புதிய அத்தியாயம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன் (இலங்கை)
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 4, 2025
பார்வையிட்டோர்: 12,931 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கல்லூரி எல்லை மதிலில் கரைந்தவண்ணமிருந்த காகங்கள், காரியாலயத்திலிருந்து கேட்ட மணியோசையினால் வெகுண்டெழுந்து வகுப்பறைகளை வட்டமிடத் தொடங்கின. 

எப்போது மணியடிக்கும் என ஏங்கியவண்ணமிருந்த மாணவர்கள், மணியோசை கேட்டது தான் தாமதம், தம் வகுப்பறை யிலிருக்கும் ஆசிரியரையும் மனதிற் கொள்ளாது வகுப்பறைகளை விட்டு வெளியேறித் தத்தமது பாதைவழியே செல்கின்றனர். ஆசிரியர்களும் அதனைக் கவனிக்காதவர்கள் போல மாணவர்களை முந்திக்கொண்டு வெளியேறுகின்றர். 

போசன மணியடித்ததையும் மனதிற் கொள்ளாது தமிழ்ப் பாடத்தின் ‘அன்றைய’ அத்தியாயத்தையே முடிப்பதில் கண்ணாயிருந்த திவாகரன் மாஸ்டர், வெளியில் மாணவர்கள் போடும் கூச்சலால் தனது வேலையைத் தொடர முடியாது போகவே ‘மிகுதிப் பாடத்தைப் பின்னேர வகுப்பில் தொடர்வோம்……’என்று மாணவர்களுக்குக் கூறிவிட்டு உணவருந்துவதற்காக கல்லூரி ‘ஸ்ராஃப் ரூமை’ நோக்கிச் செல்கின்றார். 

அதிபரின் அறையைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தவர், தன்னை யாரோ அழைக்கும் சப்தத்தைக் கேட்டுச் சற்றே திரும்பிப் பார்க்கின்றார். 

சக ஆசிரியை மல்லிகா தான் மிகவும் கலவரத்துடன் காணப்பட்டாள். 

“வட் மல்லிகா? வட் ஹபன்ற் ரு யூ?’ 

“பிளீஸ் ஸ்ராப் ரூமுக்கு வாங்க. அங்கை பேசலாம்.” 

ஊழியர் அறையில் சாப்பாட்டு மேசையில் எவருமே இருக்க வில்லை. எல்லா ஆசிரியர்களும் ‘கரம்’ அடிப்பதிலேயே கண்ணாயிருந்தனர். இதனால் அந்த மேசையில் அவர்கள் இருவரும் சுதந்திரமாகவே உரையாடக்கூடியதாய் இருந்தது. திவாகரன் சாப்பாட்டுப் பொட்டலத்தை அவிழ்த்துச் சாப்பிடத் தொடங்கினார். மல்லிகா சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரித்தபடியே திவாகரன் காதருகில் ‘எதையோ ‘ சொல்கிறாள். திவாகரன் முதலில் திடுக்கிட்டுப் போனார். 

“யெஸ் திவாகர். கேள்விப்பட்டவுடனே நானும் உப்பிடித்தான் அதிர்ந்தே போனன்.” 

“மல்லிகா…. மாது இப்படிச் செய்வானென்டு நான் கனவிலும் நினைக்கவேயில்லை.” 

“நான் மட்டுமென்ன நினைச்சா இருந்தன்?” 

“மல்லிகா…..இப்ப கவலைப்பட்டு என்னம்மா பிரயோசனம்? ம்…..’ஐ ஆம் ஏ ஃபூல்.’ நான் மட்டும் அந்த நேரம் கண்டிப்பாக இருந்திருந்தால் நீர் இப்ப இப்படிக் கலங்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.” 

மேலும் எதையோ சொல்ல திவாகரன் வாயெடுத்த போது, தொடர்ந்தும் இரு ஆசிரியர்கள் போசனப் பொட்டலங்களுடன் மேசையினை வந்தடைந்தனர். இனியும் அங்கிருந்து உரையாடுவது அசாத்தியம் என்பதை உணர்ந்த திவாகரன், சாப்பிட்டதும் சாப்பிடாததுமாக எழுந்து சென்றுவிட்டார். 

‘கரம்’ எழுப்பும் ‘கலகல’ப்பு இப்போது உச்சக்கட்டத்தை அடைந்து விட்டது. 

திவாகரன் ‘மாஸ்டரின்’ மனமோ ஒரு நிலையில் இல்லாது தவித்துக் கொண்டிருந்தது. ஊழியர் அறையின் ஒரு மூலையில் இருந்தவாறே, அண்மையில் வெளியான நாவல் ஒன்றினைப் புரட்டிக் கொண்டிருந்தார் அவர். நாவலின் முதலாம் அத்தியாயம்… புரண்டு கொண்டிருந்தது. 

திவாகரன் அந்தக் கல்லூரிக்கு ஆசிரியராக வந்து ஏறத்தாழ ஏழு வருஷங்களாகி விட்டன. ‘அட்வான்ஸ் லெவல்’ வரை படித்த அவர், ஒரு தமிழ் ஆசிரியராகத்தான் அந்தக் கல்லூரிக்கு நியமனம் பெற்றிருந்தார். மாதவன் திவாகரனுடன் ஆரம்பப் பள்ளி தொட்டு ‘அட்வான்ஸ் லெவல்’ வரை ஒன்றாகப் படித்தவர். ஆனால், திவாகரனைவிட வசதி படைத்தவர். அதனால் சர்வகலாசாலை வரை மாதவனின் படிப்பு நீண்டது. அண்மையில் தான் ஒரு பட்டதாரி ஆசிரியராக மாதவன் அந்தக் கல்லூரிக்கு நியமனம் பெற்று இருந்தார். 

அப்போதுதான் அந்தக் கல்லூரிக்கு மாற்றலாகி வந்து இருந்தாள் பட்டதாரி ஆசிரியை மல்லிகா. கண்டதும், திரும்பவும் பார்க்கவைக்கும் அழகு, கஷ்டமான ஒரு குடும்பத்திலே….ஐந்து பெண்களுக்கு மூத்தவளாகப் பிறந்திருந்தாலும் தனது ஏழ்மை நிலையை வெளியே காட்டாத சாதுரியம், வயது இருபத்தெட்டினைத் தாண்டினாலும், பதினெட்டு வயதுப் பெண் ஓருத்தியின் இளமை. இவை யாவும் மல்லிகாவின் தனித்துவமான அமிசங்கள். 

மாதவனும்,மல்லிகாவும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆதலால், கருத்தரங்குளில் அடிக்கடி இருவரும் சந்திக்க வேண்டிய வாய்ப்பு ஏற்பட்டது. அந்தச் சந்திப்பு மாதவனுக்குத் தடுமாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. ஆமாம்…….. மல்லிகாவை மாதவன் மனதார விரும்பினான். இதனை வெளிப்படையாக மல்லிகாவிடம் எடுத்துச் சொல்ல மாதவனின் மனதிற்குச் சற்றுச் சங்கடமாகவே இருந்தது. அதற்கு நண்பன்….. திவாகரனின் உதவி தேவைப்பட்டது. 

அன்று ஆய்வு கூடத்தில் வைத்து மாதவன் திவாகரனிடம் விஷயத்தைத் தெரிவித்தபோது….. “மாது! என்னைப் பொறுத்தமட்டில மல்லிகா என்ரை ‘ஓண் சிஸ்டர்’ மாதிரி……..அவளை நல்லவன் ஒருவன் கைப்பிடிப்பதை நான் விரும்பாமல் இல்லை.ஆனால்……..” 

“நீ எதை மனசிலை வைச்சுக் கொண்டு இப்படிச் சொல்லுறாய் எண்டு எனக்குப் புரியுது திவாகர்.” 

“மாது கோவப்படாதை! உள்ளதைத்தான் கேக்கிறன். படிக் கேக்குள்ளை அவள் மைதிலியை விரும்பிப் பிறகு என்ன செய்தனீ?” 

“திவாகர், அது வேறை…… இது வேறை…” 

“வட் ஆர் யூ ரோக்கிங் மாது?” 

“அது பள்ளிக் காதல்….பருவ வெறியிலை ஏற்பட்ட காதல் எண்டு கூடச் சொல்லலாம்.” 

“என்ன மாதவன் சொல்கிறாய்? நீ சொல்லுறபடி பருவவெறிக் காதலாக மைதிலி அதை நினைக்கேல்லையே!” 

“திவாகர்….” 

“அதுதான் சொல்லுகிறன் மாதவன்! மைதிலியின்ரை நிலை இப்ப என்ன? நீ ‘கம்பசுக்கு’ போகேக்குள்ளை அவளை மறந்தாய். அவள் அதைத் தாங்கிக் கொள்ளாமல்…..இந்த உலகத்தையே மறந்தாள். பாவம்… பைத்தியக்காரியாகீட்டாள்”. 

“மைதிலிக்கு ‘மெண்டல் அப்செட்’ வந்தது என்னாலையா? ‘கம்பசுக்கு என்ரான்ஸ்’ கிடைக்காததாலை எண்டு ஊரிலை…” 

“ஊரிலே ஆயிரம் கதைச்சாலும் உள்ளது இதுதானப்பா.” 

“திவாகர், முடிவா நீ என்ன சொல்லுறாய்?” 

“மல்லிகாவின்ரை விதி மைதிலியின்ரை கதியாகிடக் கூடாதே என்பதுதான் எனக்குள்ள கவலை.” 

“மைதிலியாக இந்த மாது மாறுகிறது மட்டும் உனக்கு விருப்பமா திவாகர்?” 

“மாது……’வாட் யூ மீன்?” 

“யெஸ்! திவாகர் …எனக்கு மல்லிகாவின்ரை நினைவாலேயே பைத்தியம் பிடிச்சுடும் போலையிருக்கு.” 

“மாது, அப்ப எனக்கொரு ‘புறமிஸ்’ கொடு.” 

“என்ன?” 

“இனி, மல்லிகாவைத் தவிர வேறொருத்தியையும் ஏறிட்டே பார்க்கமாட்டன், அவளையே மரி பண்ணுவன் எண்டு.” 

அருகிலிருந்த உடைந்து போன ‘ரெஸ்ட்ரியூப்பை’ ஆவேசத்துடன் எடுத்த மாதவன், தன்கையில் பலமாகக் கீறி பீறிடும் இரத்தத்தைத் தொட்டு திவாகரனிடம் சத்தமாகச் சொல்கிறான்.”இந்தப் ‘பிளட்’ மீது ‘புறொமிஸ்’ பண்ணிச் சொல்றன். மல்லிகாவை கடைசி மட்டும் நான் கைவிட மாட்டன்.” 

இப்படியெல்லாம் நடந்து கொண்ட மாது இன்று இப்படி மாறிப்போனது…? 

“றாஸ்கல்! ஏன்ரா இப்பிடிச் செய்தனீ?” -சத்தமாகத் தன் மாணவனை அதட்டும் சக ஆசிரியர் குரல் கேட்டு நினைவு திரும்புகிறார் திவாகரன். மேலும் அந்தச் சச்சரவில் மனதை லயிக்காது… கையில் புரளும் நாவலின் இரண்டாவது அத்தியாயத்தைப் புரட்டுகிறார் அவர். 

முதன் முதலாக ஒரு சரஸ்வதி பூஜை அன்றுதான் காதலுக்குத் தூதாக மல்லிகாவிடம் திவாகரன் சென்றார். 

மாதவனின் நிலையதனை மல்லிகாவுக்கு எடுத்துரைக்க திவாகரன் பட்ட பாடு இருக்கிறதே….அப்பப்பா.. அவருக்கு போதும் போதும் என்றாகி விட்டது. 

“இதை நான் அப்பவே நினைச்சன்.” 

“என்ன நீர் சொல்லுறீர் மல்லிகா?” 

“செமினார் நடக்கேக்குள்ளை அந்தாள் திரும்பித் திரும்பிப் பார்த்து, எனக்குப் பல்லைக் காட்டைக்குள்ளை.” 

“மல்லிகா….. மாது மிகவும் நல்லவன்.” 

“உங்களை விடவா?” 

“அ…அது…. ஏதோ, இதுக்கு இப்ப நீர் என்ன சொல்லுகிறீர்?” 

“கண்டவங்களையும் எனக்குக் கட்டிவைக்க என்ரை ஐயா, அம்மா அவையள் ஓண்டும் ஏமாளிகள் இல்லை….!” 

“மல்லிகா…, ஒரு சகோதரன் நான் இருக்கிறதை மறந்து நீர் பேசிக்கொண்டே போறீர்….. ஒரு சகோதரிக்குக் கல்யாணம் செய்து வைக்கிறதிலை நான் அக்கறையில்லாமல் இருப்பனோ என்ன?… ஏதோ இத்தனை நாளும் நீர் ஒரு ‘ஓண் சிஸ்ரர்’போலப் பழகின உரிமையோடை… இவ்வளவு பாசத்தோடை கேட்ட எனக்கு நல்ல மறுமொழி தருவீர் எண்ட நம்பிக்கையிலை வந்தன். ஆனால்….?” 

“தி……திவாகர்!” 

“ஆனால், மல்லிகா ஒண்டு மட்டும் சொல்லுறன்…. இது வரையில் நான் எந்த விசயத்திலையும் தோல்வி கண்டதேயில்லை. ஆனால், இதிலை மட்டுந்தான்…” 

“ம்…. உங்கட மாதுவை உங்களுக்காக நான்…”

“மாஸ்டர் லெட்டர் போ யூ!” – கல்லூரிப் ‘பியூனின்’ குரல் அது. கடிதத்தைப் பிரித்தார் அவர். அது மல்லிகா சொன்ன அந்த சேதியையே உறுதிப்படுத்தியது. 

கடிதத்தில் குறிப்பிடப்பட்ட அந்தப் பகுதியில் திவாகரனின் கண்கள் மீண்டும் நிலைக்குத்துகின்றன. 

நினைத்தபடி நான் மல்லிகாவை ஏற்று விட்டால் என் தங்கையை யார் பார்ப்பது? 

அவளுக்கும் ஒரு வளமான வாழ்வு அமைவதையே நான் விரும்புகிறேன். நான் மட்டும் மல்லிகாவுடன் நலமாக இருந்தால் போதுமா? அதுதான் இந்த முடிவுக்கு வந்தேன். 

சீதனமென்று தருவதற்கோ மல்லிகாவிடம் எதுவுமே இல்லை. ஆனால், இப்போ எனக்கு வாற ‘புறப்போசலிலை’ இனாமாக மட்டும் ஐந்து இலட்சம் திவாகர், ஐந்து இலட்சம், தவிர காணி, பூமி வயல் நிலங்கள் என்று என் பெயருக்கு ‘ரென் லாக்ஸ்’ பெறுமதியான ‘டவுறி.’ 

எனக்காக எதையும் நான் ஏற்க விரும்பாவிட்டாலும் என் தங்கைக்காக ‘அற்லீஸ்ட்’ ஒரு ‘வண் லாக்’ மல்லிகாவால் தர முடியுமா? ஒரு மூத்த சகோதரியை இன்னும் வீட்டிலை வைத்திருக்கும் உனக்கு இது நன்றாய் புரியும் என்றே நினைக்கிறேன். இதைவிட அதிகம் நான் எழுதத் தேவையில்லை 

அமைதியில் மூழ்கியிருந்த கல்லூரி மீண்டும் ‘கலகலப்பில் களை கட்டிவிட்டது. ‘சைலன்ஸ் பீறியேட்’ முடிந்து, மாணவ தலைவர்கள் தத்தமது வகுப்பறைக்குச் சென்று கொண்டிருந்தனர். 

“ஆர் யூ பிறீ மிஸ்டர் திவாகர்?” – கல்லூரி அதிபரின் கண்டிப்பான குரலது. 

“ஓ யெஸ்! இப்ப நான் ஃபிறீ.’ 

மீண்டும் தனிமை. அதே நாவல் புரள்கிறது…..அடுத்த இத்தியாயம் இப்போது கண்களின் முன்னே…… 

“இந்தக் கடிதத்தை மல்லிகா ‘ரீச்சர்’ தந்தா. தான் அரை நேரத்தோடை லீவிலை போறாவாம்.” ஆறாம் ஆண்டுப் பையன் ஒருவனது குரல் கேட்டு நிமிர்கிறார் ‘மாஸ்டர்’ 

இப்போது கடிதம் கையில் புரள்கிறது. 

அன்புடன் திவாகர். 

அபலை மல்லிகா எழுதிக் கொள்வது. 

திவாகர், மாது என்னை ஏமாற்றி விட்டான். என் அழகை…. இளமையைக் காதலிக்கத் துணிந்த அவனது மனம் என்னை ஏற்கத் துணியவில்லை. என்னைக் காதலிக்க ஆரம்பித்த போதில்லாத தங்கைப் பாசம் இப்போது அவனுக்கு திடீரென முளைத்துள்ளது. 

சீதனமாக எனக்குத் தர உன்னிடம் என்ன உள்ளது மல்லிகா? எனக்காக ‘எதையும்’ நான் கேட்கவில்லை. என் தங்கைக்காகத்தான் கேட்கிறேன். என்னை நம்பியுள்ள தங்கையைத் தவிக்க விட்டு உன்னை நான் ஏற்பதனால், நான் படித்த படிப்பே பயனில்லாது போய்விடும். 

காலையில் நான் அறிந்த விடயங்களுக்கு மேலாக இப்போது இப்படி மாது எனக்கொரு உருக்கமான” லெட்டர் போட்டிருக்கிறான்… அதைப் படித்து விட்டே இதை நான் எழுதுகிறேன். 

பதினைந்து இலட்சம் பெறுமதியான வயல் நிலம், மாடிவீடு, நகை நட்டு சீதனங்களுடன் மாதுவுக்கு இன்று கல்யாணமாம்! பொம்பிளை வயலூர் வட்டவிதானையாரின் ஒரே மகளாம்! 

எண்ணியபடி காதலிப்பது….கண்களை மூடிக்கொண்டு வாக்களிப்பது….பின்பு கல்யாணம் எண்டதும் அக்கா தங்கை என முதலைக் கண்ணீர் வடிப்பது. சீ …. இவங்களும் மனிதர்களா? படித்து விட்டார்களாம் பெரிய படிப்பு. இவங்கள் படிச்ச படிப்புக்கு இப்படிச் செய்வது மட்டும் அழகோ? ஆணாகப் பிறந்துவிட்டார்கள். அவ்வளவு தான். இப்படிக் கல்யாணத்தைப் பொருட்காட்சியாக எண்ணுகிறவங்களுக்குக் கழுத்தை நீட்டுவதை விட…

திவாகர் எனக்கு நேர்ந்த விதி வேறெந்த பெண்ணுக்குமே நேரக்கூடாத கதி. ஆமாம் திவாகர் உங்கள் மென் இதயத்தை கல்லாக்கி நான் எழுதுவதைத் தொடர்ந்து வாசியுங்கள். 

இந்த மாதுவை நான் மனப்பூர்வமாகக் காதலித்ததாகவா நீங்கள் கருதுகிறீர்கள்? இல்லை திவாகர், இல்லை! மாதுவை உங்கள் வற்புறுத்தலுக்காகவே மணம் செய்து கொள்வதாகச் சம்மதித்தேன். 

அதற்குமுன் நான் ஒருவரை மனதாரக் காதலித்தேன். நான் காதலித்த அவரையே மணம் செய்து கொள்ளவும் விரும்பினேன். ஆனால், விதி…? 

ஆமாம் திவாகர்….நான் யாரைக் காதலித்துக் கணவனாகக் கனவு கண்டேனோ, அவர் என்னைத் தன் ‘ஓண் சிஸ்ரராக’ மதிக்கிறார்…. என் காதல் வெறுங் கானல் என்பதை அப்போது தான் நான் உணர்ந்தேன். 

நான் விரும்பிய அவர்…… மாதுவைப் போல மாறக்கூடிவர் அல்ல.அவர்…..மனிதர்! அவர் வேறுயாருமல்ல…..நீங்கள் தான் திவாகர், நீங்கள்தான்! காலம் கனியும் போது அதை உங்களிடம் உணர்த்தலாம் எனக் காத்திருந்தேன். வீட்டில் ஒரு மூத்த சகோதரியை கரைசேர்க்காது வைத்திருக்கும் உங்களுக்கு, அதை எப்படி…….? 

என்றாலும் சரஸ்வதிபூஜை அன்றாவது உங்களிடம் அது பற்றிக் கதைக்கலாம் என்றிருந்தேன். நான் அதை உணர்த்த வர, நீங்கள் வேறெதையோ சொல்லிவிட்டீர்கள். 

நான் நினைத்தபடி தான் வாழ முடியவில்லை. நீங்கள் நினைத்தபடியாவது வாழ்வோமே என்ற காரணத்திற்காகவே…….. என்னையடுத்தடுத்து அடுக்காய் உள்ள நான்கு பெண்களினதும் வாழ்வும் தடைப்பட்டு விடக்கூடாதே…….அதற்காக ஒரு ‘ஓண் பிறதர்’ எனக்கு தேடித்ததரும் கணவனாகவே மாதவனை நான் ஏற்றேன்! 

ஆனால், மாதவன் என் இயலாமையை சாதகமாக்கி ஆமாம் திவாகர்,மாது ஆசைக்காட்டி என்னை மோசம் செய்துவிட்டான்! இதற்காக வயலூர் பிள்ளையார் கோவிலில் பூங்கொல்லைக் கிணற்றில் போய் விழுந்து என் உயிரை மாய்த்துக் கொள்ளும் கோழையாகி விடமாட்டேன் நான். 

காலம் பூராகக் கன்னியாகவே வாழ்ந்திடலாம்……. ஆனால், இந்த பொல்லாத சமூகம் ஏதாவது பழி சொல்லுமே? அதுவுமில்லாமல் தொடர்ந்துள்ள என் தங்கையர் வாழ்வு? 

இலட்சக்கணக்கில் என்னிடம் பணம் இல்லை. ஆனால், எனக்கும் ஒரு இதயம் உண்டு. அதில் உணர்வுகள் உண்டு! 

அதிகம் எழுதும் நிலையில் நானில்லை ! 

அன்புடன் உங்கள் முடிவை நாடும்…..அபலை மல்லிகா. 

காரியாலயத்தில் இருந்தெழுந்த மணியோசை திவாகரன் காதுகளில் வந்து மோதுகிறது. அவரின் ‘ஃபிறீ பீரியட்’இப்போது……. முடிந்து விட்டது. 

கடிதத்தினைப் படித்து முடித்தவர், மீண்டும் ஒரு முறை கடித இறுதி வாசகங்களை நோக்குகிறார். 

‘அன்புடன் உங்கள் முடிவை நாடும்…. அபலை மல்லிகா’ கண்களிலிருந்து விழுந்த நீர்த்துளிகள் அபலை என்ற சொல்லினை அழித்து விடுகின்றன. 

கடிதத்தினை மடித்துச் சட்டைப் பைக்குள் வைத்தவர், புதிய தீர்மானம் ஒன்றுடன் புத்தகத்தைத் தூக்கியவாறே, வகுப்பறைக்குள் நுழைந்து, புதிய அத்தியாயம் ஒன்றினைப் புரட்டுகிறார். 

– தினகரன் வாரமஞ்சரி, 1977.

– மறுபிரசுரம்: தாரகை.

– விடியட்டும் பார்ப்போம்..!, முதற் பதிப்பு: மாசி 1997, பதிப்புரிமை: திருமதி இ.சாந்த குமாரி, கொழும்பு.

புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் புலோலியூர் இரத்தினவேலோன், ஆறுமுகம் 1958.12.25 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், புலோலியூரில் பிறந்தார். சிறுகதை எழுத்தாளர். இவர் புற்றளை மகாவித்தியாலயம், ஹாட்லிக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார். இவர் யாழ் புற்றளை மகா வித்தியாலயம், யாழ் ஹாட்லிக் கல்லூரி மற்றும் யாழ் சென் ஜோன்ஸ் அக்கடமி ஆகியவற்றின் பழைய மாணவராவார். தினகரன் பத்திரிகையில் பிரசுரமான புரளும் அத்தியாயம் எனும் சிறுகதையூடு 1977 இல் இலக்கிய உலகத்திற்கு அறிமுகமானவர். 1977 ஆம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *