புரியாதது




(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அன்புள்ள டாக்டருக்கு
என் மனைவியின் உடல்விஷயம் புரியவே இல்லை என்று பல தடவை சொல்லியிருக்கிறீர்கள். அவள் மனத்தின் விஷயமும் புரியவில்லை என்று இப்போது சொல்லித் தான் ஆகவேண்டும்.

இரண்டு நாளுக்கு முன் ஒன்று நடந்தது. இவளைப் பெண் என்று நினைப்பதா, பேய் என்று நினைப்பதா புரியவில்லை. இவள் படித்துப் பட்டம் பெற்றதைப் பொய் என்று நினைப்பதா,மெய் என்று நினைப்பதா? அதுவும் புரியவில்லை. தற்காலப் படிப்பு மனிதர்களை நாகரிகப் படுத்தியதாக வேஷம் காட்டினாலும், உண்மையில் மக் களின் அறியாமையை அசைக்க வலிமையற்றது என்று நினைப்பதா? புரியவில்லை.
இவள் ஏன் என்னை மணந்தாள் என்பது புதிராகவே இருந்துவருகிறது. என் படிப்புக்காக இருக்க முடியாது. இவளும் என்னைப்போன்ற பட்டம் பெற்றவள் தானே? என் சொத்துக்காகவா? ஆனால் அது அவ்வளவு பெரிய விஷயமா என்ன? வேறு சொத்துக்காரன் இவள் கண் ணில் தட்டுப்படாமல் போய்விட்டானா என்ன?
அது போகட்டும்; வீட்டிற்கு வந்த பிறகும் இந்தப் புதிர் சிக்கலாகிக்கொண்டே வந்தது. அந்த விவரங்களை எல்லாம் இப்பொழுது வளர்த்திப் பயனென்ன? படித்தவள் உத்தியோகத்தைத் தேட மறுத்ததில் ஏனோ எனக்கு அதிக வியப்பு ஏற்படவில்லை. ஆனால் வியப்பு வேறொரு விஷயத்தில் ஏற்பட்டது.
நானாவது கொஞ்சம் பழம் பசலிப் பேர்வழி; சாஸ்திரத்தை நம்புகிறவன்: குழந்தை பிறக்காவிட்டால் நரகம் என்பதை ஒப்புக்கொள்ளக்கூடும். சாஸ்திரம் சொல்லும் தரகம் எப்படி இருக்குமோ தெரியாது. ஆனால் குழந்தை இல்லாத வீடு நிச்சயம் நரகந்தான். ஒரு நீலக் கண்ணா வீட்டை எதிரொலிக்கச் செய்யும் அழுகையா – என்ன உண்டு? இதற்காக நான் வருந்தினால் பொருத்தமாக இருக்கலாம். அல்லது எங்கள் குடும்பச் சொத்து அனந் தர வாரிசுக்குப் போகவாவது என்று நான் கவலைப்பட்டாலும் சரிதான்.
ஆனால் இவளோ படித்தவள்; சாஸ்திரக் கந்தலைக் கசக்கி எறிந்தவள். எங்களுக்குக் குழந்தை இல்லாததனால் இவளுக்கு உண்டான துயரம் சொல்லிமுடியாது எதை எல்லாம் இவள் நம்பமாட்டாள் என்று நினைத்தேனோ அதிலெல்லாம் ஈடுபட்டாள். என்னை ஈடுபடச் செய் தாள் . கந்தசஷ்டி, காசியாத்திரை, சேதுஸ்நானம், அன்ன தானம், அவ்வளவும் செய்துவிட்டோம். மாறுதல் இல்லை. இவ்வளவும் ஒரு வருஷத்திற்கு முன்பு வரையில்.
இந்த ஒரு வருஷமாக இவள் மாறிவிட்டாள். பரிகாரங்களில் நம்பிக்கை போய்விட்டது. உடலில் ஏதேதோ கோளாறுகள் ஏற்பட்டன. நீங்கள் ஒரு வருஷ காலமாகத்தான் எங்கள் வீட்டிற்கு வரும்படி ஏற்பட் டிருக்கிறதென்பதை நினைப்பு மூட்டிக்கொள்ளுங்கள். ஆனால் இவள் மனத்தின் விசித்திரத்தில் மட்டும் மாறு தலைக் காணோம். ஏதாவது எதிர்பாராத விதமாகவே இவள் மனம் வெளிப்பட்டுக்கொண்டு வருகிறது.
ஒரு வருஷத்திற்கு முன்பு நடந்த சம்பவத்தை நான் துவரையில் தங்களிடம் சொல்லியதில்லை. சின்ன விஷயம் என்று தள்ளிவிட்டேன்.
எங்கள் வீட்டு முற்றத்தைத்தான் உங்களுக்குத் தெரியுமே; சூரியனே வீட்டிற்குள் பதுங்குகிறானோ என்று நினைக்க இடம் கொடுக்கும் முற்றம். தென்னங்கீற்றுகளை வரவழைத்து, முக்கால் பங்குக்குமேல் முற்றத்தை அடைத்துவிட்டாள். ‘காற்று வராதே, வெளிச்சம் போய் விடுமே’ என்று சொல்லிப் பார்த்தேன். “மொட்டை மரத்திற்குக் காற்றும் வெளிச்சமும் இருந்தாலும் ஒன்று தான்; இல்லாவிட்டாலும் ஒன்றுதான்” என்றாள்.
பேச்சு என்னவோ குழந்தை இல்லாதவர் எல்லோருமே சொல்லக் கூடியதுதான். ஏக்கம் நிலைத்து வேரூன்றிய பிறகு மனக்கொடியில் வெடிக்கக்கூடிய கசந்த கனிதான். இருந்தாலும் இந்தச் செய்கை -? இன்பத்தை நாடி, அம் முயற்சியில் தோற்றவர்கள் தாமாகவே பிறகு துயரத்தை வலிய அணைத்துக் கொண்டாடவேண்டிய அவசியம் ஏற் படுகிறதோ என்னவோ! ஒளி எல்லாம் கண்ணைக் குத்து கிறதோ என்னவோ ! இப்படி ஏதோ சங்கடம் அடைந்து தான் அவள் முற்றத்தையும் இருட்டாக்க முயன்றிருக்க வேண்டும். ஆனால் இது எப்படி ஆறுதல் அளிக்கும் என்பது எனக்குப் புரியவில்லை.
இது நடந்த மறுநாள் நானும் அவளுமாகப் பங்களா வாசலில் உட்கார்ந்திருந்தோம். எத்தனையோ நூற்றுக் கணக்கான முறை அவள் சுற்றிவந்த அரசமரத்தின் நுனிக்கிளை எட்டாக்கையில் ஆடி அசைந்து கொண்டிருந்தது. பெரிய கொப்புளங்கள்போல் மேகங்கள் மிதந்து கொண்டிருந்தன. திடீரென்று ஒரு காற்று,ஓர் இடி, ஜோவென்று மழை பிடித்துக்கொண்டது. இவ்வளவு கனத்த மழை எங்கிருந்து முளைத்தது என்று ஆச்சரியப்பட்டுக்கொண் டிருந்தேன். இந்த வியப்பில் கண்முன் நடந்ததைக் கவனிக்கவில்லை.
சிறிது நேரத்திற்கெல்லாம் யாரோ தூக்கத்தில் எழுப் பியது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. திடுக்கிட்டுப் பார்த்தேன். பங்களா வாசலில் மோட்டார் வண்டி வந்து நிற்கும் முகப்பில் – ஒரு நாய் பள்ளம் பண்ணிக் கொண்டிருந்தது. அரை அடி ஆழத்திறகுமேல் தோண்டி யாகி விட்டது. இவ்வளவையும் என் மனைவி சும்மா பார்த்துக்கொண்டுதான் இருந்தாள். எனக்குக் கோபம் தாங்கவில்லை. “இதென்ன, பந்தல் கால் முகூர்த்தம் என்று பார்த்துக்கொண்டிருக்கிறாயா?” என்று கடிந்து கொண்டு கையை ஓங்கினேன்.
“நமக்கென்ன நத்தை ஜன்மமா, வீட்டை முதுகிலே தூக்கிக்கொண்டிருக்க? பள்ளத்தை மூடிவிட்டால் போகிறது. வாயில்லா ஜீவன்! மழைக்குச் சூடான இடத்தைத் தேடுகிறது. அதனிடத்தில் நம்முடைய பாத் தியத்தைக் கொண்டாடாவிட்டால் என்ன மோசம்?”
இப்படிப் பதில் சொல்லிவிட்டு வாசல் படிக்கட் டண்டை போய் நின்றாள்.
ஊத்தறியும் சக்தி நாய்க்கு வெகு அதிகமல்லவா? பள்ளம் பறிக்கும் வேலையை விட்டுப் படியேறி வந்தது.
மிகவும் அழகிய நாய் என்று சொல்வதற்கில்லை. கலப்படம். உடலுடன் மயிரெல்லாம் ஒட்டிக்கொண்டிருந்தது. பெண் நாய். விலாவின் பக்கத்தில் வயிறு கொஞ்சம் புடைத்தாற்போல் இருந்தது.
அவள் என்ன நினைத்துக்கொண்டாளோ தெரியவில்லை. உள்ளே போய் ஒரு சாக்கைக் கொண்டுவந்து சுவரோரமாகப் போட்டாள். நாய் உடலைச் சிலிர்த்து உதறிற்று. உடனே வாலைத் தணித்துக்கொண்டு, சாக்கில் போய்ப் படுத்துவிட்டது. இந்தக் காரியத்தை என்னால் சகிக்க முடியவில்லை.
அன்றைத் தினம் வந்த நாய்தான்; இரண்டு நாள் முன் வரையில் – அதாவது சுத்தமாக ஒரு வருஷம் – இவள் அதை வளர்த்தாள். நாயினிடம் காட்டிய அன்பையும் செய்த பணிவிடைகளையும் விவரிக்க இடம் போதாது. சொந்தப் பெண் இருந்தால் எவ்வளவு செய்வாளோ அந்த அளவுக்குக் குறைவில்லை.
இவ்வளவு அன்பு காட்டியவள் முந்தாநாள் ஒரு காரியம் செய்தாள். விளங்காத பேரேட்டில் இது மற்றோர் பதிவு.
பொழுதுசாயும் வேளை: பங்களா முகப்பில் நின்று கொண்டிருந்தேன். தெருப்புறமாகப் பார்த்துக்கொண்டு இவள் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள்.
இந்த நாய் நாற்காலியை நோக்கி வந்துகொண்டிருந்தது.
என்னைக் கண்டாலே அதற்குப் பிடிக்காது. ஆகையால் என்னைப் பார்த்தவுடன் முதல் யோசனையை விட்டு விட்டுக் காம்பவுண்டு வாசலண்டை போய் நட்ட நடுவில் நின்றது. யாரையோ எதிர்பார்ப்பதுபோல் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்தது.
அப்பொழுது லேசான தூற்றல். தூற்றலையும் நாயை யும் சேர்ந்தாற்போல் கண்டதும் நாய் வந்த முதல் தினத்தின் நினைவு வந்தது. மறு நொடியில் ஓர் உண்மை புலப் பட்டது.
நாய் வந்தபொழுது அதன் கழுத்தில் பட்டம் ஒன்றும் இல்லை. எஜமானி வளர்க்க ஆரம்பித்த பிறகு அதன் கழுத்தில் பட்டம் ஏறிற்று. ஆனால் இன்றோ? பட்டத்தைக் காணோம். பட்டம் என்னவாயிற்று? தானாக விழுந்திருக்க முடியாது? பின் யார் கழற்றியிருப்பார்கள்? எனக்குப் புரியவில்லை.
“கழுத்துப் பட்டம் எங்கே?” என்று கேட்டேன்.
“விழுந்திருக்கும்” என்று அலட்சியமாகப் பதில் சொன்னாள். சொன்ன மாதிரியிலிருந்து அது பொய் யென்று பட்டது. அடுத்த சில நிமிஷத்தில் பொய்தான் என்பது உறுதியாகிவிட்டது.
வெளிவாசலின் நடுவில் நாய் நின்றுகொண்டிருந்த தல்லவா? ஒரு மூங்கில் குச்சியும் அதன் நுனியில் கட்டியிருந்த கம்பி வளையமும் வெகு திருட்டுத்தனமாக நாயின் முகத்தண்டை வந்துகொண்டிருந்தன. ஆள் மட்டும் தெரியவில்லை. எனக்கு என்னவோ தோன்றிற்று; மனைவியின் பக்கம் திரும்பினேன். அவளும் வாசல் பக்கத்தைத் தான் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால் அவள் முகத்தில் எவ்விதக் கலவரமும் இல்லை: தான் வளர்த்த நாய் என்ற பரிவைக் காணோம்.
நான் மறுபடி வாசற்பக்கம் திரும்பிப் பார்ப்பதற்குள் அந்த வளையம் நாயின் கழுத்தில் புகுந்து சுருக்காகிவிட்டது. நாயொழிப்பு இயக்கத்தின் தொண்டன் – தோட்டி மாரி -நாயைக் கட்ட முயன்றுகொண்டிருந்தான்.
எனக்கு என்னவோ நாயினிடத்தில் அன்பொன்றும் இல்லை. இருந்தாலும் அந்தக் காட்சியைத் தாங்க முடியவில்லை. ”டேய்!” என்று சத்தம் போட்டுக்கொண்டு கிளம்பினேன்.
“நீங்கள் கத்துவானேன்? அவனவன் அவனவன் வேலையைச் செய்கிறான்” என்று திடுக்கிடும்படியாக என் மனைவி குறுக்கிட்டாள்.
“உன் நாய் ஆயிற்றே! ஒட்டன் இழுத்துக்கொண்டு போகிறானே !” என்றேன்.
“என் நாய்தானே? உங்களுக்கு என்ன?” என்று வெடுக்கென்று கேட்டாள். எனக்கு மூச்சு முட்டிற்று.
“இத்தனை நாளாக இவ்வளவு அருமையாக வளர்த்திருக்க வேண்டியதில்லையே!” என்றேன்.
“மொட்டை மரத்தில் ஒன்று போதாதா?” என்றாள். இவள்தான் நாயின் கழுத்தில் இருந்த பட்டத்தைக் கழற்றியிருக்கிறாள். சந்தேகம் என்ன?
இவளுடைய குரூரத் தன்மை எனக்குப் புரியவில்லை. உங்களுக்குப் புரிகிறதா?
அன்புள்ள…
– மாங்காய்த் தலை (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: டிசம்பர் 1961, கலைமகள் காரியாலயம், சென்னை.
![]() |
வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க... |