைப்பு.

தன்னிடம் அதிசயமான, விலைமதிக்க முடியாத பொருட்களிருந்தால் மற்றவர்களுக்கு காட்டி பெருமைப் பட்டுக் கொள்வோமே..அதே குழந்தைத்தனமான ஆசைதான் சேகருக்கும்.

ரகுநாதன் இப்போது இவனுக்கு விலை மதிக்க முடியாத சொத்து. அதிலும் பத்தாண்டுகள் கழித்து கிடைத்த வைரம். அடுத்தவர்களிடம் காட்ட ஆசையாய் இருக்காதா பின்னே…?!

மேலும்… இவன் கண்காணிப்பில் உழைப்பில்…வயல்களில் நெற்பயிர்கள் வளர்ந்திப்பதை அண்ணனிடம் காட்டி பெருமைப்பட்டுக் கொள்ள ஆசை. அதனாலும் இவன் ரகுநாதனை வெளியில் அழைத்துச் செல்ல ஆசைப்பட்டான்.

அண்ணனை சேகர் நேற்றே அழைத்துச் சென்றிருப்பான். தணிகாசம்தான் அவனை மரம் வாங்க இழுத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

“ரகு! வயலுக்குப் போகலாமா..?”

“போகலாம்…” அவனுக்கும் தங்கள் வயல்வெளிகளைப் பார்க்க ஆசை. காபியைக் குடித்துவிட்டு உற்சாகமாக எழுந்தான்.

இருவரும் வீட்டை விட்டு வெளிய வரும்போது தெரு சுறுசுறுப்பாக இருந்தது. பனியும் கொஞ்சமாய்க் குளிரும் கலந்திருந்தது.

சேகர்…. அண்ணன் அருகில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடந்தான்.

சாணம் தெளித்து கோலம் போடும் பெண்களும், இளசுகளும் ரகுநாதனை அடிக்கண்ணால் பார்ப்பதைக் காண சேகருக்குப் பூரிப்பாக இருந்தது.

ரகுநாதன் எதையும் கவனிக்கவில்லை. லுங்கியை முழங்கால் வரை மடித்துக் கட்டிக்கொண்டு தலை குனிந்து கொண்டு நல்ல பிள்ளையாக நடந்தான்.

“தம்பி யாரு..?”

ரகுநாதன் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான்.

இடுப்பில் துண்டும், தலையில் முண்டாசும், தோளில் மண்வெட்டியுமாய் யாரோ ஒரு விவசாயி சேகரை விசாரித்தான்.

“அண்ணன். ராணுவத்துல வேலை செய்யுது. விடுப்புல வந்திருக்கு…” என்றான்.

“வணக்கம் சாமி!” அவன் இவனுக்கு கும்பிடு போட்டுவிட்டு நடந்தான்.

இருவரும் ஊரைவிட்டு வயல்வெளி பக்கம் வந்தார்கள். கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது.

“அண்ணே..! இந்த வருசம்.. கொஞ்சம் கரும்பு போட்டிருக்கு. முதலிக்கட்டளையில பொன்னி நட்டிருக்கு. ரெண்டு ஏக்கர் சீரகச் சம்பா நட்டேன். நல்ல விளைச்சல்.விலையும் கணிசமா போச்சு.”

ரகுநாதன் அதையெல்லாம் காதில் வாங்கினாலும்…

“சேகர்! உனக்கு எப்போ கலியாணமாச்சு..?” திடீரென்று கேட்டான்.

“ஏன்.?”

“சொல்லு..?”

“அஞ்சு முடிஞ்சி ஆறு, ஏழாவது வருசம் நடக்குது.”

“கு….குழந்தை…?”

“இல்லே..”

“ஏன்…?”

“தெரியல..”

“தள்ளிப் போடுறீங்களா..?”

“இல்லே..”

“குழந்தை பெத்துக்க விருப்பம் இல்லேயா..?”

“இருக்கே..?”

“பின்னே ஏன் பெத்துக்கல..?”

“அதுக்கான வேளை வரலை. கடவுள் கொடுக்கலை.”

“டாக்டரைப் பார்த்தீங்களா.?”

“இல்லே..”

“ஏன்…?”

“வந்து… வந்து..”

“சொல்லு..? “

“யாரிடம் குறை இருந்தாலும் மனசு வலிக்குமே..”

இது கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்பின் அடர்த்தி! பாசப் பிணைப்பு! என்ன குணம். என்ன மனம்..? ரகுநாதனுக்கு வியப்பாக இருந்தது.

“அந்த வலி வர வாய்ப்பே இல்லே. குறை யாரிடம் இருந்தாலும் மருந்து மாத்திரைகள் எடுத்து குணமாக்கிடலாம். மனவலிக்கு வேலையே கிடையாது.”

“உன் மனைவி இதை பத்தி உன்னிடம் பேசலையா..?”

“இல்லே..”

“ரெண்டு பேரும் கிடைக்கிறபோது கிடைக்கட்டும்ன்னு பேசாமலிருக்கீங்களா..?”

“….”

“இல்லேன்னு வருத்தம் இல்லியா..?”

“….”

“காலதாமதமாகுதேன்னு கவலைப்படலையா..?”

“….”

“எல்லாத்துக்கும் பேசாமலிருந்தால் என்ன அர்த்தம்…?”

“என்ன பண்ணனும் ரகு..?”

“வாங்க ரெண்டு பேரும் டாக்டர்கிட்ட போகலாம். மருத்துவ பரிசோதனை செய்து அதற்கான ஏற்பாட்டைச் செய்யலாம்.”

“மொதல்ல நான் பண்ணிக்கிறேன்..!”

“ரெண்டு பேரும் போனாத்தான் நல்லது..”

“அது இல்லே.. எனக்கு குறைன்னா…அவளுக்குத் தெரியாமலேயே நான் சிகிச்சை எடுத்து சரி படுத்திகிட்டா நல்லதுன்னு தோணுது…”

“புரியல…?!”

“பொண்டாட்டி முன்னால நாம கூசி குனியத் தேவை இல்லே…”

“இளக்காரமா நினைப்பாள், பார்ப்பாள் யோசனையா..?”

“ம்ம்ம்…”

“சரி அப்படியே செய்யலாம். இன்னைக்கே போகலாம்..”

“சரி அண்ணே..!”

அன்று மாலையே.. காரைக்கால் வந்து.. அதற்கான மருத்துவரைப் பார்த்தார்கள்.

அவர் டெஸ்ட் எடுத்துக் கொண்டு…

மறுநாள்…குறை இல்லை சொல்லிவிட்டார்.

சேகர் முகத்தில் மகிழ்ச்சி.

‘தம்பியிடம் குறை இல்லை. சிந்தாமணியிடம் இருக்கிறது. அவளை நாளைக்கு அழைத்துக்கொண்டு காட்டி….’

யோசனையுடன் ஆற்றங்கரை படித்துறைக்கு வந்தான்.

கொஞ்சம் தள்ளி அரச மரத்தடியில் அமர்ந்தான். காற்று சுகானுபவமாக வீசியது.

தலையில் புல் கட்டுடன் வெண்ணிலா வந்தாள்.

அவளுக்கு ரகுநாதனைக் கண்டதும் பொலிவு.

“யோவ் பெரிசு! என்ன ஆள் எதிர்ல வந்தும் அசங்காம உட்கார்ந்திருக்கே..?” கேட்டாள்.

ஆள் வலிய வம்புக்கு இழுக்கிறாள்! – புரிந்தது.

“ஏன் என்ன செய்யணும்..?” பார்த்தான்.

“ம்ம்…மகாராணி வந்தா எழுந்து நிக்கனும்.”

“யார் மகாராணி..?”

“நான்தான்..!”

எழுந்தான்.

“சரி.சரி. உன் மரியாதையை ஏத்துக்கிட்டேன். உட்காரு..” சொன்னாள்.

அமர்ந்தான்.

“எதுக்குத் தனியா உட்கார்ந்திருக்கே.?”

“சும்மாதான்!”

“நீ சும்மா உட்கார்ந்தாலும், சுமந்துக்கிட்டு உட்கார்ந்தாலும் ரொம்ப நேரம் இந்த மரத்தடியில இருக்காதே..!”

“ஏன்..?”

“இந்த மரத்துல தூக்கு மாட்டி செத்துப் போன காவேரி புடிச்சுப்பா..!”

“அது யாரு காவேரி..?”

“உன் வீட்டுல வேலை செய்த கன்னிப் பொண்ணு.”

“அது எப்ப..?”

“மூணு வருசத்துக்கு முன்னாடி..”

”ஏன்..?”

“வயித்துப் புள்ளைத் தாச்சியாம்.மூணு நாலு மாச கருவாம். கலைக்க முடியாம…உசுரைப் போக்கிக்கிட்டா முண்ட..சுருக்கால வந்து சேரு.. ஊர்ல அது கொலைன்னும் பேசிக்கிட்டாங்க. ஆனா உண்மை எது தெரியல” சொல்லிவிட்டு நடையைக் காட்டினாள்.

எதிர்பாராத குண்டு. அதிர்ச்சிகரமான விசயம்! இவனுக்குள் திடீரென பெரும் அலை அடித்து நின்றது.

கொலையோ, தற்கொலையோ…! ஒரு உயிர் போயிருக்கிறது. அதுவும் தன் வீட்டில் வேலை செய்த பெண். கன்னி.! வயிற்றுப் பிள்ளைத்தாச்சி!

சமைக்க அமர்த்தி இருக்கலாம். அப்பாவா..? சேகரா..? இல்லை எவனோ ஒருவனா..?! ரகுநாதனுக்கு விசயம் நூல் பிடித்துக்கொண்டு மூளைக்குள் பரவியது.

தம்பி நல்ல பிள்ளை. அப்பழுக்கில்லாத தங்கம். செய்திருக்க முடியுமா..? இல்லை… பூவுடன் இருக்கும் நாரும் மணக்கும் என்பது போல… தற்சமயம் அப்பன் புத்தி இவனுக்கு வந்து விட்டதா..? கூடவே இருப்பதால் தொற்றிக் கொண்டுவிட்டதா..?

இதனால்தான்….’பையன் கெட்டு விட்டான். இனியும் விட்டால் அதிகம் கெடுவான்!’ என்று அவசர அவசரமாக சிந்தாமணியைப் பிடித்து முடித்தார்..?!

சிந்தாமணியை முடிக்க இது மட்டும் காரணமாய் இருக்க முடியாது. இவர் தகுதிக்குப் பெண் தேடினால்… பெண் கொடுக்க மாட்டார்கள் என்பதால் ஏழைப் பெண்ணைப் பார்த்து முடித்தார்?

இல்லை அப்பாவேதானா..?

இவ்வளவு பெரிய விசயம் வீட்டில் நடந்திருக்கிறது. தனக்குத் தெரிவிக்க வில்லை. இப்படி ஒருத்தி சமைக்கிறாள். அவள் இப்படி ஒரு முடிவெடுத்து தற்கொலை செய்து கொண்டாள் என்று ஒரு வரி செய்தி இல்லை. எல்லாம் எழுதத் தெரிந்தவர்களுக்கு இதை மட்டும் தெரிவிக்காத காரணம்..? அப்பன் பிள்ளை இருவருமே திருடர்கள். எவருமே தங்கள் கடிதங்களில் தெரிவிக்க வில்லை.

குற்றம் இருப்பதால்தானே மறைப்பு! – நினைக்க நினைக்க… ரகுநாதனுக்குத் தலை சுற்றியது..

யாரைக் கேட்டால் உண்மை தெரியும்..? இந்த ஊரில் யாரைத் தெரியும்..? என்று நினைக்கும்போது… செம்பட்டையன் இவன் கண்ணில் வந்தான்.

உடன் எழுந்தான்.

கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல அவனே இவனைத் தேடி வந்தான்.

“வீட்டுக்குப் போனேன். இல்லே. வழியில வெண்ணிலா நீ இங்கே இருக்கிறதா சொன்னாள் வந்தேன் ” சொன்னான்.

சிறிது நேர பேச்சுக்குப் பின்…

ரகுநாதன் வெண்ணிலா சொன்ன விசயத்தை கேட்டான்.

“கொலை, தற்கொலைன்னு பேச்சு பலவாறா இருந்தாலும்… பொணம் எடுக்கிற செலவு முழுக்க உன் அப்பாதான் செய்தார். அதை வச்சி… ஊர்.. அப்பன் தொடுப்பு, புள்ள தொடுப்புன்னு பேசிக்கிட்டேத் தவிர..உண்மை நிலவரம் யாருக்கும் தெரியாது. அதெல்லாம் பழசு. விடு.” சொன்னான்.

எப்படி விடமுடியும்..?

அத்தியாயம் – 12

ரகுநாதன் வந்தததிலிருந்து தணிகாசலத்திற்குத் தலைவலி! தர்மசங்கடம்! நினைத்துப் பார்க்கவே.. வெட்கம், வேதனை!

வந்ததும் வராததுமாய் பெற்றப் பிள்ளையிடம் இப்படி இசகுபிசகாய் மாட்டிக் கொண்டோமே! என்கிற குத்தல், குடைச்சல், குமைச்சல்.

ஊர் ஒப்புக்காக வர வேண்டும், வர வேண்டும் என்று தவமிருப்பது போல் நடித்து… தொலைந்தவன் தொலைந்தவனாக இருக்கட்டும் வரவேண்டாம்! என்று நினைத்தால்… பாவி மகன் வந்து தொலைந்து விட்டான்!

எதற்கு வந்தான்..? தம்பி மேல் உள்ள பாசமா…? தன்னை இப்படி தர்மசங்கடத்தில் ஆழ்த்த வேண்டும் எண்ணமா..? ஏதோ தவறு நடக்கிறது என்று உள்மனம் சொல்ல ஓடி வந்து விட்டானா..?

சேகர் சேதி சொல்லி குதித்து விட்டானா..? சேகருக்கு விசயம் தெரியுமா. தெரிந்திருந்தால் சும்மா இருப்பானா..?

சேதி தெரிந்து எந்த பிள்ளை இல்லை எவன் சூடு, சுரணை இல்லாமல் சொங்கியாக இருப்பான்..? நிச்சயமாக இருக்க முடியாது.

சேதி கேள்வி பட்டதுமே கலவரம் வெடிக்கும். இல்லை பொறுத்திருந்து கையும் மெய்யுமாகப் மெய்யுமாகப் பிடித்து கண்டந்துண்டமாக வெட்டி இருப்பான் இருவரையுமே கொன்றிருப்பான்.

மனைவியைத் தொட்டவனை எவன் விட்டு வைப்பான்..?

ஒன்றும் நடக்கவில்லை. சின்ன புகை கிளம்பவில்லை. அதனால் தெரியாது! தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

“தம்பி இப்படியடா!” என்று ரகுநாதனும் தம்பியிடம் பார்த்ததைச் சொல்லி இருக்க முடியாது.

அப்படி அவன் சொல்லி இருந்தால்…. அண்ணன் வந்ததில் அவனுக்கு அப்போதே யானை பலம் வந்திருக்கும். உடன் களேபரம் நடந்திருக்கும். நால்வரில் யாருக்கோ.. குத்து, வெட்டு, கொலை நடந்திருக்கும்.

ரகுநாதன்… தான் சொன்ன எலிக் கதையை நம்பி விட்டானா? சந்தேகம் தான்! இருக்க வாய்ப்பில்லை. சூடுபட்டவன் எளிதில் நம்பி இருக்க முடியாது. நம்பியதாகவும் தெரியவில்லை.

அது சரி! கண்ணால் கண்டும் ஏன் இன்னும் கிணற்றில் விழுந்த கல்லாக இருக்கிறான் ரகுநாதன்? எப்போதும் வெடிக்கும் குணம். தட்டிக் கேட்கும் சுபாவம். மாறிவிட்டானா..? இல்லை அடங்கி விட்டானா..? எதிர்க்கப் பயந்து தொய்ந்து விட்டானா..? ஆள் மாறி விட்டானா.. ராணுவ வேலை கசக்கிப் பிழிந்து விட்டார்களா..?

திட்டமிடுகின்றானா..? வேகம் அடங்கி விவேகம் அதிகமாகிவிட்டதா..? – இப்படி பலதும் நினைத்த நினைத்து…. பதுங்கும் சூழல்..? என்னவொரு வாழ்க்கை! தணிகாசலத்திற்கு நினைக்க நினைக்க வேதனையாக இருந்தது.

புலியாக இருந்த தன்னை இப்படி பூனையாகப் பதுங்க வைத்து விட்டானே சண்டாளன்! – நினைக்கவே வெறுப்பு வந்தது.

ஆளை பார்த்தாலே பயப்படும்படிதான் இருக்கிறான். ராணுவ உடல். கை வாட்ட சாட்டம் . ஓங்கி ஒரு அறை விட்டால் தாங்காது – நினைக்க அவருக்கு உடல் நடுங்கியது.

தனக்கே இப்படி என்றால் சிந்தாமணி…?

மிகவும் அரண்டிருக்கிறாள். தன்னைப் பார்த்தாலே அலையாக ஒதுங்குகிறாள். பார்க்கப் பயப்படுகிறாள்.

பெண் அவள் அப்படிதான் இருப்பாள். அப்படித்தான் இருக்க முடியும்! கொழுந்தனிடம் மாட்டினால் எந்தப் பெண்ணுக்குத்தான் பயம் வராமல் போகும்..? தொடை நடுங்காமல் இருக்கும்…?

மூன்று மாதங்களில் ஒரு மாதம் ஓடி விட்டது. இன்னும் இரண்டு மாதங்கள். முழுசாய் அறுபது நாட்கள். இத்தனை நாட்கள் சிந்தாமணியை எப்படி தொடாமலிருப்பது..? தொடாமலிருக்க முடியுமா..? கஷ்டம்! அவளைத் தொட்ட நாட்களிலிருந்து இத்தனை நாட்கள் இப்படி இடைவெளி இல்லை.

எல்லாம் இந்த சதிகார மூத்த மகன் சதி! வரவு!

அவனுக்கு எப்போதும் அப்பனுக்குத் தொல்லை கொடுப்பதில்.. அலாதி பிரியம். ஆத்மதிருப்தி. அன்றும் கொடுத்தான். இன்றும் கொடுக்கிறான்.

விபரமான ஆள். எப்போதும் தன் மீதும், சிந்தாமணி மீதும் கண்ணாக இருக்கிறான். எந்த நேரத்தில் வருவது, எந்த நேரத்தில் செல்வது… என்றில்லாமல்… திடீர் திடீரென்று வருகிறான், செல்கிறான், மறைகிறான்… இருவரையும் நோட்டமிட்டுக் கொண்டே இருக்கிறான்.

நடந்த தவறு இனி நடக்கக் கூடாது என்கிற எண்ணம் போல. இல்லை கவனிப்பு, கண்கொத்தி பாம்பு கண்ணோட்டம்… மீண்டும் பிடிக்கத் திட்டம் போல!

இதனால்…

சிந்தாமணி தன்னைப் பார்க்கப் பயப்படுகிறான். பேசப் பயப்படுகிறாள். எந்த நேரம் என்ன நடக்கும், எங்கிருந்து பூகம்பம் வெடிக்கும் என்கிற பயத்தில் உழலுகிறாள். அடுப்படியே கதியாக இருக்கிறாள்.

போனவன் போய்த் தொலைந்தவனாக இருக்கக்கூடாதா..? வேண்டுதல் பலித்திருக்கக் கூடாதா. வந்ததுதான் வந்தான்…

“நான் இன்ன தேதியில் வருகிறேன். இத்தனை நாட்கள் தங்கி இருப்பேன்!” என்று கடிதம் எழுதி தெரிவித்திருந்தால் எல்லாவற்றிலும் எச்சரிக்கையாய் இருந்து… அதற்கு வேறு மாற்று ஏற்பாடு செய்திருக்கலாம். இப்போது அதற்கும் வழி இல்லாமல் முடக்கம்.

அருகில் வராத சிந்தாமணியிடம் என்ன சொல்ல, எப்படி பேச..?

ஒரு வேளை சேகருக்கு அரசால் புரசலாக தெரிந்து அண்ணனுக்கு ரகசியமாய்க் கடிதம் எழுதி வரவழைத்து விட்டான் போல. அண்ணனும் தம்பியும் சேர்ந்து கூட்டு சதி செய்கிறார்களா..?

எப்படித் தெரிந்திருக்கும்..?! சிந்தாமணி சாமார்த்தியசாலி. இதுவரை மூச்சு விட்டதில்லை. திருட்டுத்தனம் நடப்பதற்கான எந்த அறிகுறிகளையும் எந்த சமயத்திலும் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அன்றைக்கும் அப்படித்தான். எச்சரிக்கையாய் இருந்தும்… இவன் எதிர்பாராமல் வந்து தொலைந்து விட்டான். ரகுநாதன் சமயம் பார்த்து தாக்கப் போகின்றான், கேட்கப் போகின்றானா..?

உனக்கெல்லாம் பொண்டாட்டி, புள்ள, மருமக.. என்று காரித் துப்பப் போகின்றானா..? வீட்டை விட்டு துரத்தப் போகின்றானா..?

அந்த காலமா..!?

மிரட்டியவனை… “ஓடுடா!” என்று உதைத்து விரட்டியதற்கு..?!

இப்போது வளர்ந்த ஆள்.

அவன் ‘ஓடு!’ என்று கையைத் துக்கினாலே ஓடித்தானாக வேண்டும். மறுத்தால் உதை தப்பாது. உதைத்தால் தாங்க முடியாது.

ஐம்பது வயதுக்கு மேல் காசி, ராமேஸ்வரம் போகும் வயதில் வம்பே வேண்டாமென்று ஒதுங்கி இருந்தால் இந்தப் பிரச்சனைக்கே இடமில்லை. நாளும் நாளும் செத்தும் பிழைக்க வேண்டிய அவசியமில்லை. பெத்த பிள்ளைகளை பார்த்து பயப்பட வேண்டியதில்லை.

உடம்பு கேட்டதா..? ஆசை விட்டதா..? தின்ற ருசி.

பாதியில் விட்டுப் போய்விட்டாளே படுபாவி. அவள் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா..?

வெளியில் நடந்திருக்கும்! உள்ளே நடக்குமா..?

சண்டாளி!

இதிலிருந்து விடுபட வழி..?

அவன் வீட்டை விட்டு வேலைக்குச் செல்லும்வரை சிவனே என்று இருக்க வேண்டும். சிந்தாமணியைத் தொட்டிருக்கக் கூடாது. தொட்ட பாவம்.. இப்போது எதற்கும் வழி இல்லாத பரிதவிப்பு. தேவையா இது..?

இவனை அடக்க வேண்டும். அடக்க வழி..?

மூளையைக் கசக்கினார்!

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *