புரிதலும் அறிதலும் தவறும்போது




இளைஞன் நல்ல உடையணிந்து நாகரிகமாய் காணப்பட்டவன் அந்த அபார்ட்மெண்டில் இரண்டாம் மாடியில் இருந்த ஒரு பிளாட் (வீட்டு) கதவை தட்டுகிறான்.
ஐந்து நிமிட அமைதி கதவு திறக்கிறது ஐம்பது வயதுக்கு மேல் மதிக்கத்தகுந்த ஒருவர் நின்று கொண்டிருக்கிறார்.
எக்ஸ்கியூஸ் மீ சார் மிஸ்டர் புருசோத்தமன்…

யெஸ்..நான்தான்.
கொஞ்சம் பேசணும், உள்ளே வரலாமா?
வித் பிளஷர், தாரளாமா உள்ளே வரலாம்
சாரி சார் இந்த நேரத்துல உங்களை டிஸ்ட்ரப் பண்ணிட்டேன்
நோ..நோ..நான் சும்மாத்தான் உட்கார்ந்திருந்தேன், வீட்டுல வெளியில போயிருக்காங்க சொல்லுங்க என்ன விஷய்ம்
சார் முதல்ல என்னை பத்தி சொல்லிக்கணூம்னு விரும்பறேன்
நைஸ்…. நீங்க விருப்ப்பட்டா தாராளமா சொல்லலாம்
சார் நான் பட்டதாரி, ஒரு நிறுவனத்துல நல்ல வேலையில இருக்கறேன்
வெரி குட்..இந்த காலத்துல நல்ல வேலை பார்க்கறது மகிழ்ச்சியான விஷயம்தானே.!
எங்க வீட்டுல இரண்டு பசங்க, என்னோட அண்ணாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சு, அவர் ஆந்திராவுல ஸ்டேட் பாங்க்ல மேனேஜரா இருக்காரு. அப்பா அரசு உத்தியோகத்துல இருந்து ரிட்டையர்டு ஆகி அம்மாவோட காஞ்சீபுரத்துல சொந்த வீட்டுல இருக்கறாங்க.
ரொம்ப நல்லது. நல்லா படிச்ச குடும்பமா இருக்கறீங்க..
ஆமாங்க சார்..நான்…நான்..
சும்மா சொல்லுங்க, இவ்வளவு விவரமா பேசறீங்க, அப்புறம் என்ன தயக்கம்
இல்லை எனக்கு பொண்ணு பார்த்துகிட்டிருக்காங்க..
அடேடே சந்தோசமான விஷயம்தானே, அதை போய் இவ்வளவு தயக்கமா சொல்றீங்க
சார் நான் உண்மையை சொல்லிடறேன், எனக்கு இந்த காதல், பொண்ணை கூட்டிகிட்டு அங்க இங்க சுத்தறது இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை.
இதுதான் வேணும், இன்னைக்கு இருக்கற ‘யங்க்ஸ்டர்கிட்டே’ இருக்க வேண்டிய விஷய்ம். குட்..மேலே சொல்லுங்க..
நான் வேலை செய்யற இடத்துல எங்க டிபார்ட்மெண்ட்ல வேலை செய்யற உமா அவங்களை பார்த்ததுல இருந்து அவங்களை கல்யாணம் பண்ணிகிட்டா நல்லா இருக்கும்னு மனசுக்கு பட்டுச்சு,
நான் என்ன சொல்ல வர்றேன்னா…….
சார் கொஞ்சம் அமைதியா இருங்க, என் மனசுல இருக்கறதை முதல்ல உங்க கிட்டே சொல்லிடறேன், அதுக்கப்புறம் இதை ஏத்துக்கறதும் வேண்டாமுன்னு சொல்றதும் உங்க இஷ்டம்.
அவங்க கிட்டே பேசி பழகி அதுக்கப்புறம் அவங்க பேரண்ட்ஸ்கிட்டே பர்மிசன் கேட்டு இதெல்லாம் எனக்கு ஒத்து வராதுன்னு நினைச்சேன் சார், நேரடியா அவங்க பேரண்ட்ஸ்கிட்டே பேசிடணும்னு .முடிவு பண்ணிட்டேன். அவங்க பர்சனல் பைல்ல இருக்கற முகவரியை என் நண்பன் மூலமா கிடைச்சு, இப்ப உங்க கிட்டே வந்திருக்கேன். உங்க பொண்ணு உமாவை கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன். உங்களுக்கு விருப்பமுன்னா எங்க அப்பா அம்மவோட வந்து பொண்ணு கேட்கறேன்..
ஐந்து நிமிடம் அப்படியே அமைதியாக இருந்தனர்
எனக்கு உங்களோட ‘அப்ரோச்’ ரொம்ப புடிச்சிருக்கு, உங்களை மாதிரி இருக்கறவங்களுக்கு தாராளமா பொண்ணை கொடுக்கலாம்
ரொம்ப தேங்க்ஸ் சார்…
இருங்க இருங்க..அவசரப்படாதீங்க. ஆனா, எனக்கு கட்டி கொடுக்கறமாதிரி ஒரு பொண்ணூ இல்லையேன்னு இப்ப வருத்தமாய் இருக்கு
சார்….இந்த வீட்டு நம்பர் 135 “ரோசா அபார்ட்மெண்ட்தானே”..உங்க பேரு புருசோத்தமன்தானே..!
என் பேரு புருசோத்தமன்தான், ஆனா இது ரோசா அபார்ட்மெண்ட் இல்லை, “ரோஸ் அபார்ட்மெண்ட், நீங்க கேட்கற அபார்ட்மெண்ட் இன்னும் கொஞ்ச தூரம் தள்ளி இருக்கும்னு நினைக்கிறேன்.
ஐயோ..சாரி சாரி சார்..
இட்ஸ் ஓகே..பரவாயில்லை..உங்களால எனக்கு நல்லா பொழுது போச்சு, அதுக்குத்தான் நான் உங்களுக்கு ‘தேங்க்ஸ்’ சொல்லணும்..
வெளியே போனவன் வாய்விட்டு முணுமுணுத்ததை அவர் கேட்க வாய்ப்பில்லை
“இவனுக்கு பொழுது போகறதுக்குன்னே நான் வந்து என் கதைய சொல்லிகிட்டிருந்திருக்கேன்”
![]() |
பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க... |