புயலும் படகும்
கதையாசிரியர்: கா.ஸ்ரீ.ஸ்ரீ.
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: December 20, 2025
பார்வையிட்டோர்: 165
(1943ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4
3. உண்மை ஒன்றே!

கருணாவின் அந்தக் கடிதத்தை மறுமுறை படித்துங்கூட என் மனம் திருப்தியடையாமலே இருந்ததில் வியப்பில்லை. அவளுடைய எழுத்து முழுவதிலும் நேர்மை இருந் தது; மனத் தெளிவு இருந்தது. தனக்கு உண்டான காதல் அநுபவத்தை அவள் சிறிதும் ஒளிவு மறைவின்றி எனக்கு விளக்கியிருந்தாள்.
ஆனால் அந்த அநுபவம் காதல் சம்பந்தமான என் கற்பனையோடு எவ்விதத்திலும் ஒத்துவரவில்லை. ‘கருணா இன்னும் சிறு குழந்தையாகவே இருக்கிறாள். காதலைப் பார்க்க, அவளு டைய நோக்கு இன்னும் வளர்ச்சி பெறவில்லை. தன் குறுகிய அநுபவத்திலிருந்து அவள் மிகப்பெரிய கொள்கையைக் கண்டு பிடித்துவிட்டாள்! என்ன சொல்கிறாள் அவள்? புயலில் எந்தப் படகுகள் ஒன்றுக்கொன்று அருகில் வருகின்றனவோ, மிருத். தியு வாசலில் எந்தப் படகுகள் ஒன்றுக்கொன்று ஆதாரமா கின்றனவோ அவைதாம் வாழ்நாள் முழுவதும் ஒன்றாகப் பிரயாணம் செய்யுமாம்!’ என்று நினைத்து, எனக்குள்ளேயே சிரித்துக்கொண்டேன்.
இது எவ்வளவு குழந்தைத்தனமான கொள்கை! துஷ்யந் தனும் சகுந்தலையும் ஒருவருக்கொருவர் அருகே வந்த சமயத் தில் அவர்களைச் சுற்றி எந்தப் புயல் சீறிக்கொண்டிருந்தது?’ இயற்கையில் உண்டாகும் புயலைவிட மனத்தில் உண்டாகும். புயல் அதிக விந்தையானது என்பது இந்தக் கருணாவுக்குத் தெரியவே இல்லை. அவள் தன்னை ஒரு பாட்டிக் கிழவியாகப் பாவித்துக்கொண்டு இந்தக் கடிதத்தில், “மிருத்தியு வாசலில்) எந்தப் படகுகள் ஒன்றுக்கொன்று ஆதாரமாகின்றனவோ, அவைதாம் வாழ்நாள் முழுவதும் ஒன்றாகப் பிரயாணம் செய் யும்” என்று எழுதியிருக்கிறாள். அவள் இப்போது என் எதிரில் இருந்தாளானால், நான் இந்த வாக்கியத்தை உரக்க வாசித்து இடியிடியென்று நகைத்து, “இன்டரில் மிருச்சகடிகம் படித் துங்கூட உனக்கு ஒன்றுமே ஏறவில்லை, கருணா! பைத்தியக்காரி! வசந்தசேனைக்கும் சாருதத்தனுக்கும் பரஸ்பரக் காதல் உண் டாயிற்றே, அது மிருத்தியு வாசலிலே உண்டாகவில்லையே; காமதேவனுடைய திருவிழாவிலே அல்லவா உண்டாயிற்று!” என்று அவளிடம் சொல்லியிருப்பேன்.
கருணாவின் காதற்கொள்கையை நான் இம்மாதிரி மனத் துக்குள்ளாகவே பரிகசித்தேன் என்பது உண்மையே. ஆனால் அந்தக் கடிதத்தை மறுபடியும் படிக்க வேண்டும் என்ற ஆவலை என்னால் எவ்விதத்திலும் தடுக்க முடியவில்லை. ‘சிறு குழந்தை களின் பேச்சைக் கேட்பதில் நாம் ஆழ்ந்துவிடுகிறோமே, அது அந்தப் பேச்சில் மிகவும் ஆழ்ந்த சிந்தனைகள் இருக்கும் என்ப தற்காக அல்ல’ என்று நினைத்தேன்.
எனக்குச் சந்துருவின் – என் நண்பர் ஒருவருடைய பிள்ளை யின்-ஞாபகம் வந்தது. அந்த நண்பர் வீட்டுக்குப் போனதும் சந்துரு எங்கும் தென்படா விட்டால் எனக்கு அடியோடு ருசிக் காது. அவன் பேச்சைக் கேட்டால் மனத்துக்கு வெகு ஆனந்த மாக இருக்கும். ஒரு தடவை அவன் தன் தாயோடு எங்கோ பெண்கள் கூட்டத்துக்குப் போயிருந்தான். அங்கே அவன் கையில் அத்தர் தடவினார்கள். வீட்டுக்கு வந்ததும் அவன் எல்லாரிடமும், “என் கையில் தைலம் தடவினார்களே!” என்று தமுக்கடித்தான்.
அப்பாவுடன் அவன் ஒரு தரம் பிரசங்கத்துக்குப் போயி ருந்தான். வீட்டுக்குத் திரும்பி வந்ததும் அம்மாவிடம் அவன் சொன்ன செய்தியைக் கேட்டால் சிரித்துச் சிரித்து வயிறு புண் ணாகிவிடும். அம்மாவிடம் திரும்பத் திரும்ப, “அம்மா, அங்கே நிறையப் பேர்கள் கூடியிருந் தார்கள். அப்பா அவர்களோடு சண்டை போட்டுக்கொண்டிருந்தார். எனக்குப் பயமாகப் போய்விட்டது. இதோ பாரம்மா; அவ்வளவு சண்டை, போட்டும் அவரை யாருமே அடிக்கவில்லை, அம்மா!” என்று சொன்னானாம்.
கருணா தன் கடிதத்தில் செய்த காதல் விமரிசனத்துக்கும் சந்துருவின் இந்தப் பேச்சுக்கும் வித்தியாசம் ஏது? ஆனால் அர்த்தமில்லாத சில விஷயங்களிலும் ஒரு விதமான சலிக்காத இனிமை இருக்கிறது அல்லவா?
அந்தக் கடிதத்தை மூன்றாம் முறை படித்தபோது, ‘கருணா எனக்கு மிகவும் நீண்ட கடிதமொன்று எழுதவேண்டும் என்ற என் விருப்பம் பல நாள் கழித்து நிறைவேறியது. இதி லுள்ள விஷயம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்; இதை நான் ஜாக்கிரதையாக வைத்திருப்பேன்’ என்று நினைத்தேன்.
மூன்றாவது முறை படிக்க ஆரம்பித்தபோது, கருணாவும் சந்துருவைப் போலவே அறியாதவள் என்று தீர்மானித்திருந் தேன். ஆனால் படித்துக்கொண்டே வருகையில், சில வாக்கி யங்கள் எனக்கு மிகவும் கவர்ச்சியுள்ளனவாகத் தோற்றின. நாம் சாலையில் போகையில் தொலைவிலிருந்து நிரம்ப மலர்கள் தென்படுகின்றன; ‘ஏதோ காட்டுப் பூவாக இருக்கும்; கிடந்து தொலையட்டும்’ என்று நினைத்து அவற்றை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் போகிறோம். பிறகு சற்றுத் தூரம் சென்ற தும் அந்த மலர்களின் இனிய மணம் நம்மீது வீசினால் எப்படி இருக்கும்? அந்தக் கடிதத்தில் நாலைந்து வாக்கியங்களைப் படித்தபோது என் நிலை அப்படித்தான் இருந்தது.
“கல்லூரியில் உண்டாகும் காதல் ஒரு கனவாகும்.”
“மனிதன் எதை ஆதாரமாகக் கொண்டு உயிர் வாழ்கி றானோ, சமயம் வரும்போது எதன் பொருட்டு ஆனந்தமாகச் சாகவும் தயாராகிறானோ, அத்தகைய காதல் வெறும் கனவாக இருந்தால் நடக்காது.
“காதல் என்றால் மனமும் மனமும் சேருதல் என்று தீர்மானித்தேன்.”
“ஒளியும் நிழலும் கலப்பதனால் அழகிய ஓவியம் உதயமா வதுபோல ஆண் பெண் இவர்களுடைய உணர்ச்சிகளின் கலப் பினால் குடும்பத்தில் இன்பம் தோன்ற வேண்டும்.”
அப்புறம் கடைசி வாக்கியம்;
“புயலில் எந்தப் படகுகள் ஒன்றுக்கொன்று அருகில் வரு கின்றனவோ, மிருத்தியு வாசலில் எந்தப் படகுகள் ஒன்றுக்கு ஒன்று ஆதாரமாகின்றனவோ, அவை தாம் வாழ்நாள் முழு வதும் ஒன்றாகப் பிரயாணம் செய்யும்.”
‘பூதக்கண்ணாடியைக் கொண்டு வெட்டுக் காயத்தைப் பார்ப்பதுபோல, கருணா தன் வாழ்க்கை அநுபவங்களை ஊடு ருவிப் பார்த்திருப்பாளோ?’ என்று கணப்பொழுது நினைத்துப் பார்த்தேன்.
உடனே எனக்குச் சிரிப்பு வந்தது. மகளிர் எவ்வளவுதான் கல்வி கற்றாலும் வாழ்க்கையைத் தத்துவக் கண்கொண்டு பார்க்க முடியுமா? முடியாது! சில பையன்கள் சிறு வயதி லேயே முதுமைப் பாவனையை ஏற்றுக்கொள்ளுகிறார்கள் அல்லவா? அதுபோலவேதான் கருணாவும் இளம் வயதிலேயே தத் துவ ஞானியாக மாற முயலுகிறாள். ஆற்றங்கரையில் நின்று கொண்டு வெள்ளத்தைப்பற்றிப் பிரமாதமாக உபந்நியாசம் செய்வதைவிட, வெள்ளத்தில் நீந்தி அக்கரை சென்று பிறகு வாயைத் திறப்பதுதான் கெட்டிக்காரத்தனம் என்பது அவ ளுக்கு ஜன்மத்திலும் தெரியாது. நாளைக்கு ஊரார், ‘டிராயிங் உபாத்தியாயரை மணந்துகொண்ட பட்டதாரிணி!’ என்று அவளைப் பரிகசிக்க ஆரம்பித்தால்-இரண்டு பிள்ளைகள் பெற்ற பின்பு ‘நல்ல சம்பாத்தியமுள்ள புருசன் கிடைத்திருந்தால் இப்போது சுகமாக இளைப்பாறிக்கொண்டிருக்கலாமே!’ என்று அவளுக்குத் தோன்ற ஆரம்பித்தால்-அப்போது இந்தப் பைத் தியக்காரி தவியாகத் தவிப்பாள்.
மனிதனின் கற்பனை எவ்வளவு யதேச்சையாகச் செல்லு கிறதோ அவ்வளவு கடுமையாகவும் இருக்கிறது.
என் கண்முன்பு, இனி ஐந்து ஆண்டுகளுக்கு அப்புறம் நடக்கப்போகும் சம்பவம் உருக்கொண்டு நின்றது. கருணா, தன் கண்ணிலிருந்து நீர் வடித்த வண்ணம், “என்னை மன்னியுங்கள். மனோகரரை மணந்துகொண்டது நான் செய்த பெருந்தவறு. தேவதத்தரே, நான் உங்களுடைய வளாகியிருந்தால்…?” என்று என்னிடம் சொல்லுகிறாள்.
ஐந்து வருஷங்களுக்குப் பின்பு நடக்கப்போகும் இந்த நிகழ்ச்சியை நினைத்தவுடனே, எனக்கு ஒரு நிமிஷம் ஆனந்த முண்டாயிற்று என்பது உண்மை. ஆனால் பிற்பகலில் கோர்ட்டில் தேநீர் அருந்தியபோதும், மாலையில் பந்து விளை யாடியபோதும், அவ்வளவேன், பத்து மணிக்கு மெத்தென்று பஞ்ச சயனத்தில் படுத்துக் கண்களை மூடிக்கொண்ட பின்னுங் கூட, கருணாவின் அந்தக் கடைசி வாக்கியம் என் மனத்துக்குள் அடிக்கடி தலைநீட்டியது:
“புயலில் எந்தப் படகுகள் ஒன்றுக்கொன்று அருகில் வரு கின்றனவோ, மிருத்தியு வாசலில் எந்தப் படகுகள் ஒன்றுக்கு ஒன்று ஆதாரமாகின்றனவோ அவைதாம் வாழ்நாள் முழு வதும் ஒன்றாகப் பிரயாணம் செய்யும்.”
சிறு வயதில் கேட்டிருந்த ஒரு பைரவிக் கீர்த்தனையின் பல்லவி என் நினைவுக்கு வந்தது.
ஒரு நாடகத்தில் வரும் பாட்டு அது. அந்ந நாடகத்துக் கதை, அதில் நடித்தவர்கள், அதில் வரும் மற்றப் பாட்டுக்கள்- அவ்வளவேன், அந்தப் பைரவிக் கீர்த்தனையின் மற்ற அடிகளைக் கூட – நான் வெகு சீக்கிரத்தில் மறந்துவிட்டேன்; ஆனால் ஆண்டுகளின் பின்னால் ஆண்டுகள் கழிந்த போதிலும்,
“இளைத்தேன் ஏழை ஐயா – விதி
என்னையும் துயரத்தில் இருத்தியே வாட்டுது ”
என்ற அடிகளை மட்டும் நான் எப்போதும் மறக்கவே இல்லை. வேறு எந்தப் பைரவி உருப்படியைக் கேட்கும்போதும் அவை கட்டாயம் என் ஞாபகத்துக்கு வரும். அது மட்டுமன்று; எங்காவது தனியே உட்கார்ந்து மாலைவேளையின் அழகைப் பார்க் கும்போதும், சாய்வு நாற்காலியில் கண்களை மூடிக்கொண்டு’ சாய்ந்தபின்பும் அவை என் நாவில் தவமும். என் விழித்த மனத்துக்கும் தூங்கிய மனத்துக்கும் இடையே உள்ள எல்லைக் கோட்டின்மீது அவை வருஷக் கணக்காக நிற்பவைபோலத் தோற்றின.
அந்தப் பைரவிப் பல்லவியைப் போலவே கருணாவின் இந்த வாக்கியமும் என் மனத்தில் விடாமல் சுழலலாயிற்று. செவ் வாய், புதன், வியாழன் இந்த மூன்று நாட்களாக நான் அவள் கடிதத்தைக் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. ‘நாடகமேடை யில் வர்ணம் பூசிக்கொண்டு வரும் நடிகர்களும் நடிகைகளும் மிகவும் அழகாகத் தோற்றுகிறார்கள். ஆனால் அவர்களுடைய உண்மை உருவத்தை நாம் அங்கே காண்பதேது? மனிதர்களின் சிந்தனைகளும் அத்தகையனவே. உலகில் ஒவ்வொருவனும் தத்துவஞானம் பேசுகிறான். ஆனால் அதைப் பேசுவதன் நோக்கம் உண்மையை ஆராய்வதற்கன்று; உண்மையை மாற்றி மறைப்பதற்காகவே. மனிதனுடைய தத்துவஞானம் என்பது, தன் சொந்தப் பலவீனத்தை மறைக்கும் போர்வை. கருணா வெறுத்துப் போய் அந்த டிராயிங் உபாத்தியாயரை மணந்துகொண்டிருப்பாள். கடிதத்திலே மட்டும், அவள் தன் தத்துவ உறுதியினாலேயே அந்த டிராயிங் உபாத்தியாய ருக்கு மாலையிட்டதாக ஒரு தோற்றத்தைப் படைத்திருக் கிறாள்’ என்றது என் மனம்.
மூன்று நாட்களாக இந்தச் சிந்தனைகள் என் மனத்தில் ஆழப் பதிந்துவந்தன. ஆகையால் முதல் நாள் மூன்று தடவை” படித்த அந்தக் கடிதத்தை மறுபடி நான் பிரித்துக்கூடப் பார்க்கவில்லை.
ஆனால் கருணாவின் அந்தக் கடைசி வாக்கியம் மட்டும் என் மனத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது. காலில் தைத்த முள்ளைச் சட்டென்று இழுத்து எடுத்த பின்பும் அதன் நுண் ணிய கூர் உள்ளே உறுத்துகிறதல்லவா? அப்படித்தான் அந்த வாக்கியமும் அடிக்கடி என் மனத்தைக் குத்தியது.
பெரிய முள்ளை எடுப்பது எளிது; ஆனால் இப்படி முறிந்த. முள்ளின் முனையை எடுப்பது இலேசல்ல.
சனிக்கிழமை விடிந்ததும், கருணாவின் கடிதம் வருவதற்குச் சற்று முன்னால் என்னோடு பேசிவிட்டுப் போன அந்த மனிதனின் ஞாபகம் எனக்கு வந்தது:
‘நாளை ஞாயிற்றுக்கிழமை! அவன் என்னை அந்த ஊருக்கு அழைத்துப்போக நாளைக் காலையில் வருவான்!’
என் மனம் அந்த ஊருக்குப் போய்ச் சேர்ந்தது. ‘கணவனை விட்டு மற்றொருவனுடன் ஓடிப்போய், பின்னால் அந்த மனித னின் மாயவலையிலிருந்து எப்படித் தப்புவது என்ற சிக்கலில் ஆழ்ந்த பெண்மணி நாளைக்கு என்னைச் சந்திப்பாள். தன்னு டைய எந்த எந்த அநுபவங்களை அவள் சொல்லப் போகி றாளோ? அவள் நாணயமுள்ளவளாக இருப்பாளா? ஆனால், உண்மையை ஆராய்வதற்கு வெறும் நாணயம் மட்டும் போதாது. முதலில் தன்னைப் பிறருடைய பார்வைகொண்டு பார்க்கத் தெரிய வேண்டும்; பின்பு தனக்குத் தெரிவது அனைத்தையும் வாயால் சொல்லத் தெரிய வேண்டும்; அப் போதுதான் அந்த ஆராய்ச்சி சாத்தியமானது’ என்று எண்ணமிட்டேன்.
‘அந்தக் குக்கிராமத்துப் பெண்ணின் சரித்திரம் எப்படி இருந்தபோதிலும், கருணாவின் காதலைப்பற்றிய தத்துவ ஞானத்தை முறித்தெறிவதற்கு அவள் எனக்குப் பெரிதும் உபயோகப்படுவாள்! அந்த ஸ்திரீயின் கணவன் கெட்டவனாக இருப்பான்; அவளைப் பல விதங்களில் ஏமாற்றியிருப்பான். இல்லாவிட்டால் அவள் மற்றொருவனுடன் ஏன் ஓடுகிறாள்? இந்த இரண்டு படகுகள் புயலில் ஒன்றுக்கு ஒன்று அருகில் வந்தன என்பதைக் கருணாகூட ஒப்புக்கொள்ள வேண்டியிருக் கும். ஆனால் அவற்றில் ஒரு படகு இப்போது மற்றொன்றை விட்டு ஏன் தொலைவில் போய்க்கொண்டிருக்கிறது என்ற சிக்கலை எந்த வகையிலும் பிரித்துக்காட்ட அவளால் முடியப் போவதில்லை!’ என்று மனத்தோடு சொன்னேன்.
ரகசியங்கள் நிரம்பிய நாவலைக் கையில் வைத்துக் கொண்டு, அந்தக் கதையிலே என்ன என்ன இருக்குமென்று கற்பனைகள் செய்யும் வாசகனைப் போல, நான் அந்தப் பெண் மணியைப்பற்றிப் பலவிதமான தர்க்கங்கள் செய்வதில் ஆழ்ந்திருந்தேன்.
சனிக்கிழமை முழுதிலும் கருணாவின் அந்த விசித்திர வாக் கியம் ஒரே ஒரு முறைதான் என் நினைவுக்கு வந்தது.
ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்ததும் எனக்கு என் இளமைப்பருவம் நினைவுக்கு வந்தது. அந்தக் காலத்தில் ஞாயி றன்று எழுந்தவுடன் கிரிக்கெட் பந்தயக்காட்சி எனக்குப் புலப்படும். அன்று இருந்ததுபோலவே இன்றும் என் மனத் தில் ஒரு விதமான குறுகுறுப்பு உண்டாயிற்று.
எப்போதும் முன்பின் பார்த்திராத அந்த ஊர், அந்த ஸ்திரீ, சங்கடத்திலிருந்து அவள் விடுபட வேண்டும் என்று முயற்சிகள் செய்யும் அவளுடைய நண்பன்-
‘அந்த நண்பனிடம் அவளுக்கு ஏதாவது காதல் கீதல் இருக்குமோ?’ என்ற கேள்வி என் மனத்தில் எழுந்தவுடனே, எழுத்தாளர்கள் நாடகங்களையும் நாவல்களையும் எப்படி ஜோடிக்கிறார்கள் என்பதை நான் முற்றும் அறிந்துகொண் டேன். ‘என்னிடம் வந்த அந்த மனிதனுக்கு அந்த ஸ்திரீ தேவையாக இருப்பாள்; அதனால்தானே அவன்—சீச்சீ! அவ னுடைய இந்தத் தொந்தரவில் நான் அகப்பட்டுக்கொள்ளா மல் இருப்பதே நல்லது. ஊர்பேர் ஒன்றும் விசாரிக்காமல் நான் அவனிடம் வருவதாக ஒப்புக்கொண்டது சரியன்று.’
எனக்கு இந்த எண்ணம் தோன்றியதற்கும் அந்த மனிதன் வாசலில் வருவதற்கும் சரியாக இருந்தது.
‘இன்று எனக்கு உடம்பு சரியில்லை’ என்று இப்படி ஏதா வது சொல்லித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால், ‘விஷயங்களை அறியவேண்டும் என்ற ஆவல் பயத்தைக் காட்டிலும் அதிக வலுவுள்ளது’ என்ற கொள்கையே முடிவில் உண்மையாயிற்று.
இருட்டியதும் அந்த ஸ்திரீ என்னைப் பார்க்க வருவாள் என்று, பஸ்ஸில் ஏறியபோது அவன் என்னிடம் சொன்னான்; ஆனால் அந்தக் கிராமத்துக்குப் போக ஞாயிறன்று காலையில் பத்து மணிப் பஸ் ஒன்றுதான் இருந்தது!
பஸ்ஸில் உட்கார்ந்ததும், ‘அந்த ஊரில் சாயங்காலம் வரையில் நமக்கு எப்படிப் பொழுது போகும்?’ என்ற யோசனையில் மூழ்கினேன்.
சரியாகப் பதினொரு மணிக்கு நாங்கள் பஸ் ஸ்டாண்டில், -அதாவது ஒரு பலசரக்குக் கடைக்கு அருகில் இறங்கினோம். வழியில், பாதம் அமிழ்ந்து போகும்படியான புழுதி இருந்தது. சுற்றுப்புறமெங்கும் படை பதைக்கும் வெயில், கையில் இருந்த காலணாவுக்கு மண்ணெண்ணெய் வாங்கிப்போக வந்த, ஆறு ஏழு வயதுள்ள ஒரு பெண்ணின் கூந்தல் ஒரே சடையாக இருந்தது.
ஸ்டாண்டிலிருந்து அந்த ஊர் அரைமைல் தொலைவு இருந் தது. அவன் முன்னே வழி காட்டிச் செல்ல, நான் பின்னால் “சோர்வுற்றவனாகச் சென்றேன். ‘ஒரு சினிமாப் படத்தின் கடைசிப் பகுதி நன்றாக இருக்க, அது வரும்வரையில் படம் பார்ப்பவர்கள் கொட்டாவி விட்டுக்கொண்டு உட்கார்ந் திருக்க நேர்ந்தால் எப்படியோ, அப்படித்தான் இன்று நம் நிலைமையும் இருக்கும்’ என்று நினைத்து, நான் மெதுவாகவே அடியெடுத்து வைத்துக்கொண்டு போனேன்.
நடுவிலேயே, அந்த மனிதன் பின்னால் திரும்பி என்னைப் யார்த்து, “ஐயா, இதோ வந்துவிட்டோம்; கொஞ்ச தூரந் தான். ராமபட்டரின் வீட்டுக்குப் போய்விட்டால் உங்களுக்கு வெகு சுகமாக இருக்கும். நேற்றுச் சாயந்தரமே நான் அவ ரிடம் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்” என்றான்.
ராமபட்டர் என்ற உஞ்சவிருத்திப் பிராம்மணர் வீட்டில் நான் தங்குவதற்கு அவன் ஏற்பாடு செய்திருக்கிறான் என்பது அவன் பேச்சிலிருந்து வெளியாயிற்று.
அன்று முத்தண்ணா சொன்ன அவர் சரிதம் எனக்கு ஞா கம் வந்தது. காலேஜில் இருந்தபோது ஒரு சமையற்காரி” யின் பெண்ணை அவர் காதலித்தார். ஆனால் ஒரு வைதிக னுக்கு அவள் வாழ்க்கைப்பட்டாள். சமீபத்தில் ஒரு நாள் உவைதிக இந்த வைதிகனின் வீட்டிலேயே ஒரு வழக்கின் நிமித்தம் அவர் தங்கினார். அந்தக் குக்கிராமத்து மண்வீட்டுக்கு எஜமானி யாக இருந்த எலும்புந்தோலுமான பெண்மணியே அவருடைய பழங் காதலி. ஆனால் அவர் அவளை யாரென்றுகூடத் தெரிந்து” கொள்ளவில்லை!
அவர் சொன்ன ஊர்ப் பெயரை நினைவுபடுத்திப் பார்த்தேன்.
நான் போகும் ஊர்தான் அது!
ஒரே கணத்தில் என் மனம் வேறு திசையில் திரும்பியது.
எவளைப்பற்றி விசாரணை செய்ய நான் வந்திருந்தேனோ, அவள் விஷயத்தை ஒருபுறமாக ஒதுக்கி வைத்துவிட்டேன். முத்தண்ணாவின் வாழ்க்கையிலே வந்து மறைந்தவளும், ஒரு வைதிகருக்கு மனைவியாகிப் பட்டிக்காட்டில் வாழ்க்கையைக் கழிப்பவளுமான அந்தப் பெண்மணியைப் பார்க்கும் ஆவல் என் மனத்தில் வலுத்தது. ஆனால், அவள் எங்கே இருக் கிறாள், அவள் கணவனின் ஊர் பெயர் என்ன – இவையெல் லாங்கூடத் தெரியாமல் அவளை நான் எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? ‘ஊரில் பிராம்மணர்களின் வீடுகள் நாலைந்துதாம் இருக்கும்; ஆகையால் அவளைக் கண்டுபிடித்துவிடலாம்’ என்று வை வத்துக்கொள்வோம். அப்படியே அவளைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தாலும், அவளுடைய வாழ்க்கை அநுபவங்களை நான் எப்படி அறிய முடியும்?
“ராமபட்டர் தவிர இன்னும் எத்தனை பிராம்மணர்கள் இருக்கிறார்களடா, உங்கள் ஊரில்?” என்று, என்னை அழைத் துச் சென்றவனைக் கேட்டேன்.
“இன்னுமா?” என்று அவன் சிரித்துக்கொண்டே, “ஒரு புரோகிதர் வயிற்றை நிரப்புவதற்கே பிரம்மப் பிரயத்தனமா யிருக்கிறது! அப்படியிருக்க-” என்று இழுத்தான்.
நான் பரபரவென்று நடக்கலானேன். எப்போது ராம பட்டரின் வீட்டுக்குப் போவோம், எப்போது அந்தப் பெண் மணியைப் பார்ப்போம் என்று ஆகிவிட்டது எனக்கு. பேசிக்கொண்டே இருக்கையில் நாம் சகஜமாக முத்தண்ணா வைப்பற்றிப் பேச்செடுத்தால், அந்த அம்மாளின் முகத்தில் ஏதாவது வேறுபாடு தோன்றாமல் இராது என்று என் மனம் தீர்மானித்தது. அவளுக்கும் முத்தண்ணாவுக்கும் உண் டான முதற் காதல் கனவாக இருக்கலாம்! ஆனால் மனிதன் தன் அநுபவங்களை மறந்தாலும் கனவுகளை மறப்பதில்லையே!
என்னுடன் வந்தவன், “ஐயா!” என்று கூக்குரல் போட்ட போதுதான் அந்த மயக்கத்திலிருந்து விழித்தேன்.
சுற்றுமுற்றும் பார்த்தேன். வாசலிலிருந்த துளசிச்செடியின் கறுத்த கதிர்கள் மிகவும் மோகனமாக இருந்தன பசுமையழகு அந்தக் கதிர்களிலே இல்லை என்றாலும் மென்மை யான நெற்கதிர்கள்போலத் தோற்றிய அந்தக் கதிர்கள் துளசிச் செடியினுடைய வாழ்வின் வெற்றியை வெளிப்படுத்தின.
வாசற்புறம் அழகாக மெழுகியிருந்தது. துளசிச் செடிக்கு முன்னால் கோலம் இட்டிருந்தது. வாசலுக்கு அப்புறத்தில் காயவைத்திருந்த வறட்டிகள்கூட ஒரே அளவுள்ளவையாக இருந்தன. சற்றுத் தள்ளி வாழைத் தோட்டம் போட்டிருந் தார்கள். நன்றாகச் செழித்து வளர்ந்த வாழை மரமொன்று குலை தள்ளியிருந்தது. அந்தக் குலைகூட ஏதோ ஒப்புக்கென்று சுற்றப்பட்டிருக்கவில்லை; ஒழுங்காகக் கட்டியிருந்தது.
ராமபட்டர் வாசலில் வந்து நின்றதால் என் கவனம் முன் புறத்தில் செல்லவில்லை. இல்லாவிட்டால் வீட்டுக்கு வெளியே இருந்த இத்தகைய சின்னஞ்சிறு காட்சிகளைப் பார்ப்பதி லேயே மூழ்கிப்போயிருப்பேன்.
ராமபட்டரின் பரந்த நெற்றியிலும் மெலிந்த புஜங்களி லும் விபூதிப்பட்டைகள் இருந்தன. அவருடைய பஞ்சகச்ச வேஷ்டி முழங்காலுக்குக் கீழே வரத் தயங்கியது. சந்தியா வந்தனமோ பூஜையோ செய்துகொண்டிருந்தபோது நடுவி லேயே எழுந்து வந்துவிட்டார்!
“என்னடா, ஸக்கியா?” என்று என்னோடு வந்தவனைக் கேட்டுக்கொண்டே, என் முகத்தைப் பார்த்தார். அவர் முகத்தில் திடீரென்று சிரிப்புத் தவழ்ந்தது. நான் திகைத் தேன். இதற்கு முன்பு அவரை நான் எப்போதுமே பார்த்த தில்லை. “வக்கீல் ஐயாவை அழைத்துக்கொண்டு வந்துவிட் டேன்!” என்றான் ஸகாராமன்,
“நீங்கள் வாமனராவின் பிள்ளையா?” என்று ராமபட்டர் தயங்கியவாறு என்னைக் கேட்டார். ‘இந்த ஆசாமிக்கு ஏதாவது மந்திரம் தந்திரம் வசியமாக இருக்குமோ?” என்ற கேள்வி என் மனத்தில் எழுந்தது. இந்தப் பிராம்மணனுக்கு என் அப்பாவின் பெயர் எப்படித் தெரியும்?
“நான் வாமனராவின் பிள்ளைதான். என் பெயர் தேவதத்தன்.”
என் வாயிலிருந்து இந்தச் சொற்கள் வெளிவந்தனவோ இல்லையோ, பட்டர் என் அருகில் ஓடிவந்தார்; என் இரு தோள்களின் மீதும் கைவைத்து என்னை உற்றுப் பார்த்து “உன் தகப்பன் அச்சாகவே இருக்கிறது உன் முகம்!” என்றார். உடனே ஸகாராமனிடம் திரும்பி, தோஷமாக வீட்டுக்குப் போ. இந்த வக்கீல் ஐயா யாரும் “அடே ஸக்கியா, நீ சந் அயல்மனுஷன் அல்ல. இவன் என் பள்ளிக்கூடத்து நண்ப னின் பிள்ளை. வழக்கில் சம்பந்தப்பட்ட நிலபுலன்களை இவ னுக்குக் காட்டவேண்டுமானால், சாயங்காலம் வெயில்தாழ வா. இப்போது நீ போகலாம்” என்றார்.
எனக்குச் சிரிப்பு வராமலிருக்கவில்லை. ‘நான் நிலம் பார்க்க வராமல் ஒரு ஸ்திரீயைப் பார்க்க வந்திருக்கிறேன் என்பது பட்டருக்குத் தெரிந்திருந்தால்-?’ என்று நினைத்தேன்.
என் தோள்மீதிருந்த கையை அவர் சட்டென்று அகற்றி என்னை நோக்கி, “நான் மடியாக இருந்ததை மறந்தே போய் விட்டேனே! சரி, போனால் போகிறது; அருகில் வந்து உன் னைக் கண்குளிரப் பார்த்தேனே, அதுவே போதும். வாமன னையே நேரில் பார்த்தது போன்ற திருப்தி எனக்கு உண்டா கிறது. மடிக்கு என்ன பிரமாதம்? கிணற்றங்கரைக்குப் போய் இரண்டு குடம் தண்ணீர் தலையில் கொட்டிக்கொண் டால் மடி வராமல் ஓடியா போகிறது?” என்றார்.
கூடத்தை அடைந்தபோது அவர் என்னை ஒரு படுக்கையி னருகே அழைத்துச் சென்று, “அடீ…” என்று கூப்பிட்டார்..
எலும்புந் தோலுமான ஒரு பெண்மணி கழுத்தைத் தூக்கி மேலே பார்த்தாள். முகபாவத்திலிருந்து அவள் மிகவும் நோயாளியாக இருக்கவேண்டும் என்று தெரிந்தது.
“என்னோடு பள்ளிக்கூடத்தில் வாமனன் என்று ஒருத்தன் படித்தான் என்று உன்னிடம் அடிக்கடி சொல்லிக்கொண் டிருப்பேனே, அவனுடைய பிள்ளை, இதோ வந்திருக்கிறான்;. பார். ‘ஐயோ! பிள்ளை போய்விட்டானே!’ என்று வருத்தப் படுகிறாயே நீ; இதோ உனக்குப் பிள்ளை!” என்றார் பட்டர்.
அந்த அம்மாள் பரபரப்போடு படுக்கையிலிருந்து எழுந்து கொண்டே, என்னிடம், “சற்று உட்காருங்கள். இதோ நான் தேநீர் போட்டுக் கொடுக்கிறேன்” என்றாள்.
அவள் எழுந்து நின்றாள் என்பது உண்மை. ஆனால் அவள் கால்கள் வெடவெடவென்று நடுங்கின. “அம்மா, நீங்கள் எழுந்திருக்க வேண்டாம். நானே தேநீர் போட்டுக். கொள்ளுகிறேன். காலேஜில் இருந்தபோது ஒரு நாளைக்கு ஏழு தடவை தேநீர் போட்டு எனக்குப் பழக்கம்” என்றேன்..
அவள் மனத்துக்குச் சமாதானம் உண்டாவதற்காகவே- இதைச் சொன்னேன். ஆனால் இதைக் கேட்டவுடனே அவள் முகத்திலிருந்த துயரம் பின்னும் அதிகமாயிற்று. அவள் திடும் என்று படுக்கைமேல் உட்கார்ந்தாள்.
‘பிள்ளை போய்விட்டான் என்று வருத்தப்படுகிறாயே!’ என்று பட்டர் சொன்னார் அல்லவா? ‘காலேஜில் படித்த இவர்களுடைய பிள்ளை எவனாவது செத்துப் போய்விட்டானோ என்னவோ?’ என்று நினைத்தேன்.
எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
வீட்டில் பட்டரையும் அந்த அம்மாளையும் தவிர்த்து வேறு யாருமே தென்படவில்லை.
சரியாக ஒன்றரை மணிக்கு நான் சாப்பிட உட்கார்ந் தேன். ஆனால் எவ்விதமும் சாப்பாட்டில் என் கவனம் செல்ல வில்லை. இந்த இரண்டு மணி நேரத்தில் மனத்தை விசித்திர மாக மாற்றக்கூடிய ஒரு படத்தை நான் பார்த்திருந்தேன். அந்தப் படம், சிந்தனையைத் தவிர மற்ற என் சக்திகளையெல் லாம் முடமாக்கியிருந்தது.
தேநீர் போடுவது முதல் சமையல் செய்வது வரையில் அடிக்கடி அந்தக் கணவனுக்கும் மனைவிக்கும் சச்சரவு நடந்தது. ஆனால் அந்தச் சச்சரவிலே எவ்வளவு தீவிரமான அன்பும், மனத்துக்கு அமைதி தரும் பெருந்தன்மையும் இருந்தன! நோயாளியான மனைவி சமையல் செய்யப் பிடிவாதம் பிடித்த போது, “பெண்களாகப் பிறந்த நீங்கள் எல்லாருமே இப் படித்தான்; கர்ம தரித்திரங்கள்! என்ன இருந்தாலும் நீங்கள் அடுப்பங்கரையில்தான் போய் எரிந்து சாவீர்கள்! இத்தனை வருஷங்களாகச் சமையல் செய்தும் உன் கைத் தினவு தீர வில்லைபோல் இருக்கிறது!” என்றார் பட்டர்.
அவர் அவளைச் சமைக்க விடவில்லை. ஆனால் அவளும் அவருக்கு ஏற்ற மனைவிதான்! படுக்கையில் படுத்துக் கிடக்க வில்லை. தேங்காய் துருவுவதென்ன, போடுவதென்ன, ஸ்நானத்துக்கு வெந்நீர் கடவைப்பதென்ன மாங்காய் ஊறுகாய் -பட்டருடைய பார்வைக்குத் தப்பி அவள் ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டேதான் இருந்தாள்.
பாதிக்குமேல் தலை நரைத்துப் போனவர், பஞ்சகச்ச மணிந்த அந்தப் புரோகிதர்; துணி உலரப் போடும் மூங்கில்” போன்றவள் அவர் மனைவி! ஆனால் அவ்விருவரும் தமது மண் வீட்டில் ஒருவர்மீது மற்றவர் செலுத்திய காதல், அரண்மனை யில் இளம் பிராயத்தினரான ராஜா ராணிகளின் காதலைக் காட்டிலும் அதிகமாக என் உள்ளத்தைக் கவர்ந்தது.
அவ்விருவருடைய அகராதியில் ‘காதல்’ என்ற சொல் லுக்கு ஒரே அர்த்தந்தான் இருந்தது: காதல் என்றால் பிறருக் காக வாழும் எண்ணம்; தமருக்கு இன்பம் தரவேண்டும் என்ற பித்து! இந்தப் பித்தின் லட்சணங்கள் அந்தக் கணவனிடமும் மனைவியிடமும் அடிக்கடி தெரிந்தன.
கருணாவின் அந்த வாக்கியத்தை நினைந்து எனக்குள் ளேயே சிரித்தேன். என்ன சொல்லுகிறாள் அவள்? ‘புயலிலே எந்த இரண்டு படகுகள் ஒன்றுக்கு ஒன்று அருகில் வருகின்ற னவோ அவைதாம்’ என்கிறாள். குக்கிராமத்தில் ஜன்மம் முழுவதையும் கழிக்கும் இந்தக் கணவன் மனைவிகளின் வாழ்க் கையிலே எந்தப் புயல் வந்திருக்கும்? குழந்தைகள் மரப்பாச்சி களுக்குக் கல்யாணம் நடத்துவதுபோலப் பெற்றோர்கள் இவர் களுக்கு மணம் செய்வித்திருப்பார்கள்; அப்புறம் இவர்களுக்கு. நாலைந்து குழந்தைகள் பிறந்திருக்கும்! கணவன் புரோகிதத் தொழில் செய்யவேண்டியது; மனைவி சமையல் செய்யவேண்டி யது; இந்த முறை இந்த வீட்டில் வருஷக் கணக்காக நடந்து வந்துகொண்டிருக்கும். இத்தகைய குடும்பத்தில் சங்கடங்கள். எங்கிருந்து வரும்? ஒரு வாளித் தண்ணீரில் எங்கிருந்தாவது புயல் கிளம்புமா?
மிகவும் பட்டிக்காட்டானான மனிதனுடைய வாழ்வுகூடக் கடல் போன்றதே; அதில் இடையிடையே சிறியனவும் பெரி யனவுமான புயல்கள் வீசி அடித்துக்கொண்டிருக்கும் என் பதைப் பட்டருடைய பேச்சிலிருந்து அறிந்தேன்.
என் சாப்பாடு முடிந்ததும் அவர் மனைவிக்குக் கஞ்சி கொடுத்தார். தாமே இலையைப் போட்டுக்கொண்டு சாப் பிட்டார். பிறகு சமையற் பாத்திரங்களை எல்லாம் மூடிப் யடி மடங்கிவிட்டு, என்னோடு வம்பளக்க வாசல் திண்ணைக்கு வந்து உட்கார்ந்தார்.
முதலில் அவர் என் குடும்பத்து விஷயங்களை எல்லாம் விசாரித்துத் தெரிந்துகொண்டார். நான் அவரிடம் எல்லாச் செய்திகளையும் விரிவாகச் சொன்னேன். ஆனால் கருணாவைப் பற்றி மட்டும் எங்கும் குறிப்பிடவில்லை. தான் எவ்வளவு பாசாங்குக்காரன் என்பது மனிதனுக்கு இவ்விதமான சமயங் களில்தான் தெரிகிறது.
என் வரலாறு முழுவதையும் கேட்டபின்பு பட்டர் தம் விஷயமாகப் பேசலானார். என் தகப்பனாரைப்பற்றிப் பள்ளிக் கூடத்தில் நிகழ்ந்த எத்தனையோ வேடிக்கையான சம்பவங் களைச் சிரித்துக்கொண்டே என்னிடம் சொன்னார். தம் குடும்ப விஷயமாகப் பேசியபோது மட்டும் அவர் குரல் திடீரென்று தழுதழுத்தது. இடையிடையே, ‘சுகமான குடும்பம் என்பது பெரிய புயலிலிருந்து அக்கரைக்குச் செல்லும் படகுபோன் றது’ என்ற ஒரே வாக்கியத்தைப் பல்லவிபோலச் சொல்லிக் கொண்டிருந்தார்.
சமையற்காரியின் பெண் என்று, அவர் முதல்முதலில் மனைவிமீது அதிருப்தியாக இருந்தார். ஆனால் விரத நாட் களிலோ பருவம் பண்டிகைக் காலங்களிலோ தாம் வீடு திரும்பிவர எவ்வளவு நேரமானாலும், அவள் தமக்காகக் காத் திருந்து பட்டினி கிடப்பதை அவர் அறிந்தார். கணவரின் புரோகித வேலைச் சங்கடங்களோடு தொழுவத்து வேலையும் அவர் தலையில் விழுவதைக் கண்டு, அவள் விரைவிலேயே தொழுவத்து வேலைகளையெல்லாம் தானே செய்ய ஆரம்பித் தாள். முதலில் ஒரு முரட்டு எருமை அவளை வேகமாக முட்டி விட்டது; ஆனால் அவள் பயப்படாமல் எல்லா வேலைகளையும் செய்யலானாள்.
பட்டர் தம் மனைவியைப்பற்றி இவ்விதமான சின்னஞ் சிறு விஷயங்கள் எத்தனையோ என்னிடம் சொன்னார். சிறு புஷ்பங்களுக்குக் குறைந்த மணம் இருக்கும் என்பதில்லை. சின்னஞ்சிறு சம்பவங்களைப் பற்றிய அவருடைய நினைவுக் கோவைகளும் அப்படித்தான் இருந்தன. கடைசியில். “பிற ருக்கு இன்பம் தொடுப்பது என்றால் என்ன என்பதை இவள் தான் எனக்குக் கற்றுக் கொடுத்தாள். எவனுக்கு நாம் சுகம் தர வேண்டுமோ அவனுடைய துன்பத்தைக் குறைத்துவிட்டால் போதும்!” என்றார்.
அவருக்கு மொத்தம் மூன்று குழந்தைகள். இரண்டு பெண்கள் அவர் ஸ்திதியைப் பார்க்க நல்ல இடங்களில் வாழ்க்கைப்பட்டிருந்தார்கள். பையனும் மிகவும் கெட்டிக் காரன். ஓர் எஜமானருடைய தயவால் அவன் மெட்றிகுலே ஷன் வரையில் படித்துத் தேறினான். அவனுக்குப் பெருத்த உபகாரச் சம்பளம் கிடைத்தது. வீட்டிலிருந்தும் இயன்ற அளவு அதிக உதவி கிடைக்க வேண்டுமென்றும், காலேஜில் அவன் மிகவும் சுகமாக இருக்க வேண்டுமென்றும் கருதி, ஊரில் பெற்றோர்கள் பயிர்த்தொழில் செய்தார்கள். பிள்ளைக்குப் பணம் கொண்டுபோய்க் கொடுக்க வரும் அதிதிகளுக்கும் தாய் சோறிடுவாள். தன் மகன் பெரியவனாகவேண்டும் என்ற எண்ணத்தினால், அவள் எவ்விதமான கஷ்டங்களுக்கும் சலிக்க வில்லை. எவ்விதமான வேலை செய்வதிலும் அவள் தன்னை ஈன மாக நினைக்கவில்லை. ஆனால்-
என் நெஞ்சை அது சர்ரென்று அறுத்தது. பெற்றோர்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்த பையன், நன்றாக வாயில் கையில் வித்தை வந்தவன், தாய்க்கு ஒரே பிள்ளை – இப்படிப் பட்டவன் திடீரென்று –
பட்டர் நடுவிலேயே எழுந்து உள்ளே போனார். பிள்ளை யின் நினைவினால் அவருக்கு வருத்தம் தாங்கவில்லை என்று நினைத்தேன். ஆனால் அவர் உடனே ஒரு கடிதத்தை எடுத்துக்கொண்டு திரும்பி வந்தார்.
அதை என் கையில் கொடுத்து, “அதற்கு முன்னால் ஜுரம் வந்தால்கூட இவள் எப்போதும் படுக்கமாட்டாள்; இந்தக் கடிதம் வந்ததுமே படுத்த படுக்கையாகிவிட்டாள்” என்றார்.
கடிதம் மிகவும் சுருக்கமாகவே இருந்தது:
ஸ்ரீமான் அப்பா அவர்களுக்கு ஸாஷ்டாங்க நமஸ்காரம்.. உபயகுசலம்.
நான் தங்களுக்கும் அம்மாவுக்கும் பெருந்தவறு இழைத்து விட்டேன். நீங்கள் எனக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறீர்கள்…
ஒரு பணக்காரப் பெண்ணிடம் எனக்குக் காதல் உண்டாயிற்று. இரண்டு வருஷங்களாக அவள் என்னுடன் விளையாடினாள்; இன்றோ ……
இன்று எங்காவது போய்ப் பிராணனை விட்டுவிடவேண்டு மென்று எனக்குத் தோன்றுகிறது. அம்மாவிடம், “உனக்கு. இரண்டு பெண்கள்தாம் பிறந்தனர். ஆண்டவன் உனக்குப் பிள்ளையே கொடுக்கவில்லை” என்று சொல்லுங்கள்.
நான் எங்காவது தொலைவில் போவதாக இருக்கிறேன்.. மனம் அமைதியடைந்தால் திரும்பிவந்து சந்திப்பேன்; இல்லா விட்டால்….
தங்கள்,
துரதிருஷ்டசாலியான
பிரபாகரன்.
நான் பட்டரை மேலே ஏதோ கேட்பதற்கு இருந்தேன். அதற்குள் பக்கத்து ஊரிலிருந்து இரண்டுமூன்று பேர் அவரிடம் வந்துவிட்டார்கள். அவர்கள் வீட்டில் ஷஷ்டி பூஜை நடக்க. வேண்டும். வழக்கமாக வரும் அவர்களுடைய புரோகிதருக்குச் சமயம் பார்த்து ஜூரம் வந்துவிட்டது.
பட்டர், ‘போவதா, வேண்டாமா?’ என்று யோசித்தார். “வீட்டில் இவளுக்கு ஜுரம் வந்திருக்கிறது” என்று அவர்க ளிடம் சொல்லவும் சொன்னார். வீட்டுக்குத் திரும்பிவர இரவு வெகு நேரமாகிவிடுமே என்று அவர் மீனமேஷம் பார்த்தார் ‘போலும்! “நான் தான் இருக்கிறேனே வீட்டில்” என்று நான் சொன்ன பின்புதான் அவர் புறப்பட்டுப் போக ஒப்புக் ‘கொண்டார்.
மாலையில் பட்டர் புறப்படும் வரையில் ஸகாராமன் என்னைப் பார்க்க வரவேயில்லை. நான் வந்த வேலை என்ன ஆகுமோ என்ற சந்தேகத்தால், “இந்த ஸகாராமன் எப்படிப் பட்டவன்? அவனை நம்பலாமா?” என்று அவரைக் கேட்டேன்.
“மிகவும் பிராமாணிகமான மனுஷன்! உன் பீஸ் கீஸ் எதுவும் போய்விடுமோ என்ற சந்தேகமே வேண்டாம். தான் பட்டினி இருந்தாலும் இருப்பான்; பிறருடைய கடனை வைத்துக்கொள்ள மாட்டான்.”
நான் ‘வேண்டாம், வேண்டாம்’ என்று சொல்லியும் கேட்காமல் அந்த அம்மாள் தன் கையாலேயே அடுப்பி “லிருந்து சோற்றை எடுத்து வடித்தாள். என் சாப்பாடு முடிந்து வாசலில் கையலம்ப வந்தேன்; ஸகாராமன் வந்துவிட்டான்.
கையலம்பிவிட்டு நான் ஆவலோடு திண்ணையில் போய் உட்கார்ந்தேன். ஆனால் ஸகாராமன் தனியாகத்தான் வந் திருந்தான்.
நான் அவனைப் பார்த்தவுடனே, “உங்களுக்கு வீண் அலைச் சல், ஐயா! அந்த ராக்ஷஸனுக்கு எப்படியோ அவள் எண்ணம் தெரிந்துவிட்டது. அவன் அவளைக் கொன்றுவிடுவதாகத்தான் பயமுறுத்தினானோ, அல்லது வேறு என்ன காரணமோ, ஆண்ட வனுக்குத்தான் வெளிச்சம்! காலை பத்து மணிக்கு அவள் ஆற் றங்கரைக்குப் போனாளாம்; இந்த நிமிஷம் வரையில் அவள் இருப்பிடம் தெரியவில்லையே! ஊர் முழுவதும் அலசிப் பார்த்து விட்டேன். அக்கம்பக்கத்திலுள்ள இரண்டு ஊர்களில்கூடத் தேடிவிட்டு வந்தேன்” என்றான்.
நிமிஷ நேரம் கழித்து அவன் தன் அரைத்துணி முனையில் முடித்திருந்த ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து முன்னால் நீட் டிக்கொண்டே, ”ஐயா, உங்களுக்கு வெகு கஷ்டம்!” என்றான்.
அந்தப் பணத்தை அவனிடமே திருப்பிக் கொடுத்தேன்.
“அந்தப் பெண்மணிக்கு நான் உதவி செய்திருந்தால் உன்னிடமிருந்து ஐந்து ரூபாய் என்ன அப்பா, இருபத்தைந்து ரூபாய் கேட்டு வாங்கிக்கொண்டிருப்பேன்” என்று எப்படியோ சமா தானம் சொல்லி அவனை அனுப்பினேன்.
உள்ளே வந்து பார்த்தேன். அம்மாள் படுக்கையில் ‘ஊம்’ கூட்டிக்கொண்டிருந்தாள். அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தேன். அது நெருப்பாகக் கொதித்துக்கொண்டிருந்தது. ஜுரத்தோடு அவள் அடுப்பங்கரையில் உட்கார்ந்திருக்கக். கூடாது. ஆனால்-
வெகுநேரம் ஆட்சேப ஸமாதானங்களுக்குப் பின்பு கொஞ் சம் காபி குடிக்க அவள் ஒப்புக்கொண்டாள். அவள் சொன்ன அடையாளங்களைக் கவனத்தில் வைத்துக்கொண்டு, காபிடப்பி யையும், சர்க்கரை டப்பாவையும் தேடிக் கண்டுபிடித்தேன்.
அடுப்பிலிருந்து காபியை இறக்கியபோது என் கையைக் கொஞ்சம் சூடிக்கொண்டேன். ஆனாலும் அது எனக்கு வேடிக்கையாகவே இருந்தது.
அம்மாள் காபி குடித்துக்கொண்டே, “சந்தர்ப்பங்கள் எப்படி அமைகின்றன, பாருங்கள்! நகரத்திலுள்ள ஒரு வக்கீல் இங்கே வந்து, தம் கையால் எனக்குக் காபிபோட்டுத் தரப் போவதாக நேற்று யாராவது என்னிடம் சொல்லியிருந்தால், நான் அதைக் கணப்பொழுதுகூட உண்மை என்று நினைத் திருக்கமாட்டேன். எவ்வளவு கஷ்டம் உங்களுக்கு!” என்றாள். அவளுக்குக் கூச்சம் உண்டாகாதிருக்க, “உங்கள் பிரபா கரனைப் போலத்தான் நானும் உங்களுக்கு!” என்றேன்.
பிரபாகரன் பெயரைக் கேட்டவுடனே அவளுக்குத் துயரம் பொங்கி வந்தது. ஆனால் அதை உள்ளேயே அடக்கிக் கொண்டு, “எனக்கு மட்டும் எழுதத் தெரிந்திருந்தால்?” என்றாள்.
“அப்போது என்ன செய்வீர்கள்?”
அவள் ஒன்றும் பேசமாட்டாளென்று எனக்குத் தோன் றியது. ஆனால் ஜுரத்தில் நிறையப் பேசினால்தான் மனித. னுக்கு இலேசாக இருக்கும் என்ற அநுபவம், வயதான இந்த நாட்டுப்புறத்து ஸ்திரீயின் விஷயத்திலும் உண்மையாயிற்று.
“எனக்கு எழுதத் தெரிந்திருந்தால் நான் பிரபாகரனுக்கு நீண்ட கடிதம் எழுதியிருப்பேன். அதில் நான் பிறந்ததுமுதல் எல்லாச் சரிதத்தையும் எழுதியிருப்பேன். கல்யாணத்துக்கு. முன்பு ஒரு காலேஜ் மாணவனுக்கும் எனக்கும் எவ்வளவு: சிநேகம் உண்டாகியிருந்தது என்பதை அவனிடம் சொல்லி யிருப்பேன்……” என்றாள்.
எனக்கு முத்தண்ணாவின் ஞாபகம் வந்தது. இந்த வயதான அம்மாளின் இருதயத்தில் முதற் காதலின் முளை இன்னமும் ஆழ்ந்து ஊன்றியிருக்கிறது என்ற நம்பிக்கை உண்டாயிற்று..
அம்மாள் என்னைப் பார்த்து, “பிறகு கடைசியில் நான் எழுதியிருப்பேன்: அப்படிப்பட்ட நட்பு விழலுக்குப் பாய்ந்த. நீர்போன்றது; அது நிலைத்திருந்ததானால் இன்று நான் வக்கீ லின் மனைவியாகியிருப்பேன். ஆனால் புரோகிதருக்கு மனைவி யாகியும் நான் சுகமாக வாழ்ந்தேன். சிறு பிள்ளைகளுக்கு ஒரு, விஷயம் தெரிவதில்லை: இளம்பிராயத்து நட்பு நெற்குவியல் போன்றது. வெறும் நெல்லை யாரும் உண்பதில்லை; உண் டாலும் அது யாருக்கும் ஜீர்ணமாவதில்லை. அந்த நெல்லை உலக்கையால் குற்ற வேண்டும்; பிறகு அதைச் சுடவைத்த, பானையில் கொதிக்க வைக்கவேண்டும்; அப்போதுதான் அது ஜரிக்கும்” என்றாள்.
கருணாவின் அந்தக் கொள்கையில் இருந்த உண்மையைத், தான், படிப்பில்லாத இந்த அம்மாள் தன் பாஷையிலே சொல்லிக் காண்பித்துக்கொண்டிருந்தாள்!
– தொடரும்…
– புயலும் படகும், கதை மூலம்: வி.ஸ.காண்டேகர், தமிழாக்கம்: கா.ஸ்ரீ.ஸ்ரீ., முதற் பதிப்பு: டிசம்பர் 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.
![]() |
கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க... |
