புயலும் படகும்
கதையாசிரியர்: கா.ஸ்ரீ.ஸ்ரீ.
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: December 22, 2025
பார்வையிட்டோர்: 86
(1943ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5
4. அமுதமா நஞ்சா?

ராமபட்டர் திரும்பிவரப் பதினொரு மணியாவது ஆகும் என்று அந்த அம்மாள் சொன்னாள். நான் வேண்டாம் என்று தடுத்துங்கூட, அவள் தானாகவே எழுந்து வந்து எனக்குப் படுக்கை போட்டு, “வீணாகக் கண் விழிக்காதீர்கள்” என்று மிகவும் அன்போடு கூறினாள். அவளைச் சந்தோஷப்படுத்துவதற்காகச் சிறிது நேரம் படுக்கையில் படுத்திருந்தேன்; ஆனால் தூக்கம் வரவேயில்லை.
‘எல்லாப் பாசாங்குகளும் செய்யலாம்; பணம் இருப்பதாக மட்டும் பாசாங்கு செய்ய முடியாது’ என்று ஜனங்கள் சொல்வது உண்டு. அது எனக்கு வெறும் பொய்யென்று பட்டது.
மனிதன் ஒருவேளை பணம் இருப்பதாகப் பாசாங்கு செய்ய முடியும்; அன்பு இருப்பதாகப் பாசாங்கு செய்ய முடியும்; ஆனால் தூங்குவதாகப் பாசாங்கு செய்வதோ? முடியவே முடியாது! தூக்கம் வராதவன் நீரிலிருந்து வெளியே எடுத்துப் போட்ட மீன் போலத் தவித்துக் கொண்டிருப்பான்.
நான் ஓயாமல் இந்தப் புறமும் அந்தப் புறமுமாகப் புரண்டு கொண்டிருந்தேன். அந்த அம்மாள் அதைக் கவனித்திருக்க வேண்டும். மெதுவாகச் சிரித்தவாறே, “அயலிடத்தில் மனிதர்களுக்குச் சீக்கிரம் தூக்கம் வராது” என்றாள்.
நான் சிரித்து அவளுடைய பேச்சை வலுப்படுத்தினேன்; படுக்கையிலிருந்து எழுந்து வாசலுக்குப் போனேன். சற்று நேரம் குறுக்கும் நெடுக்குமாக நடந்தேன். மனம் சிறிது அமைதியுற்றது. சுற்றுப்புறத்து அமைதியான இயற்கையின் நிழல் என் மனத்தின் மீதும் படிந்திருந்தது. அமைதி-எவ்வளவு அமைதியாக இருந்தது உலகம் முற்றும்! மரங்களில் இலைகள் அசையவில்லை; பறவைகளின் படபடப்பொலி கேட்கவில்லை; வானத்தில் இருந்த நட்சத்திரங்கள்கூட, கர்ப்பக் கிருகத்து வாடா விளக்குப் போலக் கசிவோடும் ஆழ்ந்தனவாகவும் புலப்பட்டன.
பட்டருடைய வீடு ஊர்க்கோடியில் தள்ளியிருந்தது. வாசலில் உலாவியபோது, சற்றுத் தொலைவில் ஊரிலிருந்த நாலைந்து விளக்குகள் மட்டும் மின்மினிகள்போல் மினுமினுப் யது தெரிந்தது. இடையே ஏதாவது ஒரு நாய் குரைப்பது காதில் விழும்; ‘நாம் ஒரு குக்கிராமத்தில் இருக்கிறோம்’ என்ற நினைப்புத் தோன்றும். அந்தக் குரைப்பும் இல்லையென்றால், ‘பழங்காலத்து ரிஷி ஒருவரின் ஆசிரமத்தில் இருக்கிறோம்’ என்று தோற்றும்படியாகச் சுற்றுப்புறம் முழுவதும் அவ்வளவு அமைதியாகவும் இதமாகவும் கம்பீரமாகவும் இருந்தது.
அமைதித் தெய்வத்தை வழிபடும் இயற்கையின் அந்த அழகிய பூஜைக் காட்சியில் என் மனமும் ஆழ்ந்தது; ஆனால் அது கண நேரந்தான்.
உடனே சிந்தனை தொடங்கியது: ‘மனிதனுடைய சுகதுக் கங்களைப்பற்றி இயற்கைக்கு ஒன்றுமே தெரியாது; ஆகவே அது அவற்றைப்பற்றி ஏன் கவலைப்படப்போகிறது? வானத்தி லுள்ள இந்தத் தாரகைகள், இராமன் துறந்த சீதை ஒரு பிச்சைக்காரிபோல் காட்டுப் பாறைமீது உட்கார்ந்திருந்த தைப் பார்த்திருக்கும்; ஜான்ஸி லக்ஷ்மிபாயினுடைய பெருந் தியாகத்தையும் கண்ணைத் திறந்துகொண்டு பார்த்திருக்கும். அத்தகைய அற்புதமான சந்தர்ப்பங்களிலும் இவை இப்படித்தான் சிரித்துக்கொண்டு இருந்திருக்கும்! அப்படிப் பார்க்கப்போனால் தாரகைகளுக்கும் கல்லுக்கும் வேறுபாடு ஏது?
‘நோயாளியின் தலைமாட்டில் வைத்திருக்கும் விளக்கை, அவனுடைய நோயின் ஏற்றமும் இறக்கமும் எந்த அளவிலாவது பாதிக்குமா? இயற்கை அந்த விளக்குப்போன்றது. அது தன் வேலைகளைக் குருட்டாம் போக்காகச் செய்துகொண்டிருக் கும். இந்தக் குருட்டு இயற்கையைப் பின்பற்றிச் சென்று பள்ளத்தில் விழாமல் இருக்கவேண்டுமானால், மனிதன்-‘
பிரபாகரன் பட்டருக்கு எழுதிய கடிதத்து வாக்கியங்கள் ஒவ்வொன்றாக என் நினைவுக்கு வந்தன:
“நான் தங்களுக்கும் அம்மாவுக்கும் பெரும்பிழை செய்து விட்டேன். நீங்கள் எனக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறீர்கள்…”
“நான் ஒரு பணக்காரப் பெண்ணைக் காதலித்தேன். இரண்டு வருஷகாலம் அவள் என்னை விளையாட வைத்தாள். இன்று-
“இன்று எங்காவது சென்று உயிர்விடலாம் போல் எனக்குத் தோற்றுகிறது.”
இந்தக் கடிதத்தைப் படித்ததும் பெற்றோர் மனம் என்ன பாடு பட்டிருக்குமோ, அந்தச் சித்திரம் என் கண்முன்பு உரு வெடுத்தது. வெகு தொலைவிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து’ ஒரு மாஞ்செடிக்குக் கொட்டி, அது ‘விருவிரெ’ன்று செழித்து’ வளர்ந்து மரமாகி நிறையப் பூத்து, அதன் சுகந்தம் எங்கும். பரவி, மரத்தில் பச்சையான மாம்பிஞ்சுகள் தென்படும்போது,. திடீரென்று ஒரு நாள் மேகமில்லா வானத்திலிருந்து அந்த மரத்தின்மீது இடி விழுந்தால் எப்படி இருக்கும்! மரம் இருந்த. அடையாளம் மட்டும் மிஞ்சியிருக்கும்; இலைகளும் காய்களும் மாயமாக மறையும்,
பிரபாகரனை விளையாட வைத்த அந்தப் பணக்காரப் பெண், நிரபராதிகளான இரண்டு கிழ ஜீவன்களின் வாழ்க் கையிலுள்ள ஆனந்தத்தைத் தான் பாழாக்குவதைப்பற்றி மேலாகக்கூட எண்ணியிருக்க மாட்டாள். ஆனால், அதனால் அவளுக்கு என்ன?
இயற்கைக்கு விளையாட்டு; மனிதனுக்கோ உயிர் போகிறது!
இன்று பிரபாகரன் இங்கே இருந்திருந்தால், என் வாழ்க். கையில் கருணா முன்பு வந்து மறைந்திருந்துங்கூட அருணாவின் சகவாசத்தில் நான் வெகு ஆனந்தமாக இருப்பதை அவனுக்கு. உறுத்திச் சொல்லியிருக்க முடியும்.
என் அந்தரங்க உள்ளத்திலிருந்து யாரோ, “தேவதத்தா, நீ ஆனந்தமாக இருக்கிறாயா? முழு ஆஸந்தத்துடன் இருக்கிறாயா?” என்று கேட்டனர்.
அந்தக் கேள்விக்குப் பதில்-
வீட்டுப் பக்கமாக ஏதோ வெளிச்சம் நெருங்கிக்கொண்டு வந்தது. உற்றுப் பார்த்தேன்: பட்டர்தாம்! இடக் கையில் ராந்தல் விளக்கு; வலக் கையில் தடி; இடுக்கில் சிறு மூட்டை..
மகனுக்கு இன்பம் தருவதற்காக இந்த ஜீவன் இப்படி இராக் காலங்களிலும் அவவேளைகளிலும் வேலை செய்து கொண்டு, இருட்டில் தனியே போய் வந்துகொண்டிருந்திருக்கிறது.
ஆனால் அதற்குப் பயன்?
பட்டர் வாசலருகில் வந்துவிட்டதனால் என் சிந்தனைச் சக்கரம் நின்றது.
“இன்னமுமா விழித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?” என்று அவர் சிரித்துக்கொண்டே என்னைக் கேட்டார்.
“விடிகாலையிலேயே நான் திரும்பிப் போக வேண்டுமே; ஆகவே நீங்கள் திரும்பி வந்ததும் சற்று நேரம் உங்களோடு பேசியிருந்துவிட்டு, அப்புறம் தூங்கலாமென்று நினைத்தேன். “
காலலம்பிவிட்டு, பட்டர் திண்ணையில் உட்கார்ந்தார். செல்லப்பெட்டியிலிருந்து பாதி பழுத்துப்போன ஒரு வெற் றிலையை எடுத்து, மிகவும் இலேசாக அதன் நரம்புகளைக். கிழித்தார்; கொஞ்சம் சுண்ணாம்பு தடவி, ஒரு சிட்டிகைப் புகை. யிலையும் சேர்த்து, அந்த வெற்றிலையை வாயில் போட்டுக். கொண்டார்.
அந்த வெற்றிலையும் எங்கள் உரையாடலும் நிமிஷப் பொழுதில் நிறம் பிடித்தன.
பட்டருடைய பேச்சு மிகவும் இனிமையாக இருந்தது. தம்முடைய விதவிதமான கிராமத்து அநுபவங்களை அவர் லயிப்போடு பேசினார். ஹாஸ்ய ரஸத்திலிருந்து கருணரஸம் வரையில் எல்லா ரஸங்களின் சுவையையும் அவர் ஒரு மணிப் ‘பொழுதில் எனக்கு ஊட்டினார். அவர் பேச்சைக் கேட்டபோது எனக்குத் தோன்றிற்று: ‘உண்மையான பசி இருந்தால் மனி தன் ஈரச் சோற்றையும் வற்றற் குழம்பையும் சப்புக்கொட்டிக் ‘கொண்டு சாப்பிடுவான்; ஆனால் நிறைந்த வயிற்றில் ஹல்வா வும் பூரியுங்கூட அவனுக்கு வெறுப்பாக இருக்கும். வாழ்க்கை விஷயமும் அப்படித்தான். வாழ்வு சுகமாக இருக்க வேண்டுமானால் மனிதனுக்கு வாழவேண்டும் என்ற பசி இருக்கவேண்டும்-அது கடும்பசியாக இருக்க வேண்டும். உலகத்தில், உடலைப் போலவே மனத்துக்கும் அக்கினி மந்தப்படுவது உண்டு; அதனால்தான் மனிதனின் துன்பங்கள் வளருகின்றன.’
பட்டர் திடீரென்று பேச்சை நிறுத்தினார். ‘பாவம்! களைத்துப் போயிருப்பார்; காலையிலிருந்து இரவு பன்னிரண்டு மணி வரையில் ஓயாமல் உழைக்கும் இந்தக் கிழ உடல் இந்தச் சமயத்தில் ஓய்வை வேண்டுவது சரியே’ என்று நினைத்து, மெதுவாக அங்கிருந்து எழுந்தேன்.
அவர் மட்டும் எழுந்திருக்கவில்லை. எச்சிலை விழுங்கிக் கொண்டு, வாசலிலிருந்த துளசிச்செடியைப் பார்த்தவண்ணம், “தேவதத்தா!” என்று கூப்பிட்டார். அவர் குரல் கம்மியிருந்தது. நான் திகைத்தேன்.
அவர் கழுத்தைத் தூக்கி என்னைப் பார்த்தார். அவர் கண்ணில் கருணை அவதரித்திருந்தது. மீண்டும் எச்சிலை விழுங்கிக்கொண்டே, “உன்னிடம் ஒரு பிச்சை கேட்கிறேன்” என்றார்.
என் தந்தையின் பால்ய நண்பர்-சாத்துவிக ஆன்மா- அப்படிப்பட்டவருக்கா இந்த இரக்கப்படத்தக்க நிலை!
நான் அவரருகில் உட்கார்ந்து, “பெரியவர்கள் சிறுவர்களிடம் பிச்சை கேட்கலாகாது; அவர்களுக்கு உத்தரவிட வேண்டும்” என்றேன்.
இதைச் சொன்னவுடனே, இது மேடைப் பேச்சுப்போல இருக்கிறது என்பதை உணர்ந்தேன். ஆனால், இதைக் கேட்டதும் அவர் கண்ணிலிருந்த தீனத்தன்மை மறைந்தது.
அவர் தழுதழுத்த குரலில் பேசினார்: “என் துன்பத்தை. எப்படியாவது பொறுத்துக்கொள்வேன்; ஆனால் என் மனைவியின் துன்பம்? பாவம்! இவள் துன்பப்படுவதற்காகவே ஜன்மம் எடுத்தாளோ என்னவோ, யார் கண்டது! கல்யாணமானதும் நான் அவளுக்குச் சுகம் தரவில்லை. மக்கள் பிறந்ததும் அவர்கள் அவளுக்குச் சுகம் தரவில்லை. அவர்களுக்கு எந்தக் குறைவும் இருக்கக்கூடாதென்று அவள் வாழ்நாள் முழுவதும் பழஞ்சோற்றையே தின்று வருகிறாள்; கிழிந்த பழம் புடைவைகளையே உடுத்து வருகிறாள்; எப்பொழுதும் வீட்டை விட்டு வெளியே நகர்ந்ததில்லை; ஒரு தீர்த்த யாத்திரையா, திருவிழாவா, எதுவும் இல்லை. அப்படியிருக்க, இந்தப் பிரபாகரன்-”
மேலே அவரால் பேச முடியவில்லை. அவரை எப்படிச் சமாதானப்படுத்துவது என்பது எனக்கும் தெரியவில்லை.
பஞ்சபாத்திரத்திலிருந்து ஒரு சிறங்கைத் தண்ணீர் குடித்துவிட்டு, அவர் மீண்டும் பேசலானார்: “இந்தப் பையன் ஒரு சக்கிலிச்சியைக் கல்யாணம் செய்துகொண்டிருந்தால்கூட நான் அமைதியாக உட்கார்ந்திருப்பேன். ‘நம் மகன் உலகத்தில் எங்கோ சுகமாக இருக்கிறான்’ என்று இவளுக்கும் நிம்மதியாக இருந்திருக்கும். ஆனால்-“
தபால்காரன் நம் வீட்டை நோக்கி வரும்போது நம். மனம் என்ன பாடு படுகிறது! யார் எழுதிய எந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு வருகிறானோ என்று தோன்றுகிறது அல்லவா? அந்தக் கடிதத்தில் எழுதியபடி, பிரபாகரன் ஏதாவது ‘ஏடாகூட’மாகச் செய்திருப்பானோ?
மகன் எவ்வளவுதான் பெரியவனானாலும் பெற்றோரின் யற்று அணுவளவும் குறைவதில்லை. என்றாவது ஒரு நாள் குழந்தை அஜயனுக்கு உடம்பு சுடுவதைக் கண்டால் என் மனம் எப்படித் தவிக்கிறதோ, அதே தவிப்பு அவருடைய முகத்தில் அப்போது தெரிந்தது.
மறுபடியும் இரண்டொரு வாய் நீரருந்திவிட்டு அவர் தொடங்கினார்: “தேவதத்தா, அவன் கடிதம் வந்தது முதல் இவள் படுத்த படுக்கையாகிவிட்டாள்! இவளை விட்டு, நான் கோல்ஹாபூருக்குப் போய்த் தேடுவதென்றால், முடிகிற வேலையா? அப்படிப் போனாலும், எனக்கு அங்கே என்ன தெரியும்? யாரும் முன்பின் பழக்கமில்லை. ‘லகுருத்திரம் வேண்டாம்; மகாருத்திரம் ஜபியுங்கள்’ என்று யாராவது சொன்னால், நானாக அங்கே முன்னிட்டுக்கொண்டு போய், சப்பளங் கூட்டிக்கொண்டு உட்காருவேன். அயலூரில் என்னைப் போன்ற புரோகிதனை யார் விசாரிப்பார்கள்? ஒன்று சொல்லு கிறேன்: நீ மட்டும் மனசு வைத்தால்- “
கூடிய சீக்கிரத்தில் கோல்ஹாபூருக்குச் சென்று, பிரபாகரனைத் தேடிக் கண்டுபிடிப்பதாக நான் அவருக்கு ஆறுதல் கூறினேன்.
நான் உள்ளே சென்று படுக்கையில் படுத்தேன்.
பட்டர் சற்றுநேரம் தம் படுக்கையில் உட்கார்ந்திருந்தார். பிறகு எழுந்து மனைவியிடம் சென்றார். மெதுவாக அவள் நெற்றியில் கைவைத்துப் பார்த்தார். பிறகு அவள் காலடி யில் சென்று அமர்ந்து, அவள் கால்களை இலேசாக வருட லானார்.
சிறுவயதில் நான் ஒரு படம் பார்த்திருந்தேன்; கட்டிலில் படுத்திருக்கும் ஓர் அழகிய இள நங்கையை அவள் காதலன், “கனையிரு ளகன்றது காலையம் பொழுதாய்’ என்று எழுப்புவதாக அதில் சித்திரித்திருந்தது. அந்தப் படத்தைவிட பாடி மோகனமாக இருந்தது நான் கண்ட இந்தக் காட்சி.
அந்த அம்மாள் துயிலில் ஆழ்ந்திருந்தாள். ஆனால் தன் காலை யாரோ வருடுவதை மட்டும் சிறிது நேரத்துக்குள் தெரிந்துகொண்டாள். அப்போது கனவும் நினைவுமான நிலையில் இருந்தாள் போலும்! “யார் என் காலை வருடுவது? – பிரபாகரனா?” என்று கேட்டாள்.
“இல்லையே” என்றார் பட்டர்.
“பின்னே யார்?”
“அவனுடைய தகப்பன்!”
“இச்! இதென்ன வேலை!’
காலேஜில் கருணாவின் வாயினால் பல தடவையும், மண மானதிலிருந்து அருணாவின் வாயால் நாள் தவறாமல் பத்துத் தடவையும் நான் இவ்வினிய ‘இச்’ என்ற சொல்லைக் கேட் டிருந்தேன். ஆனால் இப்போது அந்த நோயாளியான அம்மா ளின் வாயிலிருந்து இந்தச் சொல் வெளிவந்தபோது, இதன் அற்புதமான இனிமையை முற்றும் அறிந்துகொண்டேன்.
அருணாவின் ‘இச்’சிலும் கருணாவின் ‘இச்’சிலும் பூங்காவில் நர்த்தனமாடும் நீர்த் திவலைகளின் எழில் இருந்தது. ஆனால் அந்த அம்மாளின் ‘இச்’சில் முதல் மழையின்போது பொழியும் பெரிய நீர்த்துளியின் எழில் இருந்தது. ‘இச்’ என்பது வெறுமே வெட்கத்தை வெளியிடும் சொல்லல்ல; அது வெற்றியடைந்த காதலின் – திருப்தியுற்ற ஆன்மாவின் – குரல். கண்ணன் தன் சின்னஞ்சிறு வாயைத் திறந்து யசோதைக்கு விசுவரூபம் காட்டினான் அல்லவா? பெண்மணிகளின் – அதிலும் வயதான பெண்ம மணிகளின் – ‘இச்’ என்ற குரலும் அத்தகையதே என்று எண்ணலானேன்.
பொழுது விடியும் வரையில் ‘இச்’சைப்பற்றிய கனவு களையே நான் கண்டுகொண்டிருந்தேன்.
முத்துக் குளிப்பவர்கள்போல நான் கடலுக்குள் இறங்கி யிருந்தேன்; பரபரவென்று சிப்பிகளைச் சேகரித்த வண்ணமாக இருந்தேன். அதற்குள் எங்கிருந்தோ ‘இச்’ என்ற சொல் காதில் விழுந்தது. ஒரு சிப்பியின் வாய் திறந்திருந்தது. அந்தச் சிறு சிப்பியில் மிகவும் சிறிய முத்து இருக்கும் என்று நினைத்து அதைப் பார்த்தேன்; ஆனால் அந்த முத்துச் சிறிய தாகவா இருந்தது? மேலும் அதன் தளதளப்பு? வைரத்தின் காந்தியும் மாணிக்கத்தின் ஒளியும் அந்தத் தள தளப்புக்கு முன் மங்க வேண்டியவையே.
சற்று நேரங் கழித்துப் பார்த்தேன். என் கையில், ‘அரபி பாஷையிலுள்ள ரஸமான ஆச்சரியக் கதைகள்’ என்ற புத்த கம் இருந்தது. அலீபாபாவின் கதையை நான் படித்துக் கொண்டிருந்தேன். அவன், “மந்திரக்காளி, திற!” என்று சொல்லும்போது குகைக்கதவு திறந்துகொள்கிறது; அவன் உள்ளே போகிறான்; குகையில் இருந்த அந்தச் செல்வக் குவியலைக் கண்டு யாரோ என் காதோடு, “இந்தக் குகை ஓர் உருவகம்!” என்று முணுமுணுத்தார்கள்.
“உருவகமா?”
“ஆம்.”
“எதைப்பற்றிய உருவகம்?”
“மனித வாழ்க்கையைப் பற்றியது !”
“அதாவது? விளங்கவில்லையே?”
“மனித உள்ளத்திலும் இப்படித்தான் ரத்தினக் களஞ் சியங்கள் இருக்கின்றன; ஆனால், அந்த உள்ளத்துக் கதவை எப்படித் திறப்பதென்பது பெரும்பாலோருக்குத் தெரிவதில்லை.”
“எப்படித் திறப்பது? காதலினாலா?”
“காதலில் எத்தனையோ விதங்கள் இருக்கின்றன.”
“எத்தனையோ விதங்களா?
“ஆம், இளமைக் கவர்ச்சி, அறிவுக் கவர்ச்சி, அழகுக் கவர்ச்சி; ஆனால் வெறும் கவர்ச்சியே காதலாகாது.”
“பின்னே, எது காதல்?”
“அந்தக் கவர்ச்சி பக்தியாக மாற வேண்டும். பக்தி என்றால், பிறருக்காகத் தன்னை மறக்கும் சக்தி. தன் இன்பக் கற்பனைகளை மறக்க முடியாதவன், தன் பெருமைக் கற்பனைகளை மறக்க முடியாதவன், பிறருடைய உள்ளத்தை வழிபட இயலாதவன்-இப்படிப்பட்டவனுடைய காதலுக்குப் பக்தியுருவம் எந்நாளும் கிடைக்காது. நுகரும் உணர்ச்சிக்கு உயிர் கவர்ச்சி பக்திக்கு உயிரோ தியாகம்.”
ரவீந்திரரின் காவியங்களை யாரோ பாட, நான் கேட் கிறேனோ என்பது எனக்குத் தெரியவில்லை.
புருவத்தை நெரித்துக்கொண்டு, “இது எனக்குப் புரிய வில்லையே?” என்றேன்.
“எதிரே பக்திக்கு எடுத்துக்காட்டு இருந்துங்கூட இது உனக்குப் புரியவில்லையா? பட்டரின் இந்தக் கிழ மனைவிக்குக் கல்யாணமான அன்று, முத்தண்ணாவின் நினைவு உண்டாகவே இல்லை என்று நீ நினைக்கிறாயா? ஆனால், ‘வாழ்க்கை என்பது காடுகளையும் புதர்களையும் தன்னந்தனியே கடந்து செல்லும். ஆறு அல்ல; தற்செயலாக மற்றோர் ஆற்றோடு கலக்கும் நீர்ப் பெருக்காகும்’ என்பதை அவள் உடனே அறிந்துகொண்டாள். கணவனுக்காக அவள் வாழ்ந்தாள்; சுகப்பட்டாள்! வாழ்க்கை கற்பக மரமல்ல; மாமரம். அதில் எத்தனையோ மொட்டுக்கள் கருகிப் போகும்; ஆனால் அதில் எத்தனை பழங்கள் பழுத்தா லும் அவை இனியனவாகவே இருக்கும். அவை யாவற்றிலும் மிக இனிய பழம்: சற்று நேரத்துக்கு முன், பட்டர் உன் முன் னால் மனைவியின் காலை வருடிக்கொண்டு இருந்ததைப் பார்த்தா யல்லவா? கணவன் தனக்கு அத்தனை அன்போடு தொண்டு செய்வது கண்டு, அந்த வயதான ஸ்திரீயின் வாயிலிருந்து ‘இச்’ என்ற ஒரு சொல் வெளிவந்ததே, அதுதான்-”
பொழுது விடியும்வரையில் அந்தச் சொல் பல உருவங் களில் அந்தக் கனவுகளில் எனக்குத் தெரிந்த வண்ணமாகவே இருந்தது.
இரண்டொரு நாளில் கோல்ஹாபூருக்குச் சென்று பிரபா கரனைத் தேடிக் கண்டுபிடிப்பதாகப் பட்டருக்கும் அந்த அம்மாளுக்கும் ஆறுதல் கூறியபோது எனக்கு மிகவும் ஆனந்த மாக இருந்தது. ஆனால் பஸ்ஸில் வீட்டுக்குத் திரும்பி வருகை யில் ஒரு கேள்வி மட்டும் என் மனத்தில் சுழன்றுகொண்டே இருந்தது: கோல்ஹாபூருக்குப் போவது சுலபம்; ஆனால் பிரபாகரனைத் தேடிக் கண்டுபிடிப்பது எப்படி?
பட்டர் கொடுத்த பிரபாகரனுடைய அறையின் முகவரி யைத் தெளிவாகக் குறித்து வைத்திருந்தேன். ஆனால் அந்த அறையில் அவனோடு வசிக்கும் மாணவன் இவ்விஷயத்தில் எனக்கு எவ்விதம் உதவுவான்? போலீசில் விசாரித்தால்-?
ஆனால் இந்த விசாரணை நடப்பதற்குள்ளேயே பிரபா கரன் உயிரை விட்டிருந்தால்? இக்காலத்தில் பத்திரிகைகளில் நாள் தவறாமல் நாலைந்து தற்கொலைகளைப் பற்றியாவது செய்திகள் வந்தே தீருகின்றன. யந்திரங்களால் உலகத்துக்கு என்ன லாபம் கிடைத்திருந்தாலும் சரி, முற்காலத்தைவிடத் தற்கொலைக்கான வசதிகள் அவற்றினால் அதிகமாகியிருக் கின்றன என்பதில் மட்டும் சந்தேகம் இல்லை.
பட்டருக்கும் அந்த அம்மாளுக்கும் நான் பொய்யாசை காட்டியது நன்றாக இல்லை. ஆனால் அதைப்பற்றி இப்போது வருந்துவதனால் என்ன பயன்?
கோல்ஹாபூருக்குக் கட்டாயம் போகத்தான் வேண்டும். அருணாவைக் கூடவே அழைத்துச் சென்றால், அவளுக்கும் அநா யாசமாக அம்பாதேவியின் தரிசனம் கிடைக்கும் என்று எண் ணியபடியே வீடு போய்ச் சேர்ந்தேன்.
வேறு சமயமாக இருந்தால், நான் தனியே கோல்ஹா பூருக்குப் புறப்படும்போது தானும் அம்பாதேவியின் தரிசனத் துக்கு வருவதாக அருணா பிடிவாதம் பிடித்திருப்பாள்; ஆனால், அன்று அம்பாதேவியை விட்டு அவள் கவனம் வேறிடத்தில் சென்றிருந்தது.
நான் வீட்டுக்குள் கால் வைத்தவுடனே, அருணா ஒரு கடி தத்தை விரல்களால் அலைத்துக்கொண்டு என் முன்பு வந்து நகைமுகத்தோடு, “இது யாருடைய கடிதம்? சொல்லுங்கள், பார்க்கலாம்!” என்றாள்.
“உன் ஆனந்தத்தைப் பார்த்தால் அது நான் எழுதிய தாகவே இருக்க வேண்டுமென்று தோற்றுகிறது. ஆனால் வீட்டுக்குள்ளேயே மனைவிக்குக் காதற் கடிதம் எழுதி வீணுக்கு இரண்டணாச் செலவழித்து அதைத் தபாலில் போடும் கணவன் மகா முட்டாளாகத்தான் இருக்க வேண்டும்!”
“இச்! இதென்ன பேச்சு! இந்தக் கடிதத்திலுள்ள விஷ யத்தையாவது அறிந்து சொல்லுங்கள். பார்க்கலாம்!”
“இதோ, என்னைப் பார்!”
“பார்த்தேன்!”
“உன் தோழி எவளாவது பிரசவித்து, அவளுக்குப் பிள்ளை பிறந்திருக்கும்!”
“ஊஹூம்.”
“ஜார்ஜெட் சேலைகள் மலிந்துவிட்டதாகச் செய்தி கிடைத்திருக்கும்!”
“இப்படியெல்லாம் நீங்கள் பேசினால் பதிலே சொல்ல மாட்டேன்.”
“சரி, இப்போது கடைசி முறையாகச் சொல்லி விடட்டுமா?”
நான் ஏதாவது தவறாகத்தான் கற்பனை செய்வேனென்று அருணா என்னைக் குறும்பாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால் என் வாயிலிருந்து சொற்கள் ஒவ்வொன்றாக வெளியாக ஆக, அவள் வதனத்தில் ஆச்சரியம் வளர்ந்தது.
ஜோஸ்யன் பிறர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் யாவற்றையும் சொல்ல ஆரம்பித்தாற் போல், நான் பேசிக்கொண்டே போனேன்: “இது உன் பிறந்த வீட்டி லிருந்து வந்திருக்கும் கடிதம். உன் தங்கைகள் இருவரும் பிறந்தகம் வந்திருப்பதனால் அண்ணன் உன்னையும் அழைத் திருக்கிறான். அந்த வீட்டில் யாவரும் உன் அஜயன் வரும் வழிமேல் விழிவைத்து வாசற்படியிலே நிற்கிறார்கள். இன்னும் இரண்டு மா தங்களுக்கெல்லாம் தீபாவளி வருகிறது. ஆகவே ரண்டு மாதகாலம் பிறந்தகத்தில் இருந்த மாதிரியாகவும் இருக்கும்…”
நான் படபடவென்று இன்னும் எவ்வளவோ பேசியிருப்பேன். ஆனால் அருணா அருகில் வந்து என்னை அன்புடன் பார்த்து, “அப்படியானால் நான் போகலாமோ இல்லையோ?” என்று கேட்டாள்.
“அஜயனைப் போலவே நானும் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்!”
“இச்! எப்போதும் உங்களுக்கு விளையாட்டுத்தான்!”
“அப்படி இருந்தால் நானும் உன் பிறந்த வீட்டில் உன்னோடு கூடவே இரண்டு மாதகாலம் ஆனந்தமாக இருக்கலாம் அல்லவா?”
“அதற்கு ஒரு யுக்தி செய்யலாமே!”
“என்ன யுக்தி?”
“என்னை அங்கே கொண்டு விடுவதற்காக வருவது; அப்புறம் உடம்பு சரியில்லை என்று பாசாங்கு செய்வது!”
“நீ வக்கீலுக்குத் தகுந்த மனைவிதான்!”
அருணா உடனே பயணத்துக்கு ஆயத்தங்கள் செய்யலானாள். அவள் பெட்டியில் சாமான்கள் நிரம்ப நிரம்ப அதன் பளு அதிகமாகியது போலவே, பிரிவை நினைந்து நினைந்து என் மனத்திலும் பளு ஏறிக்கொண்டே போயிற்று. அருணாவை இன்னும் இரண்டு மூன்று வாரங்கள் கழித்துப் போகச் சொல்லலாமா என்று நினைத்தேன்.
மூன்று நான்கு தடவை அந்தச் சொற்கள் என் உதடு வரையில் வந்துவிட்டன. ஆனால் பிறந்தகத்துக்குப் போகும் எண்ணத்தினால் அவளுக்கு உண்டான மகிழ்ச்சியைக் கெடுக்க எனக்குத் தைரியம் உண்டாகவில்லை.
என் அறைக்குப் பக்கத்திலேயே அவளுக்குச் சொந்த அறை. அதில் அவளுடைய புகைப்படம் இருந்தது. அதை என் அறையில் கட்டிலுக்கு எதிரே மாட்டிவிட்டு அவளிடம், “நீ போனாலும் என் அருணா என்னோடுதான் இருப்பாள்!” என்றேன்.
அவள் ஆச்சரியத்தோடு என்னைப் பார்த்தாள். எதிரிலே இருந்த புகைப்படத்தை அவளுக்குக் காண்பித்தேன்.
அவளுக்கு அடங்காச் சிரிப்பு. உடனே அவள் தன் அறைக் குள் சென்று, அஜயன் விளையாடுவதற்காக வாங்கி வந்திருந்த ‘ஸெலூலாய்ட்’ குழந்தையை எடுத்து வந்தாள்; அதைத் தொட்டிலில் கிடத்தி, “இதோ, உங்கள் அஜயனும் உங்க ளுடன்தான் இருக்கிறான். நான் திரும்பி வந்தவுடனே, இந்த அஜயனைத் தாலாட்டும்போது நீங்கள் என்ன என்ன பாட்டுப் பாடினீர்கள், இந்த அருணாவை அணைத்துக்கொண்டு அவள் காதோடு என்ன என்ன பேசினீர்கள் என்பவற்றை எல்லாம் ஒன்றுவிடாமல் எனக்குச் சொல்ல வேண்டும்; தெரி கிறதா?” என்றாள்.
அருணாவையும் அஜயனையும் பெல்காம் பஸ்ஸில் உட்கார வைத்துவிட்டு நான் கோல்ஹாபூர் பஸ்ஸை நோக்கிக் கிளம்பிய போது, என் கண்ணில் நீர் துளும்பாமலில்லை. நாலைந்து தரம் பின்னால் திரும்பிப் பார்த்தேன். வீட்டிலிருந்து புறப்பட்ட போது வெகு நேரம் வரையில் அருணாவை என் அணைப்புச் சிறையில் கெட்டியாகப் பிணைத்து வைத்திருந்தேன். ஆனால், கோடைக் காலத்தில் எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும், ஓயாமல் தாகம் நாக்கை வறட்டுகிறதல்லவா? அந்தச் சமயத் தில் என் மனநிலையும் உடல்நிலையும் அப்படித்தான் இருந்தன. அருணாவின் ஸ்பரிச சுகத்திலிருந்த வேட்கையினால் நான் பித்தனாகியிருந்தேன். இரண்டு மாதங்களுக்கு அருணா திரும்பி வரப்போவதில்லை; இரண்டு மாத காலத்துக்கு, என் களைப்பு அனைத்தையும் தீர்க்கும் அவள் ஸ்பரிசம் எனக்குக் கிடைக்கப் போவதில்லை. பிரிவை ஸஹாராப் பயணத்தோடு யாரும். ஒப்பிட்டுக் கூறியதில்லை என்றால், நான் அப்படிக் கூறுகிறேன். ஸஹாராவிலாவது இடையிடையே பசுமை நிலமும் நீரூற்றுக் களும் இருக்கும். ஆனால், பிரிவிலோ? எதுவும் இல்லை! இனி இரண்டு மாதங்களுக்கு அருணா என் கண்ணில் தென்படமாட் டாள்; என் அருகில் வரமாட்டாள்; என் மனக் கொதிப்பைத் தணிக்கமாட்டாள்.
என் பஸ் புறப்படுவதற்குப் பத்து நிமிஷ நேரம் இருந்தது. எதையாவது மறந்துவிட்டதாகச் சாக்கு வைத்துக் கொண்டு, மீண்டும் அருணாவின் பஸ்ஸண்டை போய், ஐந்து நிமிஷமாவது அவளோடு பேசிவிட்டு வரலாம் என்ற தீவிர ஆவல் என்னுள் உதித்தது. ஆனால் உடனே இந்தக் கட்டுப் பெட்டிச் சமூகத்தை நினைந்து எனக்குக் கோபம் வந்தது. ‘நம் சமூகத்தில் கணவன் மனைவியிடம் தொலைவிலிருந்துதான் விடை பெறவேண்டும். இந்தச் சமயத்தில் நான் அருணாவிடம் சென்று அவளை முத்தமிட்டேனானால், பஸ்ஸிலுள்ளவர்கள் என்னை உடனே பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் கொண்டுவிட ஏற்பாடு செய்வார்களே!’ என்று நினைத்தேன்.
பஸ் புறப்பட்டவுடனே அதனுள் இருக்கும் வெப்பம் குறைவதுபோல, அதில் யாத்திரை செய்யும் பிரயாணிகளின் மனக் கலவரமும் குறையும் போலும்; எப்படியோ, என் மனம் சற்று அமைதியுற்றுத்தான் இருந்தது.
முன்‘ஸீட்’டில் சாய்ந்து குறட்டை விட்டுக்கொண்டிருந்த ஒரு பெருந்தொப்பைக்காரனை என் ‘ஸீட்’டின் கோடியிலிருந்து நான் பார்த்தேன். நினைத்தேன்: ‘டிரைவர் என்னை முன் ஸீட்டில் உட்காரச் சொன்னதை ஒப்புக்கொள்ளாதது நல்ல தாயிற்று. இல்லாவிட்டால், இந்தத் தடியன் சற்றும் மரியாதை இல்லாமல் என் தோள்மீது தலையைச் சாய்த்து, கொர் கொர்ரென்று குறட்டை விட்டுக்கொண்டிருந்திருப்பான்; அருணாவுக்கு உரிய புகலிடத்தை இந்த அற்புதமான ஆசாமி ஆக்கிரமித்திருப்பான்! கோபுர வாசலிலுள்ள கோயில் காளையைக் கர்ப்பக் கிருகத்துக்குள் ஓட்டிப்போய் உட்கார வைப்பது போன்ற காட்சியாகத்தான் அது இருந்திருக்கும்.’
அருணாவின் நினைவினால், எதிரே உட்கார்ந்திருந்த இரு பெண்மணிகள்மீது என் பார்வை சென்றது. அவர்கள் பக்கத்தி லிருந்த மனிதனை நான் எங்கோ பார்த்தாற்போல இருந்தது. பார்வைக்கு அவன் கம்பீரமாகத் தோற்றினாலும், துர்ப்பழக் கங்களே உருவெடுத்தவன்போல இருந்தான். செக்கச் செவே லென்ற அவன் கண்களும், அற்புதமாக நீண்டிருந்த மூக்கு நுனியும் அவன் குடிகாரன் என்பதற்கு அத்தாட்சிகளாக. இருந்தன. அவனுடைய உதடுகளின் அமைப்பும், அவ்விரு நங்கைகளை நோக்கி இடையிடையே வளைந்த அவன் பார்வையும்—
அவனை இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோர்ட்டில் பார்த்திருப்பதாக உறுதியான ஞாபகம் வந்தது. ‘அது எந்த வழக்காக இருந்திருக்கும்?’ என்று சிந்தித்தேன்.
வெகு நேரம் கழித்து நினைவுக்கு வந்தது: எவனுடைய’ மனைவியையோ இவன் இழுத்துக்கொண்டு போய்விட்டிருந் தான்.
‘இந்தத் துஷ்டன் இவ்விரு பெண்களையும் ஏமாற்றி எங்கா வது இழுத்துச் செல்கிறானோ என்னவோ?’ என்ற விந்தையான சந்தேகம் என் மனத்தில் முளைத்தது.
ஒரு சாதாரணப் பிரயாணி போன்ற தோற்றத்தோடு, “நீங்கள் எந்த ஊருக்குப் போகிறீர்கள்?” என்று அவனைக் கேட்டேன்.
“கோல்ஹாபூருக்கு.”
“அங்கே என்ன வேலையாகப் போகிறீர்களோ?”
“அதுவா? இந்த இரண்டு அக்கா தங்கைகளும் நரஸோபா தோட்டத்துக்குப் போக வேண்டும்!”
‘குரு துவாதசியன்று நரஸோபா தோட்டத்துக்குக் கொங் கணத்திலிருந்து நிறையப் பேர் போவதுண்டு. ஆனால் இந்த அடைமழைக் காலத்தில் இந்த ஆசாமி அங்கே எதற்காகப் போக வேண்டும்?’ என்று சிந்தித்தேன்.
அவ்விரு பெண்மணிகளைப் பார்த்த பின்பு என் சந்தேகம் பின்னும் வலுத்தது. அவர்களை அக்கா தங்கைகள் என்று சொல்ல என் மனம் ஒப்பவே இல்லை. பெரியவளுக்குச் சுமார் இருபத்தைந்து வயது இருக்கும்; ஆனால் அவள் உடல் பருத் திருந்தது; மாநிறம்; படிப்பில்லாதவள் என்றே மேற்பார் வைக்குத் தோற்றியது. அவள் கைகளைப் பார்த்தேன். வயல் வேலைகளும் இதர நாட்டுப்புற வேலைகளும் செய்வதனால் கைக ளுக்கு உண்டாகும் சுறசுறப்பு அவள் கைகளில் இருந்தது. நடுவில் அவள் தன் அருகிலிருந்தவனை ஏதோ கேட்டாள். அவள் சொற்களிலிருந்து இல்லாவிட்டாலும் குரலிலிருந்தே அவள் குடியானவப் பெண்ணாக இருக்க வேண்டும் என்று தோற்றியது.
அவள் கேள்விகேட்டதும் அவளுடைய அந்த அண்ணன் கண்ணைச் சுழற்றி அவளை ஒரேயடியாக வாய்மூடச் செய்தான். அண்ணன் தங்கைகளின் அந்த அன்பு அபூர்வ ரகமாகவே எனக்குப் பட்டது.
அவ்விரு பெண்மணிகளையும் மாறி மாறிப் பார்க்கலா னேன். மற்றொருத்திக்கு இருபது இருபத்தொரு வயது இருக்கும். ஆனால் அவள் உடல் கொஞ்சங்கூடப் பருத்திருக்க வில்லை. நல்ல சிவந்த மேனி. அவள் பார்வையில் இடை யிடையே கருணையின் சாயல் தென்படாமலில்லை. பெரிதும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பஸ் புறப்பட்டது முதல் அந்த இரு சகோதரிகளும் ஒருவரோடொருவர் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.
அந்தச் சிறு பெண்ணுக்கு ஒரே இடத்தில் உட்கார்ந்து மரத்துப் போனாற்போல் ஆகிவிட்டது. அவள் சற்று நிமிர்ந்து கோணினாள். அவள் கழுத்தைச் சூழ்ந்த பாகம் எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. என் மனம் கலங்கியது. அவள் நெற்றியில் குங்குமம் இருந்தது; ஆனால் கழுத்தில் தாலி இல்லை.
இப்போதெல்லாம் கல்யாணமான பெண்கள் தாலிகட்டிக் கொள்வதில்லை என்றும், அப்படி அணிந்துகொண்டாலும் அதை மறைத்து வைத்துக்கொள்வதுதான் முறை என்றும் நாலைந்து தரம் அருணா சொல்லிக் கேட்டிருந்தேன். அதனால் இதைக் கண்டதும் எனக்கு ஆச்சரிய அதிர்ச்சி உண்டாகாவிட் டாலும், என் மனக் கலக்கம் மட்டும் அதிகரித்தது.
பஸ் நிபாணியை விட்டுப் புறப்பட்டபோது அந்தப் பெண் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். வண்டி புறப் பட்டதுமே யாரோ உரக்க, “மனோகரா” என்று கத்தினார்கள்.
அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. கண்ணைத் திறந்து வெகு நேரம்வரையில் மருண்ட பார்வையோடு நாலுபுறமும் .பார்த்துக்கொண்டிருந்தாள்.
கோல்ஹாபூரில் பஸ்ஸிலிருந்து இறங்கியதும், அவ்விரு சகோதரிகளின் அந்த அண்ணன், “நரஸோபா தோட்டத் துக்கு இப்போது பஸ்கள் போகின்றனவா?” என்று ஸ்டாண் டிலிருந்த ஏஜெண்டைக் கேட்டுக்கொண் டிருந்தான்.
சம்சயப்படும் என் மனத்தின்மீது எனக்கு மகா கோபம் வந்தது.
பிரபாகரனுடைய அறையைக் கண்டுபிடிக்க வெகு நேரம் பிடிக்கவில்லை. ஆனால் அவன் எங்கே போனான் என்பது அவன் கூட்டாளிக்கே புதிராக இருந்தது.
பிரபாகரன் காதலித்த பெண்ணின் பெயர் சுலபா. அவளைப் போய்க் கேட்டால் அவனைப்பற்றிய தகவல் ஏதாவது கிடைக்கலாம் என்று நினைத்தேன்; ஆனால் பிரபாகரனின் நண்பன் என்னைத் தடுத்துவிட்டான்.
அறையிலிருந்த பிரபாகரனுடைய பொருள்களையெல் லாம் சோதனையிட்டேன். வேண்டிய அளவு உடுக்கத் துணிகூட அவன் எடுத்துச் செல்லவில்லை. ‘ஷேவிங் ஸெட்’ மேஜைமீதே கிடந்தது. புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் – யாவும். அவன் வைத்தபடியே இருந்தன.
பூட்டிய பெட்டி ஒன்று மூலையில் இருந்தது. “இது யாருடைய பெட்டி, ஐயா?” என்று பிரபாகரனுடைய நண்பனைக் கேட்டேன்.
“பிரபாகரனுடையதே!”
“இதை நீங்கள் திறந்து பார்த்ததுண்டா?”
“இதன் சாவி அவனிடந்தான் இருக்கிறது. தவிர அவன் சாமான்கள் யாவும் வெளியிலேயே இருக்கின்றன. ஆகவே-”
நான் அறைக்கு வெளியே சென்று ஒரு குழவிக்கல்லைக். கொணர்ந்து, ஒரே அடியில் அந்தப் பூட்டை உடைத்தேன். பூட்டைத் தூர எறிந்துவிட்டுப் பெட்டியைத் திறந்தேன்.
மேலேயே இரண்டு சிறிய கடிதக் கட்டுகள் இருந்தன.. ஒவ்வொரு கட்டையும் கயிற்றினால் சுற்றி அதன்மேல் ஒரு. துண்டுக் காகிதம் வைத்திருந்தது.
முதல் கட்டை எடுத்து, மேலே இருந்த துண்டுக் காகிதத். தைப் படித்தேன்: ‘அமுதம்!’
மற்றொரு கட்டைப் பரபரப்போடு எடுத்து, அதிலிருந்த துண்டுக் காகிதத்தைப் படித்தேன்: ‘நஞ்சு!’
‘டக்டக்’கென்று அவ்விரு கட்டுகளிலும் இருந்த கயிற்றை அறுத்து எறிந்தேன்.
முதல் கட்டில் மேலேயே இருந்த கடிதத்தை எடுத்துப் படிக்கலானேன்:
சிரஞ்சீவி பிரபாகரனுக்கு அநேக ஆசீர்வாதம். இப் போது உனக்கு ஜுரம் இறங்கியிருப்பதை அறிந்து சந்தோஷம் உண்டாயிற்று. உன் கடிதம் வரும் வரையில் உன் தாயின் தொண்டைக்குள் ஓர் அவிழ் அன்னங்கூட இறங்கவில்லை. ஓயாமல் அதே தியானம்; அதே பிதற்றல்! “அங்கே பிரபா கரன் வயிற்றில் ஒன்றும் சென்றிராது; இங்கே நான் மட்டும் எப்படித் தின்பது?” என்பாள். உனக்கு ஜுரம் வந்ததாகத் தெரிந்தவுடனே சத்தியநாராயண விரதம் இருப்பதாகப் பிரார்த்தனை செய்துகொண் டிருக்கிறாள். தீபாவளி லீவுக்கு நீ வீட்டுக்கு வரும்போது உன் கையாலேயே சத்தியநாராயணனுக்குப் பூஜை செய்விக்க வேண்டும் என்பது அவள் எண்ணம்.
உன் நோயினால் இருபது ரூபாய் நான் அதிகம் அனுப்ப வேண்டியிருந்தது என்பது உண்மையே. ஆனால் அதற்காக நீ ஏன் இவ்வளவு வருத்தப்பட வேண்டும்?
வயிற்றில் பிறந்த மக்கள் சுகமாக இருந்தால் பெற்றோர்களுக்கும் சுகந்தான்!
நீ காலேஜுக்குப் போனதிலிருந்து எனக்குப் பெரும் பலம் வந்துவிட்டது. இரவு நிசிவேளையில் பக்கத்து ஊருக்குப் போவ தாயிருந்தாலும் எந்த வேலைக்கும் நான் ‘முடியாது’ என்று சொல்வதில்லை. மழைக் காலத்தில் பாகற் கொடிகளையும் புடலங்கொடிகளையும் ஏற்றவிடுவதற்காகப் பந்தல் போடுகி றார்களல்லவா? பெற்றோர்களும் அப்படித்தான். பந்தலிலுள்ள கழிகள் மிகவும் உலர்ந்தும், கோணல் மாணலாவும், கன்னங் கறேலென்றும் இருக்கும். ஆனால் அவற்றின்மீது பசுமையான கொடிகள் படர்ந்து, அந்தக் கொடிகளில் பாகல்களும் புடலங்காய்களும் அசைந்தாட ஆரம்பித்தால் அப்போது அந்தக் கழிகளுக்கு எவ்வளவு அழகு உண்டாகிறதோ, அதுபோலவே,–
‘நம் அப்பாகூடக் கவியாகிவிட்டார்!’ என்று நீ நினைத்துக் கொண்டிருப்பாய்.
அப்படிப் பார்த்தால், நான் சிறுவயதில் ரகுவம்சமும் குமாரசம்பவமும் உருப்போட்டவன்தான். ஆயினும் உண் மையைச் சொல்லப்போனால், சிறுவயதில் காவியங்கள் புத்த கத்தில் மட்டுமே இருக்கின்றன; இளமையில் அவை சம்சாரத் தில் மட்டுமே தென்படுகின்றன; ஆனால், ஐம்பதாவது வயது நெருங்க ஆரம்பிக்கும்போது, அவை உலகத்திலுள்ள எல்லாச் சின்னஞ்சிறு விஷயங்களிலும் நிரம்பியிருப்பதாக அநுபவம் ஏற்படுகிறது.
கடிதம் மிகவும் நீண்டுவிட்டது. உடம்பை ஜாக்கிரதை யாகப் பார்த்துக்கொண்டு படி. படிப்பு வேலைகள் எவ்வளவு ஜரூராக இருந்தாலும் எட்டு நாளைக்கு ஒரு தரமாவது கார்டு எழுது. உன் கடிதம் சமயத்தில் வராவிட்டால் நான் பொய் சொல்லும் பாவத்தைச் செய்யவேண்டி யிருக்கிறது. உன் பழைய கடித மொன்றை எடுத்துக்கொண்டு சமையலறைக்குப் போய், உன் அம்மாவிடம், “இதோ பார், பிரபாகரனிட மிருந்து கடிதம் வந்திருக்கிறது. சௌக்கியமாயிருக்கிறான்!” என்கிறேன்.
அவள் கடிதம் முழுவதையும் வாசிக்கச் சொன்னால், நான் தவிக்கும் தவிப்பு! அதில் இருக்கிறபடியே படித்தால் அது பழங் கடிதமென்று அவள் கவனித்துவிடுவாள். புதுச் செய் தியை ஒரு நிமிஷத்துக்குள் சிருஷ்டித்துப் படிப்பதென்றாலோ-
நான் கீழே கையெழுத்தைப் பார்த்தேன்: “ராமபட்டர்.” மற்றொரு கட்டில் மேலேயே இருந்த கடிதத்தைப் பரபரப் போடு எடுத்தேன். கீழே கையெழுத்தைப் பார்த்தேன்:
“சுலபா.”
கடிதத்தைப் படிக்கலானேன்:
அன்புள்ள பிரபாகரரே,
நீங்கள் ஏன் வீணுக்கு இத்தனை நாவல்கள் படிக்கிறீர் களோ! ‘வெறுங் கோயிலை’ மூன்று தரம் படித்தீர்கள்; ஆனால் அதில் ஓர் எழுத்துக்கூட உங்களுக்கு விளங்கவில்லை! அது எந்த எழுத்து, சொல்லட்டுமா? ‘ஏ’காரம்!
அந்தப் புஷ்பா அசோகனின் கடிதத்தைப் படிக்கும்போது, ‘உன்னுடைய அசோகன்’ என்று கடைசியிலிருந்த சொற்களைப் பார்த்து, “உன்னுடைய’வாம்! வெறும் ‘உன்னுடைய!’ ‘உன் னுடையவனே’ என்று எழுதினால் என்ன? ஏகாரம் சேர்க்கும் சமயத்தில் பௌண்டன் பேனாவிலுள்ள மையெல்லாம் அடி யோடு தீர்ந்துபோய்விட்டதோ?” என்கிறாள்.
உங்களுடைய கடிதத்தைப் படிக்கையில் என் நிலையும் அப்படித்தான் இருந்தது. ‘ஆண்கள் காதல் விஷயத்தில் லோபிகள். பெண்களான நாங்கள் மட்டும் கர்ணன் போன்ற வர்களே!’ என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
இதைப் படிக்கும்போது நீங்கள் மனத்துக்குள்ளேயே ‘பெண்கள் கர்ணன் போன்றவர்களல்ல; கர்ணயக்ஷிணிகள்!’ என்று சொல்லிக் கொள்வீர்கள் என்பது எனக்குத் தெரியும்!
ஆனால் உங்கள் சொல்லைப் பொருட்படுத்தாமலே நான் ஆழ்ந்த உணர்ச்சியுடன் சொல்லுகிறேன்: காதல் என்பது பெண்ணின் வாழ்க்கையிலே அனைத்துமாகும்!
பல ஆண்கவிகளுக்குக் காதல் என்றால் என்னவென்பது அடியோடு தெரிவதில்லை. கவி கேசவஸுதர் ஒரு பாட்டில் ஆகாயத்தையே தாவிவிட்டார் என்கிறார்களே! அந்தப் பாட்டைக் கேளுங்கள்:
“காதல் கிடைக்குமோ கடைத் தெருவிலே?
காதல் கிடைக்குமோ அய லகத்திலே?
காதல் கிடைக்குமோ மலர் வனத்திலே?
காதல் கிடைக்குமோ வயல் வெளியிலே?”
கடைத்தெருவில் காதல் கிடைக்க அது வெங்காயமா கீரைத் தண்டா? காதல் அயல்வீட்டில் கிடைப்பதாயிருந்தால் வீட்டு இலக்கம் 98-இலுள்ள பிள்ளைக்கும் வீட்டு இலக்கம் 99-இலுள்ள பெண்ணுக்குமாக – இப்படியே படபடவென்று விவாகங்கள் நிச்சயமாகிப் பெண்ணைப் பெற்றவர்கள் யாவரும் நிச்சிந்தையாக இருந்திருப்பார்களே!
காதல் மலர்வனத்தில் பூக்கிறது என்பது உண்மை. ஆனால், அந்த மலர்வனத்தின் பெயரென்ன? தேவவனமா? அல்லவே அல்ல; பெண்ணின் உள்ளம்!
காதற்பயிர் விளையும் வயலுக்குப் பெயர்-?
அதெல்லாம் கிடக்கட்டும். எனக்கு உங்கள் கடிதங்கள் வேண்டாம்; நீங்கள் வேண்டும் !
தங்கள் – அல்ல,
தங்களுடையவளே ஆன,
சுலபா.
கடிதமா இது? அல்ல; கூரிய வாள்!
பிரபாகரனின் உள்ளத்தில் காதல்முறிவினால் ஏற்பட்ட காயம் எவ்வளவு ஆழமானது என்பதை இப்போதுதான் நான் முற்றும் அறிந்துகொண்டேன்.
ஒரு கொடியின் வேர்கள் பூமியில் மிக ஆழமாகப் புதைந் திருக்கின்றன; அந்தக் கொடியில் மொட்டுகளும் தென்படு கின்றன. ஆனால் திடீரென்று ஒரு பேய்க்காற்று அடித்து, வேர்கள் எல்லாம் கிளம்பித் தரையோடு சாய்ந்துவிட்டால், அப்புறம் அந்தக் கொடியும் மொட்டுகளும் காய்ந்து கருக எவ்வளவு நேரம் பிடிக்கும்? பிரபாகரனுடைய மனநிலையும் அப்படித்தான் ஆகியிருக்க வேண்டும்.
அந்த இரண்டு காகிதக் கட்டுகளையும் மாறி மாறிப் பார்த்தேன்.
பரிவு நிரம்பிய பிரபாகரன் பெற்றோர்களின் அந்தக் கடிதங்கள் – அமுதம்!
கா தல்மோகம் கொண்டு நடம்புரியும் பிரபாகரன் காதலி யின் அந்தக் கடிதங்கள்-நஞ்சா?
உலகத்தில் அமுதம் கிடைப்பது அரிது; ஆனால் விஷமோ, பச்சிலைகள் முதல் ரசாயன சாலைவரையில் எங்கு வேண்டு மானாலும் கிடைக்கக்கூடும்!
சே! காதல் விஷமாகாது. ‘ஞானம் அமுதமா, நஞ்சா?’ என்ற சந்தேகம் மனிதனுக்கு அடிக்கடி உண்டாகிறதல்லவா? விபரீதமான சில உதாரணங்களைப் பார்க்கும்போது, காதல் விஷயத்திலும் மனித உள்ளம் இப்படித்தான் ஐயமுறுகிறது.
இல்லவே இல்லை; ஞானம் விஷமல்ல; காதல் விஷமல்ல. ஞானந்தான் மனிதனை இயற்கையினின்றும் வேறுபடுத்தி யிருக்கிறது; மிருகத்தைவிட உயர்ந்த நிலையில் அவனைக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறது. காதலும் அப்படித் தான்-
அவன் பெட்டியிலிருந்த மற்றப் பொருள்களின்மீது என் கவனம் சென்றது. பழைய சில்லறைச் சாமான்களின் பக்கத் தில் மூன்று நோட்டுப் புத்தகங்கள் வைத்திருந்தன.
நான் முதற் புத்தகத்தை எடுத்து, அதில் முதற்பக்கத் தைப் பிரித்தேன். அதில் பெரிய எழுத்துக்களில்.
“என் தற்கொலை!” என்று எழுதியிருந்தது.
– தொடரும்…
– புயலும் படகும், கதை மூலம்: வி.ஸ.காண்டேகர், தமிழாக்கம்: கா.ஸ்ரீ.ஸ்ரீ., முதற் பதிப்பு: டிசம்பர் 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.
![]() |
கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க... |
